அநாகரிகப் பொருளாதாரத்தின் அதிரடித் தாக்குதல்..


நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் நவீன முதலாளித்துவ அமைப்பு முறையை மிகவும் கவனமாக கார்ல் மார்க்ஸ் ஆய்வு செய்துள்ளார். முதலாளித்துவ அமைப்பு முறையின் தரம் தாழ்ந்த பண்பைப் புரிந்து கொண்ட அவர் – அதற்கு அநாகரிகப் பொருளாதாரம் என்று பெயர் சூட்டினார். அந்த அநாகரிகப் பொருளாதார அமைப்பு முறையால் மீண்டும் மூழ்கடிக்கப்படும் நிலையில் இன்றைய தினம் இந்தியா இருக்கிறது.

– பிரபாத் பட்நாயக்

செப். 11 – 17 பீப்பிள்ஸ் டெமாக்ரசி இதழில் அநாகரிகப் பொருளாதாரத்தின் அதிரடித் தாக்குதல் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள ஒரு கட்டுரையில் பொருளாதார வல்லுநரான பிரபாத் பட்நாயக் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இக்கட்டுரையைப் படித்த எனது நண்பர் ஒருவர் என்னுடன் விவாதத்தில் ஈடுபட்டார். அவர் எழுப்பிய வினாக்களும், அதற்கு நான் அளித்த பதில்களும் ஒரு சுவையான விவாதமாக இருந்தது. இதனை மார்க்சிஸ்ட் இதழின் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அந்த விவாதத்தை எழுத்தில் வடிக்க முயற்சித்தேன்.  அதன் விளைவாக வந்தது இக்கட்டுரை.

உலக வரலாற்றிலேயே மிகவும் நாகரிகமான சமுதாய அமைப்பு முதலாளித்துவ அமைப்பு முறைதான் என்று அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் கூறிக் கொள்கிறார்கள். கருப்பு மனிதர்களை நாகரிகப்படுத்த வேண்டிய பெரிய பணி வெள்ளை மனிதர்களின் தோள்களில் ஏற்றப்பட்ட பெரும் சுமையாக உள்ளது என்று கூறினான் பிரட்டன் நாட்டு நோபல் பரிசு பெற்ற கவிஞான ருட்யார்டு கிப்ளிங். அப்படி இருக்க முதலாளித்து பொருளா தாரமே அநாகரிகப் பொருளாதாரம் என்று மார்க்ஸ் வருணித்தது எந்த அடிப்படையில்? என்பது எனது நண்பர் எழுப்பிய முதல் கேள்வி.

பொருளாதார வாழ்க்கை முறையில் சமூக உறவுகள் அடிப்படையானவை. அந்த சமூக உறவுகளை முதலாளித்துவ பொருளாதார முறை கண்டு கொள்வதில்லை. அவற்றை அது புறக் கணிக்கிறது. பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு இந்த சூத்திரம் சரியானதா அல்லது வேறொரு விதிமுறை சரியானதா? என்பதைவிட இது முதலாளித்துவத்துக்கு பயன்  அளிப்பதாக இருக்கிறதா? அல்லது தீங்கு விளைவிப்பதாக இருக்கிறதா? அரசியல் ரீதியாக அபாயகரமானதாக இருக்கிறதா? அல்லது வசதியானதாக இருக்கிறதா? நடைமுறைச் சாத்தியமானதாக இருக்கிறதா? இல்லை யா? என்பதையே முதலாளித்துவ பொருளாதார அமைப்பு முறை கவனத்தில் கொள்கிறது. தேர்ந்தெடுக்கப்படும் பாதை முறையற்றதா கவும் நெறியற்றதாகவும் இருந்தாலும் கூட அதைப்பற்றிஅது கவலைப் படுவதில்லை எனவே தான் அதனை அநாகரிகப் பொருளாதாரம் என்று மார்க்ஸ் வருணித்தார்.

சமூக உறவுகள் என்றால் என்ன?  – இது நண்பரின் கேள்வி.

