மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


நாணய மாற்றுதலை – தறிகெட்டு அலையவிடலாமா?


நாணய மாற்றுதலில் (மணி – கன்வெர்ட்டபிலிட்டி) தாராள மயத்தை முழுமையாகப் புகுத்த மீண்டும் ஒரு முயற்சி நடக்கிறது. இதனை ஒட்டி ஒரு சூடான சர்ச்சை அரசாங்க மேல்மட்டத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சர்ச்சைகளில் பங்கு பெறுவோர் அமைச்சர்கள், மேல்மட்ட அதிகாரிகள், அரசிடம் சம்பளம் பெறும் நிபுணர்கள், வங்கிகளின் தலைமைப் பீடங்கள், இவர்களோடு எல்லா வகையிலும், நெருக்கமாக குடும்பப் பாசத்தோடு இருக்கும் பெரு முதலாளிகளிடம் சேவகம் செய்யவே பிறப்பெடுத்த கொழுத்த சம்பளம் பெறும் மூளைகள் இவர்கள் எல்லாம் ஒரு பக்கமாக நிற்கிறார்கள். இவர்களது கருத்துக்களையும், காய் நகர்த்தல்களையும் வாதங்களையும் தவிடு பொடியாக்க, பொருளாதார வளர்ச்சி நாட்டு மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்று கருதுகிற பொருளாதார நிபுணர்கள், இயற்கை இயல் விஞ்ஞானிகள், சமூக இயல் அறிஞர்கள், இந்த சர்ச்சைக்கு மக்களைத் திரட்டி அரசியல் வலுவூட்ட நினைக்கும் இடது சாரி கட்சிகளின் தலைவர்கள், இந்தப்பக்கம் நிற்கிறார்கள். தங்கள் நலன் பாதிக்கும் என்று பயப்படுகிற முதலாளிகளும் இவர்களோடு சேர்ந்து நிற்கிறார்கள்.

இவ்வாறு நாணய மாற்றுதலுக்கு சுதந்திரம் வேண்டும் என்போர் ஒரு பக்கமும், நாணய மாற்றுதலுக்கு நெறி முறைகள் வேண்டும் என்போர் எதிர் பக்கமும் நின்று கருத்துப்போர்க்களத்தில் சண்டை போடுகிற நேரத்தில் நாணய மாற்றலை எந்தக்கட்டுப்பாடும் இல்லாமல் தறிகெட்டு போகச் செய்தால், எதிர்பாரா சுனாமி பேரலைக்கு ஆளான மக்கள் போல் பாதிப்பிற்கு ஆட்படும் ஆபத்தைச் சந்திக்க இருக்கும் மக்களோ இவைகளை அறிய முடியாத தூரத்தில் உள்ளனர். எனவே, இதுபற்றிய விவாதங்களும், சர்ச்சைகளும் தூரத்தில் இருக்கும் மக்களிடம் போய்ச் சேராமல் தெளிவினைப் பெற இயலாது  என்பதால், நாணய மாற்றுதலில் தாராளமய திணிப்பை சுற்றி நடக்கும் கருத்துப் போரையும், அதனோடு தொடர்புள்ள பொருளாதார தத்துவ மோதலில் ஏற்பட்டு வரும் மாற்றங்களையும் மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல பல வித முயற்சிகள் தேவைப்படுகின்றன. அந்த முயற்சிகளில் இந்தக் கட்டுரையும் ஒன்று.

இன்று தங்கு தடையற்ற நாணய மாற்றுதலுக்கு குரல் கொடுக்கும், பெருமுதலாளிகளும், அதிகாரிகளும், நிதி அமைச்சரும் முன் வைக்கும் வாதங்கள் என்ன?

நமது பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. அந்நியச் செலவாணியும் குன்று போல் குவிந்து வருகிறது. இங்கு முதலீடு செய்திருக்கும், இந்திய, அந்நிய முதலாளிகளுக்கும் லாபமும் மலைபோல் உயர்ந்து கொண்டே போகிறது. இவைகளெல்லாம் நமது நாட்டு ரூபாய்களிலே உள்ளன. ஆகவே, நம் கைவசம் உள்ள அந்நிய செலவாணியை வைத்து இந்த ரூபாய் மலைகளை டாலர்களாகவோ வசதிக்கேற்ப வேறு நாணயங்களாக மாற்றிடவும் அனுமதி கிடைக்கும் நாடுகளிலேயே அனுமதிக்கிற முதலீடு செய்யவும் எந்தக்கட்டுப்பாடும் அரசு விதிக்கக் கூடாது. குறிப்பாக கண் இமைக்குமுன் ஒன்றை பத்தாக்கி, கோடிகளாக குவிக்கும் பங்குச்சந்தை விளையாட்டில் ஈடுபட அனுமதிக்க வேண்டும். இன்று பல வகைகளில் வந்து குவியும் அந்நிய நாட்டு செலவானியை செலவிடுவதில் அரசு கட்டுப்பாடு விதித்திருப்பதால், அமெரிக்க அரசின் குறைந்த வட்டி கடன் பத்திரங்களாக முடக்கப்பட்டுள்ளன.

இதுவே பங்குச்சந்தையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தால், லாபம் இன்னொரு மலையாகக் குவிந்திருக்கும். வைக்கோல் போரில் நாய் படுத்திருப்பதைப்போல், ரிசர்வ் வங்கி செயல்படுகிறது. இந்தக் கட்டுப்பாடு நீக்கப்பட்டால், உலகப்  பொருளாதாரத்தில் நமது பங்கேற்பு பெருகி இந்தியா உயர்ந்து நிற்க வழி பிறந்திருக்கும் என்று வாதிடுகின்றனர். பணத்தை வைத்து, பணத்தைப் பெருக்குவதின் மூலம் உலகப் பொருளாதார பங்கேற்பிற்கும், உள்நாட்டுப் பொருளாதார வளர்ச்சிக்கும், மக்களின் செல்வச் செழிப்பிற்கும் குறுக்கு வழி இருப்பதாக வாதிடுகின்றனர்.

இந்த வாதங்களை மேலோட்டமாகப்பார்த்தால், இது நல்லது தானே என்று மட்டுமா தோன்றும்? ஒரு முதலாளி, இங்கு தொழில் நடத்தி சம்பாதித்த லாபத்தை சுதந்திரமாக முதலீடு செய்யும் உரிமை கொடுப்பதில் தவறென்ன? என்று கேட்கவும் தோன்றும். இவ்வாறு சுதந்திரம் கொடுத்தால் தானே அந்நிய முதலாளிகள் பறந்து இந்தியாவிற்கு வருவார்கள். இந்திய முதலாளிகளும் பறந்து போக மாட்டார்கள்.

இதிலென்ன சமூகக் கேடுகள் விளையும் என்றும் தோன்றும. ஆனால், கட்டுப்பாடற்ற நாணய மாற்றுலுக்கு இன்னொரு பக்கமுண்டு, அது தோற்றமல்ல; எதார்த்தம். அதனை அறிய இடது சாரி கட்சிகளின் தலைவர்களும், மக்கள் மீது அக்கறை கொண்ட பொருளாதார நிபுணர்களும், ஒரு நாட்டின் நாணயத்தின் மதிப்பு, அந்த நாட்டு அதிகபட்ச சமூக உழைப்புத்திறன் பயன்பாட்டை வைத்துதான் நிர்ணயிக்கப்படுகிறது, இதர கவர்ச்சிகளால் அல்ல, என்ற உண்மையை ஏற்கிற சமூக இயல் நிபுணர்களும் கூறுவதையும்  பரிசீலியுங்கள். இன்றுள்ள சுதந்திரத்தையும் பாருங்கள், கட்டுப்பாடு தேவையில்லை என்போர் கூறுவது மாயை, நெறிமுறை தேவை என்போர் கூறுவது எதார்த்தம் என்பது புலனாகும்.

முதலாளிகளுக்கு இன்றுள்ள சுதந்திரம் என்ன?

இன்று இந்தியாவில் இருக்கும் ஒரு முதலாளி (அவர் ஏதேனும் ஒரு துறை மூலம் அந்நிய செலவானி சம்பாதிப்பவராக இருந்தால்) வெளிநாட்டில் முதலீடு செய்ய விரும்பினால், அரசு அவருக்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை. மாறாக, சில நெறிமுறைகளை கூறுகிறது.

ஒரு வெளிநாட்டு நிறுவனம் இந்தியாவில் ஏதாவது ஒரு தொழிலில், மொத்த மூலதனத்தில் 10 சதமாவது முதலீடு செய்திருந்தால் அந்த நிறுவனத்தில் இந்திய முதலாளிகள் முதலீடு செய்யலாம். அந்த முதலீட்டின் அளவு இந்தியாவில் இருக்கும் இந்திய முதலாளியின் முதலீட்டில் 25 சதத்தை தாண்டக் கூடாது.

ஒழுங்கான நிறுவனம் என்று பல வருட செயல்பாட்டு ஆதாரங்கள் இருந்தால் நூறு சதம் கூட முதலீடு செய்யலாம். இதற்கு தொகை உச்ச வரம்பு எதுவும் கிடையாது. எத்தனை மில்லியன் டாலர்களானாலும் ரிசர்வ் வங்கி கொடுத்துவிடும்.

இந்திய வங்கிகளிலே, வெளிநாட்டில் வேலை செய்யும் இந்தியர்கள் டெப்பாசிட்டுகள் போடுகின்றனர். இவ்வாறு கிடைக்கும் அந்நிய செலவானியை அந்த வங்கி வெளிநாடுகளில் டெப்பாசிட் செய்து வட்டி சம்பாதித்து கொள்ளலாம். பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதியில்லை. ஏனனெனில், ஆபத்தான முதலீட்டில் போட அது வங்கியின் சொந்தப்பணமல்ல, டெப்பாசிட் தாரரின் பணம்.

ஏற்றுமதி செய்யும் இந்திய நிறுவனம், தான் சம்பாதிக்கும் அந்நிய செலவாணியை, அந்த வெளிநாட்டு நிறுவனத்திற்கு கடனாக கொடுக்கலாம். அவ்வாறு சம்பாதிக்கும் வட்டிப்பணத்தை அந்த ஏற்றுமதியாளர் இஷ்டம்போல் எதில் வேண்டுமானாலும் முதலீடு செய்து கொள்ளலாம். வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்கள் விருப்பம் போல் முதலீடு செய்து கொள்ளலாம். இன்று இந்துஜா, மிட்டல், ரெட்டி மட்டுமல்ல. டி.வி.எஸ். உட்பட வெளிநாட்டில் முதலீடு செய்திருப்பது இந்த உரிமையின் அடையாளமாகும். இந்திய முதலீட்டாளர்களின் பிரச்சனையே வெளிநாடுகளில் முதலீடு செய்ய அந்த நாடுகளின் அரசுகள் போடுகிற  நிபந்தனைகள் தான். மிட்டல் என்ற இந்திய முதலாளி ஐரோப்பிய நாடான லக்சம்பர்க்கில் மூடிக்கிடக்கும் இரும்பாலையில் முதலீடு செய்வதை பிரெஞ்சு அரசு தடுத்துவிட்டது. அமெரிக்காவில் மூடிக்கிடந்த எண்ணை சுத்திகரிப்பு நிறுவனத்தில் சீனா முதலீடு செய்வதை அமெரிக்கா தடுத்து விட்டது. இதிலிருந்து தெரிவதென்ன?

ஒரு இந்திய முதலாளியோ அல்லது நிறுவனமோ இந்தியாவில் முதலீடு செய்திருக்கும் அந்நிய நிறுவனங்களோ, அவரவர்கள், தொழில் மூலமோ வர்த்தகம் மூலமோ சம்பாதித்த அந்நிய செலவானியை முதலீடு செய்ய எந்தக்கட்டுப்பாடும் இந்தியஅரசு விதிக்கவில்லை என்பது தெளிவு. அதே நேரம் இந்த பணக்கார நாடுகளின் பங்குச்சந்தையில் பங்குகளை வாங்கி விற்கும் விளை யாட்டில் முதலீடு செய்வதற்கு உள்ள சுதந்திரம் மட்டுமே உள்ளது என்பதும் தெரிகிறது. சொல்லப்போனால், முதலாளிகளுக்கு இப்பொழுது இருக்கிற சுதந்திரம் கொடுத்ததாலோ, பங்குச் சந்தை முதலீட்டில் விளையாட விடுவதாலோ இந்திய மக்கள் பெற்ற அல்லது பெறப்போகும் பயனென்ன? என்பதைப் பரிசீலிக்க வேண்டிய கட்டமே தவிர மேலும் தளர்த்தும் தருணமல்ல. இது போதாது முழுமையான நாணய மாற்றுதல் உரிமை வேண்டும் என்று பின் ஏன் அவர்கள் கூச்சலிடுகிறார்கள்? அவர்கள் கேட்பது  இன்று யார் வேண்டுமனாலும் தன்னிடமுள்ள சொத்தை ரூபாயாக ஆக்கும் உரிமை இருப்பது போல், அந்த ரூபாயை அந்நிய செலவானி ஆக்கும் உரிமை தேவை; இப்பொழுது இருப்பது, அந்நிய செலவானியை சம்பாதிப்பவர்கள் மட்டுமே அனுபவிக்கிற உரிமை, அதற்கும் கட்டுப்பாடுகள் உள்ளது. பங்குச்சந்தை விளையாட்டில் ஈடுபட அனுமதி இல்லை. எனவே, எல்லோருக்கும் ரூபாயை அந்நிய செலவானியாக மாற்றவும், விருப்பப்படி முதலீடு செய்யவும் உரிமை வேண்டும் என்கின்றனர்.

பணத்தை வைத்து பணம் பெருக்குகிற பங்குச்சந்தை பந்தயம் உட்பட, புதிய, புதிய வழிகளில் அதுவும் உலகளவில் ஈடுபட உரிமை வேண்டும் என்கின்றனர்.

இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்களும், சமூக அக்கறையுள்ள அறிஞர்களும் இது கூடாது என்கின்றனர். இதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் என்ன?

முதலில் நமது நாட்டு ரூபாய் சர்வதேச செலவானிகளில் ஒன்றல்ல என்பதை மனதில் கொள்ள வேண்டும். இன்று அமெரிக்க டாலர், பிரிட்டன் பவுண்ட், ஐரோப்பிய யூரோ, ஜப்பானிய என், இவைகளுக்கே சர்வதேச செலவானி அந்தஸ்த்தும், கவர்ச்சியும் பெற்று இருக்கின்றன.

பணக்கார நாடுகளில் ஒன்று என பணக்கார நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட, சோவியத்தாக இருந்த காலத்தில் போடப்பட்ட பலமான பொருளாதார அடிப்படை கொண்ட ரஷ்ய ரூபிளுக்கோ, வேகமிகு பொருளாதாரம் கொண்ட நாடுகள் என்று அங்கீகரிக்கப் பட்ட சீனாவின் என்னோ, இந்தியாவின் ரூபாயோ அந்த அந்தஸ்த்தை அல்லது கவர்ச்சியை பெறவில்லை.

இந்நிலையில் இந்திய ரூபாயை, முழு நாணய மாற்றல் உரிமை வழங்கினால், இரண்டு வித ஆபத்துக்கள் ஏற்படும் என்கின்றனர்.

  1. நமது ரூபாயின் மதிப்பு தலைகுப்புற கீழே விழும். அதனுடைய மதிப்பு நிலையாக இருக்காது தாறுமாறாக ஆகிவிடும். அரசால் அதனை நிலையாக வைக்க முடியாது.
  2. முதலாளித்துவ உற்பத்தி முறையின் பிறவிக் குணமாக இருக்கும் பொருளாதார நெருக்கடி சுழல் வருகிற பொழுது அற்ற குளத்து அறு நீர் பறவை போல் இந்த முதலீட்டாளர்கள் பறந்துவிடுவர்.

பறவைகளின் சரணாலயமாக இருக்கும் வேடந்தாங்கல் போல், இந்தியாவும் சீசனுக்கு வந்து போகும் முதலாளிகளின் சரணாலயமாக மாறும். வேடந்தாங்கலிலாவது பறவைகள் போடும் எச்சம், விவசாயிகளுக்கு உரமாகப் பயன்படுகிறது. ஆனால், இந்த முதலாளிகள் போடுகிற எச்சம் மூடிய ஆலைகளாக, வெள்ளெருக்குப் பூத்த தொழிற் பூங்காக்களாக பாழடைந்த அரண்மனை போல், பழைய கதைகளை சொல்லிக் கொண்டே இருக்கும்.

சர்வதேச அந்தஸ்த்தோ, கவர்ச்சியோ அடையாத எந்த நாணயமும், முழு நாணய மாற்றுதலை ஏற்றுக் கொண்டால் இந்த ஆபத்துக்களை சந்தித்தே ஆகவேண்டுமென அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றனர்.

உலகம் மாறிவிட்டது, இடதுசாரிகள் பழைய கதைகளை நம்பும் பழமைவாதிகள். சர்வதேச கவர்ச்சியை நமது ரூபாய் பெறுவதற்கே, நாணய மாற்றுதலில் இருக்கும் கட்டுப்பாடு நீக்கப்பட வேண்டும் என்று முதலாளிகளுக்கு சேவை செய்ய போய்விட்ட மூளைகளும், இந்திய அரசின் பொருளாதார, நாணயம் மற்றும் நிதி கொள்கையை உருவாக்கும் பணப்புழக்க நிபுணர்களும் எதிர்க்கணைகளை வீசுகிறார்கள்.

அட ஞானக் கொழுந்துகளே, நாணய மாற்றுதலில் கட்டுப்பாட்டை நீக்கிவிட்டால், ரூபாய்க்கு சர்வதேச அந்தஸ்து தேடி வரும் என்று எதை வைத்து கூறுகிறீர்கள்? ரூபாய்க்கு மதிப்பைத் தருவது நமது நாட்டு பொருளாதார கட்டமைப்பு. அதை வளர்க்காமல், கட்டுப்பாட்டை நீக்கிவிட்டால் ரூபாய்க்கு மதிப்பு வரும் என்று கூறுவதை கடி ஜோக் மாதிரி கேட்கவே தோன்றுகிறது. பம்பை அடிச்சா தண்ணி வரும்! தண்ணி அடிச்சா பம்பு வருமா!  உலகம் மாறிவிட்டது என்று பொதுவாக கூறுகிறீர்களே! இது சரிதானா! எது மாறியிருக்கிறது, எது மாறவில்லை என்பதை தேடி அறிய வேண்டுமே தவிர, மாறாதவைகளையும் மாறிவிட்டதாக கருதிக் கொள்வது அபத்தம் மட்டுமல்ல ஆபத்தும் கூட!

போக்குவரத்து நெரிசலை தவிற்க சாலை விதிகளை உருவாக்கி யிருப்பதைப் போல், பணப்புழக்கத்தையும், நாணய மாற்றுதலையும் முறைப்படுத்துவது அவசியமில்லையா? அதனை மீறுவோருக்கு தண்டனை வேண்டாமா? உலக நாடுகளின் அனுபவங்கள் கூறுவதென்ன? தாராளமயம் கொடிகட்டிப்பறப்பதாக கூறப்படும் அமெரிக்கா, தென்கொரியா நாடுகளில் நடப்பதென்ன? அங்கே அந்நிய முதலீட்டிற்கு மட்டுமல்ல, பணப்புழக்கத்திற்கே நெறி முறைகள் உண்டு. என்ரான் என்ற அமெரிக்க நிறுவனத்தின் அதிபர் பங்குச்சந்தையில் என்ரான் பங்குகளின் மதிப்பைக் கூட்ட பொய்யான லாபக்கணக்கை காட்டிய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார். தென்கொரியாவின் ஏகபோக நிறுவனமான உண்டாய் நிறுவனத்தின் அதிபர் வரி ஏய்ப்பு மூலம் பெரும் தொகையை சுருட்டி, அரசியல்வாதிகளை விலை கொடுத்து வாங்க நிதி ஒதுக்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அங்கெல்லாம் நெறிமுறைகள் இருக்கிற பொழுது இங்கே எந்த நியதிகளும், நெறிமுறைகளும் தேவையில்லை என்று எதை வைத்து கூறுகிறீர்கள். இரண்டு அனுபவங்கள் நமக்கு பாடங்களாக அமைவதை இந்திய முதலாளிகள் உணரமாட்டார்கள். ஆனால், நாட்டு மக்கள் உணர்வது அவசியம் முதலில் அர்ஜெண்டைனாவின் அனுபவத்தை பார்ப்போம். அடுத்து இந்தோனேஷியாவின் அனுபவத்தைப் பார்ப்போம்.

அர்ஜெண்டைனா என்ற தென் அமெரிக்க நாட்டில் பல ஆண்டுகளுக்கு முன்னரே, முழு நாணய மாற்றல் புகுத்தப்பட்டது. அர்ஜெண்டைனாவின் குடிமகன் யாராக இருந்தாலும், வங்கிகளில் கணக்கை உள்நாட்டு நாணயமாகவோ, அந்நிய செலவானியான டாலராகவோ வைத்துக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்தது. விபரம் தெரியாமலே தொழிலாளர்களும், தொழிற்சங்க தலைவர்களும்  இதனை வரவேற்றனர். விவசாயிகளும் வரவேற்றனர். சிறிது நாளில் சர்வதேச அந்தஸ்து இல்லாத அர்ஜெண்டைனாவின் பிசோ நாணயத்தின் மதிப்பு குறைந்து சீண்டுவோர் இல்லாமல் போனது. பிசோவின் மதிப்பு குறைந்து கொண்டே போனதால் எல்லாரும் டாலருக்குத் தாவ முயன்றனர்.

அன்று, அர்ஜெண்டைனாவின், அந்நிய செலவானி மலை போல் குவிந்திருந்தது என்பது உண்மையே; நாணய மாற்றலுக்கு சுதந்திரம் இருப்பதால் டாலரை கொடுத்து பிசோ வாங்குவோரும், பிசோவை கொடுத்துவிட்டு டாலரை வாங்குவோரும் சமனப்படுத்திக் கொண்டேயிருப்பர் என்று அரசு கருதியது தவறாகப் போனது. நேர்மாறாக சர்வதேச அந்தஸ்து இல்லாத பிசோவின் மதிப்பு தலைகுப்புற விழுந்ததால் எல்லோரும் டாலர் கேட்க ஆரம்பித்தனர். கண் இமைக்கு முன், அந்நிய செலவானி மலை  கரைந்தது. வங்கிகளால் சமாளிக்க முடியவில்லை; நாணய மாற்றலுக்கு அரசு கட்டுப்பாடு விதிக்க நேர்ந்தது. முதலில் தொழிலாளர்கள் டாலர் கணக்கை முடக்கினர். அடுத்து விவசாயிகள், சிறு வியாபாரிகள் என்று அரசு டாலர் கணக்கை முடக்கியது. மதிப்பிழந்த பிசோ வேண்டாம், டாலர் கொடு என்று கலவரம் ஏற்பட்டது. சர்வாதிகார அரசு மக்களைச் சுட்டுத்தள்ளியது. இங்கு இன்று அரசு மாறிவிட்டது. ஆனால், டாலர் உருவாக்கிய மாயையிலிருந்து மக்கள் மீளவில்லை; ஆட்சியாளர்களும் மீளவில்லை. அர்ஜெண்டைனாவின் சீரழிந்த பொருளாதார கட்டமைப்பை இன்னும் பல பத்தாண்டுகள் அங்குள்ள மக்கள் உழைக்காமல், உழைப்பிற்கேற்ற உண்மை ஊதியத்தை பெற போராடாமல், முதலாளிகளை ஒழுங்குபடுத்தாமல் தூக்கி நிறுத்துவது கடினம். சொந்த நாட்டு நாணயத்தின் மதிப்பை உயர்த்த பொருளாதார கட்டமைப்பை பலப்படுத்துவது என்ற பார்வை அங்குள்ள ஆட்சியாளர்களுக்கு என்று வரும் என்பதே இன்றைய கேள்வி.

அர்ஜெண்டைனாவை விட சோகம் கூடுதலானது இந்தோனே ஷியாவின் நிலைமை. எண்ணை ஏற்றுமதி நாடாக இருப்பதால் அந்நிய செலவாணிக்கு பஞ்சமே வராது என்பது இந்த நாட்டை ஆண்ட சர்வதிகாரி குடும்பத்தின் கணக்கு. இங்குள்ள பங்குச்சந்தையில் அந்நியர்கள் முதலீடு செய்யலாம் என்று அரசு அறிவித்ததோடு, நாணய மாற்றலுக்கும் முழுக்கச் சுதந்திரம் கொடுத்தது. உள்நாட்டு முதலாளிகளும் பங்குச் சந்தையில் பங்குகளை அந்நிய செலவானிக்கு விற்பதில் ஆர்வம் காட்டினர். சிறிது நாளில் இந்தோனேஷியாவின் நாணயத்தின் மதிப்பு தலைகுப்புற கீழே விழுந்தது. மதிப்பை நிலை நிறுத்த எடுத்த முயற்சியில், இந்தோனேஷிய அரசின் அந்நிய செலவானி மலை மாயமாக மறைந்தது. வெளிநாட்டு முதலாளிகள் பறந்தனர். உள்நாட்டு முதலாளிகளும், அந்நிய செலவானியாக மாற்றி வெளிநாட்டில் முதலீடு செய்தனர். மூடிய ஆலைகளும், பாழடைந்த கட்டிடங்களுமே மிஞ்சின. பெரும் பகுதி மக்கள் வறுமையின் விளிம்பில் வாழ்கின்றனர். இந்தோனேஷிய தொழிலாளர்கள் சிரமப்பட்டு உழைத்து பொருளாதார அடிப்படைகளை வளர்ப்பது மட்டும் போதாது. இங்குள்ள பேராசை கொண்ட முதலாளிகளை கட்டுப்படுத்தும் அரசியல் சக்தியாக வளராமல் இம்மக்களுக்கு விமோசனமில்லை. இன்றைய உலகமயச் சூழலில் அவர்கள் தலை நிமிர்ந்து நிற்கவே முடியாது. வறுமையின் விளிம்பில் வாழும் மக்களை விழுங்கும் கலவரச் சூழலும், மூடக்கருத்துகளின் மோதல்களும் தொலையாது.

இந்த இருநாடுகள் மட்டுமல்ல. சமீபத்தில் திவாலான நாடுகளின் அனுபவங்கள் நமக்கு போதிப்பதென்ன? தாராள மயமும், தனியார் மயமும் உருவாக்கிய நாணய மாற்று சுதந்திரமும், அது உருவாக்கிய பங்குச்சந்தை முதலீடும் கொண்டு வந்த பொருளாதார வளர்ச்சி என்பது ஒரு தோற்றப்பிழை என்பதை உலகம் காண நேர்ந்தது. இந்தோனேஷியாவில் சர்வாதிகாரி ஓழிந்தான் என்பதைத் தவிர இந்தோனேஷிய மக்கள் டாலர் உருவாக்கும் மாயையிலிருந்து மீண்டதாக சொல்ல முடியாது.

நாணயங்களின் அந்தஸ்து

டாலர், பவுண்டு, யூரோ, என் போன்ற நாணயங்களுக்கு சர்வதேச செலவானிகளாக உலாவரும் அந்தஸ்து எப்படி ஏற்பட்டது என்ற வரலாற்றை புரிந்து கொள்ள வேண்டுமே தவிர, இந்த நாட்டு அரசுகள், நாணய மாற்றலுக்கு முழு சுதந்திரம் கொடுத்ததால் தான் அந்த மதிப்பு வந்தது என்று நம்பி விடக்கூடாது. பலமான உள்நாட்டு பொருள் உற்ப்பத்தித் திறன், அதனை உருவாக்கவல்ல தொழில் நுட்ப ஆற்றல் படைத்த உழைப்பு சக்தி, உள்நாட்டு சந்தையின் ஒழுக்கத்திறன் இவைகளெல்லாம் நன்கு வளர்க்கப்பட்டதால், இந்த அந்தஸ்து வந்தது என்பதைக் காணத் தவறக் கூடாது. அதை விட முக்கியம் அவர்கள் போன வழியில் நாம்போக முடியாது. அந்த காலம் மலையேறிவிட்டது. அந்த வகையில் உலகம் முழுமையாக மாறிவிட்டது. மாறாதது முதலாளித்துவ கருத்துக்களே.

தங்கத்தின் ஆதிக்கமும் – உலகப் பொருளாதாரத்தின் உருவாக்கமும்

உலகப் பொருளாதாரத்தின் அச்சானியாக இன்று இருக்கும் நாணய மாற்றல் அல்லது அந்நிய செலவானி ஏற்பாட்டிற்கு முன்னர் தங்கம் என்ற கனமான மஞ்சள் உலோகம் பணவடிவில் பயன்பாட்டில் இருந்தது. 1945 வரை தங்கமே, உலக வர்த்தகத்தின் பணமாக இருந்தது. 1945 முதல் 1972 வரை தங்க ஸ்டாக் அடிப்படையில் நாணய மாற்றல் முறை புகுந்தது. 1972க்குப் பிறகே இன்றைய நாணய மாற்றல் முறை தங்கத்தை அடிப்படையாகக் கொண்ட பண முறைக்கு முற்றுப் புள்ளி வைத்தது. உலகப் பொருளாதாரம் என்பது பணம் மட்டும் சம்பாதிக் கும் முறைக்கு அப்பாற்பட்டது. அதையும் தாண்டி வளர்வது என்ற உண்மையை உலகம் கண்டது. இந்த உலகப் பொருளாதார ஆக்கம் என்பது, ஆதிக்க சக்திகளை, வரம்பு மீறல்களை,  சமமதிப்புகளே கைமாறும் என்ற இயல்பை மீறும் சந்தை முறைகளை எதிர்த்தே வளர்ந்து வருகிறது.

உலகப் பொருளாதாரம் என்பது சரக்கு பரிவர்த்தனைகளாலும், சந்தை உறவுகளாலும் ஆக்கப்படுகிறது என்ற பார்வை துவக்க காலத்தில் இல்லை. தங்கத்திற்கு மாய சக்தி உண்டு என்ற நம்பிக்கையே, ஆட்சியாளர்களையும் ஆட்டிப்படைத்தது. தங்கத்தை லாபமாக திரட்டுவதில் ஏற்பட்ட போட்டி மறைமுகமாக உலகப் பொருளதார ஆக்கத்திற்கு உதவியது. சரக்கு உற்பத்தி, மதிப்பு பரிவர்த்தனை இவைகளைப் பற்றிய பிரமைகளே மக்கள் மனதில் ஆதிக்கம் பெற்றதே தவிர, அதன் எதார்த்த இயல்புகளை அன்றைய பொருளாதார ஞானிகளால் கூட  காண முடியவில்லை. அமித உற்பத்தி எப்படி நெருக்கடிகளை உருவாக்குகிறது என்பதையும் இவர்களால் அறிய முடியவில்லை. சந்தையில் மதிப்பு பரிவத்தனை இயல்பு பற்றிய தவறான பார்வை தங்க சேமிப்பே, பொருளாதார வளர்ச்சியின் உந்து சக்தி என்று நம்ப வைத்தது.

துவக்க காலத்தில் ஐரோப்பிய நாடுகள் தங்க சேமிப்பு வேட்டையில் இறங்கின. தங்கத்தை கொள்ளை அடித்து திரட்டிய நாடுகள், ராணுவ பலத்தைக் கொண்டு தங்கச் சுரங்கங்களை கைப்பற்றிய நாடுகள் இவைகளை விட, கஞ்சா முதல் அடிமைகள் வரை உலக வர்த்தகத்தில் ஈடுபடுத்தி தங்கம் சேமித்த பிரிட்டன் தொழிற்புரட்சியால் உலகப் பொருளாதாரத்தின் தலைமையை எட்டிப்பிடித்தது.  பிரிட்டன் என்ற சுண்டைக்காய் நாடு உலக வர்த்தகத்தின் தலைவனாக ஆனது. இது வெகுகாலம் நீடிக்கவில்லை. தங்கம் பணமாக பயன்படுத்துவதை நிறுத்தி தங்க ஸ்டாண்டு என்ற நாணய பரிவர்த்தனை முறை அமுலுக்கு வந்தவுடன் டாலர் ஆதிக்கம் வந்தது. அதுவும் நீடிக்கவில்லை. 1972க்குப் பிறகு தங்க முறை ஒழிக்கப்பட்டு, நாணய மாற்றல் முறை ஏற்பாடு அமுலுக்கு வந்த பிறகு டாலரின் மேலாண்மை ஒழியும் காலமானது.  டாலர், பவுண்டு, யூரோ, என் ஆகிய நாணயங்களின் சர்வதேச செலவானியாக போட்டி போடும் காலம் வந்துவிட்டது. இனி எல்லா நாணயங்களும் அந்தந்த நாட்டின் பொருளாதார சக்திக்கு ஏற்ப நாணயங்களின் மதிப்புகளை நிர்ணயிக்கும் காலமாக மாறும். அதனை நோக்கியே உலகப் பொருளாதாரம் நகர போரிடுகிறது. உலக வர்த்தகத்தில் தங்கம்  பணமாக இருந்தது மலையேறி, தங்க ஸ்டான்டர்டும் மலையேறி. நாணய மாற்றல் முறை புகுந்தவிதம், ஒரு சுவாரஸ்யமான வரலாற்று நிகழ்வு என்பதை விட பெருமுதலாளிகளின் கூட்டத்தின் எதிர்ப்பிற்கும் ஏகாதிபத்தியவாதிகளின் ஆசைக்கும், பொருளாதார நிபுணர்களின் மூடநம்பிக்கைக்கும் வேட்டு வைப்பதின் மூலமே இந்த நாணய மாற்றல் முறை புகுந்தது. மார்க்ஸ் குறிப்பிட்டது போல் சந்தை இயல்பின் வீரவரலாராகும் என்பதே சரியாக இருக்கும்..

ஆயிரம் வழிகளில் சுரண்டல் வர்க்கங்கள் ஆதிக்கம் செலுத்த முயன்றதால், உலகப் பொருளாதார ஆக்க இயல்பு ஆயிரத் தோராவது வழியில் அதனை முறியடித்து தன்னை நிலை நிறுத்துகிறது. இந்த உண்மையை லெனினது சிலவரிகள் நமக்கு உணர்த்துகிறது.

நமக்கு எதிரான அரசுகள் அல்லது வர்க்கங்களின் உறுதி, விருப்பம், முடிவுகள் இவைகளை விட அதிக சக்தி பெற்ற ஒன்று உண்டு. அது தான் உலகப் பொருளாதார உறவென்னும் சக்தி.  (வால்யூம் 33 பக்கம் 155.)

உலகப் பொருளாதார ஆக்கம் முதலாளித்துவ மூடநம்பிக் கைகளை ஒவ்வொன்றாக முறியடித்து முன்னேற வேண்டியிருக்கிறது என்பது மட்டுமல்ல, மார்க்சீய வாதிகளும், அதன் இயல்பை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே லெனினது இந்த வாசத்தின் பொருளாகும்.

கோல்டு பிங்கர் சினிமாவும் – தங்க பைத்தியங்களும்

1964 ல் கோல்டு பிங்கர் என்ற ஜேம்ஸ் பான்டின் திரில்லர் சினிமா அமெரிக்காவிலும், ஐரோப்பியாவிலும் சக்கை போடு போட்டு ஓடிய சினிமாவாகும். படத்தின் கரு என்னவெனில், ஒரு பேராசைக்காரனை பயன்படுத்தி சீனா பனிப்போரில் அமெரிக்காவை தோற்கடிக்க சதி செய்கிறது. சாகசங்கள் செய்தும், காதல் லீலைகள் செய்தும் சீனாவின் சதியை ஜேம்ஸ் பான்ட் முறியடித்து வெற்றிவாகை சூடுகிறான். சதி என்னவெனில் அமெரிக்காவில் மிகவும் பாதுகாப்பாக வைக்கப் பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான டன் தங்கத்தை யாரும் தொடவிடா மல் தடுத்து, அமெரிக்க பொருளாதாரத்தையும் அதன் மூலம் உலகப் பொருளாதாரத்தையும் சீர் குலைத்து பனிப்போரில் சீனா வெல்ல முயற்சிப்பது என்பதே.

கோல்டு ஃபிங்கர் என்ற பேராசை பிடித்தவன் தன்னிடமுள்ள தங்கத்திற்கு மதிப்பை கூட்டிட ஆசைப்படுகிறான். தங்கத்தின் விலையை கட்டுப்படுத்தியிருக்கும் அமெரிக்க அரசிற்கு சொந்தமான தங்கத்தை கடத்தவோ, அப்புறப்படுத்தவோ இயலாது என்பதால் வேறு வகையில் அதனை முடக்கிட ஆலோசனை செய்கிறான். இந்தப் பேராசைக்காரனை சீனா கண்டுபிடித்து அவனிடம் ஒரு அணுக் கருவியை கொடுத்து அதனைக் கொண்டு போய் நாக்ஸ் கோட்டையில் மிகுந்த பாதுகாப்புடன் தங்கம் வைக்கப்பட்டிருக்கும் பாதாள அறையில் டைம்பாம் செட் செய்து வைக்க அனுப்புகிறது. இந்த டைம் பாம் வெடித்தவுடன் அணுக்கருவி இயங்கி அங்கு வைக்கப்பட்டிருக்கும் தங்கப்பாளங்களை கதிர் வீச்சு அடையச் செய்து விட்டால் யாரும் நெருங்க முடியாமல் போய்விடும் என்பது சீனாவின் கணக்கு; ஆனால், ஜேம்ஸ் பாண்ட் புகுந்து நெருப்பைக் கக்கும் சண்டைகள் போட்டும், அரைகுறை ஆடையோடு காதல் லீலைகள் செய்தும் பொறுத்தப்பட்ட அணுக்கருவியை வெடிக்கும் முன் அப்புறப்படுத்துகிறான். அதன் மூலம் அமெரிக்க பொருளா தாரத்தை காப்பாற்றுவதாக கதை ஓடுகிறது.

காதிலே பூ சுத்துகிற இந்தக்கதைக்கு தங்கத்தை அழித்துவிட்டால் பொருளாதாரம் அழிக்கப்படும் என்ற பயத்தை மக்கள் மனதில் வலுப்படுத்தும் நோக்கமுண்டு என்பதைக் கவனியுங்கள்..

மிகவும் கனமான மஞ்சள் நிற உலோகமான தங்கம், பணமாக பயன்படாமல் நாக்ஸ் கோட்டையில் பதுக்கி வைக்கப்பட்டு கிடக்கிறது. அதன் விலையோ அரசே நிர்ணயித்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

1 கிராம் தங்கம் 1 டாலர் என்ற விலையையும் சர்வதேச ஒப்பந்தப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பாதாள அறையில் மிகுந்த பாதுகாப்பு செலவோடு பயனற்று கிடக்கும் இந்த உலோகத்தை அழிப்பதின் மூலம் அமெரிக்கப் பொருளாதாரமோ அல்லது உலகப் பொருளாதாரமோ உண்மையிலேயே அழிந்து விடுமா?

சீனா பனிப்போரில் வெல்ல அல்லது அமெரிக்க பொருளா தாரத்தை சீர்குலைக்க பெரிய தொழிற்சாலைகளை வர்த்தக மையங் களை, பங்குச்சந்தை அரங்கங்களை பணப்புழக்க மையங் களான வங்கிகளை குறிவைக்காமல் தங்கம் பதுக்கி வைக்கப் பட்டிருக்கும் கோட்டையை குறி வைத்தது என்று கதைவிடலாம். ஆனால், அதன் மூலம் பொருளாதாரம் சீர் குலையுமா?

1964 ல் கதாநாயகன் ஜேம்ஸ் பான்ட் மட்டுமல்ல, பிரிட்டிஷ் அமெரிக்க அரசுகளுக்கு ஆலோசனை வழங்கிய நிபுணர்கள் அனைவருமே தங்கஸ்டாக் கரைந்தாலோ அல்லது முடங்கினாலோ அல்லது காணாமல் போனாலோ பொருளாதாரம் சீர்குலையும் என்று பயந்தனர். அன்று தங்கஸ்டாக்கரையும் வேகத்தை கட்டுப்படுத்தவெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாவதைத் தடுத்திட,  பிரிட்டன் தனது நாணயத்தின் மதிப்பை குறைத்துக் கொண்டது. அமெரிக்க நிபுணர்களும் அமெரிக்க ஜனாதிபதியை எச்சரித்தனர். அமெரிக்காவின் இறக்குமதி அதிகமாவதால், டாலர் உலகெங்கும் பரவி உள்ளது. அவர்கள் சரக்குகளை வாங்காமல், தங்கத்தை கொடு என்று கேட்டால் அமெரிக்காவிடம் இருக்கும் தங்கம் போதாது. 1 டாலருக்கு 1 கிராம் தருவதாக ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் அந்த சத்திய வாக்கை மீறினால் அமெரிக்க பொருளாதாரமும், உலகப் பொருளாதாரமும் சீர் அழியும் என்று பயமுறுத்தினர். ஆட்சிக்கு வந்த ஜனாதிபதிகளும் செய்வது அறியாது திணறினர். உண்மையில் இந்த ஜேம்ஸ்பான்ட் கதைக்கு கரு  தந்ததே இந்த நிபுணர்களின் தங்கம் பற்றி நடத்திய பைத்தியக்காரத்தனமான சர்ச்சையே ஆகும், அன்று அமெரிக்க முதலாளிகள் தங்களது செல்வத்திற்கு ஆபத்து வந்ததே என்று அலறினர். வியட்நாம் யுத்தம் வேறு அன்று ஏராளமான செலவிற்கு இட்டுச் சென்றது. யுத்தத்தை முடித்தால் மட்டும் போதாது, பிரெட்டன் வூட் ஒப்பந்தத்தை அதாவது 1 டாலருக்கு ஒரு கிராம் தங்கம் என்ற விலைக் கட்டுப்பாட்டையும், பிரெட்டன் வூட் ஒப்பந்தத்தையும் புதைக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. உண்மையில் அன்று உலக வர்த்தகம் ஒழுங்காக இயங்க தங்க ஸ்டான்டர்டை புதைக்கும் காலமாக வந்ததை அமெரிக்க, ஐரோப்பிய முதலாளிகள் பார்க்கவே பயந்தனர்.

1972ம் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த நிக்ஸன் அந்த வேலையை எதிர்ப்பிற்கிடையே செய்தார். இனி அமெரிக்க அரசு டாலருக்கு தங்கம் வழங்காது என்று அறிவித்தார். இந்த அறிவிப்பால் நிபுணர்கள், அரசியல் தலைவர்கள், பெருமுதலாளிகள் பயந்தது போல் எதுவும் நடக்கவில்லை.  ஆனால் நடந்தது வேறு.

1945ல் சர்வதேச செலவானி என்ற அந்தஸ்தை தங்கம் இழந்தது. இதன் மூலம் சர்வதேச வர்த்தகத்தில் மேலாதிக்கம் செலுத்திய பிரிட்டன் கீழே விழுந்தது. 1945ல் தங்க  ஸ்டான்டர்டு புகுந்தால் டாலரின் ஆதிக்கம் மேலோங்கியது.

1972ல் தங்கஸ்டான்டர்டு ஒழிந்ததோடு டாலரின் மேலாதிக்கமும் ஒழிந்தது. அதனோடு போட்டியிட பிரிட்டன், ஐரோப்பிய, ஜப்பான் நாணயங்கள் சர்வதேச அந்தஸ்ததை பெற்றன.உலகப் பொருளாதார ஆக்கத்தில் இது முடிவல்ல. சர்வதேச பொருளாதாரத்தின் அடிப்படையாக இருக்கும் உலக சந்தையில் நாணயங்கள் மட்டுமல்ல. எல்லா சரக்குகளும், அதனதன் உழைப்புத் திறன் மதிப்புக் கேற்ப பரிவர்த்தனை ஆகும் வரை முரண்பாடுகள் தோன்றி அசமத்துவத்தை போக்கும் சண்டையாக மாறும். இது பொருளாதார விதி இதனை யாராலும் மீற முடியாது.

மார்க்சிய பொருளாதார நிபுணர்களே உலகப் பொருளா தாரத்தைப் பற்றி சரியான பார்வை கொண்டவர்கள். அவர்கள் கூறுவதென்ன!

உலகப் பொருளாதாரம் என்பது ஒருவரின் விருப்பத்திற்கோ, கட்டளைக்கோ, ஒரு நாட்டின் ராணுவ பலத்திற்கோ உட்படாத ஆக்கமாகும். தொழிலாளர் வர்க்கமோ அல்லது தொழிலாளி வர்க்க கட்சியோ ஒரு நாட்டில் ஆட்சியை கைப்பற்றி விட்டால் உலகப் பொருளா தாரத்தோடு உறவு கொள்ளாமலே பொருளாதாரத்தை வளர்த்துவிடலாம் என்ற பிரமை கற்றுக்குட்டி புரட்சியாளர்களின் கற்பனையாகும். அதேபோல் உலக சந்தையில் பெருமுதலாளிகளின் நிதி  மூலதன ஆதிக்கத்தின் மூலம் ஆட்டிப்படைக்கிற முறைகளும், முரண்பாடுகளைத் தோற்றுவிக்குமே தவிர நிலை நிறுத்த இயலாது!

சோவியத் புரட்சி வெற்றி பெற்றவுடன் முதலாளித்துவ நாடுகள் அதனை தனிமைப்படுத்த முயன்றன. உலகப் பொருளாதாரத்தோடு இணைய புதிய பொருளாதார கொள்கையை வகுத்த லெனின் ஒன்றை சுட்டிக்காட்டினார்.

உலகப் பொருளாதார ஆக்கத்தோடு சோவியத் இணையாமல் சோசலிச கட்டமைப்பு சாத்தியமில்லை. இன்று என்ன விலை கொடுத்தாவது உலகப் பொருளாதாரத்தோடு இணைப்பை ஏற்படுத்தக்கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

மா-சே-துங் ஒரு நாட்டின் உள்நாட்டுப் பொருளாதாரம் ஒருகால், என்றால் அதனுடைய மற்றொரு கால் உலகப் பொருளாதாரமாகும். சீனா இந்த இரண்டு காலால் நடந்தே சோசலிசத்தை நோக்கிய பயணத்தை தொடர முடியும் என்றார்.

உலகப் பொருளாதாரத்தின் பொது அம்சமாக இன்று இருப்பது தங்கமோ, தங்க ஸ்டாக்கோ அல்ல. மாறாக நாணய மாற்றல் முறையாகும். இந்த நாணய மாற்றல் முறையைப் பயன்படுத்துவது அவசியம். இன்றைய கேள்வி நாணய மாற்றல் முறை எவ்வாறு அமைய வேண்டும் என்பதே. நாணயமாற்றலுக்கு நெறிமுறைகள் அவசியம். அதுவும் மதிப்பு பரிவர்த்தன இயல்புகளை அடிப்படை யாகக் கொண்டு  அமைய வேண்டும்.

பணப்புழக்க நெறிமுறைகள்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த அரிஸ்டாட்டில் செல்வம் சேர்க்கும் கலையைப்பற்றி குறிப்பிடுகையில் பாவம் செய்யாமல் செல்வத்தை திரட்ட முடியாது என்று நம்பினார். அவர் காலத்திய ஈவிரக்க மற்ற வட்டி முறை செல்வம் ஈட்டும் வழியாக இருந்ததால் கண் கலங்கினார். இதற்கு மாற்று இல்லையே என்று ஏங்கினார்.

இன்று மேற்கத்திய முதலாளித்து உற்பத்தி முறையும் ஈவிரக்கமற்றதாகவே உள்ளது. தாங்கள் செய்கிற பாவத்தை செல்வம் சேர்க்கும் தர்மமாக சமுதாயம் கருத வேண்டும்  என்று இந்த சுரண்டல் முறையை தூக்கி நிறுத்துபவர்கள் உபதேசிக்கிறார்கள். இந்தப் பண்பாட்டிற்கும் நமது பண்பாட்டிற்கும் வேறுபாடு உண்டு.
பணப்புழக்கம் என்றால் என்ன என்று தெரிய வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஒன்றைக் கூறினார். பொருள் ஈட்டலில் நெறிமுறைகள் தேவை என்றார்.

அருளோடும், அன்பொடும் வரா பொருள் ஆக்கம் புல்லார் புரள விடல் என்றார்.

அன்பும், அருளும் பொருள் ஈட்டலுக்கு அவசியமென்றார். அவைகள் இல்லாத இடத்தில் அயோக்கியர்களை செல்வம் சேர்க்க விட்டு விடுவதாகும் என்றார். இன்று மேற்கத்திய முதலாளித்துவ உற்பத்தி முறை நெறிமுறையற்ற செல்வம்  ஈட்டலை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் உலக அளவிலும், உள்நாட்டு அளவிலும், புதிய, புதிய எதிர்ப்புக்களை சந்திக்க வேண்டியுள்ளது.

இடதுசாரிக் கட்சிகள், பொருள் ஈட்டலுக்கும், நாணய மாற்றலுக்கும் நெறிமுறைகள் தேவை. அதன் அடிப்படையாக சமூக நலன் இருக்க வேண்டும் என்கின்றனர். இந்த நிலைபாடு நமது பண்பாட்டை உயர்த்திப் பிடிப்பதால் முதலாளித்துவ வேட்டை பொருளாதார நிபுணர்கள் இடதுசாரிகளை பழமைவாதிகள் என்று முத்திரை குத்துகின்றனர். அதனை பெருமையோடு ஒத்துக்கொள்ள இடதுசாரிகள் தயங்கமாட்டார்கள்.



%d bloggers like this: