ஏழைகளின் நெஞ்சம் கவர்ந்த தளபதி ஏ.கே.ஜி!


ஏ.கே.ஜி எனும் மூன்று எழுத்துக்களால் நாடெங்கிலும் அறியப்பட்டவர் – ஆயில்லியத்து குற்றியேரி கோபாலன் எனும் ஏ.கே.கோபாலன்.

அன்றைய சென்னை மாகாணத்தின், மலபார் மாவட்டத்தின் வடபகுதியில், இன்றைய கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில் ஒரு சிறு கிராமத்தில் 1904 அக்டோபர் முதல் நாளன்று பிறந்தவர். சமூக சீர்திருத்தங்களில் அக்கறை கொண்ட தந்தையிடமிருந்து பெற்ற சமூகப்பார்வையுடன், மாணவப் பருவத்திலேயே, தேசவிடுதலை இயக்கத்துடன் தொடர்பு கொண்ட செயல்படத் துவங்கினார். பள்ளிப்படிப்பு முடித்து 7 ஆண்டு காலம் பல பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1928ம் ஆண்டு முதல் கதர் ஆடைப் பிரச்சாரத்திலும், வெளிநாட்டுப் பொருள் மறுப்பு இயக்கத்திலும் தீவிரமாகப் பங்கேற்கத்துவங்கிய பின், 1930ல் வேலையை இராஜினாமா செய்து, சட்ட மறுப்பு இயக்கத்தில் பங்கேற்றார். கைது செய்யப்பட்டு முதலில் கண்ணூர் மத்திய சிறையிலும், தொடர்ந்து வேலூர் சிறையிலும் அடைக்கப்பட்டார்.

இந்திய அரசியல் வானில் ஐம்பது ஆண்டுகாலம் அவர் ஆற்றிய பணிகளைத் தொகுத்தளிப்பது இயலாத விஷயம்.

முதலில், காங்கிர கட்சி, 1934 காங்கிரசுக்குள்ளேயும், வெளியேயுமாக, காங்கிர சோசலிஸ்ட் கட்சி, 1939 முதல் கம்யூனிஸ்ட் கட்சி, 1964 முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் என அவரது அரசியல் வாழ்க்கை உயர்ந்து நிற்கிறது.

காங்கிர கட்சியில் அடிமட்ட பொறுப்புகளில் துவங்கி, கேரள மாநில காங்கிர கட்சியின் தலைவர், செயலாளர், பல்லாண்டு காலம் அகில இந்திய காங்கிர கமிட்டி உறுப்பினர், காங்கிர சோசலிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தேசியக்குழு உறுப்பினர் என பல பொறுப்புகள். 1964ல், சி.பி.ஐ தேசிய கவுன்சிலிருந்து தனது 31 தோழர்களுடன் வெளியேறி மார்க்சிட் கட்சியை உருவாக்கி, வலுப்படுத்துவதில், அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக பெரும் பங்காற்றினார். சிறிது காலம் கேரள மாநிலச் செயலாளராகவும் செயல்பட்டார்.

ஆனால், ஏ.கே.ஜி.யின் வாழ்க்கை பெறப்பட்ட குறிப்புகளோடு, யாரும் நிறைவு செய்ய முடியாது! சமூக அக்கறை கொண்ட ஒரு மனிதனுக்கு, சமூக மாற்றத்திற்காகப் போராடத் துணிந்த, ஒரு புரட்சியாளனுக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர் ஏ.கே.ஜி. என்றால், அது கூட அவரது வாழ்க்கையை முழுமையாக மதிப்பிடுவதாக அமையாது.

சமூகக் கொடுமைகளை எதிர்த்து

தாழ்த்தப்பட்டவர்களும், இதர அடித்தட்டு மக்களும் சந்தித்து வரும் சமூகக்கொடுமைகளை எதிர்த்த போராட்டங்களுடன் அவரது போராட்டங்கள் துவங்கிற்று. சாலைகளில் நடப்பதற்குக்கூட அனுமதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களைத் திரட்டி, அந்த சாலைகளில் அவர்களுடன் நடந்து, ஆதிக்க வெறியர்களால், மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டார். குருவாயூர் கோவில் நுழைவுப் போராட்டத்தில், தொண்டர்படைத்தலைவராக சென்ற பொழுதும் கடுமையான தாக்குதலுக்கு ஆளானார்.

