வனங்களைப் பாதுகாக்க வேண்டியது தான். ஆனால் அது யாருக்காக? மனிதனுக்காகத் தானே? அவனை அழித்தொழித்த பிறகு வனத்தைப் பாதுகாப்பதன் பொருள் என்ன?… அரசாங்க அதிகாரத்தையும், ஏராளமான நிலங்களையும் வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டும் தான் வாழ்க்கையா?
– ஏ.கே.கோபாலன்
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியேற்றதும், குறைந்த பட்ச திட்டத்தில் எஸ்.சி., எஸ்.டி என்ற பகுதியில் பழங்குடி மக்களையும், வனம் சார்ந்து வாழும் சமூகங்களையும், வனங்களிலிருந்து வெளியேற்றுவது நிறுத்தப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. 2006 ஜூலை மாதம் 22 ம் தேதி ஐ.மு., இடதுசாரி ஒருங்கிணைப்புக் கூட்டத்திலும் சி.பி.எம். பழங்குடி மக்கள் மசோதா தொடர்பான தனது கருத்துக்களை வலியுறுத்தியுள்ளது. பழங்குடி அல்லாத வனம்சார் மக்களையும் மசோதாவின் வரம்புக்குள் கொண்டு வருவது, கட் ஆஃப் ஆண்டை 1980 லிருந்து 2005 என விஸ்தரிப்பது, 2.5 ஹெக்டேர் என்ற உச்ச வரம்பை நீக்குவது மற்றும் பயனாளிகளை கிராம சபைகளையே தேர்ந்தெடுக்கச் சொல்வது என 4 முக்கியமான விஷயங்களை வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் கூட எழுதப்பட்டுள்ளது. (Peoples Democracy, September 3, 2006. பக்கம் 7) வனங்களையும், இயற்கை வளங்களையும் தனியார் வசமாக்குவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன் அங்கே வசிக்கும் மக்களின் வாழ்வாதாரங்களும் பறிக்கப்படும் என்பதும், இடதுசாரிக் கட்சிகள் சார்பில் வனங்கள், சுற்றுச்சூழல் அமைச்சரகத்திற்கு தெளிவு படுத்தப்பட்டுள்ளது (Peoples Democracy, Sep. 24, 2006, பக்கம் 5)
நாடு முழுவதும் பழங்குடி மக்களும், வனம் சார்ந்த சமூகங்களும் எதிர் கொண்டுள்ள பிரச்சனைகள் ஏராளம். சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் இடதுசாரிகளின் நிலைபாடு என்ன? பழங்குடி மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்க சி.பி.எம். போன்ற இடதுசாரிக் கட்சிகள் / அரசுகளின் நிலைபாடு என்ன? என்னென்ன திட்டங்களை இடதுசாரி அரசுகள் குறிப்பாக திரிபுரா, மேற்குவங்க அரசுகள் மேற்கொண்டுள்ளன? இப்படி பல கேள்விகளுக்கு விடைகாண படிக்க வேண்டியதொரு நூல் சுற்றுச் சூழலும் வாழ்வுரிமையும் பழங்குடி மக்கள் : சமகால விவாதமும் எதிர் காலத் திட்டமும் ஆகும். அர்ச்சனா பிரசாத் அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட “Environmentalism and the Left Contemporary Debates and Future Agendas in Tribal Areas” என்ற நூலை லெஃப்ட் வேர்டு புக்ஸ் வெளியிட்டது. தமிழில் சஹஸ், முரளி, சாமி ஆகிய மூவரால் மொழி பெயர்க்கப்பட்டு, பாரதி புத்தகாலயம் வெளியிட் டுள்ளது. இன்று பழங்குடி மக்கள் இனச் சான்றிதழ் பெறுவதி லிருந்து, பட்டா இன்றி, வாழ வழியின்றி வெளியேற்றப்படுவது என்று அன்றாடம் நிறைய பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். பொதுச் சொத்துக்கள் மறைந்து விட்டன. வருவாய் காடுகள் ரிசர்வ் காடுகளாக இஷ்டம் போல் மாற்றப்படுகின்றன. இந்த நூலில் வட இந்திய பகுதிகளில், குறிப்பாக இயற்கை வளங்கள் கொழிக்கும் ஜார்கண்ட், உத்தராஞ்சல், சத்தீஸ்கர் மற்றும் பழங்குடி மக்கள் அதிகம் உள்ள ஒரிசா, மத்தியப்பிரதேச நிலைமைகள் விளக்கப்பட் டுள்ளன. தவிர, சுற்றுச்சூழல் தொடர்பாக இடதுசாரிகள் பார்வை எப்படி உள்ளது என்பதும் நூலில் விவாதத்திற்குட்படுத்தப் பட்டுள்ளது.
பொதுவாக, சுற்றுச் சூழல் என்று பேசுகையில் காற்று, நீர், ஒலி மாசு, அதிகரிக்கும் வெப்பம் பற்றித்தான் பேசப்படுகிறது. ஆனால், காலங்காலமாக இயற்கையை குறிப்பாக, வனம் சார்ந்த வாழ்க்கை முறையை பின்பற்றும் பழங்குடி மக்களின் வாழ்வு அரசு கொள்கை களால் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகின்றது என்பதைப் பற்றி இடதுசாரிகளைத் தவிர, வெறும் சிலரே அக்கறை கொண்டுள்ளனர். 1973 ல் நடந்த சிப்கோ இயக்கம் வரலாற்றில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சுற்றுச்சூழல் இயக்கமென்பது வளர்ச்சி பற்றிய விவாதத்தில் வாழ்வு ரிமை மற்றும் சுற்றுச் சூழலை பாதுகாப்பதற்காக ஆங்காங்கே நடைபெறும் தொடர் போராட்டங்கள் மற்றும் மோதல்களைக் குறிக்கும் ஒரு பொதுவான பதமாகும் என ஆசிரியர் முன்னுரையிலே குறிப்பிட்டுள்ளார்.
பழங்குடியினரும், நிலப்பிரச்சனையும் என்ற அத்தியாயத்தில், நிலச்சீர்திருத்தம், நில ஆக்கிரமிப்பு ஆகியவற்றில் இடதுசாரி களின் நிலை விளக்கப்படுகிறது. காந்திய சுற்றுச்சூழல் வாதிகளும், இடதுசாரிகளும், நவீன வளர்ச்சித் திட்டங்களும், வணிகமயமாகும் விவசாயமும் பழங்குடி மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதிக்கின் றன என்பதை ஏற்கின்றனர். தங்கள் நிலங்களிலிருந்து அந்நியப்படு கின்றனர் அம்மக்கள் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை என்று கூறும் நூலாசிரியர், பிரிட்டிஷார் ஆட்சியில் நிலவருவாய் சட்டங் களின் விளைவுகளை விளக்குகிறார். இடதுசாரிகளைப் பொருத்த வரை, மேற்குவங்கம், திரிபுரா, கேரளா ஆகிய மாநிலங்களில், நிலச்சீர்திருத்தம் நன்கு அமலாக்கப்பட்டுள்ளது. 1940 களிலேயே திரிபுராவிலும், ஆந்திராவிலும் நடத்தப்பட்ட விவசாயிகள் போராட் டத்தை நூலாசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார். உழுபவனுக்கே நிலம் என்ற கோஷத்தை வைத்து இடதுசாரிகள் போராடினர். திரிபுராவில் ஜீமியா மக்கள் நில உரிமைகளுக்காகப் போராடியது குறிப்பிடத் தக்கது. 1990 களில் அகில இந்திய விவசாய சங்கம் பழங்குடி மக்களின் நில உரிமைகளுக்கான போராட்டத்தை நடத்துகையில், பல்வேறு முக்கியக் கோரிக்கைகளை வைத்தது. இந்தக் கோரிக்கைகள் பழங்குடி மக்களின் பிரத்யேகப் பிரச்சனைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டன. நூலாசிரியர் மேற்கு வங்கத்தில் 1977 முதல் 2001 ம் ஆண்டு வரை கையகப்படுத்திய 1.4 மில்லியன் ஹெக்டேர் நிலத்தில் 56 சதம் தலித்துகளுக்கும், பழங்குடியினருக்கும் வழங்கப்பட் டுள்ளது. பயனாளிகளில் 18 சதம் பழங்குடியினர் என்றும், 37 சதம் தலித்துகள் என்ற புள்ளி விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதே நேரம், பயனாளிகள் மாநிலத்தில் உள்ள பழங்குடியினரில் 10 சதம் மட்டுமே என்றும், பழங்குடியின மக்களின் தேவைகள் பூர்த்தி செய்ய விவசாயம் அல்லாத மற்ற வாய்ப்புகளைப் பரிசீலிப்பது அவசியம் என்றும் குறிப்பிடுகிறார். கூடவே, நிலச் சீர்திருத்தம் மூலமாக பழங்குடிகள் நீடித்த, வளமான விவசாயச் சமூகமாக நிலைபெற இடதுசாரி இயக்கத்தின் பார்வையில் மேலே கூறப்பட்டது தொடர்பாக மாற்றம் தேவையென சுட்டிக் காட்டுகிறார்.
பழங்குடியினர் ஆக்கிரமிப்பாளர்களாக எவ்வாறு சித்த ரிக்கப்படுகின்றனர் என்பதை விவரித்துள்ள ஆசிரியர், மாநில வாரியாக, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள் எவ்வளவு என்ற பட்டியலையும் தந்துள்ளார். 1980 ல் இயற்றப்பட்ட வன (பாதுகாப்பு) சட்டத்தின் முக்கியத்துவமும் தரப்பட்டுள்ளது. பழங்குடி மக்களின் வாழ்க்கை வனம் சார்ந்ததாக இருப்பதால், அவர்களை ஆக்கிரமிப்பாளர் எனச் சித்தரிப்பது தவறு என்று இடதுசாரிகள் கூறுகின்றனர். 2002 ல் சி.பி.ஐ(எம்) ராஞ்சியில் நடத்திய மாநாடு, வன வளங்கள் மீதும், நிலங்கள் மீதும் பழங்குடிகளுக்கு உள்ள உரிமைகளை யாரும் பறிக்க முடியாது என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளது. இடதுசாரிகள் முன் வைத்த மற்ற சில முக்கிய கோரிக்கைகளும் பழங்குடி மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. நூலாசிரியர் காந்தியவாத சுற்றுச்சூழல் அமைப்புகளின் நிலைபாட்டையும் விளக்கியுள்ளார். இதனால் இருவேறு புரிதல்கள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. இடதுசாரிகள் நீடித்த விவசாய உற்பத்தி, விவசாயம் சாரா வேலை வாய்ப்புகளில் கவனம் செலுத்தி, தீர்வு காண முயல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
பழங்குடியினரின் வாழ்க்கை முறையும், வேளாண்மை நெருக்கடியும் என்ற அத்தியாயத்தில் தற்போதைய சூழல் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. விவசாயிகளின் தற்கொலை, இடு பொருள் விலை உயர்வு, தாராளமயம் ஏற்படுத்தியுள்ள மோசமான விளைவுகளை நன்றாக விளக்கியுள்ளார். நிலப்பயன்பாடு பற்றி விளக்கும் போது, சுழற்சி முறை பயன்பாட்டை இடதுசாரிகள் ஏற்கவில்லை என்கிறார். பழங்குடியினர் விவசாயத்தில் உள்ள பிரச்சனைகளைத் தீர்க்க புதிய வழிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டுமென்றும, திரிபுரா அனுபவம் எடுத்துக்காட்டாக உள்ள தென்று எழுதியுள்ளார். வந்தனா சிவா போன்றவர்களின் வாதங்களும் முன் வைக்கப்பட்டுள்ளன. இடதுசாரிகள் பசுமைப் புரட்சியைக் கண்மூடித்தனமாக ஆதரிக்கவில்லை. உணவு உற்பத்தி அதிகரிக்கக் காரணமாக இருந்த பசுமைப் புரட்சி, ஏற்றத்தாழ்வு களை அதிகரிக்கச் செய்தது என்பது தான் உண்மை. வந்தனா சிவா போன்றோர், பசுமைப் புரட்சியை கடுமையாகச் சாடுகின்றனர். இடதுசாரிகளின் நிலைபாட்டிற்கும் மற்ற சுற்றுச் சூழல் இயக்கத்தி னரின் நிலைபாட்டிற்கும் உள்ள வேறுபாட்டை நூலாசிரியர் நன்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த அத்தியாயத்தில் புனல் காடு விவசாயம் மற்றும் ரப்பர் விவசாயம் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது. திரிபுரா, கேரளா மாநில அனுபவங்கள் தரப்பட்டுள்ளன. புனல்காடு விவசாயம் தாக்குப்பிடிக்கக் கூடிய முறை என்பதை இடதுசாரிகள் ஏற்க வேண்டும் என ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். (புனல் காடு விவசாயம் என்பது சுழற்சி முறையில் மாறி மாறிப் பயிரிடும் முறை) சுழற்சி முறை விவசாயம் பழங்குடியினருக்கு பொருளாதார ரீதியில் உதவும் என்பது அவர் கருத்து.
பல வட மாநிலங்களில் விவசாயிகளின் பட்டினிச்சாவுகள், காரணங்கள், தீர்வுகளை விளக்கி, பெரிய கம்பெனிகள் விவசாயத் துறையில் நுழைவது எந்த அளவு பிரச்சனைகளை உண்டாக்கும் என்பதையும் எடுத்துரைக்கிறார் நூலாசிரியர். குறிப்பாக, பணப் பயிர்களுக்கு மாறியதால், வெளியிலுள்ள பெரு விவசாயிகள் பழங்குடியினரின் நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கிய சம்பவம் நிறைய இடங்களில் நடந்துள்ளது. குடிபெயர்தல் பிரச்சனையை ஆழமாக விவாதித்துள்ளார். (பக்கம் 57) இதில் வடமாநிலங்களின் அனுபவம் விளக்கப்பட்ட போதிலும், அதை தமிழகச் சூழலுக்கு அப்படியே பொருத்திப்பார்க்க இயலும். பருவகால குடிபெயர்தல் என்பது காலம் காலமாக உள்ளது தான். ஆனால், நெருக்கடி காரணமாகக் குடிபெயர்வது என்பது கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்துள்ளதென்பது நாம் இந்தியா முழுமையிலும் காண முடியும். நூலாசிரியரும் இதையே தெளிவுபடுத்தியுள்ளார்.
பழங்குடியினர், காடுகள், உலகமயம் என்ற அத்தியாயம் பழங்குடியினரின் உரிமைகள், அத்து மீறல்கள், போராட்டங்களை விளக்குகிறது. காடுகளைப்பற்றி அரசின் பார்வை எப்படியுள்ளது? பழங்குடி மக்களின் நன்மைகளைப் பாதுகாக்கும் விதத்தில் காடுகள் மீதான அரசின் கட்டுப்பாடு என்பது இருக்க வேண்டுமென இடதுசாரிகள் கருதுகின்றனர். இதையொட்டி இரண்டு கருத்தோட்டங்கள் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளை ஆசிரியர் விளக்குகிறார். 1). மேற்கத்திய நவீன கருத்தோட்டம் 2). பழங்குடிகளின் பழமையான கருத்தோட்டம் என விளக்கும் போது, வனவிளைபொருட்கள் எப்படி சிறியவை, பெரியவை எனப் பிரிக்கப்பட்டு, அரசாங்கம் சிறியவை மீதான தனது கட்டுப்பாட்டை அதிகரித்தது என்று தெளிவுபடுத்தியுள்ளது பயனுள்ளதாகும். மத்தியப்பிரதேசம், பீகார் மாநிலங்களில் இயற்றப்பட்ட சட்டங்கள் வனப் பொருட்களைச் சுரண்டவே உதவியது என்பது குறிப்பிடத் தக்கது. ஏராளமான எடுத்துக்காட்டுகள் தரப்பட்டுள்ளன. காடுகளை யார் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது? என்ற கேள்விக்குப் பதிலாக, மேற்கு வங்க அரபாரி பரிசோதனை விளக்கப்பட்டுள்ளது. கூட்டு வன மேலாண்மைத் திட்டம் மூலம் மேற்கு வங்கத்தில் முதல் 15 ஆண்டுகள் வனத்துறைக்கும், மக்களுக்குமிடையே நம்பிக்கையை வளர்த்து, முறைப்படி பலன்களை இருதரப்பினரும் பங்கிட்டுக்கொள்ள உதவியது. இந்தப் பரிசோதனை தனித்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது என்று குறிப்பிடும் ஆசிரியர், அதன் பிரச்சனைகளையும் கோடிட்டு காண்பித்துள்ளார்.
வளர்ச்சியும், புலம் பெயர்க்கும் அரசியலும் என்ற அத்தியாயத்தில் நவீன வளர்ச்சியின் பலன்கள், பிரச்சனைகள், அதன் பின்விளைவுகள், அதில் அடங்கியுள்ள அரசியல் போக்குகளை விளக்குகிறது. நர்மதை அணைப்பிரச்சனையிலிருந்து துவங்கி, தொழிற்சாலைகள் போன்றவை பழங்குடி மக்களை எப்படிப் பாதிக்கிறது என்றும், இதை இடதுசாரிகள் எப்படிப் பார்க்கின் றனர் என்பதையும் விளக்குகிறது. குறிப்பாக, புலப் பெயர்ச்சி – மறுவாழ்வுப் பிரச்சனையில் இடதுசாரிகளும், சுற்றுச் சூழல் வாதிகளும் ஒரே நிலையை எடுக்கின்றனர். கேரளத்தில் அமைதிப் பள்ளத்தாக்கு விஷயத்தில், கே.எஸ்.எஸ்.பி. யின் போராட்ட நடவடிக்கை இடதுசாரிகள் மத்தியில் நவீன வளர்ச்சித் தன்மை பற்றிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்கிறார். ஆனால், நர்மதா திட்டத்திற்கெதிரான போராட்டங்களுக்கு இடதுசாரிகள் அளிக்கும் ஆதரவு, பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றி அக்கறை காட்டுகின்றனர் என்பதைத் தெளிவாக்குகிறது. நர்மதை அணைப் பிரச்சனையை விளக்கி, இதில் இடதுசாரிகளின் நிலைபாட்டையும் நூலாசிரியர் விளக்கியுள்ளார். சி.பி.ஐ.(எம்) கட்சி 1992 ல் எடுத்த நிலை என்ன என்பதுடன், 2002 ல் கட்சி உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த பின் முன்வைத்த கோரிக்கைகள் (பக்கம் 87) விரிவாகத் தரப்பட்டுள்ளன. இந்த விளக்கங்கள் கட்சியின் நிலைபாட்டைப் புரிந்து கொள்ள உதவுகிறது.
இந்திய ஜனநாயகத்தில் பழங்குடியினர் என்ற அத்தியாயம் சுதந்திரத்திற்கு முன்பும், அதற்குப் பின்பும் இந்திய அரசின் அணுகுமுறை எப்படி இருந்தது என்பதை விளக்குகிறது. குறிப்பாக, நேருவின் பார்வை பற்றி எழுதப்பட்டுள்ளது. தவிர, ஆதிவாசிகளுக்கு திட்டங்களில் எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதும் பட்டியலிடப்பட்டுள்ளது. ஒதுக்கீட்டில் பெரும் பகுதி கல்விக்கும், சமூகப் பணிகளுக்குமான மானியங்களாகும் என்பது குறிப்பிடத் தக்கது.
பழங்குடி மக்களுக்கான முதல் அமைப்பை 1948 ல் பிளவுபடாத இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் துவக்கியது. அவர்களுக்கான கூட்டுறவு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட சுயாட்சி கவுன்சில்களினால், பழங்குடி மக்களின் விழிப்புணர்வு அதிகரிக்கும் என்றும், அவர்கள் முன்னேற வழி வகுக்கும் என்றும் இடதுசாரிகள் கருதினர். அதை வலியுறுத்திப், போராடி 1982ல் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 7வது அட்டவணையின் கீழ் மாவட்ட சுயாட்சிக் கவுன்சில் அமைக்கப்பட்டது. இந்த கவுன்சிலர் கள் சிறப்பாகச் செயல்பட முடியுமென்பதற்கு திரிபுரா சிறந்த எடுத்துக்காட்டாகும்.
பின்னுரையில் நூலாசிரியர் மூன்று முக்கிய சவால்களைச் சுட்டிக்காட்டுகிறார்.
- புதிய பொருளாதாரக் கொள்கை – உலகமயம், தனியார்மயம், தாராளமயம் ஆகியவற்றின் விளைவாக, அசமத்துவ வளர்ச்சி ஏற்பட்டுள்ளதை இடதுசாரிகள் வலியுறுத்துகின்றனர்.
- பிளவுவாதம், வகுப்புவாதம் – இதற்கெதிரான போராட்டங் களை இடதுசாரிகள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதில் சுற்றுச்சூழல் இயக்கத்தினர் சிலர் இணைந்த போதிலும், பகுகுணா போன்றோர் தங்கள் நிலைபாட்டிற்கு ஆதரவைத் தேட மத அடிப்படைவாத சக்திகளுடனான உறவைப் பயன்படுத்துகின்றனர். சந்தர்ப்பவாதப் போக்கைக் கடைபிடிக்கின்றனர்.
- நீர், நிலம், வனங்கள் சீர்கெட்டு வருவது மிகப்பெரிய சவால். உண்மையான சவாலாக ஆசிரியர் எதைக் கருதுகிறார்? நிலம், நீர், வனம் என்ற இந்த வளங்களின் மீது பிற பகுதியினருக்கும் இருக்கக் கூடிய உரிமைகளுக்கு முரணின்றி இப்பழங்குடி மக்களுக்குள்ள அத்தகைய உரிமைகளை எவ்வாறு உறுதிப்படுத்துவது என்பதில் தான் உண்மையான சவால் அடங்கியுள்ளது.
இந்த நூல் இரண்டு அம்சங்களில் மிகவும் முக்கியமானது. ஒன்று, கட்சி உறுப்பினர்கள் மத்தியிலேயே, சுற்றுச் சூழல் பிரச்சனைகளில் நம் கட்சியின் நிலைபாடு பற்றிய தெளிவான புரிதல் குறைவாகவே உள்ளது. மற்ற பிரச்சனைகள் மீது கொடுக்கும் அளவு அழுத்தம் – நமது கூட்டங்கள் எழுத்துகளில் – சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் இல்லை எனலாம். பெரிய அணைகள், வன வளங்கள் மீதான கட்டுப்பாடு, பழங்குடி மக்கள் உரிமைகளுடன் மற்றவர்களுக்கு ஏற்படும் மோதல் போன்றவற்றில் கட்சியின் நிலைபாட்டை புரிந்து கொள்ள இந்நூல் உதவுகிறது. இரண்டாவதாக, தமிழகச் சூழலுக்குப் பொருத்திப் பார்த்து, ஆய்வுகளை மேற்கொள்ளவும் தூண்டும் வண்ணம் உள்ளது. இந்நூல் பெரும்பாலும் வட இந்திய மாநிலப் பிரச்சனைகளை மையமான எடுத்துக்காட்டுகளாக ஓரிரு இடங்களில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மலைவாழ் மக்கள் சங்கம் பழங்குடி மக்கள் பிரச்சனைகள் மீது இயக்கங்கள் நடத்தியுள்ளது. பளியர் என்ற பழங்குடி மக்கள் திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களில் வசிக்கின்றனர். விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலையில் அணில் களைப் பாதுகாக்கிறோம் என பழங்குடி மக்கள் வெளியேற்றப்படுகின்றனர். இதுபோல், குறும்பர், இருளர் என பழங்குடியினர் வாழ்வாதாரங்களை இழந்து அல்லலுறுகின்றனர். பழங்குடியினர் பற்றி தெரிந்து கொள்வதற்கு மட்டுமின்றி, அவர்களைத் திரட்டும் பணியை மேற்கொள்ளும் தோழர்களுக்கும் இந்நூல் மிகவும் பயனளிக்கும் என்பதில் ஐயமில்லை.