நாடு முழுவதும் 200 மாவட்டங்கள், தமிழகத்தில் 6 மாவட்டங்கள் என தற்போது தேசிய கிராமப்புற வேலை உறுதி சட்டம் (2005) அமுலாக்கப்பட்டு வருகிறது. கிராம அளவில் பணிகள் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வேலை உறுதி சட்டம் வழங்கும் உரிமைகள், சட்டத்தின் பல முக்கிய அம்சங்கள் ஆகியவற்றை விளக்கி மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிருந்தா காரட் விரிவான கட்டுரை எழுதியுள்ளார். (பார்க்க தீக்கதிர் 7.3.2006) இக்கட்டுரை களப்பணியாற்ற ஒரு சுருக்கமான கையேடாகவும் உதவிடும்.
கீழ்வரும் கட்டுரை, களத்தில் பணியாற்றும் மார்க்சிஸ்டுகள் பார்வையில் இச்சட்டத்தின் பயன்பாடு குறித்து சில கருத்துக்களை முன்வைக்கிறது.
தமிழகத்தில் செயலாற்றிட …
தற்போது தமிழகத்தில் சட்டம் பற்றிய மக்களின் விழிப்புணர்வு இல்லாதது, அதிகார வர்க்கத்தின் இயல்பான மெத்தனம், போன்றவற்றால் இன்னும் சட்ட அமலாக்கம் சரியான முறையில் நடைபெறவில்லை. முறைகேடுகள், ஊழல், விவசாயிகளுக்கு சட்டத்தின் பலன் சென்றடையாமல் இருக்க சூழ்ச்சிகள் என அனைத்துக் கேடுகளும் அரங்கேறிவருகின்றன. மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் ஜனநாயக இயக்கங்களும் இவற்றில் தீவிரமாக தலையிட வேண்டியது அவசியமாகிறது.
விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, நாகை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய இந்த ஆறு மாவட்டங்களும் கிராமப்புற பின்னணி கொண்டவை. கிராமப்புற மக்களின் எண்ணிக்கையும் அதிகம்.
2001 மக்கள் தொகை கணக்குப்படி கீழ்க்கண்டவாறு இந்த மாவட்டங்களில் கிராமப்புற ஜனத்தொகை உள்ளது.
மாவட்டம் | வட்டம் | கிராமப் பஞ்சாயத்து | கிராம மக்கள் தொகை | எஸ்.சி/எஸ்.டி |
திருவண்ணாமலை | 18 | 860 | 17,81,304 | 26.65 % |
விழுப்புரம் | 22 | 1104 | 25,17,447 | 31.12 % |
சிவகங்கை | 12 | 431 | 8,26,427 | 18.92 % |
கடலூர் | 13 | 681 | 15,27,936 | 33.67 % |
திண்டுக்கல் | 14 | 306 | 12,46,956 | 21.99 % |
நாகபட்டிணம் | 11 | 434 | 11,57,714 | 34.13% |
* இத்துடன் சிறப்பு ஊராட்சிகளையும் சேர்க்க வேண்டும்
மாவட்டங்களில் உள்ள இந்த கிராமங்களில் அதிக அளவில் தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வறுமை வாழ்க்கை நடத்தும் இந்தக் குடும்பங்களுக்கு இந்தச் சட்டம் ஓரளவு நிவாரணம் அளிக்கிறது.
ஆக, ஒரு விரிந்த செயல்படு தளம் மார்க்சிஸ்ட்டுகளுக்காகவும், ஜனநாயக சக்திகளுக்காகவும் காத்திருக்கிறது. இந்த அரிய வாய்ப்பை இந்தச்சட்டம் நல்கி உள்ளது.
உலகமயத்திற்கு ஒரு வேகத்தடை
வேலை உறுதி சட்டம் குறைந்த பட்ச கூலி ரூ.60/- வழங்க வேண்டுமென நிர்ணயித்துள்ளது. இதற்கு அதிகமாக, ஏற்கனவே கூலி நிர்ணயித் துள்ள மாநிலங்களில் அந்தக் கூலியே வழங்க வேண்டு மென்கிறது சட்டம். இதற்கு குறைவாக சட்டக்கூலி நிர்ணயித்துள்ள மாநிலங் களில் ரூ.60/- வழங்க வேண்டுமென்றும் சட்டம் கூறுகிறது.
தமிழகத்தில் ஏற்கெனவே அரசு, சட்டக் கூலியாக ரூ.80/- நிர்ணயித் துள்ளது. எனவே இங்கு ரூ.80/- வழங்கப்பட வேண்டும்.
இந்தத் தொகை 100 நாள் வேலை என்ற அடிப்படையில் பார்த்தால் மிகவும் குறைவாகத் தோன்றலாம். ஆனால், இன்றைய நிலையில் குடும்பங்களை வாட்டி வதைக்கும் வறுமை, வேலையின்மை, பசி, பட்டினிக்கொடுமைகளை கண்ணுறும் போது ரூ.8000/- எனும் வருமானம் ஓரளவு வறுமையின் கடுமையைக் குறைத்திடும். நிச்சயம் இத்தொகை, கிராமக்குடும்பங்களில் வாங்கும் சக்தியை அதிகரிக்கச் செய்திடும்.
இது, கிராமக் குடும்பங்கள் தங்களது வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கிட உதவிடும். பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் இவ்வாறு பொருட்கள் வாங்கும் நிலை ஏற்பட்டால், உள்நாட்டு உற்பத்தி பெருகும். உள்நாட்டு பெருளாதாரம் மீண்டும் புத்துயிர் பெறும்.
இங்குதான் இந்த சட்டத்தின் அரசியல் முக்கியத்துவம் உள்ளது.
இன்று நமது பொருளாதாரத்தில் உள்நாட்டு சந்தையை ஒடுக்கி, உலகச் சந்தையோடு இணைக்கும் முயற்சி நடக்கிறது. உலகமயம் எனும் பெயரால் உலக பன்னாட்டு நிதி மூலதனம் உடனடி லாபம் பெற உலகம் முழுவதும் அலைபாய்கிறது. ஆனால், விரிவான உள்நாட்டு சந்தை, வலுவான உள்நாட்டு உற்பத்தி எனும் வகையில் இந்தியா நடைபோடத் துவங்கினால், உலக மூலதனத்தின் வளர்ச்சி தடைபடும். அது மட்டுமல்லாது, சாதாரண ஏழை மனிதனுக்கு தேவையான பொருள்கள் உற்பத்தி வளருவதை உலக மூலதனம் விரும்பாது. நாட்டில் உள்ள 30 கோடி நடுத்தர வர்க்க மற்றும் மேட்டுக்குடி மக்களின் ஆடம்பரப் பொருட்களின் சந்தையில் அதிக லாபம் பெறுவதற்குத் தான் உலக மூலதனமும், பன்னாட்டுக்கம்பெனிகளும் துடிக்கின்றனர். அவர்களுக்கு சாதரண மனிதர்களின் தேவைக்கான சந்தை வளருவது பிடிக்காது.
எனவே, வேலை உறுதி சட்டம் என்பது ஒரு எதிர் நீச்சல் போர். உலகமயம் பயணம் செய்துவரும் சுரண்டல் பாதைக்கு இது ஒரு வலுவான வேகத்தடை.
மத்திய அரசோடு மோதல்
இதை உணர்ந்து தான் இந்திய ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் முதலாளித்துவ சக்திகள் இந்த சட்டத்தை பயனற்ற சட்டமாக மாற்றிட பல முயற்சிகளை மேற்கொண்டனர்.
கிராமத்தில் பயனாளிக் குடும்பங்களை தேர்வு செய்வதில் அனைத்துக் குடும்பங்களையும் தேர்வு செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி வாதிட்டது. ஆனால், முதலாளித்துவ சக்திகள் இதனை விரும்பவில்லை. வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பவர் களுக்கு மட்டும் என்று நிர்ணயிக்கலாம் என்றார்கள்.
இது ஒரு ஏமாற்று வித்தை என்பதை பொது விநியோக முறையில் அவர்கள் செய்த கோளாறுகளே சான்று. இந்த அனுபவத்தை உணர்ந்த மார்க்சிஸ்ட் கட்சித் தலைமை வறுமைக்கோடு வைத்து பிரிப்பதை வலுவாக எதிர்த்துப்போராடியும், இறுதியில் அனைத்து கிராமக்குடும்பங்களுக்கும் 100 நாள் வேலை என்பதனை சட்டத்தில் கொண்டு வருவதில் மார்க்சிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது.
அதே போன்று கூலி நிர்ணயத்திலும் முதலாளித்துவ சக்திகள் சூழ்ச்சி செய்தனர். கூலி நிர்ணயம் வேண்டாம் என்பதிலிருந்து துவங்கி, ரூ.60/- க்கு குறைவான கூலி நிர்ணயம் செய்துள்ள மாநிலங்களில் அந்தக்கூலியே இருக்கலாம் என்பது வரை பல ஏமாற்றுக் கருத்துக்களைத் தெரிவித்தனர். இதிலும் மார்க்சிஸ்ட் கட்சி உறுதியுடன் இருந்தது. அதனால்தான் கூலி நிர்ணயத்திலும் உழைப்பாளி மக்களுக்குச் சாதகமான ஒரு ஷரத்தை சட்டத்தில் சேர்க்க முடிந்தது.
ஆக, இந்த சட்டம் உருவாவதற்கே ஒரு நீண்ட நெடிய வர்க்கப்போராட்டம் நடைபெற்றுள்ளது.
திட்டம் அல்ல; சட்டம்
முதலாளித்துவ அரசுகள் பல நேரங்களில் மக்களின் நலன் காக்கும் திட்டங்களை கொண்டு வருவதுண்டு. பகட்டாக விளம்பரம் செய்து வறுமை ஒழிப்பு, வேலையின்மை ஒழிப்பு என கோஷங்களை முழங்கி இந்தத் திட்டங்களைக் கொண்டு வருகின்றனர்.
அவர்கள் அவ்வபோது இவற்றைக் கொண்டு வருவதற்கான முக்கிய காரணம் மக்களின் நிர்ப்பந்தமே. ஜனநாயக இயக்கங்களின் போராட்டங்களால் மக்கள் தங்களது தேவைகளுக்காக ஆட்சி யாளர்களை நிர்பந்திப்பதும், மக்களின் வாக்குரிமைக்குப் பயந்து ஆட்சியாளர்கள் திட்டங்களைக் கொண்டு வருவது கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றது.
ஆனால், பசப்பு வார்த்தைகளால் பேசப்படும் இந்த திட்டங்கள் எல்லாம் நடைமுறையில் வெற்று வார்த்தை ஜாலங்களாக பரிணமித்து மக்களுக்கு குறைவான நிவாரணத்தையே அளிக்கின்றன.
இந்த வரலாற்றில் தற்போது வந்துள்ள வேலை உறுதி சட்டம் ஒரு திருப்பு முனையாக விளங்குகிறது. முதலில் இது திட்டம் அல்ல. ஒரு சட்டம் எனும் வகையில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டள்ளது. அதனால், ஆட்சி யாளர்களும், அதிகார வர்க்கமும் இதனை அமுலாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதை அமுலாக்காவிடில், அவர்கள் சட்டவிரோதச் செயலை செய்வதாகவே கருதப்படும். இந்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு மாநில அரசும் அமுலாக்குவதற்கான திட்டங்கள், விதிகள் உருவாக்க வேண்டும்.
வேலை அடிப்படை உரிமையாகிறது
சட்டத்தின் மற்றொரு சிறப்பம்சம், இந்தச்சட்டம் வேலை கிடைப்பதை அடிப்படை உரிமையாக்குகிறது. தற்போது கிராமப்புற குடும்பங்களுக் குத்தான் என்றாலும், வேலை அடிப்படை உரிமை என்ற இலட்சியப் போராட்டத்தின் ஒரு பகுதி வெற்றியாகவே இது திகழ்கிறது.
