கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பா கண்டத்தில் பெரும் விவாதம் நடந்து கொண்டிருந்தது. அதாவது ஆரிய இனத்தில் பிறப்பவர் அறிவாளி என்றும், வேறு இனங்களில் பிறக்கும் குழந்தைக்கு அவ்வளவு மதிநுட்பம் இருப்பதில்லை என்றும் விவாதம் நடந்தது. அதேபோல் தான், உயர்கல்வி நிலையங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதமானம் இட ஒதுக்கீடு என்கிற, மத்திய அரசின் முடிவுக்கு, எதிரான விவாதங்களும் நடைபெறுகிறது. தகுதி என்பது, அவரவர் வளருகிற சமூக சூழ்நிலையில் இருந்தே உருவாகிறது. பிறக்கும் போதே எல்லோரும் எல்லாத் தகுதிகளுடன் பிறப்பதில்லை. உலகமயமாக்கல் கொள்கையைப் பற்றி குறிப்பிடுகிறபோது, அடிப்படைவாதம் உலக மயமாக்கலோடு சமரசம் செய்து கொள்கிறது என்று சமீர் அமீன் குறிப்பிடுகிறார். இங்கே அடிப்படை வாதம் என்பது மத, சாதி மற்றும் இன ரீதியிலான ஆதிக்க மனப்பான்மை ஆகும்.
உலகமயமாக்கல் காலத்தில் பல்வேறு விதமான பண்பாட்டு பரிவர்த்தனைகள் நடந்தாலும், அடிப்படை சிந்தனையில் இருந்தும், ஆதிக்க சிந்தனையில் இருந்தும் சிலர் மாறுவதே இல்லை. பொருளாதார ரீதியினாலும், சமூக ரீதியினாலும் உயர்ந்தோர் எனக் கருதிக் கொள்பவர்கள், இத்தகைய அடிப்படை வாதத்துடன் சமரசம் செய்து கொள்பவர்களே. இது ஆதிக்க உணர்விலிருந்தே வெளிப்படுகிறது.
1927ல் அமெரிக்க உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், கேரியேக்கும், அவரது சகோதரியும் கட்டாய கருத்தடை செய்து கொள்ள வேண்டும். இவர்கள் பரம்பரை முட்டாள்கள் எனவும், இவர்கள் பிள்ளை பெற்றால் அவர்களும் முட்டாள்களாகவே இருப்பார்கள் என்றும் குறிப்பிட்டது. ஆகவே அமெரிக்க நாடு முட்டாள்கள் நிறைந்த சமூகமாக மாறி விடக்கூடாது எனும் நல்லெண்ண அடிப்படையில், மக்கள் நலன் கருதி கட்டாயக் கருத்தடைக்கு ஆணையிட்டது. இந்த தீர்ப்பினைப் போலவே, இன்று நம் நாட்டில் செயல்பட்டு வரும் தேசிய அறிவுசார் ஆணையம் (National Knowledge Commission), கல்வியில் இட ஒதுக்கீடு என்பது தேசத்தை பின்னோக்கி நகர்த்துவதற்கு ஒப்பாகும், என்று குறிப்பிடுகிறது. எனவே இட ஒதுக்கீடு கூடாது என வலியுறுத்துகிறது. பிரதம மந்திரியின் ஆலோசனைகள் இரண்டு பேர் இடஒதுக்கீடு தகுதியை சீரழிக்கும். எனவே எங்கள் பணியினை ராஜினாமா செய்கிறோம் என்று வெளியேறியுள்ளனர்.
இங்கே தகுதி என்பது பரம்பரை சார்ந்தே பயன்படுத்தப் படுகிறது. இது உண்மையா? என்பதை எல்லா நாடுகளிலும் வெவ்வேறு மட்டங்களில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்தியாவில் கரண்ட் சையின்ஸ் எனும் ஆய்விதழில் சுயந்தராய் சவுத்ரி, சங்கீதா ராய் ஆகியோர், 23 ஜாதிக்கருத்துக்களை ஒப்பிட்டு ஆய்வுகளாகத் தேர்வு செய்துள்ளனர். தென்னிந்தியாவில் ஐயர், வன்னியர், பள்ளர் மற்றும் வட இந்தியாவில் பிராமணர், முண்டா பழங்குடி இனத்தவர் என பலரையும் ஆய்வு செய்து இவர்களின் மைட்டோ காண்ட்ரியா டி.என்.ஏ. எனப்படும் மரபணுக் கூற்றினை ஒப்பிட்டுள்ளனர். அதிலிருந்து மேற்படி பிரிவினர் அனைவரும் ஒன்று போன்ற மரபணுக்கூறுகளை உடையவராக உள்ளனர் என்பது கண்டறியப் பட்டுள்ளது. இப்படிப்பட்ட அறிவியல் ரீதியில் சாதிய வித்தி யாசங்கள் எதுவும் இல்லை என்று நிரூபணம் செய்யப்பட்ட பின்னும், இன்றைய இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள், எதை அடிப்படையாகக் கொண்டு, இடஒதுக்கீடு தகுதியை அழித்து விடும் என்று கூறுகிறார்கள்?
மிகச் சமீபத்தில் +2 தேர்வு முடிவில் வெளியான ஒரு தகவல், உச்சி முடியைப் பிடித்து உலுக்குகிறது. அப்பா பெரிய நிறுவனத்தின் மேலாளர், அம்மா இன்னொரு நிறுவனத்தின் அதிகாரி என்ற சூழலில் பிறந்து வளர்ந்த மாணவர் 1200 மதிப்பெண்ணுக்கு 1153 மதிப்பெண் பெற்றுள்ளார்.
அதே நேரத்தில் அப்பா, அம்மா இரண்டு பேரும் அன்றாடம் கூலி வேலைக்குச் செல்பவர்கள். மகனோ பள்ளி முடிந்து மாலையில் ஹோட்டலில் டேபிள் துடைக்கும் பணியை மேற்கொண்ட ஒரு மாணவன், 1200 மதிப்பெண்ணிற்கு 1013 மதிப்பெண் பெற்றுள்ளார். மேற்கண்ட இந்த இரண்டு பேரில் யார் அதிக தகுதியும், திறமையும் உடையவர்? என்பதை இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களால் விளக்க முடியுமா?
கடுமையாக உழைத்து முன்னுக்கு வரும் ஒருவர் புறக்கணிக்கப்படுவது இந்திய சமூகத்தில் புதிதல்ல. மகாபாரதமும், ராமாயணமும் மேற்படி புறக்கணிப்பு குறித்து கதைகளை உள்ளடக்கி இருக்கிறது. தானே கற்றுக்கொண்ட வில்வித்தைக்கு ஏகலைவன், துரோணருக்கு குருதட்சணையாக, தன் கட்டை விரலை வெட்டிக் கொடுத்தது நடந்தது. தேரோட்டியின் மகனாக வளர்க்கப்பட்ட கர்ணனுக்கு ராஜ்ஜியம் கொடுக்கப்பட்டு மன்னனாக மாறிய பின்னும், கர்ணன் சுயவரத்தில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டான். மன்னனாக இருந்தும் பலநேரங்களில் அவமானப்படுத்தப்பட்டான். பிராமணர் அல்லாத விசுவாமித்திரர், மக்களை பெருமழையில் இருந்து மீட்பதற்கு தன்னையே அழித்துக்கொள்ள முன்வந்தார். அது கண்டு அவருடைய சமஸ்கிருத கல்வி காரணமாகவும், அவருக்கு பிரம்மரிஷி பட்டம் வழங்கப் பட்டது. இருந்தபோதிலும், ராமனின் திருமணத்தின் போது, பிராமணரல்லாத விசுவாமித்திரர் திருமணத்தை நடத்தி வைக்க முடியாது என்றும், பிராமணரான வஷிஷ்ட்டர் தான் நடத்தி வைப்பார் என்றும் வலியறுத்தப்பட்டு, விசுவாமித்திரர் வெளியேற்றப் படுவார். இப்படி பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக, வேறு வேறு தளங்களில், வேறு வேறு காரணங்களுக்காக, சாதி ரீதியான அவமானங்கள் தொடருகின்றன.
சாதிய படிநிலையின் கீழ்நிலையில் இருப்பவர்கள் இரக்கமற்று குற்றங்களைப் புரிபவர்கள் என சித்தரிக்கப்பட்டு வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு செஞ்சியில் பணம் களவாடப்பட்டதைக் கண்டறிய முடியாத நிலப் பிரபு, அங்கே பணியாற்றும் குழந்தை உழைப்பாளிகளை அழைத்து, அவர்கள் பழங்குடி இனத்தை சார்ந்தவர் என்ற காரணத்தினால் திருடி இருக்க முடியும் என்ற முடிவுக்கு வந்தார். உண்மையைக் கண்டறிய மாட்டு சாணத்தை கரைத்து அதை கொதிக்க வைத்து, அதற்குள் குழந்தைகளின் கையைத் திணித்து கொடுமை செய்தனர். அதாவது இந்த சாதியைச் சார்ந்த குழந்தைக்கு படிக்கிற புத்தியை விடவும், திருடுகிற புத்தி அதிகம் என்ற பரம்பரை பரம்பரையான கற்பிதங்களில் இருந்து இந்த சிந்தனைகள் வளர்க்கப்படுகிறது. ஆனால் சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் உயர்வானவர்கள், படித்துப் பெற முடியாத தகுதியை பணத்தின் மூலம் பெறுவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இங்கே தகுதி குறித்த விவாதம் நடத்தப் படுவதில்லை. கடந்த 2005 ஆக. 12 அன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தனியார் கல்லூரிகளின் இட ஒதுக்கீடு வேண்டும் என அரசு கட்டாயப்படுத்தக்கூடாது என்றும், வெளிநாடு வாழ் இந்தியர்கள் பல லட்சங்களை கொண்டிருக்கும் தகுதி பெற்றவராக இருந்தால் அவர்களுக்கு 15 சத இட ஒதுக்கீடு வழங்கலாம் என்றும் தீர்ப்பு வழங்கினர். அப்போது இது போன்ற போராட்டம் ஏன் நடை பெறவில்லை? என்றால் காரணம் பணமும் ஒரு தகுதியாக கருதப் பட்டதே ஆகும். பணம் இருந்தால் அவனுக்கு திறமை குறைவாக இருக்காது என நம்பப்படுகிறது.
தகுதி குறைவானவர்கள், மருத்துவம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றைப் படிக்கிறபோது தரம் குறையாதா? என்ற வாதமும் அதிகரித்துள்ளது. படிப்பில் தகுதி குறைந்த ஒருவர் பணத்தினால் தகுதி பெற்றவராகி அதே மருத்துவத்தையும், தொழில் நுட்பத்தையும் படிக்கிறபோது, குறைகிற தரத்தைப் பற்றி கவலை கொள்வதில்லை. தகுதி என்பது இந்திய சமூகத்தில் சாதியை மட்டுமே மையப்படுத்தி பேசப்பட்டு வந்திருக்கிறதே ஒழிய, வேறு வடிவங்களில் இல்லை. இந்த இளக்காரமான பார்வையை மாற்றவே சமூக ரீதியிலான இடஒதுக்கீடு என்பது தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இட ஒதுக்கீடு தந்த சமூக வளர்ச்சி
இட ஒதுக்கீடு கொள்கை சமூகத்தை சமப்படுத்த உதவியதா? என்ற கேள்விக்கு விடையளித்தால் தான், இட ஒதுக்கீடு கொள்கைக்கான போராட்டத்தின் நியாயம் புரியும். சென்னை ராஜதானியாக இருந்த நேரத்தில் 1831 கால சட்டத்திலேயே இட ஒதுக்கீடு கல்வி மற்றும் வேலைவாய்ப்பால் அமுல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்னுக்கு வந்துள்ளது. இக்கோரிக்கைகளை பிரிட்டிஷார் ஒருசில இடங்களில் கணக்கில் எடுத்துள்ளார். 1850-51-ம் ஆண்டுகளில் பிரிட்டிஷைச் சார்ந்த மான்ஸ்டூவர்ட் எல்பின்ஸ்டோன் என்ற நிர்வாகி, கிறிஸ்த்துவ மிஷனரியைச் சார்ந்தோர், சாதிய படி நிலையில் கீழே உள்ள சாதியைச் சார்ந்த மாணவர்கள் சிறந்தவர்களாக உள்ளனர், என்பதை கண்டறிந்துள்ளனர், என குறிப்பிட்டுள்ளார். இதை உயர்சாதியினர் எப்படி புரிந்து கொண்டு எதிர்வினையாற்றுவார்கள் என்பது சிக்கலானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளார். அதே ஆண்டில் பாம்பே ராஜதானியின் கல்வி ஆணையம், அதனுடைய அறிக்கையில், மிக நம்பிக்கையோடு பின் தங்கிய சமூகப் பிரிவினரான மகர் மற்றும் தேட் போன்றவர்களின் குழந்தைகளுக்கு கல்வி அளித்தால், சமூகத்தின் மற்ற பிரிவினரைப் போலவே சிறந்த ஞான முடையவர்களாக, வளரும் வாய்ப்புள்ளது, என குறிப்பிட்டுள்ளது.
இந்திய கல்வி ஆணையம்,1882ல் தீண்டத்தகாதவர்களாக உள்ள சாதியினருக்கு, ஆரம்பக்கல்வியில் வாய்ப்பளிக்கும் விதத்தில் ஒரு திட்டத்தை உருவாக்கியது. அதன்படி, மலபார் (சென்னை ராஜதானி), மத்தியப் பகுதியில் இருந்த மாநிலங்களான, மத்தியப் பிரதேஷ், மகராஷ்ட்ரா மற்றும் இன்றைய சட்டீஸ்கர், பாம்பே ராஜதானியில் இருந்த மகராஷ்ட்ரா, கர்நாடகா, குஜராத் ஆகிய பகுதிகளிலும் இத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது. இதன்மூலம் ஒருசில குறிப்பிட்ட சாதியினரின் ஏக போக உரிமையோடு இருந்த கல்வி மற்றும் வேலை வாய்ப்பில், சமூகரீதியில் பின் தங்கியவர்களுக்கு ஓரளவு வாய்ப்பினைத் தர முடிந்தது. இத்தகைய குறைந்த பட்ச கல்வி அறிவும், அதன்பின் விடுதலை இந்தியாவின் இடஒதுக்கீடு மூலம் பெற்ற கல்வி அறிவும், சமூக ரீதியில் பின் தங்கிய மக்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருந்துள்ளது. அதேபோல் பிற்படுத்தப் பட்டோருக்கான இடஒதுக்கீடு, 1902ம் ஆண்டு கோல்சன்பூர் மகாணத்திலும், மில்லர் என்பவரின் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைப்படி மைசூர் மகாணத்தில் 1921-ம் ஆண்டிலிருந்தும், எல்.ஜி. ஹவானூர் கமிஷனின் பரிந்துரைப்படி சென்னை ராஜஸ்தானியில் 1921-ம் ஆண்டிலிருந்தும், திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் 1935ம் ஆண்டிலிருந்தும் அமுல்படுத்தப்படுகின்றன.
இத்தகைய இடஒதுக்கீட்டின் மூலம், பிற்படுத்தப் பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் முழுமையான சமூக மாற்றத்தைப் பெற்றுவிட்டனர் எனக் கூறுவதற்கு இல்லை. ஆனால் தனிநபர் வருமான விகிதத்தில், கல்வி அறிவு பெற்றோரின் சராசரி விகிதத்தில், மருத்துவ வசதிகளைப் பயன்படுத்துகிற சராசரி விகிதத்தில் சில மாற்றங்களைக் காண முடிந்துள்ளது. 2001-ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்திய மனித வளர்ச்சி அறிக்கை தென்னிந்தியா மற்றும் வட இந்தியாவுக்கான ஒப்பீட்டு அறிக்கையை வெளியிட்டு உள்ளது.
எண் | சுகாதார குறியீடு | தெற்கு | வடக்கு | இந்தியா |
1 | பிறப்பு விகிதம் | 2 | 4 | 3 |
2 | இறப்பு விகிதம் | 7 | 10 | 9 |
3 | குழந்தை இறப்பு விகிதம் | 44 | 78 | 68 |
4 | மருத்துவ மனைகளில் பிரசவம் | 70 | 18 | 34 |
5 | பிறப்பின்போது மருத்துவ உதவி | 76 | 28 | 42 |
6 | குழந்தை நோய் தடுப்பு நடவடிக்கை | 75 | 18 | 42 |
7 | தொற்று நோய் தடுப்பு | 91 | 64 | 76 |
8 | இரும்பு சத்து மாத்திரைகள் | 88 | 36 | 58 |
9 | பிரசவத்தின்போது தாய் இறப்பு | 158 | 582 | 407 |
10 | PHC சராசரி மக்கள் தொகை | 24044 | 29574 | 27364 |
11 | வறுமை விகிதம் | 17 | 32 | 26 |
ஆதாரம்: தேசிய மனித வளர்ச்சி அறிக்கை : 2001
இந்த அறிக்கையை கம்யூனிஸ்டுகள் பார்க்கிற போது திருப்தி பட முடியாது. இதில் இருக்கும் ஓட்டைகளும், இன்னும் கிடைக்க வேண்டிய தேவைகளும் கண்ணை உறுத்திக் கொண்டே இருக்கும். ஏனென்றால், கம்யூனிஸ்ட்டுகள் 100 சதமான வெற்றியை நோக்கி சிந்திப்பவர்கள். ஆனால் இன்றைய முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அமைப்பு முறையில் தென்னிந்தியா சற்று முன்னேறி இருப்பதில், இட ஒதுக்கீடு அளித்த பங்கு மறுப்பதற்கு இல்லை. இட ஒதுக்கீடு அமுலில் உள்ள தென்னிந்திய மாகாணங்களை விடவும், வட இந்திய மாகாணங்களில் உள்ள விளை நிலத்தின் தன்மை, நீர்வளத்தின் தன்மை, கனிம வளங்களின் தன்மை, உள்ளிட்ட பல்வேறு வளங்கள் மனித குல வளர்ச்சிக்கு பயன் தரவில்லை என்பதை ஓப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் மற்றும் ஜுன் ட்ரெஸ் ஆகியோர் நடத்திய சமீபத்திய ஆய்வான இந்திய வளர்ச்சி மற்றும் பங்கேற்பு (Indian Development and Participation)”தமிழகத்தில் சுகாதாரத் துறை ஒரு சில முக்கியமான காரணம்,” என்று சுட்டிக் காட்டியுள்ளது. அதேபோல் லீல் விசாரி என்ற பெண், தனது ஆய்வின் மூலம் தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் பணியாற்றுகிற மருத்துவர்களுக்கும், நோயாளிகளுக்கும் இடையில் மொழி, உடை, செயல்பாடு மற்றும் விழுமியங்களின் (Values) அடிப்படையில் எந்த ஒரு வித்தியாசத் தையும் பார்க்க முடிவதில்லை. இதற்கு காரணம் தாழ்த்தப் பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பெண்கள் மருத்துவர் களாக ஆவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகும் என்கிறார். அதே நேரத்தில் வட இந்தியாவில் உள்ள மருத்துவர்களுக்கும், நோயாளி களுக்கும் இடையே பெரிய அளவில் இடைவெளி இருப்பதாகக் குறிப்பிடுகிறார். இதற்குக் காரணம், மருத்துவர்களில் பெரும் எண்ணிகையில் உயர் சாதியினர் மட்டுமே இருக்கின்றனர். இவர்களால் பின் தங்கிய பிரிவினரில் இருந்து வருகிற நோயாளி களை முழுமையாகப் புரிந்து கொள்ள முடிவதில்லை, என்றும் குறிப்பிடுகிறார்.
வட இந்தியாவில் இருக்கிற இன்னும் ஒரு முக்கியமான பிரச்சனை மூளை வெளியேற்றம் (Brain Drain) ஆகும். இந்தியாவில் முக்கியமான உயர்கல்வி நிறுவனங்களான IIT, IIM, IIMS, PGI (Chanrdigarh) ஆகியவற்றில் படிக்கின்ற பெரும்பான்மையான மாணவர்கள் வெளிநாடுகளில் குறிப்பாக, அமெரிக்காவில் பணியாற்றுகின்றனர். தற்போது சுமார் 1 கோடி இந்தியர்கள் அமெரிக்காவில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தியாவில் பணியாற்ற விரும்பாமை IIT போன்ற நிறுவனங்களில் படிக்கின்ற மாணவர்களிடம் இது அதிகரித்து வருவதற்கு அடிப்படைக் காரணம், ஒன்று இந்தியாவில் அவர்களைப் பயன்படுத்துவதற்கான உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்களின் போதாமை, இரண்டு இந்த மாணவர்களைப் பயன்படுத்தும் அளவிற்கு பணத்தின் போதாமை. மூன்று வெளிநாடுகளில் ஏற்கனவே செட்டிலாகி விட்ட தன் சொந்த பந்தங்களின் நெருக்கடி. சில தினங்களுக்கு முன்பாக அமெரிக்காவில், இடஒதுக்கீடு கூடாது என்று நடந்த ஆர்ப்பட்டமே இதற்குச் சாட்சி. இதற்கும் இட ஒதுக்கீட்டிற்கும் என்ன சம்மந்தம்? என்றால், கம்ப்யூட்டர் துறை தவிர்த்து எஞ்சினியரிங் மற்றும் மருத்துவம் படித்த பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் இந்தியாவிலேயே இருந்து பணியாற்றியுள்ளனர். இந்திய ரயில்வே போன்ற நிறுவனங்களில் சாம்பிள் எடுத்துப் பார்ப்பதன் மூலம் இவற்றைப் புரிந்து கொள்ள முடியும். தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களிடையே ஏற்படுகிற சமஸ்கிருதமயமாக்கலும் (Samkrisation), உயர் சாதியினரிடத்தில் உள்ள மேற்கத்திய மயமாதலும் (Westernisation)தான் இதற்குக் காரணமாகும். இத்தகைய சமஸ்கிருதமயமாக்கல் மற்றும் மேற்கத்தியமயமாக்கல் நிகழ்வுகள், தீண்டாமை இந்த சமூகங்களில் இன்னும் தொடருவதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுப்பதாக இருக்கின்றன. இடஒதுக்கீட்டின் நன்மைகளைப் பேசுகிற போது, தீண்டாமை குறித்த கேள்விக்கு விடை காண முடியாத நெருடல் வருவது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும்.
மண்டல் கமிஷன் 26 ஆண்டு காலதாமதம்
நமது நாட்டில் மிக எளிமையான பணி கமிஷன் அமைப்பது ஆகும். தீவிரமான போராட்டமோ, கொலையோ, கலவரமோ எதுவானாலும் ஒரு கமிஷனை அமைத்து விட்டால், அந்நிகழ்வு கிட்டத்தட்ட மறக்கப்பட்ட ஒன்றாக மாறிவிடும். இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கொடுப்பது குறித்து ஆய்வு செய்ய இதுவரை இரண்டு கமிஷன்கள் மட்டுமே அமைக்கப் பட்டுள்ளன. ஆனாலும், அவைகளின் பரிந்துரைகள் தொடர்ந்து தாமதமாகி வருகிறது. முதலில் 1953, ஜனவரி-29 அன்று காகா காலேகர் என்பவரின் தலைமையில் 11 பேர் கொண்ட கமிஷன் அமைக்கப்பட்டது. இக்குழு 1955, மார்ச் 30-ல் தனது பரிந்துரைகளை சமர்பித்தது. அன்றைய மத்திய அரசு இந்தக் குழுவின் பரிந்துரைகளில் திருப்தி அடையாத காரணத்தால், மாநிலங்களே, ஆங்காங்கு இருக்கின்ற சமூக தேவைகளைக் கணக்கில் கொண்டு இடஒதுக்கீடு கொள்கையை அமுல்படுத்திக் கொள்ளலாம், என 1962-ல் அறிவிப்பை வெளியிட்டது.
காகா காலேகர் கமிஷனின் பரிந்துரை மீது, இரண்டு விதமான ஆட்சேபனைகளை மத்திய அரசு பதிவு செய்தது. ஒன்று, பின்தங்கிய பிரிவினருக்கு உண்மையில் கிடைக்க வேண்டிய பலன், 70 சதமான இடஒதுக்கீடு என்ற நீண்ட சாதிய பட்டியலுக்குள் காணாமல் போய்விடும் என்ற அச்சமாகும். இரண்டு, சாதி ரீதியில் இனம் காணப்பட்டு பிரச்சனையைத் தீர்ப்பது, மிகவும் பின் தங்கிய சிந்தனை என கருதியதாகும். இந்த இரண்டு சிந்தனைகளும் சாதியா? வர்க்கமா? என்ற பட்டிமன்றத்தில் இருந்து பிறந்திருக்க வேண்டும். இப்படி ஒரு சர்ச்சையை மைய அரசு தானே உருவாக்கி, அதன் காரணமாக, இடஒதுக்கீடு கொள்கையைத் தள்ளிப் போட்டது. பிராமணர், சத்திரியர், வைசியர் ஆகிய 3 வர்ணங்கள் வரை, வர்க்க ரீதியில் பொதுவான கண்ணோட்டத்தில் முன்னேறியவர்களாகவே நீண்ட நெடும் காலம் இருந்துள்ளார். சமூக ஒடுக்குமுறையும் இவர்கள் மீது இருந்ததற்கான தகவல்கள் இல்லை. சூத்திரர்களைப் பொருத்தளவில், வர்க்க ரீதியிலும், சாதி ரீதியிலும் சமூக ஒடுக்கு முறையை சந்தித்த கூட்டம் என்பது வெட்ட வெளிச்சமான உண்மை. ஆனாலும் காகா காலேகர் கமிஷனின் பரிந்துரை ரத்து செய்யப்பட்டது.
1978, டிசம்பர்-20ல் மண்டல் கமிஷன் அமைக்கப்பட்டது. இக்கமிஷன் தனது பரிந்துரையை 1980-ல் மைய அரசிடம் ஒப்படைத்தது. அதற்குள் அன்றைய மொரார்ஜி தேசாய் தலைமை யிலான மைய அரச கவிழ்க்கப்பட்டதால் அமுல்படுத்தவில்லை. அதன்பின் வி.பி. சிங் தலைமையிலான தேசீய முன்னணி அரசு, 1990, ஆகஸ்ட்-7ல் வேலை வாய்ப்பில் 27 சதமான இதர பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு செய்யும் கொள்கை அமுல்படுத்தப்பட்டது. இதுவும் தொடர் போராட்டங்கள் காரணமாக, நீதிமன்றம் 1993ல் கொடுத்த தீர்ப்பின் படி, 27 சத இட ஒதுக்கீடு வேலை வாய்ப்புத் துறையில் அமுல் செய்யப்பட்டு வருகிறது. சுமார் 26 ஆண்டுகள் ஆன பிறகும் கூட, மண்டல கமிஷன் பரிந்துரை செய்த கல்வி, வாய்ப்பில் 27 சத இட ஒதுக்கீடு, இன்னும் மக்களுக்கு கிடைக்க வில்லை. கல்வித் துறையில் 26 ஆண்டு காலம், 26 தலைமுறை மாணவர்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய நியாயம் கிடைக்காமல் போய் இருக்கிறது. இப்படிப்பட்ட தாமதத்திற்கான அடிப்படைக் காரணம் சாதி ரீதியான பாகுபாடும், பழைய வர்ணாசிரம, மனுதர்ம வாதிகளின் புதிய அவதாரங்களும் ஆகும்.
இந்நிலையில், மண்டல் கமிஷன் பரிந்துரைத்த நிலச் சீர்த்திருத்தம், நில விநியோகம், கிராமமுன்னேற்றம் போன்றவை அவ்வளவு எளிதில் நிறைவேறும் ஒன்றாக இருக்கிறது. மண்டல் கமிஷனின் முழுப் பரிந்துரைகளையும் அமுல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கான போராட்டமே இப்போது நடந்திருக்க வேண்டும். ஆனால், இடஒதுக்கீட்டை எதிர்த்து போராடுவது, காலம் காலமாக அனுபவித்து வந்த வாய்ப்புகளையும், வாழ்க்கை வசதி களையும் இழக்கிற கோபத்தில் பிறந்ததாகும். இந்தக் கோபம் இடஒதுக்கீடு அமுலாக்கத்தை இன்னும் ஓராண்டு தள்ளி வைத்திருக்கிறது.
2006 -கல்வியாண்டிலிருந்து அமுலாக்க வேண்டிய இடஒதுக்கீடு, 2007 ஜீலையில் இருந்து தான் அமுலாகும். இதற்காக வருகிற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் சட்டம் இயற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படி தொடர்ந்து மண்டல கமிஷன் பரிந்துரை அமுலாவது, தள்ளிப் போய்க் கொண்டே இருப்பதற்கு, சில அரசியல் சாட்சிகள் ஆதரவாகவும் இருக்கின்றன. குறிப்பாக, BJP 1990-ல் 27சத இடஒதுக்கீட்டிற்கான அறிவிப்பை திரும்பப் பெறவில்லையானால், வி.பி. சிங் அரசுக்கான ஆதரவை வாபஸ் வாங்குவதாக அறிவித்து, வாபஸ் வாங்கவும் செய்தது. இன்றைக்கும், இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் அத்வானி மற்றும் வாஜ்பாய் போன்ற தலைவர்களை தொடர்ச்சியாகச் சந்தித்து ஆலோசனை பெறுவதும், இந்தப் பின்னணியில் இருந்தே என்பது தெளிவாகிறது.
இன்று இடதுசாரிகள் குறிப்பாக CPI(M) முன்வைக்கிற, பொருளாதார ரீதியில் மேம்பட்டவர்கள் (Creamy Layor) இடஒதுக்கீட்டிலிருந்து விலக்களிக்கப்பட வேண்டும் என்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஏற்கனவே உச்சநீதி மன்றம், 1993ல் வேலைவாய்ப்பில் 27 சதவிதமான இடஒதுக்கீடு குறித்த தீர்ப்பில் குறிப்பிட்டதை மையப்படுத்தியே, மார்க்சிஸ்ட் கட்சி இப்போதும் கோரிக்கை வைத்துள்ளது. அதே நேரத்தில் Creamy Layor-ஐ முன்வைத்து இடஒதுக்கீட்டை அமுல்படுத்தக் கூடாது என மார்க்சிஸ்ட் கட்சி வாதிடவில்லை. பொருளாதார ரீதியில் மேம்பட்டவர்களுக்கு இடஒதுக்கீட்டின் அவசியம் என்ன? என்ற கேள்விக்கு விடைகாண முடியாதவர்களே மார்க்சிஸ்ட் கட்சியை அவதூறு பொழிகின்றனர். இத்தகைய பிரிவினர் வரலாற்றின் பக்கங்களைத் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள முயற்சிக்கிறார்கள். உண்மை என்னவென்றால், 1978-ல் மண்டல் கமிஷன் அமைக்கப் பட்ட போது, மொரார்ஜி தேசாய் தலைமையிலான அரசையும், 1990 -ல் மண்டல் கமிஷனின் பரிந்துரையான வேலைவாய்ப்பில் 27 சதமான இடஒதுக்கீட்டை அமுல்படுத்திய போது, வி.பி. சிங் தலைமையிலான அரசையும், இப்போது கல்வியில் 27 சதமான இடஒதுக்கீட்டை அமுல்படுத்துகிற போது மன்மோகன் சிங் தலைமையிலான அரசையும், ஆதரிப்பதில் மார்க்சிஸ்ட் கட்சி முன்னின்று செயலாற்றி இருக்கிறது. இப்படி ஒரு பெருமை வேறு எந்த கட்சிக்கும் இருக்குமா? என்பது சந்தேகமே. எனவே, மார்க்சிஸ்ட் கட்சி இடஒதுக்கீடு அமுலாவதை ஒரு போதும் தள்ளிப்போடக் காரணமாக இருந்ததில்லை.
உலகமயாக்கலும் சமூக நீதியும்:
இன்று இடஒதுக்கீட்டினை வலியுறுத்தும் அரசியல் இயக்கங்களின் பலவும் உலகமயமாக்கலை ஆதரிக்கின்றன. முன்னமே குறிப் பிட்டதைப் போல், உலகமயமாக்கல் அடிப்படை வாதத்துடன் சமரசம் செய்து கொண்டுள்ளது. உலகமயமாக்கல் கொள்கையும், அடிப்படை வாதமும் ஒடுக்கப்பட்ட மக்களை வஞ்சிப்பதில் ஒன்று பட்டு செயலாற்றுகின்றன என்பதை உணர வேண்டும். அடிப்படை வாதம் சாதீயத் தூய்மையை, வர்ணாசிரமத்தை முன்வைத்து பின்தங்கிய மக்களை ஒடுக்கும் பணியைச் செய்தது. உலகமய மாக்கல், ஒடுக்கப்பட்ட மக்கள் பயன்படுத்தும், பொதுவிநியோக முறை, அடிப்படைக் கட்டமைப்புகள் ஆகியவற்றை அரசின் கடமையில் இருந்து அபகரிக்கும் பணியைச் செய்கிறது. அடுத்ததாக, புதிய அரசுப் பள்ளிகளை, புதிய ஆசிரியர்களை, சுகாதார நலத் திட்டங்களை அரசு செய்வதில் இருந்து விலகி, தனியாரிடம் ஒப்படைத்து, அதை வணிகமயமாக்கும் பணியைச் செய்கிறது. எனவே, ஒடுக்கப்பட்டவர்களை மேலும் ஒடுக்குவதற்கான ஆயுதமாகவே, உலகமயமாக்களும், இடஒதுக்கீடும் இருந்துள்ளது என்பதை அறிய முடியும்.
இந்த சமரசத்தை உலகமயமாக்கல் கொள்கை, அடிப்படை வாதத்துடன் செய்து கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளாமல், இட ஒதுக்கீட்டையும், உலகமயமாக்கல் கொள்கை யையும் ஒரு சேர ஆதரிப்பது பேராபத்தை விளைவிக்கும். இது வெட்டப் போகிறவனின் கையில் சிக்கிய ஆடு போன்றது. 1993-ல் உச்ச நீதி மன்றம் 27சத இடஒதுக்கீட்டிற்கு அனுமதித்தது. அதன் பின் உலகமயமாக்கல் கொள்கையின் தீவிரத்தின் காரணமாக, வேலைக்கு ஆள் எடுக்கும் பணி முறையாக நடைபெறவில்லை. வேலை வாய்ப்பில் 27 சத இடஒதுக்கீடு அமுலுக்கு வந்த பின், எத்தனை துறைகளில், எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்டது. என்பதை அரசு ஓர் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். ஏனென்றால், வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, ஆண்டுக்கு 2 சத மத்திய அரசு ஊழியர்கள் குறைக்கப்பட்டார்கள். BSRB (Banking Service Recuritment Board) கலைக்கப்பட்டது. பல மாநிலங்களில் அரசுப் பணிகளுக்கு ஆள் எடுப்பதில்லை என்ற வேலை நியமனத் தடைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அரசு பொதுத் துறை நிறுவனங்கள் அனைத்தும் தனியாருக்கு விற்பது துரிதமானது. தனியார் இன்சூரன்ஸ் மசோதா, அந்நிய முதலீடு போன்றவை அமுலானது. இவையனைத்தும் இடஒதுக்கீட்டிற்கு எதிரானவை என்பதை யாரும் புளி போட்டு விளக்க வேண்டியதில்லை. இத்தைகயை செயல்கள் காரணமாகவே, இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு இடஒதுக்கீட்டுக் கொள்கை மீது நம்பிக்கை குறைவதற்கு காரணமாகும். இந்த நம்பிக்கை குறைவு காரணமாகவே இடஒதுக்கீட்டை ஆதரித்தும் நடைபெறும் போராட்டங்கள் குறைவாக அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறுகிறது.
இப்போது உயர் கல்வியில் இடஒதுக்கீடு இதர பிற்படுத்தப் பட்ட பிரிவினருக்கு ஒதுக்க வேண்டும் என்பது பொது விவாதம். ஆனால், கல்வி ஒரு கடைச் சரக்காகவும், மாணவர்கள் நுகர்வோரா கவும் உரு மாறியிருக்கிறார்கள். இதன் விளைவு, ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை வணிகமயமாகியுள்ளது. இதர பிற்படுத்தப் பட்ட பிரிவினர் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், AIIMS, PGI போன்ற தொழில் நுட்ப கல்வி நிலையங்களிலும், ஜவர்ஹர்லால் நேரு பல்கலைக் கழகம் போன்ற மத்தியப் பல்கலைக் கழகங்களிலும் மிகக் குறைவான எண்ணிக்கையில் உள்ளனர். அதே போல், ஓரளவு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் பாடப் பிரிவுகளான, இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கார்ப்பரேட் செக்கரட்டரிஷிப், ஜர்னலிசம், பேங்கிங், மைக்ரோ பயாலஜி, பயோ கெமிஸ்டரி, பயோ டெக்னாலஜி போன்ற பாடப் பரிவுகள் படித்தவர்களும் இடஒதுக்கீடு இல்லாத காரணத்தினால் OBC, SC மற்றும் ST ஆகியோர் மிகக் குறைவாக இருக்கிறனர். இன்றைக்கு இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் முன்வைக்கின்ற தகுதி, திறமை உள்ளிட்ட எதுவும் இல்லாதவர் களால், பணத்தை வைத்து படிப்பை விலை பேச முடிகிறது. T.A. இனாம்தாருக்கும், அரசுக்குமான வழக்கில் உச்ச நிதிமன்றம், சுயநிதிக் கல்லூரிகளில் இடஒதுக்கீடு கேட்பதற்கு அரசுக்கு உரிமையில்லை என்றும், NRI-க்கான 15 சத இடஒதுக்கீடு கொடுக்கலாம் என்றும் 2005, ஆக.12 அன்று தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிராக இடதசாரி இயக்கங்கள் மட்டுமே பேராடின. வேறுயாரும் போராடவில்லை. இந்தத் தீர்ப்பு அரசின் கடமையில் இருந்தும், சமூக கட்டுப்பாட்டில் இருந்தும் விலக்கிகொண்ட தனியார் மயமாக்கலின் காரணமாக ஏற்பட்ட கொடுமையாகும். குறிப்பாக பள்ளிகள் முதல் அனைத்து கல்லூரிகளும், கடந்த 15 ஆண்டுகளில் அரசாங்கத்தால் திறக்கப்பட்டதை விட, தனியாரால் திறக்கபட்டதே அதிகம். இதற்கு முன் இருந்த BJP அரசும், இப்போது உள்ள காங்கிரஸ் அரசும், அந்நியப் பல்கலைக்கழகத்திற்கு அனுமதியளிக்க எந்த நேரமும் தயாராக இருக்கின்றன. இத்தகைய அந்நியப் பல்கலைக் கழகங்களில் இடஒதுக்கீடு எப்படிக் கிடைக்கும்? எனவே, சமூகநீதிக்கு முதலில் குழிதோண்டுவது உலகமயமாக்கல் கொள்கை என்பதை உலகமயமாக்கலை ஆதரிப்போர் உணர வேண்டும். அதன் மூலம் தான் இடஒதுக்கீட்டின் பலாபலன் எல்லோருக்கும் கிடைக்கும்.
மேலே விவாதித்ததில் இருந்து இன்றைய அத்தியாவசியத் தேவையான இடஒதுக்கீடு கொள்கை அமுலாக வேண்டும். புதிய உயர்கல்வி நிலையங்களை மைய அரசு சார்பில் துவக்கிட முன்வர வேண்டும். கல்வித்துறையில் தனியார் துறையின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தி, சமூகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பள்ளிக் கல்வியில் பொதுப்பள்ளி (Common School) முறையை வளர்க்க வேண்டும். இவை அனைத்தையும் மத்திய மாநில அரசுகள் முன்வைப்பதன் மூலமே உண்மையான சமூக நீதி கிடைக்கும்.
ஆதாரம்
- அறிவாளியா? முட்டாளா?-த.வி. வெங்கடேஸ்வரன்
- ஃப்ரண்ட் லைன் கட்டுரைகள்-மே-05-2006.
- ஃப்ரண்ட் லைன் கட்டுரைகள்-பிப்-05-2002.
- அனில் சடகோபால் கட்டுரை, பீப்பிள்ஸ் டெமோக்ரசி – மே 22 – 28 – 2006.
- Why Reservation for OBC is a Must by V.B.Rawat – Countercwocents.org
- Merits of Resevation: efficient health system and Social equity emerging evidence from south Indian, S.Venkatesan, One World..