கு.சி.பா என்று நம்மால் அன்போடு அழைக்கப்படும் கு.சின்னப்ப பாரதியின் பேனாவிலிருந்து ஒரு கதை பிறக்கிறது என்றால் அது நிச்சயம் பாட்டாளி வர்க்கத்தின் குரலோடுதான் பிறக்கும். அவரது தாகம் முதல் அண்மையில் வெளிவந்த சுரங்கம் வரை பாட்டாளி வர்க்கத்தின் போர்க்குண முத்திரை பதிந்திருப்பதை படிப்போர் உணர்வர். அத்தகைய சிறந்த படைப்பாளியான கு.சி.பாவின் சுரங்கத் தொழிலாளர்களின் வாழ்வை சித்தரிக்கும் சுரங்கம் என்ற புதினத்தை வாசகர்களுக்கு இங்கே அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறோம்.
மேற்குவங்க நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களின் வாழ்வைக் கருவாக வைத்து ஒரு நாவல் எழுத எப்படி நேர்ந்தது என்பதை குறிப்பிடும் முன்னுரையில், பேனாவை எடுத்ததே பாட்டாளி வர்க்கப் போரை முன்னெடுத்துச் செல்ல உதவுவதே என்று பெருமையோடு கு.சி.பா குறிப்பிடுவதைக் காணலாம். நாவலை படித்து முடித்தவுடன் சொன்னதைச் செய்பவர் கு.சி.பா என்பதை நன்றாகவே உணர முடிகிறது. உழைப்பாளர்களை கதைமாந்தர்களாகக் கொண்டு, அவர்களது வாழ்வை கருவாகக் கொண்ட பிற படைப்புகளுக்கும், புரட்சிகர எதார்த்த பார்வை கொண்ட கு.சி.பாவின் படைப்பிற்கும் உள்ள வேற்றுமைக்கு வர்க்கப்போரை முன்னெடுத்துச் செல்லும் லட்சிய நோக்கமே அடிப்படை என்பதை நாவலை படிப்போரால் நன்றாகவே உணர முடிகிறது.
உழைப்பையும், உழைப்பாளர்களையும் பழகிப்போன பார்வையோடு பார்க்காமல் புதிய சமதர்ம சமத்துவ பண்பாட்டின் ஆக்க சக்தியாக பார்ப்பது என்பது எல்லோருக்கும் சாத்தியமல்ல, சூரியனை பூமி வலம் வருகிறது என்பதை அன்றாட அனுபவத்தால் உணர இயலாது. அந்த எதார்த்தத்தைக் காண, மற்றதோடு தொடர்பு படுத்தித் தேடும் விஞ்ஞான அணுகுமுறை தேவைப்படுகிறது. அதுபோல், பாட்டாளி மக்களின் வாழ்வில் புலப்படாமல் உருப்பெற்று வரும் இந்த புரட்சிகர விழிப்புணர்வைக் காண, விசால மனப் பாங்கும், எதார்த்தத்தைத் தேடும் ஆர்வமும் தேவைப்படுகிறது.
கு.சி.பா எதார்த்தத்தைத் தேடும் குன்றா ஆர்வமும், கடலினும் பெரிய விசால மனப்பாங்கும் கொண்டிருப்பதாலேயே உழைப்பாளிகளின் வாழ்வின் வறுமை, அறியாமை இருளுக்குள் மறைந்து கிடக்கும் சமதர்ம சமத்துவ பண்பாட்டின் ஆக்க சக்தியை தரிசித்திடவும், அதனை நமக்கு காட்டிடவும் முடிந்துள்ளது. சுரங்கம் என்ற நாவலை படிப்போர், ஒரு புதிய அனுபவத்தைப் பெறுவர். நமக்கு எளிதில் புலப்படாத ஒன்றை ஒரு நாவல் மூலம் ஒருவர் காட்டுகிறார் என்றால், நமக்கு மனநிறைவைவிட மனப்பாங்கு உயர்கிற அனுபவத்தைப் பெற முடியும். சுரங்கம் என்ற நாவல் வாசகர்களின் மனப்பாங்கை விசாலப் படுத்துவதில் வெற்றி பெற்று நிற்கிறது. உழைப்பாளர்களையும், உழைப்பையும் உயர்வாகக் கருத வைத்துவிடுகிறது. உழைப்பாளி களின் வறுமையை சித்தரிப்பதில் ஒரு படைப்பு வெற்றி பெறலாம்; இத்தகைய சித்திரங்கள், உழைப்பை நிராகரித்து சுரண்டலைத் தவிர உயர வழியில்லை என்ற மனப்போக்கையே முன்னிறுத்தும் நாம் தினசரி காண்பதென்ன? கோடி கோடியாக மக்கள் நவீன பாட்டாளிகளாக ஆவதும், எல்லா மொழி பேசுவோரும், எல்லா சாதியினரும் ஒரு தொழில் மையத்தில் தேனீக் கூட்டம்போல் திரள்வதும், இதில் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களே பூர்சுவாக்களாக பணக்காரனாக ஆவதும் நம் கண்ணில் பட்டுக் கொண்டே இருக்கும்.
இதில் புதிய சமூக உறவுகளின் ஆக்க நாயகர்களாக பாட்டாளி வர்க்கம் உறுமாறி வருகிறது. இந்தப்போக்கை கண்டு கொள்ளாமல் சிலர் பணக்காரனாக ஆவதை சிலாகித்து எழுதப்படுகின்ற இலக்கியங்களே இன்றைய தமிழ் உலகம் காண்கிறது.
இவைகள் சுரண்டலை விடாமுயற்சியாகச் சித்தரிக்கின்றன. சுயநலம் வாழ்வின் சாதுர்யமாக உயர்த்தப்படுகிறது. ஒரு புதிய சமூகத்தை உருவாக்கிட முடியும். அங்கு சுயநலமும், பொதுநலமும் நாணயத்தின் இருபக்கங்களாகிவிடும் என்பதை நினைத்துக் கூடப் பார்க்கவே முடியாமல் இந்தப் படைப்புகள் தடுத்துவிடுகின்றன.
சில கதைகள், கதாநாயகன் பால்காரன் காதல் லீலைகளுக் கிடையே பணக்காரனாகி நிம்மதியை இழந்து, மீண்டும் நிம்மதியைத் தேடி பால்காரனாக ஆவான் என சித்தரிக்கும். சில கதைகள், சுமை தூக்கி என்பதை காதலியிடம் மறைத்து காதல் சாகசங்களுக் கிடையே பஸ் ஓனராகி உழைப்பிற்கு குட்பை சொன்ன வீரத்தை மெச்சும் இத்தகைய கதைகள் எழுத சிரமப்பட வேண்டியதில்லை. கற்பனைக் குதிரையில் சவாரி செய்தால்mபோதும். ஆனால், கு.சி.பாவின் படைப்பு முற்றிலும் மாறுபட்டது.
நிலக்கரி சுரங்கத்தை நம்பி வந்த மானுட ஜீவன்களின், ஆசாபாசங்களையும், விழுந்து எழுந்த அனுபவங்களையும் கூறிடும் காவியமாகும். கிராமப்புற வறுமை துரத்த சுரங்கக் குழிக்குள் விழுந்த இந்த உழைப்பாளிகள் பிரமைகளிலிருந்து விடுபடுவதும், சங்க உணர்வை பெறுவதும், மிக நேர்த்தியாக, மிக இயல்பாக கு.சி.பா சித்தரிக்கிறார். சுருக்கமாகச் சொன்னால், ஆபத்துக்களையே உடன் பிறப்பாகக் கொண்ட சுரங்கத் தொழிலாளியின் ஆன்மாவைத் தரிசிக்க வாசகனுக்கு உதவுகிறார். இந்த நாவலை, கு.சி.பா கற்பனைக் குதிரையில் சவாரி செய்து எழுதவில்லை. இவரது முயற்சியை ஒரு தாயின் பிரசவ வேதனையோடு தான் ஒப்பிட முடியும். முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிடுகிறார்:
நான் முதலில் தன்பாத்திலும், ஜாரியாவிலும் பின்னர் அசன் சால் பகுதியிலும் சென்று தங்கி எண்ணுறு முதல் ஆயிரத்து நூறு அடி வரை ஆழம் கொண்ட சுரங்கங்களுக்குள் சென்று, தொழில் நுணுக்கங்களையும், தொழிலாளர்கள் படும் சிரமங்களையும், வேதனைகளையும் கற்றரிந்தேன். நான் வங்கத் தொழிலாளர் களிடமும், இந்தியத் தொழிலாளர்களிடமும் பேசிப்பழகி, விவாதித்து அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள பன்மொழி அறிஞரும், எனது ஆத்மார்த்த குடும்ப நண்பரும், எழுத்தாளருமான கல்கத்தா எஸ்.கிருஷ்ண மூர்த்தி அவர்கள் பெரும் துணை புரிந்தார். (பக்கம் 6)
தான் எழுதப் போகும் நாவலில் எதார்த்தங்கள் பிரதிபலிக்கும் பொழுது தான் வாசகன் நெஞ்சைத் தொடும். படித்துவிட்டு மறந்துபோகாமல் கதையை அசைபோட வைக்கும் என்பதால் சிரமப் படுகிற அபூர்வ படைப்பாளியாக கு.சி.பா வை நம்மால் பார்க்க முடிகிறது. காப்பி அடிச்சு வைச்சேன், கயிறு திரிச்சி வச்சேன் என்று தானே இன்று பல எழுத்தாளர்கள் உள்ளனர்.
20ம் நூற்றாண்டில், சுரங்கத் தொழில் உருவாகி தனியார் சுரண்டலின் அமைப்பாக உருவான கதையை இந்த நாவல் சித்தரிக்கிறது. சொல்லப்போனால், இது ஒரு வரலாற்றை கூடாக வைத்துப் பின்னப்பட்ட கதை. மிகுந்த சிரமங்கள், மனவேதனைகள் ஆட்பட்டு ஒவ்வொரு கதாபாத்திரமும் எதார்த்தத்தை பிரதிபலிக்க வைத்திருக்கும் நேர்த்தியை படிப்போர் பாராட்டுவர். நவீன பாட்டாளி வர்க்க உணர்வு உருவாகும் சிக்கலான ஆக்கத்தை வாசகர்கள் அறிய வேண்டும் என்பதற்காக அவர்பட்டபாட்டை முன்னுரையில் அவரே குறிப்பிடுகிறார்.
கதைக்கு கருவாக உருவாக்குவதற்கான தொழிலாளர்களின் ஆன்மாவை தரிசிக்க என்முன் நிலவிய மொழித் தடையை தகர்த்து உதவிய என் ஆருயிர் நண்பர் கல்கத்தா எஸ்.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி கூறிக் கொள்வது எனது ஆத்மார்த்த கடமையாகக் கருதுகிறேன்.. (பக்கம் 11)
தொழிலாளர்களின் ஆன்மாவைத் தரிசிக்க என்ற சொற்றொடர், நாவலைப் படித்து முடித்தபின் விசுவரூபம் எடுத்து நம்மை ஆட்டிவிக்கிறது. காரணம் கதையின் முடிவு அப்படி. கதையின் முடிவு ஒர சோக இழையோட நம்மை உலுக்கிவிடுகிறது. படிக்கிற பொழுது உருவாகும் அந்த சோகம் புத்தகத்தை மூடிய பிறகு, கதையின் நிகழ்வுகள் எதார்த்தமாக நிகழ்ந்த ஒரு நிகழ்வை நினைவூட்டி விடுகிறது. அந்த விபரங்கள் மனதிலே தோன்றத் தோன்ற சோகம் கோபமாகிவிடுகிறது.
1975 ம் ஆண்டில் சாஸ்நாலா என்ற இடத்தில் நடந்த சுரங்க விபத்தில் 400க்கும் மேறப்ட்ட தொழிலாளர்கள், சுரங்கத்திற்குள்ளேயே நீரால் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். அவசர காலமாக இருந்ததால், இந்த விபத்தைப் பற்றிய பல விபரம் அன்று தெரியாமல் போனது. பின்னர் ஆளுவோர் மறந்துவிட்டனர். இன்று வரை உயிரிழந்த சுரங்கத் தொழிலாளியின் குடும்பத்திற்கு நிவாரணம் கிடைக்கவில்லை அல்லது ஏமாற்றப்பட்டனர். சுரங்க விபத்துக்களைத் தடுக்க எந்த முயற்சிகளும் இன்று வரை சீராக இல்லை. சாஸ்நாலா சுரங்க விபத்தும், போபால் விஷவாயுக் கொலையும் மக்கள் மறக்கவொன்னா நிகழ்வுகளாகும். அந்த கொடூரமான சுரங்க விபத்தை கதைக்குள் கொண்டு வந்து, கு.சி.பா நம்மை உலுக்கி விடுகிறார். சுரண்டல் மீதும், அடக்குமுறை மீதும் உழைப்பை அவமதிப்போர் மீதும் கோபம் கொள்ளவைத்து விடுகிறார். இந்த நாவலுக்கு பல சிறப்புகள் உண்டு. நிலக்கரிச் சுரங்கத்தை நம்பி வாழும் உழைப்பாளர்களின் வாழ்வை உள்ளதை உள்ளபடி கூறி நெஞ்சை நெகிழ வைக்கும் கதை அம்சம் கொண்டது. வெறும் கதையல்ல, ஒரு வரலாற்றைக் கூறி அது முடிவுறவில்லை தொடர் கிறது என்று வர்க்கப் போரைத் தீவிரப்படுத்தத் தூண்டும் கதையாகும்.
பாட்டாளி வர்க்கத்தின் உதயமும், மூலதனத் திரட்சியும் எல்லா நாடுகளிலும் உருவாகிற பொழுது அடக்கு முறையும், சுரண்டலும் பொது அம்சமாக இருக்கும். ஆனால், இந்த ஆக்கம் நாட்டிற்கு நாடு ஒன்றுபோல் நடக்கவில்லை.
அதாவது இங்கிலாந்து நாட்டில் பாட்டாளி வர்க்கம் உருவான வரலாறு வேறு, இந்தியாவில் பாட்டாளிவர்க்கம் உருவாகி வரும் வழிவேறு. அதுபோல் பாட்டாளி வர்க்க விழிப்புணர்வு என்பது போராட்டங்களால் உருவாக்கப்படுவதால் தொழிற்சங்க உணர்வாக முளைத்து, பாட்டாளிவர்க்க அரசியல் விழிப்புணர்வாக உயர்கிற வழியும் ஒன்றுபோல் இல்லை. துவக்கத்தில் ஆத்திரப்படும் தொழிலாளி, அடங்கிப் போகும் தொழிலாளி என்ற இரண்டு ரகமாக தொழிலாளர்கள் பிரிந்து கிடக்கிறார்கள். இறுதியில் அரசியல் அதிகாரத்தை நிர்வகிக்கும் ஆற்றல்படைத்த அமைப்பை உருவாக்கும் உணர்வாக, அரசியல் படையாக உயர்வது என்பது லேசுப்பட்ட நிகழ்வல்ல, அது ஒரு வரலாற்று ஆக்கம், காலத்தால் அளவிட இயலாது. போராட்ட களங்களால் தான் பரிணாம வளர்ச்சி அடையும். பாட்டாளி வர்க்க விழிப்புணர்வு தானாக வராது போராட்டங்களில் விழுந்து எழுந்த அனுபங்களே விழிப்புணர்வாக பரிணமிக்கிறது. இந்த உண்மைகளை கதைபோல கு.சி.பா சொல்கிறார்.
இங்கிலாந்து நாட்டில் பண்ணை அடிமைகளை வெளியேற்றி நாடோடிகளாக்கி பிச்சை எடுத்தால் 4 துண்டுகளாக வெட்டி எறிய சட்டம் கொண்டு வந்து, வேலைக்கு வரமறுத்தால் சிறைத் தண்டனை என்று சட்டம் போட்டு நிலக்கரி சரங்கத்திலும், ரயில் தொழிலிலும், பின்னர் எந்திரத் தொழிலிலும் உழைப்பாளிகளாக அமர்த்தப்பட்டனர். ஆனால், இப்படி ரெடிமேடாக பண்ணை அடிமைகள் இந்தியாவில் இல்லை. கிராமப்புறத்தை அநியாயமாக சுரண்டியும், காலனி ஆதிக்கத்தின் மூலம், சுயதொழில் செய்பவர்களின் பொருளுக்கு மதிப்பில்லாமல் செய்தும் வறுமையைப் புகுத்தியும் சுரங்கம், ரயில் போன்ற தொழில்களில் ஈடுபடக் கிராம மக்கள் தள்ளப்பட்டனர்.
எல்லா மொழியினரும், எல்லா சாதியினறும் வறுமையின் காரணமாக பாட்டாளிகளாக ஆயினர். சுரங்கம் கதை வடிவில் இருக்கும் ஒரு வரலாற்றுப் பெட்டகம் எனலாம். இந்த நாவலில் சில இடங்களைத் தவிர (கட்டுரைபோல் நகர்கிறது) எழுத்து நடை எளிமையாகவும், சுவை மிக்கதாகவும் அமைந்துள்ளது இதனுடைய சிறப்பாகும்.
நாவலுக்கென எழுத்து நடை என்பது அலாதியானது. பல நடைகளின் கலவையாக இருந்தால் தான் வாசகர் புத்தகத்தை கீழே வைக்க மாட்டார். ஒரு வித எள்ளல் நடை எங்கும் வியாபித்திருக்க வேண்டும், அதேநேரம் வாசகனின் மனதில் உணர்ச்சிகளை கொப் பளிக்கச் செய்ய அதற்குரிய சொற்கள் அமைக்கப்பட வேண்டும்.
கு.சி.பாவின் நடை அத்தகையது. சில இடங்களில் கவிதையின் தரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இதைப் படிக்கிற பொழுது எனது மனதில் தைத்த பல பகுதிகள் உண்டு, அவைகளில் சிலவற்றை மட்டும் கீழே தருகிறேன்.
குடியிருப்பு பொந்து
சங்கொலி கேட்கிறது. வேட்டை நாயின் குறைப்பு சத்தம் கேட்டு பதுங்கிடம் தேட பாய்ந்தோடும் முயலைப்போல தொழிலளர்கள் தங்கள் குடியிருப்பு பொந்துகளிலிருந்து, சுரங்கக் குகைக்குத் தாவித் தாவி நடை பெயர்ந்தனர். (பக்கம் 16).
மன இருள்
மன இருளில் தொழிலாளர்கள் அழுத்தப்பட்டார்கள். அவர்களுக்கு அதிகாரத்தின் மூலம் போதிக்கப்பட்டதெல்லாம் மௌனமாக எதிர் பேச்சின்றி உழைக்க வேண்டும் என்பதும். (பக்கம் 23)
அறிவுக்கண் மூடிய நிலையில்
அடபைத்தியமே! இதொரு பெரிய விசயமா? நம்ம பக்கத்து சுரங்க மொதலாளியோட பொண்ணுகளும், மந்திரியோட பொண்ணு களும் கல்யாணம் முடியிரவரையிலும் நம்ம வீட்டிலே தான் இருக்கப்போராங்க. நம்ம பொண்ணு மாதிரி இங்கிலீசுப் பள்ளிக் கூடத்திலே படிச்ச பொண்ணுங்க, எல்லோரும் இங்கீலிசு பேசறது எவ்வளவு மதிப்பாகவும், பெருமையாகவும் இருக்கும். நம்ம சொந்த பந்தங்கள் பேசற தொத்தல் மொழியே நம்ம மகளும் பேசினா மதிப்பாவா இருக்கும்? என்றான். அவளால்இனி எதுவும் எடுத்துக் கூற முடியாது. பணத்தின் மோகமும், அதனால் ஏற்படும் உறவும் அறிவுக்கண்களை மூடச் செய்த விட்டன (பக்கம் 53)
இந்த உணர்வு, அந்த உணர்வாக மாறுமா?
சுரங்கத்தில் மாண்டுவிட்ட இரண்டு குடும்பங்களில் ஒன்றைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் கைக்குழந்தையுடன், தகப்பனார் வீடு சென்றுவிட்டாள். இரண்டாமவளுக்கு சொல்லிக் கொள்ள உற்றார் உறவினர் என்று எவருமில்லை. மூன்று சிறு குழந்தைகள்… திக்கற்றவர்களுக்கும், வக்கற்றவர்களுக்கும் சாவுதானே தெரிந்த மார்க்கம். அமைதியாய் வெறிச்சோடிக் கிடந்த அந்த கிராமத்தில் சந்திரனின் பனி மூட்டம் நிறைந்த மங்கலான வெளிச்சத்தில், வீடுகள் சோம்பேறி நாய்களைப் போல் முனகிக் கொண்டிருந்த வேளையில் அவள் அந்தமுடிவை எடுத்தாள். விஷத்தன்மை கொண்ட பச்சிலையை அரைத்து குழந்தைகளும், தானுமாய்க் குடித்துவிட்டு அமைதி அடைந்தார்கள்…
நிர்வாகம் கண்டு கொள்ளவே இல்லை. தொழிலாளர்களே எவ்வித சடங்குமின்றி செத்துவிட்ட நாய்களை எடுத்துப் போடுவது போல குழி தோண்டிப் புதைத்து விட்டு வந்தார்கள்.
முதன் முறையாகத் தொழிலாளர்களின் மத்தியில் முனமுனப்பு கசியத் துவங்கியது. ஒவ்வொன்றுக்கும் விதிப்பயனைக் கூறி வந்தவர்களுக்கு இப்பொழுது விதியின் கர்த்தாவான படைத்தவனை கரித்துக் கொட்டத்துவங்கினர். (பக்கம் 69)
பிகாஸின் சிந்தனைப் போராட்டம் வேலை ஏற்பதா, நிராகரிப்பதா என்று பிகாஸ் சௌத்திரி யோசனை செய்தான். அவனளவில் வேலை வாழ்வாதாரத்திற்கான ஒன்றாகக் கருதப்படவில்லை. குடும்பப் பொறுப்பு மேற்கொள்ளாத பிரம்மச்சரிய தொழிற்சங்கப் பணியில் ஈடுபடுத்திக்கொள்ள விரும்பினாள். ஆனால், குழுமையான தொழிற்சங்க உணர்வும், அரசியல் போதமும் உருவாகும் வரை அவர்களுடன் சுரங்கத் தொழிலாளியாக வேலை செய்வதே பயத்தை நீக்கி நம்பிக்கையை உருவாக்கும் எனக் கருதினான். (பக்கம் 22)
கதைக்குள் கதை மேடிட்ட கன்னத்து எலும்புகள் சற்று அழுந்திய மூக்கு பனைநார் துடைப்பான் போல் சிலிர்த்த தலைமுடி, குள்ளமான உருவமைப்புக் கொண்ட ஒரு தொழிலாளி சம்பளத்தை வாங்கிக் கொண்டு வெளியே வந்தான். தோளில் கிடந்த துண்டை எடுத்து முகத்தைப் பரவலாகத் துடைப்பவன் போல முகத்தை மறைத்துத் தப்பிவிடும் நோக்கில் வேகமாக நடந்தான். குளக்கரையில் தவங்கிடந்து காத்திருக்கும் கொக்கு, மீனின் சலனம் கேட்டவுடனேயே தனது நீண்ட அலகால் கௌவ முயல்வது போல் காத்துக்கிடந்த மளிகைக் கடைக்காரன் ஓடிச்சென்று அவன் சட்டைப் பையில் கைவிட்டு இருப்பதைத் துழாவி எடுத்துக் கொண்டான். இதையறிந்த, கவனக்குறைவில் சற்று பின் தங்கிவிட்ட மற்ற கடன்காரர்கள் அவனைச்சுற்றி மொய்த்தனர். ஆனால், அவன் பை காலியாக இருந்தது. ஏமாந்துவிட்ட சாராயக் கடைக்காரன் கேட்டான்.
ஏன்டா! எல்லாக் கடன் காரர்களுக்கும் ஆளுக்கு கொஞ்சமாக பிரிச்சுக் கொடுத்திருக்கலாமே? பேயறைந்தவன்போல் விழி பிதுங்கி நின்றவன் தன்னைச் சற்று சமாளித்துக்கொண்டு, இந்த மாசம் ஒடம்பு சரியில்லாமே பாதி நாளு வேலைக்குப் போகலே. போயிருந்தாவெளியிலே எந்தப் பாக்கியும் இல்லாமே கொடுத்திட முடிஞ்சிருக்கும். பாதிச்சம்பளந்தா கெடைச் சது. எல்லோருக்கும் பாதி பாதி கொடுத்துடலான்னுதா நெனச்சிந்தே. ஆனா மளிகைக் கடைக்கார அண்ணனே முழுதும் புடுங்கிக் கிட்டு போயிட்டாரு. இந்த மாசம் குடும்பச் செலவே எப்படி சமாளிக்கிறதுன்னே தெரியலே என்றான்.
பெரும்பாலான தொழிலாளர்களுக்கு வீட்டில் உணவு சமைக்கத் தேவையான பொருட்கள் இருக்கின்றனவோ இல்லையோ, சாராயக் கடைக்கு செலவு செய்வதற்கு மட்டும் கவலைப்பட மாட்டார்கள். மேலும் சாராயக் கடன் இல்லை என்று கூறிவிட்டால் போதும் அவர்கள் எப்துபடியாவது பணம் தேடிக்கொடுத்து விடுவார்கள் என்பது அவனுக்குத் தெரியும். அந்தத் தைரியத்தில் துரும்பு பட்ட கண்ணைப்போல் துன்பத்தைக் கொடுக்கிற. உன்னை நான் லேசிலே விடமாட்டேன். பணமில்லாமே கடைப்பக்கம் வந்து டாதே என்றான்.
அண்ணே! வேலை முடிஞ்சா உங்க கடை தானே எனக்கு ஆறுதல் தரக்கூடியது. இப்படிச் சொல்லாதீங்கணே. எப்படியும் அடுத்த மாதம் குடுத்துடறேன் என்று கால்களைப் பிடித்துக் கொண்டான். (பக்கம் 87)
தமிழ் இலக்கியத்திற்கு ஒரு பரிசு
சுரங்கம் என்ற நாவல், தமிழ் இலக்கியத்திற்கு கிடைத்த சிறந்த பரிசாகும். பொது வாழ்வில் ஈடுபடுகிற எவரும், வாழ்வைப் பற்றியும், வரலாற்றைப் பற்றியும் சரியாகத் தெரிந்து கொள்ள இந்த நாவல் அதன் வழியில் உதவுகிறது. அனைவர் கையிலும் தவழ வேண்டிய நூல். சிறப்பான கெட்அப்பில் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.
சுரங்கம்
ஆசிரியர் : கு.சின்னப்ப பாரதி
விலை : ரூ. 90
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
விற்பனை மையம் : 7, இளங்கோ சாலை, தேனாம் பேட்டை, சென்னை – 18.