கம்யூனிஸ்ட்டுகளும் – கருத்துப் போராட்டமும் – II


சென்ற இதழில் (அக்டோபர் 2006) புகழ் பெற்ற கம்யூனிஸ்ட் அறிக்கையில் உள்ள ஒரு முக்கிய அம்சத்தை சுட்டிக் காட்டி யிருந்தேன். உண்மையான மார்க்சிஸ்ட் கருத்துகளுக்கு மாறுபட்ட அல்லது தவறான கருத்துக்களை முன்வைத்த பலவிதமான சித்தாந்தப் போக்குகளை கூர்மையாக அந்த அறிக்கை விமர்சனம் செய்தது பற்றி குறிப்பிட்டிருந்தோம். கற்பனாவாத சோசலிசத்திற்கும், விஞ்ஞான சோசலிசத்திற்கும் உள்ள அடிப்படையான வேற்றுமைகளை எவ்வாறு மார்க்சும் – ஏங்கெல்சும் விளக்கினார்கள்? என்பதைக் கண்டோம்.

சோசலிசக் கருத்துக்கள் பல வடிவங்களிலும் வேகமாக பரவி வந்திருக்கக் கூடிய ஒரு காலகட்டத்தில் விஞ்ஞான சோசலிசத்தின் அடிப்படையான கருத்துக்களை முன்வைக்கப்பட்டது. அதே நேரத்தில், போலியான அல்லது தவறான பலவிதமான கருத் தோட்டங்கள் தோன்றிய காலம் அது. மார்க்சும் – ஏங்கெல்சும் இவற்றைக் குறித்தும் கூர்மையாக விமர்சனம் செய்தார்கள். குரனயட ளுடிளயைடளையஅ (நிலப்பிரபுத்துவ சார்பு உடைய அரைகுறை சோசலிச எண்ணங்களை பிரதிபலிப்பவை) பற்றி ஒருசில பத்திகளில் விமர்சனம் செய்தனர். அதுமட்டுமின்றி முதலாளித்துவ வளர்ச்சி ஏற்பட்ட நாடுகளில், குட்டி பூர்சுவா அல்லது சிறு விவசாயிகள் பகுதிகளின் மத்தியில் தோற்றமளித்த குட்டி பூர்சுவா சோசலிசத் தைப் பற்றியும் விமர்சனக் கணைகளைத் தொடுத்துவிட்டு, இவை கூட எவ்வாறு மிகத் தவறானகருத்து என்பதைத் தெளிவுபடுத்தினர். சோசலிசம் என்ற பெயரில் அறியப்பட்ட கருத்துக்களை பிரச்சாரம் செய்வதின் மூலம் மக்கள் மத்தியில் குழப்பம் விளையும். உண்மை யான சோசலிசத்திற்கான போராட்டத்திற்கு தீங்கை விளைவிக்கும் என்பதையும் சுட்டிக்காட்டினர்..

இவற்றைத் தவிர குறிப்பிடத்தக்க அளவில், ஜெர்மனியிலும், பிரான்சிலும், பலவிதமான கருத்துக்கள் மலிந்து கிடந்தன. இவைகள் உண்மையான வர்க்கப் போராட்டத்தை திசை திருப்பும் என்பதைப் பற்றியும், ஆழமாக விமர்சனம் செய்தனர். இக்கருத்துக் குழப்பங் களைத் தொகுத்து ஜெர்மன் அல்லது உண்மையான (அதாவது போலியான) சோசலிசம் என்ற பெயரையும்  கேலியாகச் சூட்டினர். அதேபோல், இந்த அறிக்கையில் பூர்சுவா சோசலிசம் அல்லது பிற்போக்கான சோசலிசம் என்ற பெயரைச் சூட்டி அன்று தோன்றிய சில முதலாளித்துவ தத்துவ நிலைபாடுகளை கேலியாக குறிப்பிட்டனர்.

இந்தப்பகுதியில் தான், கற்பனை வாத சோசலிசத்தையும், மிக ஆழமான பார்வையுடன் இம் மேதைகள் விமர்சித்தனர். ஆக, சோசலிசம் என்ற பொதுவான கருத்து, வேகமாகப் போர்க்களத்தில் இறங்கிய தொழிலாளி வர்க்கத்தின் மத்தியிலும், முதலாளித்துவ அமைப்பினால் பெரிதும் பாதிக்கப்பட்ட உழைக்கும் மக்கள் மத்தியிலும் பரவிய நேரத்தில் உண்மையான சரக்கையும், போலியான சரக்கையும் (தத்துவங்களை) வேறுபடுத்திக் காட்டவேண்டிய அவசியம் இருந்ததனால், இத்தகைய விமர்சனப் போரில் இந்த ஆசான்கள் இறங்கினர். தத்துவ ரீதியாக தவறான கருத்துக்கள் புரட்சி இயக்கத்திற்கு ஏதாவது ஒரு கட்டத்தில் பெரும் சேதத்தை உண்டாக்கும் என்பதை உணர்ந்து, இப்பணியில் இவர்கள் மும்முரமாக இறங்கினார்கள் என்பதை நினைவு கொள்ள வேண்டும். அப்பணி இன்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன் தொடர்ச்சியாகத் தோன்றிகொண்டே இருக்கும்.

19 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்

கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியிட்ட பிறகு, தொழிலாளி வர்க்க இயக்கம் வேகமாக வளர்ந்து பல ஐரோப்பிய அமெரிக்க  நாடுகளுக் கும் எட்டியது. ஒரு புறம், தொழில் வளர்ச்சியின் முன்னேற்றத்தின் விளைவாக தொழிலாளி வர்க்கத்தின் எண்ணிக்கையும், இயல்பா கவே போராட்டங்களும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. வலுவான தொழிற்சங்க இயக்கம் பல நாடுகளிலும் வளர்ந்தன. அத்துடன் ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற பல நாடுகளி லும் தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் கட்சிகளும் தோன்றி வலுப்பெற்றன. இதன் விளைவாக இந்த வளர்ச்சியானது, எந்தத் திசையில் செல்ல வேண்டுமென முக்கியமான கேள்விகளும் முன்னுக்கு வந்தன. பாராளுமன்றங்களில் ஓரளவிற்கு தொழிலாளி வர்க்க கட்சிகளுக்கு செல்வாக்கு ஏற்பட்டது. இதுபோன்ற மாற்றங்கள் பல. இந்தச் சூழலில் முதலாளித்துவ அமைப்புக் குள்ளேயே சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம், பல சமூகப் பிரச்சனை களுக்கும் தீர்வு காண முடியும் என்ற எண்ணங்கள் தொழிற்சங்க தலைவர்கள் மத்தியில் தோன்றின, வலுப்பெற்றன. பாராளுமன்றத் திலும், இதர அமைப்புகளிலும் பல தொழிலாளி வர்க்கத் தலைவர் களுக்கும் இடம் கிடைத்தது. இந்த புதிய எண்ணப்போக்குகளின் விளைவாக படிப்படியாக முதலாளித்துவத்தையே சீர்படுத்த முடியும் அல்லது படிப்படியாக சரியான திசை வழிக்குஅழைத்துச் செல்ல முடியும் என்ற பிரமைகள் பரவின.

புரட்சிகரமான மாற்றங் களுக்காகப் போராடுவது தேவை இல்லை என்றும், தொழிலாளி வர்க்க ஆட்சிக்கான கடுமையான போராட்டத்தைத் தவிர்த்து வர்க்க சமரசம் மூலம் பெரிய மாற்றங்களை கொண்டுவர முடியும் போன்ற மிகவும் ஆபத்தான கருத்துக்கள் பல நாடுகளில் வேரூன்றின. இந்தக் கருத்துக்களைத்தான் சமூக ஜனநாயகம் (Social Democracy) என்று அழைக்கப்பட்டது. இந்தக் கருத்தோட்டமானது புரட்சிகரமான மாற்றத்திற்கும், தொழிலாளிவர்க்க அரசியல் அதிகாரத்திற்குமான போராட்டத்தை முற்றிலும் சீர்குலைக்கும் ஒன்றாக அமைந்தது. சீர்திருத்தவாத கண்ணோட்டத்திற்கும், புரட்சிகரமான கண்ணோட் டத்திற்கும் இடையில் உள்ள முரண்பாடு தீவிரமடைந்து உண்மையான தொழிலாளி வர்க்க இயக்கத்திற்கு பெரிய சவாலாக உருவாயிற்று. வளர்ந்து வரும் புரட்சிகரமான இயக்கத்தை அழிக்கக் கூடிய பெரும் முரண்பாடாக இது வளர்ந்தது. இதுபோன்ற கருத்துக்களை பல வடிவங்களில் தொழிலாளி வர்க்கத்தில் பெரும் செல்வாக்குடன் காட்சியளித்த பெர்ன்ஸ்டீன் (Bernstin) போன்ற பல தலைவர்கள் முன்வைத்தனர், பிரச்சாரம் செய்தனர். புரட்சி இயக்கத்தின் ஆணி வேருக்கே கத்தி வைக்கக் கூடிய பேரபாயமாக இத்தகைய போக்குகளை அன்றைய மார்க்சியத் தலைவர்கள் ஆணித்தரமாக எதிர்த்தனர். சோசலிச இயக்கத்தை முன்னுக்கு அழைத்துச் செல்ல, நடைமுறைத் தந்திரங்கள், போராட்ட திசை வழி போன்றவை பற்றி வர்க்க இயக்கத்திலேயே கூர்மையான கருத்து வேற்றுமைகள் தோன்றின. இது இயக்கத்தை சீர்குலைத்தன. தொழிலாளி வர்க்க கட்சிகளும் பலமுறைகளில் பிளவுபட்டு இயக்கமே சீர்குலைந்தது. இந்த  பேரபாயத்தை உணர்ந்து உண்மையான மார்க்சிஸ்டுகள் போர்க்களத்தில் குதித்தனர். இவ்வாறு இயக்கத்தையே பாதுகாப்பதற்காக மார்க்சிஸ்ட்டுகள் நடத்திய தீவிரமான போராட்டங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன.

கம்யூனிஸ்ட் இயக்கத்தில் முன்னணிப் பிரிவாக இருந்த ரஷ்ய தொழிலாளி வர்க்கக் கட்சி (ரஷ்ய சமூக ஜனநாயகக் கட்சி) போன்ற கட்சிகளில் போராட்டத்தை அடுத்த கட்டத்தில் எவ்வாறு நடத்திச் செல்வது போன்ற பிரச்சனைகளில் கருத்து வேற்றுமைகள் வலுவாகத் தோன்றின. அதுவரை மார்க்சிய தத்துவத்தை உயர்த்திப் பிடித்த ப்ளேக்கனோவ் (Plekhanow) போன்ற பெரும் தலைவர்கள் கூட, பல விசங்களில் தவறான கருத்துக்களை முன்வைத்தனர். இவருடைய பாத்திரம் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் மிக முக்கியமாக அமைந்து இருந்த போதிலும், லெனின் போன்ற தலைவர்கள்கூட அவருடைய கருத்தோட்டங்களை விமர்சித்தனர். ரஷ்யாவின் தொழிலாளி வர்க்கக் கட்சி இரண்டு பிரிவுகளாகப் பிரிந்தன. (பெயரளவுக்கு ஒரே பெயரில் செயல்பட்ட போதிலும், லெனின் தலைமையிலான போல்ஷ்விக்குகள் (Bolshevik) என்றும், மற்றும் பல தலைவர்களின் தலைமையில் மென்ஷ்விக்குகள் (Menshevik) என்றும் இரண்டு பிரிவாகச் செயல்பட்டனர்.) பொதுவான தொழிலாளி வர்க்க எண்ணங்களை ஆதாரமாகக் கொண்டதும், ஆனால், உண்மையாகவே  இரண்டு பிரிவுகளாக (கட்சிகள்?) செயல்பட்டதற்கு அடிப்படைக்காரணம் ஆழமான கருத்து வேற்றுமைகள் தான் என்பதை உணர வேண்டும். ஒரே கட்சிக்குள் செயல்படுபவர்களுக்கிடையில் தோன்றிய கருத்து வேற்றுமைகள் கூட, பகிரங்கமாக சுட்டிக்காட்டி தவறான கருத்துகளுக்கெதிரான போராட்டத்தில் லெனின் தலைமையிலான போல்ஷ்விக்குகள் உறுதியாக இறங்கினர். இந்தப் போராட்டம்தான் நாளாவட்டத்தில் உலக வரலாற்றின் வளர்ச்சிப் போக்கினையே நிர்ணயித்தது. தொழிலாளி வர்க்க இயக்கத்தில் சீர்திருத்தவாத கருத்துக்களை ஆதாரமாகக் கொண்ட பிரிவும், புரட்சிகரமான போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட்டுகள் என்று அறியப்பட்ட பிரிவும் – ஆக இரண்டு முகாம்களாகவே பிரிந்து நின்றது. கம்யூனிஸ்ட் அறிக்கையின் ஆழமான புரட்சிகரமான பார்வையை உயர்த்திப் பிடித்த கம்யூனிஸ்ட்டுகள் உலக வரலாற்றில் ஒரு பெரும் சக்தியாக வளர்ந்ததன் வரலாறு நாம் அறிந்ததே. கம்யூனிஸ்ட் இயக்கம் பெற்ற வெற்றிகளுக்கும், மகத்தான முன்னேற்றங்களுக்கும் போல்ஷ்விக்குகளும், மென்ஷ்விக்குகளுக்கும் இடையில் நடை பெற்ற மாபெரும் கருத்துப் போராட்டம் தான் மூலாதாரமானது என்பது தெளிவு.

கருத்துப் போராட்டமானது ஏனோ தர்க்கம் செய்யக்கூடிய விஷயம் மட்டும் அல்ல. வேகமாக மாறிவரக்கூடிய சமூகச் சூழ்நிலைகளின் பின்னணியில் சர்வதேச நிலமைகளில் தோன்றும் முக்கியமான மாற்றங்களின் சூழ்நிலையில், தொழிலாளி வர்க்கப் போரட்டத்தின் தன்மைகள், திசைவழி, போராட்ட வடிவங்கள் போன்றவற்றிலும் தொடர்ச்சியாக மாற்றங்கள் தோன்றுகின்றன. கம்யூனிஸ்ட் கட்சிகள் இவற்றை உன்னிப்பாகக் கவனித்து மாற்றங்களுக்கு ஏற்ப நடைமுறைத் தந்திரங்களையும், உடனடிக் குறிகோள் களையும் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. மாற்றங்களைக் கவனத்தில் கொள்ளாமல் ஒரே நிலையில் நிற்பதானது புரட்சிகர மான முன்னேற்றத்திற்கு பெரும் பாதகங்களை ஏற்படுத்தும். ரஷ்யாவில் ஏறத்தாழ இரண்டு கட்சிகளாகச் செயல்பட்டு வந்தன. இந்த இரண்டு பிரிவுகளுக்கு இடையிலேயும் நுட்பமான பல கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது தோன்றின.

முதல்  உலக யுத்தம் வெடித்த போது, உலக நிலமைகளிலும், ரஷ்யாவிலும் ஏற்பட்ட பெரும் மாற்றங்களைப் புரிந்து கொண்ட லெனின் இந்த மாற்றங்கள் புரட்சிகரமான பெரிய வெடிப்பிற்கு இட்டுச் செல்லுமென்று உணர்ந்து யுத்த எதிர்ப்பு இயக்கத்திற்கு முதன்மையான முக்கியத் துவத்தை அளித்தார். அதே நேரத்தில் அனேகமாக எல்லா நாடுகளிலும் உள்ள சீர்திருத்தவாதிகள் யுத்தத்தை ஆதரிக்கத் துவங்கினர்.  இதற்கு அவர்கள் கூறிய காரணம் தந்தையர் நாட்டிற்கு ஆபத்து என்பதால் யுத்தம் அவசியம் என்பதாகும். இந்த நிகழ்வானது தொழிலாளி வர்க்கத்தை போர் வெறி பிடித்த ஏகாதிபத்தியத்திற்கு உதவிகரமாக அமைந்தது. பலநாடுகளிலும் தொழிலாளி வர்க்கமும், அதன் கட்சிகளும் முதலாளி வர்க்கத்தின் வாலாக மாறின. இன்னொரு புறம் ஏகாதிபத்திய எதிர்ப்பு அணியில் தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பிரிவு உறுதியாக போராடியது. லெனின் கருத்துத் துறையில் முன்கூட்டியே முன்வைத்த லட்சியங்களை நோக்கி மக்கள் போராடத் துவங்கினர். இதன் இயல்பான வளர்ச்சிப் போக்கில்  1917 ல் மகத்தான ரஷ்யப் புரட்சியே வெடித்தது. வரலாற்றில் பாரிஸ் கம்யூன் தோல்விக்குப் பிறகு முதல் முறையாக தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் ஆட்சி ஏற்பட்டது. ரஷ்ய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தீவிரமான கருத்துப் போராட்டத்தை நடத்தி வர்க்கத்தை புரட்சிகரமான பாதைக்கு அழைத்து வரும் மாபெரும் கடமையை செய்திருக்காவிட்டால், நவம்பர்  புரட்சி நடந்திருக்காது. உலக வரலாற்றிலும் இவ்வளவு பிரம்மாண்டமான மாற்றங்களும் ஏற்பட்டிருக்காது. கருத்துப் போராட்டமானது புரட்சிகரமான சக்திகளுக்கு தெளிவும், தெளிவான கண்ணோட்டத்தையும் அளித்து நெருக்கடியான சூழ்நிலை தோன்றிய போது, அதைப் பயன்படுத்தும் உறுதியை  ஒரு பேராயுதமாக தந்தது அமைந்தது என்பதையும் நாம் உணர வேண்டும்.

சுருங்கக்கூறின் லெனின் தலைமையில் கருத்துப் போராட்டத்தை  உறுதியாக நடத்தியதன் பயனாகத்தான் புரட்சியின் வெற்றிக்கு அகநிலையையும், புற நிலையையும் அளித்தது என்பது தெளிவு. சோவியத் புரட்சியின் வெற்றிக்கு முக்கியக் காரணம், 50 ஆண்டுகளாக மார்க்சியத்தை பரப்ப நடந்த கருத்துப்போரே தொழிலாளர்களை உறுதிமிக்க அரசியல் படையாக ஆக்கியது என்று லெனினே சுட்டிக்காட்டினார். ஆக, கருத்துப் போராட்டம் என்பது வார்த்தை அல்லது மயிர் பிளக்கும் வாதமுமல்ல, நேர்மாறாக நடைமுறைத் தந்திரங்களையும், வழிமுறைகளையும் சரியாக உருவாக்கி புரட்சி சக்திகளை முன்னேறச் செய்யும் ஒரு ஆயுதமாகும்.

– தொடரும்

I

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s