பொருள் உற்பத்தியில் ஈடுபடும் போது மக்கள் தங்களுக்குள்ளே ஒருவொருக்கொருவர் சில திட்டவட்டமான உறவுகளையும், தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இதனைச் சற்று புரியும் படி உதாரணத்துடன் விளக்குங்கள்.

ஆதிகாலத்தில் மனிதர்கள் வேட்டையாடுவதே உயிர் வாழ முக்கியமான வழியாகக் கொண்டிருந்தனர். அப்பொழுது சிறு சிறு குழுக்களாக வேட்டைக்கு சென்று இருப்பர். கிடைத்ததை தங்களுக்குள் பகிர்ந்திருப்பர். பின்னர் விவசாயம், தொழில் என்று வந்தவுடன் சமூகத்தில் வேலை பிரிவினை ஏற்பட்டு இவர்களுக் கிடையே பரிவத்தன உறவு உருவாகிறது. இதை உற்பத்தி உறவுகளின் என்கிறோம்.

இரண்டு விதத் தன்மை என்று பிரபாத் பட்நாயக் குறிப்பிடுகிறாரே – அது இது தொடர்பானது தானே?

ஆம் – அதனைப்பற்றி அவர் தனது கட்டுரையில் எடுத்த எடுப்பிலேயே விளக்கியுள்ளார். முதலாளித்துவ அமைப்பு முறையின் கீழ் உள்ள பொருளாதார வகைகளின் இரட்டைத்  தன்மையை அவர் சுட்டிக் காட்டுகிறார்.

உற்பத்தி செய்யப்படும் ஒரு பொருளுக்கு

பொருள் என்ற வகையில் பயன் மதிப்பு;

சரக்கு என்ற வகையில் பரிவர்த்தனை மதிப்பு;

என்ற இரட்டைத் தன்மை கொண்டதைத்தான் சரக்கு என்கிறோம்.

உழைப்பு என்பது

ஒன்று – உழைப்பு சக்தி என்ற பொதுமையானது –

மற்றொன்று – ஒரு பொருளில் அடங்கியிருக்கும் ஸ்தூலமான

உழைப்பு –

உற்பத்தி சாதனம் என்பது

உற்பத்திக் கருவிகளும், உழைப்பும் சேர்ந்தது.

ஆக அனைத்துப் பொருளாதாரக் கூறுகளுக்கும் இரட்டைத் தன்மை உண்டு. ஒன்று பொருள்களைப் பற்றிய புலனறிவு. மற்றது அவற்றின் அடிப்படையாக அமைந்த சமூக உறவு.

காணக் கூடிய அல்லது புலன்களால் உணரக் கூடிய பொருட் களின் தன்மையை மட்டும் தனியாகப் பார்த்து விட்டு அவற்றின் பின்னணியில் உள்ள சமூக உறவுகளை முதலாளித்துவ அமைப்பு முறை புறக்கணிக்கிறது. எனவே தான் இதனை அசிங்கமான – மட்டரகமான – அநாகரிகப் பொருளாதாரம் என்று கார்ல் மார்க்ஸ் வருணித்தார்.

உற்பத்தி சாதனங்கள் என்பது பற்றிய விளக்கம், நிலம், கனிமப் பொருட்கள், காடுகள், நீர்நிலைகள், கச்சாப் பொருட்கள், தொழிற்சாலைகள், உழைப்பதற்கான கருவிகள், உபகரணங்கள் போன்றவை உற்பத்திச் சாதனங்கள் மற்றும் உழைப்பு ஆகும்.

அநாகரிகப் பொருளாதாரத்தால் மூழ்கடிக்கப்படும் நிலையில் இன்றைய தினம் இந்தியா இருக்கிறது என்று பிரபாத் பட்நாயக் குறிப்பிட்டுள்ளாரே? ஆம்! பொருட்களை அவற்றின் பிரத்தியேகத் தன்மையின் அடிப்படையில் மட்டும் பார்ப்பது – சமூக உறவுகளை புறக் கணிப்பது தான் முதலாளித்துவ அநாகரிகப் பொருளாதாரத்தின் தன்மை என்று குறிப்பிட்டார் மார்க்ஸ்.

உலகமயமாக்கல் தான் முதலாளித்துவத்தின் இன்றைய வடிவம் என்று மார்க்சிஸ்ட்டுகள் கணித்துள்ளனர். அது இன்றைய தினம் இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. உலகமயமாக்கல் கோட்பாட்டின் அடிப்படையில் முன்மொழியப்படும் திட்டங்கள் விஞ்ஞான ரீதியாக சரியானவையா?என்பதைப் பற்றி நமது ஆட்சியாளர்கள் கவலைப்படுவதில்லை. சர்வதேச நிதி மூலதனத் துக்கும், அதற்கு உடந்தையாக செயல்பட்டு வரும் உள்நாட்டு முதலாளி வர்க்கத்திற்கு அது பயனளிக்கிறதா என்பதைப் பற்றி மட்டுமே அவர்கள் அக்கறை எடுத்துக் கொள்கின்றனர். அவர்களின் இதயத்திற்கு நெருக்கமாக உள்ள உலகமயமாக்கல் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதிலேயே அவர்கள் முழுமையான கவனத்தைச் செலுத்துகின்றனர். சமூக உறவுகளுக்கு அவற்றால் ஏற்படும் பாதிப்பைப் பற்றிக் கவலைப்பட்டால் உலகமயமாக்கல் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்பதால், அவற்றை ஒதுக்கித் தள்ளி விடுகிறார்கள். சர்வதேச அளவில் மூலதனம் தன்னை வலுப்படுத்திக் கொள்வதற்கு உருவாக்கக் கூடிய தடைகளின் குரல் வளையை நெறித்துக் கொல்வதற்கு அவர்கள் துடிக்கின்றனர். அநாகரிகப் பொருளாதாரம் இந்தியாவைத் தாக்கி வருகிறது என்பதற்கு மூன்று உதாரணங்களை பிரபாத் பட்நாயக் கவனப்படுத்தியுள்ளார்.

முதல் உதாரணம்

கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக நாட்டின் பல பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்த கொண்டுள்ளனர். அண்மைக் காலத்தில் ஏற்பட்ட சமூக ரீதியாக மிகவும் முக்கியத் துவம் வாய்ந்த பிரச்சனை இது. முதலாளித்துவ ஊடகங்கள், அறிவுஜீவிகள், திட்டக்கமிஷன் போன்ற சிந்தனையாளர்கள் குழுக்கள் போன்றவை இப்பிரச்சனையை எவ்வாறு அணுகுகின்றன? விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி என்று இதனைக் குறிப்பிடும் இவர்கள் இதனை சரி செய்வதற்குக் கூறும் ஆலோசனைகள் என்ன?

தொழில் நுட்ப முன்னேற்றங்கள் பயன்படுத்தப்படவில்லை. போதுமான முதலீடு செய்யப்படவில்லை. இதனால் தான் விவசாயத் துறையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயத்துறையில் இந்திய நாட்டு தொழில்நிறுவனங்களையும், பன்னாட்டு நிறுவனங் களையும் முதலீடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். அது தான் விவசாயத் துறை நெருக்கடிக்கான தீர்வாக அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த தற்கொலைகளின் பின்னணியாக அமைந்த சமூக உறவுகளை மூடி மறைக்கின்றன. சர்வதேச மூலதனத்தின் தாக்குதலால் விவசாயிகளின் வேளாண்மையும், சிறு விவசாய உற்பத்தி முறையும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. எனவே, மூலதனத்தின் தாக்கு தலிலிருந்து அவைகளைக் காப்பாற்ற வேண்டியுள்ளது. ஆனால், அதற்குப் பதிலாக மூலதனத்தின் வருகைக்கு தடை ஏற்பட்டதால் தான் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று கூறி, உள்ளூர் முதலாளி களுக்கும், அன்னிய முதலாளிகளுக்கும் விவசாயத் துறையை திறந்து விட வேண்டும் என்று அவர்கள் ஆலோசனை கூறி வருகின்றனர்.

உலகமயமாக்கல் கொள்கை அமலாக்கப்பட்டதைத் தொடர்ந்து விவசாய விளை பொருட்களின் இறக்குமதிக்கான தடை கள் விலக்கப்பட்டன. சுங்கவரிகள் குறைக்கப்பட்டன. அதே நேரத்தில் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் விவசாய விளைபொருட்களுக்கு ஏராளமான மானியங்களை அளித்து வருகின்றன. அந்த நாடுகளின் விவசாய விளை பொருட்களை அடக்க விலையை விடக் குறைவான விலைக்கு இந்திய சந்தையில் விற்பனை செய்ய முடிகிறது. அதே நேரத்தில் இந்திய அரசு விவசாய விளை பொருட்களுக்கு ஆதரவு விலை அளிப்பதையோ அல்லது அரசே கொள்முதல் செய்வதையோ நிறுத்தி விட்டது அல்லது குறைத்து விட்டது. கட்டுபடியாகும் விலை கிடைக்காததால் விவசாயிகள் நட்டமடைகின்றனர். அவர்களுக்கு கடன் வசதிகள் செய்து தரப்படாததால் அநியாய வட்டி வசூலிக்கும் கந்து வட்டிக் காரர்களிடம் மாட்டிக் கொள்கின்றனர். வாங்கிய கடனையும், வட்டியையும் திருப்பிச்செலுத்த இயலாத நிலையில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இப்பிரச்சனையில் அரசு தலையிட்டு உதவி செய்வதற்கு உலகமயமாக்கல் கொள்கைகள் தடை விதிக்கின்றன. இச்சூழலில் நோய்க்கும் காரணமான உலகமயக் கொள்கையையே மேலும் தீவிரமாக அமல் படுத்த வேண்டுமென்று முதலாளித்துவ அறிவு ஜீவிகள் வலியுறுத்துகின்றனர். இத்தகைய முதலாளித்துவ பாதையை அநாகரிகப் பொருளாதாரம் என்று மார்க்ஸ வருணித்ததை தவறு என்று கூற முடியுமா?

இரண்டாவது உதாரணம்

மொத்த உள்நாட்டு உற்பத்திப் புள்ளி 7 முதல் 8 சதம் வரை வளர்ச்சி அடைந்துள்ளதாம். பிரதமரும், நிதி அமைச்சரும் தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்கின்றனர். ஊடகங்களும், அறிவு ஜீவிகளும் அரசாங்கத்தைப் பாராட்டி மகிழ்கின்றன. 11 வது திட்ட அணுகுமுறையில் 8.5 சதத்துக்கு இதனை உயர்த்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அது அவ்வாறு உயர்த்தப்பட்டால் வறுமை தானாக ஒழிந்துவிடுமாம். வறுமையை முற்றிலும் ஒழிக்க  வேண்டும் என்றால், வளர்ச்சி விகிதம் அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டுமாம்! அதற்குச் செய்ய வேண்டியது என்ன? அன்னிய மூலதனம் உள்ளிட்ட மூலதன வருகைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் அதற்கு உள்ள தடைகளை அகற்ற வேண்டும்.

அன்னிய மூலதன வருகையால் இந்திய நாட்டின் சமூக உறவு நிலைகளில் ஏற்படக் கூடிய மாற்றங்களைப் பற்றி அவர்கள் விவாதிப்பதில்லை. மூலதனத்தின் அமைப்பியல் சார்ந்த சேர்மானத் தில் ஏற்படக் கூடிய மாற்றங்கள், வேலை வாய்ப்புகள், வேலையற்ற பட்டாளத்தின் எண்ணிக்கை, உபரி மதிப்பின் அளவு, உழைப்புச் சக்தியின் மதிப்பு, வேலை நாள், நேரம், வேலையின் கடுமை போன்ற வற்றில் ஏற்படக் கூடிய மாற்றங்கள் பரிசீலிக்கப் படுவதில்லை. சிறு உற்பத்தியாளர்களை விழுங்குவதன் மூலம் ஏற்படக்கூடிய புராதன மூலதன சேர்க்கை, விவசாய உற்பத்தியாளர்கள் மற்றும் சிறு உற்பத்தியாளர்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள் போன்ற எண்ணற்ற பிரச்சனைகள் பரிசீலிக்கப்படுவதில்லை. மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் அதிகரித்தால் போதும். வறுமை ஒழிந்து விடும் என்று கூறப்படுகிறது. உண்மையில் வளர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளதா? என்பதே விவாதிக்கப்பட வேண்டிய விஷயம். அது ஒரு புறமிருக்கட்டும்.

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் – என்பது போல ரொட்டியின் அளவு பெரிதாக மாற மாற அனைவருக்கும் நல்லது தானே என்ற முறையில் வாதிடப்படுகிறது. ஆனால், ரொட்டியை பகிர்ந்து கொள்ளும் முறையை சமூக உறவுகள் தானே தீர்மானிக் கின்றன. சட்டியில் இருந்தாலும் தானாக அகப்பையில் வந்து விடுமா?

ஒரு முனையில் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும் போது மறுமுனையில் துன்பதுயரங்கள், கடும் உழைப்பினால் ஏற்படும் வலி, அடிமைத்தனம், அறியாமை, மிருகத்தனம், மனோ ரீதியாக கீழ் நிலைப்படுத்துதல் போன்றவைதான் வளரும் என்று மார்க்ஸ் வலியுறுத்திக் கூறியுள்ளார். உற்பத்தியில் ஈடுபடும் வர்க்கத்துக்கு இவைகள் தான் பரிசாகக் கிடைக்கும் என்று மார்க்ஸ் குறிப்பிட் டுள்ளார். இன்றைய தினம் செயல்படுத்தப்படும் அநாகரிகப் பொருளாதார அமைப்பு முறையினால் சமூக உறவுகளை மீறி வறுமையை ஒழிப்பது சாத்தியமல்ல. மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்ந்து அதிகரிக்கலாம். ஆனால், அதனால் வறுமை நிலையிலுள்ள மக்களுக்கு வேண்டிய தேவைகளைத் தானாக பூர்த்தி செய்யப்படாது என்பதே உண்மை.

மூன்றாவது உதாரணம்

நெகிழ்வான தொழிலாளர் சந்தை பற்றி இன்றைய தினம் அதிகமாகப் பேசப்படுகிறது. தொழிலாளர்களின் உரிமைகள் மீது தாக்குதல் தொடுப்பதற்கு கொடுக்கப்பட்ட ஒரு அழகான சொற்றொடர் தான் நெகிழ்வான தொழிலாளர் சந்தை என்பது, விளக்கு மாற்றுக் கட்டைக்குப் பட்டுக் குஞ்சம் என்பார்களே அது போன்றது தான் இது.  மூலதனத்திற்கு ஆதரவாக சமூக உறவுகளை மாற்றியமைப்பதற்கான நேரடி முயற்சி இது. இதனை எவ்வாறு நியாயப் படுத்துகின்றனர்? நெகிழ்வான தொழிலாளர் சந்தை உருவாக்கப்பட்டால் அன்னிய முதலீட்டை ஈர்க்கக் கூடிய சுற்றுச் சூழல் உருவாகுமாம்!  அதன் தொடர்ச்சியாக வறுமை ஒழிந்து விடுமாம்! ஒர முதலாளித்துவ நாட்டில் மூலதனத்தின் தாக்குதலி லிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான வாய்ப்பு வசதிகளை தொழிலாளர்களுக்கு அளிக்கக் கூடியவை அவர்களுக்கு சட்ட ரீதியாக அளிக்கப்படும் உரிமைகளே. அந்த உரிமைகளைக் குறைத்து விட்டால், மூலதனம் தடையின்றி நுழையுமாம். வறுமை ஒழிந்து விடுமாம். தொழிலாளர்களின் பாதுகாப்புக் கேடயத்தை அவர்களிடமிருந்து பறித்து விட்டால் சர்வதேச மூலதனம் கொடுக்கக் கூடிய தாக்குதல்களை அவர்களால் எளிதாக எதிர் கொள்ள முடியுமாம்! மலை உச்சியிலிருந்து கீழே குதித்தால் நூறுஆண்டுகள் வாழ முடியும் என்று சொல்வது போல இருக்கிறது இவர்களது ஆலோசனைகள். முதலாளித்துவ சமூக அமைப்பில் நடைபெறும் வர்க்கப் போராட்டத்தில் இந்த அநாகரிகப் பொருளாதார முறை என்பது மூலதனத்தின் கையில் உள்ள ஒரு கருவி. இது இந்தமுறையிலான ஆலோசனைகளைத் தான் வழங்கும். எனவே, இதை நாம் பொருட்படுத்தக் கூடாது.

ஆனால், இன்றைய சூழலில் கவலை அளிக்கக் கூடிய ஒர அம்சம் உருவாகியுள்ளது. அநாகரிகப் பொருளாதாரத்தின் இன்றைய தாக்குதலுக்கு பின்புலமாக இருப்பது உலக வங்கி, சர்வதேச நிதியம் போன்ற ஏபாதிபத்திய நிதி அமைப்புகள். அவை இந்த முயற்சிக்காக ஏராளமான பணத்தை செலவிட்டு வருகிறது. அந்த அமைப்புகள் அது தொடுத்துள்ள பிரச்சாரத்துக்கு இடதுசாரி களிடம் அனுதாபம் காட்டக்கூடிய அறிவு ஜீவிகளும், முற்போக் கான அறிவாளிகளும் கூட பலியாகி இருப்பது கவலை அளிக்கும் விஷயமாகும். வளர்ச்சி என்ற ஒரு சொல்லை பன்னாட்டு கம்பெனிகளுக்கும், உள்நாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கும் தொழிலாளர்களைக் காலில் போட்டு மிதிக்கும் உரிமையை அளித்து விட்டால் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து விடுமாம். உரிமை பறிக்கப்பட்ட தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு உற்பத்தியாளர்கள் நிலைமை முன்னேற்றமடையுமாம். இடதுசாரி சாய்மானம் உள்வர்கள் முதல் நரேந்திர மோடி போன்ற வலதுசாரிகள் அனைவரும் வளர்ச்சி வளர்ச்சி என்று கூக்குரலிடுகின்றனர். தொழிலாளர் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். விவசாயிகள் மற்றும் சிறு உற்பத்தியாளர்கள் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறுபவர்களை வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்றுமுத்திரை குத்தி விடுகின்றனர்.

150 ஆண்டுகளுக்கு முன்னர் கார்ல் மார்க்ஸ் தனது மகத்தான படைப்பாகிய மூலதனம் நூலில் விளக்கியுள்ள அநாகரிகப் பொருளாதாரம் என்ற கோட்பாடு இன்றும் அமல்படுத்தப் படுகிறது. எதிர்பாராத அளவுக்கு வெற்றியும் பெற்று வருகிறது. இந்த அநாகரிகப் பொருளாதாரத்தின் அருவருப் பூட்டும் தன்மையை, அசிங்கத்தை அம்பலப்படுத்த வேண்டியது கார்ல் மார்க்ஸ்க்கு நாம் செலுத்த வேண்டிய கடமையாகும். இப்படிப்பட்ட அநாகரிகப் பொருளாதாரத்தை ஆதரித்து குரல் கொடுப்பவர் நாம் ஆதரிக்கக் கூடிய பிரதமர் என்றாலும் அதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை.