மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


பொருளாதார தத்துவத்தின் வறுமை!


வறுமையின் தத்துவம் என்று புருதோன் எழுதிய புத்தகத்திற்கு பதில் கொடுக்கும் வகையில் மார்க்ஸ் எழுதிய புத்தகம் தான் தத்துவத்தின் வறுமை. ஆனால், இந்தக்கட்டுரை அதை விளக்கிச் சொல்ல எழுதப்பட்டதொன்று அல்ல. இரண்டாண்டு கால ஐக்கிய முன்னணி அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு அடிப்படையாக இருக்கும் தத்துவப் பார்வையை விமர்சன ரீதியில் ஆய்வு செய்கிறது.

2004 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் மத்தியில் பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசு இடதுசாரிக் கட்சிகளுடன் கலந்தாலோசித்து உருவாக்கியது தான் தேசிய குறைந்த பட்ச செயல் திட்டம்; அதுபல சமரசங்களை உள்ளடக்கிய ஒன்று. முன்பு அரசுப் பொறுப்பில் இருந்த தேசிய ஜனநாயக அணியின் தாராளமயமாக்கல் கொள்கைகளிலிருந்து முற்றிலுமாக அது விலகிச் செல்லவில்லை. ஆனால் அக் கொள்கைகளின் மோசமான விளைவுகள் பற்றியும், விவசாய நெருக்கடி, வேலையின்மை ஆகியவைகளைப் பற்றிய அக்கறை தென்பட்டது; மதச்சார்பற்ற அரசுக்கு வெளியே நின்று ஆதரவு கொடுக்கும் இடதுசாரிகளின் தாக்கம் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் உண்டு. கடந்த காலத்தில் தாராளமயக் கொள்கைகளை முதலில் செயல்படுத்தத் துவங்கிய காங்கிரஸ் கட்சி, சில சமூக நல நடவடிக்கைகளை உத்திராவதம் செய்ய வேண்டிய அரசியல் சூழ்நிலை இருந்தது. சாதாரண மனிதனின் வாழ்நிலையினை மேம்படுத்துவோம் என அரசியல் ரீதியான கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட வேண்டிய அவசியம் தேர்தலை எதிர் நோக்கும் காங்கிரஸ் கட்சிக்கு வந்தது. இந்த சமரசத்தை உள்ளடக்கிய பொருளாதாரத் தத்துவத்தை நமது பிரதமர் இப்படித்தான் விளக்கினார். மனித நேய முகம் கொண்ட தாராள மயம்.

மனித நேய முகம் என்ற முகமூடி

தாராளமயத்திற்கான தத்துவார்த்த அடிப்படை வலுவானதல்ல. சந்தை செயல்படும் விதம் அற்புதமான விளைவுகளை கொண்டு வரும்;, உழைப்புச் சந்தையின் இறுக்கத்தால் தான் வேலையில்லாத் திண்டாட்டம் உருவாகிறது; அந்த இறுக்கம் களையப்பட்டால், இந்த பிரச்சனை மறைந்து விடும் – இதுதான் தாராளமயம் பேணுவோர் நமக்குச் சொல்லிக் கொடுக்கும் பாடம். ஆகவே தான், நெகிழ்வான உழைப்புச் சந்தை பற்றி அறிவுரை கொடுக்கப் படுகிறது. உலகச்சந்தையோடு இணைத்துக் கொள்வதன் மூலம் விளைபொருளுக்கு சரியான விலையினைக் கண்டு விவசாயத்துறை பிரச்சனைகளைத் தீர்க்க முடியும் என்று சொல்லப்படுகிறது. மூலதனமும், உற்பத்திப் பொருட்களும், எல்லைகளை தாண்டி சுதந்திரமாக சந்தையில் இயங்குமேயானால், பொருளாதாரம் செழித்தோங்கும். முதலாளித்துவம் பற்றியும், சந்தை பற்றியும் இம்மாதிரியான தத்துவார்த்த கற்பனைகள் 19ம் நூற்றாண்டின் துவக்க காலத்தில் உலவிக் கொண்டிருந்தன. மார்க்ஸ் மற்றும் பொருளாதார பேராசிரியர்களான கீய்ன்ஸ், கலேக்கி போன்றவர்கள் அவற்றை உடைத்துப் போட்டனர். திறமையாகச் செயல்படும் சந்தை என்ற மாயை கலைக்கப்பட்டது. முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கில், மூலதனச் சேர்க்கை ஏகபோகத்திற்கு இட்டுச் செல்வதும், சந்தையின் வீழ்ச்சியும், அதன் விளைவாக எழும் வேலையின்மையும் தவிர்க்க முடியாத அம்சங்களாக இருப்பது தெளிவாக்கப்பட்டன.

பொருளாதாரத் தத்துவம் மற்றும் அதன் அறிவியல்  கோட்பாடுகளில் கொண்டு வரப்பட்ட வியத்தகு மாற்றங்கள் சந்தை சனாதனிகளை கிஞ்சித்தும் மாற்றவில்லை. ஏனெனில், சந்தைப் பொருளாதாரம் என்ற மாயையும், அதன் தத்துவார்த்த அடிப்படையும் பெரிய முதலாளிகளின் வர்க்க நலன்கள் மற்றும் சர்வதேச நிதி மூலதனத்தின் நலன்களுக்கு ஊக்கம் தரும் விஷயங்களாக இருக்கின்றன. உலகமயம் என்ற போர்வையில் ஏகாதிபத்தியம் திணிக்கும் புதிய தாராளமயக் கொள்கைகள் சுதந்திரச் சந்தை என்ற பழைய கோட்பாட்டிற்கு புதிய உரு கொடுக்கிறது. ஆகவே அதற்கு பிரச்சாரத் தந்திரங்கள் தேவைப்படுகின்றன. அதில் ஒன்றுதான் மனித நேய முகம் கொண்ட தாராளமயம் என்பது. இந்த தந்திரங்கள், கோட்பாடுகள் யாவும் அறிவியல் அடிப்படை ஏதுமற்றவை; பொருளாதார தத்துவத்தின் வறுமையினை அவைகள் பறை சாற்றுகின்றன.

தாராளமயத்தினை தொடர்ந்து செயல்படுத்துவதும், அதற்கு மனித நேய முத்திரை கொடுப்பதும் முரண்பாடான செயல். மக்கள் நல நடவடிக்கைக்கான திட்டங்கள் மனித நேய முகத்திற்கு வெளிச்சம் தருகின்றன. ஆனால், மேற்சொன்ன உள்ளார்ந்த முரண்பாடு ஐக்கிய முன்னணி அரசின் துவக்க காலத்திலேயே சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. மக்கள் நலம் பேணும் எந்த செயல் திட்டமும் அதற்கான நிதி ஆதாரங்களை திரட்டுவதிலும் தேவையான செலவினங்களை, முதலீடுகளை மேற் கொள்வதற்கும் அரசு எவ்வளவு திறமையோடு செயல்படுகிறது என்பதைப் பொறுத்தது. கொடுக்கும் திறன் கொண்ட செல்வந்தர்கள் மீது வரி விதித்தல் நிதி ஆதாரம் திரட்ட ஒரு வழி; ஆனால், தாராளமயம் அரசின் அந்தச் செயல் திறனை முடமாக்குகிறது. தாராளமயம் மற்றும் மனித நேய முகம் என்பது முரண்பட்ட சொல்லாட்சி தன்மை கொண்டது என்பதை கடந்த 2 ஆண்டுகளில் ஐக்கிய முன்னணி அரசின் நடவடிக்கைகள் தெள்ளத் தெளிவாக விளக்கியது.

மத்திய அரசின் வர்க்க நிலை

இந்த அரசின் முதல் நிதிநிலை அறிக்கையிலேயே அந்த நாசகார தாராளமயக் கொள்கைகளை தொடர்ந்து செயல்படுத்தும் அரசின் நோக்கம் தெரிந்தது. ஆனால், அதற்கு தேவையான சட்டங்களை கொண்டு வர எடுத்த முயற்சிகள் இடதுசாரி கட்சிகளின் நாடாளுமன்ற பலத்தால் முடக்கப்பட்டன. இன்சூரன்ஸ் துறை முறைப்படுத்துதல் மற்றும் வளர்ச்சிக்கான சட்டத்திற்கும் மற்றும் வங்கித்துறையினை முறைப்படுத்தும் சட்டத்திற்கும் பாதகமான முறையில் கொண்டு வந்த திருத்தங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதை இங்கே குறிப்பிடலாம். ஏனெனில் அந்த திருத்தங்கள் அந்த துறைகளை பன்னாட்டு வங்கிகள், இன்சூரன்ஸ் மற்றும் ஓய்வூதிய நிதி நிறுவனங்கள் நமது நாட்டின் சந்தையில் உள்ளே நுழைவதற்கு வழிவகுக்கும் திருத்தங்களாக இருந்தன. தொழில் தகராறு சட்டம், ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம் ஆகியவற்றை திருத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தாராளமயம் வேண்டுவோர் விரும்பும் நெகிழ்வான உழைப்புச் சந்தைக்கு துணைபோகும் திருத்தங்கள் அவை. ஆனால், அதற்கு கடுமையான எதிர்ப்பினை இடதுசாரி சக்திகள் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் (Special Economic Zone) தொழிலாளர் நலச்ச்சட்டங்கள் செயல்படுவதைத் தடுக்கும் சட்டத் திருத்தத்தினை இடதுசாரிகளின் நிர்பந்தத்தால் அரசு கைவிட நேர்ந்தது. பா.ஜ.க. தலைமையில் இருந்த தேசிய ஜனநாயக அணி அரசு கொண்டு வந்த காப்புரிமை சட்ட முன்வடிவில் (Patent  Act) இடதுசாரிக் கட்சிகள் கொண்டு வந்த திருத்தங்கள் சட்டம் நிறைவேற்றப்படும் பொழுது ஏற்றுக் கொள்ளப்பட்டன. உற்பத்திப் பொருளுக்கான காப்புரிமை வழங்குவதில் சில கட்டுப்பாடுகள் கொண்டு வருவதற்கும், மென் பொருள் காப்புரிமையினை விலக்கி வைப்பதும், காப்புரிமை வழங்கும் முன் எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையினை மீண்டும் கொடுக்கவும், உற்பத்தி செய்ய இயலாத நாடுகளுக்கு காப்புரிமை பெற்ற மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு அனுமதிக்கும் திருத்தங்கள் அவற்றில் அடங்கும். அறிவுசார் சொத்துரிமை (TRIS – Trade Intellectual Property Rights) வரைமுறைக்குள் உள்ள நெகிழ்வான அம்சங்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வழிவகுக்கும் திருத்தங்கள் அவை. பாரத கன மின் நிறுவனத்தின் (BHEL) பங்குகளை அரசு விற்பனை செய்ய முயன்றபோது இடதுசாரி கட்சிகள் அதை தடுத்து நிறுத்துவதில் வெற்றி கொண்டன.

ஆனால், எங்கே நடாளுமன்ற ஒப்புதல் தேவையில்லையோ அங்கே அரசு வேகமாக செயல்படத் துவங்கியது. சில்லறை வணிகம், பண்டக சாலை, சுரங்கம் போன்ற துறைகளில் வெளிநாட்டு மூலதனம் ஊடுருவ வகை செய்யும் முடிவினை அரசு எடுக்கத் தயங்கவில்லை; தொலை தொடர்பு துறையில் வெளிநாட்டு மூலதனத்தை 74 சதம் வரை அனுமதிக்க, டில்லி, மும்பை விமான நிலையங்களை தனியார் மயத்திற்கு உட்படுத்த, வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை குறைக்க எடுத்த முடிவுகளும், தாராளமய செயல் திட்டத்தை நிறைவேற்ற எடுத்த முடிவுகள் தான். உலக வர்த்தக அமைப்பின் ஹாங்காங் மாநாட்டு பிரகடனத்தை நிறைவேற்றுவதில் அரசின் பங்கு கவலைக்குரியது. அதன் மூலம் வளரும் நாடுகளில் கல்வி, சுகாதாரம் மற்றும் சேவைத் துறைகளில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைய அனுமதி வழங்கப்படும்; அதோடு தொழில் மற்றும் விவசாய உற்பத்தி பொருட்களுக்கான சுங்கத் தீர்வையினை குறைக்க நிர்பந்திக்கப்படும்.

அமெரிக்கா மற்றும் வளர்ந்த முதலாளித்துவ நாடுகளுடன் கூட்டாக செயல்படும் போக்கு தென்படுகிறது. அமெரிக்க – இந்திய கேந்திரமான பொருளாதார ஒத்துழைப்பு என்ற இந்திய – அமெரிக்க முதலாளிகளின் அமைப்பு கொடுத்த பரிந்துரைகளை அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது. இந்தியப்பிரதமர் – அமெரிக்க குடியரசுத் தலைவர் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் இது காணப்படுகிறது. அவை இன்சூரன்ஸ், வங்கி, சில்லறை வணிகம், ஊடகம் (அச்சு) மற்றும் அறிவுசார் சொத்துரிமை பிரிவிலும் பன்னாட்டு மூலதனம் தங்கு தடையின்றி உள்ளே நுழைய அனுமதிக்கும் பரிந்துரைகள் ஆகும். வெளிநாட்டு நிறுவன முதலீடாக உள்ளே வரும் பணத்திற்கு அளிக்கப்படும் சலுகைகள் காரணமாக இந்நாட்டின் பங்குச் சந்தையில் ஏற்றம் காணப்பட்டது. ஊக வணிகத்தில் ஈடுபடும் அன்னிய மூலதனத்திற்கும், உள்நாட்டு பங்குச்சந்தை வியாபாரி களுக்கும், தாராளமயக் கொள்கைகள் கடைபிடிக்கப்படும் என்ற வாக்குறுதி கொடுக்க அரசு தயங்குவதில்லை. முழு மூலதனக் கணக்கு மாற்றம் பற்றிய அரசின் அறிவிப்பும் அதில் அடங்கும்.

தாராளமயம் வேகமாக செயல்படுத்தப்படும் அதே நேரத்தில் மனித நேய முகத்தைத் தேடிப்பார்க்க வேண்டிய நிலை இருக்கிறது. ஊரக வேலை வாய்ப்பு உத்திரவாதச் சட்டம் ஒன்றுதான் தேசிய குறைந்த பட்ச செயல்திட்டத்தின் செயல் தன்மையினைக் கொண்டி ருந்தது. அது கூட இந்தியா முழுமையும் உள்ள 600 மாவட்டங்களில் 200 ல் தான் அமுலுக்கு வந்திருக்கிறது. இதை நீர்த்துப் போகச் செய்யும் சக்திகள் மத்திய அரசுக்குள்ளேயே இருப்பதை உணர்ந்து இடதுசாரிக்கட்சிகள் இந்தச்சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு அரும்பாடுபட்டன. நினைத்த நேரத்தில் இதைக் கைவிட அரசினை அனுமதிக்கும் பகுதிகளை அச்சட்டத்திலிருந்து நீக்குவதற்கும் போராடி வெற்றி பெற்றன; அதன்படி செய்ய வேண்டிய வேலையின் தன்மை பற்றியும் மற்றும் கூலி நிர்ணயம் செய்வது பற்றியும் நிதிச் சுமையினை மாநிலங்களின் தலையில் ஏற்றி வைப்பது பற்றியும், தன்னிச்சையாக மத்திய அரசு முடிவெடுக்கும் அம்சங்கள் அதில் இருந்தன. அவை இடதுசாரிக் கட்சிகளின் முயற்சியால் தவிர்க்கப்பட்டன. ஊடகச் செய்திகளின் படி இந்த வேலைவாய்ப்புத் திட்டம் பிப்ரவரி 2006 ல் அமுலாக்கத்துவங்கிய 15 நாட்களுக் குள்ளேயே 77 லட்சம் பேர் அதில் பதிவு செய்து கொண்டார்கள் என்று தெரிந்தது; இது கிராமப்புறத்தில் நிலவும் வேலையின்மை யினையும் மற்ற மாவட்டங் களுக்கும் இத்திட்டம் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது. நிதி அமைச்சகத்தின் நிதிச் சுருக்க நடவடிக்கைகளின் விளைவாக ஐக்கிய முன்னணி அரசின் மீதமுள்ள காலத்தில் கூட மற்ற கிராமப்புற மாவட்டங்களுக்கு இச்சட்டம் விரிவுபடுத்தப்படும் என்ற நம்பிக்கை எழவில்லை. நகர்ப்புறத்துக்கும் இது கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற கோரிக்கை பற்றி மூச்சு கூட விட முடியாத நிலை தான் உள்ளது.

வனங்களில் வாழும் பழங்குடி மக்களுக்கு அவர்கள் பாரம்பரிய வன உரிமைகளை உத்திரவாதம் செய்யும் சட்டம் பலமுறை தள்ளிவைக்கப்பட்டு, இப்போது கொண்டு வரப்பட்டி ருக்கிறது. வனங்களை பாதுகாப்போர் என்ற பெயரில் செயல்படும் சில மேல் தட்டு குழுவினரின் நிர்பந்தங்களுக்கு பணிந்து 1980க்குப் பிறகு வனத்தில் வாழத்துவங்கிய பழங்குடி மக்களின் நில உரிமைகள் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அந்த சட்டத்தில் சொல்லப் பட்டது. இதன் விளைவு? பெரும்பான்மையான பழங்குடி மக்கள் தாங்கள் வாழும் இடங்களிலிருந்து வெளியேற்றப்படுவதில் முடியும். அதை பரிசீலித்துக் கொண்டிருக்கும் நாடாளுமன்ற நிலைக்குழு அந்தப்பகுதியை நீக்குவதோடு மட்டுமல்லாமல், நியாயமற்ற முறையில் 2. 5 ஹெக்டேர் என நில உரிமைக்கான உச்ச வரம்பு விதித்திருப்பதையும் நீக்கும் வகையில் திருத்தங்கள் கொண்டு வருகிறது. இந்தத் திருத்தங்களை கொண்டு வருவதில் இடதுசாரிக்கட்சிகளின் பங்கு பாராட்டுக்குரியது. இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சம் ஒன்று உண்டு. மேல் தட்டு மனிதர்களுக்கும், விடுதி உரிமையாளர்களுக்கும் காட்டும் அக்கறையினை இந்த அரசு லட்சக்கணக்கான பழங்குடி மக்களின் வாழ்க்கையினைப் பற்றி காட்டுவதில்லை. அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் முடிந்து விட்டது. ஆனால், தேசிய குறைந்த பட்ச வேலைத்திட்டத்தில் கொடுத்த வாக்குறுதியின் படி முறைசாரா தொழிலாளர்களுக்கு ஒரு முழுமையான சமூகப்பாதுகாப்பினை உத்திரவாதம் செய்யும் நடவடிக்கையினையோ, விவசாயத் தொழிலாளர்களின் கூலி உட்பட அனைத்து நலன்களையும் பாதுகாக்கும் சட்ட முன் வடிவோ பாராளுமன்றம் முன் வைக்கப்படவில்லை. 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயமாக கல்வி போதிப்பதை உத்திரவாதம் செய்யும் கல்விக்கான உரிமை வழங்கும் சட்டம் வலதுசாரி குழுக்களின் எதிர்ப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

கூட்டிக் கழித்துப் பார்த்தால், இந்த அரசின் வர்க்கச் சார்பு நிலை தெளிவாகத் தெரிகிறது. ஏகபோகங்களுக்கும் பன்னாட்டு நிதி மூலதனத்துக்கும் என் கடன் பணி செய்துகிடப்பதே என்று அறிவிப்பதற்கு தயக்கம் ஏதும் இல்லை. இன்சூரன்ஸ் மற்றும் வங்கித்துறைகளை கட்டுப்படுத்தும் சட்டங்களுக்கு இந்த அரசு கொண்டு வர முனையும் திருத்தங்கள், தொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தங்கள், நாடாளுமன்றத்தை தாண்டிச் சென்று அறிவிக்கப்பட்ட முழு மூலதனக் கணக்கு மாற்றம் – இவைக ளெல்லாம் உடைமை வர்க்கத்திற்கு அரசு தன் உள்ளக் கிடக்கையினை திறந்து காட்டும் நடவடிக்கைகள். தொழிலாளர்கள், வேலையற்று இருப்பவர்கள் வாழ்க்கைத் தேவைகள் கிடைக்கப் பெறாது வாழும் கோடிக்கணக்கான மக்கள் – இவர்களுடைய நலன்கள் என்று வருகிற போது அரசின் இதயக்கதவுகள் உடனே திறந்து விடுவதில்லை. தயக்கம் மற்றும்  தள்ளிப் போடும் மனோபாவம் வெளிப்படுகிறது.

தடுமாற்றத்தில் எடுக்கப்படும் பொருளாதார முடிவுகள்

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8 சதம் உயர்வு குறித்தும் பங்குச் சந்தை புள்ளிகளின் உயர்வு குறித்தும் வெற்றி நடனம் அரங்கேறுவது தாரளமயக் கொள்கை தொடர்ந்து கடைபிடிக்கப்படுவதன் வெளிப்பாடு தான். (பங்குச்சந்தை தற்போது கீழிறக்கத்தை சந்திக்கிறது என்பதும் உண்மை) பா.ஜ.க. அரசின் இந்தியா ஒளிர்கிறது என்ற பிரச்சாரமும் இதே குறியீடுகளின் அடிப்படை யில் தான் நடத்தப்பட்டு பின்பு அந்த அரசே இல்லாமல் போனது என்பதை இந்த அரசு மறந்து போனது ஏன் என்று நமக்குப் புரியவில்லை. மக்களின் உண்மை நிலை என்ன? வேலை மற்றும் வேலையின்மை பற்றிய 2005-06 ம் ஆண்டு தேசிய மாதிரி ஆய்வின் (60வது சுற்று) முடிவுகளின் படி வேலையற்றோர் விகிதம் 1993 – 94 லிருந்து 2004 வரை கிராமப் புறத்தில் 5.9 சதத்திலிருந்து 9 சதமாக உயர்ந்தது; நகர்ப்புறத்தில் 6.7 சதத்திலிருந்து 8.1 சதமாக உயர்ந்தது; வேலையில்லா பெண்களின் விகிதம், கிராமப்புறத்தில் 5.6 சதத்திலிருந்து 9.3 சதமாகவும், நகர்புறத்தில் 10.5 லிருந்து 11.7 சதமாகவும் உயர்ந்தது.

மக்கள் தொகையில் 55 சதம் பேர் விவசாயத்தை நம்பியுள்ளனர்.  அவர்களது உழைப்பினை பெறும் விவசாயமோ நெருக்கடியினை சந்தித்துக் கொண்டிருக்கிறது. பத்தாவது திட்டக் (2002 – 07) கணிப்பில் விவசாயத்தில் ஆண்டுக்கு 4 சதம் உயர்வு காண வேண்டும் என்ற இலக்கு முன் வைக்கப்பட்டது. சமீபத்தில் வெளியான பொருளாதார ஆய்வறிக்கையின் படி 2005 – 06 ல் உயர்வு விகிதம் 2.3 சதம் தான் (2004 – 05 ல் இது 0.7 சதம்) சராசரியாக ஆண்டுக்கு 4 சதம் என்பதை எட்டாதது மட்டுமல்ல, 9வது ஐந்தாண்டு திட்டத்தின் 2.1 சதம் உயர்வைக் கூட தொட முடியாத அளவுக்குத்தான் வளர்ச்சி உள்ளது. தாராளமய வாதிகள் சொல்லும் வேகமான வளர்ச்சிக்கும், விவசாயத்துறையில் காணப்படும்  குறைந்து பிறகு இல்லாமலேயே போகும் வளர்ச்சிக்கும் ஏதேனும் பொருத்த முண்டா? நாம் இன்று சந்திக்கும் விலைவாசி உயர்வின் பின்னணியில் பணவீக்கம் 5 சதத்திற்கும் கீழே வந்துவிட்டது என்ற அரசின் அறிவிப்புக்கு ஏதேனும் அர்த்தம் உண்டா? கச்சா எண்ணெய் இறக்குமதியின் மீது இறக்குமதி வரி சீரமைப்பு தேவை என்பதை அரசு ஏற்றுக்கொள்ள தயங்குகிறது. சர்வதேச எண்ணெய் விலை உயர்வின் பின்னணியில் அது பணவீக்கத்தில் ஏற்படுத்தும் விளைவுகளை பார்ப்பதில் இந்த அரசுக்கு அக்கறை இல்லை. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் வாயு ஆகியவற்றின் விலைகளை உயர்த்த வேண்டும் என ரங்கராஜன் கமிட்டியின் பரிந்துரை ஏற்கப்பட்டால் பணவீக்கம் இறக்கைகட்டி மேலே பறக்கும் என்ற கருத்து வெளியிடப்பட்டது. அரசு இதனை ஏற்கவில்லை. அண்மையில் அமுலுக்கு வந்த பெட்ரோல்/டீசல் விலை உயர்வு பண வீக்கத்தை உயர்த்தி மக்களின் வாழ்க்கையினை சீர்குலைக்கும் நடவடிக்கையாக உள்ளது. இடதுசாரி கட்சிகள் கொடுத்த மாற்று ஆலோசனைகளை பரிசீலிக்க அரசு தயாராக இல்லை.

மத்திய அரசின் இரண்டு நிதிநிலை அறிக்கைகளும் நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக வாட்டியெடுக்கும் பிரச்சனை களைத் தீர்ப்பதில் தோல்வியினை சந்தித்திருக்கிறது. இவை நிதிக் கொள்கையின் மூலம் தீர்க்கப்படுகிற பிரச்சனைகள் அல்ல. மக்களின் வறுமை, ஊட்டச்சத்தின்மை, கல்வியின்மை இவையாவும் இந்த முதலாளித்துவ சமூக அமைப்பின் உள்ளார்ந்த அம்சங்கள்; அரசு நிலச் சீர்திருத்தம் மற்றும் மாற்று பொருளாதார கொள்கைகளை மேற்கொள்ளும் போதுதான்  இவற்றிற்கான தீர்வினைக் காண முடியும். ஆனால், ஐக்கிய முன்னணி அரசைப் பொறுப்புக்கு கொண்டு வந்த மக்கள் தீர்ப்பின் பின்னணியில் நாம் எதிர்பார்ப்பது, தேசிய குறைந்த பட்ச செயல் திட்டத்தை நிறைவேற்றும் வகையில் பொருளாதார கொள்கைகள் முற்றிலும் மாற்றப்பட வேண்டும் என்பது தான்; மக்களின் வாங்கும் சக்தியினை குறைத்து அவர்களின் தேவைகளை புறக்கணித்த பா.ஜ.க அரசின் கொள்கைகள் நிராகரிக் கப்பட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் நாம் எதிர் பார்க்கிறோம். வேலை வாய்ப்பினை உருவாக்கும் திட்டங்கள், விவசாயத்துறை, பொது விநியோக அமைப்பு, கல்வி, சுகாதாரம், கிராமப்புற வளர்ச்சி ஆகியவற்றிற்கு எந்த அளவு அரசு முதலீட் டையும் முறையான செலவினங்களையும் உத்ரவாதம் செய்கிறதோ அதைப் பொறுத்துத்தான் மக்களின் துயர் தீர வழி பிறக்கும். இங்கே தான் தாராளமயத்திற்கும், மனித நேய முகத்திற்கும் உள்ள முரண்பாடு பளிச்செனத் தெரிகிறது.

நிதிநிலையில் பற்றாக்குறை ஏற்படுவதை (Fiscal Deficit) குறைத்து நிதிக்கட்டுப்பாட்டைக் கொண்டு வருவதற்கான நிதிப் பொறுப்பு மற்றும் நிதிநிலை பராமரிப்பு (FRBM Act) சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. எந்த பொருளாதார நியாயத்தின் அடிப்படையில் அச்சட்டம் வந்தது என்பது கேள்விக்குரியது. 2003ல் காங்கிரஸ் கட்சியும், பிஜேபியும் கை கோர்த்துக் கொண்டு நிறைவேற்றிய சட்டம் அது.

அதன்படி  நிதி நிலை அறிக்கையில் நிதிப் பற்றாக்குறை என்பது 2008 – 09 வருவதற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதமாகக் குறைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆண்டு வருமானத்திற்கும் செலவுக்கும் இடையில் விழும் பற்றாக்குறை முற்றிலுமாக நீக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த இலக்கினை அடைய வருவாய் பற்றாக்குறை (Revenue Deficit) நிதிப் பற்றாக்குறை (Fiscal Deficit) விகிதமும் ஆண்டுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முறையே 0.5 சதம் என்றும் 0.3 சதமென்றும் குறைக்கப்பட வேண்டும். இந்த இலக்குகளை அடைய அரசு திட்டம் மற்றும் முதலீட்டுச் செலவுகளை குறைக்க வேண்டி வரும்; அதன் விளைவாய் மற்ற செலவினங்கள் மிகவும் சுருக்கப்பட்டுவிடும். குறைந்தபட்ச செயல் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்றால் அரசுக்கு இரண்டு வழிகள் தான் உண்டு. இந்த சட்ட வரையறுப்புகளை மீறி, நிதிப்பற்றாக்குறை பற்றி கவலைப்படாமல், அரசு செலவினங்களை (திட்டச் செலவு உட்பட) விரிவு படுத்த வேண்டும் அல்லது நிதி ஆதாரங்களை திரட்டுவதற்கான ஊக்கம் பெற்று அதை செயல்படுத்த முனைய வேண்டும்.

ஆனால் நிதி அமைச்சகம் அந்த சட்டத்தின் மேல் நின்று தான் செயல்படுகிறது; 2005 – 06 ம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை 4.1 சதம் என நிதி மந்திரி தன் முதுகில் தானே தட்டிக் கொள்கிறார் (நிதி நிலை அறிக்கையின் இலக்கு 4.3 சதம்) 2006 – 07 க்கு அது 3.8 சமமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. நாடாளுமன்ற விவாதத்தின் போது இன்றைய நிதி அமைச்சர் இதற்கு முன் இருந்த நிதி மந்திரிகளைக் காட்டிலும் தான் எப்படி இந்த விஷயத்தில் சிறப்பாகச்  செயல்பட்டதாக பெருமை அடித்துக்கொண்டார். இந்த விவாதத்தில் அதிகம் வெளிவராத விஷயம் என்னவென்றால், 2005 – 06 ஆண்டின் பொருளாதார ஆய்வறிக்கை குறிப்பிட்டது போல், முதலீட்டு மற்றும் திட்டச் செலவுகளின் விகிதம் (மொத்த உள்நாட்டு உற்பத்தியில்) இந்த அரசு செயல்படும் காலத்தில் எந்த உயர்வினையும் பதிவு செய்யவில்லை என்பது தான்.

திட்டச் செலவு அதிகரித்திருப்பதாக சொல்லப்படுவ தெல்லாம் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் பிரதிபலிக்க வில்லை. மேலே கொடுக்கப்பட்ட பட்டியலை பரிசீலித்தால் நிதி நிலை ஒதுக்கீட்டில் திட்டச் செலவின் விகிதம் குறைந்து கொண்டு வருவது மட்டுமல்லாமல் திட்டச் செலவே குறைந்து கொண்டு வருவதைக் காண முடியும்.

விவசாயம், ஊரக வளர்ச்சி, ஊரக வேலைவாய்ப்பு, சமூக சேவைப் பிரிவுகள் (கல்வி, சுகாதாரம், குடும்ப நலன், உறைவிடம், சமூக பாதுகாப்பு) ஆகியவற்றுக்கு மத்திய திட்ட ஒதுக்கீடு ரூ.74312 கோடியாகும். (திருத்தப்பட்ட மதிப்பீடு 2005 – 06); இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதத்திற்கும் குறைவானதாகும். இடதுசாரி கட்சிகள் இந்த துறைகளில் திட்டச் செலவு மேலும் ரூ.50000/- கோடி அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தன; ஆனால், 2006 – 07 ஆண்டுக்கு அது ரூ.1500/- கோடிக்குத்தான் உயர்த்தப்பட்டது. கீழே உள்ள அட்டவணை அதைத் தெளிவாக்கும்.

இதிலிருந்து ஒரு விஷயம் தெளிவாகிறது. குறைந்த பட்ச செயல் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட வேலைவாய்ப்பு உத்திரவாதம், விவசாயம் மற்றும் பாசன வசதிக்கு அதிக முதலீடு, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு கூடுதல் செலவீனம் (6 சதம், 2 – 3 சதம் முறையே மொத்த உள்நாட்டு உற்பத்தியில்) ஆகியவை பெரும்பாலும் நிறைவேற்றப்படாதவைகளாக நீடிக்கின்றன. உதாரணமாக ஊரக வளர்ச்சிக்காக ஒதுக்கப்படுகிற மதிப்பீட்டைப் பார்ப்போம். 200 மாவட்டங்களில் ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கே குறைந்த பட்சம் ரூ.20000 கோடி தேவைப்படும்; ஆனால், ஒதுக்கப்பட்ட தொகைக்கும் இதற்கும் ஏதேனும் பொருத்தமான விகிதம் இருக்கிறதா? விலையினை நிலைப்படுத்த ஒரு நிதியம் உருவாக்கப்பட வேண்டுமென்றும், பயிர் பாதுகாப்பு திட்டங்கள் விரிவாக்கப்பட வேண்டு மென்றும் தேசிய விவசாயிகள் கமிஷன் கொடுத்த பரிந்துரைகளும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. குறைந்த கால கடன் மீதான வட்டி 4 சதமாக குறைக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரை ஏற்கப்படாமல் வட்டி 7 சதம் என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. 2006 – 07 நிதி நிலை அறிக்கையில் உணவுக்கான மான்யம் ரூ.2000 கோடி குறைக்கப்பட்டிருக்கிறது. (2005 – 06 ல் இது ரூ.26200 கோடி – 2006 – 07 ல், 24200 கோடி). இது பொது விநியோக அமைப்பு செயல்பாடு விரிவாக்கப்படுவதற்கு பதிலாக அதன் செயல்பாட்டினை சுருக்கிவிடும் செயலாகும்.

விவசாய நெருக்கடி – சீனா வழிகாட்டுமா?

பரவிவரும் விவசாய நெருக்கடியின் தீவிரத்தன்மை, பெருகி வரும் வேலையின்மை ஆகிய பிரச்சனைகளுக்கு தீர்வுகாண அரசு எடுக்கும் முயற்சிகள் முற்றிலும் போதுமானதல்ல. இந்த அரசு வெளிப் படையாக தங்கள் பொருளாதார முன் மாதிரி என குறிப்பிடும் சீனாவுடன் ஒப்பிடும் பொழுது அது தெளிவாக புலப்படுகிறது.

விவசாயம், கிராமப்புறம் மற்றும் விவசாயிகளுக்கான செலவு

2004 – 32400 மில்லியன் டாலர்
2005 – 36700 மில்லியன் டாலர்
2006 – 42000 மில்லியன் டாலர்

சீனாவின் 11வது ஐந்தாணடுத் திட்டத்தின் (2006 – 10) முதுல் ஆண்டில் மட்டும் (2006) மேற்குறிப்பிட்ட துறைகளுக்கு 42 பில்லியன் டாலர் – இன்றைய ரூபாய் கணக்கில் ரூ.187752 கோடி – செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. நமது ஐக்கிய முன்னணி அரசின் 2006 ஆண்டிற்கான திட்டச் செலவே ரூ.172728 கோடி தான். சீனாவின் இந்த செலவினம் கிராமப்புற சாலைகள் மேம்பாடு, மின்வசதி, தகவல் தொடர்பு, கல்வி சுகாதாரம், விவசாய மான்யம் அனைத்திலும் முதலீடு செய்வதையும் நோக்கமாகக் கொண்டிருக்கும்.

புதிய சோஷலிச கிராமப்புறங்களை கட்டுவது, விவசாய வளர்ச்சியினை ஊக்குவிப்பது, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவது என (சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் ஏற்றுக் கொண்ட) 2006ம் ஆண்டுக்கான தேசிய பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கான திட்டம் அறிவிக்கிறது. அந்த லட்சியத்தை அடைய, உணவு தானியம் உற்பத்தியினை பெருக்குவதற்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. இந்தியாவைக் காட்டிலும் ஆண்டுக்கு 2 மடங்கு சீனா உணவு தானியம் உற்பத்தி செய்கிறது. (சீனா 469.47 மில்லியன் டன் (2004) – இந்தியா 204.6 மில்லியன் டன் (2004 – 05), இந்தியா 2005 – 06 ம் ஆண்டில் அதற்கு முந்திய ஆண்டைக் காட்டிலும் 2 மில்லியன் டன் தான் அதிக உற்பத்தியினைக் காட்டியது; ஆனால் சீனா 2005ம் ஆண்டில் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 14.54 மில்லியன் டன் அதிக உற்பத்தியினைக் காட்டியது. இப்படி உயர்வு இருந்த போதிலும், தங்களுடைய சுயசார்பு பொருளாதாரத்தை பாதுகாக்க உணவு தானிய உற்பத்திக்கு விசேஷ முக்கியத்தவத்தை சீன அரசு கொடுக்கிறது.

திட்டத்தில் உணவு தானிய உற்பத்திக்கான கோட்பாடுகளை சீன அரசு வரையறுத்திருக்கிறது.

  1. உணவு தானிய உற்பத்தி சீராக அதிகப்படுத்தப்பட வேண்டும்.
  2. ஒட்டுமொத்த விவசாய உற்பத்தித் திறனை அதிகப்படுத்தி, எந்த நேரத்திலும் கடந்த ஆண்டு அளவு தானிய உற்பத்திக்கு குறையாது இருத்தல் வேண்டும்.
  3. நிலத்தின் பயன்பாட்டு நிர்வாகம் பலப்படுத்த வேண்டும்; மூலாதார பண்ணை நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்; தானிய உற்பத்திக்காக விதைக்கும் நிலப்பரப்பளவு மாற்றமின்றி உறுதி செய்யப்பட வேண்டும்.
  4. பணப்பயிர் உற்பத்திக்கான ஆதாரங்களின் வளர்ச்சியினை அதிகப்படுத்த வேண்டும்; உயர்ரக தானிய பயிர்களை தொழில் ரீதியாக உற்பத்தி செய்யும் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும்; சிறந்த விதை ரகங்களை உற்பத்தி செய்ய வேண்டும், பயிர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்;
  5. பிரதான தானிய உற்பத்தி நாடுகளுக்கும் நிதிச் சுமையில் உள்ள நாடுகளுக்கும் வணிக ரீதியிலான பண மாற்றத்தை அதிகப்படுத்த வேண்டும்.

தேவைக்கு குறைவான அளவே சந்தைக்கு வரும் சில முக்கியமான தானியங்கள் உற்பத்தி செய்யும் பகுதியில் அதை கொள்முதல் செய்வது தொடரும். சந்தையில் தானிய விலையினை இது சீரான நிலையில் வைத்திருக்கும். தேசிய அளவிலும், மாநிலங்கள் அளவிலும் தானிய விலையினை முறைப்படுத்த தானிய சேமிப்பினை கட்டுப் பாட்டுக்குள் வைத்து பயன்படுத்துவோம். அதற்கான அமைப்பினை மேம்படுத்துவோம் என தானியங்களுக்கான நியாய விலை பற்றி சீனாவின் திட்டம் சொல்லுகிறது. விவசாயத்திற்கான மான்யம் பற்றி சொல்லும் பொழுதுதானிய உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு நேரடியாக மானியம் வழங்கப்படும்; செறிவூட்டப்பட்ட பயிர் வகை விளைவிப்போருக்கு மான்யம் கொடுக்கப்படும்; விவசாயத்திற்கு தேவையான இயந்திரம் மற்ற கருவிகள் வாங்குவதற்கும் மான்யம் உண்டு. விவசாயத்துக்கு தேவையான உரங்கள், டீசல் முதலியவை வாங்கும் பொழுது மான்யங்கள் ஒரு முறைப்படுத்தப்பட்ட வடிவத்தில் கொடுக்கப்படும்; உரங்களின் விலையும் விவசாயத்துடன் தொடர்புடைய சில தீர்வைகளும் கட்டுப்பாட்டுக்குள் வைக்க அதன் நிர்வாக அமைப்பை தொய்வில்லாது செயல்பட வைப்போம்; விவசாய இடு பொருட்கள் விலை உயர்வினை கட்டுப்படுத்தி விவசாயிகளின் சுமையினை குறைப்போம் என்று சீனாவின் திட்டம் அறிவிக்கிறது.

மான்யங்கள் பற்றி சீனாவின் இந்த அணுகுமுறை நமது அரசு அணுகுமுறையிலிருந்து மாறுபட்டிருக்கிறது என்பது தெளிவு. அரசுப் பொறுப்பிலிருந்து நமது நாட்டில் பொருளாதாரச் சீர்திருத்தம் பேசுபவர்கள் மான்யங்களை முறைப்படுத்துவது பற்றி திரும்பத் திரும்ப பேசி வருவதை பார்க்கிறோம். விவசாயமும், தானிய உற்பத்தியும் அடிக்கடி மாற்றத்துக்கு உள்ளாகும் தன்மை கொண்டவை. அப்படி இருந்த போதிலும், பொருளாதார ஆய்வறிக்கையிலிருந்து 10 வது ஐந்தாண்டு திட்டத்தின் இடைக்கால ஆய்வு அறிக்கை வரை, அனைத்து அரசு ஆவணங்களும் மான்யங்கள் வெட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த தவறுவ தில்லை. அனைத்து மான்யங்களும ஏழைகளுக்கும் உண்மையாக அது தேவைப்படுவோருக்கும் கொடுக்கப்படும் என்று குறைந்தபட்ச செயல்திட்டம் சொல்லுகிறது.

இதைப் பயன்படுத்தி நிதி மந்திரி ஒரு அறிக்கை கொடுத்திருக்கிறார். எரிபொருள் (பெட்ரோலியப் பொருட்கள்), உணவு மற்றும் உரம் ஆகியவை களுக்கு வழங்கப்படும் மத்திய அரசின் மான்யம் வெட்டப்படும் என்று அந்த அறிக்கை கூறுகிறது. ரங்கராஜன் கமிட்டி பெட்ரோலியப் பொருட்களின் மீதான மான்யம் கடுமையாக குறைக்கப்பட வேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏன் நான்கு முறை அப்பொருட்களின் விலையினை ஐக்கிய முன்னணி அரசு உயர்த்தியது என்பதை இதன்மூலம் புரிந்து கொள்ளலாம். பொது விநியோக அமைப்புக்குள் வரும் கோதுமை, அரிசி அளவினை குறைப்பதன் மூலம் ரூ.4524 கோடிக்கு மான்யத்தை குறைக்க முயற்சித்தது. இடதுசாரி கட்சிகளின் கடுமையான எதிர்ப்பினைப் பார்த்த பிறகு அந்த முடிவில் மாற்றம் வந்தது. அதுவும் கூட மான்யத்தை 2006 – 07 ல் ரூ.2000 கோடியாக குறைப்பது என்று   தான் முடிவு செய்தனர். இது பொதுவிநியோக அமைப்பையும் பாதிக்கும். இந்திய உணவு கழகத்தின் கொள்முதல் பணியினையும் பாதிக்கும்.

புதிய சோசலிச கிராமப்புறம் என்கிற சீனாவின் பார்வைக்கும், மனித நேய முகத்துடன் தாராளமயம் என்று நமது பிரதமர் சொல்லுவதற்கும் உள்ள வேறுபாடு இப்போது நன்றாகப் புரியும். திட்டம் பற்றிய சீனாவின் தீர்மானம் அந்த மாறுபட்ட நிலையினை நமக்கு தெளிவாகப் புலப்படுத்துகிறது: போதுமானதை கொடுத்து, குறைவாக எடுத்துக்கொண்டு, கட்டுப்பாடுகளை தளர்த்தும் கொள்கைகளை நாங்கள் கடைப்பிடிப்போம். தொழில்துறை விவசாயத்திற்கும், நகரங்கள் கிராமப்புறங்களுக்கும் துணை நிற்பதை உறுதிப்படுத்தும் ஒரு நிரந்தர அமைப்பினை உருவாக்கும் முயற்சியில் வேகமாக செயல்படுவோம்.

நமது நாட்டில் நிலவி வரும் கிராமப்புற விவசாய நெருக்கடியின் விளைவுகளை சுரண்டும் வர்க்கச் சார்புடைய பத்திரிக்கைகள் கூட வெளியிடுகின்றன. அந்த பின்னணியில், மனித நேய முகம் பற்றிய இந்த அரசின் அக்கறை உண்மையான தென்றால், தொழில்துறை விவசாயத்திற்கும், நகரங்கள் கிராமப்புறங்களுக்கும் ஆதரவாக, துணையாக செயல்பட வைக்கும் ஒரு நிரந்தர நிர்வாக அமைப்பினை இந்த அரசு உருவாக்கியிருக்க வேண்டும். எப்படி அதைச் செய்ய முடியும்? தொழில் துறையினரிடமிருந்தும், நகரப்பகுதியிலிருந்தும் (பொதுமக்கள் மீதான வரி விதிப்பினால் அல்ல) போதுமான நிதி ஆதாரங்களைத் திரட்டி விவசாயத்திற்கும், கிராமப்புற வளர்ச்சிக்கும் பயன்படுத்த வேண்டும். திரட்டும் வழியில் ஆளும் கட்சியின் துணையுடன் நிதி ஆதாரம் கசிந்து கசிந்து காணாமல் போவதைப்பற்றி எச்சரிக்கையும் வேண்டும். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் உள்ளீடற்ற சில அறிவிப்புகளைத் தான் ஐக்கிய முன்னணி அரசு கொடுத்தது.

இந்த அரசு விவசாய நெருக்கடியினைத் தீர்க்க தேர்ந்தெடுத்த வழிமுறை முற்றிலும் வேறானது. பிரச்சனையின் தன்மையினை சரியாக ஆய்வு செய்து, அதில் அரசு ஆற்ற வேண்டிய பங்கினை வலுப்படுத்தியிருக்க வேண்டும். இரண்டாவது பசுமைப்புரட்சி பற்றி நிறைய பேசப்படுகின்றன. ஆனால் நடைமுறையில் பெரிய நிறுவனங்கள் (பன்னாட்டு நிறுவனங்கள் உட்பட) வழிகாட்டு தலுடன் ஏற்றுமதியை மையமாக வைத்து இந்த அரசு விவசாய நெருக்கடியைத் தீர்க்க முயலுகிறது. சில்லறை வணிகத்தில் அன்னிய மூலதன நுழைவு உள்நாட்டு வேலை வாய்ப்பினை கடுமையாக பாதிக்கும் என எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அதை இந்த அரசு செவி மடுப்பதாகத் தெரியவில்லை. அந்தத் துறையில் அன்னிய மூலதன நுழைவு தேவை என்று வாதாடும் பொழுதே, அம்மாதிரி முடிவுக்கான பல்வேறு நியாயங்களை சொல்ல ஆரம்பித்திருக்கிறது.

இந்தியாவில் நுகர் பொருட்களை விநியோகம் செய்ய நவீன கடை இணைப்புகள் தேவையென்றும் அதற்கு அன்னிய மூலதனம் உதவும் என்றும் வாதிடப்படுகிறது; அதற்கான சேமிப்பு மையங்கள், பண்டக சாலைகள், பொருட்களை கொண்டு செல்ல போக்குவரத்து வசதிகள், சேவைப் பிரிவுகள் – இவையாவும் விவசாயத் தேவைக்கும் உணவினை பக்குவப்படுத்தி விற்பனைக்குக் கொண்டு செல்லவும் தேவையான துணை அமைப்புகளாகும். இதற்கு பெருமளவில் அன்னிய மூலதனம் தேவை என்றும் சொல்லப்படுகிறது. அந்த புரிதலோடுதான் சேமிப்பு பண்டக சாலைகளில் ஏற்கனவே அன்னிய மூலதனம் அனுமதிக்கப் பட்டிருக்கிறது.ஆனால், ஒரு விஷயம் அரசுக்குப் புலப்படவில்லை. துணை அமைப்புகளை உருவாக்கவும், தொழில் நுணுக்கத்தை மேம்படுத்தவும் பன்னாட்டு நிறுவனங்களை உள்ளே நுழைய அனுமதிப்பதுதான் ஒரே வழி என அரசு கருதுகிறது. அரசு தன் பொது மூதலீட்டை அதிக்கப்படுத்துவதன் மூலம் அதைச் செய்ய முடியும் என்பதை அரசு உணரவில்லை.

விவசாயத் துறை வளர்ச்சிக்கான செயல் திட்டங்களை நிறைவேற்ற (சில்லறை விற்பனை செய்யும்) உலகம் தழுவிய கடை இணைப்புகளையும் விவசாயப் பொருள் வணிகத்தில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களையும் சார்ந்து செயல்பட்டால், என்ன விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை மலேசியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் நாட்டு அனுபவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. விவசாயிகள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய நிலை எழுந்தது. கடுமையான போட்டியில் (உணவுக்கான சில்லறை வணிகத்தில்) விளை பொருட்களின் விலை வீழ்ச்சி, உரிய நேரத்தில் விற்ற பணம் கைக்கு வராமல் போவது, கடன் உதவி மற்றும் காப்பீட்டு வசதி ஏதும் முறையாக கிடைக்காமல் போவது – இவைகள் தான் அவர்கள் சந்திக்கும் சில பிரச்சனைகள். சிறிய தோட்ட விவசாயம் மேற்கொண்டவர்கள் சந்தையிலிருந்து தூக்கி எறியப்பட்டார்கள். ஏனெனில், பன்னாட்டு சில்லறை வணிக நிறுவனங்கள் தன்னிச்சையாக தீர்மானிக்கும் தர மற்றும் பாதுகாப்பு அளவீடுகளை அவர்களால் அடைய முடிவதில்லை. நமது நாட்டு விவசாயிகளின் விளை பொருளுக்கு சர்வதேச சந்தையில் இடம் கிடைக்கும் என்ற வண்ணக் கனவு விதைக்கப்படுகிறது. ஆனால், வளரும் நாடுகளில் உள்ள முக்கிய விவசாய உற்பத்திப் பொருளை ஏற்றுமதி செய்தவர்களின் அனுபவம் என்ன என்பது மறைக்கப் படுகிறது. சர்வதேச சந்தையில் உலகளாவிய சில்லறை வணிக மன்னர்களுக்கு கிடைக்கும் இடம் வளரும் நாடுகளின் ஏற்றுமதி யாளர்களுக்கு கிடைப்பதில்லை; அங்கே அவர்களின் பொருட்களுக்கு நியாயமான விலையும் கிடைப்பதில்லை.

