மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


கம்யூனிஸ்ட்டுகளும் தொழிலாளர் வர்க்கமும் – III


புரட்சிகரமான போராட்டத்தை தலைமை தாங்க வேண்டிய வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த கடமையை தொழிலாளி வர்க்கம் நிறைவேற்ற வேண்டிய அவசியத்தை பற்றி முந்தைய கட்டுரைகளில் விளக்கியிருந்தோம்.

உண்மையான வர்க்க ஒற்றுமை

இத்தகைய வர்க்கமாக தொழிலாளி வர்க்கமாக வளருவதானது சிரமமான ஒரு பணியாகத்தான் இருக்கும். ஆரம்ப நிலையில் தொழிலார்கள் தங்களுடைய வாழ்க்கை – வேலை நிலைமைகளில் முன்னேற்றம் காண்பதற்காகவும் தங்களுக்கு எதிராக சுரண்டும் வர்க்கங்கள் தொடுக்கும் பல்வேறு தாக்குதல்களை முறியடிப்பதற் காகவும் ஒன்றுபட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இந்த கட்டாயத்தினால்தான் தொழிற்சங்க ரீதியாக ஒன்றுபடுவது என்ற ஒரு நிலைமை உருவாகிறது. தொழிற்சங்கத்தை அமைக்காமலேயே போராடி தோல்வியைச் சந்தித்த  அனுபவங்கள்தான் நாளடைவில் நமக்கு ஒரு சங்கம் வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெறுகிறது. இதன் விளைவாக தொழிற்சங்க இயக்கம் தோன்றுகிறது.

தொழிற்சங்க போராட்டங்களும் நடைபெறுகிறது. இந்த காரியம் அனைத்தையும் வாழ்க்கை அனுபவத்தின் மூலமாக தானாகவே ஏற்படுகிறது. கம்யூனிஸ்ட்டு இயக்கம் தோன்றுவதற்கு முன்னதாகவே வர்க்கப் போராட்டங்கள் நடைபெற்றன. தொழிற்சங்க இயக்கமும் படிப்படியாக வலுப்பெற்றது. வெளியில் இருந்து வரும் தூண்டுத லினால், தொழிற்சங்க இயக்கம் தோன்றுவதில்லை. போராட்டங் களும் நடைபெறுவதில்லை. கசப்பான அனுபவங்களின் மூலமாகத் தான் வர்க்க உணர்வும் தொழிற்சங்க போராட்டங்களும் உதய மாகின்றன. இதைப்பற்றித்தான் லெனின் குறிப்பிடும் போது, தொழிலாளி வர்க்கத்தின் தன்னெழுச்சியான இயக்கத்திற்கும் பெரிய அளவில் முக்கியத்துவம் உண்டு; அதில் தலையிட்டு சரியான திசையை அழைத்துச் செல்வது கம்யூனிஸ்ட்டுகளின் கடமை என்று விளக்குகிறார்.

ஆக, தொழிலாளி வர்க்க இயக்கத்தில் தொழிற்சங்க அமைப்பும் போராட்டங்களும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது என்பதை பார்க்கிறோம். அதற்கு மாறாக தொழிற்சங்க போராட்டம் என்பது குறுகிய சுயநலத்திற்காக நடைபெறும் இயக்கம் என்ற விரக்தியான ஒரு பார்வை இருக்கத்தான் செய்கிறது. கம்யூனிஸ்ட்டு களின் பார்வையில் தொழிற்சங்க இயக்கமும், போராட்டங்களும் ஒரு அவசியமான கட்டத்தை பிரதிபலிக்கிறது. இந்த தொழிற்சங்க இயக்கமும் போராட்டங்களும் வர்க்கப் போராட்டத்தின் முதல் கட்டமாகும். புரட்சிகரமான வர்க்கமாக இவ்வர்க்கத்தை வார்த் தெடுப்பது என்ற நோக்கத்துடன் கம்யூனிஸ்ட்டுகள் பணியாற்று கிறார்கள். தன்னிச்சையான வெளிப்பாடுகளை குறிப்பிட்ட திசை வழியில் வளர்த்து முன்னுக்கு கொண்டு செல்வது கம்யூனிஸ்ட்டு களின் கடமை. ஆரம்ப கட்டத்தை புறக்கணித்து நேரடியாக புரட்சிகரமான இயக்கத்திற்கு தான்டிச் செல்லலாம் என்ற கண்ணோட்டம் வெறும் புரட்சிகர வாய்ச்சவடாலாகவே அமையும்

தொழிற்சங்க இயக்கத்துடன் தொடர்பு கொண்டு அதை உயர்ந்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் நோக்கத்துடன்தான் கம்யூனிஸ்ட்டுகள் தொழிற்சங்க இயக்கத்தில் முக்கியமான பங்கினை ஆற்றுகிறார்கள்.

