ஹரிகிஷன் சிங் சுர்ஜித்
தமிழில். சி.சுப்பாராவ்
பூரண சுதந்திரம் என்ற குறிக்கோளை பல ஆண்டுகளாக ஏற்க மறுத்த காங்கிரஸ், கடைசியில் 1929 டிசம்பரில் நடந்த லாகூர் காங்கிரசில் அதை ஏற்று ஆண்டுதோறும் ஜனவரி 26 ஐ சுந்திர தினமாகக் கொண்டாடத் தீர்மானித்தது. ஆனால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத் தளைகளைத் துண்டித்தால் மட்டும் போதாது என்பதை மக்கள் உணர்ந்திருந்தனர். காலங்காலமாக இங்கு நீடித்து வரும் பசி, சுரண்டல் ஒடுக்குமுறைத் தளைகளிலிருந்து இந்திய மக்கள் விடுபடுவது தான் முக்கியமானது என்று அவர்கள் உணர்ந்திருந்தனர். இந்த விழிப்புணர்வு நாடெங்கிலும் எண்ணிலடங்கா வழிகளில் பிரதிபலித்தது. உதாரணமாக, ஒரு இர்விங்கை விரட்டி விட்டு அங்கு ஒரு புருஷோத்தம்தாஸ் தாக்குர்தாஸ்ஸை உட்கார வைப்பதில் சாதாரண இந்தியக் குடிமகனுக்கு என்ன கிடைக்கப்போகிறது? என்று சிறையின் மரணத் கொட்டடியிலிருந்து பகத்சிங் எழுதி, அது அவரை தூக்கிலிட்ட பிறகு, இளம் அரசியல் ஊழியருக்கு என்ற தலைப்பில் வெளிவந்தது ஒரு சிறந்த உதாரணம்.
இதே ஜனவரி 26 தான் பின்னாளில் குடியரசு தினமாக்கப்பட்டது. காரணம் நாமனைவரும் அறிந்ததே..
காங்கிரஸ் வட்டாரங்களிலும் இதே உணர்வுகள் பிரதிபலித்ததில் வியப்பேதுமில்லை. பூரண சுதந்திரம் குறித்த தீர்மானம் நிறைவேறி யதன் பின், ஒன்றே காலாண்டு கழித்து 1931 மார்ச் 29-31 ல் நடைபெற்ற கராச்சி காங்கிரசில் அடிப்படை உரிமைகள் பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தான் 1947 சுதந்திரத்திற்குப் பிறகு அரசியலமைப்புச் சட்டம் உருவாக்க அடித்தளமாக அமைந்தது. அதே ஆண்டு 1931 ஆகஸ்ட் 6-8 ல் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டத்தில் சில மாற்றங்களுடன் இந்த தீர்மானம் அங்கீகாரம் பெற்றது.
இந்த தீர்மானத்தின் முக்கியமான குறிப்புகளில் ஒன்று மக்களை சுரண்டும் முறைக்கு முடிவு கட்ட அரசியல் சுதந்திரத்தோடு உண்மையான பொருளாதார சுதந்திரமும், பசியில் வாடும் கோடிக் கணக்கான மக்களுக்கு கிடைக்கச் செய்வது அவசியம் என்பதாகும். மேலும் இத்தீர்மானம் எதிர்கால அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெற வேண்டிய விஷயங்களின் பட்டியலைத் தந்தது..
பின்னால் சேர்க்கப்பட இருந்த முக்கியமான கடமைகள் பல துவக்கத்தில் இந்தப் பட்டியலில் இல்லை என்பதில் சந்தேகமில்லை. உதாரணமாக தாழ்த்தப் பட்டவர், பழங்குடியினர், (SC/ST)) என பின்னாளில் அழைக்கப் பட்ட மக்களுக்கு பிரத்யோகமாக எவ்வித வாக்குறுதியும் இதில் இல்லை. அதேபோல் விவசாயிகளின் சிரமத்தைக் குறைப்பதாக அது கூறினாலும், நிலச் சீர்திருத்தத்தின் அவசியத்தை அது சுற்றி வளைத்து ஏதோ சொல்லியது. குத்தகை முறை, வருவாய், குத்தகை இவைகள் சமத்துவ அடிப்படையில் சரி செய்யப்படும் என்று சொல்லியது. நிலப்பிரபுத்துவ உடைமையோ, நிலப்பிரபுத்துவ நில உறவையோ ஒழிப்பது காங்கிரசின் செயல் திட்டத்தில் இன்றும் இடம் பெற வில்லை. விவசாயிகளின் சுமையைக் சமத்துவ அடிப்படையல் சரிசெய்யப்படும் என்பதற்கு நூற்றுக் கணக்கான முறையில் அர்த்தப்படுத்த முடியும். இருந்தாலும், 1931 ல் நிலவிய அரசியல், தத்துவார்த்த சூழலில் இந்த அளவு கூறியுள்ளதே மிகப் பெரிய முன்னேற்றம் என்பதில் ஐயமில்லை. 1922 ல் நிலப்பிரப்புகளின் நிலங்களைத் தொடக் கூட காந்தியடிகள் மறுத்த தையும், நில உரிமையாளருக்கு உண்டான குத்தகையை விவசாயிகள் தராமல் நிறுத்தக் கூடாது என்றுகூறியதையும், ஒப்பிட்டால், உண்மையிலேயே இது பெரிய முன்னேற்றம்தான்.
மொத்தத்தில் கராச்சி ஆவணத்தில் பல குறைபாடுகள் இருந்தாலும், இந்திய உழைப்பாளி மக்களுக்கு காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகள் குறிப்பிடத் தகுந்தவை. தங்கள் பங்கிற்கு மக்களும் காங்கிரஸை ஏமாற்ற வில்லை. தங்கள் முழு ஆதரவை நல்கினார்கள். 1937 தேர்தல் முடிவுகளில் இது பிரதி பலித்தது. காங்கிரஸிற்கு மக்கள் ஆதரவு தந்ததற்கான காரணங்களை வேறு ஒருகோணத்திலும் காணமுடியும். 1937 ல் பெரும்பான்மை மாநிலங்களில் முஸ்லீம் லீக் தோற்றது. காங்கிரஸிடம் இருந்ததைப் போல் அதனிடம் அப்படி ஒரு திட்டம் இல்லை என்பதே இதற்கு காரணம் ஆகும். 55 சதம் முஸ்லீம்களாக இருக்கும் பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகளுக்கு ஆதரவான யூனியனிஸ்ட் கட்சியே வென்றதைச் சுட்டிக் காட்டலாம்.
நிறைவேறாத வாக்குறுதிகள்
இருப்பினும், சுதந்திரத்திற்குப் பின் வாழ்வில் எத்தனையோ விஷயங்களில் எவ்வளவோ முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், 1947 க்கு முன் காங்கிரஸ் நாட்டு மக்களுக்கு அளித்த பல வாக்குறுதிகளை கைவிட்டு துரோகமிழைத்தது என்ற உண்மையை மறுக்க இயலாது.
நாம் மேலே விவாதித்த நிலச் சீர்திருத்த விஷயத்தையே எடுத்துக்கொள்வோம். 1931 ல் காங்கிரஸ் நிலச் சீர்திருத்தம் பற்றி சுற்றி வளைத்துப் பேசி, நிலப்பிரபுத்துவத்தை அழிப்பது பற்றிப் பேச மறுத்தாலும், விரைவிலேயே சூழ்நிலைகள் அதைத் தீவிரமாகப் பேச வைத்தன. 1936 ல் தோன்றிய அகில இந்திய விவசாயிகள் சங்கம் நிலப்பிரபுத்துவத்தை அழிப்பது பற்றிப் பேசியதும், வரவிருந்த மாகாண சட்டசபைத் தேர்தல்களும் சேர்ந்து, காங்கிரஸ் இவ் விஷயத்தில் ஒரு நிலைபாடு எடுக்க வேண்டியதாயிற்று. ஐக்கிய மாகாணங்களில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் நேரு இது குறித்து தெளிவான வாக்குறுதிகள் அளித்தார். இத்தகைய வாக்குறுதிகள் இன்றி விவசாயப் பெருங்குடி மக்களின் நம்பிக்கையைப் பெற இயலாது என்று காங்கிரஸ் சரியாகவே கணித்திருந்தது.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், அது எடுத்த நடவடிக்கைகளில் ஒன்று ஜமீன்தாரி முறையை ஒழித்தது ஆகும். நிலவுடமைக்கு சில உச்சவரம்புகள் கொண்டு வரப்பட்டன. இதுவும் தெலுங்கானா போன்ற விவசாயிகளின் எழுச்சியின் காரணமாகத்தான். இதுபோன்ற சில ஆரம்ப நடவடிக்கைகளைத் தாண்டி, விவசாயிகளை அவர்களது துன்பத்திலிருந்து விடுவிக்க, காங்கிரஸ் வேறெதுவும் அபூர்வமாகக் கூடச் செய்யவில்லை. ஜமீன்தாரி முறை மேலோட்டமாக அழிக்கப் பட்டதால், மிகப்பெரிய நிலச்சுவான்தார்கள் நாட்டில் இருக்கவே செய்தார்கள். வேண்டுமென்றே பல ஓட்டைகளுடன் ஏற்படுத்தப் பட்ட நில உச்சவரம்புச் சட்டம் கேலிக் கூத்தாக்கப் பட்டது. காரணம் 1947 க்குப் பிறகு அரசு அதிகாரத்தில் நிலப்பிரபுக்களுக்கும் பங்கிருந்தது..
உண்மையில் நிலச் சீர்திருத்தமே இல்லாது போனதால், ஒட்டுமொத்தமாக நாட்டிற்கும், குறிப்பாக சமூகத்தின் அடிமட்ட மக்களுக்கும் பெரும் தீங்கு விளைவித்தது. வசதியான வாழ்க்கைத்தரம் பெற வைப்போம் எனக் கராச்சி காங்கிரஸ் அளித்த வாக்குறுதி இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. நிலச்சீர்திருத்தம் முழுமையடையும் வரைஅது நிறைவேறாமலேயே இருக்கும். சுமார் 65 சத மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்பவர்கள் என்ற அடிப்படையில் கிராமப் புறங்களில் மிக முக்கியமான நிலம் இல்லாவிடில், அவர்களால் வாழ இயலாது. கராச்சித் தீர்மானம் உறுதி யளித்ததுபோல விவசாயக் கூலிகளை அடிமைத்தனத்திலிருந்து மீட்க முடியவில்லை என்றால் அதற்கும் நிலச் சீர்திருத்தம் அமலாகாததுதான். சிந்தித்துப் பார்த்தால் சமூகத்தைப் பிடித்துள்ள முப்பெரும் வியாதிகளான, குழந்தைத் தொழிலாளர், பிச்சை எடுத்தல், விபச்சாரம் இவை யனைத்தும் நிலச்சீர்திருத்தம் நடக்காததால் ஏற்பட்டவைதான்.
விவசாயிகள் சங்கமும், இடதுசாரிகளும் நிலச்சீர்திருத்தம் சிறிய அளவிலாவது நடக்க மிக நீண்ட நெடிய போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது. மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும் கொண்டு வரப்பட்ட சட்டங்களை நீதித்துறை செல்லாததாக ஆக்கிவிடாது தடுக்கவும் போராட வேண்டியிருந்தது.
ஆனால் இன்று பல மாநிலங்களில் பெயரளவிற்கு நடந்த நிலச்சீர்திருத்தங்களையும் மாற்றிவிட இன்று அரசுகள் முயற்சித்து வருவதுதான் மிகக் கொடுமை. இம்முறை நிலப்பிரபுக்கள் தனியாக இல்லை மிகப்பெரிய தொழிலகங்களும், அன்னிய மூலதனங்களும் இவ்விஷயத்தில் அவர்களுக்கு துணை சேர்ந்துள்ளார்கள்.
தாழ்த்தப்பட்டோரின் நிலை
மறு விநியோகம் என்ற அம்சம் நிலச்சீர்திருத்தத்தில் இல்லாததால் மற்றொரு எதிர் வினையும் ஏற்பட்டுள்ளது. ஜாதியின் பெயரால் சுதந்திர இந்தியாவில் எந்த ஒரு குடிமகனுக்கும் தீங்கு நேராது என்று கராச்சித் தீர்மானம் கூறுகிறது. கிணறுகள், குளங்கள், பொது இடங்களிலும், எல்லாக் குடிமக்களுக்கும் சம உரிமை உண்டு என்றும் கூறுகிறது. இருப்பினும் இன்று நாம் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் (SC/ST)) என்று குறிப்பிடும் மக்களைப் பற்றி தனியாக எதுவும் குறிப்பிடவில்லை. இப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பாக காந்தி, அம்பேத்கர் ஒப்பந்தப்படி, கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு என்ற கருத்து உருவானது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்நாட்டில் கடுமையாக ஒடுக்கப்பட்ட அம்மக்களுக்கு, சுதந்திர இந்தியாவில் சம உரிமை அளிக்கப்படும் என்ற வாக்குறுதியைக் காங்கிரஸ் அளித்தது.
தலித் மக்களின் சமூக ஒடுக்கு முறையின் பொருளாதாரப் பரிணாமத்தை காங்கிரசோ அல்லது டாக்டர் அம்பேத்கரோ கவனிக்கத் தவறியது என்பது வேறு விஷயம். அக்காலத்தில் இப்பிரச்சனையை கம்யூனிஸ்ட்டுகள் தான் எழுப்பி வந்தனர். 1930 ல் செயலுக்கான மேடையில் (Platform Of Action) இவ்விஷயம் முக்கியமான பிரச்சனையாக இடம் பெற்றது. எனினும் இந்நிலை நீண்டநாள் நீடிக்கவில்லை. இந்திய அரசியலமைப்பு விரைவில் கையெழுத்திட்ட பின் நடந்த தலித் மக்களின் பேரணியில் அம்பேத்கர் இது பற்றிப் பேசினார். இன்று தலித்துகள் சிவில், அரசியல் சமத்துவமுள்ள ஒரு யுகத்தில் நுழைகிறார்கள் – எனினும் அங்கு சமூகப், பொருளாதார சமத்துவம் இருக்காது என்றார் அவர். இது ஒரு முக்கியமான கூற்று. தலித்துக்களின் முன்னேற்றத்திற்காக கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடுகள் தொடர்ந்தாலும், அவை பெரும்பாலான இம்மக்களுக்கு குறிப்பிட்ட அளவு உதவவில்லை என்பது யதார்த்தம். ஜாதி – வர்க்க ஒருங்கிணைப்பு (Cast – Class Comondance) காரணமாக, பொருளாதார ஏணியின் அடித்தளத்தில் இருப்பவர்கள் சமூகப் படிகளிலும், அடித்தளத்தில் இருப்பதே இதன் காரணம். இன்னும் விவசாயக் கூலிகளில் பெரும்பாலானோர் தலித்துக்கள் என்பதால் நிலச் சீர்திருத்தம் இவர்களுக்கு சொத்தைத் தருவதோடு, சமூக அந்தஸ்த்தையும் தரும். மேற்கு வங்கம் இதைத்தான் பளிச்சென்று காட்டுகிறது. ஆனால், இதுதான் நாடு முழுவதும் கவனமாகத் தவிர்க்கப்பட்டது.
இன்னும் சில உதாரணங்கள்
வாழ்நிலைக் கேற்ற கூலி, நல்ல பணிச் சூழல், வரையறுக்கப்பட்ட வேலை நேரம், பெண் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு, சுரங்கம் மற்றும் தொழிற்சாலைகளில் குழந்தைத் தொழிலாளர்களைப் பணியிலமர்த்தத் தடை, கிராமப்புற கடன்கள் ஒழிப்பு, கந்து வட்டி ஒழிப்பு (இதனால் நம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்) போன்ற பல்வேறு விஷயங்களில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் பற்றி இங்கு பேசாமல் இருப்பதே நல்லது. ஆளும் வர்க்கம் சாமர்த்தியமாக இவற்றில் பலவற்றை அரசின் கொள்கைகளை நெறியுறுத்தும் கோட்பாடுகளில் வைத்தது. இதனால், இவை செயல்படுத்தப்பட வேண்டிய வரையறைக்குள் வராமல், உன்னதமான விருப்பமாகவே நின்றுவிட்டன.
இவை எவ்வாறெல்லாம் கேலிக் கூத்தாகின என்பதற்கு ஒரு உதாரணம் பார்க்கலாம். அரசு அனைவருக்கும் கட்டாய அடிப்படைக் கல்வி வழங்கும் என்று கராச்சி தீர்மானம் கூறியது. சுதந்திரத்திற்குப் பின் அடிப்படைக் கல்வி (Primary) என்பது ஆரம்பக்கல்வி (Elementary) என்று மாறியது. புதிய அரசியலமைப்புச் சட்டமோ 10 ஆண்டுகளில் அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச, கட்டாய ஆரம்பக்கல்வி அளிக்க அரசு முயற்சி செய்யும் (trike to Provide) என்றது. கராச்சித் தீர்மானத்தில் இது அடிப்படை உரிமைகளும், கடமைகளும் என்ற தலைப்பில் 1 (XI) பகுதியாக இடம் பெற்றதும், சுதந்திரத்திற்குப் பின் இது நெறியுறுத்தும் கோட்பாடுகளில் வைக்கப்பட்டதும் கவனிக்கத் தக்கது.
56 ஆண்டுகளாகியும், நடைமுறைப்படுத்தாத இவ்விஷயத்தை 10 ஆண்டுகளில் செய்வதாகக் கூறிய விந்தையை என்ன வென்று சொல்வது?
பொது சுகாதாரம், கல்வி மற்றும் இதர சமூக நலத் திட்டங் களுக்கான செலவுகளை இந்நாட்டின் எதிர்கால வளத்திற்கான முதலீடு எனக்கருதாமல், வீண் செலவு என்றே இந்திய ஆளும் வர்க்கங்கள் நினைத்து வந்துள்ளன. கோத்தாரி கமிஷனின் பரிந்துரைகள் வந்த பின், இரண்டாண்டுகள் கழித்து, 1968 ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதத்தை செலவிட மத்திய அரசு ஒப்புக் கொண்டது. ஆனால், அதன் பின் 36 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாய் வந்த பல அரசாங்கங்கள் இந்தப் பரிந்துரையை அமலாக்கவில்லை. இடதுசாரிகளில் கடும் நிர்பந்தம் காரணமாக தற்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கல்விக்கு இத்தொகை ஒதுக்குவதாக ஒத்துக் கொண்டுள்ளது.
மதச்சார்பின்மை, கூட்டாட்சி
கராச்சித் தீர்மானம் அதிக முக்கியத்துவம் தந்த மற்றொரு விஷயம் மதச்சார்பற்ற அரசியல். அரசு எந்த மதத்தையும் சாராமல் நடுநிலை வகிக்கும் என அது கூறியது. ஆனால், இன்று ஆளும் அரசியல் வாதிகள் மதவாதப் பிரச்சனைகள் எழுந்தால் நடுங்குகிறார்கள். மதவாத சக்திகளோடு சமாதானமாகப் போகிறார்கள். இல்லை யெனில் சரணாகதியடைகிறார்கள். அவர்களில் பலரும் மதச்சார்பின் மையை எந்த மதத்தையும் சாராது நடுநிலை வகித்தல் என்ற பொருளில் பார்க்காது, எல்லா மதவாத சக்திகளுடனும் ரகசியத் தொடர்பு வைத்திருத்தல் என்ற பொருளில் பார்க்கின்றனர். எனினும், சாதாரண மக்கள் மதச்சார்பின்மையை சரியான வழியில் புரிந்து கொண்டுள்ளனர். இன்றும் நமது மதச்சார்பற்ற தன்மை பாதுகாக்கப் படுகிறது என்றால், அது இந்நாடு எதிர் நோக்கும் சவால்களை உணர்ந்து, தேச ஒற்றுமையைக் காப்பதன் அவசியத்தை உணர்த்த, உண்ண உணவும், உடுக்க உடையும் இல்லாத, படிப்பறிவில்லாத நமது பாமர மக்களால் தான்.
நமது நாட்டின் அடிப்படைத் தன்மைகளில் முக்கியமான மற்றொரு அம்சமான கூட்டாட்சி பற்றி கராச்சி ஆவணம் எதுவும் கூறவில்லை. இரு காரணங்களால் இது நமக்கு வியப்பளிக்கிறது. முதலாவதாக, இதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்புதான், மோதிலால் நேரு கமிட்டி எதிர்கால இந்தியாவில் கூட்டாட்சி முறைதான் இருக்க வேண்டும் என்று தெளிவாகக் கூறியிருந்தது. கராச்சி மாநாடு காங்கிரசை இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டின் விவாதப் பொருள்களில் இந்தியாவில் கூட்டாட்சி முறையின் அவசியம், அதற்குத் தேவையான அம்சங்கள் ஆகியன இடம் பெற்றது இரண்டாவது காரணம். 1930 ல் காங்கிரஸ் முதல் வட்ட மேஜை மாநாட்டைப் புறக்கணித்தது. ஒத்துழையாமை இயக்கம் துவங்கியது. பிறகு காந்தி – இர்வின் ஒப்பந்தம் அடுத்த வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொள்ளும் சூழலை உருவாக்கியது. அதை கராச்சி மாநாடும் அனுமதித்தது எல்லாம் நாம் அறிந்தவையே. ஆனாலும், இந்திய அரசுச்சட்டம் 1935ன் கூட்டாட்சி பற்றிய பகுதியை, சரியில்லை எனக் கூறி காங்கிரஸ் நிராகரித்தது. இச்சட்டப்படி 1937 ல் நடந்த மாகாணத் தேர்தல்களில் மட்டுமே போட்டியிட ஒப்புக் கொண்டது.
இது இவ்வாறு இருப்பினும், கூட்டாட்சித் தத்துவத்தை 1921 வாக்கிலேயே காங்கிரஸ் ஏற்றுக்கொண்டுள்ளது. அப்போதே அது நிர்வாகக் காரணங்களுக்காக பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்த மாகாணங்கள், ராஜதானிகளை காங்கிரஸ் நிராகரித்துள்ளது. இதற்கு மாறாக, காந்தியடிகள் தலைமையிலான காங்கிரஸ் தனது கிளைகளை மொழிவாரியாகப் பிரித்தது. 1928 ல் நேரு தலைமையிலான கமிட்டி அளித்த அறிக்கையில் மொழிவழி மாநிலங்கள் அமைப்பது பற்றிய சிந்தனைகள் தெளிவாக இடம் பெற்றன. சுதந்திரத்திற்குப் பின், மொழிவழி மாநிலங்கள் அமைய மக்கள் கடுமையாகப் போராடி, பல தியாகங்கள் செய்ததும், பெரும்பாலும் இப்போராட்டங்கள் கம்யூனிஸ்ட்டுகள் தலைமையில் நடந்ததும் வேறு விஷயம்.
இன்று இந்திய அரசியலின் இரு அடிப்படைத் தன்மைகளான மதச்சார்பின்மையும், கூட்டாட்சித் தத்துவமும், மதவாத சக்தி களாலும், அவர்களது கூட்டாளிகளாலும் கடும் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றன. இன்று இவற்றைக் காப்பது மட்டுமின்றி, இவற்றை வலுப்படுத்துவதும் தேவையாக உள்ளது.
ஏகாதிபத்தியத்திற்கெதிரான மக்கள் உணர்வுகளைப் பிரதி பலிக்கும் வண்ணம், சுதந்திரத்திற்கு முன் இந்திய தேசிய காங்கிரஸ் பல்வேறு வாக்குறுதிகளைத் தந்துள்ளது. அவை இன்றைய சூழலில் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன. உதாரணமாக, தங்கள் நலன்களைக் காக்க விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் சங்கம் அமைக்கும் உரிமை வழங்கப்படும் என்ற வாக்குறுதிகளுக்கு எதிராக இன்று அவ்வுரிமையைப் போராடிப் பெற்றவர்களிடமிருந்து அதைப் பறிக்கும் முயற்சிகள் நடக்கின்றன. வேலை நிறுத்தங்கள் சட்ட விரோதமானவை என்ற உச்ச நீதி மன்றத் தீர்ப்பை மாற்ற பாராளுமன்றம் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இன்று வரை ராணுவச் செலவுகள், இதர செலவினங்களைக் குறைத்து, மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதியைத் திருப்பிவிட அரசுக்கு இயலவில்லை. கனிம வளம், ரயில், கப்பல், தரைப்போக்குவரத்து, கேந்திரமான தொழிற்சாலைகள் அனைத்தும் அரசுடைமையாக்க, அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது வாக்குறுதி.
ஆனால், இன்று அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொழிற் சாலைகள், சேவைத்துறைகளை தங்கத்தாம்பளத்தில் வைத்து தனியார் பூர்ஷ்வா முதலாளிகளுக்குத் தாரை வார்ப்பதைப் பார்க்கிறோம். ஜவுளி மற்றும் உள்நாட்டுத் தொழில்களை வெளி நாட்டுப் போட்டியில் இருந்து பாதுகாப்போம் என்பது பழைய உறுதி மொழி. இன்று யதார்த்தத்தில் நம் உள்நாட்டுத் தொழில் களெல்லாம் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு இரையாகின்றன. சம ஆடுதளம் கூட நம் தொழில்களுக்கு இல்லை. பணம் மற்றும் அந்நியச் செலவாணி பற்றிக் குறிப்பிடும் போது, நாட்டின் நலன் கருதி அவை கட்டுப் படுத்தப்படும் என்றார்கள். நடைமுறையில் ஏகாதிபத்தியத்தின் வேண்டுகோளை ஏற்று ரகசியமாகவோ, வெளிப்படையாகவோ பணத்தின் மதிப்பு இறக்கப்படுகிறது.
மொத்தத்தில், இந்நாட்டின் விடுதலைப் போராட்டத்தின் போது, போராடிய மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இந்த நாட்டின் ஆளும் வர்க்கங்கள் அக்கறை காட்ட வில்லை. நம் மக்களின் மகத்தான போராட்டங்களின் விளைவாக இங்கு ஒரு மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு ஏற்பட்டுள்ளது. எனினும், ஏகாதிபத்திய பூர்ஷ்வா சக்திகள் நமது குடியரசின் அடித்தளத்தை பலவீனப்படுத்தி, மக்களை என்றும் அடிமைத்தளையில் வைத்திருக்க முயற்ச்சிக்கின்றன. அவர்களுக்குப் புரியக்கூடிய வகையில் பதிலளிக்க ஒரே மொழிதான் உள்ளது – போராட்ட மொழி. மக்களுக்கு அளிக்கப் பட்டுள்ள வாக்குறுதிகள் காகித மலர்களாக இல்லாது உண்மையாக மாற இடதுசாரி, ஜனநாயக சக்திகள் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை தூக்கி எறிந்ததைப்போல, மக்கள் தங்கள் விடுதலைப் போராட்டத்தை விரிவு படுத்தி, வலுப்படுத்தி, நம் குடியரசைக் காக்க வேண்டும். இந்தக் குடியரசு நன்னாளில், நமது இத்தீர்மானத்தைப் புதுப்பித்துக் கொண்டு, அதன் வெற்றி நோக்கி முன்னேறுவோம்!