1930களில் துவங்கி, 1975ல் அவரதுகாலம் வரையிலும், ஆதிக்க சக்திகளால், குண்டர்களால், காவல்துறையினரால், சிறை அதிகாரி களால், அவர் சந்தித்த தாக்குதல்கள், சித்திரவதைகள் பட்டியலிட முடியாதவை!

பயணங்கள்! பயணங்கள்:

1936ல் கண்ணூரிலிருந்து சென்னை வரையிலும் 800 கிலோ மீட்டர், பட்டினிப் பேரணிக்கு அவர் தலைமையேற்றார். திருவாங்கூரில் மன்னராட்சிக்கு எதிராகப் போராடியவர்களுக்கு ஆதரவாக, திருவாங்கூரை நோக்கி நடைபெற்ற பேரணி எனத்துவங்கி, கேரளாவில் அவர் அணிவகுத்துச் செல்லாத கிராமமோ, நகரமோ இல்லை என்றே சொல்லலாம். கேரளாவின் வட கோடியிலிருந்து தென்கோடிவரை நடைபானங்களை மேற்கொண்டார். 1960ல், 56வது வயதில் ஒரு பயணம்! 1972ல், 68வது வயதில் மற்றுமொறு பயணம்!

கேரளாவில் மட்டுமல்லாமல், இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் போராட்டக்களம் கண்ட தலைவராக, ஏ.கே.ஜி. யைப் போன்று வேறு ஒருவர் இருந்ததில்லை என்று சொல்லலாம். அந்தப் போராட்டங்களும் தடியடி, சிறை வாழ்க்கை, சித்திரவதைகளோடு இணைந்ததாக இருந்தன!

நிலச்சீர்திருத்தம், நிலவெளியேற்ற எதிர்ப்பு, தொழிலாளர் போராட்டங்கள், உணவுப்பஞ்சம், மொழிவழி மாநில அமைப்பு, ஜனநாயக உரிமை மறுப்பு என கேரளாவுக்கு வெளியே அவர் தலைமையேற்ற போராட்டங்களும், அதையொட்டிய சிறை வாழ்க்கையும், சுதந்திரத்திற்குப் பிந்தைய நிகழ்வுகளாகும்.

ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப், மேற்கு வங்கம், ராஜதான் என அவர் பல மாநிலப் போராட்டங்களுக்குத் தலைமையேற்றார். அங்கெல்லாம் சிறைகளிலும் அடைக்கப்பட்டார்.

தோழர் ஜோதிபாசு கூறுகிறார் – “பிரச்சனைகளிலும், போராட் டங்களிலும் அவர் காட்டும் அக்கறையும், அவரது பங்கேற்பும் கேரளாவுடன் நின்றுவிடவில்லை. நாட்டின் எந்த மூலைக்கும் அவர் விரைந்தார். பஞ்சாப் விவசாயிகளின் பிரமாண்டமான போராட் டத்தில் ஏ.கே.ஜி.யின் பங்கை நான் நினைவு கூற விரும்புகிறேன். மேற்கு வங்கத்தில் நாங்களெல்லாம் தடுப்புக்காவல் சட்டப்படி விசாரணை யின்றி சிறைவைக்கப்பட்ட போது, பிரமாண்டமான மக்கள் பேரணியை ஏற்பாடு செய்தவர் அவர்”.

தமிழகத்தில் தலைமறைவு வாழ்க்கையின் போதும், பகிரங்க பங்கேற்போடும் கோவை, மதுரை, தஞ்சை, நீலகிரி மற்றும் சென்னை என தமிழகத்தின் பல பகுதிகளில், விவசாயிகள், தொழிலாளிகள் போராட்டங்களை ஒட்டியும், கம்யூனிஸ்ட் இயக்க வளர்ச்சிக்காகவும், அவர் ஆற்றிய பங்கு பற்றி தமிழகத் தலைவர்கள் பலர் நினைவு கூறியுள்ளனர்.

விவசாயிகள், விவசாயத் தொழிலாளிகள், தொழிலாளர்கள் என போராட்டக்களத்தில் நின்ற உழைப்பாளி மக்களுக்கெல்லாம் ஓடோடி வந்து துணை  புரிபவராக அவர் இருந்தார்.

சாதாரண மக்களின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதிலும், அவர்களுக்கு உணர்வூட்டி உறுதிப்டுத்துவதிலும் அவர் ஆற்றிய பணிகள் அளவிட முடியாதவை.

தோழர் கொரட்டரலா சத்திய நாராயணா கூறுகிறார் – 1952 தேர்தல் நேரம். தெலுங்கானா எழுச்சிக்குப் பிறகு போலீ, இராணுவ அடக்குமுறைக்கொடுமைகளால் ஆந்திர மாநிலத்தில் அச்சமும், பயமும் மேலாங்கியிருந்து கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு சாதாரணமான பணிகளிலும் கூட ஈடுபட முடியாததில்லை. ஏ.கே.ஜி. அங்கு வந்தார். எல்லா இடங்களிலும் பேரணிகளை ஏற்பாடு செய்யும்படி கூறினார். இரண்டு வார காலம் இலட்சக்கணக்கான மக்களிடம் பேசினார். ஆந்திரா எழுச்சி பெற்றது. அவர் உருவாக்கிய தன்னம்பிக்கை, தேர்தலில் முழுமையாகப் பிரதிபலித்தது.

இதே போன்ற கருத்துக்களை, அக்காலத்தின் தலைவர்கள் பலரும் பதிவு செய்துள்ளனர்.

உண்ணாவிரதப் போராட்டங்கள்

எழுச்சியூட்டும் நடைபயணங்கள் போன்றே, உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தி, அசைக்க முடியாத மன வலிமையுடன், மக்கள் போராட்டங்களுக்கு அவர் துணை நின்றார். 30, 35 நாட்கள் என பல முறை சிறையிலும், வெளியிலுமாக அவர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டங்கள், மக்களை எழுச்சி பெறச் செய்தது; ஆட்சியாளர்களைப் பணிய வைத்தது.

நீதி மன்றங்களில்

ஏ.கே.ஜி.க்கு எதிராகப் போடப்பட்ட எத்தனையோ பொய் வழக்குகளை நீதிமன்றங்களில், அவர், உடைத்தெறிந்த நிகழ்வுகள் குறித்து, அந்தக்கால வழக்கறிஞர்கள் பலர் குறிப்பிடுகின்றனர். காவல் துறையினர் அவமானப்படுமளவிற்கு, அந்த வழக்குகளை மிகத் திறமையாக அவர் கையாண்டுள்ளார்.

ஆனால், சுதந்திர இந்தியாவில், இயற்றப்பட்ட தடுப்புச்சட்டத்தை எதிர்த்து சிறையிலிருந்து கொண்டே நடத்திய வழக்கு (ஏ.கே.கோபாலன் எதிர் டேட் ஆப் மதரா) வழக்கறிஞர் களுக்கான பாடப் புத்தகங்களில் இன்றும் இடம் பெற்று வருகிறது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம், பாதக தீர்ப்பு வழங்கிய போதும், அந்தத் தீர்ப்பின் ஒரு பகுதியைப் பயன்படுத்தி சென்னை உயர்நீதி மன்றத்தில் அவரே வாதாடி, விடுதலை பெற்றார் என்பது வரலாற்று நிகழ்ச்சியாகும்.

சிறை வாழ்க்கை பற்றி

சிறைக்கூடம் என்றுமே ஏ.கே.ஜி.க்கு போர்க்களமாகவே இருந்துள்ளது. தனக்கோ, தன்னுடன் சிறையிலடைக்கப்பட்டவர்களுக்கோ மட்டுமல்லாமல், கைதிகள் அனைவருக்காகவும், அவர்களது உரிமைகளுக்காகவும் அவர் போராடினார். நாங்கள் ஏ.கே.ஜி.யிடம் புகார் கூறிவிடுவோம் என அவரது சிறையிலுள்ள இதர கைதிகள் அதிகாரிகளை மிரட்டுமளவிற்கு ஏ.கே.ஜி.யின் சிறைப் போராட்டங்கள் வலிமை பெற்றிருந்தன.

சென்னை மத்திய சிறையில் அரசியல் கைதியாக இருந்த திராவிடக்கழகத்தினரை இதர கைதிகள் போல் மொட்டையடிப்பை எதிர்த்து, நேரடியாகத் தடுக்கச் சென்ற ஏ.கே.ஜி., வார்டன்களால் கடுமையாகத் தாக்கப்பட்டது பற்றி, அவரே எழுதியுள்ளார்.

சிறைகளில் போராடுவதுமட்டுமல்ல, வெளியில் இருப்பதே அவசியம் என்ற நிலை ஏற்பட்டபோது, வேலூர் சிறைச்சுவர்களை உடைத்து, வேறு மூன்று தோழர்களுடன் அவர் தப்பித்த விதமும் அவரது மன உறுதியையும், போராட்ட வேட்கையையும் வெளிப்படுத்துவதாகும்.

நாடாளுமன்ற உறுப்பினராய்

1952ம் ஆண்டில் முதல்  பொதுத்தேர்தலிலிருந்து, 1977ல் மறைவு வரையிலும் நாடாளுமன்ற உறுப்பினராக அவர் பணியாற்றிய பாங்கும், நாடாளுமன்றப்பணி பற்றிய அவரது கருத்துக்களும், கம்யூனிஸ்டுகளின் நாடாளுமன்றப் பணிக்கான இலக்கணமாகத் திகழ்பவை.

மத்திய காங்கிர அரசின், மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக அவர் பெரும் புயலாய் மாறினார். 1952ல், பட்ஜெட் பற்றிய உரையின் முதல் வாசகமாக நீங்கள் மக்கள் மீது போர்தொடுத்துள்ளீர்கள் என கூறியது முதல், 1975ல் அவசர காலத்தின் போது,  மக்கள் நலனை விட்டுக்கொடுக்க இயலாது. நாட்டின் ஜனநாயக அமைப்பு முறையை இல்லாமல் செய்யும் முயற்சி யையும் ஏற்றுக்கொள்ள இயலாது. இந்திய ஜனநாயக மாண்புகளை, தனிநபர் சுதந்திரத்தை, சங்கம் சேரும் உரிமையை, நீதிமன்றத்தை அணுகும் உரிமையை, பத்திரிக்கை சுதந்திரத்தை, அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கவும் மற்றுமொரு மக்கள் அரசை உருவாக்குவதற்காக செயல்படும் உரிமையையும், ஒரு போதும் விட்டு கொடுக்க இயலாது என கர்ஜனை செய்தது வரையிலும், அவரது நாடாளுமன்ற உரைகள் இந்திய மக்களின் பிரச்சனைகளின், போராட்டங்களின் எதிரொலிகளாகவே இருந்தன.

நாடாளுமன்றமும், அவருக்கு பேராட்டக்களமாக இருந்தன. நடாளுமன்ற உறுப்பினர்களுடன் சபைக்குள்ளும், வெளியிலும் மறியல், உண்ணாவிரதங்கள் என அவர் நடத்திய கிளர்ச்சிகளும், பீடித் தொழிலாளர் சட்டம் உட்பட பல சட்டங்களை இயற்றச் செய்ய அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளும், இந்திய நாடாளு மன்ற வரலாற்று ஏடுகளில் அழியா இடம் பெற்றவை.

அதே நேரத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் என்பதை அந்தத்தாக பார்த்தால், ஏற்படக்கூடிய அபாயங்கள், பாதக விளைவுகள் குறித்தும் அவரது எச்சரிக்கை தான், அங்கு அடியெடுத்து வைக்கும் ஒவ்வொருவருக்கும், குறிப்பாக தொழிலாளி வர்க்க ஊழியர்களுக்கு முதல் பாடமாக அமைய வேண்டும்.

எங்கெல்லாம் ஆளும் வர்க்கங்களும், அவர்களது கையாட்களும் மக்களுக்கு எதிராகத் தாக்குதல் தொடுக்கிறார்களோ, அங்கெல்லாம் மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் ஓடோடிச் செல்வார். ஒவ்வொரு இடத்திலும் ஆதரவற்றவர்களுக்கு ஆதரவளிப்பவராகவும் மக்கள் விரோதிகளுக்கு அச்சம் ஏற்படுத்துபவராகவும் இருந்த இந்த கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினரது வாழ்வும், பணியும் இதர எதிர்க்கட்சித் தலைவர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது என கூறினார் தோழர் இ.எம்.எஸ்!

கடிதங்கள் எழுதி எழுதி கை ஓய்ந்துவிட்டது. மன்னிக்கவும். நான் உங்களையும், உங்கள் பிரச்சனைகளையும் மறந்துவிடவில்லை என அவர் கைப்பட பதில் கடிதம் எழுதினார்!

காபிபோர்டு ஊழியர்கள் முதல் இந்திய விண்வெளிக்கழக ஊழியர்கள் வரையில் பல்வேறு தொழிற்சங்கங்களுக்குத் தலைவராக இருந்தார். 1951 முதல் கடைசி நாள்வரையிலும், அகில இந்திய விவசாயிகள் சங்கத் தலைவராக இருந்தார்.

இத்தனை பணிகளுக்கு இடையிலும், அவருடன் பழக வாய்ப்பு கிடைத்த ஒவ்வொருவரும் என்றென்றும் மறக்க முடியாதவராக வாழ்ந்தவர் அவர்! அவர் முன்கோபக்காரர் எனக் கூறியவர்கள் எல்லோருமே, அந்தக் கோபம், சூரியனைக்கண்ட பனி போல், சட்டென மறைந்து விடுவது பற்றியும் எழுதிட மறந்திடவில்லை!

குடும்ப வாழ்க்கை

குடும்ப வாழ்க்கையிலும், அவர் முன்னுதாரணமானவரே! விரும்பி ஏற்றுக்கொண்ட வாழ்க்கைத்துணை தோழர் சுசீலா, அரசியல் அரங்கிலும் இணைந்து செயல்பட்டதை நாமறிவோம்! இணைந்து வாழ்க்கையிலும் பணியாற்றுகையிலும், தோழர் சுசீலா அவர்களது தனித்துவத்தை நிலைநாட்டும் முறையில் அவரது பங்களிப்பு பற்றி தோழர் சுசீலா நிறையவே எழுதியும், பேசியும் உள்ளார்.

ஏ.கே.ஜி. – இ.எம்.எஸ்

இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்க வளர்ச்சியில் ஏ.கே.ஜி. – இ.எம்.எஸ் ஆற்றிய பணிகள், ஒன்றையொன்று நிறைவு செய்யவதாக இருந்ததை அவரும் நினைவு கூறுகின்றார். கட்சியின் தத்துவ ஆசிரியனாகவும், தத்துவார்த்த வழிகாட்டியாகவும் இ.எம்.எஸ்மக்களைத் திரட்டி, போராட்டத் தயாரிப்புகளைச் செய்பவராய் ஏ.கே.ஜி. என இருவரும் ஆற்றிய பணிகளின் முதன்மைத் தன்மையைப் பல தோழர்கள் எடுத்துரைத்துள்ளனர்.

நான் அவரிடமிருந்து ஏராளமான விபரங்களைக் கற்றுக் கொண்டேன். எனது பலத்தையும், பலவீனங்களையும் மிக நல்ல முறையில் அவர் புரிந்து கொண்டார் என்பதில் தான் எங்களது இணைப்பின் வலிமை இருக்கிறது. ஒரு சிறந்த தலைவருக்கு, தனது ஊழியர்களை புரிந்து கொள்ள இயலவேண்டும். எனது திறமைகளுக் கேற்ற பணிகளை என்னிடம் ஒப்படைத்து, அதன் மூலம் எனக்கு மார்க்சீயம் கற்றுக் கொடுத்தார் என ஏ.கே.ஜி.குறிப்பிடுகிறார். ஒரு கிளர்ச்சியாளன் என்கிற முறையில், ஏ.கே.ஜி. எண்ணற்ற கொடுமைகளுக்கும், வேதனைகளுக்கும் உள்ளானார். தொடர்ச்சி யான சிறைவாழ்க்கை, சிறைக்குள்ளேயும், வெளியேயும் சந்தித்த தடியடிகள், சிறையிலிருந்து தப்பித்ததும், தலைமறைவு வாழ்க்கையும் – இவை அனைத்தும் அவரை உடல் ரீதியாக பாதிக்கச் செய்தது என்றாலும், மனதளவில் வலுப்பெறச் செய்தது. சொந்த வசதி வாய்ப்புக்களையோ, இன்ப துன்பங்களையோ பற்றி கவலைப் படாமல், மக்கள் சேவையில் மட்டும் தன்னை முழுமையாக அர்ப்பணித்த அந்த மாபெரும் தியாகி மக்களிடமிருந்தே உற்சாகத்தை மட்டுமல்லாமல், உயிர் மூச்சையும் உட்கொண்டார் என இ.எம்.எஸ், ஏ.கே.ஜி. பற்றி குறிப்பிடுகிறார்.

இவ்வாறு மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த, அந்த மாபெரும் தலைவர் பற்றி, தோழர் ஹர்கிஷன்சிங்சுர்ஜித் கீழ்வருமாறு கூறுகிறார்.

மக்களின் பிரச்சனைகளும், கிளர்ச்கிளும் நாட்டின் எந்தப் பகுதியாக இருந்தாலும், கேள்விப்பட்டவுடன் அங்கு ஓடோடிச் செல்பவராக ஏ.கே.ஜி. இருந்தார். பல நேரங்களில் கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசிப்பதற்குக் கூட அவருக்குப் பொறுமை இருக்காது. எப்போதும் அவர் மக்களுடன் நின்றார். அவர்களுடன் போராட்டங்களுடன் இணைந்தார்.  அவர்களது குரலை நாடாளு மன்றத்தில் ஒலித்தார். இவை அனைத்தும் நாட்டின் எண்ணற்ற அரசியல் தலைவர்களிடமிருந்து அவரை வேறுபட்ட வராக்குகிறது. தேசப்பற்றுடையோருக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் ஒளிவிளக்காகத் திகழ்பவர், அவர். அவரது வாழ்க்கையும், சொல்களும் வருங்காலத் தலைமுறையினருக்கு வழிகாட்டியாக உள்ளது. எளிமை, ஏழை களுடான நெருக்கம், தியாகம், கருத்துக்களை செயல்களுடன் இணைத்தல்… இவை அனைத்தும் ஏ.கே.ஜி.யின் வாழ்க்கையிலிருந்தான படிப்பினைகளாகும்.

நாட்டின் விடுதலைக்காகப் போராடி, விடுதலை நாளிலும் சிறையிலேயே இருந்து, அன்றைய தினம் அங்கு தேசீயக் கொடியை ஏற்ற முயற்சி செய்தார் என்ற குற்றத்திற்கு உள்ளான தோழர் ஏ.கே.ஜி., விடுதலைக்குப் பிறகும், காங்கிர கட்சியின் கொள்கைகளை எதிர்த்து போராடிக் கொண்டே இருந்தார்.

ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்து, எதேச்சதிகாரப் பாதையில் பயணித்த அவசர கால ஆட்சியை மக்கள் தூக்கியெறியும் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கையில், 1977 மார்ச் 22 அன்று ஏ.கே.ஜி. மறைந்தார்! மறைந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்!