இந்தச்சட்டம் அமுலாகிற இந்தக் காலகட்டத்தில் இது மக்களின் உரிமைக்கான ஜனநாயக உணர்வையும், விழிப்புணர்வையும் உயர்த்திடும். கோடானுகோடி விவசாயக் குடும்பங்கள் சமூகத்தில் தங்களது பங்கினை உரிமை என்ற உணர்வோடு பெறுவதற்கு தயாராவது ஒரு மாபெரும் சமூகப் புரட்சிக்கான விதை. மக்கள் ஜனநாயகப் புரட்சியை நோக்கமாகக் கொண்ட மார்க்சிஸ்ட் கட்சி இந்த நீண்டகால நோக்கோடு தான் இந்த சட்டம் ஏற்படும் சமூக நிகழ்வைப் பார்க்கிறது. இந்த அரசியல் பார்வையோடு தான் மார்க்சிஸ்ட்டுகள களத்தில் இந்த சட்டத்தையொட்டி செயல்படுவர்.
மக்களிடம் ஏற்படும் இந்த அரசியல் உணர்வு படிப்படியாக வளர்த்திட மார்க்சிஸ்ட்டுகள் முயற்சிப்பார்கள். 100 நாட்கள் வேலை உரிமை என்பதில் தற்போது துவங்கினாலும், ஆண்டு முழுவதும் நல்வாழ்க்கை அளிக்கும் நிரந்தரமான வேலை, அதையொட்டிய வர்க்க ரீதியான மாறுதல்கள் என படிப்படியாக மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கான வர்க்கப் போராட்டத்தை மார்க்சிஸ்ட்டுகள் நடத்திட முனைவார்கள். ஆக, இந்தச்சட்டம் கிராமப்புறங்களில் வர்க்கப் போராட்டத்தை தீவிரப்படுத்தும் கருவியாக மார்க்சிஸ்ட்டுகளால் பயன்படுத்த இயலும். ஆனால், இந்த நீண்டகால அரசியல் பார்வையோடு மார்க்சிஸ்ட்டுகள் இதைப் பயன்படுத்த வில்லை எனில், நாம் பெரும் தவறு புரிந்தவர்கள் ஆவோம். ஒரு நல்வாய்ப்பை இழந்த வரலாற்றுக் குற்றத்திற்கு ஆளாகிவிடுவோம்.
முதலாளித்துவ அரசின் சட்டம் பயன்படுமா?
இங்கு மற்றொரு கேள்வியும் எழுகிறது. ஒரு முதலாளித்துவ அரசு கொண்டு வரும் சட்டம் எப்படி மக்களுக்குப் பயன்படும்? எவ்வாறு வர்க்கப் போராட்த்தை தீவிரப்படுத்திட உதவிடும்?
முதலாளித்துவ அரசின் சட்டங்கள் உண்மையில் முதலாளித்துவ வர்க்க சக்திகளின் நலன்களை பாதுகாப்பதாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. எனினும், முதலாளித்துவ ஜனநாயகம் மக்களுக்கு வழங்கும் உரிமைகளைப் பயன்படுத்தி, மக்களின் ஜனநாயக உணர்வு மட்டம் வளர்ச்சி பெறுவதையொட்டி, பல சந்தர்ப்பங்களில் முதலாளித்துவ அரசும் மக்கள் நலனுக்கான சட்டங்களைக் கொண்டு வருகின்றது.
இப்படிக் கொண்டு வந்த பிறகு இந்தச்சட்டங்கள் வெறும் காகிதத்தை அலங்கரிக்கும் அலங்கார வார்த்தைகளாக மட்டும் இருக்கும்படிசெய்துவிடுவார்கள், முதலாளித்துவ ஆட்சியாளர்கள். எனினும் சட்டம் வழங்கும் வாய்ப்பை பயன்படுத்தி மக்களின் உரிமைக்குரலை ஒலிக்கவும், மக்கள் போராட்டங்களுக்கான வாய்ப்புக்களை அதிகரிக்கச் செய்வதும் மார்க்சிஸ்ட்டுகள் எல்லா நாடுகளிலும் கடைபிடிக்கிற நடைமுறை தந்திரம்.
முதலாளித்துவ, ஏகாதிபத்திய அரசு பொய்க் குற்றச்சாட்டுகளை ஜோடித்து, சதி வழக்குகள் தொடுக்கிற போது, கம்யூனிஸ்ட்டுகள் முதலாளித்துவ சட்டங்களை சாதகமாகப் பயன்படுத்தி, முதலா ளித்துவ நீதி மன்றத்தில் தங்களது கருத்துக்களை எடுத்துரைத்த வரலாறுகளை நாடு கண்டுள்ளது. உலகில் பல இடங்களில் இத்தகைய நடைமுறைத் தந்திரத்தை கம்யூனிஸ்ட்டுகள் கடைபிடித் துள்ளனர்.
மார்க்சிஸ்ட் தலைமையிலான மாநில அரசு – அனுபவம்
அதே போன்று, இன்று மார்க்சிஸ்ட்டுகள் தலைமை தாங்கி நடத்தி வரும் மாநில அரசுகளும், இதற்கோர் சிறந்த எடுத்தக்காட்டாக அமைகிறது.
முதலாளித்துவ அரசியல் சட்டத்தின் வரம்புக்குட்பட்டுதான் மாநில அரசுகள் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் மேற்கு வங்கம், திரிபுராவில் நடைபெறுகிறது. கேரளாவிலும் முன்பு நடைபெற்றது.
முதலாளித்துவ சமூக சட்ட வரையறை இருந்த போதிலும், மாநில அரசுக்கென்று உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி மக்களுக்கு குறைந்தபட்ச நிவாரணம் வழங்கும் பணியை மார்க்சிஸ்ட்டுகளால் சிறந்த முறையில் நிறைவேற்ற முடிந்துள்ளது. அதே நேரத்தில் மேலும், மேலும் வர்க்கப் போராட்டத்தை தீவிரப்படுத்தும் கருவிகளாக மார்க்சிஸ்ட் கட்சி இந்த மாநில அரசுகளை பயன்படுத்துகிறது.
இந்த அரசுகளை ஒடுக்கவும், கவிழ்க்கவும் தொடர்ந்து ஆட்சியாளர்கள் முயற்சி செய்து கொண்டிருந்தாலும், அடிப்படை வர்க்கங்களான விவசாயி வர்க்கமும், தொழிலாளர் உழைப்பாளி வர்க்கங்களும் இந்த அரசுகளை பாதுகாக்கும் இரும்புக் கோட்டை களாகத் திகழ்கின்றனர். இந்த அடிப்படையில் வேலை உறுதி சட்டத்தையும் நாம் அணுகிட வேண்டும்.
மார்க்சிஸ்ட் கட்சி நிர்பந்தத்தினால் முதலாளித்துவ அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டம், மக்களுக்கு நிவாரணம் அளிக்கவும் நாம் பயன்படுத்தலாம். அதே நேரத்தில் நமது செல்வாக்கையும், தொடர்புகளையும் விரிவுபடுத்தி, கிராமப்புறங்களில் நமது அடிப்படை வர்க்கங்களை அரசியல் உணர்வூட்டி வர்க்கப் போராட்டத்தை தீவிரப்படுத்தவும் பயன்படுத்திடவும் வேண்டும்.
தற்போது அமுலாகி வரும் 200 மாவட்டங்களோடு சேர்த்து, அனைத்து மாவட்டங்களிலும் இந்த சட்டம் அமுலாகிடவும், மேலும் நகர்ப்புறங்களுக்கு விரிவுபடுத்திட, போராட்டத்தை நடத்திடவும் இந்த அனுபவம் உதவிடும். குடும்பம் ஒரு அலகாக…
தேசிய கிராமப்புற வேலை உறுதி சட்டம் மூன்று முக்கிய சக்திகளைப் பிரதானப்படுத்துகிறது. ஒன்று, வட்டார நிர்வாகம், இரண்டாவதாக, கிராமப்பஞ்சாயத்து, மூன்றாவதாக, கிராமத்தில் வசிக்கும் குடும்பம்.
மார்க்சிஸ்ட்டுகள் இந்த சட்டத்தில் உறுதியாக தலையிட வேண்டுமெனில் கிராமத்தில் உள்ள விவசாயத் தொழிலாளர் குடும்பங்களோடு இடையறாத தொடர்புகளை ஏற்படுத்திட வேண்டும். குடும்பம் என்பது அடிப்படை அலகாக சட்டமே கருதுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட எவரும் பயிற்சியற்ற உடலுழைப்பை செலுத்த வாய்ப்புள்ள வேலைகளைச் செய்வதற்கான மனுக்கள் தயாரிப்பது, வேலை அட்டை பெற செய்வது, முறையாக 100 நாட்கள் வேலை பெறச் செய்வது, எல்லாவற்றுக்கும் மேலாக ரூ.80/- என்ற கூலியை முறையாக அவர்களைப் பெறவைப்பது என்று பல வகையில் குடும்பங்களோடு உரையாட பெரும் வாய்ப்பை இந்த சட்டம் ஏற்படுத்துகிறது.
குடும்பம் என்ற வகையிலான தொடர்பு பெரும் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்த வல்லது. வர்க்கப் போராட்ட உணர்வு, அரசியல் உரிமைக்கான உணர்வை ஏற்படுத்தி, ஒரு புரட்சிகர பண்பாட்டு மாற்றத்தை ஏற்படுத்த இது வித்திடுகிறது.
குடும்பம் என்கிற தளத்தில் மார்க்சிஸ்ட்டுகள் சரியான முறையில் செயலாற்றிடும் போது முற்போக்கான பண்பாட்டு மாற்றம் நிகழ்ந்திட அது வழிவகுக்கும்.
அதேபோன்று கிராமப்பஞ்சாயத்திற்கு பெரும் பொறுப்பினை இந்த சட்டம் வழங்குகிறது. இந்த வாய்ப்புகளை வேறு யாரையும் விட மார்க்சிஸ்ட்டுகள் சிறந்த முறையில் பயன்படுத்திட இயலும்.
மக்களுக்கு வல்லமை ஏற்படுத்திட…
இதுகாறும் வந்த திட்டங்கள் அதிக முறைகேடுகளுக்கும், மக்களின் பங்கேற்பைத் தடுப்பதற்கும் ஏற்றவாறு இருந்துள்ளன. ஒரு புறம் அதிகார வர்க்கமும், ஆளுங்கட்சி அரசியல்வாதிகள், காண்டி ராக்டர்கள் அரசுப்பணத்தை கொள்ளையடிக்க வகை செய்வதாக அமைந்துள்ளன. இதில் மக்கள் தட்டிக்கேட்பதற்கு வாய்ப்பு அதிகம் இல்லை. என்ன நடக்கிறது என்பதையும் மக்கள் அறிந்து கொள்ள வாய்ப்பில்லை.
பல திட்டங்கள் – வறுமை ஒழிப்பு, வறட்சி, வெள்ளத் தடுப்பு, வேலை வாய்ப்பு திட்டங்கள் அனைத்தும் மக்களின் வாழ்க்கை இன்ல்களை மூலதனமாகக் கொண்டு ஆளுவோர் வசதி வாழ்க்கை பெற வழி வகுத்துள்ளன.
ஓரு கட்டத்தில், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி நூறு காசுகள் திட்டத்திற்கு செலவழித்ல், கடை கோடி மட்டத்தில் இருக்கும் ஏழை மக்களுக்கு 1 பைசா சென்றடைகிறது என சொல்ல வேண்டியதாயிற்று. இந்த நிலைக்கு அவரது கட்சிக்காரர்களே பெருமளவு காரணமாக இருந்த போதிலும், அவரால் பட்டவர்த்தனமான உண்மையை ஒத்துக்கொள்ளாமல் இருக்க இயலவில்லை.
வேலை வாய்ப்பு உறுதி சட்டத்தின் சிறப்பு இதில்தான் அடங்கி யுள்ளது. இதில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற வாய்ப்புகள் உள்ளது. முதலாளித்துவ கட்சிகளின் ஆட்சியாளர்கள் எந்த சட்டத்திலும் முறைகேடுகள் செய்திடும் வல்லமை கொண்டவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அனால், இந்தச் சட்டம் கிராமத்தை மையமாகக் கொண்டு சமூகச் சொத்துக்களை ஏற்படுத்தும் வேலைகளை மேற்கொள்ளுகிறது. அத்துடன் கிராமப் பஞ்சா யத்துக்கு அதிக அதிகாரம் வழங்குகிறது. இதனால் என்ன வேலை நடக்கிறது என்பதும், அதில் உள்ளடங்கிய விஷயங்களை தெரிந்து கொள்ளவும் வாய்ப்புக்கள் ஏராளமாக உள்ளன. இத்துடன் தகவல் அறியும் உரிமை சட்டமும் இந்த வாய்ப்பை நல்குகிறது. இந்த வாய்ப்புகள், உரிமைகள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட கிராமத்து மக்களுக்கு புரியவைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினாலே, அவர்களே ஊழல் முறைகேடுகளைத் தடுக்கும் சக்தியைப் பெறுவார்கள், இது மேலும் அவர்களது ஜனநாயக உணர்வை வலுப்படுத்தி மார்க்சிய இயக்கம் வளர வழிவகுக்கும்.
ஊழல் பற்றி தெளிவான புரிதல் மார்க்சிஸ்ட்களுகுக உண்டு. ஊழலுக்கு ஊற்றுக்கண் மூலதனம் ஆட்சி புரியும் இந்த சமூக அமைப்பே. முதலாளித்துவ மூலதனம் வளருவதற்கு உழைப்பாளரின் உழைப்புச் சுரண்டல் பிரதான கருவி. அத்துடன் முறைகேடுகள், ஊழல்கள், படுகொலைகள், அராஜகங்கள் என பல உபகருவிகளும் மூலதன வளர்ச்சிக்கு முதலாளித்துவ அமைப்பில் துணை புரிகின்றன.
ஆனால், ஒவ்வொரு ஊழல் நடவடிக்கை நடைபெறுகிற போதும், இந்த சமூக அமைப்பு மாறினால் சரியாகிவிடும் என்று அமைதி காப்பவர்கள் அல்ல மார்க்சிஸ்ட்டுகள். உடன் தலையிடுவதும், ஊழல் புரிந்தோரை அம்பலப்படுத்தி தண்டனைக்குள்ளாக்குவதும் மார்க்சிஸ்ட்டுகள் செய்திடும் முக்கியப் பணி.
அதே நேரத்தில், அவ்வப்போது பரபரப்புச் செய்திகளையும், அறிக்கைகளையும் வெளியிடும் புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் போன்று மார்க்சிஸ்ட்டுகள் செயல்படக்கூடாது. பத்திரிக்கை உலகத்தில் ஊழலைக் கொண்டு வரும் அதே நேரத்தில், மக்களைத் திரட்டிடும் பணியில் தான் தீவிர கவனத்தை மார்க்சிஸ்ட்டுகள் செலுத்திட வேண்டியுள்ளது.
இதற்கு பதிலாக, எங்கே ஓடி ஊழலை கண்டறிந்து, மாவட்ட, மாநில தலைநகரங்களில் இயக்கம் நடத்துவதோ, மீடியா பரபரப்புக்களுக்கு தீனி போடுவதோ ஒரு நாள் பணியாக முடிந்துவிடுமே தவிர, நீண்டகால மக்கள் இயக்க வளர்ச்சிக்கு உதவிடாது.
எனவே, கிராம அளவில் மக்களிடம் உரையாடி அவர்களை வல்லமை (Empowerment) படைத்தவர்களாக மாற்றும் வேலையே மார்க்சிஸ்ட்டுகளின் பணி. அதுவே, இந்தச்சட்டம் முறையாக அமுலாகவும், வெற்றி பெறவும் வர்க்கப் போராட்டம் வளரவும் உதவிடும்.