மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


நவீன அமெரிக்க பொருளாதார ஏமாற்றுகளும் ஒரு பேராசிரியரும்!


அமெரிக்க நாட்டுப் பொருளாதாரப் பேராசிரியர் ஜான் கென்னத் கால்பிரெயித் சில மாதங்களுக்கு முன் காலமானார். அவருக்கு வயது 98. இந்தியா உட்பட உலக நாடுகளின் பத்திரிக்கைகள் அவருக்கு புகழாரம் சூட்டி அஞ்சலி செலுத்தின. பொருளாதாரத்துறையில் அவரது பங்களிப்பை நினைவு கூர்ந்தன. 1961 முதல் 63 வரை அவர் அமெரிக்க தூதுவராக இந்தியாவில் பணிபுரிந்ததை இந்தியப் பத்திரிக்கைகள் நினைவு கூர்ந்தன.

அவர் விட்டுச் சென்ற எழுத்துக்களைக் கவனித்தால் அரசியலிலும், பொருளாதாரத் துறையிலும் இடித்துரைக்கும் ஒரு நண்பரை இழந்துவிட்டோம் என்ற எண்ணம் மனதிலே நிழலாடும். 98 வயது வரை வாழ்ந்த அவர் 70 ஆண்டுகளாக பொருளாதார யுக்திகளின் சமூக விளைவுகளை நுணுகி ஆய்வு செய்தார். அவர் பொருளாதாரத் துறை சார்ந்த 31 நூல்கள் எழுதியுள்ளார். அவர் எழுதிய முதல் புத்தகம் அமெரிக்க முதலாளித்துவம் (அமெரிக்கன் காப்பிட்டலிசம்) என்ற நூல். இந்த நூல் அமெரிக்க முதலாளித்துவத்தின் பொருளாதார யுக்திகளின் (எகனாமிக் டெக்னிக்ஸ்) செயல் திறனை பாராட்டி எழுதிய விமர்சன நூலாகும். அவர் எழுதிய கடைசி புத்தகம் பழியற்ற ஏமாற்றுப் பொருளாதாரம் (எகனாமிக்ஸ், ஆஃப் இன்னொசென்ட் ஃபிராடு) என்ற 62 பக்கங்களே கொண்ட சிறிய நூலாகும். இது அமெரிக்க நவீன முதலாளித்துவப் பொருளாதார ஏமாற்றுகளை எடுத்துக் காட்டியது. சொல்லாடல் மூலம் எவ்வாறு ஏமாற்றுக்களை மக்கள் தலையில் கட்டுகிறார்கள். எதார்த்தத்தை ஏற்க தடுக்கப்படுகிறார்கள் என்பதை இப்புத்தகம் காட்டுகிறது.

அமெரிக்க பொருளாதார யுக்திகள் என்பது எதார்த்தங் களை மறைக்க உருவான ஏமாற்று வித்தைகளே என்பதை எழுத ஒரு அமெரிக்க குடிமகனுக்கு மிகுந்த நேர்மையுடன், துணிச்சலும் வேண்டும். அமெரிக்க பண்பாட்டின் துரோகி, கம்யூனிஸ்ட் என்றெல்லாம் முத்திரை குத்தி வேட்டை யாடப்படுவதை தாங்கும் இதயம் கொண்டிருக்க வேண்டும். (அமெரிக்காவில், கம்யூனிசம் என்றால் கேவலமானது. அதே போல் காப்பிட்டலிசம், முனாப்பொலி போன்ற சொற்களும் அருவருப்பானது.)

அமெரிக்காவில் பிறப்பது என்பதே ஒரு அபூர்வமான வாய்ப்பாகும். செல்வம் திரட்ட ஏழு கடல்களையும் தாண்டி அக்கிரமங்கள் செய்யும், ஒரு தாதா வீட்டில் பிறப்பதற்கு ஒப்பாகும் என்று ஒரு நிருபர் எழுதியது முற்றிலும் சரி. ஒரு சராசரி அமெரிக்கனுக்கு மற்றவர்களைவிட கூடுதல் சுதந்திரமுண்டு, வளமான வாழ்வு உண்டு, செல்வம் திரட்ட ஏராளமான வாய்ப்புகளும் உண்டு.

இந்த வளங்களும், வாய்ப்புக்களும், தொழில் நிறுவனங்களின் சிறப்பிற்கும் அடிப்படை அமெரிக்க அரசாங்கத்தின் செயல்கள் மூலம் உலக நாடுகளைச் சுரண்டியும், ராணுவத்தை அனுப்பி மக்களைப் பெரும் திரளாகக் கொன்றும், கடன் வலைகளை விரித்தும் உருவாக்கப்படுகிறது என்பதை சராசரி அமெரிக்கனால் உணரவே இயலாது. (எருதின் நோயை காக்கை அறியாது என்பது போல் தான்) பங்குச்சந்தை சரிந்தால் பதறுவான்; பக்கத்து நாட்டிலும், தூர தேசத்திலும், அமெரிக்க ராணுவ நடவடிக் கைகளால் லட்சக் கணக்கானோர் சாய்ந்தால் கை தட்டுவான். இதனை சுதந்திரத்தையும், மனித உரிமையையும், இன்பத்தைத் தேடும் உரிமையையும் காக்கும் சேவையாக கருதுவான். அமெரிக்க அரசியலமைப்பும் பிடிபடாத ஒன்றாகும். ஒரு நபரின் எதேச்சதி காரத்தை உத்தரவாதப்படுத்த, மிகவும் சிக்கலான, மர்மங்கள் நிறைந்த வாக்களிப்பு முறை இங்கு உள்ளது. இங்கே ஜனாதிபதியைத் தேர்ந்தெடுத்த பின் முனகிக் கொண்டே அந்த நபரின் எதேச்சதிகாரத்தை மக்கள் சகித்துக் கொள்வர். அவர்கள் வெளியிடுகிற கருத்துக் கணிப்புகள் மூலம் இதனை நாம் உணரலாம்.

உலகளவில் மிகப்பெரும் பணக்காரர்கள் வாழுமிடம் அமெரிக்கா; அதே நேரம் மிக அதிகமானவர்கள் சிறையிலே வாழ்வதும் அங்கு தான். கருப்பு அமெரிக்கர்களில் 20 வயதிற்கு உட்பட்ட சிறார்களில் 12 சதம் பேர் சிறையிலே வாழ்வதாக அரசே புள்ளி விபரம் தருகிறது. ஸ்டான்லிடூக்கி வில்லியம்ஸ் எழுதிய சிறைவாழ்க்கை என்ற 80 பக்க புத்தகம் வறுமையில் உழலும் அமெரிக்க சிறார்கள், சிறை வாழ்வை சொர்க்கமாகக் கருதி குற்றங்கள் புரிவதும் மன உளச்சலில் அவதிப்படுவதையும் படம் பிடித்துக் காட்டுகிறது.

சிறுவன் டூக்கி வில்லியம்ஸ் தெருச் சண்டையில் நடந்த கொலைக்காக 1981 ல் மரணதண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறான். இச்சிறுவன் சிறையிலிருந்து எழுதியவைகள் மக்கள் மனதைத் தொட்ட இலக்கியமாகிவிடுகிறது. சிறை வாழ்க்கை என்ற புத்தகத்தை அமெரிக்கப்பள்ளிகளில் பாடநூலாக ஆக்கப்படுகிறது. உள்நாட்டுக் கலவரங்களைத்  தடுக்கும் மாமருந்தாக இப்புத்தகத்தை அறிவுலகம் பார்த்தது. நோபிள் பரிசு பெற்ற ஆன்றோர்கள், டூக்கி வில்லியம்சிற்கு நோபிள் பரிசு வழங்க சிபாரிசு செய்கின்றனர்.

அமெரிக்க அரசு சிறுவனை தூக்கிலிடவுமில்லை, மன்னித்து விடுவிக்கவுமில்லை. 25 ஆண்டுகள் கடந்த பிறகு 2006ம் ஆண்டில் கலிபோர்னிய கவர்னர் டூக்கி வில்லியத்திற்கு மரண தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடுகிறார். உலகமே கண்டிக்கத்தக்க மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

அமெரிக்க அரசியலிலும், பொருளாதாரத்திலும் நுழைந்துள்ள பம்மாத்துக்களை சரியாகப் புரிய வேண்டுமானால், கால்பிரெயித்தின் விமர்சனத்தையும் அமெரிக்காவில் வறுமையில் குற்றம் புரிய தள்ளப்படும் சிறார்களின் வாழ்க்கையையும் இணைத்துப் பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும்.

ஜான்கென்னத் கால்பிரெயித் முதலாளித்துவத்தை விமர்சித்தது போல், சோசலிசத்தையும் கடுமையாக விமர்சித்தார்.

முதலாளித்துவத்தில் மனிதனை மனிதன் சுரண்டுகிறான் என்றால் கம்யூனிசத்தில் அதுவே தலைமாறி நடக்கிறது என்று நையாண்டி செய்தார். அவரது கருத்துப்படி பொருளாதார யுக்திகள் என்பது முதலாளித்துவத்திற்கும், சோசலிசத்திற்கும் பொதுவானது ஆகும். எனவே இரண்டிலும் சுரண்டல் இருப்பதாக விமர்சித்தார்.

இவரது எழுத்துக்களில் எதார்த்தத்தைத் தேடும், நேர்மை இருந்ததால், கம்யூனிச சிந்தனை உலகம் இவரது விமர்சனங்களைக் கூர்ந்து கவனித்தது. மாஸ்கோ பல்கலைக்கழகம் இவரைக் கவுரவித்தது. சீனப் பல்கலைக் கழகமும் இவரைப் பாராட்டியது.

கற்பனா சோசலிச வாதங்களால் உருவாகும் பிரமைகளை உடைப்பதற்கு இவரது விமர்சனங்கள் உதவும் என்று கம்யூனிச சிந்தனை உலகம் கருதியே இவரைப் பாராட்டியது.

ஆனால், அமெரிக்க முதலாளித்துவ சிந்தனை உலகம் இவரது எழுத்துக்களை உதாசீனப்படுத்தியது. கடுமையாக இவரை முத்திரை குத்தி தாக்கியது.

பணக்காரனுக்கு பணத்தைப் பெருக்கும் சுதந்திரத்தை பாதுகாத்தால் தான் அது பொங்கி வழிந்து ஏழைகளுக்கு போய்ச் சேரும் என்பது அமெரிக்க முதலாளித்துவத்தின் நம்பிக்கையாகும். இதனைப் பொருளாதார நிபுணர்கள் கீழே கசியும் (டிரிக்கிள் டவுன் தியரி) கோட்பாடு என்று அழைப்பர். இந்தக் கோட்பாட்டை கால்பிரெயித் கடுமையாக விமர்சித்தார்.

குதிரைக்கு போதுமான அளவு ஓட்ஸ் தானியத்தை ஊட்டி விட்டால் அது குடல் வழியாக கடந்து வெளியேறும் பொழுது சில தானியங்கள் குருவிகளுக்கு உணவாகக் கிடைக்கும் என்று எள்ளி நகையாடினார். அதாவது குதிரைக்கு அதிகமாக ஊட்டினால் அதுபோடும் சாணிமூலம் குருவிகளுக்கு கிடைத்துவிடும் என்பது போல் கீழே கசியும் கோட்பாடு உள்ளது என்று விமர்சித்தார். பணக்காரனின் பணப்பெருக்கம் ஏழைகளுக்கு நல்லது என்பது ஒரு ஏமாற்று என்று சுட்டிக்காட்டினார்.

முதலாளித்துவம் வேலையில்லாத் திண்டாட்டத்தை உருவாக்குவதின் மூலம் மனித உழைப்பை வீணடிக்கிறது என்பது இவரது இன்னொரு விமர்சனம்.

மேற்கைவிட கம்யூனிஸ்ட்டுகள் எப்படியோ மனித உழைப்பை  திறமையாகப் பயன்படுத்துகின்றனர் என்று எழுதினார். இத்தகைய அமெரிக்கப் பேராசிரியரின் கடைசிப் புத்தகத்தை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவது அவசியம். 62 பக்கங்களே கொண்ட எகனாமிக்ஸ் ஆஃப் இன்னொசென்ட் ஃபிராடு என்ற நூலைத் தமிழில் வெளியிட முன்வருவோர், தமிழர்களின் சிந்தனை விரிவாக்கத்திற்கு உதவி புரிந்தவராக உயர்ந்து நிற்பர்.

வறுமை, வேலையின்மை, யுத்தம் ஆகியவைகள் பொருளாதார யுக்திகளின் விளைவு என்பதை அறியவும், தலைவிதி நம் கையில் இல்லை வேறு வழியில்லை என்ற மூடநம்பிக்கைகளில் இருந்து விடுபடவும், இந்த சிறிய புத்தகம் அதன் வழியில் உதவுகிறது. அரசியலிலும், பொருளாதாரத்திலும் எதுசரி, எது பயனுள்ளது என்பதை அலசிட ஒருவரது புத்தியை இந்தச் சிறிய புத்தகம் தீட்டி விடுகிறது. அமெரிக்க முதலாளித்துவத்தின் ஏகபோக தன்மை யையையும், ஆதிக்கத்தனத்தையும், ஏமாற்றுக்களையும் நேர்மை யுடன் இப்புத்தகம் சுட்டிக்காட்டுகிறது. அமெரிக்க பொருளாதார யுக்திகளே சிறந்தது என்று கருதுகிற அரசியல்வாதிகளும், பொருளாதார நிபுணர்களும் படிக்க இந்தப் புத்தகத்தை சிபாரிசு செய்யலாம். அந்நிய மூலதனத்தை கும்பிடும் மூடத்தனத்திலிருந்து கரைசேர இந்த நூல் அவர்களுக்கு உதவும்.

துவக்கம்

இந்த நூலின் துவக்கத்திலேயே அமெரிக்காவின் இன்றைய நிலையை குறிப்பிடுகிறார்.

அமெரிக்க அரசியலிலும், பொருளாதாரத்திலும் எதார்த்தம் என்பது முன்னுக்கு வருவதில்லை. பாக்ஷனும், பண ஆசையும் எதார்த்தங்களை பார்க்க விடுவதில்லை . இதன் விளைவாக அமெரிக்கப் பொருளாதாரத்தில் பல ஏமாற்றுக்கள் புகுந்து விட்டன. இந்த ஏமாற்றுக்களை யாரோ திட்டமிட்டு புகுத்துவதாகக் கருதிவிடக் கூடாது. யார்மீதும் பழிபோட முடியாத ஏமாற்றுக்கள் என்கிறார். அதாவது இன்னொசென்ட் ஃபிராடு என்று கூறுவதற்கான காரணங்களையும் குறிப்பிடுகிறார். 70 ஆண்டுகள் பொருளாதாரத் துறையோடு சம்பந்தப்பட்ட துறைகளிலே பணிபுரிய நேர்ந்ததால் ஒன்றைக் கற்றுக் கொண்டதாகவும் கூறுகிறார். ஒருவன் சரியாகவும், பயனுள்ளதாகவும் இருக்க வேண்டுமானால் எதார்த்தம் என்பது பொது ஞானத்திலிருந்து விலகிக் கொண்டே போகிறது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதாவது பொது அறிவு என்று நாம் ஏற்றுக்கொண்டது வேறு; எதார்த்தம் வேறு என்பதை உணராமல் மரபு வழி ஞானமே சரியாக இருக்கும் என்று கருதி அணுகுகிற பொழுது ஏமாற்றுக்கள் புகுந்துவிடுவதை உணரமுடியாது என்கிறார். இந்த முன்னுரையோடு ஏமாற்றுக்களை ஒவ்வொன்றாக அடுக்குகிறார்.

ஏமாற்று – 1

அமெரிக்க பொருள் உற்பத்தி முறையை, பொருளாதார நிபுணர்களும், அரசியல்வாதிகளும், பேராசிரியர்களும் சந்தை முறை அமைப்பு என்று புதிதாக பெயர் சூட்டியுள்ளனர். முதலாளித்துவம் என்ற சொல் அமெரிக்க மக்களிடையே, வரலாற்றை நினைவூட்டி அருவருப்பை தூண்டுவதால், இந்தப் பெயர் மாற்றம் புகுத்தப்பட்டது.  இந்தப் புதிய பெயர் பண்பான சொல்லாக இருக்கலாம். ஆனால், பொருளற்ற சொல்மட்டுமல்ல; எதார்த்தத்தைப் பிரதிபலிக்க வில்லை என்கிறார்.

சந்தை என்பது கி.மு. 8 ம் நூற்றாண்டிலேயே மானுட சமூகம் கண்டுவிட்ட ஒன்று. என்று நாணயம் தோன்றியதோ அன்றே சந்தை அமைப்பும் தோன்றிவிட்டது. அமெரிக்காவில் முதலாளித்துவம் தோன்றிய பொழுதே ஏகபோகமாகிட அக்கிரமமான வழிகளை முதலாளிகள் பின்பற்றியதால் முதலாளித்துவம், ஏகபோக முதலாளித்துவம் போன்ற சொற்கள் மக்களிடையே எதிர்ப்பைக் கிளப்பின. 19ம் நூற்றாண்டில் முதலாளித்துவ உற்பத்தி முறையின் தோற்றத்தை ஆராய்ந்த மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இருவரும் தங்களது ஆற்றல் மிகு உரைநடையால் புரட்சிகள் வெடிக்கும் என்றனர். அவர்கள் கூறியது போல் ரஷ்யாவில் தொழிலாளி வர்க்கம் புரட்சி செய்தது. ஆனால் ஐரோப்பாவில் முதலாளித்துவத்தை நீக்கி விட்டு, தாராளவாத சமூக ஜனநாயகம் பிறந்தது. அமெரிக்காவில், ஏகபோகமாவதைத் தடுக்கும் சட்டங்கள் வர சமூக முரண்பாடுகள் உதவின. ஆனால்  காலப்போக்கில் அமெரிக்க பொருளாதாரம் என்பது ஏகபோக முதலாளித்துவமாக ஆகிவிட்டது. இந்த எதார்த் தத்தை மறைக்கவே சந்தை முறை என்ற சொல் புகுந்தது. இது ஒரு ஏமாற்று.

ஏமாற்று – 2

முன்காலத்தில் அமெரிக்காவில் ஒரு தொழிலின் முதலாளியே எல்லா முடிவுகளையும் எடுப்பார். ஆனால் இன்று அப்படி அல்ல. முதலீட்டாளர்களிடமிருந்து அதாவது பெரிய தொழில் நிறுவனத்தின் பங்குதாரர்களிடமிருந்து அதிகாரம் கை தேர்ந்த நிறுவன அதிகாரிகளிடம் கைமாறுகிறது என்பது ஒரு புரியாத புதிர் ஆகும். பாக்ஷனும், பண ஆசையும், பங்குதாரர்களை எதார்த்தங்களை பார்க்க விடாமல் தடுப்பது ஒரு பக்கம். மறுபக்கம், விளம்பர யுக்திகளின் மூலம், பல்வேறு குறியீட்டெண்களை ஜோடித்து, தொழில் ஆரோக்கியம், லாபம் குவிக்கும் திறன் ஆகியவை பற்றி எதார்த்தத்திற்கு புறம்பாக ஒரு சித்திரம், தொழில் நிறுவன அதிகாரிகளால் காட்டப்படுகிறது. அமெரிக்காவில் அநேகமாக எல்லாத் தொழில்களும், ஏகபோகங்களாகிவிட்டன. அதிகார வர்க்கமே எல்லா முடிவுகளையும் எடுக்கிறது. இது அடுத்த ஏமாற்று.

ஏமாற்று – 3

அமெரிக்க முதலாளித்துவத்தின் ஏகபோக தன்மையையும், அதிகாரவர்க்க நிர்வாக முறையையும் மறைக்க இன்னொரு ஏமாற்று புகுத்தப்படுகிறது. அதுதான் நுகர்வோர் ஆதிபத்தியம். அமெரிக்க சந்தையை ஆட்டுவிப்பது நுகர்வோர்கள் தான் என்ற பம்மாத்து புகுந்த மர்மத்தை மரபுவழி ஞானத்தால் உணர இயலாது.

பகாசூர நிறுவனங்களின் விளம்பர யுக்திகள் மூலம் நுகர்வோர்கள் எதை விரும்ப வேண்டும் என்பது தீர்மானிக்கப் படுகிறது. சுருக்கமாகச் சொன்னால், நுகர்வோர் ஆதிபத்தியம் என்பது ஏகபோக முதலாளித்துவத்தின் கேடுகெட்ட அம்சங்களை மறைக்க புகுந்த ஏமாற்று ஆகும். சந்தையை நுகர்வோர் தான் தீர்மானிக்கின்றார்கள் என்பது அமெரிக்காவில் எங்கும் பரவி இருக்கும் ஒரு ஏமாற்று என்கிறார் கால் பிரெயித்.

ஏமாற்று – 4

மானுட வளர்ச்சியின் எந்த அம்சத்தையும் பிரதிபலிக்காத சில குறியீட்டெண்கள், முன்னேற்றத்தை காட்ட முன்வைக்கப்படுகிறது. அதில் ஒன்றுதான் தேச மொத்த வருவாய் அதிகரிப்பு என்ற பொருளாதார வளர்ச்சியை காட்டும் சதவீத குறியீட்டெண்ணாகும்.  பகாசூர நிறுவனங்கள் திட்டமிட்டு உருவாக்கப்படும் பொருட் களின் மதிப்பே, தேச மொத்த வருவாயாக காட்டப் படுகிறது. இந்த குறியீட்டெண் ஒரு சமுதாயத்தில் ஏற்பட்டு வரும் கலை, இலக்கிய விஞ்ஞான வளர்ச்சியை காட்டாது. பிரிட்டனில் தேச மொத்த வருவாய் வளர்ச்சி விகிதம் குறைவாக இருந்த காலத்தில் தான், சிறந்த இலக்கியங்கள், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் வேகமாக வளர்ந்தன. தேச மொத்த வருவாய் குறியீட்டெண்ணை வைத்து தேசத்தில் ஆற்றலை அளப்பது என்பது ஒரு மாபெரும் ஏமாற்று ஆகும்.

ஏமாற்று – 5

உழைப்பு என்பது மானுட சமூகத்தின் செல்வ ஆதாரத்தின் அடிப்படை; ஆனால், உழைப்பை பற்றிய ஒரு ஏமாற்று இங்கே நிலவுகிறது.

ஆற்றல் உள்ளவர்கள், ஆற்றல் இல்லாதவர்கள் என்ற ஏமாற்றைப் புகுத்துகிறது. உழைப்பை வெறுப்பவர்கள், உழைப்பே இன்பமென கருதுபவர்கள் என்று சமூகமே பிளவுபட்டு இருப்பதாக ஒரு தோற்றத்தை இந்த ஏமாற்று புகுத்திவிடுகிறது.

ஏழைகள் வேலையை சுமையாகக் கருதுகிறார்கள் என்ற பார்வையையும் இந்த ஏமாற்று புகுத்திவிடுகிறது.

கொழுத்த சம்பளமும், உல்லாச வாழ்விற்குத் தேவையான போகப் பொருட்களும், விடுமுறையும் சிலருக்கு வேலை என்பது இன்பமாக ஆக்கப்படுகிறது. குறைவான சம்பளமும், ஓய்வு பெற முடியாத சூழலும், வேலைப்பளுவும் உள்ளவர்களுக்கு அது சுமையாக ஆகிவிடுகிறது.

இந்த உண்மைகளை மறைக்கும் ஏமாற்று இங்கே புகுத்தப்பட்டுள்ளது.

பணக்காரன் உல்லாசமாக இருக்கப் பிறந்தவன் என்றும், ஏழைகள் வேலைப்பளுவைச் சுமக்கப் பிறந்தவர்கள் என்றும் இருக்கும் எதார்த்தத்தை இந்த ஏமாற்று மறைத்து விடுகிறது.

ஏமாற்று – 6

அமெரிக்காவில் முதலாளித்துவம், அதிகாரவர்க்கத்தனம் போன்ற சொற்களைப் பொருளாதார நிபுணர்கள் அகராதி யிலிருந்தும், பாடப்புத்தகங்களிலிருந்தும் நீக்கிவிட்டனர். ஒரு பகாசூர நிறுவனத்தின் நிர்வாகிகளே எல்லாவற்றையும் ஆட்டிப்படைக்கிறார்கள்; இந்த அதிகார வர்க்க ஆதிக்கத்தை மறைக்க ஒரு புதிய சொல்லைப் புகுத்திவிட்டனர். அதுதான் நிர்வாக ஆற்றல் என்ற சொல். இதன் மூலம், அதிகார வர்க்க நிர்வாக முறைக்கு ஆபத்தில்லாமல் ஆக்கிவிட்டனர்.

ஏமாற்று – 7

அமெரிக்கப் பொருள் உற்பத்தியில் தனியார் துறை, பொதுத்துறை என்பது இன்னொரு ஏமாற்றாகும். இங்கே பொதுத்துறையையும், தனியார் துறையையும் ஒரே அதிகார வர்க்கம் தான் நிர்வகிக்கிறது. ஆட்டுவிக்கிறது. ஒரு பகாசூர நிறுவனத்தின் நிர்வாகியாக இருந்தவர், மக்கனமாரா. இவர், அமெரிக்க ராணுவத்துறைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். அதே அமெரிக்க அரசின் உயர் பதவியிலிருக்கும் அதிகாரிகள், தனியார்துறை நிறுவனங்களின் நிர்வாகியாகப் போய்விடுவதும் நடக்கிறது. ஆயுதங்கள் செய்யும் பகாசூர தனியார் நிறுவனங்களின் அதிகாரிகளும், அமெரிக்க அரசாங்கத்தின் தலைமை நிர்வாகிகளும், இடம் மாறுவதைப் பார்த்தால் பொதுத்துறை, தனியார் துறை என்று இரண்டு பிரிவு இருப்பதாகத் தோற்றமளித்தாலும் அதிகாரிகளை இடம்மாறி பதவிகளில் அமர்வது என்பது இரண்டும் வேறல்ல என்பதை காட்டிக் கொடுத்து விடுகிறது.

பண உலக ஏமாற்று

வங்கிகள், பங்குச்சந்தை, மியூட்சுவல் பண்ட், பண நிர்வாக ஆலோசனைகள், வழிகாட்டல் ஆகியவைகளை கொண்டது தான் பண உலகம். அமெரிக்க சமூகமே அங்கீகரிக்கும் ஏமாற்று இங்கே உள்ளது.

இந்த உலகில் தகவல்கள் என்பது மிகுந்த கட்டுப்பாட்டில் உள்ளது. பல தகவல்களை தெரியாதவைகள் என்று பட்டியல் தான் போட முடியும். பொதுவாக, எப்பொழுது பொருளாதாரம் நல்ல நிலையிலிருக்கும், எப்பொழுது அதற்கு கெட்டகாலம் வரும் என்று யாராலும் முன் கூட்டியே கூற இயலாது. அரசு, பெரிய நிறுவனங்கள், பெரும் புள்ளிகள் ஆகியோரது நிர்ணயிக்க இயலாத செயல் களாலும், யுத்தம், அமைதி போன்ற உலகளவு விவகாரங்களாலும், பொருளாதாரத்தின் திசை நிர்ணயிக்கப்படுகிறது. புதிய தொழில் நுட்பங்கள், நுகர்வோரின் மனோபாவங்கள், ஏற்றுமதி, இறக்குமதி, முதலீடுகளின் நடமாட்டம் இத்தியாதிகளாலும் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. ஆக ஏராளமான தெரியாதவைகள் என்ற காரணிகளால் பொருளாதாரம் ஆட்டுவிக்கப்படுவதால், இந்த தெரியாதவைகளை ஆருடம் கூறுவதே ஒரு லாபகரமான தொழிலாகிவிட்டது. இந்த பண உலக ஏமாற்று என்பது அலாதியானது.

கவுரவமிக்க ஏமாற்று

நவீனப் பொருளாதாரம் என்பது முன்கூட்டியே அறிய இயலாத பல அம்சங்களைக் கொண்டதாகும். அமோக உற்பத்தி, பணவீக்கம், பங்குச்சந்தை குமிழி, உற்பத்தி படுத்துவிடுவது, வேலை இல்லாத் திண்டாட்டம், வருமானக் குறைவு, விலைகள் நிலையாக இருப்பது, விலைகள் இறக்கை கட்டிப் பறப்பது, முன்கூட்டியே அறிய இயலாத தன்மைகளைக் கொண்டது. இத்தகைய நிலையற்ற பொருளாதாரத்தை சரிசெய்ய, அமெரிக்க ரிசர்வ் வங்கி எடுக்கிற நடவடிக்கைகள் ஏமாற்றைப் புகுத்திவிடுகிறது. தேக்கம் ஏற்படுகிற பொழுது வட்டியைக் குறைப்பதும், உற்பத்தி பெருகுகிற பொழுது பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டியை கூட்டுவதும் ஒரு ஏமாற்று வேலையாகும். வட்டி குறைவு என்பதால் யாரும் கடன் வாங்குவதில்லை. பணம் பண்ண முடியும் என்றால், எவ்வளவு வட்டியானாலும் கடன் வாங்கிவிடுவர்.

உண்மையில் அமெரிக்கப் பொருளாதாரத்தின் நிச்சயமற்ற தன்மையை, அமெரிக்க ரிசர்வ் வங்கி சரி செய்கிறது என்பது ஒரு ஏமாற்றே. உண்மையில், நிச்சயமற்ற தன்மையின் காரணங்களை  ரிசர்வ் வங்கி களையவில்லை. எதார்த்தம் என்ன வெனில், தொழில் நிறுவன அமைப்பு மூலம் பொருள் உற்பத்தி என்பது நிச்சயமற்ற தன்மையை அதன் வழியில்  உருவாக்குகிறது. அமெரிக்க பங்குச்சந்தை முறையும்,  நிறுவன முறையும், பொருள் உற்பத்தியில் நிச்சயமற்ற தன்மையைப் புகுத்துகிறது. அதைச் சரி செய்யாமல், ரிசர்வ் வங்கி ஏமாற்றை புகுத்துகிறது என்கிறார் கால்பிரெயித்.

Economics of Innocent Fraud
புத்தகத்தின் பெயர்: Economics of Innocent Fraud ஆசிரியர் : John Kenneth Galbraith

இவ்வாறு அமெரிக்கப் பொருளாதாரத்தில் புகுந்துள்ள ஏமாற்றுகளை அம்பலப்படுத்தும் இந்த சிறிய புத்தகம் நம்மைச் சிந்திக்கத் தூண்டும் சில வரிகளுடன் முடிகிறது. முன்னேற்றம் பற்றி பெருமைப்படுகிறோம். இதை எழுதுகிற பொழுது பிரிட்டனும், அமெரிக்காவும் ஈராக் யுத்த கசப்புகளை அனுபவிக்கின்றனர். இளம் வயதினரையும், ஆண், பெண், குழந்தைகள் அனைவரையும் கசாப்பு செய்கிறோம். மானுட முன்னேற்றம் என்பது கற்பனை செய்ய முடியாத கொடுமை களாலும்,  சாவுகளாலும் நிரம்பியுள்ளது.

வாசகர்களை விட்டு பிரிகிற பொழுது வருந்தத்தக்க ஒரு உண்மையைச் சொல்கிறேன். நமது நாகரீகம் வெகுவாக முன்னேறியுள்ளது. உடல் ஆரோக்கிய பராமரிப்பு, கலை, விஞ்ஞானம், முன்னேற்றம் எல்லோருக்கும் கிடைக்காத, பொருளாதார வசதி, இவைகளைத் தந்துள்ளது. ஆனால், அதே நேரம் ஆயுத உற்பத்தி என்பது சிறப்பு அந்தஸ்து பெற்று மிரட்டலையும், யுத்தத்தையும் எதார்த்த மாக்கிவிட்டது. பெரும் திரளாக மக்களைக் கொல்வது என்பது நாகரீகத்தின் உச்சபட்ச வெற்றியாக ஆகிவிட்டது என்று முடிக்கிறார். அமெரிக்க நவீன பொருளாதாரத்தின் பம்மாத்துக்களை இச்சிறிய புத்தகம் நன்றாகவே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

 %d bloggers like this: