“கைப்பு நிலத்தையும் செப்பனிட்டுப் பயிர்
காத்து கதிர் வளர்த்தேன் – அதன்
கண்ட பலனைப் பறிகொடுத்து நின்று
கண்ணீர் வடிப்பதை நாம் சகியோம்.”என்றார் பாட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை
இன்று ஏழை நிலமில்லா மக்களுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்த புதிய தமிழக அரசு கொள்கையளவில் முடிவெடுத்துள்ளது. இந்த முடிவினை அதன் தோழமைக் கட்சிகளும், தமிழக மக்களும் வரவேற்றுள்ளன. இத்திட்டம் சிறந்த, நெறிய முறையில் நிறைவேற்றப்படுமானால், தமிழகம் விவசாயத் துறையில் புத்தொளி பெறுவது திண்ணம்.
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும், அதற்குப் பின்னர் சுதந்திர இந்தியாவிலும் நிலவுடைமையில் பல்வேறு மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. இதே மாறுதல்கள் தமிழகத்திலும் நடைபெற்றது. இந்தியா விவசாயம் சார்ந்த நாடு. விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுப்பதின் மூலம் தான் மக்களின் ஏழ்மை, வேலையின்மை இவற்றைப் போக்க முடியும். இது தமிழகத்திற்கும் பொறுத்தமானதே.
ஆனால், விவசாயத் துறையில் தமிழகத்தில் நடந்தது என்ன? 1960 க்குப் பின்னர் நடந்த பசுமைப்புரட்சியின் மூலம், விவசாயத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன. உணவு உற்பத்தி பல மடங்கு பெருகியது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், விவசாய நிலங்களில் இருபோகங்கள், முப்போகங்கள் சாகுபடியாயின. தண்ணீர்த் தேவை அதிகமானது. இடுபொருட்களின் விலைகள் அதிகமாகியது. நிலத்தடி நீரின் தேவை அதிகமாகி, தமிழக நிலத்தடி நீர் முற்றிலும் தீரும் நிலை ஏற்பட்டுள்ளது. 80 சதவீத நிலத்தடி நீர் உபயோகப்படுத்தப்பட்டு விட்டது. நீர்ப்பாசன வசதிகளைக் காப்பாற்றுவதற்கும், பெருக்குவதற்கும் அரசு உரிய கவனம் செலுத்த வில்லை. விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. இதன் காரணமாக சிறு, குறு விவசாயிகள் கடனிலும், வறுமையிலும் உழன்றனர். கிராமப்புறங்கள் வறுமை யில் உழன்றது. தங்களிடமிருந்த சிறுபகுதி நிலங்களை விவசாயிகள் விற்கத் தொடங்கினர் அல்லது ஈடுவைத்தனர். நிலங்களை இழந்த விவசாயிகள் விவசாயக் கூலிகளாக மாறினர். விவசாயக் கூலி வேலை வாய்ப்புக்களும் குறைந்ததால் வேலைக்காக நகரங்களை நோக்கிச் சென்றனர். தற்போது நகர வளர்ச்சியும், நெருக்கடியில் உள்ளது. தமிழகத்தில் ஏராளமான சிறு நகரங்கள் உருவாகி வருகின்றன.
நிலங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற கொள்கையின் படி, 1961லும், 1970லும் நிலச் சீர்திருத்தச் சட்டங்கள் தமிழகத்தில் அமலாக்கப்பட்டன. இந்தச் சட்டங்கள் முறையாக அமல்படுத்தப் பட்டிருந்தால், தமிழகத்தில் சுமார் 25 லட்சம் ஏக்கர் உபரியாகக் கிடைக்கும் என்று நில வருவாய் சீர்திருத்தக் கமிட்டி அறிவித் துள்ளது. 1990 வரை உபரி என அறிவிக்கப்பட்ட நிலம் 1.75 லட்சம் ஏக்கர். இந்த நிலங்களைக் கைப்பற்ற முடியாமல், நிலங்கள் சட்ட விரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. எனவே, தமிழகத்தில் நிலச் சீர்திருத்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு பெரும் பயனை அளிக்கவில்லை.
மகாத்மா காந்தியின் சீடரான ஆச்சார்யா வினோ பாபாவே, 1951 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ம் தேதி, பூமிதான இயக்கம் என்பதைத் துவக்கினார். இதன்படி, பெரும் பண்ணையார்கள், பணக்கார விவசாயிகளிடமிருந்து நிலங்கள் தானமாகப் பெற்று, அவற்றை ஏழை, எளிய மக்களுக்குப் பகிர்ந்தளிப்பது என்ற கொள்கை வகுக்கப்பட்டது. இதன்படி, தமிழகத்தில் மட்டும் 85,744 ஏக்கர் நிலம் பெறப்பட்டு, அதில் 62,745 ஏக்கர் நிலம் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், இந்த நிலங்கள் ஏழை மக்களால் சாகுபடி செய்யப்படாமல், நாளடைவில் அந்தந்த பணக்கார விவசாயிகளே நிலங்களைக் கையகப்படுத்திக் கொண்டனர். ஏப்ரல் 2006 ல் திண்டுக்கல் மாவட்டத்தில் நடத்திய ஆய்வில் பூதான் இயக்கத்தில் பெறப்பட்ட 3536 ஏக்கர் நிலத்தில், 1579 ஏக்கர் நிலம் மட்டுமே ஏழை மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1957 ஏக்கர் நிலம் விநியோகம் செய்யப்படவில்லை.
ஏழை விவசாய மக்களுக்காக ஏற்பட்ட நிலச் சீர்திருத்தச் சட்டங்கள், பூதான் இயக்கம் போன்றவை அவர்களுக்குப் பயனளிக்கவில்லை. அதே சமயம், இடது முன்னணி ஆளுகின்ற மேற்கு வங்கத்தில் நிலச்சீர்திருத்தச் சட்டங்களை கடுமையாக்கி 13 லட்சம் ஏக்கருக்கும் மேலான விவசாய நிலங்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டன. மேலும், விவசாயத்திற்குப் பொருத்தமில்லாத, அரசின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள 6 லட்சம் ஏக்கர் நிலங்களில் பெரும் பகுதியை விவசாயத்திற்குப் பொருத்தமானதாக மாற்ற முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. மேற்குவங்க பஞ்சாயத்துக்கள் விவசாயிகளின், குறிப்பாக ஏழை விவசாயிகளின் அதிகாரத்தை அதிகரித்துள்ளது.
தமிழகத்திலோ, ஏழை விவசாயிகளின் அதிகாரம் பறிபோகத் தொடங்கியது. சென்ற அதிமுக ஆட்சியில் தமிழக அரசு ஒருங்கிணைந்த தரிசு நில மேம்பாட்டுத் திட்டம் என்ற ஒரு திட்டத்தை அறிவித்தது. (அரசாணை எம்.எஸ். எண்.189 – 2.7.2002) இதன்படி, தமிழகத்தில் உள்ள 50 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான தரிசு நிலங்களை பெரும் தொழிற்கழகங்கள், சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு அமைப்புகள் நீண்ட கால குத்தகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று அந்த அரசு ஆணையில் குறிப்பிடப்பட்டது. இதன் மூலம் அளிக்கப்படும் நிலத்தின் அதிக பட்ச அளவு 1000 ஏக்கர்கள் ஆகும். தேவை ஏற்பட்டால் இதற்கு மேலும் கூட நிலங்களைப் பெற்றுக் கொள்ளலாம். இதை 30.11.2004 அன்று திட்டக்குழு துணைத்தலைவர் திரு.எம்.எஸ்.அலுவாலியா அவர்களுடன் நடத்திய விவாதத்தின் போது, அன்றைய தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா குறிப்பிடுகையில், தமிழகத்தில் தற்போது தரிசாக உள்ள சுமார் 2 மில்லியன் ஹெக்டேர் நிலத்தையும் மற்றும் நிரந்தரமாக தரிசாக இருக்கும் நிலங்களையும் படிப்படியாக சாகுபடியின் கீழ் கொண்டு வருவதற்காக தரிசு நில மேம்பாட்டு அடங்கல் திட்டம் ஒன்றையும் நான் தொடங்கி வைத்துள்ளேன். இவ்வாண்டில், இத்திட்டத்தின் கீழ் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முதல் நிலைத் துறைக்கான எங்களது புதிய உத்திகளில் பயிர்களைப் பல திறப்படுத்துதல், பண்ணை உற்பத்தியைப் பெருக்குவதற்கான புதிய தொழில் நுட்ப உத்திகள் போன்றவை அடங்கும்.
அன்றைய முதலமைச்சரின் இந்த அணுகு முறை, உலகமயமாதல் கொள்கையோடு ஒன்றிணைந்தது. இக்கொள்கை யின் காரணமாக ஆங்காங்கு விவசாயக் கிளர்ச்சிகள் எழுந்தன. தமிழகத்தின் முற்போக்குச் சக்திகள் ஒன்றிணைந்து இச்செயலைக் கண்டித்தனர்.
தற்போது பதவி ஏற்றுள்ள புதிய அரசு ஏழை விவசாயிகளின், நிலமற்ற விவசாயக் குடும்பங்களின் வறுமை நிலையைப் போக்க, ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 ஏக்கர் விவசாய நிலம் வழங்கும் திட்டத்தைத் துவக்க உள்ளது. இதன் முதற்கட்டமாக செப்டம்பர் 17 ம் தேதி, திருவள்ளூர் மாவட்டத்தில் மாண்புமிகு. முதல்வர். கருணாநிதி அவர்கள் ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்குகிறார்.
இத்திட்டம் தமிழகத்தில் முறையாக செயல்படுத்தப்பட்டால், ஏழை விவசாயிகளின் வாழ்வில் ஒரு விடியலைக் காணலாம். தற்போது தமிழகத்தில் 2003 – 04 ஆண்டின் பருவம் மற்றும் பயிர் அறிக்கையின் படி, நடப்புத் தரிசு நிலங்கள் 9,53,963 ஹெக்டேரும், மற்ற தரிசு நிலங்கள் 18,62,861 ஹெக்டேரும் உள்ளது. மேய்ச்சல் நிலங்கள் 1,13,474 ஹெக்டேரும் உள்ளது. இந்த நிலங்களைத் தவிர
மடங்களுக்கான நிலங்கள் – 23,207 ஹெக்டேர்
கோயில் நிலங்கள் – 1,75,759 ஹெக்டேர்
நிலங்களும் உள்ளன. இந்த நிலங்களை அரசு கையகப்படுத்தி, ஏழை விவசாயிகளுக்கு வழங்க முடியும். தமிழகத்தில் தற்போது 60,62,786 ஆண்களும், பெண்களும் விவசாயக் கூலித் தொழிலாளர் களாக உள்ளனர். சராசரியாக 15,15,696 விவசாயக் கூலிக் குடும்பங்கள் உள்ளன.
தமிழகத்தில் உள்ள தரிசு நிலங்கள் மற்றும் கோயில், மடங்களின் நிலங்கள்
நிலங்கள் | ஹெக்டேர் | ஏக்கர் |
நடப்புத் தரிசு நிலங்கள் | 9,53,963 | 23,57,293 |
மற்ற தரிசுகள் | 18,62,861 | 46,03,229 |
மொத்தம் | 28,16,824 | 69,60,522 |
நிலங்கள் | ஹெக்டேர் | ஏக்கர் |
மடங்களுக்கான நிலங்கள் | 23,207 | 57,345 |
கோயில் நிலங்கள் | 1,75,759 | 4,34,309 |
மொத்தம் | 1,98,966 | 4,91,654 |
ஆதாரம் பருவம் மற்றும் பயிர் அறிக்கை (2003 – 04) – தெற்கு ஆசியாவில் நிலச்சீர்திருத்தம் – பக்கம் 36
இத்திட்டம் தமிழகத்தில் முழுமையாக அமல்படுத்தப் பட்டால், விவசாயத்தில் பெரும் மாறுதல்கள் ஏற்படும். உலகில் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) 6 நாடுகளில் மேற்கொண்ட ஆய்வில் நில விநியோகம் செய்யப்பட்ட சிறு விவசாயிகளின் உற்பத்தி பெருமளவில் அதிகரித்துள்ளது. உலகவங்கியின் உலக வறுமையைத் தகர்ப்போம் என்ற வெளியீட்டில், தாய்லாந்து நாட்டில் 2 ஏக்கரிலிருந்து 7 ஏக்கர் வரை உள்ள விவசாய நிலங்களின் நெல் உற்பத்தி ஏக்கருக்கு 60 சதம் வரை உயர்ந்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் பிரான்ஸஸ் லேப்பி மற்றும் ஜோசப் காலின்ஸ் என்ற இரு ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் 1960 லிருந்து 1973 வரை உள்ள 13 ஆண்டுகளில் சிறு விவசாயிகளின் நிகர வருமானம் அதிகரித்துள்ளது. உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) வெளியிட்டுள்ள 2000 ஆம் ஆண்டு விவசாயத்தை நோக்கி என்ற வெளியீட்டில், நிலங்களைச் சரிசமமாகப் பகிர்ந்தளிப்பு முறை விவசாயத்தில் பெரும் மாற்றத்தை உருவாக்கும். பெரு விவசாயிகள் உற்பத்தி செய்வதை விட, சிறு விவசாயிகள் அதிக உற்பத்தி செய்ய முடியும் என்பதையும் அது குறிப்பிடுகிறது. இதன் மூலம் அந்தந்த நாட்டின் வறுமையும், வேலை யின்மையும் ஒழியும் என்பதையும் அது குறிப்பிடுகிறது. இந்தியாவின் மொத்த நிலங்களில் 5 சதவீத நிலங்கள் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டால், அது நாட்டின் 35 சதவீத ஏழ்மையை ஒழித்து விடும் என்பதை திரு.பாரத் தோக்ரா என்ற சுற்றுச்சூழல் ஆய்வாளர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
1979 ல் கூடிய நிலச் சீர்திருத்தமும், ஊரக வளர்ச்சியும் பற்றி ஆய்வு செய்த உலக மாநாட்டில் தங்களுடைய உறுதி மொழியாக கிராமப்புற ஏழை மக்களுக்கு நிலங்களின் மீது உரிமை வேண்டும் என்பதை ஏற்றுக் கொண்டார்கள். இதேபோல், 1995, 1996 ல் கூடிய பசியும், வறுமையும், உலக உணவு ஆகிய இரண்டு மாநாடுகளிலும், வறுமையையும், பசியையும் போக்க மக்களுக்கு நில உரிமை வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது. தற்போது தமிழகத்தில் விநியோகம் செய்ய உள்ள தரிசு நிலங்களில் 22 சதவீதம் மாநிலத்தில் ஒரு பெரும் மாற்றத்தை உருவாக்கும். எனவேதான் இத்திட்டம் ஒரு தொலை நோக்குப் பார்வையோடு செயல்படுத்த அரசு திட்ட மிட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை எந்த ஒரு அரசும் மேற் கொள்ளாத இந்தத் திட்டத்தை தற்போதைய தமிழக அரசு மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. அண்டை மாநிலங்களான ஆந்திராவில் 42.02 லட்சம் ஏக்கர் நிலமும், கர்நாடகாவில் 13.72 லட்சம் ஹெக்டேர் நிலமும், 4.57 லட்சம் ஹெக்டேரும் தரிசு நில விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகிக் கப்பட்டுள்ளன. ஆனால், தமிழகத்தில் இதுவரை 2.7 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் மட்டுமே இதுவரை விநியோகிக்கப்பட் டுள்ளது. தமிழகத்தில் உள்ள தரிசு நிலங்கள் மட்டுமல்லாது, கோயில்கள், மடங்கள் மற்றும் டிரஸ்ட் போன்றவைகளின் பெயர் களில் ஏகபோகங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் நிலக் குவியல் களையும், முறைப்படி அரசு கையகப்படுத்த வேண்டுவது மிகவும் அவசியமாகிறது. இந்த நிலங்களையும், கையகப்படுத்திக் கூட ஏழை விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய முடியும். இதுவும் தற்போதைய தமிழக அரசின் கவனத்தில் உள்ளது.
இந்த தரிசு நில விநியோகத் திட்டத்தில் அரசு பிரதானமாகக் கவனத்தில் கொள்ள வேண்டியவைகள்:-
- கிராம விவசாயக் கணக்குகளில் கொடுக்கப்படும் நிலங்களின் உரிமை அந்தந்த விவசாயிகளின் பெயரில் பதிவு செய்யப்பட வேண்டும்.
- கொடுக்கப்படும் நிலங்களை வாங்கவோ, விற்கவோ, ஈடுவைக்கவோ முடியாதபடி பதிவு செய்தல் அவசியம்.
- நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதிக்கான கடன்கள், பயிர்க் கடன்கள் போன்றவை நீண்டகாலத் தவணைகளில் திருப்பிச் செலுத்துதல் திட்டத்தின் கீழ் கிராமப்புற விவசாயக் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இவைகளின் மூலம் வழங்கப்பட வேண்டும்.
- அந்தந்த கிராமங்களில் ஒரு கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு, வருவாய் அதிகாரிகளுக்கு உதவியாக இக்குழு செயல்பட வேண்டும்.
இத்திட்டம் தமிழகத்தில் முழுமையாக நிறைவேற்றப் பட்டால், தமிழகத்தின் விவசாயம், பொருளாதாரம் இவைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக, ஏழை விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் இவர்களின் வாழ்க்கையில் பெரும் மாறுதல்களையும், வளர்ச்சிகளையும் இத்திட்டம் உருவாக்கும். அந்த மக்களின் வாங்கும் சக்தி, வாழ்க்கைத் தரம் முதலியன உயரும். இத்திட்டத்தை முழு முயற்சியோடு செயல்படுத்த தமிழக அரசும், துறை சம்பந்தப்பட்ட அமைச்சர்களும், அதிகாரிகளும் மிகத் தீவிரமாக செயல்படுத்த முன்வர வேண்டும். இத்திட்டத்தை முழுமையாக நிறைவேற்றும் போது, பொறுப்பற்ற அதிகாரிகள், திட்டத்தை நசுக்க நினைக்கும் அரசியல்வாதிகள், கிராமப்புறத்தில் ஏழை விவசாயிகளை அடக்கியாளும் நில உடைமையாளர்கள் மற்றும் சமூக விரோதிகளால் இடையூறு ஏற்பட வாய்ப்பு உண்டு. அரசு இவைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். இத்திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டால், தமிழகத்தில் ஏழை மற்றும் தலித் மக்களின் வாழ்வில் ஒரு மிகப் பெரும் மறுமலர்ச்சி ஏற்படும்.
One response to “தமிழக விவசாய மறுமலர்ச்சி, தரிசு நிலத் திட்டம்!”
[…] http://marxist.tncpim.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%… […]
LikeLike