இப்பணியின் ஆரம்ப நோக்கம் தொழிலாளி வர்க்கத்திற்கு வர்க்க உணர்வை ஊட்டுவதும் தொழிற்சங்க இயக்கத்தை வலுவான சக்தியாக மாற்றும் நோக்கமும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு உண்டு. இந்த உணர்வு பூர்வமான பணியில் ஈடுபடும் போது, பல்வேறு நோக்கங்கள் இருக்கத்தான் செய்யும். முதல் நோக்கமானது சிதறிக்கிடக்கும் தொழிலாளர்களுக்கு நாம் அனைவரும் ஒரு வர்க்கம் என்ற எண்ணத்தையும் நம்மைச் சுரண்டும்  வர்க்கங்களை எதிர்த்து நாம் போராட வேண்டும் என்ற மிகவும் ஜீவாதாரமான கண்ணோட்டத்தை வளர்ப்பதும் நமது நோக்கமாகும். தொழிற்சங்க இயக்கம் இல்லாமல் புரட்சிகரமான இயக்கத்தை கட்ட முடியாது என்றும், மறு பக்கம் புரட்சிகரமான இயக்கம் இன்றி தொழிலாளி வர்க்கம் ஒரு மகத்தான சக்தியாக உருவாகாது என்றும் கம்யூனிஸ்ட்டுகள் தெளிவாக பார்க்கிறார்கள்.

தொழிற்சங்கங்கள் வர்க்கப் போராட்டத்தின் ஆயுதமாக உருவாகின்றன என்பதைப் பற்றி முன்பு குறிப்பிட்டோம். இதுவானது அனைத்துப் பகுதி தொழிலாளர்களையும் பிரதிநிதித்துவப் படுத்தக்கூடிய முழு வர்க்கத்தின் அமைப்பாகும் என்ற உணர்வுடன் நாம் பணியாற்றுகிறோம். தொழிற்சங்கங்கள் அனைத்துத் தொழிலாளர்களையும் உட்கொள்ளும் உண்மையான வெகுஜன ஸ்தாபனமாக வளர்வது என்பது நமது நோக்கம். கம்யூனிஸ்ட் இயக்கத்தை சார்ந்தவர்களும், சாராதவர்களும் தொழிற்சங்கங்களில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று நமது கட்சி திரும்பத் திரும்ப வலியுறுத்தி வந்துள்ளது. நமது கட்சிக்கான ஒரு அமைப்பாக தொழிற்சங்கங்களைக் காணக்கூடாது என்று கட்சி அழுத்தம், திருத்தமாக சுட்டிக் காட்டியுள்ளது. நேர்மாறாக, அனைத்து தொழிலாளர் களையும் ஒன்று திரட்டும் வகையில் தொழிற்சங்க இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல கம்யூனிஸ்ட்டுகள் முயற்சிக்கிறார்கள்.

இப்பணியானது, பல்வேறு சிக்கல்கள் காரணமாக கடுமையான தோர் பணியாகும். துவக்க கட்டத்தில் தான் செய்யும் பணி (டிரேட் – பிட்டர், டர்னர், மெஷின் மேன்…) அடிப்படையிலேயே தங்களின் ஒற்றுமையை தொழிலாளர்கள் குறுகிய பார்வையுடன் பார்க் கிறார்கள். இத்தகைய போக்குகள் வர்க்கத்தை முழுமையாக ஒன்றுபடுத்துவதற்கு தடையாக இருக்கின்றன. இதை கம்யூனிஸ்ட்டு கள் உறுதியாக எதிர்க்கிறார்கள். முதலாளி வர்க்கத் திற்கு எதிராக அனைத்துத் தொழிலாளர்களுடைய அமைப்பாக தொழிற்சங்கத்தை உருவாக்கி தொழிலாளி வர்க்க ஒற்றுமை என்ற நோக்கத்துடன் நாம் இன்றும் இத்தகைய சிறு சிறு பிரிவுகளாக பிரிந்து கிடக்கும் போக்குகள் இருக்கத்தான் செய்கிறது.

இதேபோல் நமது நாட்டில் ஜாதி உணர்வுகள் வலுவாக இருப்பதின் காரணமாக, தொழிற்சங்க இயக்கத்தை ஜாதி அடிப் படையில் பிளவுபடுத்தும் ஆபத்தான போக்குகளும் வர்க்கப் போராட்டத்தை நடைமுறையில் சீர்குலைக்கின்றன. இத்தகைய போக்குகளை உணர்வுப் பூர்வமாகவும் பொறுமையாகவும், விடாப்பிடியாகவும் எதிர்த்துப் போராடுபவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்.

பல்வேறு பிரிவு மக்கள், பல்வேறு பகுதிகளிலிருந்து வரக்கூடிய தொழிலாளர்கள் தொழிற்சாலையில் சங்கமிப்பதன் காரணமாக, உயர்ந்த மட்டத்தில் வர்க்க ஒற்றுமையை கட்ட முடியும். ஆயினும், மொழி அடிப்படையில் பல தொழிலாளர்கள் பிரிந்து கிடப்பதை நாம் பார்க்கிறோம். மேலும், பூகோளப் பகுதி அடிப்படையிலும் தொழிலாளிகள் தனித்தனியாக செயல்படும் போக்குகளும் இருக்கத்தான் செய்கிறது. இதுபோன்ற போக்குகள் வர்க்க ஒற்றுமைக்கு பாதகமாக அமையும் என்ற காரணத்தினால், அவற்றையும் நாம் முறியடிக்க வேண்டியுள்ளது.

பல்வேறு தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் மத்தியில் மற்றுமொரு தவறான கண்ணோட்டம் நிலவுகிறது. நிரந்தரத் தொழிலாளர்களில் பலர் அந்தக் குறிப்பிட்ட ஆலையில் தொழிலாளி என்றல், தாங்கள்தான் என்று என்னுகிறார். காஷுவல் தொழிலாளர்கள், காண்ட்டிராக்ட் தொழிலாளர்கள் போன்ற பல்வேறு பகுதியினருக்காகவும் உள்ள அமைப்பாகும் தொழிற்சங்கம் என்பதை உணர மறுத்து குறுகிய வட்டத்திலேயே தொழிலாளர் இயக்கத்தை நடத்திச் செல்ல முயற்சிக்கிறார்கள். இதுவும் வர்க்கத்தின் ஒற்றுமைக்கு குந்தகமான ஒரு பார்வையாகும். இதையும் எதிர்த்து உழைப்பாளிகள் அனைவரையும் (தன்னடைய உழைப்பை முதலாளிகளுக்கு பல வடிவங்களில் விற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்கள்) உழைப்பாளிகள் அனைவரையும் தொழிற்சங்கத்தில் ஒன்றுபடுத்தும் பணியில் கம்யூனிஸ்ட்டுகள் மும்முரமாக செயலாற்றுவார்கள்.

ஆலைக்குள் பிரிவினைப் போக்குகள் எவ்வளவு ஆபத்தானதாக உள்ளனவோ, அதே போல் எனது தொழிற்சாலையில் உள்ள தொழிலாளர்களை மட்டும் ஒன்றுபடுத்தும் கண்ணோட்டம் வலுவாக உள்ளது. இப்போக்கானது உண்மையான வர்க்க ஒற்றுமைக்கு எதிரானதாகும். மின்சாரத் தொழிலாளர்கள், போக்குவரத்து, பஞ்சாலை போன்ற பல்வேறு தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்கள் அனைவரும் தங்கள் தங்கள் தொழிற்சங்கங்களை அமைப்பது இயல்பு. ஆனால், பகுதி பார்வை இல்லாமல் அனைத்துத் தொழிலாளர்களையும் வர்க்கரீதியாக ஒன்றுபடுத்துவது கம்யூனிஸ்ட்டுகளின் நோக்கமாகும். இதேபோல், வட்டாரம், மாவட்டம், மாநிலம் போன்ற வட்டத்தில் மட்டும் நிற்காமல் தொழிலாளர்களை அகில இந்திய அளவிலும் வர்க்கத்தை ஒன்று படுத்தும் நோக்கத்துடன் நாம் செயல்பட வேண்டும்.

மேலே குறிப்பிட்ட வகையில்  தெளிவான உணர்வுடன தொழிற் சங்க இயக்கங்களை வலுப்படுத்துவதும் உண்மையான வர்க்க ஒற்றுமையின் அமைப்புகளாக தொழிற்சங்கங்களை நடத்திச் செல்லும் நோக்கத்துடன் கம்யூனிஸ்ட்டுகள் செயல்படுகிறார்கள். தொழிலாளர்களின் பகுதிப்பார்வை, குறுகிய எண்ணங்கள் போன்றவற்றை படிப்படியாக அகற்றி ஒரு மகத்தான வர்க்கமாக வார்த்தெடுப்பதற்கு இக்கடமைகளை செய்தாக வேண்டும்.

தொழிற்சங்க இயக்கமும் – அரசியலும்

பல தொழிற்சங்கங்களும், தலைவர்களும் தொழிற்சங்கங்களை குறுகிய வட்டத்தில் மட்டும் நடத்திச் செல்கிறார்கள். தங்களுடைய கோரிக்கைகளை பெறுவதுகூட நாட்டின் மொத்தமான அரசியல் – பொருளாதார சூழ்நிலைகளை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற பார்வைகூட தொழிலாளர்களுக்கு போதிக்காமல் செயல்படுகிறார்கள். நாம், நமது ஆலை, நமது வசதிகள் என்று மட்டும் சிந்திக்கும் எண்ணப் போக்குகளை வேண்டும் என்றே தொழிலாளர்கள் மத்தியில் பரப்புகிறார்கள். அந்தச் சங்கத்தையும், உறுப்பினர்களையும் பொதுவான தொழிலாளர் இயக்கத்தில் இருந்து வேறுபடுத்தி வைக்க முயற்சிக்கிறார்கள். அவர்களின் சொந்த சொத்தாக தொழிற்சங்கங்களை வைத்துக் கொண்டோ, தொழிற்சங்க தலைவர்களாக பவணி வருகிறார்கள்.

இதற்கெல்லாம் நேர்மாறாக நாட்டின் அரசியல் – பொருளாதார சூழ்நிலைகளையும், ஆளும் வர்க்கங்களின் கொள்கைகளையும், அரசின் போக்குகளையும் கணக்கில் வைத்துக் கொண்டு போராடவேண்டியுள்ளது என்ற அடிப்படையான பார்வையை தொழிலாளர்களுக்கு போதிக்க முயற்சிக்கிறது உண்மையான தொழிற்சங்கம். இந்த திசையில் செல்லும் போது, இயல்பாகவே தொழிலாளர்களின் அரசியல் உணர்வு நிலையில் முன்னேற்றம் ஏற்படுகிறது. இத்தகைய அரசியல் உணர்வு இல்லாமல், போராட்டங் களை நடத்தவும் முடியாது, வெற்றியும் பெறவும் முடியாது என்று தொழிலாளர்களை புரிய வைப்பது ஒரு தொழிற்சங்க கடமையாகும். உலக நிலைமைகளும், பொருளாதார அரசியல் நிலைமைகள், ஏகாதிபத்திய சதிகள், தொழிலாளி வர்க்க இயக்கங்களின் முன்னேற்றங்கள் போன்றவைகளுக்கும், இன்று நடத்தக்கூடிய போராட்டங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று கம்யூனிஸ்ட்டுகள் போதிக்கிறார்கள்.

ஜனநாயக உரிமைகள் தொழிற்சங்க போராட்டங்களுக்கும், செயல்பாடுகளுக்கும் முக்கியமானது. ஆளும் வர்க்கங்களின் கடுமையான தாக்குதல்களையும், தலையீடுகளையும் சந்தித்து முன்னேறுவதற்கு ஜனநாயக உரிமைகள் இனியமையாததாகும். இதைப்பற்றியெல்லாம் ஏராளமான அனுபவங்களை தொழிலாளர் கள் பெற்றிருக்கிறார்கள். (சமீபத்தில் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களின் பிரம்மான்மான போராட்டத்தின் போது, இது குறித்து ஏராளமான அனுபவங்கள் தொழிற்சங்க இயக்கத்திற்கு கிடைத்துள்ளது.)

அண்மைக் காலமாக நமது நாட்டில் பெருமளவில் தலைதூக்கியுள்ள வகுப்புக்கலவரங்களும், ஜாதி மோதல்களும் தொழிற்சங்க இயக்கத்திற்கு தடையாக உள்ளதை நமது அனுபவத்தில் பார்க்க முடிகிறது. ஆகவே, வகுப்புவாத – ஜாதி முரண்பாடுகளுக்கு எதிராக தொழிற்சங்க இயக்கம் போராட வேண்டியுள்ளது. மத நல்லிணக்கத்திற்காகவும், ஜாதி கொடுமைகளுக்கு எதிராகவும் தொழிற்சங்க இயக்கம் தெளிவான நிலையை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்த திசை வழியில் சங்கங்களுக்கு வழிகாட்டுவதில் கம்யூனிஸ்ட்டுகள் முன்னணியில் நிற்க வேண்டும்.

இன்றைய சூழலில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அன்றாடப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. சமூக கொடுமை களுக்கு எதிரான இயக்கங்களுக்கு தொழிற்சங்கங்கள் முழுமையான ஆதரவை அளிக்காமல், உண்மையான தொழிற்சங்க ஒற்றுமையை வளர்க்க முடியாது.

தாங்கள் வாழும் சமூகத்தில் தோன்றியுள்ள பிரச்சினைகளில் தலையிடாமல், முழுமையான வர்க்க கடமையை நிறைவேற்ற முடியாது. தொழிற்சங்க இயக்கம் மூலமாக வாழ்க்கை மேம்பாட்டிற் காகவும், வாழ்க்கை சூழல்களின் பாதுகாப்பிற்காகவும் அனைத்து தொழிலாளரையும் ஒன்றுபடுத்தும் முயற்சியின் பகுதியாக மேலே குறிப்பிட்ட பல்வேறு எதார்த்த பிரச்சினைகளில் தெளிவான நிலை எடுக்கும் அளவிற்கு தொழிற்சங்க இயக்கம் அரசியல் – சமுதாய காரியங்களில் தலையிட வேண்டிய அவசியத்தை புறக்கணிக்க முடியாது.

இந்த திசை வழியில் தொழிற்சங்க இயக்கத்தை நடத்திச் செல்வதானது, தொழிற்சங்க இயக்கத்தின் அரசியல் பகுதியாகவே நாம் பார்க்க வேண்டும். ஆயினும், புரட்சிகரமான ஒரு வர்க்கமாக தொழிலாளி வர்க்கத்தை உயர்த்துவதற்கு இவையெல்லாம் இன்றியமையாத துவக்க நிலை கடமைகள். புரட்சிகரமான உணர்வை வளர்ப்பதற்கு கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் பல கடமைகளை நிறைவேற்ற வேண்டிய அவசியம் உள்ளது. தொழிற்சங்க இயக்கத்திற்கு வழிகாட்டும் போது, அடிப்படையான புரட்சிகரமான கடமைகளை புறக்கணிக்க முடியாது. தொழிற்சங்க இயக்கம், தொழிலாளி வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியேயாகும். புரட்சிகரமான வர்க்கமாக, இந்த வர்க்கத்தை உயர்த்துவற்கு பல கடமைகள் உண்டு; கிராமப்புற ஏழை விவசாயிகளோடு நெருக்கமான உறவை உருவாக்கும் ஏற்பாடுகள், சங்கத்தை ஜனநாயக நெறிமுறைகளை வழுவாது பின்பற்றுவது; சங்க உறுப்பினர்களின் பங்கேற்பிற்கும், முடிவு எடுக்கும் உரிமைக்கு உத்தரவாதமளிக்கவும் கம்யூனிஸ்ட்டுகள் கவனமாக செயல்பட வேண்டும். இதுபற்றி அடுத்து பார்ப்போம்.

I, II



%d bloggers like this: