கட்சியின் கான்பூர் மாநாடு (1925)
1924ம் ஆண்டு லெனின் மறைவுக்குப்பிறகு, ராய் தனது அதிதீவிரவாதக் கருத்துக்களை அகிலத்தின் 5வது மாநாட்டில் முன்வைத்தார். தேசிய விடுதலை இயக்கத்தில் தேசிய முதலாளிகளின் பங்கினை நிராகரிக்கும் போக்கும், சுரண்டப்பட்ட வர்க்கங்களின் புரட்சிகரமான உணர்வு பற்றிய அவரின் அதீத மதிப்பீடும் அதில் தெரிந்தது. ஆனால், அகிலம் அதை நிராகரித்தது. காலனி நாடுகளில் கூட்டு செயல்பாட்டின் தேவையினை உறுதி செய்தது. பின்பு சோவியத் கம்யுனிஸ்ட் கட்சியின் 14வது மாநாட்டில் தோழர். ஸ்டாலின் காலனி நாடுகளின் கம்யூனிஸ்டுகள் முதலாளி வர்க்கத்தில் உள்ள புரட்சிகரமான பிரிவினருடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறியதும் கவனத்துக்குரியது.
இந்திய நிலைமை குறித்து ஸ்டாலின் கூறிய கருத்துக்கள் இந்நூலில் இடம் பெற்றிருக்கின்றன. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்குவது பற்றி எடுத்த நடவடிக்கைகள் விவரிக்கப்பட்டிருக்கின்றன. 1925ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாட்டின் பல பகுதிகளில் உருவாகியிருந்த கம்யூனிஸ்ட் குழுக்களை ஒன்றாக இணைக்கும் முயற்சியினைப் பற்றியும், கான்பூரில் டிசம்பர் 26 – 28 தேதிகளில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு குறித்தும் தகவல்கள் நிறைய கொடுக்கப்பட்டுள்ளன. அதில் கட்சியின் அமைப்புச்சட்டமும், கட்சியின் குறிக்கோளும் நிறைவேற்றப்பட்டன. வகுப்புவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களை கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக சேர்க்கக் கூடாது என்ற குறிக்கோளை முன்வைத்த முதல் அரசியல் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் என்ற இர்பான் ஹபீபி ன் கருத்து பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்து – முஸ்லீம் மோதல் என்ற சமூக கலாச்சார பிரச்சனையை ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டம் என்ற அரசியல் பிரச்னையுடன் தொடர்புபடுத்திக் காட்டியது கம்யூனிஸ்ட் இயக்கம். இது ஒரு புதிய மாறுபட்ட அணுகு முறை என்று இந்நூல் குறிப்பிடுகிறது. கம்யூனிஸ்ட்டு குழுக்களும் தனி நபர்களும் கூட்டாக செயல்பட்டு வரும் மேடையினை கான்பூர் மாநாடு கொடுத்தது. மத்திய ஸ்தாபன அமைப்பின் கீழ் செயல்படும் வாய்ப்பினையும் அது கொடுத்தது. இ.எம்.எஸ். கூறியபடி, கம்யூனிஸ்ட் இயக்கத்தை இந்தியாவில் வளர்ப்பதற்கான முதல் முயற்சி தாஷ்கெண்டில் தொடங்கப்பட்டது என்றால், இரண்டாவது முயற்சி கான்பூரில் எடுக்கப்பட்டது என்றும் கூறலாம். கான்பூர் சதி வழக்கின் மூலம் கம்யூனிஸ்ட் கட்சியை நசுக்குவதற்கு ஆட்சியாளர்கள் முயற்சித்தனர். ஆனால், அதுவே நடைமுறையில் கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபன ரீதியான சக்தியாக மாற்றி அமைத்தது. 1926ம் ஆண்டிலேயே இந்திய அரசியல் சூழ்நிலைகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நேரடியாக தலையிடத் துவங்கி விட்டது என்பதும் இந்நூலில் விளக்கப்பட்டிருக்கிறது.
தேசிய நிலைமைகளில் கட்சியின் தலையீடு
இந்த தலையிட்டின் விளைவாக, தேச விடுதலைப் போராட்டத்தில், எந்த வகையான சுதந்திரம் என்பதில் குழப்பத்திலிருந்த இந்திய தேசிய காங்கிரஸ் டொமினியின் அந்தஸ்து கோரிக்கையிலிருந்து முழு சுதந்திரக் கோரிக்கையினை நோக்கி இயக்கம் நடத்த வேண்டி வந்தது. 1928ல் கல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மோதிலால் நேரு கமிட்டியின் அறிக்கையின் படி டொமினியன் அந்தஸ்த்துக்கு ஆதரவான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனால், மாநாட்டுக்கு வெளியிலும் அரசாங்கத்திற்குள்ளேயும் தொழிலாளர் -விவசாயிகள் கட்சியின் சார்பாக நடந்த பேரணியில் முழு சுதந்திரத்தை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காந்தி, மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்கள் இந்த பேரணியில் உரையாற்றினார்கள் என்பதும் ஒருசெய்தி. இ.எம்.எஸ். குறிப்பிடுவதுபோல், தொழிலாளி வர்க்கம் ஓர் அமைப்பு ரீதியான அரசியல் சக்தியாக வளர்ந்துள்ள உண்மையை பறைசாற்றும் தெளிவான அடையாளமாக அது இருந்தது. தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் வர்க்க ரீதியான பார்வையை கொடுப்பதிலும், சமூக, பொருளாதார சுரண்டலை தோலுரித்துக்காட்டுவதிலும், கம்யூனிஸ்டுகளின் பணி இந்திய வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. அதை சுட்டிக் காட்டும் பல நிகழ்வுகள் இப்புத்தகத்தில் இடம் பெற்றிருக்கின்றன.
இந்திய நிலைமை பற்றிய மதிப்பீட்டில் ஏற்பட்ட தவறுகள்
சில தத்துவார்த்த மற்றும் நடைமுறை உக்திகளில் சறுக்கல்களையும் இந்த காலகட்டத்தில் கம்யூனிச இயக்கம் சந்தித்தது. கம்யூனிஸ்ட் அகிலத்தின் 6வது மாநாடு 1928ம் ஆண்டு நடந்தது. அந்த ஆண்டில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வெளியே 5,00,000 கம்யூனிஸ்டுகள் இருந்தனர் என்று மாநாட்டு அறிக்கை சுட்டிக்காட்டியது. உலக கம்யுனிஸ்ட் இயக்கத்துக்கான பொதுத்திட்டம் முதன்முறையாக உருவானதும் அந்த மாநாட்டில் தான். ஆனால், காலனி ஆதிக்கம் பற்றி லெனின் வழிகாட்டுதலுடன் இரண்டாவது மாநாட்டில் (1920) உருவாக்கப்பட்ட கொள்கை திருத்தப்பட்டது. தேசிய விடுதலை இயக்கங்கள் பின்பற்ற வேண்டிய போர்த்தந்திரம் மற்றும் உத்திகள் தொடர்பான பிரச்சனைகளிலும் தேசிய முதலாளிவர்க்கத்தின் பங்கு பற்றியும் தவறான நிலைபாடுகளைக் கொண்ட ஆவணத்தை அந்த மாநாடு ஏற்றுக்கொண்டது. தேசிய விடுதலைப்போராட்டத்தில் தேசிய முதலாளித்துவம் ஒரு சக்தியாக இல்லை என்று அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது; தேச விடுதலைப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் தொழிலாளி வர்க்கத்தின் பங்கு சற்று மிகையான வகையில் மதிப்பீடு செய்தது. இதன் விளைவு? காலனி எதிர்ப்பு இயக்கத்திலிருந்து கட்சி தனிமைப்படுத்தப்பட்டது; விடுதலைக்குப் போராடும் மக்களிடத்தில் நமது மாற்றுத் திட்டத்தினை வைப்பதற்கான வாய்ப்பினை கட்சி இழந்தது. ஆனால், நாட்டின் விடுதலைப் போராட்டத்தை உலக அளவில் நடந்து கொண்டிருந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களோடு இணைக்கும் பணியினை கட்சி சிறப்பாகச் செய்தது.
மீரட் சதி வழக்கு
பிரிட்டிஷ் அரசாங்கம் வளர்ந்து வரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தினை அழிப்பதற்காக எடுக்கப்பட்ட மற்றுமொரு நடவடிக்கை தான் மீரட் சதி வழக்கு (1929 – 33). 4 1/2 ஆண்டுகள் நடந்த இந்த வழக்கு இந்திய தேச விடுதலைப் போரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். முதலாளித்துவம் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி யினை சந்தித்துக் கொண்டிருந்த காலம்: சோவியத் யூனியன் கண்ட வளர்ச்சியின் பக்கம் உலக நாடுகளின் கவனம் திரும்பத் துவங்கியிருந்த காலம்; மார்க்சிய சிந்தனைகள் இந்திய நாட்டில் வேர்பிடித்து முளைவிடத்துவங்கிய காலம். ஆகவே, கம்யூனிஸ்ட்டுகளை தனிமைப் படுத்த பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவில் எடுத்த நடவடிக்கை தான் மீரட் சதி வழக்கு. அதைப்பற்றி தோழர். பி.டி.ரணதிவே சொன்ன கருத்து சரியாகவே இந்நூலில் பதிவு செய்யப் பட்டிருக்கிறது; தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள் மத்தியில் கம்யூனிஸ்டுகள் ஆற்றிய ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் பணிக்கு அளிக்கப்பட்ட புகழ்மாலையாக மீரட் சதி வழக்கு விசாரணை அமைந்திருந்தது. முக்கியமான கம்யூனிஸ்ட் தலைவர்கள் அனைவரும் இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டனர். வழக்கு பற்றிய பல்வேறு விவரங்கள் இந்த நூலில் நமக்கு கிடைக்கின்றன. குற்றவாளிக் கூண்டில் நின்றவர்கள் நீதி மன்றத்தை கட்சியின் செயல் திட்டத்தை பிரச்சாரம் செய்யும் மேடையாகப் பயன்படுத்தினர். தங்களது பொது அறிக்கையில்… எங்கள் செயல் திட்டம் புரட்சியை நிறைவேற்றும் ஆற்றலுடைய அனைத்து வர்க்கங்களையும் உள்ளடக்கிய ஒன்றுபட்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணியின் செயல் திட்டமாகும். இதுவே, புரட்சியினை வென்றெடுப்பதற்கான சரியான செயல் திட்டமாக இருக்கும், என மிகுந்த துணிச்சலுடனும், உறுதியோடும் குறிப்பிட்டனர்.
உலகம் பூராவும் இந்த சதி வழக்குக்கு எதிரான இயக்கங்கள் நடைபெற்றன. மீரட் கைதிகள் பற்றி உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரும், அறிஞருமான ரொமெய்ன் ரோலண்டு சொன்னார்,… மனித குலத்துக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி தடுத்து நிறுத்த முடியாதபடி எழுச்சியுடன் முன்னேறிவரும் புரட்சிகர சக்திகளுக்கு அவர்கள் சாட்சிகளாக உள்ளனர். இனி எந்த வொரு சக்தியாலும் அவர்களை தடுத்து நிறுத்த முடியாது. அரசாங்கத்தின் எண்ணற்ற பாவகாரியங்களை மறைப்பதற்காகத் தான் கம்யூனிசத் திற்கு எதிரான இப்படிப்பட்ட கூக்குரல்கள் எழுப்பப்படுகின்றன என்று நேரு மீரட் சதி வழக்கு பற்றி கருத்து தெரிவித்தார். மீரட் சதி வழக்கின் தீர்ப்பு பிரிட்டிஷ் அரசாங்க கொள்கையின் கொடூரமான பிரதிபலிப்பாக இருந்தது. முசாபர் அகமதுக்கு ஆயுட்காலம் முழுவது மான நாடுகடத்தல் தண்டனை வழங்கப்பட்டது; மற்ற பலருக்கும் பல ஆண்டுகளுக்கு நாடுகடத்தல் தண்டனை வழங்கப் பட்டது. மேல் முறையீட்டில் தண்டனைகள் குறைக்கப்பட்டன. அனால், இந்த வழக்கு நடத்தப்பட்ட விதம், குற்றம் சாட்டப் பட்டவர்கள் நீதி மன்றத்தில் எழுப்பிய போர்க்குரல் இவையாவும் உலகின் மனசாட்சி யினை உலுக்கி எடுத்த நிகழ்வாக இருந்தது என்பது உண்மை. மீரட் சதி வழக்கின் தவிர்க்க முடியாத ஆனால், கம்யூனிச இயக்கத்தை மேலே எடுத்துச் செல்கிற நிகழ்வு ஒன்று நடந்தது. முதன் முதலாக கட்சிக்கு ஒரு அகில இந்திய மையம் உருவானது தான் அது.
அகில இந்திய மையம்
ஒரு அகில இந்திய மையத்தை நோக்கி என்ற அத்தியாயத்தில் எவ்வளவு சோதனைகளைக்கடந்து கட்சிக்கான அகில இந்திய மையம் உருவாக்கப்பட்டது என்பது பற்றி நிறைய விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. கம்யூனிஸ்ட் அகிலத்தின் வழிகாட்டு தலும், அதில் ஏற்பட்ட தடுமாற்றங்கள், பின்னடைவுகள், பின்பு அவைகளை சரி செய்து எப்படி அகில இந்திய மையம் உருவாக்கப் பட்டது என்பதை தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. மீரட் சதி வழக்கு நடந்து கொண்டிருந்த போதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதன் செயல்திட்டத்தை வெளியிட்டது. இந்திய மக்களின் அடிமை நிலையை ஒழித்துக்கட்டவும், தொழிலாளி வர்க்கத்தையும், விவசாயி களையும், நசுக்கி வரும் வறுமையிலிருந்து அவர்களை மீட்கவும், நாட்டு விடுதலையை வென்றெடுப்பது இன்றியமையாதது. இதற்கு மத்திய காலத்திலிருந்து தொடர்ந்து வரும் நிலப்பிரபுத்துவ அமைப்பு முறையை உடைத்து நொறுக்கக்கூடிய விவசாயப்புரட்சி பதாகையை உயர்த்திப் பிடிக்க வேண்டியுள்ளது என்று செயல் திட்ட மேடை பிரகடனப்படுத்தியது. முன்பே குறிப்பிட்டது போல், விடுதலைப் போராட்டத்தில் முதலாளி வர்க்கத்தின் பங்கு பற்றிய தவறான கண்ணோட்டமும் அந்த பிரகடனத்தில் இருந்தது. இத்தகைய மதிப்பீடுகள் தான் 1930 களின் தொடக்கத்தில் பின்பற்றப்பட்ட குறுங்குழுவாத (Sectarian) அணுகு முறைக்கு காரணமாக அமைந்தது என்று இந்நூலில் குறிப்பிடப்படுகிறது.
1935ல் நடந்த கம்யூனிஸ்ட் அகிலத்தின் 7வது மாநாட்டிற்குப் பிறகு இது சரிசெய்யப் பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சி, ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கூட்டாக எழுதிய கடிதம் கட்சிக்குள் இருந்த பல்வேறு குழுக்களை ஒற்றுமைப்படுத்த உதவியது. 1933 ம் ஆண்டு டிசம்பரில் நடந்த அகில இந்திய மாநாட்டில், தற்காலிக மத்திய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது; தற்காலிக அமைப்பு சட்ட நகல் ஏற்றுக்கொள்ளப்பட்டது; நகல் அரசியல் கோட்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. தவறுகளை சரி செய்து ஒரு ஒன்றுபட்ட கட்சியினைக் கட்டும் முயற்சியோடு கம்யூனிஸ்ட் இயக்கம் ஒரு புதிய பாதையில் பயனிக்கத் தொடங்கியது என்ற வாசகங்களோடு, இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றின் முதல் தொகுதி முடிவடைகிறது.
13 ஆண்டுகால வரலாறு இது. தேச விடுதலைப்போராட்டத்தில் கம்யூனிஸ்டுகள் ஆற்றிய பங்கு, தெளிவான வழிகாட்டுதலுக்காக அவர்கள் நடத்திய தத்துவார்த்த மற்றும் நடைமுறை போராட் டங்கள் பற்றிய வரலாறு. இந்த அறிமுகக் கட்டுரையில் அனைத்து விபரங்களையும், மதிப்பீடுகளையும் விவரிப்பது கடினம். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சியில் தணியாத தாகம் கொண்டவர்கள், இயக்க செயல் விரர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் அனைவரும் ஊன்றிப்படித்து தேச விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு பரிமாணங்களைப் புரிந்து கொள்ள உதவும் நூல் இது. சில புதிய செய்திகளைக் கூட இந்நூல் சொல்கிறது. உதாரணமாக, லெனின் மறைவு குறித்த அஞ்சலித் தீர்மானம் கூட பெல்காம் காங்கிரஸ் கூட்டத்தில் 63 – 54 என்ற வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது என்ற அவலச்சுவை நிறைந்த செய்தி இதில் உண்டு. இதையெல்லாம் தாண்டி இயக்கம் வளர ஆரம்பித்தது. நூலின் வாசகங்களிலேயே சொல்வதென்றால், இந்தியாவின் தேச விடுதலை இயக்கத்தில் பங்கு பெற்ற வேறு எந்தப்பிரிவும், இந்த நூலின் வரலாற்றுக் காலமாகிய 1920 – 1933 ஆண்டுகளில் கம்யூனிஸ்டுகள் எதிர் கொண்ட அடக்கமுறையை காலனி ஆட்சியாளர்களிடமிருந்து எதிர்கொள்ளவில்லை என்பதே உண்மை நிலையாகும்.
ஆங்கில மூலத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு சில சமயம் தெளிந்த நீரோடையில் நீராடும் உணர்வினையும், சில சமயம் நெருப்பாற்றில் நீந்தும் உணர்வினையும் கொடுக்கிறது. தமிழிலேயே எழுதப்பட்டது போன்று உணர்கிறோம். ஆங்கில மூலத்தின் அழுத்தம் ஏதும் குறையாமல் எளிய வார்த்தைகளில் சிக்கலான தத்துவார்த்த கோட்பாடுகளை விளக்கியிருப்பது பாராட்டுக்குறியது. கம்யூனிஸ்ட் இயக்கத்தை கூர்ந்து கவனித்து அதில் பங்கு பெறும் தோழர் தான் அப்பணியினை சிறப்பாகச் செய்ய முடியும். தோழர். கி.இலக்குவன் அந்த கடினமான பணியினை மிகச் சிறப்பாக, மிகக் குறுகிய காலத்தில் செய்து முடித்திருப்பது பாராட்டுக்குரியது.
மற்ற நான்கு தொகுதிகளின் வெளியிட்டுக்காக நாம் காத்திருக்க வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு – 1
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
421, 2வது தளம்,
அண்ணாசாலை,
தேனாம்பேட்டை,
சென்னை – 600 016.
விலை ரூ.180/-