கிரகங்களும் கிரகசாரங்களும்!


கிரகங்கள் எட்டு ஒன்பதல்லஎன்று விஞ்ஞானிகள் முடிவு செய்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தி வருவதைப் பார்க்கிறோம். ஏன் இந்த பரபரப்பு? உலகநாடுகளின் தொண்மை வரலாறு நமக்கு இதை தெளிவாக்குகிறது. எல்லா நாடுகளிலும் நாகரீகத்தின் துவக்கம் என்பது வானத்தை மானுடன் ஆய்வு செய்யத் துவங்கிய பிறகே ஏற்பட்டுள்ளது. மேலே உள்ளதுபோல் கீழே     என்றுதான் நமது முன்னோர்கள் கற்பனை செய்து இருக்கிறார்கள். வானத்தில் கண்ணில் படுபவைகளும், கற்பனைத் தெய்வங்களும், தங்களை ஆட்டுவிப்பதாக நம்பினர். ஆதிகாலம் தொட்டே சொர்க்கம், நரகம் என்பவைகள் வானத்திலே இருக்கின்றன என்ற நம்பிக்கை எல்லா நாடுகளிலும் பரவலாக இருந்து வருகிறது. அந்த நம்பிக்கைகள் இன்றும் பரவலாகத் தொடர்கிறது. எனவே வானவியல் அறிஞர்கள் சர்ச்சையில் ஈடுபடும் போதெல்லாம் மக்களும் தங்களது நம்பிக்கைகளை உரசிப்பார்க்கிறார்கள், சர்ச்சையில் ஈடுபடுகி றார்கள்.  எனவே இன்று கிரகங்கள் எட்டா?ஒன்பதா? என்ற வானவி யலாளர்களின் சர்ச்சை எல்லாத் தரப்பினரையும் ஈர்த்ததில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. அதுமட்டு மல்ல விஞ்ஞானிகளும் உணர்ச்சி வயப்படுபவர்கள் என்பதற்கு இந்த சர்ச்சை ஒரு உதாரணம் முதல் 8 கிரகங்களை கண்டுபிடித்தது பழம் பெரும் ஐரோப்பிய விஞ்ஞானிகள் 9 வது கிரகமான புளூட்டோவைக் கண்டுபிடித்தது 1930ல் ஒரு அமெரிக்க விஞ்ஞானி. புளுட்டோ ஒரு கிரகமல்ல என்று இப்பொழுது முடிவு செய்தது  விஞ்ஞானிகளிலே ஒருசாரார் வருத்தப்படும் நிலையைக் கொண்டுவந்தது. மானுடம் உணர்ச்சி வயப்படாமல் உண்மைகளை ஏற்காது என்பதற்கு இது மட்டுமல்ல விஞ்ஞான வரலாறே சாட்சியம் கூறும். பூமி மைய அமைப்பை மறுக்கவும், சூரிய மைய அமைப்பை ஏற்கவும், ஐரோப்பிய அறிவுலகமே மனப்பக்குவம் பெற சில நூற்றாண்டுகள் சிரமப்பட வேண்டியிருந்தது.

விஞ்ஞானமும் நம்பிக்கையும்

விஞ்ஞானிகள் நடத்தும் சர்ச்சைக்குள் புகுமுன்னர் ஒன்றில் தெளிவு அவசியம். வானவியலுக்கும் கிரகங்களை கொண்டு கிரகசாரபலன் கூறும் சோதிடத்திற்கும் யாதொரு சம்மந்தமுமில்லை. ஆதி காலத்தில் சூரியன் சந்திரன் போன்ற வானத்து உருவங்களையும் கண்ணில் படாத தெய்வங்களையும் கொண்டு உருவாக்கப்பட்டது சோதிட மாகும். அது ஒருவகை நம்பிக்கையாகும். வானவியல் என்பது ஆதி காலத்லிருந்தே திசைகளை அறியவும், மழை தட்ப வெப்பங்களைக் கணித்திடவும், எல்லாவற்றிற்கும் மேலாக மாதங்களையும், வருடங் களையும் கணக்கிடவும், வானத்தையும் அங்கு உலாவும் கண்ணில் படும் உருவங்களையும் இணைத்து உருவாக்குவதில் துவங்கி, இன்று மிகவும் முன்னேறிய தொழில்நுட்பங்களை உருவாக்க பயன்படும் விஞ்ஞானமாகும். சோதிடர்கள்  நம்பிக்கைகளுக்கு விஞ்ஞானச் சாயம் பூச வானவியல் தகவல்களையும் சில சொற்களையும் பயன் படுத்துகின்றனர். சோதிடம் , ஜாதகம், வைரக்கற்களின் பலன்கள், ஆரூடம் இவைகளின் மீது நம்பிக்கை என்பது ஒருவரின் உளவியல் சம்மந்தப்பட்டது. வானவியல் என்பது அறிவியல் சம்மந்தப்பட்டது. அது அகம், இது புறம் .இரண்டையும் இணைத்துக் குழப்பக் கூடாது.

சர்ச்சைகள்

ஆய்வுகள் செய்து தகவல்களை சேகரித்து, உண்மைகளைத் தேட சர்ச்சைகள் செய்வது விஞ்ஞானிகளின் தொழில். இன்று அது உலக அளவிலான தொழில்; அந்த வகையில் இந்த ஆண்டு கூடிய வானவியல் அறிஞர்கள் கிரகங்கள் பற்றிய ஒரு சர்ச்சைக்கு முடிவு கட்டினர். இந்த சர்ச்சை 1990 லிருந்து சூடாக நடந்து வருகிறது. சூரியனைச் சுற்றுபவைகள் எல்லாம் கிரகங்களாகிவிடாது; கிரகங்களின் லட்சணத்தை வரையறை செய்யவேண்டும் என்ற அந்த சர்ச்சைக்கு இந்த ஆண்டு நடந்த வானவியல் மாநாடு முடிவு செய்தது. அதன்படி கிரகங்கள் மூன்று லட்சணங்களை கொண்டதாக இருக்கவேண்டும். சூரியனைச் சுற்றும் இந்த மூன்று பொறுத்தமு மில்லாத உருவங்களுக்கு வேறு பெயர்கள் வைத்து வகைப்படுத்த வேண்டும். கிரகங்கள் என்றால் (அ)சூரியனையோ அல்லது ஒரு நட்சத்திரத்தையோ சுற்றி வரவேண்டும்(ஆ)சொந்த கனத்தால் கொண்ட ஈர்ப்புவிசையினால், கோளவடிவை பெற்று இருக்க வேண்டும் (இ)அதனருகில் வானத்து உதிரிகளை கொண்ட வளையங்கள் எதுவுமில்லாமல், சுத்தமாக இருக்கவேண்டும்.  சூரியனிலிருந்து சுமார் 35 கோடி கிலோமீட்டருக்கு அப்பால் கோளவடிவ உருவம் சூரியனை வலம் வருவதை 1930ல் கண்ட விஞ்ஞானிகள் அதற்கு புளுட்டோ என்று பெயர்வைத்து 9 வது கிரகம் என்றனர். இந்த ஆண்டு கூடிய மாநாட்டில் புளுட்டோ கிரக வகை ஆகாது, கிரகங்களுக்குரிய மூன்றாவது லட்சணம் அதற்கு இல்லை, அதனைச்சுற்றி உதிரிகளைக்கொண்ட வளையம் இருக்கிறது. எனவே அதனை குள்ளகிரக பட்டியலில் வைப்பதே பொருத்தமென முடிவு செய்தனர். புதியமுடிவின்படி 8 கிரகங் களாவன: மெர்குரி, வீனஸ், பூமி, மார்ஸ், ஜூபிடர், சாட்டர்ன்,  யூரேனஸ், நெப்டீயூன் ஆகியவைகளே.

