(பேராசிரியர் கே.என்.பணிக்கரோடு நடைபெற்ற ஒரு கலந்துரையாடலின் போது, அவர் வெளியிட்ட கருத்துக்கள் அடிப்படையில் கீழ்க்கண்ட கட்டுரை எழுதப்பட்டுள்ளது.)
சமீப ஆண்டுகளில், அரசியலில் இரண்டு அனுபவங்களை நாடு பெற்றுள்ளது.
- தற்போது அரசியலில், இடதுசாரிகள் முக்கிய பாத்திரம் வகிக்க, இடதும் அல்லாத, வலதும் அல்லாத அரசியல் சக்திகள் அதிகாரத்தில் இருக்கும் நிலை உள்ளது.
- இதற்கு முன்பு, முழுக்க முழுக்க வலதுசாரி பிற்போக்கு சக்திகள் ஆட்சியதிகாரத்தில் இருந்த நிலை.
இன்று அதிகாரத்தில் இருக்கும் சக்திகள் நாட்டை உலக மூலதனத்தின் ஆதிக்கத்திற்குக் கொண்டு செல்ல முயல்கின்றன. அவ்வப்போது இடதுசாரிகளின் தலையீடு அவர்களது வேகத்தைத் தடுத்தாலும், அவர்களது கொள்கைகள் மாறவில்லை. புதிய தாரளமயம் எனும் பாதையே இன்று ஆட்சியாளர் செல்லும் பாதை.
இதற்கு முந்தைய ஆட்சியாளர்கள் இதே புதிய தாராளமயத்தை கொள்கையாகக் கொண்டு வகுப்புவாதப் பாதையில் நடைபோட்டனர். ஆக இரண்டு அனுபவங்கள் இரண்டு பாதைகளை மக்களின் முன் நிறுத்தியுள்ளன. ஒன்று புதிய தாராளமயம், மற்றொன்று வகுப்பு வாதம்.
தேச அரசியலில் இரண்டு அனுபவங்கள்
ஆளுகிற வர்க்கங்கள் இந்த இரண்டு வழிகளில் ஒன்றைத்தான் இந்திய மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்; இதைவிட்டால் வேறு மாற்று இல்லை என்ற கருத்தையும், அப்படிப்பட்ட ஒரு நிலையையும் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
இந்த இரண்டு வழிகளும், நாட்டின் அடித்தட்டு உழைப்பாளி வர்க்கங்களுக்கு ஏற்றவை அல்ல. இன்றைய சுரண்டல் அடிமைத் தனத்திலிருந்து மக்கள் விடுதலை பெறுவதற்கு ஏற்றவையாக இந்த இரண்டு தீர்வுகளும் இருந்திட முடியாது.
வகுப்புவாதம் அதிகாரத்தில் இருக்கும் போது, மக்கள் அதன் தீமையை ஓரளவு உணரத் தொடங்கினர். தற்போது அந்த சக்திகள் அதிகாரத்தில் இல்லை என்றாலும், நாடு முழுவதும் தங்களது வகுப்புவாத செயல்பாடுகளை அவர்கள் சுறுசுறுப்பாகச் செய்து வருகின்றனர்.
இன்று அதிகாரத்தில் இருப்போர் புதிய தாராளமயப் பாதையில் சென்று, தவறுகள் பல இழைத்து, மக்கள் நம்பிக்கையை இழக்கிற போது, இதோ நாங்கள் இருக்கிறோம் மாற்று என்று அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற ஓடி வந்துவிடும் நிலையில் இன்னமும் வகுப்புவாதிகள் உள்ளனர்.
எனவே, இந்திய மக்கள் முன்னால், மேற்கண்ட இரண்டு சக்திகளில் ஒன்றைத்தான் தேர்ந்தெடுத்தாக வேண்டும் என்ற நிலையை எப்படி மாற்றுவது, வங்கம், கேரளம், திரிபுரா மாநிலங்களில் இடதுசாரிகளே உறுதியான மாற்று என்ற புரிதல் உருவானதுபோல், நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு இந்தப் புரிதலை ஏற்படுத்துவது எவ்வாறு?
இந்தக் கேள்விகளை எழுப்பி, சரியான விடைகாண வேண்டிய கடமை இடதுசாரி சக்திகளுக்கு உண்டு. இன்றைய காலகட்டம் இதே கேள்விகளுக்கான சரியான விடைகண்டு, சரியான பாதையில் நடைபோடுவதற்கான வாய்ப்பான கால கட்டம். இதனை தவறவிடக் கூடாது. வரலாறு பல சமயங்களில் ஒருமுறை அளித்த வாய்ப்பினை மறுமுறை அளிப்பதில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
இடதுசாரி அரசியலும், உழைப்பாளி வர்க்கங்களும்
இடதுசாரிகளின் பொருளாதார, அரசியல், பண்பாட்டு மாற்றுக் கொள்கைகளும், சித்தாந்தங்களும் சமூகத்தில் யாருடைய நலனுக்கானவை? நிச்சயமாக உழைப்பாளி மக்களின் நலன்களை பாதுகாப்பவையே இடதுசாரி சித்தாந்தங்கள். இடதுசாரி சிந்தனை வேர் பரப்பும் வாய்ப்புள்ள பகுதி உழைப்பாளி மக்களே. ஆனால், இங்கு எழும் முரண்பாடு என்னவென்றால், எந்த வர்க்கங்கள் இடதுசாரிகளுக்கு பக்கபலமாக இருக்க வேண்டுமோ, அந்த வர்க்கங்களின் ஒரு சிறு பகுதிதான் தற்போது இடதுசாரி செல்வாக்கின் கீழ் உள்ளனர். பெரும்பகுதி இடதுசாரி இயக்கங்களோடு நெருங்கிட வில்லை.
இம் முரண்பாட்டை தீர்க்க வேண்டுமெனில் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு நாம் விடை காண வேண்டும். இன்று உழைப்பாளி மக்களின் அன்றாட வாழ்க்கை எப்படி இருக்கிறது? அவர்கள் தங்களது பெரும்பகுதி நேரத்தை, தொழில் தளத்திலும், குடியிருப்பிலும் செலவிடுகிற நிலையில், எத்தகைய சிந்தனைகளுக்கு ஆட்படுகின்றனர்? அவர்களின் சிந்தனையில் இடதுசாரி கருத்துக்களோ, இடதுசாரி இயக்கங்களோ எத்தனை மணி நேரம் உறவு கொள்ளும் நிலை உள்ளது?
ஒரு உழைப்பாளி தனது வாழ்க்கைப் போராட்டத்திற்கு செலவிடுகிற நேரம் தவிர இதர நேரங்களில் பெரும்பகுதி முதலாளித்துவ ஊடகங்களோடு உறவாடும் நிலை உள்ளது. எப்போதாவது, தனது தொழில் தளத்தில் அல்லது குடியிருப்புப் பகுதியில் நடைபெறும் இடதுசாரி இயக்க நிகழ்ச்சிகளில் வெறும் பார்வையாளனாக பார்க்கிற வாய்ப்பும் கிடைப்பதுண்டு. இதுவும் இடதுசாரி இயக்கங்களின் சுருங்கிய தளம் காரணமாக, ஒரு குறைவான பகுதி உழைப்பாளிகளுக்குத் தான் இந்த அனுபவம் கிடைக்கிறது.
எனவே, பெரும்பகுதி உழைப்பாளிகளிடையே இடதுசாரி சித்தாந்தங்கள் பதிந்து, அவர்களது மனதில் இடதுசாரி அரசியல் உணர்வை ஏற்படுத்தும் பணியை எப்படிச் செய்வது? என்ற கேள்விக்கு விடை காண வேண்டும். இதில் மற்றொரு பிரச்சனையும் எதிர்ப்படுகிறது.
உழைப்பாளிகளை முடமாக்கும் பொதுபுத்தி
பெரும்பாலான உழைப்பாளி மக்கள் கிராம்ஷி குறிப்பிட்ட பொது புத்தி (Common Sense) கொண்டவர்களாக உள்ளனர். அதாவது, ஒரு கருத்தை பெரிய ஊடகங்கள் விரிவாக பரப்புகிறபோது, விமர்சனப்பூர்வமாக பார்க்காமல் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுகிற நிலையில் தான் உழைப்பாளி மக்கள் உள்ளனர்.
உதாரணத்திற்கு, பங்கு வர்த்தகத்தில் குறியீட்டெண் குறைந்தால், நாட்டுப் பொருளாதாரமே வீழ்ச்சியடைந்து விட்டது போன்ற தோற்றத்தை பத்திரிக்கைகள் ஏற்படுத்துகிற போது, அதை அப்படியே சிந்தனையில் போட்டு வைத்துக் கொள்கிற பலரை நாம் காண்கிறோம். இது போன்று விமர்சனப்பூர்வமற்ற வகையில் ஏராளமான கருத்துகள், சினிமா, டி.வி. சீரியல்கள், டி.வி. விவாதங்கள், கலை நிகழ்ச்சிகள் என்ற பல வடிவங்களில் பரவலாக உழைப்பாளி மக்களிடம் கொண்டு செல்லப்படுகின்றன. இதன் மூலம் உழைப்பாளிகளின் சிந்தனையை ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவாக, அவர்களது அதிகாரத்தினை நியாயப்படுத்தும் வகையிலும் மாற்றி அமைத்து விடுகின்றனர்.
இந்நிலையில், இக்கருத்துக்களை கேள்விக்குள்ளாக்கி, விமர்சன ரீதியாக அணுகும் தன்மையை உழைப்பாளி மக்களிடம் ஏற்படுத்தும் பணியை யாரால் செய்ய முடியும்? இதனை இடதுசாரிகள் மட்டுமே செய்ய இயலும். இதனைச் செய்ய வேண்டுமானால், உழைப்பாளி மக்களோடு அன்றாடம் உறவு கொள்ள, அவர்களோடு அன்றாடம் உரையாடிடும் சூழலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இடதுசாரிகளுக்கு உள்ளது.
இந்தச் சூழல் எங்கு உள்ளது? உழைப்பாளி மக்களின் வாழும் இடங்கள் தான். தெரு, கிராமம் என்ற வகையில் அவர்கள் வசிக்கும் இடங்களில், அவர்கள் சமூகமாக இயங்குகிற அந்தத் தளம் தான் பொருத்தமானது. இதையே உள்ளூர் சமூகம் என்கிறோம்.
உள்ளூர் சமூகமே, செயல்படு தளம்
உள்ளூர் சமூக அளவில் அன்றாடம் உழைப்பாளி மக்களோடு உரையாடுவதும் தான், அவர்கள் சிந்தனையை மாற்றுவதற்கான சரியான வழிமுறையாக அமையும். இதுவும், தொடர்ச்சியாக பல காலம் செய்திட வேண்டிய பணி. ஒரு நாள் பிரச்சாரம், ஏதாவது ஒருநாள் அந்த மக்களோடு உறவாடுவது எல்லாம் நிரந்தரத் தாக்கத்தை ஏற்படுத்தாது. சிந்தனை மாற்றம் எனும் மிகப் பெரிய பணி ஒரு நாள், ஒரு முறை செய்யும் பணிகளால் நிறைவேறாது.
எனவே, உள்ளூர் சமூக அளவில், அன்றாடம் செயல்படும் தன்மையில் இடதுசாரி இயக்கங்களும், அவற்றின் வர்க்க, வெகுஜன அமைப்புகளும் தங்களின் செயல்பாடுகளை வகுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. இதையொட்டிய மற்றொரு பிரச்சனையும் நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
வாழ்க்கை நடைமுறையும் – சிந்தனையும்
மக்களது சிந்தனையில் இடது சித்தாந்தத்தின் மீது பிடிப்பை ஏற்படுத்துவது எனில், பிரச்சாரம், நீண்ட சொற்பொழிவுகள், கருத்தரங்கங்கள், பொதுக்கூட்டங்கள் மூலம் நடைபெறுவதில்லை.
கருத்து, பொருளின் பிரதிபலிப்பே என்பது மார்க்சீய கண்ணோட்டத்தில் பாலபாடம். அறிவியல் ரீதியான இயக்கவியல் பொருள் முதல் வாதம் கூறுவது என்ன? வாழ்க்கை நடைமுறையே சிந்தனையை தீர்மானிக்கிறது என்பதுதான்.
மா – சே – துங் இதனை தனது நடைமுறை பற்றி என்ற கட்டுரையில் விளக்குகிறார்.
ஒரு விஷயத்தை நீங்கள் அறிய வேண்டுமானால், நீங்கள் நேரடியாக, நிலைமைகளை மாற்றுவதற் கான நடைமுறை போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். இதற்கு மார்க்சீய மூலவர்களின் வாழ்க்கையையே உதாரணமாக மாவோ எடுத்துரைக்கிறார்.
மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோர் மகத்தான மேதைகள். எனினும், அவர்களால் புதிய தத்துவார்த்தக் கருத்துக்களை உருவாக்க முடிந்ததற்கு முக்கிய காரணம், அவர்கள் சமூக, வர்க்கப்போராட்ட நடைமுறைகளில் நேரடியாக பங்கேற்றது தான். இது இல்லாமல் இருந்தால், எத்துணை மேதைத்தனம் இருந்தாலும் வெற்றி கிட்டியிருக்காது.
(நடைமுறை பற்றி – மா-சே-துங்)
மார்க்சீய மேதைகளுக்கே புதிய அறிவைப் பெறுவதற்கு அவர்களது நடைமுறைதான் காரணமாக அமைந்தது என்றால், சாதாரண மக்கள் இடதுசாரி சிந்தனையை பெறுவதற்கு நடைமுறை அனுபவம் அவசியம் அல்லவா? அவர்கள் இதனை பெறுவதற்கான சூழ்நிலைகளையும், வாய்ப்புக்களையும் அமைத்துக் கொடுக்க வேண்டியது இடதுசாரி ஊழியரின் கடமை.
தலையீட்டு வடிவங்கள்
நடைமுறைப் பணிகள் மற்றும் போராட்டத்தின் மூலம் தான் மக்கள் சிந்தனை மாற்றம் பெறுவார்கள். முதலாளித்துவ சிந்தனைத் தாக்கத்தின் பிடியில் உள்ள மக்களை விடுவித்து, இடதுசாரி சிந்தனைக்குக் கொண்டுவர வேண்டுமெனில், ஒரு குறிப்பிட்ட சூழலில் மக்களைப் பணியாற்ற வகை செய்தல் வேண்டும். அந்தப் பணியில் மக்கள் ஈடுபடும் போது, நேரடி அனுபவம் வாயிலாக அவர்கள் பொதுபுத்தி யிலிருந்து விடுபட்டு உண்மைகளை அறிவார்கள். இது அவர்களை இடது சாரிப் பாதைக்குக் கொண்டு செல்லும்.
உதாரணமாக, ஒரு படிப்பகமோ, நூலகமோ, இரவுப் பள்ளியோ உள்ளூர் மட்டத்தில் இடதுசாரி ஊழியர்கள் அமைத்து நடத்துகிறபோது, அதில் உள்ளூர் மக்களோடு அன்றாடத் தொடர்புகள் கிடைக்கிறது. இந்தப் படிப்பகம் மற்றும் இரவுப் பள்ளி செயல்பாடுகளில் மக்களின் பங்கேற்பு நிகழ்கிற போது, அவர்களுக்கு புதிய நடைமுறை அனுபவம் கிட்டுகிறது. மற்றொரு உதாரணம் நிலத்திற்கான போராட்டம். நில மீட்சிக்கான ஒரு போராட்டம் நடத்துவது அவசியமானது. ஆனால், ஒருநாள், ஒரு வாரம் அல்லது ஒரு மாத வேலையாக நடத்தி முடித்துக் கொள்வது போதுமானது அல்ல. அதே நேரத்தில் உள்ளூர் மட்டத்தில் ஒட்டு மொத்த விவசாய மேம்பாடு, உற்பத்தி அதிகரிப்பு, இவற்றின் மூலம் விவசாயிகளுக்கான வேலை வாய்ப்பு அதிகரிப் பதற்கான நடவடிக்கைகள் எனும் வகையில் தொடர்ச்சியாக பல ஆண்டுகாலம் விவசாயிகளோடு இடையறாத தொடர்பும், அவர்களை திட்டமிட்ட நடைமுறைக்கான திசைவழியில் நடைபோட வைப்பதும்தான் பலன் தரும். அத்துடன் அவர்கள் இடதுசாரி பாதைக்கு வருவதற்கு அது வழிவகுக்கும்.
ஆக, மேலே சொல்லப்பட்ட கருத்துக்களை தொகுத்துப் பார்க்கிற போது, மூன்று முக்கிய அம்சங்களை இடதுசாரி இயக்க ஊழியர் தனது செயல்பாட்டில் கடைபிடிக்க வேண்டியுள்ளது.
- இடதுசாரி சித்தாந்தத்தில் மக்களின் சிந்தனையை கொண்டுவர வேண்டுமெனில், அவர்களோடு அன்றாடம், முகத்துக்கு முகம் நோக்கிய, உரையாடல், கருத்து பரிமாற்றம் மூலமாகவே சாத்தியம்.
- உழைப்பாளி மக்களோடு அன்றாடத் தொடர்புக்கு உள்ளூர் சமூகம் என்கிற தளமே, சிறந்த செயல்படு தளம்.
- உழைப்பாளி மக்களின் சிந்தனை மாற்றத்திற்கு நேரடி நடைமுறை அனுபவமே பலன் தரும். இதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்த வேண்டும்.
உள்ளூர் மட்டத்தில் பல்வகை பணிகளைச் செய்வதற்கான வாய்ப்புக்கள் உண்டு. அன்றாடம் மக்கள் ஈடுபடும் தொழில் ரீதியான பிரச்சனைகள், விவசாயம், கல்வி, சுகாதாரம், சேவைகள் என உள்ளூர் மட்டத்தில் செயல்படும் வாய்ப்புக்கள் ஏராளமாக உள்ளன.
உள்ளூர் மட்டத்தில் நிலவும் சூழ்நிலைமைகளை அறிந்து, உரிய தலையீட்டு வடிவங்களை திட்டமிட வேண்டும். உள்ளூர் சூழ்நிலைமைகளை அறிவது என்ற கூற்றினைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுதல் அவசியம்.
அதிகார உறவுகள், ஒடுக்கு முறை
உள்ளூர் மட்டத்தில் நிலவும் சூழலை உற்றுக் கவனித்தால், உழைப்பாளி மக்கள் பல்வகை ஒடுக்கு முறைக்கு ஆளாகும் நிலை உள்ளது தெரியவரும். நேரடியாகத் தெரிவது, தலித் மக்கள் தீண்டாமைக் கொடுமைக்கு ஆளாகிற ஒடுக்குமுறை. இது அல்லாமல் எளிதில் புலப்படாத பல ஒடுக்குமுறைகள் பல உள்ளன. ஒரு கிராமத்திற்குச் சென்று, கல்வி பயிலுவோர், கல்வி வாய்ப்பு பெற்றவர்கள், படித்தோர் எண்ணிக்கையை கணக்கிட்டால், ஒரு உண்மை தெரியவரும். கணிசமான எண்ணிக்கையிலான உழைப்பாளி மக்கள் கல்வி பெறாதவர்களாக அல்லது தரமான, தகுதியான கல்வி நிலையை எட்டாதவர்களாக இருப்பதைக் காண முடியும். அவர்களது பிள்ளைகளுக்கும் தரமான கல்வி பெறுவதற் கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதைக் காண முடியும்.
இத்தகு நிலை படித்தோர், படிப்பறிவற்றோர் என்ற முரண்பாட்டை ஒரே உள்ளூர் சமூகத்தில் காண முடிகிறது. இந்தப் படிப்பறிவோடு, நிலம், கிராம உற்பத்தியில் அதிக பங்கீடும், செல்வாக்கு என்ற அம்சங்களும் சேர்ந்து குறிப்பிட்ட சில சக்திகள் அதிகாரம் படைத்தோராக விளங்குவதைக் காண முடியும்.
இதர மக்கள், குறிப்பாக உழைப்பாளி மக்கள் கிராமத்து அதிகாரப் பீடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டவர்களாக, ஒடுக்குமுறை வாழ்க்கை வாழ்பவர்களாக வாழ்ந்து வருகின்றனர்.
ஒவ்வொரு உள்ளூர் சமூகத்திலும் இந்த அதிகார உறவுகளைக் காணலாம். அனைத்து வாய்ப்பு வசதிகள் கொண்டோர், வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டோர் என்ற பிரிவுகளைக் காணலாம். உள்ளூர் சமூகத்தில் தலையிடுவது, இடதுசாரி சிந்தனைக்கு உழைப்பாளி மக்களைக் கொண்டு வருவது என்று கூறுவதற்கான உண்மையான பொருள் என்ன? உள்ளூர் சமூகத்தில் அதிகார உறவுகளில் மாற்றம் ஏற்படுத்தி, ஒடுக்குமுறைக்கு ஆளாகி அதிகாரமிழந்த உழைப்பாளி மக்களை அதிகாரம் பெற்றவர்களாக ஆக்குவதுதான்.
சேவைப் பணிகளும், அதிகார உறவுகளும்
சிலர் படிப்பகம், இரவுப்பள்ளி போன்ற பணிகளை மேற்கொள்வதற்கு தயக்கம் காட்டுகின்றனர். இன்னும் சிலர் மார்க்சிஸ்ட்களுக்கு இதுதான் வேலையா? என முகம் சுளிக்கின்றனர். இன்னும் சிலர் இப்படி அன்றாடம் இரவுப் பள்ளியில் போய் உட்கார்ந்து கொண்டால் ஸ்தாபனப் பணிகள் என்ன ஆவது என்றெல்லாம் கேள்வி எழுப்புகின்றனர்.
ஆனால், உள்ளூர் மட்டத்தில் அதிகார சமத்துவமின்மை நீடித்தால், இடதுசாரி அரசியல் அங்கு நுழைய வாய்ப்பில்லை. ஏனெனில் உழைப்பாளி மக்கள் விழிப்புணர்வு பெறாமல் இருந்தால், ஒடுக்குமுறையை சகித்து வாழ்க்கை நடத்தும் பொறுமை சாலிகளாக இருப்பார்கள். அல்லது, அவ்வப்போது இடதுசாரிகள் நடத்தும் கூட்டங்கள், இயக்கங்களில் தலையை காட்டுபவர் களாகவும் தான் இருப்பார்கள். ஒட்டாத இந்த இயக்கங்கள் உள்ளூர் சமூக அதிகார உறவுகளை எந்த வகையிலும் பாதிக்காது.
ஒரு படிப்பகம் துவங்கி முற்போக்கு இலக்கியங்களை படிக்க வைப்பதும், அது குறித்த உரையாடல், நடத்துகிற போதும், உழைப்பாளி மக்கள் தங்களது வாழ்க்கை ஒடுக்கு முறையிலிருந்து விடுபட உத்வேகம் கொள்கின்றனர். மூடத்தனத்திலேயே தங்களை வைத்துக் கொள்ளச் செய்யும் உள்ளூர் சமூகத்தின் ஆதிக்க சித்தாந்தத்திற்கு எதிரான போர்க்குரல் அவர்கள் இதயத்தில் ஒலிக்கத் துவங்குகிறது.
அதே போன்று, இரவுப் பள்ளியில் அறிவியல் ரீதியான கல்வி அளிக்கும் ஏற்பாட்டை இடதுசாரி ஊழியர்கள் செய்கிறபோது, அதில் தங்களது குழந்தைகளை உழைப்பாளி மக்கள் அனுப்பும் போது அவர்களுக்கு ஒரு சிந்தனை உருவாகிறது. உள்ளூர் சமூகத்தில் அறிவியல் சிந்தனையும், கல்வி பெறும் உரிமையும் உழைப்பாளி மக்களுக்கு மறுக்கப்பட்ட அந்த இயல்பான வாழ்க்கையிலிருந்து அவர்களிடம் மாற்றம் பிறக்கிறது. கல்வி தங்களது உரிமை எனும் அதிகார மறுப்பு சிந்தனை அவர்களிடம் ஏற்படுகிறது.
எனவே, உள்ளூர் சமூகத்தில் உறைந்து கிடக்கும், ஒடுக்குமுறையை எதிர்த்து, அதிகார பீடத்தை தகர்க்கும் போராட் டத்தை நடத்திடாமல் இடதுசாரி இயக்கமும், இடதுசாரி வெகுஜன அமைப்புகளும் உண்மையான வளர்ச்சியை கண்டிட முடியாது.
எனவே, தங்களது இன்றைய செல்வாக்கு பலத்திற்கேற்ப உள்ளூர் சமூகங்களை தேர்ந்தெடுத்து, உரிய தலையீட்டு வடிவங்களை தீர்மானித்து, இடதுசாரி, வர்க்க, வெகுஜன அமைப்புக்கள் செயலாற்றிட வேண்டும். நாடு முழுவதும் உள்ள கோடானு கோடி உள்ளூர் சமூகங்களில் இந்த நிகழ்வு ஏற்பட இடதுசாரி இயக்கங்கள் முனைய வேண்டும்.
இதுவே, புதிய தாராளமயம், வகுப்புவாதம் என்ற இரண்டு பாதைகளையும், தவிர்த்து இடதுசாரி பாதையில் இந்தியா செல்ல உகந்த வழி.