தண்ணீர்! தண்ணீர்! எங்கும் தண்ணீர்
தாகம் தீர்க்க ஒரு துளியுமில்லை?
என்ற ஆங்கிலக் கவிதை வரிகள் எல்லோருக்கும் தெரியும். சமூக வாழ்வுக்கு மிகவும் தேவையான தண்ணீர், பெரும் நெருக்கடியில் ஓடிக்கொண்டிருக்கிறது. இஸ்மாயில் செராஜெல்டின் என்ற உலக வங்கியின் துணைத் தலைவர் சொன்னது; அடுத்த நூற்றாண்டின் யுத்தங்கள் தண்ணீருக்காக நடக்கும். அவர் சொல்லாமல் விட்டது குடிநீரை உலக வியாபாரமாக்க நாங்கள் முடிவு செய்துவிட்டதால் யுத்தங்கள் நடத்தி திணிப்போம் என்பது தான். நமது மாநிலங் களுக்கிடையே தண்ணீருக்கான அரசியல் மோதல்களை யுத்தங்கள் என்று கூற முடியாது; ஆனால், மக்களை பிளவுபடுத்தும் ஒரு இறுக்கமான சூழலை அவை தோற்றுவிக்கின்றன என்பது மட்டும் உண்மை. ஏதோ நல்ல நீர் அளவு குறைவாக இருப்பதுதான் தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு காரணம் என்று மட்டும் கூறப்படுகிற காரணங்கள் விஞ்ஞான தொழில் நுட்ப யுகத்திற்கு பொறுத்த மானதல்ல. மொத்த நீரில் சில சதவீதமே நல்ல நீர் என்றாலும், அதுவே தேவைக்கு மேல் உள்ளதாகும்.
நெருக்கடியின் தன்மை
நெருக்கடிக்கு அது காரணமல்ல. கிடைக்கும் தண்ணீர் யாரால், எப்படி, எந்த நோக்கத்திற்கு பயன்படுத்தப்படுகிறது என்பதில் தான் நெருக்கடியின் மையக்கூறு இருக்கிறது. 2025 ஆண்டில் சமூகம் பயன்படுத்தும் நீரின் தேவை 56 சதம் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. இதை எப்படி எதிர் கொள்வது? பன்னாட்டு நிறுவனங்களும், அதன் நிர்பந்தத்திற்கு உட்படும் அரசுகளும், உலக வங்கியும் கொடுக்கும் ஆலோசனை இது தான்; நீரை வணிகப் பொருளாக மாற்று. தேவைப்படும் இடத்திற்கு அந்த நோக்கத்தோடு கொண்டு சென்று வணிகம் செய், மக்களின் தாகம் தனியாருக்கு லாபமாகட்டும்! மெக்ஸிகாவின் குடிமகன் ஒருவன் சொன்னான்; தண்ணீர் லாபம் தேடி பள்ளத்திலிருந்து மலையினை நோக்கி ஓடுகிறது. இந்த லாப வேட்டை தண்ணீர் ஓட்டத்தைத் திருப்பி விடுதலிலும், நீர் வளத்தை முழுமையாக உறிஞ்சி விடுவதிலும் முடிந்து விடுகிறது. ஆனால், மேலும் மேலும் அதிகரித்து வரும் தண்ணீரின் தேவை உணவு உற்பத்திக்கான (அல்லது உணவு பாதுகாப்பிற்கான) தண்ணீர் தேவையினை முன்வைக்கிறது; தொழில் துறைக்கான தேவையினையும், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பினையும் அது உத்திரவாதப்படுத்த வேண்டும். நீர் நெருக்கடி வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் விரவிக்கிடக்கிறது. தண்ணீர் பற்றிய கொள்கையினை உருவாக்குபவர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். இது மக்களின் எதிர்பார்ப்பு, ஆனால் நடைமுறையில்..?
கோடிக்கணக்கான டாலர் புரளும் சந்தைக்குள் தண்ணீர் நுழைக்கப்பட்டிருக்கிறது. தனியார் மய மாக்கப்பட்ட தண்ணீர் சந்தையில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இரண்டு பன்னாட்டு நிறுவனங்கள் – விவெண்டி மற்றும் சூயஸ் – ஆதிக்கம் செலுத்து கின்றன. மாவ்தே பார்லோ தன்னுடைய நீலத்தங்கம் என்ற புத்தகத்தில் உலக வங்கியின் அறிக்கையின் படி, 1998 ல் ரூ.36 லட்சம் கோடியில் (800 பில்லியன் டாலர்) இருந்த தண்ணீர் வணிகம், 2001 ல் ரூ.45 லட்சம் கோடியாக உயர்ந்தது (1 டிரில்லியன் டாலர்) எனக் குறிப்பிட்டுள்ளார். நாட்கள் ஆக, ஆக இந்த பன்னாட்டு நிறுவனங்களின் பிடி இறுகிக் கொண்டே வருகிறது. கோடிக்கணக்கில் பணம் ஊடாடும் இந்தத் துறையினை தனியார்மயக் கொள்கையினை ஏற்றுக் கொண்ட அரசின் பொறுப்பில் இருக்கும் மந்திரிகள், அதிகாரிகள் திட்டமிடுவோர் விட்டு வைப்பார்களா? ஆகவே அத்தகைய அரசுகளின் ஆய்வு அறிக்கைகளும், அவைகளையொட்டி எடுக்கப்படும் முடிவுகளும் தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாகவே அமைந்துவிடுகின்றன.
தனியார்மய முயற்சிகள் – இந்தியாவில்
பன்னாட்டு நிறுவனங்கள் உலகம் பூராவும் தண்ணீரை லாப வட்டத்தில் கொண்டு வருவதை நம்மால் உணர மடிகிறது. மேலே குறிப்பிட்ட இரண்டு பன்னாட்டு நிறுவனங்களும், 120 நாட்களில் தண்ணீர் உற்பத்தியோடு, விநியோகத்தோடு தொடர்பு கொண்ட நிறுவனங்களை சொந்தமாகவோ அல்லது அவைகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறார்கள். உலக வங்கியும் சர்வதேச நிதி நிறுவனமும் தண்ணீர் தனியார் மயமாக்கப்பட வேண்டும் என்ற நிர்பந்தத்தைக் கொடுக்கத் தவறுவதில்லை. நம் நாட்டின் நிலைமை களைப் பார்த்தால் அது புரியும். சந்தைப் பொருளாதாரத்தை ஏற்றுக்கொண்டவுடன் எல்லாமே விற்பனைப் பொருள்களாக மாறிவிடுகின்றன. புனிதமானது என்று கருதப்படும் கல்வி, சுகாதாரம், பண்பாடு, பாரம்பரியம், இயற்கை ஆதாரங்களான காற்று, நீர் – யாவும் விற்பனைக்குத்தான். ஆனால், இந்த வணிகம் இறுகிப் போன ஏற்ற – தாழ்வினை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்தியாவில் 118 மில்லியன் குடும்பங்கள் குடிப்பதற்கு தண்ணீர் பெறும் வசதி இல்லாமல் இருக்கின்றன. மொத்த குடும்பங்களில் இந்த எண்ணிக்கை 62 சதம்; 30 கோடி இந்தியர்கள் தண்ணீரை பொதுக் குழாய் மூலம் அடி குழாய் மூலமும் பெறுகிறார்கள்.
உலக வங்கி மற்றும் ஆசிய வங்கியின் திட்டங்கள் பொதுக் குழாய்களை மூடிவிடும் பணியினைச் செய்து கொண்டிருக்கின்றன. 50 லட்சம் இந்தியக் குடும்பங்கள் குளங்கள், குட்டைகள், ஆறுகள் மற்றும் நீரூற்றுகள் மூலம் தண்ணீர் பெறுகின்றனர். இவைகள் அவர்களுக்கு தொடர்ந்து கிடைக்குமா? சட்டீஸ்கர் மாநிலத்தின் ஷியோநாத் ஆற்றின் 23.6 கிலோ மீட்டர் பகுதி 22 ஆண்டுகளுக்கு ரேடியன் தண்ணீர் என்ற தனியார் கம்பெனிக்கு தாரை வார்கக்கப்பட்டதை நாடு அறியும். அந்த நீரைப் பயன்படுத்திக் கொண்டிருந்த விவசாயிகளுக்கு நீர் இல்லை; ஆனால், இங்கு தான் எலெக்ட்ரிக் கிராபைட் என்ற தனியார் கம்பெனிக்கு ஒரு நாளைக்கு 36 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. (அந்த நிறுவனம் அரசுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்க மறுத்து வருகிறது என்று ஒரு செய்தி) ஒரிசா மாநிலத்தின் தண்ணீர் கொள்கை நீர்ப்பாசனத்தை தனியாருக்கு விடும் முடிவினைத் தெளிவு படுத்துகிறது. இருக்கும் திட்டங்கள் நஷ்டத்தைக் கொடுக்கின்றன.
ஆகவே, தனியாரிடம் விடுவதைத் தவிர வேறுவழியில்லை என்கிறது ஒரிசா மாநில அரசு. இந்த நீர்ப்பாசனத் திட்டங்களில் அரசின் முதலீடு கோடி கோடியாக கொட்டப்படுகிறது. இவைகள் தனியார் கைகளுக்குப் போனால் என்ன ஆகும்? தண்ணீர் பஞ்சாயத்துகள் மூலம் நீர் விநியோகம் இருக்கும் என்கிறது ஒரிசா அரசு. உண்மையில் அந்த தண்ணீர் பஞ்சாயத்துகள் அதிக நிலங்களை கையில் வைத்திருக்கும் நிலப்பிரபுக்களின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது. சிறு விவசாயிகளுக்கும், நிலமற்ற ஏழைகளுக்கும் இயற்கை அளித்த நீர் ஒட்டாமல் விலகிப் போகும். டில்லியில் மின்சாரமும், தண்ணீரும் தனியார் கையில் ஒப்படைக்கப்பட்டன. டில்லி தண்ணீர் வாரியம் பகுதி பகுதிகளாக தண்ணீர் சுத்தப்படுத்துதல், விநியோகம் போன்ற வேலைகளுக்கு – உடைக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு தனியார் நிறுவனத்தின் கையில் ஒப்படைக்கத் திட்டம் உருவாகியிருக்கிறது.
மின்சாரத்திற்கும், தண்ணீருக்கும் இவர்களின் அற்புதமான வேலைத் திறனை நம்பி, டில்லி நகர மக்கள் வாழ வேண்டும். மின்சாரக்கட்டணம் பலமுறை உயர்த்தப் பட்டதைப் போல, தண்ணீரின் கட்டணம் உயர்வதற்கான சூழ்நிலை எழுந்திருக்கிறது. இது சம்பந்தமாக, தனியார் நிறுவனங்களுடன் கையெழுத்திட்ட ஒப்பந்தங்கள் விலைகள் சீரமைப்பு பற்றிய பகுதிகளை உள்ளடக்கியிருக்கின்றன. புனித கங்கையைக் கூட விட்டு வைக்க வில்லை. இங்கே பன்னாட்டு சூபன் நிறுவனம் உள்ளே நுழைகிறது. ஒரு நீர்த்திட்டம் (சோனியா விஹார் தண்ணீர் சுத்திகரிப்பு ஆலை) மூலம் 635 மில்லியன் லிட்டர் குடிநீர் விற்பனையினையும் (டில்லி மக்களுக்காக) கங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்தினையும் (ரிதாலா திட்டம்) சூயஸ் நிறுவனம் கையில் ஒப்படைக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. டில்லி மக்கள் குடிநீர் தேவைக்கு சூயஸ் ஒப்பந்தம் தேவையில்லை. நீர்வள ஆதாரங்கள் நிறைய உண்டு. அதை முறையாகப் பயன்படுத்தினால் போதும் என்று பல ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டினர்.ஆனால், சூயஸின் பலத்தை – அரசுகளையும், பொறுப்பிலுள்ள மனிதர்களை அசைத்துப்போடும் அதன்பலத்தை, குறைத்து மதிப்பிட இயலாது. ஷயோநாத் திட்டமானாலும் சரி, கங்கை நீர் திட்டமானலும் சரி – தண்ணீர் தனியார் மயமாக்கப்படும் கொள்கையின் வெளிப்பாடு தான். ஆனால், இதை எதிர்த்து மக்கள் போராயிதற்குப் பிறகு அவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன என்பதும் வரலாற்று உண்மை.
மராட்டிய மாநிலத்தின் சந்திராபூர் நகரத்தின் குடிநீர் விநியோகம் குருகிருபா என்ற தனியார் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டது. கொடுத்த சில நாட்களிலேயே வீடுகளுக்கு குழாய் மூலம் வந்து கொண்டிருந்த குடிநீர் நிறுத்தப்பட்டது. சிறு குழுக்களாக சேர்ந்து ஒரு பொதுக்குழாய் மூலம் தண்ணீர் பெற்றுக்கொள்ளுங்கள் என்று ஆலோசனை கொடுக்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் அதிகாரி சொல்லுகிறார்: தண்ணீரை இல்வசமாகக் கொடுத்தால் அதன் மதிப்பை மக்கள் உணர்வதில்லை. நிறுத்தப்பட்ட விநியோகம் துவக்கப்பட சந்திராபூர் மக்கள் தனியாருக்கு தனி கட்டணம் செலுத்த வேண்டிய தேவை எழுந்தது. முறையற்ற விநியோகத்தால் அவர் களுக்கு ஒவ்வொரு நாளும் யாரிடமிருந்து இன்று தண்ணீர் கடன் வாங்குவது என்ற கேள்வியோடு விடிகிறது.
தனியார்துறையும், பொதுத்துறையும் பங்கு பெரும் முன் மாதிரியான திட்டம் என அறிவிக்கப்பட்டு துவக்கப்பட்டது தான் புதிய திருப்பூர் வளர்ச்சி கழகம் ரூ 1023 கோடி முதலீட்டில் திருப்பூரில் உள்ள 700 சாயத் தொழிற்சாலைகளுக்கும் தேவையான நீர் மற்றும் திருப்பூர் நகர மக்களுக்கும் அதைச்சுற்றி இருக்கும் 16 கிராமங்களுக்கும் குடிநீர் கொண்டுவரும் திட்டம். இது சுமார் 6 லட்சம் மக்கள் உள்ள திருப்பூர் நகரத்தை இருப்பவர்கள் – இல்லாதவர்கள் என இரு கூறாகப் பிரித்து விடுமோ என்ற அச்சம் எழுந்திருக்கிறது. பவானி ஆற்றிலிருந்து ஒரு நாளைக்கு 1850 லட்சம் லிட்டர் நீர் எடுத்து 1150 லட்சம் லிட்டர் தொழிற்சாலைகளுக்கும் மீதம் குடிநீர் விநியோகம் செய்வதற்கான திட்டம் அது. அதன் விளைவு? திருப்பூர் நகர மக்கள் ஒரு கிலோ லிட்டர் நீருக்கு 6 ரூபாய் செலுத்த வேண்டும்; அருகில் உள்ள கோவை நகரத்தில் 1 கிலோ லிட்டர் குடிநீர் ரூ.3.50 க்கு கிடைக்கிறது. ஆண்டுக்கு ஆண்டு தண்ணீரின் விலை 6.5 சதத்திலிருந்து 8 சதம் உயரும் என்றும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது உலக வங்கியும், சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க நிறுவனமும் பின்புறம் நின்று செயல் படுத்தும் திட்டம்.
தனியார் நுழைவு எப்படி பாதுகாப்பான குடிநீரை மக்களுக்கு கொண்டு வரும் என்பதற்கான நல்ல உதாரணம் இந்தத் திட்டம் என்று அமெரிக்க தூதர் டேவிட் முல்போர்ட் பாராட்டுவதி லிருந்து இத்திட்டத்தின் உள்ளார்ந்த அம்சங்கள் எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடியும். இதிலிருந்து பெறப்படும் தண்ணீ ருக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கிறது என்பது மட்டுமல்ல, பெரும் பகுதி மக்கள் இதிலிருந்து எந்த பயனும் பெறாமல் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதும் உண்டு. 36000 மக்களைக் கொண்ட தொட்டிப்பாளையம் பஞ்சாயத்தில் 15000 பேருக்குத்தான் தண்ணீர் – அதுவும் 15 நாட்களுக்கு ஒரு முறை – கிடைக்கிறது. மாநில அரசு தன்னுடைய சமூகக் கடமையிலிருந்து முற்றிலும் விலகிக் கொண்டதால், புதிய திட்டங்கள் எதுவும் உருவாக்கப்படவில்லை. இத்திட்டங்களிலிருந்து அதிகம் எதுவும் எதிர்பார்க்க வேண்டாம், ஏனெனில் இத ஒரு வணிக நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது என சில அதிகாரிகள் கருத்து வெளியிட்டிருகின்றனர். சாயத் தொழிற் சாலை நிர்வாகங்கள் 1 கிலோ லிட்டருக்கு ரூ.45 என ஒப்புக் கொண்டதை கொடுக்க மறுத்ததால் அது ரூ.37 என்று குறைக்கப் பட்டிருக்கிறது. கொடுக்க முடியாதவர்கள் கொடுக்க வேண்டிய நிர்பந்தம், கொடுக்க முடிந்தவர்கள் எடுத்துக் கொள்ளும் சலுகை. எவ்வளவு சுகமான தண்ணீர் வணிகம்!
தண்ணீர் வணிகம் – பாட்டில் மூலம்
தாமிர பரணி ஆற்று நீரும், பெரியார் ஆற்று நீரும் கோகோ கோலா வின் வெறித்தனமான உறிஞ்சலுக்கு உள்ளாகியிருப்பது நமக்குத் தெரியும். 1 லிட்டர் கோக் தயாரிக்க 5 லிட்டர் பயன்படுத்த இந்த பன்னாட்டு நிறுவனத்திற்கு அனுமதி உண்டு. ஆனால், அந்தப் பகுதி மக்களின் குடிநீர் மற்றும் பாசன தேவைகளைப் பற்றி அந்த அனுமதி கொடுத்த அரசுக்கு அக்கறை இல்லை; எந்த வகையான புதிய திட்டங்களும் இல்லை. மாறாக, கோக் மட்டுமல்ல பாட்டில் தண்ணீர் தயாரிக்கவும் கோகோ – கோலா மற்றும் பெப்சி நிறுவனங்களுக்கு அனுமதி உண்டு. இந்திய மென்பானச்சந்தையில் கிட்டத்தட்ட 90 சதம் இவர்கள் கையில் உள்ளது. இப்பொழுது தண்ணீர் வணிகத்திலும் உள்ளே நுழைந்திருக்கிறார்கள். கோகோ – கோலாவின் கின்லே யும், பெப்சியின் ஆக்வோஃபினாவும் இந்த தண்ணீர் சந்தையில் வேகமாக ஓடி வருவதை நாம் உணர்கிறோம். மனிதரின் குடி தண்ணீர் தேவைபாட்டில் கொள்ளைக்கு இட்டுச் செல்கிறது.
கின்லே பாட்டில் தண்ணீர் வணிகத்தில் 25 சதம் சந்தையினையும், அக்வாஃபினா 10 சதம் சந்தையினையும் தங்கள் கையில் வைத்திருக்கிறார்கள். அறிவியல் – சுற்றுச் சூழல் மையம் நடத்திய ஆய்வில், ரூ.2.85 செலவில் (அனைத்து செலவுகளையும் உள்ளடக்கி) தயாரிக்கப்படும் தண்ணீர் பாட்டில் ரூ.10 க்கு விற்க்கப்படுகிறது. அவர்கள் லாபம் பற்றி வேறு விளக்கம் தேவையில்லை. இந்த வணிகம் இந்தியாவில் ரூ.1000 கோடியினைத் தாண்டுகிறது. பாட்டில் தண்ணீர் விற்பனையில் இந்தியா 10 வது இடத்தில் இருக்கிறது. ஆண்டுக்கு சராசரியாக 25 சதம் உயர்வினை இது பதிவு செய்கிறது.
உலகிலேயே மிகவும் அதிகமான வளர்ச்சி விகிதம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். நாடு பூராவும் தண்ணீரை பாட்டிலில் அடைக்கும் 1200 தொழிற்சாலைகளில் 600 தமிழ்நாட்டில் உள்ளது என்பது மகிழ்ச்சி யான செய்தியா? இயற்கை பொய்த்து நீர் வற்றிப் போய் அடிக்கடி வறட்சியின் பிடியில் மக்கள் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டில் தண்ணீர் உறிஞ்சப்படுவது கன ஜோராக நடக்கிறது. அரசியல் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர்களுக்கும், இந்த லாப வெறி நிறுவனங்களுக்கும் உள்ள உறவு வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. நிலம் உடைமையாளனுக்கு நிலத்தடி நீர் சொந்தம் என்பது பொதுவான சட்ட விதி; ஒரு ஏக்கர் நிலம் வைத்திருப்பவன் அதன் கீழ் உள்ளநீரை மட்டுமல்ல அதையொட்டி இருக்கும் அனைத்து நிலத்தடி நீரையும் உறிஞ்ச முடியும். இப்போது இருக்கும் சட்டம் அதைத் தடுக்க முடியாது. இதைத்தான் பன்னாட்டு நிறுவனங்கள் செய்கின்றன. நிலத்தடி நீரை நம்பி வாழும் மக்கள் சமூகத்தோடு அவர்கள் மோதுகிறார்கள். ஆனால் சட்டம் இந்த பணம் கொழிக்கும் தண்ணீர் சுரண்டலை அனுமதிக்கிறது.
அழியும் சுற்றுப்புறம்
இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள், தொழில் வளர்ச்சியினையும், புதிய தொழில் நுட்பங்களையும் பயன்படுத்தும் போது நீர் உட்பட இயற்கைச் செல்வங்களை பாதுகாப்பது என்பதற்கு முன்னுரிமை கொடுப்பதில்லை. அந்த நாடுகளின் பொருளாதார அமைப்புகளை கடனை அடைக்க ஏற்றுமதி வணிகத்தை பெருக்கும் நோக்கம் கொண்டதாக மாற்றிவிடுகின்றனர். இது உயிரின வாழ்க்கை மற்றும் சுற்றுப்புற சூழலை கடுமையாகப் பாதிக்கும் நிலையினை உருவாக்குகிறது. கடலோரப்பகுதிகளில் இறால் மீன் உற்பத்திப் பண்ணைகளை தனியார் நிறுவனங்கள் அமைத்த போது, அந்தப் பகுதி மக்களின் வாழ்க்கையினை அது எவ்வாறு மோசமாக்கியது என்பதை நமது அனுபவத்தில் நாம் பார்த்தோம். ஆறுகளை திசை மாற்றிவிடுவதும், தொழிற்சாலைகளின் கழிவுப்பொருட்களை ஆறு குளங்களில் தள்ளிவிடுவதும், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்ற பொருட்கள் கழிவாக தள்ளப்படுவதும் சுற்றுப்புறத்தையும் நீர் ஆதாரங்களையும் மிகவும் பாதிக்கிறது.
தொடரும் சதிகள்
தண்ணீரை வணிகப் பொருளாக நிலை நிறுத்தப் பல்வேறு அமைப்புகள் உண்டு. உலக நீர் மன்றம் (றுடிசடன றுயவநச குடிசரஅ) என்ற அமைப்பின் கூட்டம் மெக்ஸிகோவில் நடந்தது. கோகோ – கோலா அதன் முக்கிய அமைப்பாளர். சூயஸ், விவென்டி மற்றும் பிரிட்டனின் தேம்ஸ் வாட்டர் போன்ற நிறுவனங்கள் அதன் உறுப்பினர்கள். அது தண்ணீருக்கான உயர் அதிகாரக்குழு என்று குறிப்பிடப்படுகிறது. அந்த அமைப்பு தண்ணீர் என்பது மனித உரிமை என்று அதன் பிரகடனத்தில் ஏற்றுக்கொள்ளவில்லை. கியுபா, வெனிசுலா, பொலிவியா மற்றும் உருகுவே நாடுகளின் மாற்றுப் பிரகடனம் தான் அதை ஏற்றுக் கொண்டது. அந்த அமைப்பு மக்கள் சமூகத்திற்கு தேவையான எந்தப் பொறுப்பினையும் ஏற்றுக்கொள்ள வில்லை.
ஆனால், தண்ணீர் பயன்பாட்டை லாபம் கொழிக்கும் தொழிலாக மாற்றிக் கொண்டிருக்கும் நிறுவனங்களின் நலன்ளை பாதகாத்து அதற்கான கருத்திசைவினை உருவாக்கும் பணியினை செய்யும் அமைப்பு அது. அது தண்ணீர் தனியார் மயமாக்கப்பட செயல் திட்டங்களை வழங்கும். உலக வங்கியும், சர்வதேச நிதி நிறுவனமும் இதன் பின்னணியில் செயல்படும் சூத்திரதாரிகள். தண்ணீர் ஏற்றுமதி அந்த செயல்திட்டத்தின் பகுதி. பிரிட்டனின் தண்ணீர் நெருக் கடியினை தீர்க்க ஸ்காட்லாந்திலிருந்து லாரிகள் மூலமாகவும், குழாய் கள் மூலமாகவும் தண்ணீர் இறக்குமதி செய்யப்படுகிறது. இது பிரிட்டன் – ஸ்காட்லாந்து தண்ணீர் வணிகர்களின் கூட்டு முயற்சியாக உள்ளது. ஸ்காட்லாந்தின் தண்ணீர் சேவை பொதுத்துறை கட்டுப் பாட்டில் உள்ளது என்பதும், பிரிட்டனில் அது தனியாரிடம் உள்ளது என்பதும், இந்த வணிகத்தை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. நமது திருப்பூரில் உள்ளது போல் பொதுத்துறை – தனியார் துறை இணைந்த செயல்பாடு இதுதான். தனியார் லாபத்தை உத்திரவாதம் செய்யும் செயல்பாடு தண்ணீர் சந்தை விதிகளின் படி தீர்மானிக்கப்பட வேண்டிய ஒரு விற்பனைப் பொருள். அதிகம் கொடுப்பவன் அதிகம் பெறுவான்; கொடுக்க இயலாதவன் எதனையும் பெறுவதில்லை. தண்ணீர் தொடர்ந்து கிடைக்கும் பண்டம் என்ற நிலையிலிருந்து வன்முறையால் பெரும் அத்தியாவசிய தேவை என்ற நிலைக்கு மாறிக் கொண்டிருக்கிறது என தண்ணீர் ஏற்றுமதி செய்யும் குளோபல் வாட்டர் கார்ப்பரேசன் (World Water Forum) என்ற கனடாவைச் சார்ந்த நிறுவனம் அறிவித்திருப்பதை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
தண்ணீருக்கான மோதல்
இந்த நெருக்கடியின் தீவிரத்தை பல உலக நாடுகளின் அரசுகள் உணரவில்லை. ஐ.நா. சபையின் மனித உரிமைப் பிரகடனத்தில் இதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. மதம், தத்துவம் போல தண்ணீர் மக்களை இயங்க வைக்கும் சக்தி கொண்டது என்று சொல்வதுண்டு. குடிக்க, சமைக்க, தொழில் செய்ய, சக்தி உருவாக்க, என அனைத்து வகையான இயக்கங்களுக்கும் தேவையானது. இந்தியா சந்தித்துக் கொண்டிருக்கும் நதிநீர் பிரச்சனைகள், அதைத்தான் சுட்டிக்காட்டுகின்றன.
காவிரி நீர் பிரச்சனை, நர்மதா அணை, அலமாட்டி அணை, முல்லைப் பெரியார் அணை, கபினி நீர் பிரச்சனை, கிருஷ்ணா – கோதாவரி நீர்ப்பங்கீடு, ரவி- பியாஸ் நீர்ப்பங்கீடு, அண்டை நாடுகளோடு கோசி நீர்த்தேக்கம் (நேபாளம்), ஃபராக்கோ நீர்த்தேக்கம் (பங்காளதேஷ்) சிந்து நதி நீர்ப்பங்கீடு (பாகிஸ்தான்) என தண்ணீர் சம்பந்தப்பட்ட இயக்கங்கள், போராட்டங்கள் என்ற நீண்ட பட்டியல் போட முடியும்.
மக்களை பிளவு படுத்தும் இந்தப் போக்குகள் களையப்பட்டு ஒன்றுபட வைக்கும் தெளிவான தண்ணீர் கொள்கையினை நமது அரசு உருவாக்கவில்லை. சமூகக் கடமைகளிலிருந்து விலக்கிக் கொள்ளும் போக்கு தனியார் மயத்திற்கு ஊக்கம் கொடுப்பது மட்டுமல்ல, தண்ணீருக்கான அரசு முதலீட்டையும் குறைக்கிறது. வேளாண் துறையில் நீர்ப்பாசன திட்டங்களுக்கான அரசு முதலீடு இல்லையென்கிற பொழுது கட்டுப்பாடற்ற வகையில் ஆழ்துளை கிணறுகள் மூலம் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு ஆட்சி செய்த காலத்தில் இது நடந்தது; நல கொண்டா மாவட்டம் முசாம்பள்ளி கிராமத்தில் மனிதர்களைக் காட்டிலும் ஆழ்துளை கிணறுகள் அதிகமாக இருந்தது. பணவசதி படைத் தவர்கள் ஆழமாக எண்ணிக்கையில் கிணறுகள் தோண்ட முடியும். ஏழை மற்றும் நடுத்தர விவசாயி கிணறு தோண்டினாலும் தண்ணீர் கிடைப்பதில்லை; ஏனெனில் இது முன்பே ஆழமாகச் சுரண்டப் பட்டுவிட்டது.
கோகோ கோலா நுழைந்த பிறகு இராஜஸ்தானின் கலாதேரா பகுதியில் பத்தடி ஆழத்தில் கிடைத்துக் கொண்டிருந்த நிலத்தடி நீர் 72 அடி ஆழத்தில் கூட கிடைக்காத சூழ்நிலை வந்தது. அரசின் கட்டுப்பாடு ஏதுமில்லை. பத்திரிக்கையாளர் சாய்நாத் குறிப்பிடுவதைப்போல தண்ணீர் தட்டுப்பாடு தண்ணீர் விற்கும் பிரபுக்களை உருவாக்கியிருக்கிறது. ஆறுகளை தேச உடைமையாக்கி தண்ணீரை தனியார் மயமாக்கும் முதல் நாடாக இந்தியா இருக்கக் கூடும் என்கிறார் சாய்நாத். நதிகள் இணைப்புத் திட்டம் தேச உடைமையினை உறுதி செய்யக்கூடும்; அனால், சட்டீஸ்கர் ஷியோநாத் விற்பனை தண்ணீர் தனியார் மயமாவதை உறுதி செய்கிறது என்கிறார்.
போராட்டங்கள் – மாற்றுவழி முறைகள்
தண்ணிர் தனியார் மயமாக்கப்படும் போக்கினை எதிர்த்து உலகம் பூராவும் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. மாற்று செயல் திட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பொலிவியா நாட்டின் கோச்சபம்பா நகர மக்கள் அமெரிக்காவின் பெக்டெல் நிறுவனத்தின் தண்ணீர் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார்கள்; மக்கள் பிரதிநிதிகளும், தொழிற்சங்க பிரதிநிதிகளும் அடங்கிய கூட்டு நிர்வாகம் தண்ணீர் விநியோகத்தை மேற்கொண்டது. கானா நாட்டின் சவேலேகு பகுதியில் தேசிய தண்ணீர் பயன்பாட்டு அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு, அது தண்ணீரின் விலை, விநியோகம், தண்ணீர் குழாய்களை பராமரித்தல் போன்ற அனைத்து வேலை களையும் மேற்கொண்டதால் பாதுகாப்பான குடிநீர் 74 சதம் குடும்பங்களுக்கு (2002ல்) உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது 1988ல் 9 சதம் என்பதாக இருந்தது. சின்னஞ்சிறு உருகுவே நாடு அந்நாட்டின் அரசியல் சட்டத்தைத் திருத்தி தண்ணீரில் தனியார்மயம் என்பதை முடிவுக்கு கொண்டு வந்தது; அதையொட்டி மக்களிடம் நடந்த வாக்கெடுப்பில் மூன்றில் இரண்டு பங்கு வாக்காளர்கள் தனியார்மயம் தேவையில்லை என வாக்களித்தனர். பங்காளதேஷ் தலைநகரமான டாக்கா நகரில் தண்ணீர் தனியார்மயத்தை எதிர்த்து போராடிய தொழிற்சங்கம் நகரின் ஒரு பகுதியில் குடிநீர் மற்றும் வடிகால் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டது. ஓராண்டில் அதன் செயல் பாட்டினை ஆய்வு செய்த டாக்கா குடிநீர் மற்றும் வடிகால் நிறுவனம் மற்ற பகுதியில் அதே பணினை செய்து கொண்டிருந்து தனியார் நிறுவனத்திடமிருந்து அதை எடுத்து தொழிற்சங்க அமைப்புக்கு கொடுக்கப்பட்டது.
பொலிவியாவின் சாண்டா குருஷ் நகரத்தில் தண்ணீர் பயன் பெறுவோர் கூட்டுறவு அமைப்புகள் தண்ணீர் வழங்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தன. பொதுத்துறை – தனியார் துறை கூட்டு செயல்பாட்டின் அவசியம் பற்றி பேசும் அமெரிக்க தூதர் அமெரிக்காவில் என்ன நடக்கிறது என்பதைப்பற்றி கூறுவதில்லை. பப்ளிக் சிட்டிசன் என்ற ஏடு எழுதுகிறது – குழாய்கள் மூலம் விநியோகத்திற்கு வருத் தண்ணீரில் 85 சதம் அரசுக்குச் சொந்தமான அரசே செயல்படுத்தும் குழாய் அமைப்பு மூலமாகத்தான் நடைபெறுகிறது. த கார்டியன் பத்திரிக்கையில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் தங்களால் இனி எந்தப் பணியினையும் மேற்கொள்ள இயலாது என சூயஸ் கம்பெனி அதிகாரிகள் சொன்னதாக எழுதப்பட்டிருக்கிறது; அதன் சொந்தநாடான பிரான்சின் கிரே நோபிள் நகரத்திலிருந்து அது வெளியேற்றப்பட்டதும் அதனிடமிருந்து லஞ்சம் பெற்ற அந்த நகரத் தலைவரும் ஒரு அதிகாரியும் சிறையில் அடைக்கப்பட்டனர் என்ற செய்தியும் அதிகமாக சொல்லப்படாத ஒன்று.
நமது நாட்டின் ராஜஸ்தான் மாநிலத்தில் சமூக கட்டுப்பாட்டில் உள்ள பாரம்பரிய தண்ணீர் சேகரிக்கும் முறைகள் தண்ணீர் தேவையினை பூர்த்தி செய்கின்றன. இப்படி பல்வேறு மாற்றுத் திட்டங்கள் மக்கள் நடத்தும் போராட்டங்கள்வழி பிறக்கின்றன. இந்தியாவிலும் தண்ணீருக்கான நீரைபாதுகாக்க வேண்டி பல போராட்டங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. கேரளத்தின் பிளாச்சி மாடாவிலும் தமிழகத்தின் சிவகங்கையிலும் கங்கை கொண்டானிலும், ராஜஸ்தான் கலா தேராவிலும், மகாராஷ்டிராவின் தானேயிலும், உத்திரப்பிரதேசத்தின் மெடிகஞ்சிலும், கோகோ – கோலாவின் தண்ணீர் சுரண்டலை எதிர்த்து நடத்திய போராட்டங்கள், மக்களின் விழிப்புணர்வை வெளிப்படுத்தும் நிகழ்வுகளாகும்.
என்ன செய்ய வேண்டும்?
தண்ணீர் சம்பந்தமான அரசின் கொள்கை வெறும்குடிநீர் அளிப்ப தோடு மட்டும் தொடர்புடையது அல்ல. உணவு பாதுகாப்பு, மக்களின் உடல் நலன், சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு என்பதோடும் தொடர் புடையதாகும். ஆகவே, அதை விற்பனைப் பொருளாக எப்பொழுதும் மாற்ற முடியாது. ஆகவே, அதை மாவ்தே பார்லோ சில கருத்துக்களை தன்னுடைய நீலத்தங்கம் புத்தகத்தில் முன்வைக்கிறார்.
- தண்ணீர் இந்த பூவுலகு மற்றும் அதன் ஜீவராசிகளின் உடைமை.
- அது எங்கே எப்படி இயற்கையோடு இணைந்து இருக்கிறதோ அதை புரிந்து கொண்டு பாதுகாக்க வேண்டும்.
- அதனை எக்காலத்திலும் சேமித்து பாதுகாக்கவும் வேண்டும்.
- அதனை எக்காலத்திலும் பயன்படுத்தப்பட வேண்டும்.
- மாசுபட்ட நீர் சுத்திகரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட வேண்டும்.
- இயற்கையான ஆற்றுப் பள்ளத்தாக்கு பிரிவுகளில் தண்ணீர் பாதுகாப்பு சிறப்பானதாக இருக்க வேண்டும்.
- நீர் எப்படி மக்களின் நம்பிக்கைக்குரிய பொது சொத்து அரசு இதை பாதுகாக்க வேண்டும்.
- போதுமான சுத்தமான தண்ணீர் அடிப்படை மனித உரிமை.
- உள்ளூர் சமூகங்களும், மனிதர்களும் தான் தண்ணீரை நிர்வகிக்கும் திறன் கொண்டவர்கள்.
- தண்ணீரை பாதுகாக்க மக்கள் அரசாங்கங்களோடு சம அளவில் நின்று பணியாற்ற வேண்டும்.
- பொருளாதார உலகமயம் தண்ணீரை பாதுகாக்கும் தன்மை கொண்டதல்ல.
தண்ணீரில் நாம் காணும் நெருக்கடி உலகளவிலான தனியார்மய சூழலாகும். இது மக்களின் அடிப்படை உரிமையாக நீரை கருத வேண்டும் என்ற கோட்பாட்டிற்கும் தண்ணீரை வைத்து சுரண்டும் உரிமை வழங்கினால் தான் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த இயலும் என்ற கோட்பாட்டிற்கும் நடக்கிற போராட்டமாகும். சமீபத்தில் மெக்ஸிகோவில் கூடிய உலக நாடுகளின் தண்ணீர் பற்றிய மாநாட்டில், பெரும்பாலான அரசுகள் குடிநீரை, அடிப்படை உரிமையாகக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று கருத்தை முன்வைத்துள்ளன.
தண்ணீரை தனியார் மயமாக்கும் நாடுகளில் அரசுகளை எதிர்த்து வீரம் செறிந்த போராட்டத்தை மக்கள் நடத்துவர் என்பதில் எள் அளவும் சந்தேகமில்லை!
நூல் ஆதாரங்கள்
- Blue Gold – Maude Barlow
- Frontline Essays _ April 21,2006
- தமிழ்நாடு அறிவியல் இயக்க வெளியீடு – தனியார்மயமாகும் தண்ணீர்