மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


விவசாய இயக்கமும் – மேற்கு வங்க இடது முன்னணியும்!


பினாய் கோனார்

தமிழில்: ஆர்.கோவிந்தராஜன்

1

இடது முன்னணி அரசும்,  நிலச்சீர்திருத்தங்களைச் செயல்படுத்த வழிவகுத்த விவசாயிகள் இயக்கமும் ஒன்று மற்றொன்றோடு இணைந்து நிறைவு செய்பவை. விவசாயி மற்றும் நிலத்துக்கான இயக்கம் இடது முன்னணி அரசு உருவாக்கியது என்று சிலர் நம்புகிறார்கள். இது சரியல்ல. இடது முன்னணி மற்றும் ஜனநாயக சக்திகளின் வளர்ச்சி தான் இடது முன்னணி அரசு உருவாவவதற்கு வழி வகுத்தது. இடது – ஜனநாயக சக்திகளின் வளர்ச்சியும், விவசாயிகள் இயக்கத்தின் வளச்சியும்,  மனிதனின் கால்கள் இரண்டும் அவன் இயக்கத்திற்கு ஆக்கம் அளிப்பது போல், ஒன்று மற்றொன்றை தாங்கி நிற்கும்  இயக்கங்களாகும்.

2

வங்காளத்தில் விவசாயிகள் இயக்கம் உருவாவதற்கான வரலாற்று ரீதியான காரணங்களை அறிய காலத்தால் பின்நோக்கிப் போகவேண்டும். பிளாசி யுத்தத்திற்குப் பிறகு, திரை மறைவில் நின்று ஆட்சி செய்து கொண்டிருந்த ஆங்கிலேயரின் ஆட்சி விவசாயி களையும் கைவினைஞர்களையும் கடுமையாகச் சூறையாடத் துவங்கியது. பிறகு வங்காளம் ஆங்கிலேய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் வந்தது. அதனைத் தொடர்ந்து நிரந்தர நில அமைப்பு ஏற்பாடு (Permanent Settlement) வந்தது.  விநோதம் என்னவெனில் புதிதாகப் பிறந்து அரங்கிற்கு வந்த ஐரோப்பாவின் முதலாளித்துவ சக்திகள் நிலப்பிரபுத்துவத்திற்கும், மன்னராட்சிக்கும் எதிராக மன்னராட்சி ஒழிக, உழுபவனுக்கே நிலம் என்று முழங்கிய வேளையில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் வங்கம் உட்பட இந்தியாவில் நிலப்பிரபுத்துவத்தை நுழைத்தது.

இதன் விளைவுகள் அனைவருக்கும் தெரிந்தது தான். நிலப் பிரபுக்கள் அரசுக்கு கொடுக்க வேண்டிய பங்கு எவ்வளவு என்று தீர்மானிக்கப்பட்டது; ஆனால் விவசாயிகளிடமிருந்து உறிஞ்சப் படுவதற்கு எல்லை ஏதும் இல்லை. அரசின் வருவாய்க்கான சுரண்டலின் அளவு வேகமாக உயர்ந்தது. ஆனால், விவசாயி களிடமிருந்து பல்வேறு காரணங்களை முன்வைத்து சட்ட விரோத சுரண்டலின் வேகம் அதைக்காட்டிலும் வேகமாக உயர்ந்தது. சில இடங்களில் அந்த மாதிரியான சுரண்டல் 27 வகைகளில் செயல்படுத்தப்பட்டது. லேவாதேவிக்காரர்கள், வணிகர்கள் பறித்துக் கொள்வதும் இதோடு சேர்ந்து விட்டது. கிழக்கிந்தியக் கம்பெனியும் அளவிட முடியாத அளவிற்கு தனது சூறையாடலை நடத்தியது. ஏற்றுமதிக்கான பொருட்களை கட்டாயப்படுத்தி சந்தை விலையில் 25 சதம் கழிவு அல்லது அதற்கும் குறைவாகவும் விலை கொடுத்து வாங்கியது. விவசாயிகள் ஈவு இரக்கமற்ற முறையில் அழிவினை நோக்கி தள்ளப்பட்டனர். அவர்களின் பொறுமை அதன் விளிம்பைத் தொட்டது.

18 -19 நூற்றாண்டுகளில் வங்காளத்தின் வரலாறு பல்வேறு தன்னெழுச்சி போராட்டங்களையும், இயக்கங்களையும் உட்கொண்ட தொன்றாகும். கீழே தள்ளப்பட்ட விவசாயிகளும், கைவினைஞர்களும் ஆயிரக்கணக்கில் அப்போராட்டங்களில் பங்கேற்று தங்கள் இன்னுயிரை ஈந்தனர். சந்நியாசிகளின் போராட்டம் (1769 – 78), சுவார் (1799), பால்க் (1799), நாயக் (1806), வஹாபி (1831), ஃபராஜி (1838), சந்தால் (1855) ஆகிய மக்கள் நடத்திய போராட்டங்கள், ஆங்கிலேயரின் நிர்பந்தத்தினை எதிர்த்து இண்டிகோ (நீலச்சாயம்) விவசாயிகள் நடத்திய இயக்கம் (1860 – 61), பாப்னா மற்றும் பொகூரா எழுச்சி (1872), முண்டா எழுச்சி (1898 – 1902) ஆகியவை அந்த வரலாற்றுப் பகுதியினைச் சார்ந்தவை. இந்த தலப் போராட்டங்கள் அனைத்தையும் சில மத சீர்திருத்தவாதிகளும், தங்களிடம் தெய்வீக ஆற்றல் இருப்பதாக நம்பிய சில தலைவர்களும் தலைமையேற்று நடத்தினர். நவீன கால சிந்தனையும், தொலை நோக்குப் பார்வையும், முறையான தாபன வடிவங்களும், நடைமுறைகளும் அதில் காணப்படவில்லை.

சரியாகச் சொன்னால், விவசாயி சமூகம் ஒரு நவீன சிந்தனையோடு செயல்படும் வர்க்கம் அல்ல. இந்தப் பிரிவினர், நிலப் பிரபுத்துவ எதிர்ப்பினைக் கொண்டிருக்கும்போது, முதலாளித்துவ அமைப்பின் வளர்ச்சியடையும் கட்டத்தில், பிளவுபட்டு நிற்பதை தவிர்க்க முடியாது; அவர்கள் முதலாளி வர்க்கத்தினோடும் அணி சேருவார்கள், தொழிலாளி வர்க்கத்தோடும் இணைவார்கள். அதாவது, எதிர்கால சமூகத்தின் வர்க்கப் பிரிவினராக உள்ள முதலாளி வர்க்கம் அல்லது தொழிலாளி வர்க்கம் நிலப்பிரபுத் துவத்திற்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்திற்கு தலைமை யேற்று நடத்துவார்கள். ஆனால், அன்றைய நிலையில் இந்த இரண்டு வர்க்கங்களும் வங்காளத்தில் இல்லை.

ஐரோப்பிய மறுமலர்ச்சி இயக்கத்தின் தாக்கம் ஆங்கிலக்கல்வி மூலம் உள்ளே நுழைந்தது; அதன் விளைவாக புத்திக்கூர்மை படைத்த சிறந்த மனிதர்களை வங்காளம் பெற்றது. அவர்கள் மூடநம்பிக்கை களுக்கு எதிராகவும், பழமைவாதக்கருத்துக்களுக்கு எதிராகவும் தொய்வில்லாமல் தொடர்ந்து போராடினார்கள். கலை, இலக்கியம், மதம், பண்பாடு ஆகிய அம்சங்களில் புதிய ஒளியினை பரப்பினார்கள். அவைகளின் நிலப்பிரபுத்துவ அடிப்படைகளை புரிந்து கொண்டு அந்த இடைக்கால சமூகத்தின் மேல்கட்டுமானங்களில் மாற்றங்கள் வேண்டி போராடினார்கள். துரதிருஷ்டவசமாக, அப்படிப் போராடியவர்கள், அந்த கால சமூக பிற்போக்குத்தனத்தின் பொருளாதார அடிப்படையினை எதிர்த்து நடந்த வீரம்மிக்க விவசாயிகள் போராட்டங்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. அந்த அடித்தளம் குலையாமல் இருந்தது; ஆகவே, மேல்கட்டுமான மாற்றங்களும முழுமை பெறவில்லை. ஆனால், ஒரு விஷயத்தை நாம் ஒப்புக் கொள்ளவேண்டும். வங்களாத்தில் தோன்றிய அந்த சீர்திருத்த இயக்கம், எதிர்காலத்தில் தோன்றி வளர்ந்த முற்போக்கு கருத்துக்கள் மற்றும் இடதுசாரி சக்திகளின் வளர்ச்சிக்கும் ஆக்கப்பூர்வமான பங்களித்தது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

18 -19ம் நூற்றாண்டின் எழுச்சி மிக்க போராட்டங்கள் கொடூரத்துடன் ஒடுக்கப்பட்டாலும், அவை குத்தகை வாரச்சட்டம், (1858) வங்காள குத்தகைச் சட்டம், (1885) போன்ற சட்டங்களை ஆங்கிலேய அரசு கொண்டு வருவதற்கு நிர்பந்தம் கொடுத்தன. இந்தச் சட்டங்கள் 1928 மற்றும் 1938 ஆண்டுகளில் திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டன. அது நிலப்பிரப்புக்களின் இரக்கமற்ற செயல்களை ஓரளவு கட்டுப்படுத்தி 20ம் நூற்றாண்டில் அமைப்பு ரீதியாக விவசாயிகள் இயக்கம் உருவாக அடித்தளம் போட்டது.

3

ஒரு ஒருங்கிணைந்த அமைப்பு ரீதியான விவசாயிகள் இயக்கம் எழுதுவதற்கு சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. மகத்தான அக்டோபர் புரட்சியினை தொடர்ந்து நாட்டில் பரவத் தொடங்கிய சோசலிசக் கருத்துக்கள், தொழிற்சங்க காங்கிர அமைப்பு (வெளிநாட்டில்) கம்யூனிஸ்ட் கட்சி உதயம், யாவும் அந்த மாற்றத்தினைக் கொண்டு வந்தன. முறையாகத் துவக்கப்பட்டாலும், கம்யூனிஸ்ட் கட்சிக்கு அந்த நாளில் மத்தியக்குழு என்றோ (வங்களாத்தில்) மாநிலக்குழு என்றோ அமைப்புகள் கிடையாது. கம்யூனிஸ்டுகள் எண்ணிக்கையில் மிகக்குறைவாகவே இருந்தனர். அவர்களும், 1920ன் பிற்பகுதியில் விவசாய சங்கங்கள் அமைப்பதற்கு முயற்சி மேற்கொண்ட தொழிலாளி – விவசாயி கட்சியில் செயல்பட்டார்கள். 1931லிருந்து, வங்காளத்தின் பல மாவட்டங்களில் விவசாய சங்கங்களின் மாவட்டக்குழுக்கள் உருவாக்கப்பட்டன. அதே முயற்சி, 1936ல் தோழர் முசாபர் அகமது தலைமையில் வங்க மாநில விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்புக்குழு ஒன்று உருவாவதற்கு இட்டுச் சென்றது. லக்னோ நகரில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் தோன்றுவதற்கு சற்றே முன்பாக இது உருவானது. இது வங்காளத்தில் பரந்த அளவில் விவசாய இயக்கம் பரவ ஊக்கம் கொடுத்தது.

1930ல் ஜூகாந்தர் தளம், அனுஷீலன் சமிதி போன்ற அமைப்புக்களைச் சேர்ந்த, படித்த,  தியாக உணர்வு கொண்ட ஆயுதந்தாங்கிய புரட்சிக்காரர்களும் மற்ற சில அரசியல் குழுக்களைச் சேர்ந்தவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். காந்தி – இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, அமைதி வழிப் போராட்டங்களில் நம்பிக்கை கொண்ட சில அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்; ஆனால், கைதாகி இருக்கும் ஆயுதந்தாங்கிய புரட்சிக்கார்களைப் பற்றி அந்த ஒப்ந்தத்தில் ஏதும் இல்லை. அந்த ஒப்பந்தம் கையெழுத்தான சில நாட்களில் பகத்சிங் தூக்கிலிடப்பட்டார். அந்தப் புரட்சியாளர்களில் பலரும் சிறைச்சாலைகளுக்குள்ளேயே மார்க்சீய வழியினைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். விடுதலை பெற்றவுடன் கம்யூனிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டு விவசாயிகளையும், தொழிலாளர்களையும் அமைப்பு ரீதியில் ஒன்று திரட்ட தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மீரட் சதி வழக்கு போடப்பட்ட பிறகு, கம்யூனிஸ்ட் கட்சி சட்ட விரோதமாக்கப்பட்டது; மிகவும் அதிக கஷ்டங்களிடையே அவர்கள் செயல்பட வேண்டியிருந்தது; தேசிய காங்கிர அமைப்பிலும் மற்றும் விவசாயிகள் சங்கம், தொழிற் சங்கங்கள் போன்ற அமைப்புகளிலும் அவர்கள் செயல்பட்டனர். நிலப்பிரபுக்களின் சட்ட விரோதமான சுரண்டலை எதிர்த்து பல மாவட்டங்களில் எதிர்ப்பு பிரச்சார இயக்கங்கள் வளர்ச்சியடையத் துவங்கின. விவசாய உற்பத்திப் பொருட்களுக்கான வாரம் ஒருமுறை அல்லது இரண்டு முறை கூடும் ஹாட் (Hats) எனக் குறிப்பிடப்படும் திறந்த வெளிச் சந்தையில் கட்டாயப்படுத்தி வசூலிக்கப்படும். வரிகளை எதிர்ப்பதில் விவசாயிகள் அணி சேர்ந்தது குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைந்தது. இச் சந்தைகள் நிலப்பிரபுக்களுக்குச் சொந்தமானது. பல்வேறு வடிவங்களில் விற்பவர்களிடமிருந்தும், வாங்குபவர்களிட மிருந்தும் இது வசூலிக்கப்பட்டது. நிலப்பிரபுக்களுக்கான கட்டணம் என்றும், அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மதிப்பூதியம் என்றும், எழுதுவதற்கும், சுத்தப்படுத்துவதற்கும், சந்தையினை காப்பதற்கும் கட்டணங்கள் செலுத்த வேண்டும் என்றும், அந்த வசூல் வேட்டை நடந்தது. விவசாயிகள் சங்கம் இதற்கு எதிராக நடத்திய எதிர்ப்பு இயக்கங்கள் பெருமளவில் வெற்றி பெற்றன. சில சமயங்களில், விவசாயிகள் சங்கமே விவசாயிகளைத் திரட்ட தங்களுக்கென ஹாட் சந்தைகளை அமைத்துக்கொண்டது. கடுமையான அடக்கு முறையினையும் மீறி, பாசன வரி உயர்வினை எதிர்த்தும் வெள்ளத்தி லிருந்து பாதுகாக்க ஆறுகளின் கரைகளை உயர்த்தக் கோரியும் பரந்த அளவில் இயக்கங்கள் நடந்தன.

இவைகள் வர்க்க மற்ற அல்லது பல்வேறு வர்க்கங்களை உள்ளடக்கிய ஜனநாயகப் போராட்டங்களாக இருந்தன; இதில் பெரிய நிலச் சொந்தக்காரர்கள் ஜோதேதார் எனப்படும் நிலப் பொறுப்பாளர்களின் நலன்களும் அடங்கியிருந்தன. இந்தப் போராட் டங்களை தேசிய காங்கிர  மற்றும் விவசாயிகள் சங்கம் தலைமையில் நடத்தப்பட்டாலும் அவை கம்யூனிஸ்ட் கட்சியின் அடித்தளம் வலுவாக அமைய வழி வகுத்தது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த அனுபவம் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தியது. கோரிக்கையின் தன்மை அல்ல. பிரச்சார வடிவங்களும், ஸ்மாபனமும் தான், விவசாயிகளின் விழிப்புணர்வின் அளவை நிர்ணயிக்கின்றன. எந்த ஒரு பகுதி பிரச்சனையும்  அடிப்படை பிரச்சனையின் ஒரு துண்டு தான். ஆகவே, பகுதியளவான உடனடி பிரச்சனைகளுக்கான போராட்டங்களைச் சுரண்டும் அமைப்புக்கு எதிரான போராட் டத்தின் பகுதி என்ற முறையில் நடத்திட வேண்டும்.

1943ம் ஆண்டு கொடிய பஞ்சம் வங்காளத்தை கவ்விப் பிடித்த பொழுது விவசாயிகள் சங்கம் மற்ற வெகுஜன அமைப்புகளோடு இணைந்து மக்களின் துயர் துடைக்க ஆற்றிய பணி போற்றுத லுக்குரியதாக இருந்தது. துயர் துடைக்க முகாம்கள் அமைத்து செயல்பட்டதோடல்லாமல் நில உடைமையாளர்களை வற்புறுத்தி விவசாயிகளுக்கு உணவுக்கான கடன் வழங்கவும் விவசாயிகள் சங்கம் பல முயற்சிகளை மேற் கொண்டது. இந்தச் செயல்பாடுகள் அனைத்தும் விவசாயிகள் சங்கமும் கட்சியும் வலுப்பெற உதவி செய்தன.

4

வங்காளத்தின் விவசாயிகள் சங்க வரலாற்றில் டெபாகா இயக்கம் ஒரு முத்திரை பதித்த இயக்கமாகும். அதுதான் முதன் முதலாக முழுமையாகத் திட்டமிட்டு அமைப்பு ரீதியாக வங்காள விவசாயிகளை திரட்டிய இயக்கமாகும்.

1920களிலிருந்தே அறுவடை பங்கீடு முறை விவசாயம் சார்ந்த பகுதிகளில் வேகமான வளர்ச்சியினைக்கண்டது;  விவசாயிகளை கடன் பொறியில் சிக்கியிருந்தனர்; அதில் மாட்டிக் கொண்ட விவசாயிகள் கடும் வட்டி சேகரிக்கும் முதலாளித்துவ – வணிகர் களிடம் தங்கள் நிலங்களை ஒப்படைக்க வேண்டி வந்தது. நிலங்களை நேரடியாக விற்பதற்குப்பதிலாக, அவர்கள் மிகவும் குறைந்த விலைக்கு அந்த நிலங்களை அடகு வைத்தார்கள். மீண்டும் அந்த நிலங்களை கையிலெடுத்துக் கொள்ள முடியும் என்ற பிரமை அவர்களுக்கு இருந்தது. ஆனால், வானை எட்டிப்பிடிக்கும் வட்டி விகிதத்தின் அளவு நிலங்களை மீண்டும் பெற அவர்களை அனுமதிக்கவில்லை. கடுமையான வட்டி வசூலிக்கும் முதலாளிகளாக மாறிய ஜோதேதார் சட்டப்படி குத்தகைதாரர்களாகவோ அல்லது விவசாயிகளாக கருதப்பட்டனரே தவிர இடைத்தட்டு மனிதர்களாக இல்லை. அறுவடையினை பங்கீடு செய்வதின் அடிப்படையில் நிலப்பசி கொண்ட விவசாயிகளிடத்தில் நிலங்களை குத்தகைக்கு விடுவது அதிக லாபகரமானது என்பதை அவர்கள் கண்டார்கள்.

மறுபக்கத்தில் வேறொரு நிகழ்வு நடந்தது. சில இடைத்தட்டு நிலப்பிரபுக்கள் குத்தகைதாரர்கள் குத்தகை செலுத்த தவறியதால் தங்கள் நிலங்களை கையிலெடுத்து, சலாமி அல்லது ரொக்கப்பண குத்தகை அடிப்படையில் வேறு விவசாயிகளிடம் குத்தகைக்கு விட்டார்கள்.  ஆனால், அந்த நிலங்களை மீண்டும் கையிலெடுத்து அறுவடைப் பங்கீடு முறையில் (Share Cropping) கட்டுக் குத்தகைக்கு விடத் துவங்கினார்கள். ரொக்கக்குத்தகைப் பணத்தை விருப்பம் போல் உயர்த்துவது அவர்களுக்கு லாபகரமானதாக இருந்தது. 50:50 என்ற விகிதத்தில் பங்கீடு இருந்தாலும் நிலச்சொந்தக்காரனின் விருப்பத்திற்கேற்ப எப்படி வேண்டு மானாலும் மாறும். அந்தக் குத்தகை விவசாயிகள் தான் அனைத்து செலவினங்களையும் மேற்கொள்ள வேண்டும். உண்மையில், தங்கள் பங்கோடு, நிலத்தில் வேலைக்கு பெற வேண்டிய கூலியினைக் கூட அவர்களால் பெற முடியவில்லை; அதோடு, கணக்கு தயாரிப்பதில் சில சட்டவிரோத பிடித்தங்களுக்கும் தில்லுமுல்லுகளுக்கும் உட்படுத்தப்பட்ர்கள். பெரும்பாலான குத்தகை விவசாயிகள் போராடி நிலத்திலிருந்து வெறுங்கையுடன் ஆனால், அமுத்தும் கடன் சுமையுடன் தான் திரும்பி வந்தார்கள். உண்மையில் அவர்கள் கொத்தடிமை கூலிகள் தான். சிலர் அடிமைத்தளையிலிருந்து விடுவித்துக்கொள்ள இருட்டில் மறைந்து ஓடுவதும் உண்டு.

1929ல் உலகத்தில் நிகழ்ந்த பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு, நிலங்கள் கைவிட்டுப்போவதும் விவசாயிகள் குத்தகை விவசாயி களாக மாறுவதும் மிகவும் அதிகரித்தது. ஆவணங்களின்படி, 1931 – 36 ல் நில விற்பனை பத்திரங்கள் 11,15,731 ஆகவும், நில அடமானப் பத்திரங்கள் 26,01,456 ஆகவும் இருந்தது; 1937 – 42ல் அவைகள் முறையே 27,23,006 ஆக உயர்ந்தது, 11,43,047 ஆக குறைந்தது. அதாவது, அந்த இடைப்பட்ட காலத்தில் 76 லட்சம் உரிமை மாற்றுப்பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 1937லிருந்து விற்பனை பத்திரங்கள் பதிவு அதிகரித்தது. அடமானப்பத்திரங்கள் பதிவு குறைந்தது. அதற்கான காரணங்கள் பின்பு விளக்கப்படும். குடிசைத் தொழில்கள் ஏற்கனவே அழிவினை சந்தித்துக் கொண்டிருந்தன. 1940 ல் பிரிட்டனின் மக்களவை பொறுக்குக் குழுவின் (Select Committee) உறுப்பினர் சார்ல ட்ரெவில்யான் சொன்னார். இந்தியாவில் தொழில் உற்பத்தியாளர்களை துடைத் தெறிந்து விட்டோம். இப்பொழுது அங்கே விவசாயத்தை தவிர வேறொன்றுமில்லை. அந்த விவசாயமும் அழிவினை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.

விவசாயிகளின் துயரமும், வெறுப்பும் பெருகி வளர்ந்தன. இதனைக் கண்ட அன்று பொறுப்பில் இருந்த ஃபஜ்நூல் ஹக் மந்திரி சபை ஒரு சட்டம் கொண்டு வந்தது. அதன்படி அடமானம் வைக்கப் பட்ட நிலங்களை விவசாயிகள், அடமானப்பணத்தை 15 அல்லது மிகவும் எளிதான தவணைகளில் செலுத்திவிட்டு நிலத்தை மீண்டும் எடுத்துக் கொள்ளலாம்; கடன் மீதான வட்டி  கடன் தொகைக்கு மீறாமல் இருக்க வேண்டும். அதற்காகக் கடன் வயப்பட்டடோரில் பெரும்பாலானவர்கள் பயன் பெற்றாலும், எதிர்காலத்தில் கடன் பெற வேண்டியிருப்பவர்களுக்கு அது சில பிரச்சனைகளை உருவாக்கியது. முன்பு நில அடமானப்பத்திரங்களின் அடிப்படையில் கடன் கொடுத்த ஜோதேதார் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க நில விற்பனை பத்திரங்களுக்கு அழுத்தம் கொடுத்தார்கள். அதனால்தான், 1936க்குப் பிறகு அடமானப்பத்திரங்கள் எண்ணிக்கை குறைந்து விற்பனைப் பத்திரங்க்ளின் எண்ணிக்கை அதிகரித்தது.

1938 நவம்பரில் ஃபஜ்நூல் மந்திரி சபை சர்ஃபிரான்சின் ஃப்ளொட் என்பவர் தலைமையில் நிலவருவாய் கமிஷன் ஒன்றினை அமைத்தது. 1940ல் அது தன் அறிக்கையினை சமர்ப்பித்தது. குத்தகை விவசாயி களுக்கு அறுவடையில் மூன்றில் இரண்டு பங்கு என்று பரிந்துரை செய்தது. அந்தப் பரிந்துரையின் அடிப்படையில் விவசாயிகள் சங்கம், பாஞ்ஜியா (ஜெஸ்ஸூர் மாவட்டம்) வில் நடந்த அதன் நான்காவது மாநில மாநாட்டில் டெபாகா (மூன்றில் இரண்டு பங்கு குத்தகை விவசாயிகளுக்கு ஒருபங்கு நிலச் சொந்தக்காரர்களுக்கு என பொருள்படும்) இயக்கத்தை தொடங்குவது என முடிவு செய்தது. ஆனால், அது பிரச்சார கோஷமாகத்தான் வைக்க முடிந்தது; ஏனெனில் கட்சி சட்ட விரோதமாக்கப்பட்டிருந்தது; அது 1941 வரை நீடித்தது. உலக அரசியல் நிலமைகளில் மாற்றம் வந்தது; பாசிச எதிர்ப்பு இயக்கத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய அவசியம் எழுந்தது. அதன்பின் தான் வங்காளப் பஞ்சம் தாக்கியது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஏகாதிபத்திய எதிர்ப்பு எழுந்த பின்னணியில், கட்சியின் வழிகாட்டுதலோடு விவசாயிகள் சங்கம் 1946ல் அதன் மௌபாக் (குல்னா மாவட்டம்) மாநாட்டில் அதே அறுவடை ஆண்டில் மூன்றில் இரண்டு பங்கு கோரி விவசாயிகளை திரட்ட வேண்டும் என்று முடிவெடுத்தது. அதே நேரத்தில், தெலுங்கானா பேரியக்கம், மகாராஷ்டிரத்தில் வார்லி ஆதிவாசிகள் போராட்டம், அஸாமில் சூர்மா பள்ளத்தாக்கிலும் மற்றும் பீகாரில் பக்ஷி இயக்கம் போன்ற பல்வேறு விவசாயிகள் போராட்டங்கள் கிளர்ந்தெழுந்தன. இந்தப் போராட்டங்களும் ஒரே அகில இந்தியப் போராட்டத் திட்டத்தின் பகுதிகள் தான்.

விவசாயிகள் மத்தியில் தாபனம் என்பது வலுவற்ற ஒன்றாகத்தான் இருந்தது; ஆனால் குத்தகை விவசாயிகளிடமும், ஏழை விவசாயிகளிடமும் எழுந்த உற்சாகம் அளவிட முடியாதது. செயலூக்கத்தோடு கூடிய இயக்கம் துவக்கப்பட்டது; போராட்டம் வெடிக்கும் இடங்களில் பணியாற்ற தலைவர்கள் அமர்த்தப்பட்டனர். பேரணிகள் நடத்தப்பட்டன. மூன்றில் இரண்டு பங்கினை உறுதி செய்ய, விளைபொருள்களை குத்தகை விவசாயின் வயலிலோ அல்லது அவரின் விருப்பத்திற்கேற்ற இடத்திலோ சேமித்து வைக்க வேண்டும் என்ற கோஷம் முன் வைக்கப்பட்டது; ஒரு ரூபாய், ஒரு மனிதன், ஒரு லத்தி என்ற கோஷத்தோடு போராட்ட நிதி உருவாக்கப்பட்டது. பத்தொன்பது மாவட்டங்களுக்கு இது பரவியது. வடமாவட்டங்களிலும், தெற்கே 24 பர்கானா மாவட்டத்திலும் இந்த இயக்கம் பரந்த அளவில் இருந்தது. தெற்கே ஹூக்ளி, ஹொவுரா, மிட்னாபூர், நாடியா மற்றும் பிர்பூம் மாவட்டங்களில் சில பகுதியில் பரவிச் சென்றது. அமைப்பு ரீதியாக திரட்டப்பட்ட விவசாயிகள் இயக்கம் நிலப்பிரபுத்துவ சக்திகளை எதிர்த்துப் போராட போதுமானதாக இருந்தது; ஆனால், ஆயுதந்தாங்கிய அரசின் படைகளை எதிர்த்துப்போராட போதுமானதல்ல. இந்த இயக்கம்  நில உடைமை யாருக்கு என்பதை தொடாததால், சுதந்திரம் நெருங்கும் தருவாயில் அன்று பதவியிலிருந்த முலீம் லீக் அரசு, அனுதாபம் இல்லை என்றாலும், இந்த இயக்கத்தை குறைந்த பட்சம் ஒடுக்கும் முயற்சிகளை மேற்கொள்ளாது என எதிர்பார்க்கப்பட்டது. தினாஜ்பூர் மாவட்டத்தின் சிர்பந்தார் பகுதியில் இரண்டு விவசாயிகளைக் கொன்ற பிறகு, முலீம் லீக் அரசு குத்தகைதாரர் நலன்களை பாதுகாப்பதற்கான சட்டம் கொண்டு வருவதாக உறுதி கூறியது.ஆனால், அது வெறும் ஏமாற்று வித்தை என்று தெரிந்துவிட்டது. நிலப்பிரபுக்கள் தோற்கடிக்கப்பட்டனர். ஆனால் அரசின் ஆயுதந்தாங்கிய படைகள் நிலப்பிரபுக்களை பாதுகாத்தது.  அரசின் படையின் தாக்குதலில், துப்பாக்கியால் சுடாமலே இரண்டே மாதங்களில் 86 பேர் உயிரிழப்பில் முடிந்தது. ஆயுதம் தாங்கிய அரசின் படைகளை வெற்றி கொள்வதற்கு ஆயுதம் தாங்கிய புரட்சியின் பலம் தேவை; ஆனால், அது அன்று ஒரு அர்த்தமற்ற கோட்பாடாகும். ஆகவே, அந்த போராட்டம் விலக்கிக் கொள்ள நேர்ந்தது.

யதார்த்தத்திலிருந்து விலகி நின்று அறைக்குள்ளிருந்தே பேசிக் கொண்டிருக்கும் சுத்த சுயம்புவான சில அறிவு ஜீவிகள், 50 ஆண்டுகளுக்குப் பிறகு, கட்சி மற்றும் விவசாயிகள் சங்கத்தின் தலைமை விசுவாமாக செயல்பட்டிருந்தால், நாம் போராட்டத்தில் வெற்றி பெற்றிருக்க முடியும் என்று இன்று சொல்கிறார்கள். இந்தக்கருத்து அபத்தமானது மட்டுமல்ல, கட்சி மீதான அவர்களின் வெறுப்பினக் காட்டுவதாகவும் உள்ளது. விவசாயிகள் தற்காலிகமாக தோற்கடிக்கப்பட்டாலும், இயக்கம் தோற்கவில்லை, அந்தப் போராட்டம் சில பலன்களைக்  கொண்டு வந்தது.

அவைகளாவன,

  1. குத்தகை விவசாயிகள் அவர்கள் உரிமைகளுக்கான சமூக அங்கீகாரம் பெற உதவியது. பின்பு அதில் வெற்றியடையவும் செய்தது.
  2. சட்ட விரோதமான சுரண்டல், பறிப்பு பெருமளவில் தடுத்து நிறுத்தப்பட்டது.
  3. அது, விவசாயிகள் இயக்கத்தின் அடித்தளத்தை விரிவுபடுத்தி வலுப்படுத்தியது. விவசாயிகளின் உணர்வு மட்டத்தை செழுமையாக்கியது. அடித்தளத்தில் உள்ள விவசாயப் பெருங்குடி மக்கள் விவசாயிகள் சங்கத்தையும், கட்சியினையும் தங்களுடையதாகப் பரவலாகப் பல இடங்களில் அடையாளம் கண்டனர்.
  4. சமூக நல்லிணக்கத்திற்கான அடிப்படையினை அமைத்துக் கொடுத்தது. ஹனாபாதில் (கோமில்லா) கலவரம் தூண்டு வோரை எதிர்த்து விவசாயிகள் நடத்திய வரலாற்று சிறப்பு மிக்க போராட்டம் மகாத்மா காந்தியின் பாராட்டுதலைப் பெற்றது.

5

நாட்டுப் பிரிவினை விவசாயிகள் இயக்கத்தை கடுமையாகப் பாதித்தது. 1948ல் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் தடை செய்யப்பட்டது. விவசாய சங்கத்தலைவர்கள் உட்பட கட்சியின் பல தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டும், தலைமறைவு வாழ்க்கைக்கும் தள்ளப்பட்டனர். ஆனால், இந்தத் தடைகளையும் தாண்டி, டெபாகா இயக்கம் தொடர்ந்தது. 24 பர்கானா மாவட்டத்திலும், வுரா, ஹூக்ளி, மிட்னாபூர் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இந்த இயக்கம் தீவிரமடைந்தது. அடக்குமுறை இருந்த போதும் நில வெளியேற்றத் தையும், நிலப்பிரபுக்களின் அடக்கு முறையினையும் எதிர்த்து பல மாவட்டங்களில் போராட்ட அலைகள் எழுந்தன. கைது செய்யப் பட்ட தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி போராட்டங்கள் வெடித்தன. விடுதலைக்குப் புறகு நடந்த இப்போராட்டங்களுக்குச் சில சமயம் இடது அதிதீவிரவாத போக்கிற்கு ஆட்பட்டாலும், கட்சியின் மீது விசுவாசத்தையும், அதன் வலிமையையும் மக்களிடையே செல்வாக்கையும் உறுதி செய்தது.

1952 மாநில சட்டமன்றத் தேர்தலில் இந்த வளர்ச்சி மக்களால் வெளிக்கொணரப்பட்டது. 1946ல் ஒன்றுபட்ட வங்காள சட்டமன்றத்திற்கான தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 3 இடங்களே கிடைத்தன. ஆனால் 1952ல் கட்சிக்கு 28 இடங்கள் கிடைத்தது. அதன் கூட்டணி கட்சிகளின் எண்ணிக்கையினையும் சேர்த்து 43 இடங்கள் கிடைத்தன.

50களில் தொடர்ச்சியான பல போராட்டங்கள் நடந்தன. 1943ம் ஆண்டு ஏற்பட்ட உணவு பஞ்சத்தின் விளைவாக உருவான வறுமை நிலையும், விவசாயம் நடைபெறாத காலங்களில் தோன்றும் வேலையின்மையும் அப்போராட்டங்கள் தொடர்ந்து முன் வைத்த பிரச்சனைகள் வட்ட, மாவட்ட மற்றும் மாநில அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சட்ட மறுப்பு இயக்கங்களோடு சேர்ந்தே இவைகள் நடத்தப்பட்டன. ஆகட் 31, 1959 ல் அப்போராட்டங்கள் ஒரு உச்ச கட்டத்தை அடைந்தன. காவல் துறையின் தடியடி தாக்குதலில், துப்பாக்கிக் குண்டுகள் பிரயோகிக்கப்படாமலேயே 80 பேர் உயிரிழந்தனர். ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகளிடமிருந்து, சந்தை விலைக்கு குறைவாக வாங்கும் கட்டாய கொள்முதலை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்தப்பட்டன; உபரியாக உற்பத்தியான பகுதிகளிலிருந்து உணவுப் பொருட்களை குறைந்த உற்பத்திப் பகுதிகளுக்கு எடுத்துச் செல்வதைத் தடை செய்யும் அடக்கு முறை நடவடிக்கைகளை எதிர்த்தும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

விவசாயிகளுக்கு விளைபொருளுக்கான நியாயவிலை கோரியும், ஏழை மக்களுக்கு மலிவு விலையில் உணவு வழங்க வேண்டும் என்றும் கட்சி கோரிக்கைகளை முன் வைத்தது. இது சந்தர்ப்பவாதம் என்றும் பொறுப்பற்ற போக்கு என்றும் காங்கிர கட்சி எள்ளி நகையாடியது. மான்யம் கொடுத்து அதைச் செய்ய முடியும் என்று கட்சி எடுத்துக் காட்டியது.  மக்கள் இதை ஏற்றுக் கொண்டார்கள். பின்பு மத்திய அரசும் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் வந்தது. தோட்டங் களைக் கையகப்படுத்ததுதல் மற்றும் நிலச் சீர்திருத்தம் பற்றிய சட்டங்கள் விவசாயிகளுக்கு எந்தப்பலனையும் கொடுக்கவில்லை; மாறாக, நில வெளியேற்றம் வேகமாக நடந்தது. இதனை கட்சி தன் முழு பலம் கொண்டு எதிர்த்தது.

இந்த விவசாயிகளின் போராட்டங்கள், தொழிலாளி வர்க்கத்தின் வீரமிக்க போராட்டங்களுடனும், ஆரம்ப, இடைநிலை ஆசிரியர் களின் புகழ்மிக்க போராட்டங்களுடனும், டிராம் கட்டணம் ஒரு பைசா உயர்வினை எதிர்த்த ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங் களுடனும், அகதிகள் மறுவாழ்வுக்கான இயக்கங் களுடனும், வங்காளத்தையும், பீகாரையும் இணைக்கும் முயற்சிக்கு எதிரான ஒன்றுபட்ட ஜனநாயகப் போராட்டங்களுடனும், பீகார் மாநிலத்தில் உள்ள புரூலியா மாவட்டத்தை வங்காளத்தோடு இணைத்து மொழிவழி மாநிலம் உருவாக நடந்த இயக்கத்துடனும், இணைந்து நடத்தப்பட்ட போராட்டங்களாக இருந்தன.

அதன் விளைவாக, 1957 தேர்தலுக்குப் பிறகு உருவான சட்டமன்றத்தில் கம்யூனிஸ்ட்கட்சியின் பலம் 46 ஆக உயர்ந்தது; கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து அதன் பலம் 61 ஆக இருந்தது. 1962ல் இந்தியா – சீனா எல்லைப் பிரச்சனையில் குறுகிய தேசிய வெறியுடன் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராகப் பல அடக்குமுறை நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், சட்டமன்றத்தில் கட்சியின் பலம் 50 ஆக உயர்ந்தது; மற்ற இடது சாரிக்கட்சிகளோடு சேர்ந்து அது 78 ஆக உயர்ந்தது. 1965 ல் நூற்றுக்கணக்கான தலைவர்கள் சிறையில் இருந்த போதும் உணவு மற்றும் அத்தியாவசிய பொருள்கள் வேண்டி வீரமிக்க போராட்டங்கள் நடத்தப்பட்டன. நிலைமை கட்டுக்குள் அடங்கவில்லை. சிறையில் உள்ள கம்யூனிஸ்ட் தலைவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி குறைகள் தீர்க்க நடவடிக்கை எடுக்கவும், தலைவர்களை (1966ல்) விடுதலை செய்யவும் மக்களை அமைதிப்படுத்தவும் மத்திய அரசு குல்ஜாரி நந்தாவை அனுப்பியது.

இதற்கிடையில் கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு ஏற்பட்டது. 1967 ல் இரண்டு அணிகள் காங்கிர எதிர்ப்பில் உருவெடுத்தன. ஒன்று, மார்க்சிஸ்ட் கட்சியும் மற்ற இடதுசாரிக்கட்சிகளும் இணைந்த ஐக்கிய இடது முன்னணி; மற்றொன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஃபார்வர்ட் பிளாக் மற்றும் காங்கிரசிலிருந்து சிதறி வந்த சிறு குழுக்கள் அடங்கிய மக்கள் ஐக்கிய இடது முன்னணி. காங்கிர எதிர்ப்பு வாக்குகள் பிளவுபட்ட போதும், காங்கிர கட்சி படு தோல்வியினை சந்தித்தது. காங்கிர கட்சியின் மீது வெறுப்பு கொண்ட மக்களின் நிர்பந்தத்தால், அந்த இரண்டு காங்கிர எதிர்ப்பு அணிகளும் இணைந்து ஐக்கிய முன்னணி அரசினை உருவாக்கப் பட்டது. மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான அணியில் 68 சட்டமன்ற உறுப்பினர்களும் (மார்க்சிஸ்ட் கட்சி 44 மற்றவர்கள் 24) மற்ற அணியில் 65 பேரும் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 16, வங்களா காங்கிர 34, மற்றவர்கள் 5) இருந்தனர்; இடது சாரிக்கட்சிகளின் பலம் மட்டும் 88 ஆக இருந்தது.

சில காங்கிர எதிர்ப்பு சந்தர்ப்பவாத கட்சிகளும் ஐக்கிய முன்னணியில் சேர்ந்தன. அந்த முன்னணி பல்வேறு முரண்பட்ட கூறுகளைக் கொண்ட அமைப்பாக இருந்த போதிலும், விவசாயிகள் இயக்கங்களுக்கு அது புதிய உத்வேகத்தைக் கொடுத்து; நிலச் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்ற வாக்குறுதியினை  அரசின் செயல் திட்டம் கொடுத்தது. தோழர். ஜோதிபாசு உள்துறை அமைச்சரானார். தோழர். ஹரி கிருஷ்ண கோனார் நிலச்சீர்திருத்த அமைச்சராக பொறுப்பேற்றார். நிலச் சீர்திருத்த சட்டங்கள் முன்பே நிறைவேற்றப் பட்டிருந்தாலும் வங்காளத்தில் அதுவரை செயல்படுத்தப்படாம லேயே இருந்தன. அந்த சட்டங்களில் பல குறைபாடுகளும் ஓட்டைகளும் நிறைந்திருந்தன; ஒவ்வொரு தனி நபருக்கான உடமையின் அடிப்படையில் உச்சவரம்பு தீர்மானிக்கப்பட்டது; விவசாய நிலத்திற்கு 25 ஏக்கர் என்றும், பழத் தோட்ட நிலங்களுக்கு 1.5 ஏக்கர் என்றும், நீர் நிலைகள் அல்லது ஏரிகளை உச்சவரம்பிலிருந்து விலக்கி வைத்தும் அச்சட்டத்தின் விதிகள் இருந்தன. கடவுளின் பெயராலும், பழக்கிய மிருகங்களின் பெயராலும் இல்லாத நபர்களின் பெயராலும் நிலப்பிரபுக்கள் மோசடியாக நிலங்களைத் தங்களிடமே தக்கவைத்துக் கொண்டனர். சட்டத்தின் மூலம் உபரி என்று அறிவிக்கப்பட்டநிலங்களை காங்கிர அரசு கையகப்படுத்த வில்லை; நிலப்பிரபுக்களின் கைகளிலேயே  அது விட்டு வைக்கப் பட்டது. பல்வேறு விவசாயிகளின் வீரமிக்க போராட்டங்களை நடத்திய அமைப்புகளை பங்கு பெற வைக்காமல் எந்த நிலச் சீர்திருத்தமும் செயல்படுத்த முடியாது என்று கட்சியும் விவசாயிகள் சங்கமும் தீர்மானித்தன.

ஐக்கிய முன்னணி இந்த நிலையினை ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. நில வெளியேற்றம் தடை செய்யப்பட்டது. நில வெளியேற்றங்களை  நடவடிக்கை எடுக்க வேண்டிய குற்றங்கள் எனக் கொள்ள வேண்டும் என்று காவல் துறைக்கு அறிவுறுத்தப்பட்டது. அதே நேரத்தில் தங்கள் வசம் உள்ள நிலங்களை விட்டுவிடாமல் பற்றிக் கொள்ள வேண்டும் என்று குத்தகை விவசாயிகள் அறிவுறுத் தப்பட்டனர். இடதுசாரிக் கட்சிகளும், குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சி, விவசாயிகள் சங்கம் நிலச்சீர்திருத்த அமைச்சரும், விவசாயிகளுக்கு அவர்களின் தாபன பலத்துடன் கிளர்ந்தெழுந்து நிலத்தை கையிலெடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறைகூவல் விடுத்தனர். சட்டம் ஒழுங்கு என்ற பிரச்சனையைத் தவிர, தொழிலாளி விவசாயிகளின் ஜனநாயகப் போராட்டங்களில் காவல் துறை தலையிடாது என உள்துறை மந்திரி அறிவித்தார். விவசாயிகள் சங்கத்தின் செயல்பாட்டின் தாக்கத்தால், விவசாயிகள் ஒன்று சேர்ந்து நிலச் சீர்திருத்தங்களை அவர்களே செயல்படுத்தத் துவங்கினார்கள்.

நிலப்பிரபுக்கள் இதைத்தடுக்க முயற்சித்தனர்; கொலைத் தாண்டவமாடினர். ஆனால் தோல்வியுற்றனர். நிதி மன்றங்களுக்குச் சென்று தங்களுக்குச் சாதகமான தடையுத்தரவுகளைப் பெற்றனர். விவசாயிகள் சங்கமும் அமைச்சர் ஹரி கிருஷ்ணன கோனாரும் விவசாயிகளுக்கு அறைகூவல்விட்டனர். நிலப்பிரபுக்கள் நீதிமன்ற தடையுத்தரவுகளை கொண்டு வந்து நீதியினை கேலிக்குரியதாக மாற்றுகிறார்கள். அமைச்சர் என்ற முறையில் என்னால் எதுவும் செய்யமுடியவில்லை. ஏனெனில் அரசியல் சட்டத்தின் படி நடப்பேன் என்று உறுதி செய்திருக்கிறேன். ஆனால், நீங்கள் அமைச்சர்களல்ல. உங்களுக்கு எந்த நிர்பந்தமும் இல்லை. கிளர்ந்தெழுங்கள்! தடையுத்தரவு பேனாவால் எழுதப்பட்டவை. உங்கள் கலப்பையால் அவைகளை நீக்கி நீதியினை நிலைநாட்டுங்கள். விவசாயிகள் சங்கம் இந்தச் செய்தியினை அனைத்து கிராமங்களுக்கும் கொண்டு சென்றது. எதைச் செய்ய வேண்டும் என அறைகூவல் விடப்பட்டதோ அதைச் செய்து காட்டி விவசாயிகள் அந்த செய்திக்கு பதில் கொடுத்தனர்.

சிறிது வலிமை கூடியவுடன், புதிய கோஷம் முன் வைக்கப்பட்டது:  உபரி நிலத்தையும், பினாமி நிலத்தையும் அடையாளம் காண வேண்டும். அதிகார வர்க்கத்தால் அதைச் செய்ய இயலாது. எவர் பெயரில் அந்நிலங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், உண்மையான உடமையாளர் யார் என்று விவசாயிகளாகிய உங்களுக்குத் தெரியும். எந்த நிலத்தில் யார் அறுவடை செய்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியும். மிகப் பெரிய அளவில் விவசாயிகளால் இது ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆயிரக்கணக்கில் அணி திரண்டார்கள். 5 ஏக்கர் நிலத்தை எடுத்துக்கொள்ள 5000 விவசாயிகள் திரண்டனர். யாருக்கு எவ்வளவு நிலம் கிடைக்கும் என்பதல்ல பிரச்சனை. சரியாகச் சொன்னால், நிலத்திற்கான இயக்கம் என்பதையும் இது தாண்டிச் சென்றது. சமூகத்தில் நெடுங்காலமாக மேலாண்மை செலுத்தி வரும் நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்து நடந்த பேரெழுச்சியாகும்.

ஆகையினால் தான், மத்தியதர வர்க்கத்தின் பெரும்பகுதி இதில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு நிலம் கிடைக்காது. ஆனால், நிலபிரபுத்துவ ஆதிக்கத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு தங்கள் சுயமரியாதையினை காத்துக்கொள்ள விரும்பினார்கள். நிலப்பிரபுத்துவத்தோடு இணைப்பினைக் கொண்டிருந்த சில முதலாளித்துவ கட்சிகள் ஐக்கிய முன்னணி அரசில் பங்கேற்றிருந்தனர். அவர்களுக்க இந்த மாற்றங்கள் நடுக்கத்தைக் கொடுத்தன. அரசிலிருந்து அவர்கள் வெளியேறி அரசினைக் கவிழ்த்தார்கள். ஆளுநர் ஆட்சி அமுல் செய்யப்பட்டது. அடக்குமுறை சகாப்தம் தொடங்கியது. இருந்தபோதிலும், அந்த இயக்கம் தொடர்ந்தது. 1969ன் துவக்கத்தில் தேர்தல் நடைபெறும் என்று ஆளுநர் அறிவிக்க வேண்டிய நிலை எழுந்தது.

இடைப்பட்ட காலத்தில் ஐக்கிய முன்னணி 9 மாதம் ஆட்சியில் இருந்த போது, விவசாயிகள் பலனளிக்கும் நல்ல அனுபவங்களை பெற்றனர். தோழர்.ஹரி கிருஷ்ண கோனார் வார்த்தையில் சொன்னால், அனைத்து இசைத்தட்டுகளும் ஒரே மாதிரி தான் இருக்கின்றன. அதில் யாருடைய குரல் பதிவு செய்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள சூழலும் இசைத்தட்டின் மீது ஊசியினைப் பொருத்த  வேண்டும். அதைப்போலவே, நிலத்துக்கான போராட்டம் என்ற ஊசி பொருத்தப்பட்ட போது தான், விவசாயிகள் ஐக்கிய முன்னணியில் பங்கு பெற்ற சிலரின் முகத்திரையினை கிழித்து அவர்களின் உண்மை முகங்களை விவசாயிகளால் பார்க்க  இயன்றது.

1969 தேர்தலில் காங்கிர முறியடிக்கப்பட்டது. 280 இடங்களில் 214 இடங்களை ஐக்கிய முன்னணி பிடித்தது. இடது கட்சிகளின் எண்ணிக்கை 155 ஆக உயர்ந்தது; மார்க்சிஸ்ட் கட்சியின் எண்ணிக்கை 44லிருந்து 80 ஆக உயர்ந்தது. விவசாயிகளின் ஆக்க உணர்வு அதிகரித்தது; புதிய இடங்களுககு போராட்டம் பரவியது. உபரி நிலங்களையும் பினாமி நிலங்களையும் கையக்கப்படுத்தத்த நடந்த போராட்டங்களுக்கு புதிய உத்வேகம் கிடைத்தது.

அந்த இயக்கத்தின் வேகம் ஒரு விஷயத்தில் தெளிவாக பிரதிபலித்தது. தனிநபர் உடமையாக சட்ட ரீதியாக அங்கீகரிக் கப்பட்ட உச்ச வரம்பு 25 ஏக்கர் என்பது குடும்பத்திற்கான உச்சவரம்பாக மாற்றும் கருத்துக்கு சமூக அங்கீகாரம் கிடைத்தது. நிலப்பிரபுக்களின் குடும்பங்களில் 25 ஏக்கருக்கு மேலே உள்ள நிலத்தை விவசாயிகள் எடுத்துக் கொள்வதை பெரும்பான்மையான மக்கள் அது நியாயமான செயல் என்று அங்கீகரித்தனர்.

மீண்டும், ஐக்கிய முன்னணியில் இடம் பெற்றிருந்த சில குட்டி பூர்வா இடதுசாரி கட்சிகள் பயந்தன. விவசாயிகளின் எழுச்சியினைப் பார்த்த வங்காள காங்கிரசைச் சேர்ந்த முதலமைச்சர் அஜய் முகர்ஜி தன்னுடைய அரசினையே காட்டுமிராண்டித் தனமானது என்று கூறி பதவி விலகினார். நன்கு நாடு அறிந்த சில இடதுசாரிகள் என்று அறிமுகமான கட்சிகளும் அவரோடு சேர்ந்தன. 13 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஆளுநர் ஆட்சி அமுலுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து அடக்குமுறை, கொலை வெறித் தாண்டவங்கள் அரங்கேறின.

1971ல் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் இடதுசாரிக்கட்சிகள் இணயை முடியவில்லை. இரண்டு அணிகள் உருவாக்கப்பட்டன. ஒன்று மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிலும், மற்றொன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலும் உருவானது. ஆனாலும், காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வியைச் சந்தித்தது. மார்க்சிஸ்ட் அணி 125 இடங்களைப் பெற்றது. மார்க்சிஸ்ட் கட்சி மட்டும் 115 இடங்களைப் பிடித்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அணி 26 இடங்களைப் பிடித்தது. இடதுசாரிகளின் கூட்டு பலம் அரசு அமைக்கப் போதுமானதுக்கு அதிகமாகவே இருந்தது. தனிபெரும் கட்சியின் தலைவர் என்ற முறையில் தோழர்.ஜோதிபாசு ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இதை எதிர்த்தது. அவிழ்த்துவிடப்பட்ட வன்முறை தொடர்ந்தது.

அதிகார வர்க்கம், காவல் துறை மற்றும் ஆயுதந்தாங்கிய குண்டர்களின் உதவியுடன் 1972ம் ஆண்டு ஒரு மோசடித் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தல் மோசடியில் இந்திய கம்யூனிஸ்ட்கட்சி காங்கிரசுடன் சேர்ந்து கொண்டது. இரண்டு மணி நேரத்தில் தேர்தல் முடிந்து விட்டது. வாக்குகள் எண்ணிக்கையிலும் மோசடி தொடர்ந்தது. 60,000 வாக்குகளைப் பெறுவார் என்று கணிக்கப்பட்ட வரலாற்று நாயகன் ஜோதிபாசு வெறும் 2000 வாக்குகள் பெற்றார் என்று அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கையினை மார்க்சிஸ்ட் கட்சி புறக்கணித்தது; சட்டமன்றத்தையும் புறக்கணித்தது. அரை பாசிச பயங்கரம் அன்றாட செயல் முறையக உருவெடுத்தது. பட்டப்பகலில் 1100க்கம் மேற்பட்ட தோழர்கள் கொல்லப்பட்டனர். காவல் துறை வேடிக்கை பார்த்தது; சில சமயம் கொலை வெறியினை ஊக்குவித்தது; 20,000க்கும் மேற்பட்ட தோழர்கள் தங்கள் வாழும் பகுதியிலிருந்து வெளியேற வேண்டியிருந்தது. ஆயிரக்கணக்கான தோழர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அலுவலகங்கள் கட்டாய ஆக்கிரமிப்புக்கு உள்ளாயின. விவசாயிகள், தொழிலாளிகள், மத்தியதர வர்க்கம், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள், அறிவு ஜீவிகள் உட்பட அனைவரும் பயங்கரத் தாக்குதலைச் சந்தித்தனர். பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்கள், பள்ளிகளின் தலைமை யாசிரியர்கள் போன்று சமூகத்தில் பிரபலமானவர்கள் கூட பட்டப்பகலில் எரித்துப் படுகொலை செய்யப்பட்டனர்.

கையகப்படுத்தி பிரித்துக் கொடுக்கப்பட்ட நிலங்கள் கைப்பற்றப்பட்டன. விவசாயத் தொழிலாளிகளின் கூலி வெகுவாக கீழிறக்கப் பட்டது. அடக்குமுறை இருந்த போதும் 1974ல் கூலிக்கான போராட்டங்கள் 5000 கிராமங்களில் நடந்தன. 1977 மக்களவைத் தேர்தல் வரை இந்தப் பயங்கரம் நீடித்தது.

6

ஏதேச்சதிகாரத்துக்கு எதிரான நாடு தழுவிய போராட்டம், மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சந்தித்த பரிதாபகரமான தோல்வி போன்ற நிகழ்வுகளின் பின்னணியில், ஜூன் 1977ல் மேற்கு வங்க சட்டசபைக்கான தேர்தல் நடந்தது. ஒன்றுபட்ட முறையில் தேர்தலைச் சந்திக்க இடதுசாரிகள் ஜனதா கட்சியினை அணுகினார்கள்; இளைய கூட்டாளியாக இருப்பதற்கு கூட சம்மதம் தெரிவித்தார்கள். ஆனால், ஜனதா அதை நிராகரித்தது. மக்கள் காங்கிரஸ் கட்சியின் இருண்ட ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர விரும்பினார்கள். இடதுசாரிகளின் நிலையினை பாராட்டினார்கள்; ஜனதா கட்சியின் அகங்கார நிலைபாட்டிற்கு கண்டனம் தெரிவித்தனர். காங்கிரசும், ஜனதாக் கட்சியும் தேர்தலில் படுதோல்வியினைச் சந்தித்தன. இடதுசாரிகள் மிகப் பெரும் பான்மையோடு மகத்தான வெற்றியைப் பெற்றனர்; மார்க்சிஸ்ட் கட்சி மட்டும 294 இடங்களில் 178 இடங்களைப் பிடித்தது.

நிலத்துக்கான இயக்கம் புதிய வேகத்துடன் மீண்டும் துவங்கியது; அனைத்து மாவட்டங்களிலும் தீவிரப்படுத்தப்பட்டது; 60களில் பலவீனமாக இருந்த இடங்களில் இயக்கம் பரவியது. 1967 – 70 ல் மேற்கு வங்கத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட மிகப்பெரிய மாவட்டமான மிட்னாபூரில் (இப்போது இரண்டாகப் பிரிக்கக்கப் பட்டுள்ளது) இந்த இயக்கம் வலுவற்று இருந்தது. 1977க்குப் பிறகு, காட்டுத் தீ போல் மிக வேகமாக இந்த மாவட்டத்தில் அந்த இயக்கம் பரவியது. 24 பர்கானாக்கள், ஹௌரா, ஹூக்ளி, பங்குரா, புரூலியா, பர்துவான், பிர்பூம், நாடியா, முர்ஷிதாபாத், ஜல் பைகுரி மற்றும் கூச் பிஹார் மாவட்டங்களிலும் இந்த இயக்கம் தீவிரப்படுத்தப்பட்டது. பகிர்ந்தளிக்கப்பட்ட நிலங்களிலிருந்தும், குத்தகை  நிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 70களில் அரைபாசிச ஆட்சிக் காலத்தில் வெளியேற்றப்பட்டிருந்தனர். உடனடியாக அவர்களு டையதை அவர்கள் மீண்டும் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

முன்பு கடன்பட்ட விவசாயிகள் லேவாதேவிக்காரர்களிடம் நிலத்தை அடமானம் வைப்பதுண்டு; தனியான ஒப்பந்தம் எழுத்து மூலமாகவோ அல்லது வாய்வழியாகவோ ஒன்று அதனோடு இணைக்கப்படும். அதன்படி, குறிப்பிட்ட காலத்திற்குள் விவசாயி கடனைத் திருப்பிக் கொடுத்துவிட்டால், அந்த நிலம் மீண்டும் அவருக்கு கிடைத்துவிடும்.ஆகவே, அந்த விற்பனைப் பத்திரங்கள் அடமானப்பத்திரங்களாகக் கருதப்பட்டன. நிலத்தின் விலை சந்தை விலைக்கு 50 -60 சதம் குறைத்து மதிப்பிடப்பட்டது. அடமானம் கொடுத்த பிறகு அந்த விவசாயிகள் தங்கள் சொந்த நிலங்களிலேயே குத்தகை விவசாயிகளாக மாறிப்போனார்கள்; மீண்டும் நிலத்தை எடுத்துக்கொள்ள முடியாமலே இருந்தது. அப்படி கைவிட்டுப்போன நிலங்களை விவசாயிகள் திரும்பப் பெறுவதற்கான இயக்கம் 1967 – 69ல் துவக்கப்பட்டது; ஆனால், அதன் இலக்கை அடைமயுமுன் ஐக்கிய முன்னணி அரசு கலைக்கப்பட்டது. அடக்குமுறை துவங்கியது. 1977ல் இந்த இயக்கம் புதிய உற்சாகத்துடன் புத்துயிர் பெற்றது. சமூக நிர்பந்தங்களால் கடன் கொடுத்தவர்கள் தலை குனிய வேண்டிய நிலை எழுந்தது.

ஆனாலும், பிரச்சனைகள் எழுந்தன.  குறிப்பிட்ட நிலம் விற்கப்பட்டதா? அல்லது அடமானம் வைக்கப்பட்டதா? என்பதை எப்படித் தீர்மானிப்பது? எந்தத் தேதியிலிருந்து இதைச் செயல்படுத்துவது? இந்தக் கேள்விகளுக்கு விவசாயிகள் சங்கம் விடை கண்டது. விற்பனைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட நிலத்தின் விலை அன்றைக்கு நிலவிய சந்தை விலைக்கு சமமானதாக இருந்தால் அந்தப்பத்திரம் விற்பனைப்பத்திரம் என்று எடுத்துக்கொள்ளலாம். அதன் விலை சந்தை விலைக்கு 30 சதத்திற்கு மேலாக குறைத்து மதிப்பிட்டிருந்தால் அதை அடமானப்பத்திரம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தத் தேதியிலிருந்து என்ற கேள்விக்கு இவ்வாறு விடை கண்டது: 1960க்கு முன்னாலோ அல்லது வாழும் மக்களின் நினைவைத்தாண்டியோ இருத்தல் கூடாது. 30 -40 வருடங்களுக்கு முன்னால் நடந்த உரிமை மாற்று வாழும் மக்களின் நினைவு வட்டத்துக்குள் இருக்கும் வாய்ப்பு இல்லை. அதைத் தாண்டித்தான் இருக்கும். உரிமை மாற்றம் பெற்றவன் இறந்து போயிருக்கக் கூடும் அல்லது அதை வேறு விவசாயிக்கு மாற்றிக் கொடுத்திருக்கவும் கூடும். பழைய வழக்குகளை மீண்டும் எடுத்தால், சிறிய விவசாயிகள் கூட தங்களுடைய நிலம் கூட பிரச்சனைக் குறியதாக மாற்றப்படுமோ என்ற அச்சத்துக்கு ஆட்படுவார்கள். அது நிலப்பிரபுக்களுக்கு எதிராக விவசாயிகளை ஓரணியில் திரட்டப் படுவதற்கு ஊறுவிளைவிக்கும். மார்க்சிஸ்ட் கட்சியின் இந்த முடிவுகள் கிராமப்புற சமூக மக்களிடையே நல்ல மரியாதையினைப் பெற்றது; சட்டத்தின் துணை இல்லாமலிருந்தாலும் அந்த இயக்கம் வெற்றி பெற்றது.

1978ல் குத்தகைதாரர் பதிவு இயக்கம் (Operation Barga) துவக்கப்ட்டது. அதன்படி விவசாயிகள் இயக்கத்தோடு ஒருங் கிணைந்து குத்தகை தாரர்களின் உரிமையினை பதிவு செய்வதற்கு நிர்வாக ரீதியான நடவடிக்கைகளும் முன்முயற்சியும் மேற்கொள்ளப் பட்டன. அன்று நிலச்சீர்திருத்தத்திற்கான அமைச்சராக இருந்த பினாய் சௌத்ரி நில வருவாய் கமிஷ்னரும், இந்திய ஆட்சித்துறை அதிகாரியுமான திரு.டி.பந்தோபாத்யாய் ஆகியவர்கள் முன்முயற்சி எடுத்தனர். முதலில், வருவாய்த்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட தேதியில் கிராமங்களுக்குச் சென்று பணியினைத் துவக்கினார்கள். விவசாயிகள் சங்கமும் குத்தகை விவசாயிகளிடம் பிரச்சாரம் செய்து அவர்கள் அனைவரையும் வரவழைத்து அவர்களின் குத்தகை உரிமைகளை அந்த இடத்திலேயே பதிவு செய்ய வழிவகுத்தது. முன்பு குத்தகை விவசாயிகள் தான் தாங்கள் குத்தகைதாரர்கள் என்று நிரூபிக்க வேண்டும். ஆனால், இப்போது அவர் குத்தகைதாரரா இல்லையா என்று நிரூபிக்கும் பொறுப்பு நிலச்சொந்தக்காரர்களைச் சார்ந்தது. அடுத்தகட்டமாக, குத்தகை விவசாயிகள் நிலவரி அவலுவலகங்களுக்கு ஒருங்கிணைந்து சென்று தங்கள் உரிமைகளை பதிவு செய்தார்கள். பிர்பூம் மாவட்டத்தில் ஒரு நடைமுறை வழக்கத்தில் இருந்தது. கிளானி என்று அதற்குப் பெயர். அதன்படி நிலச் சொந்தக்காரர்கள் கலப்பை போன்ற இடுபொருள்களை கொடுப்பார்; அதற்குப்பதிலாக விளைபொருட் களின் 75 சதத்தை எடுத்துக்கொண்டு மீதம் 25 சதத்தினை விசாயிகளுக்கு கொடுப்பார். அந்த விவசாயிகள் ஒப்பந்தக் கூலிகளாகத்தான் இருந்தனர்; குத்தகை விவசாயிகளாக இல்லை. இந்தப் பதிவு இயக்கத்தின் விளைவாக அவர்களெல்லாம் குத்தகை விவசாயிகள் என பதிவு செய்யப்பட்டனர்.

உபரி, பினாமி நிலங்களைக் கண்டெடுத்து அதை கையில் எடுத்துக்கொள்ளும் அமைப்பு ரீதியான ஒருங்கிணைந்த இயக்கத் திற்கு வேகம் பிறந்தது. 1971ல் காங்கிரஸ் கட்சியின் இருண்ட கால ஆட்சியில், நிலச்சீர்திருத்த சட்டம் திருத்தப்பட்டது. அதன் மூலம் 1953ம் ஆண்டு (EA Act) சட்டமும், 1955ம் ஆண்டு நிலச் சீர்திருத்தச் சட்டமும் அமுல்படுத்திய பிறகு நிலப்பிரபுக்கள் மேற்கொண்ட சட்ட விரோதமான நில மாற்றங்கள் யாவும் முறைப்படுத்தப்பட்டன. ஆனால், உச்சவரம்பு குடும்பம் என்பதன் அடிப்படையிலே இருந்தது; 5 பேர் கொண்ட குடும்பத்திற்கு பாசன வசதி கொண்ட நிலத்தின் உச்சவரம்பு 5 ஹெக்டேர் என்று குறைக்கப்பட்டது. பெரிய குடும்பங் களுக்கு 7 ஹெக்டேர் என்பது உச்ச அளவாகக் குறிப்பிடப்பட்டது. புன்செய் நிலமாக இருந்தால் நன்செய் நிலத்தினைக்காட்டிலும் 1.4 மடங்கு அதிகமாகக் கணக்கிடப்படும்.

ஆனால், இவைகளெல்லாம் எழுத்தோடு நின்று விட்டன. செயல்படுத்தப்படவில்லை. மாறாக, அடக்குமுறையும், நிலவெளி யேற்றமும் அதிகரித்தது. (முந்தைய ஐக்கிய முன்னணி அரசு பொறுப்பிலிருந்த காலத்தில் நிலச்சீர்திருத்த சட்டங்களை திருத்துவதற்கு எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்; அமைப்பு ரீதியான பலவீனங்கள் தான் அதற்கு காரணம். விவசாயிகளை கிளர்ந்தெழச் செய்வதற்கான முயற்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. வளர்ந்து வரும் பலமான வீரம் மிக்க விவசாயிகள் இயக்கத்தால் துணிவு பெற்று, நிலச்சீர்திருத்த சட்டத்தை திருத்த ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆகஸ்ட் 7, 1969ல் நிலச்சீர்திருத்த அமைச்சர் தோழர். ஹரிகிருஷ்ண கோனார் சட்டசபையில் அதற்கான சட்ட முன்வடிவை முன்வைத்தார். ஆனால், ஐக்கிய முன்னணி அரசு விழுந்துவிட்டதால், அதனை சட்டமாக மாற்ற இயலவில்லை)

1971ல் கொண்டு வரப்பட்ட திருத்தம் பல ஓட்டைகளைக் கொண்டிருந்தது. இதைத் திருத்தும் வகையில் நிலச்சீர்திருத்த (2வது திருத்தச்) சட்டம் 1981ல் சட்டசபையில் நிறைவேற்றியது.

அந்த திருத்தத்தில் முக்கிய அம்சங்களாவன:

  1. மண்ணின் எந்தப்பகுதியும் நிலம் என்று குறிக்கும் வகையில் விளக்கம் கொடுக்கப்பட்டது. பழத்தோட்டங்களுக்கு 15 ஏக்கர் என்றும், முன்பு விலக்களிக்கப்பட்ட நீர்நிலை பகுதிகள் உச்ச வரம்புக்குள் வர வேண்டும் என்றும் விளக்கப்பட்டது.
  2. தனியார் நிலங்கள் என்று கருதப்பட்ட, கடவுளின் பெயரிலும் தனியார் அறக்கட்டளையின் பெயரிலும் உள்ள நிலங்கள் உச்ச வரம்புக்குள் கொண்டு வரப்பட்டன.
  3. பொது அறக்கட்டளைகள் விவசாயத்தில் ஈடுபடுவோர் எனக் கருதப்பட்டு 7 ஹெக்டேர் நன்செய் நிலங்கள் வைத்துக்கொள்ள அனுமதிக் கப்பட்டன. சரியான காரணமிருக்குமேயானால், அவர்கள் விடுக்கும் வேண்டுகோளின் அடிப்படையில், உச்ச வரம்பை தளர்த்தலாம்.
  4. ஒருவர் குத்தகைதாரர் இல்லை என்று நிலச்சொந்தக்காரர் தான் நிரூபிக்க வேண்டும் (முன்பு குத்தகை பதிவு இயக்கம் நடந்த பொழுது அது நிர்வாக உத்திரவாக இருந்தது)
  5. நிலச்சீர்திருத்தம் தொடர்பான வழக்குள் நீதிமன்ற வரம்பிலிருந்து நீக்கப்பட்டு இதற்கென அமைக்கபட்ட நிலத்தீர்ப்பாயங்களின் வரம்புக்குள் கொண்டு வரப்பட்டன.
  6. இந்த திருத்தச் சட்டம், எந்தத் தேதியில் 1955ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டம் அமுலுக்கு வந்ததோ, அதே தேதியிலிருந்து அமுலாக்கப்படும். இதனால், 1955க்குப் பிறகு நிலப்பிரபுக்கள் மேற்கொண்ட நில உரிமை மாற்றங்கள் யாவும் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும்.

1981ல் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் கூட, பல காரணங்களைக் காட்டி, 1986 வரை குடியரசுத்தலைவர் தன் ஒப்புதலை கொடுக்கவில்லை. 1986ல் ஒப்புதல் வந்த பொழுது, இடது முன்னணி அரசு அதில் சில மாற்றங்களைக்கொண்டு வர வேண்டியிருந்தது. சில மாற்றங்கள் சாதாரணமானவை தான்; ஆனால் முக்கியமான மாற்றம் ஒன்று இருந்தது. சட்டம் செயல்படத் துவங்கும் தேதி ஆகஸ்ட் 8, 1969 என்று மாற்றப்பட்டது. இந்தச் சட்டம் நில இயக்கம் மேலும் தீவிரமடைவதற்கான வாய்ப்பினை உருவாக்கியது. அவ்வியக்கத்தின் போது விவசாயிகள் சங்கம் பல பிரச்சனைகளை சந்தித்து தீர்வு காண வேண்டியிருந்தது. சில நிலச் சொந்தக்காரர்கள் தங்களிடமுள்ள உபரி நிலத்தை மோசடியான முறையில் அதிகமாக பணக்கார விவசாயி களுக்கும் கொஞ்சம் ஏழை விவசாயிகளுக்கும் விற்றனர். அதன் விளைவாக, விவசாயிகள் நிலத்தை கையிலெடுக்க முயற்சித்த போது, அவர்கள் ஒரு பகுதி விவசாயிகளை, நிலப்பிரபுக்களை அல்ல,  எதிர் கொள்ள வேண்டியிருந்தது. சில சமயங்களில் மோதல்களும் நடந்தன. இது ஒரு முக்கியமான பிரச்சனையாக இருந்தது.

விவசாயிகளுக்கு கீழ்க்கண்ட விஷயங்களை விளக்கிச்சொல்ல பிரச்சார இயக்கம் ஒன்றினை நடத்த வேண்டியிருந்தது. நிலப்பிரபுக் களிடமிருந்து நிலம் வாங்கியவர்கள் திருடப்பட்ட சொத்தினை வாங்கியவர்களாவர். சட்டப்படி யாரும் திருட்டுச் சொத்தை வைத்துக் கொள்ள முடியாது. தன்மீது குற்றமேதுமில்லை என்று நிரூபிக்கும் வரை, அதை வாங்கியவர்கள் குற்றவியல் சட்டப்படி வழக்கைச் சந்திக்க வேண்டியிருக்கும். அம்மாதிரி வாங்குவது செல்லுபடியாகாது. விவசாயிகள் சங்கம் விவசாயிகளின் ஒற்றுமையினை கட்டுவதற்கு விரும்புவதால்  2 முதல் 3 ஏக்கர் வரை  வைத்திருக்கும் விவசாயிகளைத் தொடமாட்டோம். (அங்குள்ள வர்க் சேர்மானங்களைப் பொறுத்து அளவு நிர்ணயிக்கப்படும். இந்த நிலம் நிலப்பிரபுக்களிடமிருந்து சட்ட விரோதமாக வாங்கிய நிலமானாலும் வைத்துக்கொள்ள அனுமதிப்பபடும்). போராடும் விவசாயிகள் பக்கம் அவர்கள் நின்றால் வாங்கிய நிலங்களை சட்ட ரீதியாக  முறைப்படுத்த கிசான் சபா உதவி செய்யும். அந்தப்பிரச்சார இயக்கம் நல்ல விளைவினைக் கொடுத்து. பணக்காரப் பகுதியினைச் சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். விவசாயிகளின் ஒற்றுமை என்ற பலத்தின் அடிப்படையில் பெருமளவில் நிலப்பிரபுக்களின் நிலங்களை கையகப்படுத்த முடிந்தது.

உபரி நிலங்களை தங்களிடமே வைத்துக்கொள்ள நிலப்பிரபுக்கள் நீதி மன்றங்களை நாடிச்செல்வதுண்டு. பல நேரங்களில் விவசாயிகள் அவர்களை நிர்பந்தித்து அந்த வழக்குகளை திரும்பப்பெற வைத்து உபரி நிலங்களைக் கொடுத்துவிடுமாறு செய்திருக்கிறார்கள். விவசாயிகள் அந்த நிலப்பிரபுக்களிடம் தெளிவாகச் சொன்னார்கள்: உபரி நிலத்தைக் கொடுக்கவில்லை என்றால், அவர்கள் கையிலிருக்கும்  நிலங்கள் விவசாயம் ஏதுமின்றி தரிசாக போடப்படும் என்று சொன்னார்கள். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அவர்கள் உரிமை யாக்கப்பட்ட நிலங்களை குடும்பத்திற்குள்ளேயே பிரித்து வைத்துக் கொண்ட சம்பவங்கள் உண்டு. அந்த நிலப்பட்டா உரிமைகளை ரத்து செய்ய வேண்டுமென்று இயக்கம் துவக்கப்பட்டு வெற்றியடைந்தது.

அந்த இயக்கத்தின் விளைவாக, 13.81 லட்சம் விவசாய நிலம் அரசின் கைக்கு வந்து, அதில் 10.69 லட்சம் ஏக்கர் 26.43 லட்சம் பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. அதில் 4.48 லட்சம் பட்டாக்கள் ஆண் – பெண் இருவர் பெயரிலும், 52,000 பட்டாக்கள் தனியாக பெண்களுக்காகவும் அளிக்கப்பட்டன. பலன் பெற்றவர்களில் 56 சதம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் பிரிவினைச் சேர்ந்தவர்கள். அரசு கையில் வந்த மீதமுள்ள நிலங்கள் நீதிமன்ற வழக்குகளில் சிக்கியிருந்ததால், அவைகளை பகிர்ந்தளிக்க இயலவில்லை. நீதிமன்ற வரம்பிலிருந்து விலக்கி நிலத் தீர்ப்பாயங்கள் அதிகார வரம்புக்குள் கொண்டு வரும் சட்டம் இருந்தாலும் கூட, நீண்டகால தொடர் வழக்குகளால் அச்சட்டத்தின் பகுதிகளை முழுமையாக செயல்படுத்த முடிய வில்லை. ஆனால் உண்மையில் அந்த நிலங்கள் யாவும் விவசாயிகளின் கைகளில் தான் இருக்கின்றன. அதோடு, 15.5 லட்சம் ஏக்கர் விவசாயம் சாரா நிலங்கள் அரசின் கையில் இருக்கிறது. அதில் 10.5 லட்சம் ஏக்கர் வனங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. 5 லட்சம் ஏக்கர் விளையாட்டு மைதானம், சமூகக்காடுகள், பழத் தோட்டங்கள், சாலை போன்ற பொது நலத் தேவைகளுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது.

11.08 லட்சம் ஏக்கர் நிலம் 15 லட்சம் குத்தகை விவசாயிகள் உரிமையாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றது; 5.44 லட்சம் ஏழை குடும்ங்களுக்கு வீட்டு மனைக்கான நிலம் வழங்கப்பட்டது. இப்பொழுது 70.8 சதம் நிலம் ஏழை மற்றும் சிறு விவசாயிகள் நிர்வகிப்பில் உள்ளது. உற்பத்தி 250 சதத்திற்கு அதிகமாக உயர்ந்திருக்கிறது. பஞ்சாயத்து அமைப்புகள் விவசாயிகள் குறிப்பாக ஏழை விவசாயிகளின் ஆற்றலை அதிகப்படுத்தியிருக்கிறது. விவசாயத் தொழிலாளிகளின் கூலி உயர்வுக்கான இயக்கம் வலுப்பெற்றிருக்கிறது; அவர்களின் கூலியும் உயர்ந்திருக்கிறது. தீண்டாமையும், சமூகப்பாகுபாட்டு நடவடிக் கைகளும் கடந்த கால நிகழ்வுகளாகிவிட்டன. ஏழை மக்களில் அடித்தட்டில் உள்ள மக்கள் சமூக நடவடிக்கைகளில் எந்த பங்குமின்றி பின்னே ஒதுங்கி நின்ற மனிதர்களாக இருந்தனர். ஆனால், இப்பொழுது சமூகத்தின் இயக்கும் சக்தியாக உள்ளனர். சமூகத்தில் ஏற்படும் முரணான நிகழ்வுகளுக்கு தீர்வு காண்பதில், பெண்கள் (வரதட்சணை) ஒடுக்கப்படுவதாக இருந்தாலும் சரி சொத்து சம்பந்தமான தகராறுகள் (வசதிபடைத்த குடும்பங்கள் உட்பட) எதுவாக இருந்தாலும், உழைப்பு சக்தியினை கொண்டிருக்கும் இந்த மக்கள் தான் முடிவினைச் சொல்லி பிரச்சனையினை தீர்த்து வைக்கிறார்கள்.

1967 மற்றும் 1969ல் நடத்தப்பட்ட நிலத்திற்கான இயக்கங்கள் இடது முன்னணி அரசு காலத்தில் நடத்தப்பட்ட இயக்கங்களைக்காட்டிலும் போர்க்குணமிக்கதாகவும், ஒருங்கிணைக்கப்பட்டதாகவும் இருந்தன என்று சிலர் குற்றஞ்சாட்டுகிறார்கள். அந்தக் கருத்து சரியானதல்ல. 1967-69 இயக்கங்கள் உடனடி தூண்டுதலால் நிகழ்ந்தவை. நிலப்பிரபுக்களின் அடாவடி நடவடிக்கைகளுக்கேற்ப, விவசாயிகளின் போரிடும் தன்மை இருந்தது. அன்றைக்கு நிலப்பிரபுக்கள் விவசாயி களிடமுள்ள உள்ளார்ந்த சக்தியினை புரிந்து கொள்ளவில்லை; மேலும் அன்றைக்கு இருந்த ஐக்கிய முன்னணி அரசு வலுவற்றதாக இருந்தது. இன்று நிலைமையில் நிறைய மாற்றம் உண்டு. விவசாயிகளின் பலத்தை நிலப்பிரபுக்கள் புரிந்து கொண்டார்கள். முந்தைய ஐக்கிய முன்னணி அரசுகளைக்காட்டிலும் இடது முன்னணி அரசு குணாம்ச ரீதியில் சிறப்பான தொன்று. ஆகவே, 1977க்குப்பிறகு எதிர்ப்பு என்பது அவ்வளவு வலுவாக இல்லை. இரண்டாவது பிரசவம் முதல் ஒன்றைக்காட்டிலும் வலி குறைந்ததாக இருக்குமென்பது இயற்கைதானே! 1977க்குப் பிறகு நடந்த இயக்கம், 1967 – 69ன் தொடர்ச்சிதான்; உயர்ந்த உணர்வு மட்டத்தோடு நடத்தப்பட்ட இயக்கமாகும்.

7

இவ்வளவு சாதனைகள் இருந்த போதும், சில பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றன. செயல்படுத்தப்பட்ட நிலச்சீர்திருத்தம் என்பது ஒரு புரட்சிகரத்தன்மை கொண்ட நிலச்சீர்திருத்தம் இல்லை. உச்சவரம்பு என்ற கோட்பாடே புரட்சிகரமான நிலச்சீர்திருத் தங்களுக்கு பொருத்தமானதல்ல; மக்கள் ஜனநாயகப் புரட்சி உருவாகி அதற்குப் பின்னால் வரும் கால கட்டத்தில் மட்டும் தான் புரட்சிகரமான நிலச் சீர்திருத்தங்களை செயல்படுத்த முடியும். சராசரியாக மாதத்துக்கு 1000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டாலும் மேலும் நிலத்திற்கான போராட்டம் என்பதற்கான வாய்ப்பு சுருங்கிவிடுகிறது; மேலும், அது சுருங்கவும் கூடும். நிலத்திற்கான இயக்கம் என்பது கடந்த காலத்தைப்போல் அதிக உற்சாகத்தை ஊட்டுவதாக இல்லை. கடந்த காலத்தில் அந்தப் போராட்டங் களிலேயே வாழ்ந்து அனுபவம் பெற்ற தலைமுறை இன்று இல்லை. கடந்தகால அனுபவம் ஏதும் இல்லாத புதிய தலைமுறை இப்போது உருவாகி வந்திருக்கிறது.

மேலும், தற்போது இருக்கும் சமூகப்பொருளாதார அமைப்பினாலும், மத்திய அரசின் கொள்கைகளாலும் இடது முன்னணி அரசின் செயல்திறன் வரையறுக்கப்பட்டிருக்கிறது. அது மேற்குவங்க அரசு சந்திக்கும் பல பிரச்சனைகளில் வெளிப்படுகிறது; தொழில்களும், சுரங்கங்களும் மூடப்படுகின்றன; வேலை இழப்பு நிகழ்கிறது; விவசாயம் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுகிறது; வேலையின்மை அதிகரிக்கிறது; விவசாய விளைபொருளுக்கான விலை இறங்கிக் கொண்டே இருக்கிறது. சமூக மாற்றங்களால் புதிய முரண்பாடுகள் எழுகின்றன; அவைகளை கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. தேசிய அளவில் நிலவும் துயர்தரும் பொருளாதார நிலையோடு இடது ஜனநாயகசக்திகள் ஒட்டு மொத்தமாக நாட்டில் வலுவில்லாத நிலையில், இடது முன்னணி மேற்குவங்கத்தில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. எகாதிபத்திய வாதிகளும், ஆளும் வர்க்கங்களும், சக்திபடைத்த ஊடகங்களின் துணைகொண்டு மேற்குவங்க அரசை கீழிறக்க வேண்டுமென்று முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். ஆயுதந்தாங்கிய தாக்கு தலையும் நடத்துகிறார்கள். இடது முன்னணியின் ஆட்சிக் காலத்திலேயே 3500 தோழர்கள் தங்கள் உயிரை இழந்திருக்கிறார்கள்.

விவசாயிகள், தொழிலாளி வர்க்கம், மத்தியதர வர்க்கம், அறிவுஜீவிகள் மற்றும் மக்களின் பெரும்பகுதியினர் இந்த சமூகப்பொருளாதார அமைப்பின் உண்மை நிலையினையும் மத்திய அரசின் கொள்கையினையும் உணர்ந்து செயல்படாவிட்டால், பொறுப்பில் உள்ள இடது முன்னணி அரசுக்கு எதிரான உணர்வுகள் தலை தூக்கும். நாம் கடுமையான முயற்சியில் ஈடுபட வேண்டும்; நம்பிக்கையோடு இருத்தல் வேண்டும். இன்றைய நிலையில் பலம் வாய்ந்த இடது முன்னணி தேவை.. அது வலுவான கட்சியினையும் வலுவான வெகுஜன அமைப்புகளின் தேவையினையும் கோருகிறது. தார்மீக சீரழிவுதன்மை கொண்ட சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டி ருக்கிறோம். மக்களுக்காக செய்யப்படும் தியாகங்கள் கடந்த காலத்தைச் சேர்ந்தவை என்று கருதும் போக்கு இன்றைய சமூகத்தில் நிலவுகிறது. மேலும், நாம் மேற்குவங்க அரசுப் பொறுப்பில் இருப்பதால் முதலாளித்துவ வர்க்கக்கேடுகளான சுயநலம், பதவி ஆசை, தன்னைச்சேர்ந்தோருக்கு சலுகை அளித்தல், புகழ்ச்சி மோகம், அதிகாரப்போக்கு, தன்னிச்சைப் போக்கு போன்றவை நம்மீது தாக்கம் செலுத்தக்கூடும். நாம் இதை எதிர்த்து மிகவும் உறுதியோடு தொடர்ந்து போராட வேண்டியிருக்கிறது. மெத்தனப் போக்கை விட்டொழித்து தைரியமாக இந்த சவாலை சந்திக்க வேண்டும்.

இடது முன்னணி அரசு அதிகரித்து வரும் ஆதரவோடு 6 முறை தொடர்ந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. (1977ல், இடது முன்னணிக்கு பதிவான வாக்குகளில் 45.97 சதம் கிடைத்தது; 2001ல் இது 48.99ஆக உயர்ந்தது) முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இந்த  சாதனைக்கு இணையேதுமில்லை. மக்கள் போராட்டங்கள் மற்றும் எண்ணற்ற தியாகங்கள் மூலம் உருவானது தான் இடது முன்னணி அரசு. இதில் விவசாயிகள் புரிந்த தியாகங்கள் மகத்தானவை. மறுபக்கத்தில், விவசாயிகள் மற்றும் நிலத்துக்கான இயக்கத்தின் வளர்ச்சிக்கும் மற்ற வர்க்க ஜனநாயக இயக்கங்களின் வளர்ச்சிக்கும் இடது முன்னணி அரசு அளப்பரிய உதவியை செய்திருக்கிறது. இப்படிச் சார்ந்து நிற்கும் பிணைப்பு வலுப்படுத் தப்பட வேண்டும்.



%d bloggers like this: