2004 ஆம் ஆண்டில் பாராளுமன்ற தேர்தல் முடிவுகளின் பயனாக ஒரு கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. அதற்கு தலைமை தாங்கும் பொறுப்பு காங்கிரஸ் மீது விழுந்தது. இது ஒரு விசேஷமான அரசியல் சூழ்நிலையை உருவாக்கியது. அதிலும் குறிப்பாக இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவு கூட்டு மந்திரி சபைக்கு அவசியம் தேவை என்ற நிலைமை ஏற்பட்டது.
சமீபத்தில் நடைபெற்ற ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களில் மேற்குவங்காளத்தில் சி.பி.எம் தலைமையிலான இடதுசாரி முன்னணி அமோக வெற்றி பெற்று – 7 வது முறை மாநில ஆட்சியைப் பிடித்திருப்பது மிகப்பெரிய ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது. (எப்போதுமே ஆட்சியில் இருக்கும் கட்சி அடுத்த தேர்தலில் தோல்வியைத்தான் சந்திக்கிறது என்ற பாராளுமன்றவாதிகளுடைய வாதம் மேற்குவங்கத்தில் தவிடு பொடியாகிவிட்டது.) கேரளாவிலும் இடது ஜனநாயக முன்னணி மிக பலமான முறையில் பெரும் பான்மை பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளதும் ஒரு புது உத்வேகத்தை கொடுத்துள்ளது. பொதுவாக இடதுசாரிகள் இந்திய அரசியலில் ஒரு முக்கிய சக்தியாக வளர்ந்து வருவது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இடதுசாரிக் கட்சிகளில் குறிப்பாக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தனி முக்கியத்துவம் கிடைத்தது சிலரையும் அதிர்ச்சியுறச் செய்துள்ளது. (இடதுசாரிக் கட்சிகள் அனைத்தும் கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று கருதுவது சரியல்ல. இடதுசாரி இயக்கத்தின் முக்கிய பகுதியாகச் செயல்பட்டுக் கொண்டு, இடதுசாரி இயக்கத்திற்கு ஒரு திசை வழியையும், தலைமையையும் அளிக்கவல்ல அரசியல் கட்சியைத்தான் கம்யூனிஸ்ட் கட்சி என்று அழைக்கப் படுகிறது என்பது மட்டும்தான் உண்மை.) பலருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடதுசாரிகளின் இந்த வெற்றி எதிர்பாராத ஒரு அதிசயமாக இந்த நிகழ்வு மனதில் பட்டது. உலகம் முழுவதும் ஆச்சரியத்துடன் இதை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
பல கட்சியினர் அரசியலில், கூர்மையான அக்கறை செலுத்தக்கூடியவர்கள் தங்கள் கட்சியின் மீது அதிருப்தியுற்றவர்கள், இந்திய அரசியலில் ஒரு புதிய மாற்றம் வரவேண்டும் என்று விரும்பியவர்கள் பழைய கட்சிகள் மீது சலிப்பேற்பட்ட சிந்தனையா ளர்கள் போன்ற பல பகுதியினர் மத்தியில் இடதுசாரிகள் இந்த முறையில் எதிர்பாராத விதமாக அரசியலில் முன்னுக்கு வந்திருப்பது வரவேற்கத்தக்க நிகழ்ச்சியாக கருதினார்கள். இன்றும் நாளிதழ் களிலும், ஆசிரியர் கடிதங்கள் போன்றவற்றில் இடதுசாரிகளைப் பற்றி வியப்புடன் கருத்துக்கள் எழுதப்படுகின்றன. திடீரென இந்திய அரசியலில், ஒரு புதிய சக்தி உருவானதை பலரும் வரவேற்றும் எழுதுகின்றனர். இதனால், இடதுசாரிகளைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும் என்ற அவா கூடி வருவது இயல்பானது.
கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக பல நாடுகளிலும் இடதுசாரி கட்சிகள் குறிப்பிடத்தக்க அளவிற்கு முன்னேறி ஆட்சிகளையும் பிடித்துள்ள நிலைமையும் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதிலும் குறிப்பாக தென்னமெரிக்க நாடுகளில், முக்கியமான பல நாடுகளின் ஆட்சிகள் இடதுசாரிகளின் கைகளுக்கு சென்றிருப்பதானது, ஒரு பொருள் நிறைந்த நிகழ்ச்சிப் போக்காகும். தென்னமெரிக்க கண்டமானது ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகளாக ஏகாதிபத்தியங்களின் சுரண்டலுக்கான தளமாக இருந்து வந்து, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொல்லைப்புறம் என்று வர்ணிக்கப்பட்டது. பொருளாதார சுரண்டல் மட்டுமின்றி, மிகக் கொடூரமான சர்வாதிகார ஆட்சிகள் அங்கு நிறுவப்பட்டி ருந்தன. முதலாளித்துவம் பெரிதாக பறைசாற்றி வரும், முதலாளித்துவ சீர்திருத்தங்கள், உலக வங்கியுனுடைய திட்டமிடுதல், கடன் கொடுத்து கழுத்தை நெருக்குதல் போன்ற காரியங்களும் நடைபெற்ற நாடுகள் இவை. (1958லேயே முதலாளித்துவ பிடிப்பிலிருந்து விடுபட்ட கியூபா நீங்கலாக) இத்தகைய தென் அமெரிக்க நாடுகளில் பலவற்றில் இன்று சற்றும் எதிர்பாராத விதமாக, இடதுசாரி சார்பு உள்ள ஏகாதிபத்திய எதிர்ப்பு தன்மை கொண்ட பல அரசுகள் தோன்றியுள்ளன.
இந்தியாவில் நடப்பதும் இதர நாடுகளில் நடப்பதும் வரலாற்றில் ஒரு புதிய போக்கினை பிரதிபலிக்கவில்லையா என்பதனை நாம் ஆழமாக பரிசீலனை செய்ய வேண்டும்.
பழைய சமுதாய அமைப்பின் ஆழமான நெருக்கடிகள் காரணமாக சமூகத்தின் பிரச்சினைகள் தீர்க்கப்படாத நிலை; மக்களின் வறுமையும், வேலையின்மையும், துன்பங்களும் பெருமளவில் பெருகிக் கொண்டிருக்கும் நிலைமைகள் இவற் றினால், சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், கொந்தளிப்பான நிலைமைகள் உருவாகி வரும் சூழலில் தோன்றியவைதான் இந்த இடதுசாரி அரசுகள். ஏகாதிபத்தியத்தின் கடுமையான பிடியின் காரணமாக புரட்சிகரமான சக்திகள் போதுமான அளவிற்கு வளராத ஒரு சூழ்நிலையில், மக்களின் குமுறலை பிரதிபலிக்கும் வகையில்தான், இடதுசாரி அல்லது இடதுசாரி சார்புடைய அரசுகள் தோன்றியுள்ளன என்பது தெளிவு. இவற்றில் கம்யூனிஸ்ட்டுகளின் நேரடி பங்கு அதிகமாக இருப்ப தாகத் தெரியவில்லை. ஆயினும் தென்னமெரிக்காவின் சின்னஞ் சிறு கம்யூனிஸ்ட் நாடான கியூபாவின் முன்னுதாரணம் அது பின்பற்றியுள்ள பாதை, அதன் விளைவாக, மக்களின் வாழ்க்கை நிலையில் கிட்டியுள்ள ஓரளவிற்கு முன்னேற்றமான ஒரு நிலை. இவையெல்லாம் தென்னமெரிக்க கண்டத்தில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு பெருமளவில் உதவியுள்ள காரணங்கள் என்பதை மறுக்க முடியாது.
ஆக, இடதுசாரி இயக்கங்களின் இந்த முன்னேற்றமானது பல நாடுகளில் நடைபெற்று வருகின்றன. ஏற்றத்தாழ்வான நிலை யிலானாலும், உலக முதலாளித்துவத்தின் நெருக்கடிகளும், யுத்த வெறி பிடித்த அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு பல்வேறு முறைகளில் தோல்விகளும், வளர்ந்து வரும் ஒரு சூழ்நிலையில் இவற்றை எதிர்க்கும் மக்களின் இயக்கங்கள் இடதுசாரிப் பாதையை தேடிச் செல்வது என்பது இயல்பானது. அதன் தன்மைகள், வேகம் போன்றவை மாறுபட்டுதான் இருக்கும். அனைத்து நாடுகளிலும் ஒரே சீராக நடைபெறும் என்று எதிர்பார்க்க முடியாது.
இன்றுள்ள நிலையில், இத்தகைய சக்திகளை கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைமையில் கொண்டு வருவதற்கு உள்ள சிரமங்கள் காரணமாகவும், பல நாடுகளில் உள்ள முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலைகள் காரணமாகவும், இந்த மாற்றங்கள் தற்சமயம் இடதுசாரி இயக்கங்களின் தலைமையில் நடக்கின்றன. இது ஒரே தன்மைகளுடன் நடப்பதுமில்லை. மாறுபட்ட சூழ்நிலைக்கேற்ற தன்மைகளும் மாறுகின்றன. இதைப் பார்க்கும் போது, இடது சாரிகளின் இந்த முன்னேற்றத்தை அடக்கி ஒடுக்குவதற்கும், குழப்பிச் செயலிழக்கச் செய்வதற்கும், பழைய நம்பிக்கைகளிலிருந்து விடுபடாமல் மக்களை வைப்பதற்கும் ஏகாதிபத்தியம் பல புதிய தந்திரங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது. பாசிசமும், கம்யூனிசமும் ஒன்று தான் என்ற பிரச்சாரம் வெகுவாக மேலை நாடுகளில் நடப்பதை இது உறுதிப்படுத்துகிறது.
கம்யூனிஸ்ட் கட்சிகளும் – இடதுசாரிகளும்
கம்யூனிஸ்ட் கட்சிகள் பொதுவாகவே இடதுசாரிகளை ஊக்குவித்து, அவற்றின் வளர்ச்சிக்கு உதவி வருகின்றன என்பது உண்மை. ஆயினும் இவற்றிற்கிடையில் பலவிதமான அடிப்படை மாறுபாடுகளும் உண்டு என்பதையும் மறக்கலாகாது. இவை நேச சக்திகளாக வளர வேண்டியது அவசியமானதாகும். ஆனால், உருவாகும் தன்மை, குணாம்சங்கள் – ஸ்தாபன அமைப்புகள் – நடைமுறைகள் போன்ற பல விஷயங்களிலும் மாறுபட்ட அம்சங்கள் உண்டு என்றும் நாம் உணர வேண்டும்.
இடதுசாரி கட்சிகளின் வளர்ச்சியானது கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும், புரட்சிகரமான இயக்கங்களுக்கும் பெருமளவில் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அதேபோல் வலுவான கம்யூனிஸ்ட் கட்சி இருப்பது இடதுசாரி இயக்கங்களுக்கு ஊக்கத்தையும், ஆக்கத்தையும் அளிக்கிறது என்பதும் உண்மை.
இடதுசாரிகள் என்றால் யார்?
ஒரு கட்சியை இடதுசாரி கட்சி என்று அழைப்பது எந்த அடிப்படையில் என்ற ஒரு கேள்வி பலருக்கும் இருக்கிறது. பிரெஞ் புரட்சிக்குப் பின் (1789) ஜனநாயக சக்திகளும் முன்னேறிய காலகட்டத்தில், பிரான்ஸ் பாராளுமன்றத்தில், காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வந்தன. இந்த விவாதங்களில் பழமைவாதிகளாக இருந்தவர்களும், சமுகத்தில் பெரிய மாற்றங்கள் செய்யக்கூடாது என்று எண்ணியவர்களும், சொத்துரிமை போன்ற அவர்களின் பார்வையில் ஜீவாதாரமான பிரச்சினைகளிலும், மாற்றமே கொண்டு வரக்கூடாது என்று வாதாடிய ஒரு பிரிவினர் எதிர்த்தனர். அந்தக் கட்சியினருக்கு பாராளுமன்ற மண்டபத்தில் சபாநாயகருக்கு வலதுபுறமாக சீட்டு ஒதுக்கப்பட்டிருந்தனர். அதே நேரத்தில் சமுதாய அமைப்பில் பெரிய மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்று வீரமுடன் வாதாடிய ஒரு பிரிவினர் இருந்தனர். பிரெஞ்சு புரட்சி மன்னர் ஆட்சி முறையையும், பத்தாம் பசலி சமுதாய அமைப்பையும் உடைத்தெறிந்தது போலவே, சமுதாயத் திலும், பல்வேறு துறைகளில் தீவிரமான மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என்று அவர்கள் வாதாடினர். இதுபோன்ற காரணங்களால், அரசியல் வழக்கத்தில் மாற்றத்திற்காக வாதாடக் கூடிய முற்போக்கு எண்ணம் கொண்ட தீவிர கருத்துக்கள் கொண்ட அனைவரையும் இடதுசாரிகள் என்று அழைக்கின்றனர்.
கம்யூனிஸ்ட் கட்சிகள் கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியிட்ட காலத்தில் இருந்து இரண்டு நூற்றாண்டு காலமாக பகிரங்கமாக பிரகடனப்படுத்தப்பட்ட இலட்சியங்களை ஆதாரமாகக் கொண்டு புரட்சிகரமான ஒரு இயக்கத்தை தலைமை தாங்கி நடத்துவதற்காக படிப்படியாக விடா முயற்சியில் ஈடுபட்டு வரக்கூடிய கட்சியினர் ஆவர். தங்களது லட்சியங்களை ஒளிவு மறைவு இன்றி பிரகடனப் படுத்தி இன்றைய சமுதாய அமைப்பினை முற்றிலுமாக மாற்றியமைப்பதற்காக போராடுகிறோம் என்று பகிரங்கமாக பறைசாற்றி வருபவர்கள். இன்றைய முதலாளித்தவ, நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பை முற்றிலுமாக புரட்சிகரமான முறையில் மாற்றியமைத்து, சுரண்டலுக்கு முற்றுப் புள்ளி வைப்பது நோக்கம் என்பது கம்யூனிஸ்ட்டுகளின் நோக்கமென்பதும், தெளிவாக்கப் பட்டுள்ளது. ஆட்சி அதிகாரத்தை சுரண்டும் வர்க்கங்கள் கையில் இருந்து கைப்பற்றி, உழைக்கும் மக்கள் கைகளுக்கு மாற்றுவது என்ற லட்சியம் பகிரங்கமாகவே பிரகடனம் செய்து அதை நடைமுறைப் படுத்த தீவிரமாக முயற்சிப்பவர்கள்.
அமைதியாகவோ, தேவைப்பட்டால் வன்முறையிலோ இலட்சியத்தை அடைவதற்கு தயார் என்று சொல்லுவது மட்டுமின்றி பல நாடுகளில், சுரண்டும் வர்கங்களின் ஆட்சிகளை தூக்கியெறிந்து காட்டியவர்களும் கம்யூனிஸ்ட்டுகள் தான். பொதுவுடைமை சமுதாயம் என்ற ஒரு புதியதோர் உலகத்தை படைப்பதற்காக போராடுபவர்கள் என்ற நோக்கத்துடன், உறுதியுடன் போராடக் கூடியவர்கள். ஆக, வர்க்கப் போராட்டத்தை வலுப்படுத்துவது, சுரண்டும் வர்க்கங்களை ஓயாமல் எதிர்ப்பது, பழைய ஆட்சியில் இருக்கும் சுரண்டும் வர்க்கங்களை அங்கிருந்து விரட்டுவது போன்ற தெளிவான திசை வழியை ஏற்றுக் கொண்டவர்கள் கம்யூனிஸ்ட் டுகள். ஆனால், பல இடதுசாரி கட்சிகளும் சமுதாய மாற்றம் என்ற பொதுவான கருத்தைப் பிரச்சாரம் செய்தாலும், வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையில் இதற்கான முயற்சியில் இறங்குவது இல்லை. சில இடதுசாரி கட்சிகள் இன்றைய கட்டுக் கோப்பை மாற்றாமல், மக்களுக்கு சேவை செய்து வருவது என்ற மிதமான கோஷத்தைகூட வைத்திருக்கிறார்கள்.
இதுபோன்ற பல்வேறு விஷயங்களை கம்யூனிஸ்ட்டுகளுக்கும், இடதுசாரிகளுக்கும் பல மாறுபாடுகளை பார்க்க முடியும். ஆயினும், சோசலிஸ்ட்டுகள், தொழிலாளர் கட்சியினர் சில சமுதாய சீர்திருத்த கட்சிகள் இவையெல்லாம், இடதுசாரி கட்சிகளாக கருதப்படுகின்றனர். ஆனால், இன்றைய தினம் இந்தியாவில் இடதுசாரி கட்சிகளாக செயல்பட்டு வரக்கூடிய கட்சிகளும், தென்னமெரிக்கா போன்ற கண்டங்களில் செயல்பட்டு வரக்கூடிய பல கட்சிகளும், பல விஷயங்களிலும் முற்போக்கான கருத்துக்களை மேற்கொண்டுள்ளனர் என்பது உண்மை.
உதாரணமாக: பொதுப்படையாக சோசலிசம் என்ற கருத்தை இந்த பிரிவினர் ஏற்றுக் கொள்கின்றனர். (கம்யூனிஸ்ட்டுகளைப் போல் நுட்பமாகவும், ஆழமாகவும் சோசலிசத்தினுடைய தன்மைகளை ஆராயவில்லையென்றாலும், சமத்துவம் என்ற பொதுவான கருத்தை இடதுசாரிகள் ஏற்றுக் கொள்கின்றனர்.) அடிப்படையான சமூக மாற்றத்திறக்காக போராடுவது என்ற நோக்கத்துடன் செயல்படக்கூடிய இடதுசாரிகள், சுரண்டும் வர்க்கங்களை பொதுவாக எதிர்ப்பது என்ற நிலையை மேற்கொள்கின்றனர். நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ சுரண்டலை பற்றி பிரச்சாரமும் செய்கின்றனர். இந்த அளவிற்கு வர்க்கப் போராட்டத்தில் சம்பந்தப்படுகிறார்கள். வர்க்க உணர்வின் தேவையைப் பற்றி பறைசாற்றுகிறார்கள். இயல்பாகவே ஓரளவிற்கு வர்க்க ஸ்தாபனங்களை தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள் போன்றவற்றை வளர்க்க முயற்சிக்கின்றனர். ஆக, வர்க்கப் போராட்டம், வர்க்க அமைப்பு ஆகியவற்றை ஊக்குவிக்க முயற்சிக் கின்றனர் என்பது உண்மை. கம்யூனிஸ்ட்டுகளைப் போல தெளிவான பார்வையுடன், வர்க்கங்களற்ற சமூக அமைப்பைக் கட்டுவது என்ற பார்வையுடன் இதை செய்யவில்லையென்றாலும், இந்த செயல் களானது ஓரளவிற்கு முற்போக்கு இயக்கங்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. நிலச்சீர்திருத்தம் தேவை பற்றி பொதுவாக பிரச்சாரம் செய்கிறார்கள். தென்னமெரிக்காவில், இன்று அமைந்துள்ள இடதுசாரி ஆட்சிகள் பெரிய அளவில் நில விநியோகம் செய்ய ஆரம்பித்துள்ளனர். (உதாரணம்: பொலிவியா)
இடதுசாரி சக்திகளின் ஒரு முக்கியமான தன்மையானது – அவை ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தில் உருவாகியவை என்பதாகும். தங்களுடைய நாடுகளில் ஏகாதிபத்தியம் செல்வங்களை, கொள்ளையடித்ததை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் என்ற முறையில், ஏகாதிபத்திய சுரண்டலை கூர்மையாகவும், உறுதியாகவும் போராடுபவர்களில் இடதுசாரிகள் முன்னணியில் நிற்கின்றனர். ஆக, ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளாகவே இடது சாரிக் கட்சிகள் செயல்படுகின்றன என்று கூறலாம்.
ஜனநாயக உரிமைகளை, மனித உரிமைகளைச் சுரண்டும் வர்க்கங்களும், ஆளும் கட்சியும் பறிக்கும் போது, அவற்றை எதிர்த்து நடைபெறும் போராட்டங்களில் பல இடங்களில் இடதுசாரிக் கட்சிகள் பங்கேற்கின்றன, முன்னெடுத்துச் செல்கின்றன.
இத்தகைய குணாம்சங்களால், பொதுவாக பார்த்தால், இடதுசாரி இயக்கங்கள் மாணவர்களை, விவசாயிகளை, தொழிலாளி வர்க்கம் போன்ற வர்க்கங்களை திரட்டும் பணியில் ஆங்காங்கு ஈடுபடுகின்றனர். கம்யூனிஸ்ட்டாக விரும்பாத, அதே நேரத்தில் சில முற்போக்கு எண்ணம் கொண்ட அறிவாளிக் கூட்டத்தில் இருந்தும் நடுத்தர மக்களில் பலரும் இடதுசாரி இயக்கத்தை ஆதரிக்கின்றனர்.
இடதுசாரி கட்சிகள் ஒவ்வொன்றின் குணாம்சங்களையும், அவற்றின் பின்னணியை வைத்து தீர்மானிக்க வேண்டியுள்ளது. பல்வேறு சூழ்நிலைமைகளில் அவை முற்போக்கு இயக்கங்களுக்கு பயனுள்ளவையாக அமைகின்றன. ஆயினும், சில சூழ்நிலைகளிலும் சில இடதுசாரிக் குழுக்கள் தெரிந்தோ, தெரியாமலோ கம்யூனிஸ்ட் எதிர்ப்பு இயக்கங்களுக்கு, உதவி செய்து வருகின்றன. ஆகவே இடதுசாரி இயக்கங்களுடைய வளர்ச்சியானது பொதுவாக முற்போக்கு எண்ணத்திற்கு உதவிகரமானதாக இருக்கின்ற போதிலும், ஒவ்வொரு அமைப்பின் செயல்பாடுகளையும், ஸ்தூலமாக பரிசீலனை செய்து அவற்றின் குணாம்சங்களைப் பற்றி முடிவு செய்வதுதான் சரியாக இருக்கும்.
தொடக்கத்திலே குறிப்பிட்டதுபோல் இன்றைய கால கட்டத்தில் இடதுசாரி இயக்கங்களைப் பற்றி பொதுவான அக்கறை வளர்ந்து வருவதும், பல இடங்களில் நல்ல முறையில் இடதுசாரி குழுக்கள் வளர்ந்து வருதும் புரட்சிகரமான மாற்றங்களுக்கு பெரிய அளவில் உதவி செய்யும் என்று எதிர்பார்க்கலாம். ஆயினும் திட்டவட்டமான அரசியல் பார்வை வலுவான ஸ்தாபன அமைப்பு, தெளிவான மார்க்சிய கண்ணோட்டம் உறுதியான புரட்சிகரமான நடைமுறை இருக்கின்ற கம்யூனிஸ்ட் கட்சிகள் வலுவாக இருந்தால்தான் இடதுசாரி இயக்கங்களும் பயனுள்ளவையாக இருக்கும் என்பதையும் கம்யூனிஸ்ட்டுகள் மறந்து விடக்கூடாது.