சந்தையில் பன்னாட்டு நிறுவனங்களின் ஏகபோகம் தலை விரித்தாடுவதின் விளைவு தான் இது. உலகம் தழுவிய இந்த விற்பனை கடை இணைப்புகளின் வளர்ச்சி பன்னாட்டு சில்லறை வணிக நிறுவனங்களின் லாபத்தினை உத்திரவாதம் செய்கிறது. வணிக ஒப்பந்த விதிகள் வளரும் நாட்டு விவசாயிகளுக்கு சாதகமாக இருப்பதில்லை; குறிப்பாக அந்த நாடுகளின் பிரதான விவசாயம் பொருள் ஏற்றுமதியாளர்கள் அந்த சாதகமற்ற நிலையினை சந்திக்க வேண்டியிருக்கிறது. விவசாய பொருட்களின் ஏற்றுமதி அளவு அதிகரித்தாலும் கூட வளரும் நாடுகளின் விவசாயிகள் சர்வதேச வணிகத்தில் இறக்கத்தையே சந்தித்து வருகிறார்கள். மெக்ஸிகோ நாடு அதற்கு சிறந்த உதாரணம். அதன் தோட்ட விளை பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்த போதிலும் அதனால் அந்நாட்டு விவசாயிகளுக்கு பலன் ஏதும் கிடைக்கவில்லை; ஏனெனில் அமெரிக்காவில் இருந்து செயல்படும் பெரும் வணிகர்களின் கட்டுப்பாட்டிற்குள் சந்தை இருப்பது மட்டுமல்லாமல் ஏற்றுமதியின் ஒரு அலகின் மதிப்பு வேகமாகக் கீழிறங்கி விட்டது.

ஏற்கனவே நெருக்கடியில் உள்ள நம்நாட்டு விவசாயத்தினை சந்தை சக்திகளின் வெறியாட்டத்திற்கு உட்படுத்தும் செயல் திட்டத்தினை ஐக்கிய முன்னணி அரசு மேற்கொள்கிறது; காப்பு வரி குறைக்கப்பட வேண்டும் என உலக வர்த்தக அமைப்பின் நிர்பந்தத்திற்கு அடிபணியும் போக்கு இருந்தாலும் அண்மையில் நடந்த உலக வர்த்தக அமைப்புக் கூட்டத்தில் எதிர்ப்புக்குரல் எழுப்பி வர்த்தக அமைச்சர் வெளிநடப்பு செய்தது சற்று ஆறுதல் தரும் செய்திதான். வளர்ந்த நாடுகளின் நிர்பந்தங்கள் எப்படி நம்நாட்டு பொருளாதாரத்தை சீரழிக்கும் என்ற பாடத்தை கற்றார்களா? என்று தெரியவில்லை. ஆனால் இரண்டாவது பசுமைப் புரட்சி என்ற பெயரில் இதுவரை இல்லாத முறையில் பன்னாட்டு நிறுவனங்களின் லாப வேட்டைக்கு இந்திய விவசாயம் திறந்து விடப்படும் ஆபத்து இருக்கிறது. மத்திய அரசு விதைச்சட்டம் ஒன்றினை கொண்டு வந்திருக்கிறது. அது செயல்படுத்தப்பட்டால் முற்றிலும் விதைக்கான விவசாயிகளின் உரிமைகளை பறிப்பதிலும், விதை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் பிடி இறுகுவதிலும் போய் முடியும். மான்சான்டோ என்ற பன்னாட்டு நிறுவனம் பஞ்சு விலையினை உயர்த்தியிருப்பது குறித்து ஆந்திர மாநில அரசே வழக்கு தொடர வேண்டிய நிலை எழுந்திருக்கிறது. அமெரிக்க குடியரசுத் தலைவர் இந்தியா வந்தபொழுது விவசாய ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான இந்திய – அமெரிக்க அறிவு சார் முன்முயற்சி (The Indo – US Knowledge Initiative on Agriclutural Reserch and Education) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அது இந்த நாட்டில் விவசாய ஆராய்ச்சிக்கான செயல் திட்டத்தை உருவாக்கும் அதிகாரத்தை வால் மார்ட்டுக்கும், மான்சென்டாவுக்கும் கொடுக்கிறது; அந்த ஆராய்ச்சிக்கான நிதி ஆதாரங்களை அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் வழங்கும். ஆகவே, அமெரிக்காவின் கெடுபிடியான அறிவுசார் சொத்துரிமை அமைப்போடு இந்த ஆராய்ச்சி இணைக்கப்படுகிறது.

பேராசிரியர் சுவாமிநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட விவசாயிகளுக்கான தேசிய கமிஷன் அறிக்கை சில பரிந்துரைகளை அளித்திருக்கிறது. அது நிறை வேற்றப்பட்டால் விவசாய நெருக்க டியின் வெப்பம் குறைய வாய்ப்புண்டு. அந்த பரிந்துரைகள் இத்துறையில் அரசின் பங்கினை அல்லது பொறுப்பினை அழுத்தமாக பதிவு செய்கிறது; விவசாயத்துக்ன அரசின் முதலீடு அதிகரிக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்துகிறது. ஆனால், அந்தப் பாதையில் மத்திய அரசு நடக்கவில்லை. அதற்கு மாறாக இரண்டாவது பசுமைப்புரட்சி என்ற பெயரில் பலமுனைகளில் இந்திய விவசாயத்தை பன்னாட்டு நிறுவனங்கள் கையில் ஒப்படைக்கும் பணியினை மேற் கொண்டுள்ளது.

இடதுசாரி கட்சிகளின் மாற்றுவழி

நாட்கள் நகர நகர தேசிய குறைந்த பட்ச வேலைத் திட்டத்திலிருந்து ஐக்கிய முன்னணி அரசு விலகிக் கொண்டிருக்கும் போக்கு தெரிகிறது. நிதி பற்றாக்குறையினைக் கட்டுப்படுத்தும் சட்டத்தை ஏற்றுக் கொண்ட பிறகு, குறைந்த பட்ச வேலைத் திட்டத்திற்கான நிதி ஆதாரங்களை முக்கியமாக வரிகள் மூலம் தான் திரட்ட முடியும். இடதுசாரிக்கட்சிகள் நிதி ஆதாரம் திரட்ட ஆலோசனைகளை கொடுத்திருக்கின்றன. ஆனால், அவை பறிமுதல் செய்யும் வரி அமைப்பு ஒன்றை உருவாக்கும் என்று சொல்லி பிரதமர் அதை புறந்தள்ளிவிட்டார். இடதுசாரிகள் ஊதியம் பெறும் மத்திய தர வர்க்கத்தினரின் மீது போடப்படும் வருமான வரியினை உயர்த்தும் யோசனை எதையும் தெரிவிக்கவில்லை; உள்நாட்டு உற்பத்தி யாளர்கள் மீது போடப்படும் எந்த தீர்வையும் சொல்லவில்லை (டீசலில் ஓடும் சொகுசுக்கார் மீது விதிக்கப்படும் வரி ஒன்றைத் தவிர) நிறுவன வரி உயர்வினை (2005 – 06 ல் அது வெகுவாகக் குறைக்கப்பட்டிருக்கிறது) க் கூட கேட்கவில்லை.

இடதுசாரிக் கட்சிகள் கொடுத்த ஆலோசனைகள் பிரதானமாக நான்கு பகுதிகளை உள்ளடக்கியது.

  1. மூலதனச் சந்தையில் விளையாடும் ஊக வணிகத்தின் மீது நீண்ட கால மூலதன லாப வரி விதிக்க வேண்டும்; பங்கு பரிவர்த்தனை மீதான வரி உயர்த்தப்பட வேண்டும்.
  2. ஏராளமான வரி விலக்கும் வரிச்சலுகைகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவைகள் பெரிய முதலாளிகளுக்கு கொடுக்கப்படும் மானியங்கள். அவைகள் நிதி ஆதாரத்தின் தேவை கருதி சீரமைக்கப்பட வேண்டும்.
  3. செல்வத்தின் மீது போடப்படும் வரி உயர்த்தப்பட வேண்டும்; குடும்ப வழி பெறும் சொத்துரிமைக்கு வரி உண்டு; அதில் பெரும் பணக்காரர்கள் மட்டுமே அந்த வரி வரம்புக்குள் வரும் வகையில் சில விதி விலக்குகள் உறுதி செய்யப்பட வேண்டும்.
  4. வசதி படைத்தவர் அனுபவிக்கும் ஆடம்பரப் பொருட்கள் மீது போடப்படும் விற்பனை வரி / மதிப்பு கூட்டு வரி விகிதம் உயர்த்தப்பட வேண்டும். இந்த ஆலோசனைகள் பறிமுதல் நோக்கம் கொண்டவை என்று சொன்னால், இந்த அரசு யார்மீது எந்த வர்க்கத்தின் மீது கழிவிரக்கம் கொண்டுள்ளார்கள் என்பது நன்கு புலனாகிறது.

2006 – 07 ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் கூடுதல் ஆதாரம் திரட்டப்படுவது ரூ.6000 கோடியாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது; இது மிகவும் சொற்பம் தான் என்பதோடு கூட, 2005 – 06ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்ட அதே தொகை தான் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கடந்த ஆண்டில் அந்தத் தொகை முழுவதும் நேர்முக வரிவிதிப்பின் மூலமாக வரும் என்று சொல்லப்பட்டது; ஆனால் 2006 – 07ல் அது மூன்றில் இரண்டு பங்கு நேர்முக வரி மூலமாகவும் மீதம் மறைமுக வரி மூலமாக திரட்டப்படும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. கொடுபடாமல் நிலுவையில் உள்ள வரி வசூல் மொத்த நிலுவையில் 10 சதம் கூட தாண்டவில்லை.

வருவாய் உயர்ந்திருக்கிறது என்பது உண்மை. தொழில் நிறுவனங்களின் லாபம் உயர்ந்ததால் தொழில் நிறுவன வரி மூலம் வருவாய் உயர்ந்தது; சேவை வரிக்கான தளம் விரிவாக்கப்பட்டது; சர்வதேச எண்ணெய் விலை உயர்வால் இறக்குமதி செய்யும் எண்ணெய் மீது போடப்படும்சுங்கவரி மூலம் வருவாய் உயர்ந்தது. 2002 – 03 ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரி வருவாய் 8.8 சதமாக இருந்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து 2005 – 06 ல் 10.5 சதமாக உயர்ந்தது; 2006 – 07 ஆண்டு நிதி நிலை அறிக்கையில் அது 11.2 சதம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

இப்படி வரி வருவாய்க்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையே உள்ள விகிதம் உயருவது வரவேற்கத்தக்கதுதான்; கூடுதல் ஆதாரங்களைத் திரட்ட முயற்சிகள் ஏதும் இல்லையென்றால் அந்த விகிதம் உயர்வு தொடர்ந்து இருக்குமா என்பது சந்தேகந்தான்.

தற்போது இருக்கும் முறையிலேயே வருவாய் சேகரிப்பு இருக்குமேயானால், குறைந்த பட்ச செயல் திட்ட இலக்குகளை அடைவது என்பது இயலாது. அரசு நிதிப்பற்றாக்குறை சட்டத்தை தூக்கி எறிந்துவிட்டு, நிதிப்பற்றாக்குறையினை விரிவு படுத்தினால் அது இயலும். ஆனால், நிதி அமைச்சர் அந்த சட்டத்தினின்று விலகப் போகும் பேச்சுக்கே இடமில்லை யென்றும் நிலையான வரி விகிதங்கள் தான் சரியான தென்றும், கூடுதல் நிதி ஆதாரம் தேடுவதற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் விகிதங்களை அடிக்கடி மாற்றுவது சரியில்லையென்றும் வாதிடுகிறார். புதிய தாராள மயக் கொள்கைகயின் பொருளாதார தத்துவத்தை இதனைக் காட்டிலும் சிறப்பாக யாரும் சொல்லிவிட முடியாது. இதன் அர்த்தம் என்னவென்றால் வரி வருமானம் கரை புரண்டு ஓடி வந்தால் தான் குறைந்த பட்ச செயல் திட்டத்தின் இலக்குகள் நிறைவேறும் என்பதாகும். அந்த அதிசயம் நிகழாத வரையில், அந்த இலக்குகள் அறை குறையாகவும், தயக்கத்துடன் தான் அணுகப்படும்; கடைசியில் முற்றிலும் கைவிடப்படும்.

மறுபடியும் சீனாவுடன் ஒப்பிடுவது இங்கே பொருத்த மானதாக இருக்கும். வருவாய் சேகரிப்பும், மொத்த செலவினங்களும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எத்தனை சதம் இந்த இரு நாடுகளிலும் இருக்கிறது எனப்பார்த்தால், இந்தியா இதிலும் பின் தங்கியிருப்பது தெரிகிறது.இரு நாடுகளில் நிதிநிலை அறிக்கையில் கணக்கிடும் முறை வெவ்வேறானவை; ஆனால், அதிக வருவாய் (நிதி ஆதாரங்கள்) திரட்டுவது அதிகமான முதலீட்டு – செலவினங்களுக்கு உதவுகிறது என்பது சீன அனுபவத்திலிருந்து தெரிகிறது.

இந்தியா – சீனா – வருமானம் மற்றும் மொத்த செலவினங்கள் – மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதமாக

இந்தியா சீனா
2005 – 06 2006 – 07 2003 2006
வருமானம் (வரி வருவாய் உட்பட) 10.0 % 10.6 % 17.3 % 18 %
மொத்த செலவினங்கள் 14.6 % 14.8 % 19 % 19.5 %

மனித நேய முகத்தோடு தாராயமயம் என்பதில் உள்ள அடிப்படை முரண்பாடு எதில் இருக்கிறது? இந்திய அரசு தனது வருவாயினை பெருக்குவதற்கும் தேவையான செலவினங்கள் / முதலீடுகளை செய்வதற்கும் (சீனாவில் கடைபிடிக்கப்படுவது போல்) இயலாத தன்மையில் உள்ளடங்கியிருக்கிறது. நிதி மந்திரி நிதி ஆதாரம் திரட்ட கொடுக்கப்படும் மாற்று ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ள மறுப்பதில் இந்த இயலாமை வெளிப்படுகிறது; ஏனெனில் இந்த அரசு தாராளமயம் என்ற கோட்பாட்டினை முழுமையாக அங்கீகரித்து செயல்படுகிறது. பெரிய முதலாளி களுக்கும் ஊக வணிகத்தில் ஈடுபடுவோருக்கும் உகந்த நடைமுறை அது. வரி கொடுக்க முடிந்த செல்வந்தர்களிடம் வரி வசூல் செய்து ஏழை மக்களுக்கு உதவுவது என்பது தான் பொருளாதார நீதி. மூலதன லாப வரியினை எடுத்துக் கொள்வோம். மூலதனச் சொந்தக்காரர் எந்த வகையான உழைப்புமின்றி உற்பத்திக்கான முதலீடு ஏதுமின்றி, சொத்து மதிப்பின் (பங்குச் சந்தையின்) ஏற்ற இறக்கத்தில் பெறும் லாபத்தின் மீது போடப்படும் வரி அது. முன்னேறிய நாடுகளில் இது மாறுபட்ட விகிதங்களில் அமுலாகிறது; அமெரிக்காவில் இந்த வரி விகிதம் லாபத்தில் 15 சதமாகும்.

2003 – 04ம் ஆண்டு தேசிய ஜனநாயக அணி அரசின் நிதி நிலை அறிக்கையில், பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளுக்கு நீண்டகால மூலதன லாப வரியிலிருந்து எந்த தயக்கமமின்றி விலக்கு அளிக்கப்பட்டது. 2004 ல் தனது முதல் நிதிநிலை அறிக்கையினைக் கொடுத்த இந்த அரசும் அதைத் தொடர்ந்தது; அந்த வரியினையே ஒட்டு மொத்தமாக விலக்கிக் கொண்டது. அந்த இடத்தில் பங்கு பரிவர்த்தனை வரி கொண்டு வரப்பட்டது. ஆனால், பங்குச்சந்தை தரகர்களுக்கும் ஊக வணிக வியாபாரிகளும் கூச்சல் போட்டனர். வரி விகிதத்தினை குறைத்து இந்த அரசு அந்த வரியின் தன்மையினையே நீர்த்துப் போகச் செய்துவிட்டது. என்னே அதன் வர்க்க பாசம்! மூலதனச் சந்தையின் முதலீட்டாளர்கள் இந்த நிலையினை பயன்படுத்தி கோடி கோடியாக பணம் சம்பாதித்தனர். அரசுக்கு வரியாக வரவிருந்த வருமானம் பறிபோனது மட்டுமல்லாமல், அந்தப்பணம் ஊக வணிகத்திற்கான மூலதனமாக உருவெடுத்தது. அதுதான் இந்திய பங்குச் சந்தை புள்ளிகள் திடீர் ஏற்றத்துக்கு வித்திட்டது.

உலகத்தில் உள்ள கோடீஸ்வரர்களை சுட்டிக் காட்டும் ஃபோர்பஸ் பட்டியலில் 10 இந்தியர்கள் புதிதாக சேர்க்கப்பட்டிருப்பதாக ஒரு செய்தி. அமெரிக்காவிற்கு அடுத்தாற்போல் கடந்த ஆண்டில் இந்தியாதான் அதிக கோடீஸ் வரர்களை உருவாக்கியிருக்கிறது என சொல்லப்படுகிறது. இந்த உயர்வுக்கும் நீர்க்குமிழி போல் தோன்றி மறையும் பங்குச் சந்தை ஓட்டத்திற்கும் தொடர்பு உண்டு. இந்த நாட்டின் பெரும்பாலான மக்களுக்கும் பங்குச்சந்தைக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால், அவர்கள் தான் பங்கு சந்தை புள்ளிகளின் நிலையில்லா மாற்றங்களின் விளைவை சந்திக்க வேண்டி யிருக்கிறது. இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் முன், இடதுசாரி கட்சிகள் நீண்டகால மூலதன லாப வரி 15 சதம் என்பதை மீண்டும் விதிக்கப்பட வேண்டும் என்றும், பங்கு பரிவர்த்தனை வரியினை உயர்த்த வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். அது விரைவான ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளாகும் மூலதனச் சந்தையினை கட்டுக்குள் வைத்திருப்பது மட்டுமல்லாமல் அரசுக்கு சுமார் ரூ.5000 கோடி வருவாயினையும் கொடுக்கும்.

ஆனால், நிதி அமைச்சகத்தின் அணுகுமுறை வேறு விதமாக இருக்கிறது. இந்த வரி விதிப்பு ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வதற்கு பதில், 2006 – 07 நிதி நிலை அறிக்கையில், அரசு நிறுவனப் பங்குகளை பன்னாட்டு நிதி நிறுவனங்கள் வாங்குவதற்கு விதிக்கப்பட்ட உச்ச வரம்பினை நீக்குவதாக அறிவிக்கப்பட்டது; இந்தியாவில் உள்ள பரஸ்பர சார்பு நிதியங்களும் (ஆரவரயட குரனேள) வெளிநாட்டு நிதியங்களில் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டது. தாராள மயக் கொள்கைகளை ஏற்றுக் கொண்ட காரணத்தால் இந்த அரசு பன்னாட்டு நிதி நிறுவனங்கள் தொடர்ந்து உள்ளே வர அனுமதித்து பங்குச் சந்தை பற்றிய நல்ல செய்திகளை அறிவிக்க வேண்டிய அவசியம் வருகிறது. இடதுசாரிக் கட்சிகள் கூறும் ஆலோசனைகளை எடுத்துக் கொண்டால் அது முதலீடு செய்பவர்களுக்கு கெட்ட செய்தியாக இருக்கும் என அரசு நினைக்கிறது. பங்குச் சந்தை வீழ்ச்சியினை அது தடுத்து நிறுத்தும் என்று அரசு கருதியது. ஆனால், அண்மையில் சட சடவென்று சரிந்து விழுந்த பங்குச் சந்தை சீரழிவு அந்த கருத்தை பொய் யாக்கியது. மே மாதத்தில் மட்டும் பன்னாட்டு நிதி நிறுவனங்கள் தாங்கள் முதலீடு செய்ததில் ரூ.8247 கோடியினை திரும்ப எடுத்துக் கொண்டார்கள் என்றும் அது வீழ்ச்சியினை துரிதப்படுத்தியது என்பதும் அவ்வளவு நல்ல செய்தி அல்ல. பங்குச் சந்தை புள்ளிகள் உயர்வு வேண்டும்; ஊக வணிகத்தில் விளையாடும் மூலதனம் கோடிக்கணக்கில் எந்த தடையும் இல்லாமல் லாப மீட்டும் – இதுதான் அரசின் அணுகுமுறை. இதன் விளைவு? சமூக நலத் திட்டங்களுக்குத் தேவையான நிதி உதவியினை அதிகரிக்க இயலாது போய் விடுகிறது. எங்கே அந்த மனித நேய முகம்?

மற்ற நாடுகளின் அனுபவம் – நமக்கு பாடமில்லையா?

இதற்கிடையில் பிரதமர் ஒரு அறிவிப்பினை வெளியிட்டார். ஆசிய நிறுவனங்களின் மாநாட்டில் பேசும் பொழுது, தாராளமயத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையாக அரசு முழு மூலதனக் கணக்கு மாற்றம் கொண்டு வரும் என்று அறிவித்தார். இதன்படி உள் நாட்டிலும், வெளிநாட்டிலும் வாழ்வோர் எந்த தடையுமின்றி எந்த நேரத்திலும் மூலதனத்தை உள்ளே கொண்டு வரவும் வெளியே எடுத்துச் செல்லவும் முடியும்; இந்தியக் குடிமகன் தன் விருப்பப்படி தன்னுடைய சொத்தை இந்த நாட்டிற்கு வெளியே எடுத்துச் செல்ல முடியும், தடையேது மிருக்காது. பிரதமர் சொல்கிறார், நாட்டின் பொருளாதாரம் வளமாகவே உள்ளது. 1997 – 98 ஆண்டுகளில் தென் கிழக்கு ஆசிய நாடுகள் சந்தித்த பெரும் பொருளாதார நெருக்கடிக் குப் பிறகு இந்த மூலதனக் கணக்கு மாற்றம் நிறுத்தி வைக்கப்பட்டது. இப்போது அந்த முடிவு உள்நாட்டு, வெளிநாட்டு நிலைமைகளில் மீண்டும் பரிசீலனை செய்யப்பட வேண்டும் – இது தான் பிரதமரின் கூற்று. ஜோசப் ஸ்டிக்லிட்ஜ், உலக வங்கி பொருளாதார நடவடிக்கைகளோடு நீண்டகாலம் தொடர்பு கொண்டவர். அதைவிட்டு வெளியே வந்து (வெளியேற்றப் பட்டுஎன்ற செய்தியும் உண்டு) உலகமயம் பற்றி விமர்சித்து எழுதிய புத்தகம் உலகமயமும் அதன் அதிருப்தி அம்சங்களும் (Globalization and its Discontents). அதில் தெற்காசிய பொருளாதார நெருக்கடியினைக் குறிப்பிட்டு முழு மூலதனக் கணக்கை தாராள மய மாக்கியது தான் அந்த நெருக்கடிக்கு பிரதானமான காரணம் என்று எழுதி யிருக்கிறார். கடந்த காலத்தில் அந்த நெருக்கடி நம் நாட்டையும் தொத்திக் கொள்ளாமல் இருந்ததற்கு ஓரளவேனும் மூலதனக் கட்டுப்பாட்டை நாம் கடை பிடித்தது தான் காரணம் என்று சொல்லப்பட்டது. தெற்காசிய நாடுகள், மெக்ஸிகோ, ரஷ்யா, பிரேசில், துருக்கி போன்ற நாடுகளின் அனுபவம் கூட முழு மூலதனக் கணக்கு மாற்றத்தின் மூலம் நிகழும் தங்கு தடையற்ற மூலதன ஓட்டம் வளரும் நாடுகளின் பொருளாதாரத்தை சீரழிக்கும் என்பதை காட்டுகிறது. ஆனால், நம் நாட்டின் புதிய தாராள மய வாதிகள் அதைத்தான் நலம் தரும் செயல் என்று வாதிடுகின்றனர்.

நமது நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பில் 30 சதம் பன்னாட்டு நிதி நிறுவனங்களின் மூலதனமாகும். பங்குச்சந்தை முதலீட்டு நடவடிக்கைகளில் 13 சதம் அவைகளின் பங்கு உள்ளது. இது சீனாவில் 3 சதம் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்தியாவைக் காட்டிலும் 10 மடங்கு அன்னிய நிதி முதலீட்டை சீனா பெறுகிறது. ரிசர்வ் வங்கி அறிக்கையின் படி நமது நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பில் மார்ச் 2004 ல் 36 சதம் இப்படி எந்த நேரத்திலும் ஓடி விடும் சூடான பணமாக (உள்நாட்டு தனியார் நிறுவனங்கள் வாங்கும் குறுகிய கால  வணிக கடன்கள் உட்பட) இருந்தது; செப்டம்பர் 2005 ல் 40.5 சதமாக உயர்ந்தது. மாறாக தொழில்களுக்கான அன்னிய நேரடி மூலதனம் உள்ளே வந்த மொத்த தனியார் மூலதனத்தில் 10 சதம் தான். இந்த நிலை எந்த ஆரோக்கியமான வளர்ச்சியையும் கொடுப்பதில்லை. பறந்தோடும் மூலதன நுழைவு நிதிச்சிக்கலை உருவாக்கும் என்பது தெளிவு.

நிலைத்து நிற்க முடியாத பங்குகளின் இயக்கம், சூடான பணம் உருவாக்கும் நிலம்/வீடு விற்பனை வணிகம், நாணய மதிப்பு குறைப்பு, பெருகி வரும் நடப்பு கணக்கு பற்றாக்குறை – இந்தியாவில் நிலவும் இந்த நிலை 97 – 98 ல் தென் ஆசிய நாடுகளில் நாணய நெருக்கடி காலத்தில் நிலவியதோடு பொருந்தியிருக்கிறது. இந்த சூழ்நிலையில் முழு மூலதனக் கணக்கு மாற்றத்தை அனுமதிப்பது ஊக வணிக மூலதனம் வேகமாக உள்ளே வருவதற்கு வழிவகுக்கும், விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் வெளிநாட்டு வணிக கடன்கள் வாங்கப்படும் – மொத்தத்தில் நிதி நெருக்கடியில் நொறுங்கிப் போகும் பொருளாதாரமாக நமது நாட்டின் பொருளா தாரம் மாறும். நாணய நெருக்கடியினை சந்தித்த பல வளரும் நாடுகளின் அனுபவத்தின் படி பார்த்தால் பன்னாட்டு நிதி நிறுவனங்களின் முதலீடுகள் திடீரென வெளியே ஓடி விடுவதால் அந்த நெருக்கடி தோன்றுகிறது. அங்கே சர்வதேச நிதி நிறுவனம் (IMF) போன்ற அமைப்புகள் மீட்பு பணிக்கு வந்து விடுகின்றன; அதன் தொடர்ச்சியாக நிபந்தனைகளை ஏற்று அரசு செலவினங்கள் குறைக்கப்படுவதிலும் பெரிய அளவில் உள்நாட்டு சொத்தை வெளிநாட்டு மூலதனமாக மாற்றுவதிலும் போய் முடிகிறது. இந்த நெருக்கடி குறைந்த பட்ச வேலைத் திட்டத்தை உருக்குலைப்பதோடு பொருளாதார சுயச்சார்புத் தன்மைக்கு கேடு விளைவிக்கும்.

இந்தியாவின் ரிசர்வ் வங்கியும் இதில் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும் என அரசுக்கு எச்சரிக்கை கொடுத்திருக்கிறது. பல நேரங்களில் இத்தகைய எச்சரிக்கைகளை தூக்கி எறியப் பட்டுள்ளது. இட்ட கட்டளையை நிறைவேற்றுமாறு ரிசர்வ் வங்கி பணிக்கப்பட்டிருக்கிறது. வங்கிகளில் அன்னிய நேரடி மூலதனம் உள்ளே வருவதற்கான உச்ச வரம்பை நீக்குதல், அன்னிய நிதி நிறுவனங்களின் மூலம் மூலதனம் உள்ளே வருவதை தாராள மயமாக்குதல், மூலதனக் கணக்கு மாற்றம் ஆகியவற்றில் ரிசர்வ் வங்கியின் விருப்பமில்லாமலேயே அரசோடு சேர்ந்து செயல்பட வேண்டி வந்திருக்கிறது. மத்திய அரசின் தாராளமய உற்சாகம் மனித நேய முகத்தை கீறிக் கிழித்து ரத்தம் சொரிய வைக்கிறது. ஊக வணிக மூலதனத்தால் நிதி அமைப்பு காயப்படும் தன்மையினை குறைப்பதாக தேசிய குறைந்த பட்ச செயல் திட்டத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி காற்றில் பறந்து கொண்டிருக்கிறது.

என்ன செய்ய வேண்டும்?

விவசாய நெருக்கடி, வேலையின்மை ஆகிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள் புதிய பிரச்சனைகளை நமது பொருளாதாரத்தில் உருவாக்குகின்றன. ஐக்கிய முன்னணி அரசு பொறுப்பேற்கும் பொழுது தங்கள் கனவுகள் நிறைவேறும் என்று நம்பிக்கை கொண்டவர்கள் தற்போது விரக்தியின் விளிம்பை நோக்கி பயணம் செய்கிறார்கள்; அதிருப்தி அலை வீசத் துவங்கியிருக்கிறது. அரசுப் பொறுப்பில் வீற்றிருக்கும் மனிதர்கள் சிந்திக்க வேண்டும். மக்களின் நல் வாழ்வினையும் (மனித நேய முகம் இருந்தாலும் சரி இல்லை யென்றாலும் சரி) தாராள மயத்தினையும் இணைக்கும் அம்சம் ஏதும் இல்லை என்பதை அவர்கள் உணர வேண்டும்; அந்த தவறான கொள்கைகளையும், நடைமுறைகளும் கைவிட வேண்டும். மக்களுக்கு ஆதரவான குறைந்த பட்ச செயல் திட்டத்தின் பகுதிகளை நிறைவேற்ற அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும். செல்லும் வழியினை மாற்ற மறுத்தால் தேசிய ஜனநாயக அணி அரசு போய் சேர்ந்த அதே இடத்திற்கே இந்த அரசும் போய்ச் சேரும்.

(மார்க்சிஸ்ட் ஆங்கில இதழில் (XXII – ஜனவரி – மார்ச் 2006) கட்டுரையினைத் தழுவியது)

மார்க்சிஸ்ட் ஆங்கில இதழ் (XXII – ஜனவரி – மார்ச் 2006)



%d bloggers like this: