மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


இலங்கைப் பிரச்சனை – ஒரு பார்வை


இலங்கையில் எல்டிடிஈ-யினருக்கும், இலங்கை ராணுவத்திற்கும் ஆயுத மோதல் துவங்கி 20 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இரண்டு பக்கமும் பல்லாயிரம் உயிர்கள் பலிவாங்கப்பட்டு விட்டது. பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு பொருள் சேதம் நடந்துவிட்டது. இத்துடன் கடந்த சில ஆண்டுகளாக நார்வே தலைமையிலான சர்வ தேசக் குழுவின் முன்னிலையில் பேச்சு வார்த்தைகளும் நடந்துவிட்டது. எனினும் தீர்வு காணப்படவில்லையே ஏன் என்ற கேள்வி எழத்தான் செய்யும்.

ஓயா மோதல்களின் வேர்

இலங்கையின் கடந்த கால வரலாற்றை உற்று நோக்குபவர்களுக்கு, இந்த மோதலுக்கான விதைகள்  இலங்கை, பிரிட்டனுக்கு அடிமைப்பட்டிருந்த காலத்திலேயே விதைக்கப்பட்டிருப்பதை அறிய முடியும். இந்தியாவைப் போலவே இலங்கையும் வெள்ளையர் ஆதிக்கத்தில் இருந்து, பின் விடுதலை பெற்ற நாடு ஆகும். அந்நிய ஆதிக்கத்தில் இருந்த காலத்தில் இந்தியாவில் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கடைப்பிடித்தது போன்றே அங்கேயும் வெள்ளை யர்கள் கடைப்பிடித்தனர் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. அதேபோல மேற்கத்தியக் கல்வி பெறும் வாய்ப்பு பெற்றவுடன், அரசு உத்தியோகங்களுக்கான மோதல்களும் அங்கு சிங்களவர்கள்- தமிழர்கள் என்ற அடிப்படையில் எழுந்ததையும் காண முடியும். அதேபோல இன ஆராய்ச்சி என்ற பெயரில் சிங்களவர்களை ஆரியர்கள் என்றும், முன்னேறியவர்கள் என்றும், தமிழர்களைப் திராவிடர்கள் என்றும், பின்தங்கியவர்கள் என்றும், பிரித்துக் காட்ட முயன்றதையும்  காண முடியும். அங்கு இது மேற்கத்திய  அதிகாரப் பூர்வ சரித்திர வல்லுநர்களால் சிங்கள மக்களின் பெருமையைப் பேசுவது என்ற பெயரில் அழுத்தமாகச் செய்யப்பட்டது. அதாவது இதே வல்லுநர்கள் தமிழகத்தை ஆரிய எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு என்ற வகையில் திராவிடப் பெருமையை பேசியது இலங்கையில் ஆரியப் பெருமையைப் பேசி திராவிட தமிழ் இனத்தை வெறுக்க வைத்தது.

ஈழமும், புலிகளும்

தமிழ் ஈழ இயக்கம் என்பது 1976 யிலேயே துவக்கப்பட்டதாகும். டியுஎல்எப் என்கிற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி என்பது செல்வநாயகம் அவர்களால் துவங்கப்பட்டது. 1980களில் எல்டிடிஈ, பிளாட், இபிஆர்எல்எப், ஈரோ, இபிடிபி,டெலோ உள்பட பத்துக்கும் மேற்பட்ட இயக்கங்கள் ஈழத்திற்காக ஆயுதம் ஏந்திய போராட்டத்தை நடத்துவதாக அறிவித்தன. இவற்றில் எல்டிடிஈ தவிர மற்ற அனைத்து இயக்கங்களும் ஒரு கட்டத்திற்குப் பிறகு, பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டு, தமிழர்கள் வாழும் பகுதிக்குக் கூடுதல் அதிகாரங்களுடன் புதிய அமைப்புச் சட்டம் உருவாக வேண்டும் என்று நிலை எடுத்தன. எல்டிடிஈ-ஐப் பொறுத்தவரை இவர்கள் அனைவரும் துரோகிகள் என்றும், அரசின் ஏஜெண்டுகள் என்றும் குற்றம் சாட்டியது மட்டுமின்றி, இந்த இயக்கங்களைச் சார்ந்த தலைவர்களை, ஊழியர்களை ஆயுதத் தாக்குதல்கள் மூலம் கொன்றது. அவர்கள் வசமிருந்த ஆயுதங்களைக் கைப்பற்றியது.

பிளாட் குழுவைச் சேர்ந்த உமா மகேசுவரன், ஈபிஆர்எல்எப் குழுவைச் சேர்ந்த பத்மநாபா, டியுஎல்எப் தலைவர் அமிர்தலிங்கம், யோகேவரன், சட்டமன்ற உறுப்பினர் சாம் தம்பிமுத்து முதலான தலைவர்கள் எல்டிடிஈ-யினரால் கொல்லப்பட்டவர்களில் ஒரு சிலர். சரியாகச் சொல்வதென்றால், சிங்கள இன வெறியர்களால் கொல்லப் பட்டவர்களை விட, எல்டிடிஈ-யினரால் கொல்லப்பட்ட தமிழர் தலைவர்களே அதிகம். இவர்களின் சர்வசாதாரணமான கொலை பாதக நடவடிக்கைகள் நம் நாட்டின் பிரதமர் ராஜீவ் காந்தியை மிகக் கொடுமையான முறையில் இளம் பெண்ணை மனிதகுண்டாக்கி படுகொலை செய்வது வரை நீடித்தது. எல்டிடிஈ தலைவர் பிரபாகரன் பல கட்டங்களில் தனி ஈழத்தைத் தவிர வேறு வழியே இல்லை என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். ஒன்றுபட்ட இலங்கை கட்டமைப்புக்குள்ளிருந்து நம் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது என்கிற நிலையை நாம் கடந்து விட்டோம். தனி ஈழம் என்பதைத் தவிர இனி வேறு குறிக்கோள் கிடையாது. தமிழ் ஈழ மக்களுக்கு நிரந்தரத் தீர்வு என்பது, தனித் தமிழ் ஈழம் பெறும்பொழுதே சாத்தியம் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கையுடனேயே நான் இருக்கிறேன். மிகத் தெளிவாகவே பிரகடனம் செய்கிறேன், தமிழ் ஈழத்தை அடைந்திட, எம் போராட்டத்தைத் தொடர்வோம் என்று எவ்வித ஐயத்திற்கும் இடமின்றி தெளிவுபடுத்துகிறேன். விடுதலைப் புலிகளின் தாகம், சுதந்திரத் தமிழ் ஈழம்.

1991 இல் பிரபாகரன் தனது கொரில்லா படை என்பது ஒரு நாட்டின் ராணுவ அமைப்பாக மாறிவிட்டது என்றும், இதன் காரணமாக ராணுவ ரீதியாக ஒரு வலுமிக்க ஈழம் உருவாகப் போகிறது என்றும் அழுத்தமாகத் தெரிவித்திருக்கிறார். இப்படி பல முறை அறிவிக்கப்பட்டிருந்தாலும் இன்றும் ஈழத்தின் பெரும் பகுதி இலங்கை அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்பதும், ஒரு சிறு பகுதியை மட்டும் எல்டிடிஈ தன் கையில் வைத்திருக்கிறது என்பதும்தான் உண்மை.

யாழ்ப்பாணம் ஈழத்தின் தலைநகராக முதலில் அறிவிக்கப் பட்டிருந்தது. 1995இல் ஸ்ரீலங்கா ராணுவம் இதைக் கைப்பற்றிய பிறகு, கிளிநொச்சி அரசியல் தலைநகர் என்றும், முல்லைத் தீவு ராணுவத் தலைநகர் என்றும் அறிவிக்கப்பட்டது. தீர்வு தான் என்ன?

குறிப்பாக மிகச் சிறிய நாடான இலங்கையில் திட்டச் செலவினங்களில் மூன்றில் ஒரு பகுதி (ஆண்டு தோறும் சுமார் 500 கோடி ரூபாய்) ராணுவத்திற்குச் செலவிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ள இன்றைய சூழலில், இரு தரப்பிலும் இருக்கக்கூடிய இன வெறியர்கள் தங்களுடைய நிலையை மாற்றிக் கொண்டா லொழிய ஒரு சுமூகத் தீர்வு காண்பது சாத்தியமல்ல.

இதனால்தான் இலங்கை கம்யூனிட் கட்சி, இதுபற்றிக் கூறும்போது, எல்டிடிஈ-யின் பயங்கரவாதம் என்பது பிரச்ச னையின் ஒரு பக்கமே. வன்முறை ஒடுக்கப்பட வேண்டும் என்றால், காலங்காலமாக நீடிக்கின்ற இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பது மிக முக்கியம். சொல்லப்போனால், இது வன்முறை ஒடுக்கப்படுவதுடன் பின்னிப்பிணைந்தது. இலங்கை அரசைப் பொறுத்தவரை, எல்டிடிஈ-யின் தேவை என்ன என்பதைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இலங்கை வாழ் தமிழ் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அது தயாராக இருக்க வேண்டும், என்று கூறுகிறது.

ஆக, மைய பிரச்சனை இதுதான். இதே நேரத்தில் இலங்கையில் இருக்கும் பல்வேறு அரசியல் கட்சிகள் அவ்வப்போது தேர்தல் தேவைகளையொட்டி தங்கள் கருத்துக்களை மாற்றிக் கொள்வதும், முதலாளித்துவக் கட்சிகளின் இயற்கையான குணமாகிய ஆட்சியில் இருக்கின்றபோது ஒரு நிலையும், எதிர்க் கட்சியாக இருக்கின்றபோது வேறொரு நிலையும் என்ற சந்தர்ப்ப வாத நிலை எடுப்பது, பிரச்சனை தீராமல் நீடிப்பதற்கு முக்கிய காரணமாக அமைகிறது.

இது குறித்து இலங்கை கம்யூனிட் கட்சி, இது ஒரு தேசிய பிரச்சனை. தனிப்பட்ட அரசியல் கட்சியோ, தனிப்பட்ட தலைவர் களோ இதற்குத் தீர்வு காண முடியாது. இலங்கையில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி (யுஎன்பி), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (எஎல்எப்பி) ஆகிய இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும், ஒன்றுபட்டு நின்றால்தான், இவை இரண்டும் இணைந்து கூட்டு முயற்சி எடுத்தால்தான் இந்தப் பிரச்சனையில் தீர்வு காண முடியும் என்று வலியுறுத்தி வருகிறது.

புலிகளும் – இஸ்லாமியர்களும்

இதோடு இணைந்து, இந்தப் பிரச்சனையை மேலும் சிக்கலாக்கக் கூடிய இன்னொரு அம்சமும் உண்டு. இலங்கை வாழ் தமிழ் மக்களின் ஒரு கணிசமான பகுதியினர் இலாமியர்கள். அவர்களைப் பொறுத்தவரை, எல்டிடிஈ-யின் தொடர் நடவடிக்கை களின் மீது அவர்கள் கடும் அச்சம் கொண்டிருக்கிறார்கள்.  ஒரு வேளை தனி ஈழம் வந்தால், இலாமிய மக்களின் வாழ்வும், உரிமைகளும் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர். இந்த அச்சத்திற்கு நியாயம் உண்டு. 1990ஆம் ஆண்டில், எல்டிடிஈ-யினர், யாழ்ப்பாணத்தில் உள்ள முலிம்கள் இரண்டு மணி நேரம் அவகாசம் தருகிறோம், அதற்குள் இங்குள்ள முலிம்கள் அனைவரும் காலிசெய்துவிட்டு ஓடிவிட வேண்டும் என்று எச்சரித்தது. இதன்மூலம் 75 ஆயிரத்திற்கு மேற்பட்ட முலிம்கள் அகதிகளாக மாறிய கொடுமை நடந்தது. பல்லாயிரக்கணக்கானோரை அவர்களது உடைமைகளை விட்டு விட்டு வெளியேற்றவும் வைத்தனர். ஆக, தனித் தமிழ் ஈழக் கோரிக்கை என்பது இலங்கை வாழ் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த நலனை அடிப்படையாகக் கொண்டதல்ல. இதுமட்டுமின்றி, பல லட்சக்கணக்கான தமிழர்கள் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும், தோட்டத் தொழிலாளர் களாக, காலம் காலமாக வாழ்ந்து வருகிறார்கள். ஆக, அனைத்து தமிழ் மக்களின் பிரச்சனைகளை ஈழம் தீர்த்துவிடாது. தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க பொதுவான வழி எது என்று பார்க்க வேண்டும்.

(அட்டவணையைக் காண்க)

அட்டவணை

1953 -1981ஆம் ஆண்டுகளுக்கிடையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்  சிங்களவர்கள் குடியேற்றம் நடைபெற்றபிறகு, இனவாரியாக மக்கள் தொகை விவரம்.

இனம் 1953 1981 மக்கள்தொகை
கூடுதல்
கூடுதல்  சதவீதம்
வடக்கு மாகாணம்
தமிழர்கள் 531,722 (93.2 %) 1,023,228 (92.1 %) 491,506 92
சிங்களவர்கள் 13,393 (2.49 %) 33,148 (3.0 %) 19,215 137
முலிம்கள் 20,117  (3.6 %) 52,638  (4.8 %) 32,521 162
மற்றவர்கள் 4,878  (0.8 %) 2,223 (0.002 %) 2,455 50
மொத்தம் 570,650 1,112,437 540,788 94
இனம் 1953 1981 மக்கள்தொகைகூடுதல் கூடுதல் சதவீதம்
கிழக்கு மாகாணம்

தமிழர்கள் 167,888 (47.4 %) 411,451 (42.1 %) 243,563 145
சிங்களவர்கள் 46,380 (13.1 %) 243,358 (25.0 %) 196,978 425
முலிம்கள் 133,410  (37.7 %) 315,201 (32.3 %) 181,791 136
மற்றவர்கள் 6,332 (1.8 %) 6465 (0.007 %) 133 2
மொத்தம் 354,010 976,475 622,466 175

இலங்கை வாழ் தமிழர்களின் உரிமை

உதாரணத்திற்கு, மொழிப் பிரச்சனையை எடுத்துக் கொள்வோம். ஒரு கட்டத்தில் தமிழ், சிங்களம் இரண்டும் ஆட்சி மொழியாக இருந்த நிலையில் இருந்து, சிங்கள மொழி வெறியர்களின் வலியுறுத்தலின் பேரில் சிங்கள அரசியல்வாதிகளின்  வாக்கு வங்கியை சரி கட்டும் நோக்கத்தோடு, 1956ஆம் ஆண்டில் சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்று பண்டாரநாயகா ஆட்சியின்போது  சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டம் ஆங்கிலத்தை அப்புறப்படுத்திவிட்டு, அந்த இடத்தில் சிங்களத்தை ஆட்சிமொழியாக அமரவைத்தது. பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புக்குப் பிறகு, வட, கிழக்கு மாநிலங்களைப் பொறுத்தவரை தமிழ் அன்றாடத் தேவைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று 1958இல் தமிழ் மொழிச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆயினும் இரண்டு மொழி பேசும் மக்கள் பரவலாக இருக்கக்கூடிய இலங்கையில் மொழிப் பிரச்சனை  இதுநாள் வரை தீர்க்கப்படவில்லை. தமிழர்கள் அதிகமாக உள்ள வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் அரசாங்க கடிதப் போக்கு வரத்து இன்றும் சிங்கள மொழியிலேயே வந்து கொண்டிருக்கிறது. காவல்துறையினருக்குத் தமிழ் தெரியாது, மக்களுக்கு சிங்களம் தெரியாது.

இரண்டு மொழியும் ஆட்சி மொழியாக சமத்துவமாகக் கருதப்பட வேண்டியது, சட்டமாக்கப்பட வேண்டியது,  மொழிப் பிரச்சனைக்குத்  தீர்வு காணப்பட வேண்டியது மிக முக்கியமான ஒன்றாகும். இரண்டு மொழிகளையும் சமத்துவமாகக் கருதக்கூடிய அரசியல் கட்சிகளே அங்கு குறைவு, இடதுசாரிக்கட்சிகள் தான் இதனை மேற்கொள்கின்றன.

இதேபோன்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கையில் இலங்கை இருக்கிற சூழ்நிலையிலேயே சிங்களத் தமிழ் மக்களி டையே ஒரு பிரிவினைக்கான விதையைத் தூவுவதற்கு வேலை வாய்ப்பு ஒரு முக்கிய பிரச்சனையாக அமைந்தது.  பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்தில்  இலங்கையில் இருக்கக்கூடிய பல்வேறு பகுதிகளில் சிங்களப் பகுதியைச் சார்ந்த ஒரு சில பகுதியினரும், அதேபோன்று ஈழத்தைச் சார்ந்த வேளாளர் பகுதியினரும் பிரதானமாக, மேற்கத்திய  கல்வியைக் கற்றவர்களாக மாறினார்கள்.  ஈழத் தமிழர்களில் 46 சதவீதத்திற்கும் மேலானவர்கள் வேளாளர்கள் என்பதும், சைவ சித்தாந்தமே இவர்களது  வலுவான மதச் சிந்தனை என்பதும் குறிப்பிடத்தக்கது.  ஆங்கிலக் கல்வியைக் கற்ற இரு பகுதியினரும் வேலை வாய்ப்புப் பெற மோதிக் கொள்வதை, இவர்களை நிரந்தரமாகப் பிரித்து வைப்பதற்கான ஒரு கருவியாக, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் பயன்படுத்திக் கொண்டது கடந்த கால வரலாறு.

சைவ வேளாளர்கள் தவிர, காறையார் 10 சதவீதத்தினரும், பள்ளர் மற்றும் நாலவர் (மரம் ஏறுவோர்) தலா 9 சதவீதத்தினரும், கோவியர் 7 சதவீதம், பறையர் 2.7 சதவீதத்தினரும் உண்டு. இதில் கோவியர், பள்ளர், பறையர் முதலானோர் தீண்டத்தகாதவர்களாவர். இவர்கள் அடிமைகளாகவே வெகு காலம் வைக்கப்பட்டிருந்தனர். இதுமட்டுமின்றி, ஆரியர் – திராவிடர் என மோதல் விதையும் பல்லாண்டு காலத்திற்கு முன்பே தூவப்பட்ட ஒன்று. சிங்களவர்கள் ஆரியர்களின் நேர் வாரிசு என்றும், அவர்கள் நாகரிகம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் முன்னேறியவர்கள் என்றும் ஒரு வலுவான பிரச்சாரம் ஆங்கில ஆய்வாளர்களால் செய்யப்பட்டது.

சிலோன் ராயல் ஏசியாடிக் சொசைட்டி சார்பில் 1880 – 1895ஆம் ஆண்டுகளில் வெளியான இதழ்களில், சிங்களவர்களை உயர்த்தியும், தமிழர்களைத் தாழ்த்தியும் பல கட்டுரைகள் வெளியாயின. சிங்களவர்கள், மொழியால், இனத்தால், கலாச் சாராத்தால்  ஆர்ய இனத்தைச் சார்ந்தவர்கள் என்றும், தமிழர்கள் திராவிட இனத்தைச் சார்ந்தவர்கள் என்றும், சிங்கள/ஆர்ய இனம் இனரீதியாகவும் (racially), கலாச்சார ரீதியாகவும் (culturally) திராவிட/தமிழர்  இனத்தை விட உயர்ந்தது என்றும் அவை போதித்தன.

இதேபோன்று, பிரிட்டிஷார்  அரசமைப்பை  உருவாக்கும் போது, அரசமைப்பில் பிரதிநிதித்துவம் என்பது ஈழத் தமிழர்களுக்கு, இலாமியர்களுக்கு, சிங்களவர்களில் சில பகுதியினருக்கு என்று இன, மத ரீதியாக இடங்கள் வழங்கப்பட்டன.

இலங்கையில் பிரிட்டிஷார் ஆட்சி செய்துகொண்டிருந்த சமயத்தில், பல்வேறு இனங்களின் இடையில் பிரிவினை துவேஷங் களை ஊக்கப்படுத்தும் வகையிலேயே நடந்து கொண்டது.  சட்டமன்ற மேலவைக்கு உறுப்பினர்களை நியமிக்கையில், கீழ் பகுதியில் உள்ள சிங்களவர்கள், கண்டியன் பகுதி சிங்களவர்கள், தமிழர்கள், முலீம்கள், போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர் களுக்குப் பிறந்தவர்கள், உள்ளூர் பிரிட்டிஷார் என்று வகைப்படுத்தி தேர்வு செய்தது. இவ்வாறு இலங்கையில் வகுப்புவாரி பிரதிநிதித் துவம் அமல்படுத்தப்பட்டது. வரலாற்றில் ஏற்பட்டிருக்கிற, இப்படிப்பட்ட பிரச்சனை களைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், மொட்டையாக பிரிவினைவாதிகளுக்கு எதிரான போர் என்று அரசுத்தரப்பிலோ அல்லது இலங்கை அரசியல் கட்சிகள் தரப்பிலோ சொல்லப்படுவது வெறும் இனவெறியே தவிர வேறல்ல. மாறாக, இப்படி காலங்காலமாக இருக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணாமல் இருப்பது, பயங்கரவாதத் தீக்கு எண்ணெய் ஊற்றி அதனை வலுவாக எரியச் செய்வதற்கே பயன்படும் என்பதுதான் தொடர்ந்து நாம் கண்டு வரும் அனுபவம். ஆகவேதான், இலங்கைப் பிரச்சனைக்குத் தீர்வு என்ற கேள்வி எழும்போது, ஒன்றுபட்ட இலங்கைக்குள் போதிய அதிகாரங் களுடன் கூடிய மாநிலங்களைக் கொண்ட கூட்டாட்சி முறை அமலாக்கப்பட வேண்டும். இது தவிர வேறு தீர்வு இல்லை  என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

சமீபத்தில் மீண்டும் மோதல் உக்கிரமானபோது இலங்கை கம்யூனிட் கட்சியின் பொதுச் செயலாளர் தேவகுண சேகரா இலங்கை பிரச்சனை பற்றி கூறிய கருத்துக்கள் கவனிக்கத்தக்கவை.

இடதுசாரிகளைப் பொறுத்தவரை, இந்தப் பிரச்சனைக்கு விரைவாகத் தீர்வு  காணப்படவேண்டும் என்று தொடர்ந்து வலியு றுத்தி வருகிறோம். இது ஒரு தேசியப் பிரச்சனை. ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சி இதற்குத் தீர்வு காண முடியாது என்பதுதான் சரித்திரம் அளித்துள்ள பாடம். கம்யூனிட்டுகளாகிய நாங்கள் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண இலங்கையின் இரண்டு பெரிய அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும். கூட்டு முயற்சி எடுக்க வேண்டும் என்று கோருகிறோம்.

வன்முறை என்பது பிரச்சனையின் ஒரு பக்கமே. வன்முறை ஒடுக்கப்பட வேண்டும் என்றால் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணப் பட வேண்டும் என்பது மிக முக்கியமானது. வன்முறை ஒடுக்கப் படுவதுடன், பின்னிப் பிணைந்தது. எல்டிடிஈ  என்ன வேண்டுகிறது என்பது பிரச்சனை அல்ல.  நாம் இலங்கை வாழ் தமிழ் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தயாராக வேண்டும்.

இந்தப் பிரச்சனையில் இதர நாடுகளை மேலும் மேலும் ஈடுபடுத்துவது, மேலும் மேலும் பிரச்சனையை சிக்கலாக்கவே பயன்படும். இலங்கையின் இரண்டு பக்கத்திலும் சில சக்திகள் நாட்டை போர்க்களமாகவே நீடிக்க விரும்புகின்றன. ஆனால் யுத்தம் சாவையும், பெரும் சீரழிவையும் தவிர வேறு எதையும் தரவில்லை என்பது அனுபவம்.

அனைத்து இனங்களைச் சார்ந்த மக்களின் வாழ்வும், சொத்துக்கள், உரிமை ஆகியவற்றைப் பாதுகாப்பது அரசின் கடமை. எல்டிடிஈ-யின் பிடிவாதம் அவர்களை சர்வதேச மக்களிடம் இருந்தும், தமிழ் மக்களிடமிருந்தும் தனிமைப் படுத்துவது மிக மிக அவசியம் என்பதை எடுத்துக்காட்டுகிறது. ஒரு அரசியல் தீர்வுக்குத் தயாராவதன் மூலமே எல்டிடிஈ-ஐத் தனிமைப்படுத்த முடியும். தீர்வு காணும் முயற்சியில் பூகோள மற்றும் சரித்திர பந்தங்கள் காரணமாக இந்தியாவின் பங்கு பாத்திரத்தை ஒதுக்கிவிட முடியாது. இன்றைய சூழலில் இலங்கையில்  சில சக்திகள் இப்படி ஒரு நல்ல தீர்வு காண்பதற்குப் பதிலாக, இலங்கையைப் போர்க் களமாகவே நீடிக்க வேண்டும் என்று விரும்புகின்றன. ஆனால் கடந்த 20 ஆண்டு காலத்திற்கும் மேலான யுத்தம் பல்லாயிரக் கணக்கான சாவுகளையும், பெரும் சீரழிவையும் தவிர வேறு எதையும் தரவில்லை என்பது அனுபவம். இவை இலங்கை கம்யூனிட் கட்சியின் கருத்துக்கள் மட்டுமல்ல, இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் சிங்கள மக்களில் ஜனநாயக உள்ளம் கொண்ட அனைவரின் சிந்தனையும் இதுவே யாகும். இப்படி ஒரு தீர்வு காண்பதற்குப் பதிலாக, இலங்கை அரசு அவ்வப்போது கிடைக்கும் சில ஆயுதங்களை, எல்டிடிஈ-க்கு எதிராகப் பயன்படுத்தினால், வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைப்பதும் தவறு என்பதை அனுபவம் காட்டியுள்ளது. கடந்த காலத்தில், இலாமிய மக்களின் உணர்வுகளை எல்டிடிஈ-க்கு எதிராகப் பயன்படுத்த இலங்கை அரசு முயற்சித்தது என்பதும், சமீபத்தில் கருணா உள்ளிட்ட கோஷ்டியினர் வெளியேற்றம் போன்ற பிரச்சனைகளையும், இந்த வகையில் எல்டிடிஈ-க்கு எதிரான உத்திகளாக மட்டும் பயன்படுத்துவதில் பிரயோசனம் எதுவும் இல்லை என்பதும் அனுபவம் தெரிவித்திருக்கிற உண்மை.

தமிழகத்தில் சில கட்சிகள், இலங்கைத் தமிழர் பிரச்சனை யைப் பொறுத்தவரை, இனவெறிப் போக்கை கடைப் பிடிப்பதைப் பார்க்கிறோம். இதன்காரணமாக,  கசப்பு மிகுந்த பல நிகழ்ச்சி களையும் சந்தித்திருக்கிறது தமிழகம்.  தனி ஈழம் என்ற கோரிக் கையை வலியுறுத்தி, தமிழகத்திலே இயக்கம் நடத்துவது இன்னொரு நாட்டினுடைய இறையாண்மை பற்றிய விஷயம் என்பதைப்பற்றிக் கூட இவர்கள் கவலைப்படாதது விநோதமானது. இதேபோன்று, கட்சிகள் பலவும் எதிர்க்கட்சியாக இருக்கும்போது பிரச்சார ஆயுதமாகப் பயன்படுத்துகிற மொழி,  இனப் பிரச்சனை களை ஆளும் கட்சியாக வரும்போது மாற்றிக் கொள்வதைக் கடந்த காலங்களில் தரிசித்திருக்கிறோம்.

வைகோ, திருமாவளவன் போன்றவர்கள் அளிக்கும் எல்டிடிஈ ஆதரவு என்பது உண்மையில் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு அளிக்கிற ஆதரவு அல்ல. மாறாக, இவர்கள் இங்கே கிளப்பும் இனவெறி, அங்கேயுள்ள சிங்கள இனவெறி வலுப்படுவதற்கே பயன்படுகிறது என்பதுதான் சரித்திரம் காட்டும் உண்மை.

உண்மையில், இவர்கள் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு உதவி செய்யவில்லை. மாறாக, கடும் துன்பத்தையே விளைவிக்கிறார்கள். ஆகவே, இதில் மாற்றுக் கருத்து கூறுபவர்களை, தமிழர்களின் விரோதிகள் என்று சொல்கிற அருகதை இவர்கள் யாருக்கும் இல்லை.

ஒட்டுமொத்தமாக ஆய்வு செய்யும்போது, சமீபத்திய மோதலையொட்டி, குறிப்பாக இன்று இலங்கையில் நடக்கும் ஆயுத மோதல் என்பது இலங்கை ராணுவத்திற்கும், எல்டிடிஈ ராணுவத் திற்கும் என்ற நிலையைத் தாண்டி, சாதாரண மக்களின் உயிர்களைக் காவு கொள்வதாக மாறியிருக்கக்கூடிய சூழலில் மிக விரைவில் அமைதி காண்பதற்கு வழிகாண வேண்டும், அதுதான் இலங்கை மக்களுக்கும், இலங்கைத் தமிழ் மக்களுக்கும் நல்லது என்ற வலுத்த குரல் தமிழகத்திலும், இந்தியாவிலும் எழவேண்டும்.

அண்டைய நாடான இலங்கையில் ஒரு அமைதிச் சூழல் ஏற்பட இந்திய அரசும், அமைதித் தீர்வு காண இலங்கை அரசுக்கு உதவ வேண்டும்.



%d bloggers like this: