மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


சிருஷ்டி வரலாறு!


ம. சிங்காரவேலர்

இன்றைய உலகம் எப்படி சிருஷ்டிக்கப்பட்டதென்றும், இவ்வுலகிலுள்ள பொருட்கள் எவ்வாறு உற்பத்தியாயிற்று என்பதைக் குறித்தும் இன்று மக்களுள் பலவிதமான அபிப்பிராய பேதங்கள் நிலவி வருகின்றன. இவற்றுள் இரண்டு விதமான அபிப்பிராய பேதங்கள் குறிப்பிடத்தக்கது. இவ்விரண்டில் ஒன்று, சென்ற பல ஆண்டுகளாக மக்களால் நம்பி அனுசரிக்கப்பட்டு வந்ததும், உலகிலுள்ள பல மதத்தின் கொள்கைகளைத் தழுவி அனுசரித்து வந்ததும், பைபிளின் ஆதியாகமத்தில் குறிப்பிட்டுள்ளதுமான உலக சிருஷ்டி கதையாகும். இரண்டாவது, சென்ற நூற்றாண்டிற்குள் பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதும், சென்ற பல நூற்றாண்டுகளில் பல அறிஞர்களின் சிந்தனைக்கு ஆக்கமளித்தது மான பரிணாமத் தத்துவமாகும். இவ்விரண்டு தத்துவங்களில் எது மக்களது அறிவிற்கும், அனுபவத்திற்கும் பொருத்தமானது என்பதை உலக மக்கள் பரிசீலனை செய்ய வேண்டுகிறோம்.

உலகிலுள்ள ஒவ்வொரு வர்க்கத்தினருக்கும் அவர்களால் கற்பிக்கப்பட்டஒவ்வொரு சிருஷ்டிக் கதைகள் உண்டு. மனிதன் தனது அநாகரிகமான வாழ்க்கையின்றும், அடிமைத்தனத்தின்றும், விலக ஆரம்பிக்கவே அவன் தன்னைச் சுற்றியுள்ள பிரபஞ்சத்தையும், அதிலுள்ள பொருள்கள் உற்பத்தியைக் குறித்தும் சிந்திக்கத் தொடங்கினான். நான் எங்கிருந்து இவ்வுலகில் பிறந்தேன்? இவ்வுலகம் எப்படி உற்பத்தியாயிற்று? இவ்வுலகில் காணப்படும் பொருட்கள் எப்படி உற்பத்தியாயின? இவைகளைப் போன்ற வினாக்களை அவர்கள் கேட்க ஆரம்பித்தார்கள். மின்னல், ஒளி, பூகம்பம் போன்ற பல இயற்கை, செயற்கைகளைக் குறித்து குழந்தைகள் அதன் காரணத்தைத் தெரிந்து கொள்ள முயற்சித்து ஒன்றும் கிடைக்காமற் போகவே சில கட்டுக்கதைகளை இவற்றின் காரணமாகக் கூறுவதைப்போல், அநாகரிக வாழ்க்கையில் வாழ்ந்து வந்த மக்களுக்கு, தங்களைச் சுற்றியுள்ள பொருட்களின் உற்பத்தி வரலாற்றைக் கூறத் தெரியாமல் போகவே அவற்றிற்கு இணையாக சில கட்டுக்கதைகளை ஒவ்வொரு வர்க்கத்தினரின் தன்மைக்கு ஏற்றவாறு கற்பிக்கப்பட்டிருந்த போதிலும், இக்கற்பனைக் கதைகள் அனைத்தும் தங்களது சில மதப்புத்தகங்களில் இடம் பெற்றிருக் கின்றன. இன்னும் மத நூல்களில்லாத ஒரு சில வகுப்பினர்களும், மதக் கோட்பாடு புத்தகங்களில் காணப்படக் கூடிய வகையில் அவர்களது கற்பனைகள் இல்லாவிடினும், அவர்களும் பல விநோதமான கட்டுக்கதைகளை வழங்கி வருகின்றனர். இப்படி அநேகர் நம்பி வரும்படியான சிருஷ்டிக் கதைகள் சிலவற்றைக் கவனிப்போம்.

சர் ஜான் லூபக் என்ற அறிவியல் அறிஞர் பின்வருமாறு கூறுகிறார் : வட ஆப்பிரிக்காவில் சிங்கா (Singa) என்றோர் சிறு ஊர் இருக்கிறது. அவ்வூர் அரசியை ஒரு பாதிரியார் இவ்வுலகம் எப்படி சிருஷ்டிக்கப்பட்டது? என்று வினவினார். எவ்வித அச்சமுமின்றி அவ்வரசி இவ்வூரை எமது மூதாதையர் சிருஷ்டித்தனர் என்று பதிலுரைத்தாள். வேறு சிலர் இவ்வுலகம், அவற்றிலுள்ள வஸ்துக்களும் இவ்வுலகில் தானாகவே உற்பத்தியாயிற்று என்று நினைத்து வருகின்றனர். எல்லா வஸ்துக்களும் ஜலத்தினின்றும் உற்பத்தியாயிற்று என்ற எண்ணம் புராதான மக்களுள் நிலவி வந்தது. அமெரிக்காவிலுள்ள சீப்வா இந்தியர்கள் (Chippewa Indians) இவ்வுலகம் முழுதும் முதலில் ஒரு ஜலக்கோளமாக இருந்ததென்றும், அதினின்றும் அபாரசக்தி இவ்வுலகை இத்தன்மையில் நிர்ணயித்த தென்றும் கருதி வருகின்றனர். மிங்கோஸ் (Mingos), ஆட்டாவாஸ் (Ottawas) போன்றவர்களுடைய சிருஷ்டிக்கதை வரலாறும் மிகவும் விசித்திரமானது. யாரோ ஒரு அமானுஷிக மனிதன் மேற்குறிப் பட்ட ஜலக்கோளத்தில் மூழ்கி ஒரு மணல் தரியை எடுத்து வந்ததாகவும், அதினின்றும் இவ்வுலகம் சிருஷ்டி பெற்றதென்றும் கருதி வந்திருக்கின்றனர். ஆனால், இவர்கள் கூறும்படியான அமானுஷிக மனிதன் எவ்வாறு உற்பத்தி பெற்றான்? என்பதைக் குறித்து அவர்கள் கூறுவதில்லை.

பூமியின் உற்பவம் ஓர் அணுத்தன்மையினின்றானது என்ற வாதமும் பல ஆண்டுகளுக்கு முன் நிலை பெற்று வந்தது. இந்த வாதம் ஒரு விதத்தில்லாவிடினும் மற்றபடி பலவாறு பின்லாண்ட், போலினீஷ், சைனா, பினீஷா, ஈஜிப்த், இந்தியா போன்ற நாடுகளிலும் பிரச்சாரத்திலிருந்து வந்தது. பினீஷர்கள் முட்டையிலுள்ள மஞ்சள் பாகம் பூமியாகவும், அதைச் சுற்றியுள்ள வெள்ளைப் பாகம் சமுத்திரமாகவும் ஏற்பட்டது என்று இன்றும் கருதி வருகின்றனர். ஒரு வகையில் இந் நம்பிக்கைகளுடன் ஒத்துக் கொள்ளக் கூடிய ஒரு கற்பனைக் கதை இந்துக்களின் புராண வரலாற்றில் கூறுவதாவது: பரப்பிரம்மமான கடவுள் தமது ஏதோ ஒரு எண்ணத்தால் முதலில் ஒரு ஜலக் கோளத்தை சிருஷ்டித்தார். அந்த ஜலக்கோள மத்தியில் அவர் ஒரு விதையை விதைத்தார். அவ்விதை காலப்போக்கில் ஒரு பொன்முட்டையாக மாறிற்று. அம்முட்டையில் சிருஷ்டி கர்த்தாவான பிரம்மன் உருவெடுத்து இவ்வுலகை சிருஷ்டித்தார்.

ஸ்காண்டிநேவியன் (அதாவது நார்வே, ஸ்வீடன், டென்மார்க் நாடுகள்) தேசத்து சிருஷ்டி வரலாற்றுப்படி முதன் முதலில் ஒன்றுமில்லாத இடத்தில் ஒரு கோடு உற்பத்தியாயிற்று. அக்கோட்டின் தென்பாகம் அதன் சுவாலையாகவும், வடபாகம் ஒளியமாக மஞ்சள் வர்ணமும் ஏற்பட்டது. இவ்விரண்டின் சேர்க்கைப் பலனாக யாமிர் (Yamir) என்ற அரக்கன் தோன்றினான். அவரின் வாழ்க்கை முடிந்ததும் அவரது உயிரற்ற பிண உடலினின்றும் சுவர்க்கமும், பூமியும் உற்பத்தியாயிற்று. கிரீக்கர்களும் இவ்வகையிலேயே நம்பி வருகிறார்களெனினும் சிறிது மாறுபட்ட எண்ணங்களை உடையவர்களாக இருக்கிறார்கள்.

பெர்ஷியர்களின் மத நூலான சென்ட் அவெஸ்டா (Zend Avesta) என்ற நூலில் சிருஷ்டியைக் குறித்து கூறுவதாவது: சுயமானதோர் பராசக்தி முதலில் ஆர்மெண்ட் (Ormund) பிரகாசத்தின் தேவன், அஹ்ரிமன் (Ahrumn)  இருளின் தேவன் என்று இரு தேவர்களை சிருஷ்டித்ததாகவும், அவற்றுள் ஆர்மெண்ட் பூமியையும், சுவர்க்கத்தையும், அவற்றிலுள்ள ஜீவராசிகள் அனைத்தையும் ஆறு தினங்களுள் சிருஷ்டித்ததாகவும், அவற்றுள் மனிதனது சிருஷ்டியே இறுதி சிருஷ்டியெனவும் கருதி கூறி வருகின்றனர். பைபிளிலுள்ள சிருஷ்டி முறை மிக பிரசித்தமானது. முதல் நாள் கடவுள் வெளிச்சத்தை சிருஷ்டித்து இரவு, பகலை ஏற்படுத்தினார். இரண்டாம் நாள் பூமியையும், அதற்கு இணை பெற்றுள்ள ஜலகோளத்தையும் ஏற்படுத்தி மேற்கூரையை (ஆகாசத்தை) சிருஷ்டித்தார். இந்த மேற்கூரைகள் நினைக்கும் போது வருஷ மழை பெய்வதாக திறக்கக் கூடிய ஜன்னல்களும் இருக்கின்றனவாம்! மூன்றாம் நாள் பூமியின் பல பாகங்களிலிருந்த மூலத்தையெல்லாம் ஒன்றுபடுத்தி கடலை சிருஷ்டித்ததுடன், பூமியில் விருக்ஷங்களை உற்பத்தி செய்தார். நான்காம் நான் சூரிய சந்திராதிகளை சிருஷ்டித்தார். ஐந்தாம் நாள் கடலில் மீனையும், ஆகாயத்தில் பறவைகளையும் சிருஷ்டித்தார். முடிவாக பூமியில் ஊர்வன, நகருவனவைகளையும், நான்கு கால் மிருகங்களையும், முடிவாக தமது சொந்த உருவத்தில் மனிதனையும் சிருஷ்டித்தார். சிருஷ்டி உற்பத்தியால் களைத்து சோர்வுற்ற கடவுள் ஏழாம் நாள் ஓய்வெடுத்துக் கொண்டார்.

உலகில் சிருஷ்டியை குறித்து நினைத்து வரும் சில எண்ணங் களே நாம் மேற்குறிப்பிட்டவைகளாகும். ஆனால் இவைகளி னின்றும் பொதுவாக ஒரு விஷயத்தை நாம் காண்கிறோம். அதாவது மனித சிருஷ்டிக்கு முன்னதாகவே கடவுள் உலக சிருஷ்டியை நடத்தினார் என்பதாகும். அப்படியானால் இந்த சிருஷ்டித் தன்மைகளெல்லாம் பிறகு சிருஷ்டிக்கப்பட்ட மனித னுக்கு எவ்வாறு தெரியலாயிற்று என்ற நியாயமானதோர் வினாவைக் கேட்கக் கடமைப்பட்டுள்ளோம். அதற்கு கூறக்கூடிய ஒரே ஒரு பதில், ஆதிமனிதர்களுள் எவரிடத்தில் ஒருவரிடத்திலாவது கடவுள் தமது சிருஷ்டி வரலாற்றைக் கூறியிருக்க வேண்டும் என்பதாகும். இப்படி வெளிப்படுத்தித்தான் மத நூற்களில் வெளியான இரகசியம் எனக் கூறுகின்றனர்.

ஏற்க முடியாததும், முன்னுக்குப் பின் முரணான பல தத்துவங்களும் இவற்றுள் மலிந்திருப்பதைக் காணலாம். நாளுக்கு நாள் வாழ்க்கையில் பெருகி வருகின்ற விஞ்ஞானத்தின் ஞானச் சுடரின் வாயிலாக இச்சிருஷ்டி வரலாற்றை பரிசீலனை செய்து பார்க்கையில் மேன்மைப்பட்டதெனப் புகழப்படும் பைபிளில் வெளிச்சத்தை சிருஷ்டி செய்த பின்னர் தான் சூரியனை சிருஷ்டி செய்ததாக காணக்கிடக்கின்றது. வெளிச்சத்திற்கு துணைக் கருவியான பொருளின்றி எப்படி பிரகாசம் ஏற்படும்? சூரியன் உண்டாவதற்கு முன்னதாகவே இரவு, பகல் சிருஷ்டிக்கப்பட்டதாம். எப்படி? இவைகளெல்லாம் எவ்வளவு பொருத்தமில்லா கூற்றுகள் என்பதை பச்சிளங் குழந்தை கூட உணரத்தக்க நிலைமையில் இன்று காலப்போக்கு மாறி வருகின்றது. சூரிய சிருஷ்டிக்கு முன்னதாகவே விருஷங்களை சிருஷ்டித்ததாக காணப்படுகிறது. பூமியைவிட வெகுகாலத்திற்கு முன்னதாகவே சூரியன் உற்பத்தியாயிற்று என்றும், சூரியன் ஒரு பாகமே பூமியென்றும் நாம் விஞ்ஞானத்தைப் படிக்கும் போது, மதம் நமக்கு முட்டுக்கட்டையான விஷயங்களைக் கற்பிக்கிறது. நக்ஷத்திரங்களில் பெரும்பான்மையும் பூமியைவிட பெரிதென்றும், அவற்றுள் சிலதினுடைய ஒளி பூமியில் வந்து சேர வெகுகாலத்திற்கு முன்பே நக்ஷத்திரங்கள் உண்டாயிற்றென்றும் விஞ்ஞான சாஸ்திரம் பொருத்தமான ஆதாரங்களுடன் கூறுகையில், மத நூற்களில் பூமி சிருஷ்டிக்கப்பட்ட பின்னர் தான், நக்ஷத்திரங்களைக் கடவுள் சிருஷ்டித்ததாகக் கூறப்படுகிறது. இப்படி ஒத்துப்பார்க்கையில் இம் மதக் கோட்பாடுகளெல்லாம் முற்றிலும் முரணானவைகள் என விளங்கும்.

பூமியின் வயதைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் மத நூற்கள் கூறுவதைப்போல் ஆறாயிரம் வருடங்களுக்கு முன் பார்க்க வேண்டுமென்று கூறுவது போதாதென்றும், அவற்றைப் போன்று பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே கவனிக்க வேண்டுமென்றும், விஞ்ஞானம் நமக்கு ஞாபகப்படுத்துகின்றது. சூரியனுடன் பூமியை ஒத்துப்பார்க்கையில் பூமி மிகவும் வயது குறைந்த ஒரு கிரகமாகும். பூமியில் கரி (Coal) உண்டாவதற்கு குறைந்தது 60 லட்ச வருடம் வேண்டும் என்று புரபசர் ஹக்ஸிலி (Prfo.Huxley) கணித்திருக்கிறார். அதைப்போன்றே சுண்ணாம்பினுடைய (Chalk) ரூபி கரணத்திற்கும், இத்தனை வருடங்கள் வேண்டியிருக்கிறது. பூமுகத்திற்கும் (பூமி) உயிர் ஏற்பட்டு அறுபது கோடி வருடங்களாயிற்று என்று சர்.ஆரசிபால்ட் கீயச் (Sir Archibald Geikie) என்ற விஞ்ஞானி கூறுகிறார். உலக விவகார அகராதியின் (Encyclopaedia Britannia) இறுதிப் பதிப்பில், பூமிக்கு குறைந்தது நூறுகோடி வருடம் பருவமுண்டெனக் கூறியிருக்கிறது. இவைகளெல்லாம் மத நூற்களிலுள்ள சிருஷ்டி கதைகளைப் போன்றவையன்று. மத நூற்களிலுள்ள விஷயங்களுக்கும், விஞ்ஞான ஆய்ச்சிக்கும் ஒருவித ஒற்றுமையே இருக்காது. பழைய சிருஷ்டி கட்டுக்கதைகளை எதிர்ப்பதற்கும், நவீன விஞ்ஞான முற்போக்கைப் பெருக்குவதற்கும், விஞ்ஞான பரிணாம ஆராய்ச்சி நடத்தினவர் டார்வின் என்ற அறிஞராவார். சென்ற 75 வருடத்திற்கு முன்புதான், அவர் தமது பரிணாம சித்தாந்தத்தை (Evolution Theory) வெளிப்படுத்தினார். அது மதக் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானது. அதனால் கிருஸ்துவ புரோகித வர்க்கம் டார்வினுக்கு எதிராகப் போரைத் துவக்கினர். ஆனால், மதக் கோட்பாட்டுகளின் படி, பூமித்தட்டை (Flat) எனக் கூறின. மத சாஸ்திரத்தை பொய்யெனக் கூறிய அறிஞர் கலிலியோவை தண்டித்து சிறைப்படுத்தியதைப் போல், டார்வினை செய்ய இன்றைய புதுஉலகம் அனுமதிக்கவில்லை.

புதுஉலகம்
ஆகஸ்ட் 1935%d bloggers like this: