நெகிழ்வான தொழிலாளர் சந்தை: உண்மையும் புரட்டும்!


தோழர்: ஜோதிபாசு

தமிழில்: ஹேமா

(ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஜோதிபாசு  ஆற்றிய வி.வி.கிரி நினைவு சொற்பொழிவு)

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பட்டாச்சார்யா அவர்களே.!  தொழிலாளர் – பொருளாதார இந்திய சமூக கழகத்தின் தலைவர் பேராசிரியர் பாப்லோ அவர்களே! மாநாட்டு தலைவர் பேராசிரியர் பட்நாயக் அவர்களே! பிரதி நிதிகளே!  தொழிலாளர் பொருளாதார இந்திய சமூக கழகத்தின் 47-வது மாநாட்டை துவக்கி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். கடந்த காலங்களில் நாட்டின் ஜனாதிபதியாக உயர்ந்த வி.வி.கிரி. அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த கல்வி அமைப்பின் மாநாட்டை துவக்கி வைப்பதில் பெருமிதப்படுகிறேன்.

தொழிலாளர் நலனுக்காக, உயர்வுக்காக தன் வாழ்நாளில் மிகுந்த ஈடுபாட்டோடு செயல்பட்டார் வி.வி.கிரி என்பதை நன்கு அறிவேன். அவர் எனக்கு மிகவும் பழக்கமானவர். அவர்கள் துவக்கிய இந்த கழகம் தனது ஆய்வு அறிவை, தகவல்களை, இந்திய தொழிலாளி வர்க்க மேம்பாட்டிற்கு பயன்படுத்த தொடர்ந்து முயல்வதை பாராட்டுகிறேன்.

தொழிலாளி வர்க்கத்திற்கு இப்படியான ஆய்வு – கல்வி கழகங்களின் துணை தேவை என்று தொழிற்சங்கவாதியான நான் உணர்கிறேன். இந்த ஆய்வு அமைப்புகள் எவ்விதத்திலும் ஒருதலை பட்சமாக செயல்படவேண்டியதில்லை. நேர்மையான ஆய்வு பணியை, விஞ்ஞான பூர்வமான முறையில், எந்த உள்நோக்கமின்றி சார்பற்று செய்ய வேண்டிய தேவை உள்ளது.  நேர்மையான விஞ்ஞான கருத்துக்கள் என்பது தொழிலாளி வர்க்கத்திற்கு உகந்த நண்பனாகும். தவறான பார்வையாலோ, அறியாமையாலோ, உள்நோக்கத்துடனே அல்லது முதலாளிவர்க்கத்தின் நலன் காக்க திட்டமிட்டே உருவாக்கப்படும் பொய்யான கருத்துக்கள், தத்துவங்கள் – தொழிலாளர்கள் தங்கள் துயர நிலையிலிருந்து விடுபடுவதற்கு பெரும் தடையாகி வழிமறிக்கின்றன. வரலாறு முழுவதும் இப்பொய்யான கருத்துக்கள் மலிந்து கிடக்கின்றன. இதை விளக்க மூன்று உதாரணங்களை மட்டும் சுட்டிக் காட்டுகிறேன்.

இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சி ஆரம்பகட்டத்தில் தொழிலாளர்களுக்கு கொடுந்துயரங்களை கொண்டு வந்து சேர்த்தது. இதில் ஏராளமான பெண்களும், குழந்தைகளும் அடங்குவர். சொற்ப கூலிக்காக மிக மிக நீண்ட நேரங்கள் மனிதாபி மானமற்ற சூழலில் சுரங்கங்களிலும், தொழிற்சாலைகளிலும் உயிரை தேய்த்து உழைக்க வேண்டியிருந்தது. காரல் மார்க்ஸ் அவர்களின் உன்னத படைப்பான மூலதனம் நூலில் இந்நிலைமைகள் குறித்து தொழிற்சாலை ஆய்வாளர் அறிக்கை குறிப்புகளை மேற்கோள் காட்டி விளக்குகிறார். ஏங்கெல்ஸின் இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலை  என்ற நூலில் தொழிலாளர்கள்  சுரண்டப்பட்ட துயர நிலையை, நம் மனம் அதிர்ச்சிகொள்ள எடுத்துரைக்கிறார்.

இந்த நிலையில்தான் சில சீர்திருத்தவாதிகள் குறிப்பாக உடைமை வர்க்க மேல்தட்டிலிருந்து வந்தவர்கள், 19-ம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் தொழிலாளரின் உழைப்பு நிலையை சட்டங்களால் மேம்படுத்த முயன்றனர். வேலை நேரத்தை குறைப்பது என்பது இச்சீர்திருத்தவாதிகளின் முக்கிய முயற்சியாக இருந்தது. இதன் விளைவாக வந்த 10 மணிநேர வேலை மசோதா இதில் முக்கிய தடம் பதித்தது.  அதுவரை அதிகபட்ச வேலைநேரம் சட்டபூர்வமாக 11 மணி நேரமாக இருந்தது.

சரியாக இந்த கட்டத்தில்தான் அரசியல் பொருளாதாரத்தின் முதல் பேராசிரியரான ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் நாசா சீனியர் ஒரு தத்துவத்தை முன்வைத்தார். எல்லா முதலாளிகளும் தங்கள் லாபத்தை ஒரு வேலை நாளின் இறுதி மணி நேரத்திலிருந்துதான் பெறமுடியும் என்றும் இதர நேர உழைப்பு பொருள் மதிப்பு கூட்டலுக்கே செல்கிறது – அதுவும் தொழிலாளர்களுக்கு ஊதியம் செலுத்த செலவழித்துவிடுகிறது என்றும் முன்மொழிந்தார். தொழிலாளர்களின் வேலை நேரத்தில் ஒரு மணிநேரம் குறைக்கப்பட்டாலும் கூட லாபத்தை  ஒட்டுமொத்தமாக அழித்துவிடும் என்று சொல்லிய தத்துவம் இது. எனவே, தொழிலாளர்கள் வேலைநேர குறைப்பை நியாயமற்றது என வாதாடியது. லாபம் அழிந்தால், தொழிலாளர்கள் பணிபுரியும் தொழிற்சாலைகள் நலிவுற்று. வேலையிழப்பை ஏற்படுத்தி மேலும் தொழிலாளர்களை துயரத்தில் தள்ளும் என்றது இத்தத்துவம். காரல் மார்க்ஸ் இதை தொழிலாளி வர்க்கத்திற்கு  எதிரான தத்துவம் என கடுமையாக தாக்கினார்.  சீனியரின் கடைசி நேரம் என்று மார்க்ஸ் பயன்படுத்திய கண்டன வாக்கியம், ஆளும் வர்க்க நலன் காக்கும் அனைத்து தவறான கட்டுக்கதை தத்துவங்களுக்குமான குறியீடாகி உள்ளது. தொழிலாளர்களின் விடுதலைக்கு எதிரான பொய் தத்துவங்களுக்கான ஓர் நல்ல உதாரணம் இத்தத்துவம். தங்களுக் கெதிரான சுரண்டல் வேலை சூழலிலிருந்து மீள எதுவும் செய்யாமலிருப்பதே தொழிலாளர்களுக்கு நல்லது என்று போதிக்கும் தத்துவ வகை இது.  ஒரு மணிநேரம்  என்று நாசா சீனியர் குறிப்பிடுவதும், கணக்கிட்டு சொல்வதாக கதைவிடுவதும் அவரின்  கற்பனை கதையே தவிர வேறொன்றுமில்லை என்பதால் இத்தத்துவம் சாயமிழந்து நிற்கிறது. தொழிலாளர்களின் வேலை நேரத்தை குறைக்கும் சட்டம் வருவதை தடுக்க கிளப்பிவிட்ட  வெறும் புரளியே இது.

இத்தத்துவத்தின் படி பார்த்தால், கடைசி ஒரு மணி நேர உழைப்பில் தான் உபரி மதிப்பு  1/10 என்ற விகிதத்தில் உருவாகுவதாகவோ அல்லது மதிப்பு கூட்டலில் லாப விகிதம் வெறும் 9 சதமே என்பதோ நம்பும்படி இல்லை. இது முதலாளித்துவ நாடுகள் இதுவரை கண்டிருக்கும் லாபவிகிதத்தை விட மிகமிக குறைவான கணக்கீடாக உள்ளது. ஆனால், நல்லவேளையாக  சீனியரின் இத்தத்துவம் மிகுந்த கவனிப்பு பெறாததால் தொழிலாளர் வேலைநேர குறைப்பை இதனால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

எனது  இரண்டாவது உதாரணம் ஜான் ஸ்டுவர்ட் மில்லின் தத்துவம் பற்றியது. இவர் தொழிற்சங்க நடவடிக்கைகளால் கூலி உயர்வு பெற இயலவே இயலாது என்றார். 19-ம் நூற்றாண்டின் மிக சிறந்த அறிவு ஜீவியான இவரின் இக்கருத்து எந்த உள்நோக்கத் துடனோ அல்லது அநீதியான நோக்கங்களுக்கோ சொல்லப் பட்டதாக நாம் கருத முடியாது. ஆனால் இவரின் கூலி நிதி தத்துவம் மிக தவறானது. இத்தத்துவம் பின்வருமாறு சொன்னது. பொருளாதாரத்தில் எந்த நேரத்தை எடுத்துக் கொண்டாலும்,  கூலி நிதி என்று ஒன்று உள்ளது. இது தொழிலாளர்கள் அனைவருக்கும் பிரித்து தரப்படவேண்டியது. ஆனால், தொழிற்சங்க நடவடிக் கையால் ஏதாவது ஒரு குழு தொழிலாளர்கள் கூலி உயர்வு பெற்றால் அது இதர தொழிலாளர்களை பாதிக்கும். அவர்களின் நிதியை பறித்துக் கொள்வதாகும் என்றது.

இது தொழிலாளர்கள் மத்தியில் தொழிற்சங்கத்தில் திரளுவதற்கு எதிரான மனநிலையை உருவாக்கும் தவறான தத்துவம். முதலாளிகள் ஒரு குழு தொழிலாளர்களிடம் தாங்கள் இழப்பதை, வேறுகுழு தொழிலாளர்கள் மீது சுமத்தும் பாரத்தால் சரி செய்து கொள்ள முயல்வார்கள் என்பது சாதாரணமாக நடைபெறுவதுதான். ஆனால், இது ஸ்டுவர்ட் மில்லின் தத்துவ முடிவிலிருந்து மாறானதாகும். திரட்டப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையால் ஒட்டுமொத்த தொழிலாளர்கள் முதலாளிகளிடம் எப்பயனையும் எக்காலத்திலும் அடைய முடியாது என்பது இவரின் தவறான முடிவாகும்.

ஜான் ஸ்டுவர்ட் மில்லின் சிஷ்யர் சிட்டிசன் வெஸ்டன் என்பவர் இத்தத்துவத்தை லண்டனில் நடைபெற்ற தொழிலாளர் கூட்டத்தில்  முன்வைத்தார். மார்க்ஸ் இது தவறானது என கண்டித்தும் தனது பிரபலமான கூலி மதிப்பு லாபம்  என்ற பிரசுரத்தில் எழுதினார். லாபத்தை குறைத்து கொள்வதால், தொழிலாளர்களுக்கு கூலி உயர்வை ஏற்படுத்த தொழிற்சங்க நடவடிக்கையால் முடியும் என்று எடுத்துக்காட்டினார். ஸ்டுவர்ட்  மில் சொல்வதுபோல் தொழிற்சங்க நடவடிக்கையால் லாப விகிதத்தை ஒன்றும் செய்ய முடியாது என்பது சரி என்று வைத்துக் கொண்டால், பின் ஏன் முதலாளிகள் தொழிற்சங்க நடவடிக்கையை கடுமையாக எதிர்க்கிறார்கள் ? என்ற கேள்வி பதிலற்று நிற்குமே. மில்லின் இத்தத்துவம் கேள்விக் குள்ளாக்கப்படாமல் மறுக்கப்படாமல் போயிருந்தால், அவர்களின் அறிவு ஜீவி திறன் காரணமாக அப்படியே ஏற்கப்பட்டு தொழிற்சங்க இயக்கத்திற்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியிருக்கும். எனது மூன்றாவது உதாரணம் டேவிட் ரிக்கார்டோவின் கருத்தை பற்றியது. இயந்திரமயமாக்கலால் தொழிலாளர்கள் வெளியேற்றப் பட மாட்டார்கள் என்பது அவரின் முன்மொழிவு. பின்னாளில் இதில் இவர் சிறிது மாற்றிக் கொண்டார். இயந்திர அறிமுகத்தின் குறுகிய கால அளவில் இது வேலையிழப்பை ஏற்படுத்தினாலும், நீண்ட கால அளவில் இது பொருளாதார  உயர்வுக்கு வழி செய்து, வேலைவாய்ப்பு விகிதத்தை உச்சிக்கு கொண்டு செல்லும். இதனால், ஆரம்பத்தில் வேலையிழப் போரைவிட பல மடங்கு அதிகமானவர் கள் வேலை பெறுவர் என்பது அவர் கணிப்பு.

மார்க்ஸ் சொன்னதுபோல் ரிக்கார்டோ சிறந்த பொருளாதார நிபுணர்தான். ஆனால், மார்க்ஸ் சொன்னதுபோல் இவர் தத்துவம் முற்றிலும் பிழையானது. மார்க்ஸ் கூர்மையான விமர்சனங்களை இதன்மீது வைத்தார். இயந்திரமயமாக்கலை ஒரு கட்டத்தில் மட்டுமே நடப்பதாக பார்த்ததின் விளைவே  இத்தவறான கருத்து. வேலையிழப்பு, பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த தேவையின் மீது  பாதிப்பு ஏற்படுத்தாத சூழலில் இயந்திர மயமாக்கலை புரிந்துகொள்வதில் ஏற்பட்ட பிழையே இதற்கு காரணம்.

ரிக்கார்டோவின் இத்தத்துவமும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு எதிராக நின்றது. இயந்திரமயமாக்கலால் வேலையிழக்கும் தொழிலாளர்கள் கொதித்து  எழுந்து அணிதிரளும் உணர்வை மழுங்கடிப்பதாக இருக்கிறது. இதற்கெதிரான காரல் மார்க்ஸின் விமர்சனம் சரியானதே என்பது வேலை வாய்ப்பற்ற வளர்ச்சி என்பது தற்காலத்தில் பரவலாக தூக்கிபிடிக்கப்படுவது காட்டுகிறது. அதிவேக தொழில்நுட்ப முன்னேற்றத்தால் நவீன இயந்திரங்கள் புகுத்தப்பட்டு தொழிலாளர்கள் வேலையிழப்பது தொழிலாளர் தேவையை அதிகரிக்காது என்று தற்காலத்தில் கண்மூடித்தனமாக ஏற்கப்படுவது, ரிக்கார்டளிவின் தத்துவத்திற்கு ஒத்ததல்ல.

இத்தவறான தத்துவ உதாரணங்களை நான் குறிப்பிடுவதற்கு காரணம் தொழிலாளர்கள் இயக்கத்திற்கு சரியான தத்துவங்களின் தேவை எவ்வளவு முக்கியமானது என்று உணர்த்துதலே. இச்சரியான தத்துவங்கள் விஞ்ஞானபூர்வமான தெளிவான விவாதங்கள் மூலமே உருவாக்கமுடியும். இத்தகைய விவாதங்கள் நடைபெற தொழிலாளர் பொருளாதார சமூக கழகம் தன்விவாத அரங்குகள் மூலம் முக்கிய பங்காற்ற முடியும் என்பது உண்மை. தொழிலாளி வர்க்கத்திற்கு எதிரான தவறான விஞ்ஞான பூர்வமற்ற கருத்துக்கள் பரப்பப்படும் சூழலில் இந்தியாவில் இன்று அத்தகைய விவாதங்கள் மிகவும் அவசியம். உதாரணமாக அரசாங்கம் நெகிழ்வான தொழிலாளர் சந்தை என்பதை புகுத்துவதில் குறியாக உள்நது. இதில் விருப்பப் பட்டால் வேலைக்கு வைப்பது,  இல்லையயன்றால் வேலையிலிருந்து தூக்கியெறிவது என்ற முதலாளிகளின் சுதந்திரமும் உள்ளடங்கு மாம்.  நெகிழ்வான தொழிலாளர் சந்தையின் நோக்கம் என்ன? என்பது நமக்கு எளிதில் புரிகிறது பொருளாதாரத்தில் உபரி மதிப்பை உயர்த்துவது, வருமான பங்கீட்டை கூலியிலிருந்து லாபத்திற்கு திசை திருப்புவது என்பவை அதன் நோக்கங்கள்.

இந்த உயர்லாபத்தால் பொருளாதார உயர்வு ஏற்பட்டு அதனால் தொழிலாளர்க்கான தேவை கூடி, ரிக்கார்டோ இயந்திர அறிமுகத்துக்கு சொன்னதுபோல் நன்மை பயக்கும் என்பதால் நெகிழ்வான தொழிலாளர் சந்தை தேவை என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்த அனுமானங்கள் அனைத்தும் செல்லாதவை, தவறானவை.

வேலைவாய்ப்பற்ற வளர்ச்சியின் அனுபவத்தை நாம் பார்த்துவிட்டோம். உயர் வளர்ச்சி – தொழிலாளர் வேலைவாய்ப்பாக மாறவில்லை மாறாக, கூலியிலிருந்து லாபத்திற்கு நகர்தல் நடந்தது. உயர் வளர்ச்சியை கொடுப்பதற்கு பதில், எதிர் விளைவாய் பொருளா தாரத்தில் தேவையை குறைத்து, வளர்ச்சி விகிதத்தை குறைத்தது.

நெகிழ்வான தொழிலாளர் சந்தையின் பக்தர்கள், கூலியிலிருந்து லாபத்திற்கு நகர்வதால், சர்வதேச சந்தையில் முதலாளிகளால் தங்கள் பொருட்களின் விலையை குறைத்து போட்டியிட முடியும். இதனால், ஏற்றுமதி பெருகும் என்று சொல்கிறார்கள். ஆனால், ஏற்றுமதி அளவை நிர்ணயிக்கும் காரணிகள் சிக்கலானவை, கூலி விகிதம், தொழிலாளர் திறனோடு ஒப்பிடுகையில் முக்கிய காரணியல்ல, குறைவாக கூலி இருப்பதுதான் ஏற்றுமதியை அதிகப்படுத்தும் என்றால் இந்திய கூலி நிலைமையை பார்க்கையில் என்றோ நாம் வளர்ந்த முதலாளித்துவ நாடுகளை சர்வதேச சந்தையில் வீழ்த்தியிருக்க முடியுமே ! நடக்கவில்லையே !

நெகிழ்வான தொழிலாளர் சந்தையால் ஏற்றுமதி ஊக்கம் பெறும்  என்ற அனுமானபடியே பார்த்தாலும் ஏற்றுமதி பெரிய அளவிற்கு உயராது என தெரிகிறது. முன்பு நான் குறிப்பிட்டது போன்ற வருமான மறுபங்கீட்டின் காரணமாக ஏற்பட்டுள்ள தேவை சரிவை ஈடுகட்டும் அளவிற்கு ஏற்றுமதி உயர்வு ஏற்படும் என்று நம்ப வாய்ப்பேயில்லை. எந்த உண்மையும் அற்ற இந்த அனுமான அடிப்படையிலான கருத்து தொழிலாளர்களின் வாழ்வின் மீது வேலை நிலையின் மீது தாக்குதல் நடத்தவே  துணைபோகும்.

எல்லா நாடுகளிலும் நெகிழ்வான தொழிலாளர் சந்தை பின்பற்றப்படும் பொழுது  நாம் மட்டும் அறிமுகப்படுத்தவில்லை யென்றால் நாம் சந்தை போட்டியில் பின்தங்கிவிடுவோம் என்று வாதங்கள் முன்வைக்கப்படுகிறது. எல்லா நாடுகளிலும் இது பின்பற்றப்படும் என்றால், இதனால் விளையும் நன்மைகள் வேறுநாட்டிற்கு இல்லா தனிசிறப்பு என்று சொல்லப்படுபவை யாருக்கும் பயன்தராமல் தானே போகும் ? எல்லா நாட்டிலும் அமலாகும்பொழுது வாதம் அடிபடுகிறது. எல்லா நாட்டு தொழிலாளியும் கூலி மற்றும் வேலைவாய்ப்பில் மேலும் சரிவை சந்திக்கவே நேரும்.

இத்தத்துவ குழப்பங்களில் தொழிலாளி வர்க்கம் சிக்கிக் கொள்ளாமல், முதலாளித்துவ போட்டி விளையாட்டில், கூலியை மிக குறைந்த மட்டத்திற்கு கொண்டு வரும் முயற்சியை, ஒவ்வொரு நாட்டு தொழிலாளியும் எதிர்க்க வேண்டும். இதற்கு காரணமான கொள்கைகளை முறியடிக்க வேண்டும். இந்த போராட்டம் ஒருங்கிணைப்பட்டதாக இருக்க வேண்டும். ஒருங்கிணைக்கப் படவில்லையென்றாலும் ஒவ்வொரு நாட்டு தொழிலாளியும், நெகிழ்வான தொழிலாளர் சந்தை விளைவால் கூலி குறைக்கப் பட்ட நாட்டிலிருந்து வரும் போட்டியை எதிர்க்கவேண்டும். தற்காப்பு முறையாக கருதி நெகிழ்வான தொழிலாளர் சந்தையை தானும் ஏற்றுக் கொள்ளுதல் என்ற நிலைக்கு போகக் கூடாது.

பிரச்சனைகளை சரியாக புரிந்துகொள்ளாத தவறான கொள்கை களுக்கு விதையிடும் தத்துவங்களை தோலுரித்துக்காட்டும் விவாதங்கள் இதுபோன்ற மேடைகளில் நடைபெற வேண்டும். எனவே, மிகுந்த மகிழ்ச்சியுடன் இம்மாநாட்டை நான் துவக்கி   வைக்கிறேன். இம்மாநாட்டு விவாதங்கள், முடிவுகள் நாட்டிற்கும், நம் தொழிலாளி வர்க்கத்திற்கும் மிகுந்த பலன் விளைவிக்கும் என்று நம்புகிறேன்.