அன்று முதல் இன்று வரை

ஆதிகாலத்தில் நாட்டுக்கு நாடு, இந்தஆய்வு வேறுபட்டது என்றாலும்  பூமியும், நட்சத்திரங்களும் நிலையாக இருப்பதாகப் பொதுவான கருத்து இருந்தது. பூமியைச்சுற்றும் 7கிரகங்கள் எனவும் அவைகள் நிலா, மெர்குரி சூரியன், மார்ஸ், ஜூபிடர், சாட்டர்ன் என்று சில நாடுகளிலும் வேறு நாடுகளில் வேறு பெயர்களிலும் அழைத்தனர். 16 ம் நூற்றாண்டிற்கு பிறகுதான் சூரியனை, பூமி உட்பட சுற்றுவது கண்டுபிடிக்கப்பட்டது.  நிலாவையும் (நிலா பூமியைச் சுற்றும் உப கிரகம் என வகைப்படுத்தப்பட்டது) சூரியனையும் கிரகங்களின் பட்டியலிலிருந்து எடுத்துவிட்டு பூமியை கிரகங்களின் பட்டியலில் சேர்த்து மொத்தகிரகங்கள் 6 என்றனர். 1781க்குப்பிறகு டெலஸ்கோப் மூலம்  பல புதிய கனமான உருவங்கள் சூரியனைச் சுற்றுவதைக் கண்டனர். அவைகளை கிரகங்களின்  பட்டியலில் சேர்த்தனர். 1852க்குள் கிரகங்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது. 1852ல்மீண்டும் சர்ச்சைகள் எழுந்தது. சூரியனைச் சுற்றும் உருவங்களை வகைப்படுத்த வேண்டும், எல்லாம் கிரகங்கள் என்று கூறுவது பொறுத்தமல்ல என்று முடிவு செய்தனர். இப்பொழுது கிரகங்கள் 8 என்று ஆனது. ஆனால் 1930ல் சக்தி வாய்ந்த டெலஸ்கோப் மூலம்   ஆராய்ந்தபொழுது 35கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் கோளவடிவில் ஒரு உருவம் சூரியனை சுற்றி வருவதை கண்டனர். இதற்கு புளுட்டோ என பெயர்சூட்டி 9வது கிரகம் என அறிவித்தனர். 2006ல் புளுட்டோவை குள்ளக் கிரகப் பட்டியலில் சேர்த்துவிட்டனர்.

சூரியக் குடும்பம்

சூரியக் குடும்பம் மிகப்பெரியது. ஆனால் வானத்தில் உள்ள நட்சத்திர மண்டலங்களை ஒப்பிடும் பொழுது இதன் அளவு கடுகுதான். 50ஆண்டுகளுக்கு முன்னர்தான், நட்சத்திர மண்டலங் களைப் பற்றிய, உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவைகள் விரிந்துகொண்டே போகின்றன எனக்கண்டனர். இன்றைய கணக்கின் படி சூரியக்குடும்பத்தில் 8 கிரகங்கள், அவைகளைச் சுற்றும் 158 நிலாக்கள், 3 குள்ளகிரகங்கள், அவைகளைச் சுற்றும் 4 நிலாக்கள், 2தூசி நிறைந்த வளையங்கள் (சுமார் 35 கோடி கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் ஆஸ்ட்டிராய்டு பெல்ட் மற்றும் இதைப்போல் 10 மடங்குதூரத்தில் இருக்கும் குயிப்பர் பெல்ட்) அவைகளுக்குள் இருக்கும் ஆயிரக்கணக்கான சிறிய பெரிய உருவங்கள்  என்று எண்ணில் அடங்கா அமைப்பாகும். சூரியனுக் கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் சுமார் 14 கோடியே 95 லட்சத்து 98 ஆயிரம்  கிலோமீட்டர்கள். அதாவது ஒளியின் வேகத்தில் (ஒளியின் வேகம் வினாடிக்கு 2 லட்சம் கிலோமீட்டர்) 8 நிமிட தூரம் சூரியமண்டலத்திற்கும்  மிக அருகிலிருக்கும் நட்சத்திர மண்டலத்திற்கும் இடையே உள்ள தூரம். ஒளி வேகத்தில் நாலரை ஆண்டு தூரமாகும். சூரியனின் எடை பூமியைப்போல்  3 லட்சம் மடங்கு கனமானதாகும். சூரியனை சுற்றும் கிரகங்களை உள் மண்டல கிரகங்கள், வெளிமண்டல கிரகங்கள் எனப் பிரித்துள் ளனர் அதாவது ஆஸ்ட்டிராய்டு பெல்ட் என்று அழைக்கப்படும் முதல் ஒளி வளையத்திற்கு உள்ளே  உள்ள கிரகங்கள், வெளியே உள்ள கிரகங்கள் என வகைப்படுத்தி உள்ளனர். உள் மண்டல கிரகங்கள் மெர்க்குரி, வீனஸ், பூமி, மார்ஸ். வெளி மண்டல கிரகங்கள் ஜூபிடர், சாட்டர்ன், யூரேனஸ், நெப்டீயூன். இந்த வெளிமண்டல  கிரகங்களை வாயு ராட்சஸர்கள் என அழைக்கின்றனர். ஜூபிடர் பூமியின் எடையைப்போல் 318 மடங்கு கனமானது. சாட்டர்ன் 95 மடங்கு கனமானது. யூரேனஸ் 14 மடங்கும், நெப்டீயூன் 17 மடங்கும் கனம் கொண்டது. உள்மண்டல கிரகங்கள் அனைத்தும் கெட்டியானது, பாறைத்தன்மை கொண்டது. வெளிமண்டல கிரகங்கள் அனைத்தும் வாயுத்தன்மை கொண்டது. இதுதவிர ஆஸ்ட்டிராய்டுகள் என்று அழைக்கப்படும் எடைகுறைவான சிறு கிரகங்கள் மெட்டிராய்டுகள் என்று அழைக்கப்படும் விண்கற்கள் சூரியனை வலம் வருகின்றன. இந்த விண்கற்களுக்கு ஈர்ப்புசக்தி மிக மிகக் குறைவு.  இவைகள் கிரகங்களை நெருங்குகிற பொழுது இழுக்கப்படுவதுண்டு. இவ்வாறு பூமியில் விழுந்த விண்கற்களை கண்டெடுத்துள்ளனர். பூமியினால் ஈர்க்கப்படும் பல விண்கற்கள் காற்றிலே உரசி எரிந்துவிடுவதால் நாம் தப்பி வாழ்கிறோம்.

வானவியலும் விஞ்ஞான தொழில்நுட்பப் புரட்சியும்                                                                   

நவீன தொழில் நுட்பங்கள் பல வானவியலை அடிப்படையாக கொண்டுள்ளன. செயற்கை கோள்கள் உருவாக்கி வரும் தகவல் புரட்சி மானுட வாழ்க்கையையே மாற்றிவிட்டது. எல்லா துறையிலும் புதிய நுட்பங்களை புகுத்திவிட்டது. தட்ப வெப்பங் களை  முன் கூட்டியே அறிய முடிகிறது.  விவசாயத்தில் புதிய நுட்பங் கள் புகுத்தப்பட்டு உற்பத்தி பல மடங்கு உயர்ந்து விட்டன. இவை அனைத்தும் இயற்கையில் இருக்கும் கோள்கள் நட்சத்திரங்கள் ஒளி வட்டங்கள் ஆகியவைகளை ஆய்வு செய்து பெறப்பட்ட ஞானத்திலிருந்து உருவாக்கப்பட்டவைகளாகும்.  தமிழகத்தில் பிறந்த விஞ்ஞானி சந்திரசேகர் நட்சத்திரத்தினுள் உருவாகும் வெப்பசக்திக்கும், அங்கிருக்கும் மூலகங்களுக்கும், அதனுடைய கனத்திற்கும் உள்ள தொடர்பைக் கண்டறிந்தார். அதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவருடைய கண்டு பிடிப்பு நட்சத்திரங்களை பற்றி மட்டுமல்ல, அணு உலைகளுக்குள் நடப்பதை கணக்கிட பெரிதும் உதவும்.  சுருக்கமாகச் சொன்னால் வானவியல்தான் மூத்த விஞ்ஞானமாகும். கடந்த 496 ஆண்டுகளாக போராடி வளர்ந்த விஞ்ஞானமாகும். வீரமும், தியாகமும் நிறைந்தவர்கள் பெற்று தந்த ஞானமாகும். .500 ஆண்டுகளுக்கு  முன்னால் வானத்தை ஆராய டெலஸ்கோப் போன்ற கருவிகள் கிடையாது. இன்று விஞ்ஞானத்திற்கு இருக்கிற மரியாதையும் அன்று கிடையாது. மத நம்பிக்கைகளின் ஆதிக்கம் மக்களை ஆட்டிப் படைத்தது. அறிவுலகம் அதன் பின்னால் சென்றது.

1513-ல் போலந்து நாட்டை சார்ந்த கோப்பர்நிக்கஸ் சூரியனை பூமி உருண்டு சுற்றுகிறது எனக்கண்டார்.  இவர் ஒரு பாதிரியார். கணக்கியல், மருத்துவம், கற்றவர். இரவில் வானத்தை ஆராய்வது கிரகங்களின் நடமாட்டத்தை விடிகிறவரை கவனிப்பது. அதுவும் வருடக் கணக்கில் உற்றுப்பார்ப்பது இவரது இடைவிடா முயற்சியாக இருந்தது. இதற்காக இவர் ஒரு உயரமான மாடமே கட்டிக் கொண்டார். அவ்வாறு கவனித்ததில் மார்ஸ் என்ற கிரகம் பூமியைச் சுற்றவில்லை. வானத்தில் இங்குமங்கும் நடமாடுவதைக் கண்டார். பூமியும், மார்ஸூம் சூரியனைச் சுற்றப்போய்த்தான் அவ்வாறு தேண்றுகிறது என அனுமானித்தார்.  தான்கண்டு பிடித்த உண்மை களை மதபீடம் ஏற்காது; பூமி நிலையானது என்று கருதும் அறிவுலகமும் ஏற்காது.  வெளியே சொன்னால் அறிவுலகம் சபிக்கும், மதபீடம் வறுத்தெடுக்கும், என்பதை  உணர்ந்தார். மேலும் 17 ஆண்டுகள் ஆய்வில் இறங்கினார். வானத்து கோளங்களின் சுழற்சிகள் என்ற நூலை எழுதி முடித்தார். அன்று மதபீடமும் அறிவுலகமும் ஒரு நடைமுறை சிக்கலை தீர்க்க முடியாமல் இருந்தனர். பூமியை மையமாகக்கொண்டு சூரியன், நிலா இவை இரண்டும் அதனை சுற்றுவதாக வைத்து வருடத்தை அளக்க முடியவில்லை. ஒவ்வொரு முறையும் காலண்டரை திருத்தும் நிலை வந்தது, அன்று இருந்த போப் இவரிடம் ஆலோசனை கேட்டார். இவர் சூரியனும் நிலாவும் ஒருவருடத்தில் எத்தனை முறை சுற்றுகின்றன என்பதைச் சரியாக கணக்கிட வில்லை என்று கூறி ஒதுங்கி கொண்டார். சூரியனை பூமி சுற்றுகிறது என்று கொண்டால் எளிதில் வருடத்தை கணக்கிட முடியும் என்ற உண்மையைச்  சொல்லவில்லை.

1530ல் எழுதிய நூலையும் வெளியிட விரும்ப வில்லை. ஆனால் தனது மாணவர்களுக்கு தனது ஆய்வை கூறி வந்தார். ஒரு முறை போப் கிளமெண்டை சந்தித்து தனது ஆய்வை விளக்கினார். அவரும் இவரது ஆய்வு நூலை வெளியிட அனுமதி கொடுத்தார். கோப்பர்நிக்கஸ் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையானார். 1543ல் தனது மாணவன் ரெசிட்டஸ் மூலம் தான் எழுதியதை வெளியிட ஏற்பாடு செய்தார். ஆனால் ரெசிட்டஸ் ஊரைவிட்டு வெளியேற வேண்டிய நிலையில் கையெழுத்துப்பிரதி லூதரன் பாதிரியார் ஒசியாண்டர் கையில் சிக்கியது. அவர்அதை படித்து கோப்பர்நிக்கஸிடம் கேட்காமலே பூமிமைய கொள்கையை ஆதரிக்கும் சில வாசகங்களை சேர்த்து சில இடங்களை திருத்தியும் வெளியிட்டார். இருந்தாலும் அன்றைய அறிவுலகம் நூலைத் தாக்கியது. போப்பண்டவர் அனுமதி கொடுத்ததால் கத்தோலிக்க மதத்தினர் எதிர்ப்பை அவ்வளவாக காட்டவில்லை. ஆனால் புராட்டஸ்டெண்டு பாதிரியார்கள் கடுமையாக எதிர்த்தனர். பைபிளுக்கு விரோதம் என்றனர். கோப்பர்நிக்கஸின் சூரியமையக் கொள்கை பரவினால் மானுடத்தை சுற்றி இயற்கை படைக்கப் பட்டிருக்கிறது என்ற நம்பிக்கையை மக்கள் இழப்பர் என்றனர். அடுத்துவந்த போப்பும் 1616 ல் கோப்பர்நிக்கஸின் கருத்தை பரப்ப தடை விதித்தார். அன்றைய அறிவுலகமும் கோப்பர் நிக்கஸின் விளக்கத்தை ஏற்கவில்லை. அவர்களது ஒரு கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை.

பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனை வலம் வருகிறது என்றால் ஏன் பூமியில் இருக்கும் பொருட்கள் உருண்டு கிழே விழவில்லை? இதற்கு விடை கோப்பர் நிக்கஸிடமில்லை. இதனால் பல ஆண்டுகள் சூரியமையக் கொள்கை யைச் சீண்டுவார் இல்லை. அதனை பரப்ப முயன்றவர்களை மதபீடங்கள் தீயில் வறுத்தனர். இக்கொள்கையை தவறு என்று நிருபிக்க டைகோபிரேக் என்பவர் ஆய்வில் இறங்கினார். கோப்பர்நிக்கஸ் பயன்படுத்திய கருவியை விட துல்லியமான கருவிகளைக் கொண்டு வானத்தை ஆராய்ந்து தகவல்களை சேகரித்தார். கோப்பர்நிக்கஸ் கூறியது தவறு. ஏனெனில் வானத்தில் உள்ள எதுவும் வட்டப்பாதையில் செல்லவில்லை. நட்சத்திரங்கள் வெகுதூரத்தில் உள்ளன. அவைகள் நகர்கிறதா என்று சொல்ல முடியாது. பூமி நகரவுமில்லை ஓடவுமில்லை என்று அறிவித்தார்  சூரியமைய கோட்பாடு பரவினால் : கடவுள் நம்பிக்கை போகும், கடவுள்  நம்பிக்கை போனால்,  மன்னர்கள் கடவுளின் அம்சம் என்ற நம்பிக்கை போகும், என்று பயந்த ஐரோப்பிய மன்னர்கள் பல பரிசுகள் கொடுத்து தங்களது ஆஸ்தான ஆலோசகராக டைகோபிரேக்கை ஆக்க போட்டி போட்டனர். அவரது புகழை திக்கெட்டும் பரப்பினர். டென்மார்க் நாட்டு மன்னர்  இவருக்கு ஒரு தீவையே பரிசாக கொடுத்து ஆலோசகராக நியமித்துக் கொண்டார். சண்டை போட்டுக் கொண்டிருந்த மத பீடங்களும் இவரைப் போற்றுவதில் ஒன்றுபட்டுநின்றன. வேடிக்கை என்னவெனில் இவர் சேகரித்த தகவலிலும் சில உண்மைகள் இருந்தன.  டைகோபிரேக் பூமி மைய கோட்பாட்டை நிருபிக்க  சேகரித்த தகவல்களை கொண்டு பின் நாளில் சூரிய மையக்கோட்பாட்டை கெப்பலர் (1571 பிறப்பு – 1630 மறைவு) நிருபித்தார். ஆனால், சூரியமைய அமைப்பை நிலைநாட்டியவர் இத்தாலி நாட்டு கலீலியோ (1564 பிறப்பு – 1642  மறைவு)  ஆவார். இவர் பூதக்கண்ணாடி கொண்டு டெலஸ்கோப்பை உருவாக்கி வானத்தை ஆராய்ந்தார். கோப்பர்நிக்கஸ் மறைந்து 90 ஆண்டுகள் கடந்துவிட்டன.

1633ல்  கலீலியோ ஒரு நீண்ட தலைப்பு கொண்ட நூலை வெளியிட்டார்; இரண்டு முக்கிய உலக அமைப்புக்கள்  சம்மந்தப்பட்ட வாதப்பிரதிவாதம்- டாலமி கோப்பர் நிக்கன் அமைப்புகள் என்பது தலைப்பு, இந்த நூலை வெளியிட்ட குற்றத்திற்காக அன்றைய போப்பால் ரோமிற்கு இழுத்து வரப்பட்டார். 1616ல் கத்தோலிக்க மத பீடம் இட்ட கட்டளையை மீறி கோப்பர்நிக்கஸின் கருத்தை பரப்பிய குற்றத்திற்காக  ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு கலீலியோ சிறையில் தள்ளப்பட்டார். கலீலியோ கோப்பர்நிக்கஸின் சூரியமைய அமைப்பை உறுதி செய்தார். வானத்தில் உள்ள எல்லாமே ஒன்றை ஒன்று சார்ந்து சுழல்கின்றன என்பதையும் நிருபித்தார்.  கோப்பர் நிக்கஸால் விடை கொடுக்க முடியாமல் தவித்த கேள்விக்கு பின்னர் கலீலியோவும், ஐஸக்நியூட்டனும் விடைகண்டனர். பூமி தானும் சுற்றி சூரியனை வலம் வந்தாலும் பூமியில் இருப்பவைகள் உருண்டு கீழே விழாமல் இருப்பதற்கு  அதனுடைய ஈர்ப்பு விசையே காரணம்  என்று நிருபித்தனர். கோப்பர்நிக்கஸ் மறைந்து 144 ஆண்டுகள் கடந்தபிறகு, 1687 ல் நியூட்டன் வெளியிட்ட இயற்கை தத்துவத்தின் கணக்கியல் கோட்பாடு என்றநூலில் இக்கோட்பாடு தெளிவு படுத்தப்படுகிறது. 20ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஐன்ஸ்டீன் உருவாக் கிய ஈர்ப்புபரப்பு, காலம், பொருள், இயக்கம் பற்றிய கோட்பாடு இயற்கையை மேலும் புரிய உதவியது.

விஞ்ஞானம்

மொத்தத்தில் விஞ்ஞானங்களின் தாய் வானவியல் ஆகும். மூட நம்பிக்கைகளை எதிர்த்த போரை வானவியல்தான் துவக்கியது. அதில் ஈடுபட்ட ஆரம்பகால விஞ்ஞானிகள் மன்னர்களாலும் மதபீடங்களினாலும் வேட்டையாடப்பட்டனர். முச்சந்தியில் வைத்து எரிக்கப்பட்டனர். பூமி கோள வடிவு  சூரியனை இடது பக்கமாக சுற்றுகிறது என்ற உண்மையை உலகம் அறியாத காலத்தில் கோப்பர்நிக்கஸின் கண்டுபிடிப்பு மக்களை அதிரவைத்தது. செத்தபிறகு வானத்திலிருக்கும் சிவலோகம், வைகுந்தம், ஏகலாம் என நம்பியவர்களின் மனதுகள் இதை ஏற்கமறுத்தன. ஜோகன் உல்ப் காங் வான் கதே  என்ற ஜெர்மானிய அறிஞன் கோப்பர் நிக்கஸின் சாதனையைப் பாராட்டுகிற பொழுது கீழ்க்கண்டவாறு குறிப்பிடு கிறார். கோப்பர்நிக்கஸின் கோட்பாடு போல் வேறு எந்தக் கண்டு பிடிப்போ, கருத்தோ, மானுட ஆன்மாவை உலுக்கவில்லை. பூமி உருண்டையானது என்றோ, பூமிதான் அண்ட சராசரத்தின் மையம் என்ற சிறப்புத் தகுதி அதற்கு இல்லை என்பதையோ உலகமறியாத காலத்தில், இதை ஏற்றுக்கொள் என்பதைவிடப் பெரியதை எதுவும் இதுவரை மானுடத்திடம் கேட்கப்படவில்லை. இதனை ஏற்றால் எத்தனையோ விஷயங்கள் பனியாய், புகையாய் மறைந்துவிடுகின்றன. ஈடன் என்ற  நம்முடைய கழிவிறக்கமும், கவித்துவமும் நிறைந்த  அப்பாவி உலகம் நம்முடைய உணர்வின் அத்தாட்சியாகும் அது என்னாவது? அந்த கவித்துவம் நிறைந்த மத உறுதி என்னாவது? இதையெல்லாம் விட்டுவிட அன்று யாரும் விரும்பவில்லை; உலகம் இதுவரை கனவுகூட காணாத ஒரு உன்னத கருத்தை அதனை ஏற்பதின் மூலம் கருத்துச் சுதந்திரத்தை உறுதி செய்யும் ஒரு கோட்பாட்டை எல்லா வகையிலும் எதிர்த்தனர் என்று கதே கோப்பர் நிக்கஸிற்கு புகழாரம் சூட்டுவதோடு கருத்து சுதந்திரத்தை காக்க அறிவுறுத்துகிறார்.

அடுத்த நூற்றாண்டில் கத்தோலிக்க மத பீடத்தால் தண்டிக்கப்பட்டு கண்குருடான பிறகும் சிறையிலே வாழ்ந்து மடிய நேர்ந்த கலீலியோவை பவுதீக விஞ்ஞானத்தின் தந்தை என ஐன்ஸ்டீன் புகழ்ந்தார். 1979ல் கத்தோலிக்க மத பீடம் ஒரு விசாரணைக் குழுவைப் போட்டது. 1633ல் கலீலியோவை தண்டித்தது சரியா? என்று அந்தக் குழு பரிசீலித்தது. அந்தக் குழு தண்டனை தவறு என்றது. 1992 ல் கத்தோலிக்க மத பீடம் கலீலியோவை, அன்று தண்டித்தது தவறு என்று ஏற்றுக்கொண்டது. 20 ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஐன்ஸ்டீன் கதை வேறு. அவரது கண்டுப்பிடிப்பிற்காக அவரைத் தூக்கிலிட ஜெர்மானிய ஆட்சியாளர்கள் உத்தரவிட்டனர். அவர் பிடிபடாமல் அமெரிக்கா சென்றுவிட்டார். இதில் வெட்கப்பட வேண்டிய விவகாரம் என்னவெனில், ஜெர்மானிய அறிவுலகம் ஹிட்லரின் ஆட்சிக்குப் பயந்து குரல் எழுப்பாமல் போனதுதான். விஞ்ஞானத்தின் வரலாறு நமக்கு போதிப்பதென்ன? மானுடம் முன்னேற அறிவு பரவவேண்டுமானால் கருத்துக்கூறும் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். கருத்துக்களிடையே நடக்கும் போட்டியை வளர்க்க வேண்டும்; தத்துவார்த்தப் போராட்டத்தை மார்க்சிஸ்ட்டுகள் வலியுறுத்த காரணமென்ன? உண்மைகளை அறிய அது ஒன்றே வழியாகும். எனவே, உண்மைகளைத் தேடி சர்ச்சைகள் வளரட்டும், மக்களின் பங்கேற்பும் கூடட்டும் என்று நாமும் முழக்கமிடுவோம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s