கம்யூனிஸ்ட்டுகளும் கருத்துப் போராட்டமும் – III


மகத்தான ரஷ்யப் புரட்சி உலக வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். இந்தப் புரட்சியின் வரலாற்று குறித்தோ அல்லது அந்தக்கட்டத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்தோ விளக்கமாக எடுத்துரைப்பது இந்தக்கட்டுரையின் நோக்கமல்ல. ஆயினும், அத்தகையதொரு ஆழமான பரிசீலனையானது பெரும் படிப்பினைகளை அளிக்கக் கூடியவையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அந்த காலக்கட்டத்தில் கொந்தளிப்பான நிகழ்வுகளின் போக்கில் எவ்வாறு கருத்துப் போராட்டங்கள் பெரியதோர் பங்கினை அளித்தது என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். அதில் முக்கியமான கருத்து மோதல்களைப் பற்றி மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்.

இந்தப் புரட்சிக்குப் பின் உலக அளவில் மிகப் பிரமாண்டமான பேரெழுச்சிகளும், கூர்மையான போராட்டங் களும் நடந்தன. ஐரோப்பாவில் பல நாடுகளில் தொழிலாளி வர்க்கத்தின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தப் போராட்டங்கள் விரைவிலேயே அரசியல் அதிகாரத்திற்கான போராட்டமாகக் கூட உருவெடுத்தது. எல்லா நாடுகளிலேயும் (ஐரோப்பாவில்) முதலாளித்துவ ஆட்சிகளை தூக்கி எறிந்துவிட்டு மாற்று ஆட்சிகள் தோன்றும் சூழ்நிலைகள் கூர்மையாகவே தோன்றின. இந்த நேரத்தில் தொழிலாளி வர்க்க இயக்கத்திலும் குறிப்பாக, தொழிற்சங்க இயக்கத்திலும் பல நாடுகளில் பிரபலமாக வளர்ந்து நாடாளு மன்றங்களில் கூட செல்வாக்குடன் விளங்கிய தொழிலாளி வர்க்க கட்சிகளிடையேயும் கடுமையான கருத்து வேற்றுமைகளும், மோதல்களும் வெளிப்பட்டன. எழுச்சியைத் தொடர்ந்து தொழிலாளி வர்க்க அதிகாரத்திற்கான போராட்டத்தை எவ்வாறு தலைமை தாங்கி நடத்துவது, நடைமுறைத் தந்திரங்கள் எவ்வாறு இருக்க வேண்டும், அரசின் வர்க்கத்தன்மை பற்றிய நிர்ணயிப்பு போன்ற ஏராளமான பிரச்சனைகளை இயக்கம் சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எல்லாம் சேர்த்துதான், கருத்து மோதல்கள் நடைமுறை முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனையாக கம்யூனிஸ்ட் இயக்கத்திலும் வெளிப்பட்டது. உருவான பேரெழுச்சியை தொழிலாளி வர்க்க அதிகாரத்திற்கான கடுமையான போராட் டமாக எவ்வாறு நடத்திச் செல்வது, அமைக்கக் கூடிய ஆட்சிகள் எத்தகைய தன்மைகள் கொண்டவையாக இருக்க வேண்டும், நாடாளுமன்ற ஜனநாயக அமைப்புகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும், தொழிலாளி வர்க்கம் அமைக்கக் கூடிய அரசின் தன்மைகளை எவ்வாறு புரிந்து கொள்வது, இதர வர்க்கங்கள் – விவசாயிகள், விவசாயத் தொழிலாளிகள், உழைக்கும் நடுத்தர மக்கள், குட்டி பூர்சுவா பகுதியினரின்பால் தொழிலாளி வர்க்கக்கட்சியின் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும் – இது போன்ற ஏராளமான தத்துவார்த்த தன்மையும் நடைமுறை முக்கியத்துவம் கொண்ட கேள்விகள் முன்னுக்கு வந்த காலம். ஏற்கனவே கம்யூனிஸ்ட் இயக்கத்தில் கம்யூனிஸ்ட்டுகளுக்கும், சமூக ஜனநாயக வாதிகளுக்கும் இடையில் தோன்றியுள்ள கூர்மையான கருத்து மோதல்கள் மேலும் தீவிரமடைந்தன. அநேகமாக எல்லா நாடுகளிலும் இந்த மோதல்கள் மேலோங்கின.

இந்தச் சூழலில் தான், 1919 ல் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்முயற்சியுடன் மூன்றாம் கம்யூனிஸ்ட் சர்வதேச அமைப்பு உருவாயிற்று (மூன்றாம் அகிலம்). அதற்கு முன்பிருந்தே செயல்பட்டு வந்த சீர்திருத்தவாத தொழிலாளர் கட்சிகளை உட்கொண்ட சர்வதேச அமைப்பினை இரண்டாம் அகிலம் என்ற பெயரில் அறியப்பட்டது. ஒவ்வொரு நாட்டிலும் பொதுவாக, மூன்றாம் அகிலத்தின் புரட்சிகரமான அரசிற்கும் மிதவாத சீர்திருத்த வாதப் போக்குகளைப் பிரதிபலித்த இரண்டாம் அகிலத்திற்கும் இடையில் அனைத்துத் துறைகளிலும் மோதல்கள் தீவிரமடைந்தன. கருத்து மோதல்களுடன் இணைந்து மிகப்பிரம்மாண்டமான புரட்சிகரமான எழுச்சிகள் பரவிக்கொண்டிருந்தன. கோடிக்கணக் கான உழைப்பாளி மக்கள் மத்தியில் இந்த மோதல்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் தோழர் லெனின் தலைமையில் செயல்பட்டு வந்த மூன்றாம் அகிலம் பழமைவாதத்தின் கட்சிகளாகிய இரண்டாம் அகிலகத்துடன் இணைந்த கட்சிகளுடன் மிகக் கூர்மையான கருத்துப்போரை நடத்தியது. இந்தக்கடுமையான மோதல்களில் தான் கம்யூனிஸ்ட் இயக்கம் ஏராளமான நாடுகளில் வலுப்பெற்று வெகுஜன செல்வாக்குடன் வளர்ந்து முன்னேறியது. கம்யூனிஸ்ட் கட்சிகளின் தோற்றமும், வளர்ச்சியும் செயல்பாடுகளும் இருபதாம் நூற்றாண்டின் ஒரு முக்கிய அம்சமாக உருப்பெற்றது. வெகுஜனப் போராட்டங்களும், தத்துவார்த்தப் பணிகளும் அவற்றுடன் இணைந்த கருத்துப் போராட்டமும் சேர்ந்து தான் கம்யூனிஸ்ட் இயக்கத்தை இந்த அளவிற்கு உயர்த்தியது. இந்தியாவிலும் படிப்படியாக கம்யூனிஸ்ட் இயக்கம் வேரூன்றி முன்னேறியது. இயல்பாகவே இந்திய சுதந்திரப் போராட்டத்தில் புரட்சியாளர்களின் பாத்திரம் குறித்து இளைஞர்கள் மத்தியில் பெரிய சர்ச்சைகள் கிளம்பின.

ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டமும் கம்யூனிஸ்ட்டுகளும்

ரஷ்யப் புரட்சிக்குப் பின் அதன் தாக்கத்தின் காரணமாகவும், நம் நாட்டிற்குள் வேகமாக வளர்ந்த ஏகாதிபத்திய எதிர்ப்பினை பிரதிபலிக்கக் கூடிய வகையிலும் இந்தியாவிலும் மிகத் தீவிரமான ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்கள் பல இடங்களில், பல வடிவங்களில் வெடித்தன. இந்த எழுச்சிகளுக்கு  தலைமைதாங்கியது தேசிய முதலாளிகளுடைய கட்சியாகிய இந்திய தேசிய காங்கிரஸ் தான். இந்தக்கட்சியானது நாடுதழுவிய பிரிட்டிஷ் ஆதிக்க எதிர்ப்பு இயக்கத்தில் பங்கேற்ற மக்களுக்கு  வழிகாட்டும் நிலையிலிருந்தது. அதே நேரத்தில் காங்கிரஸின் தலைமை முதலாளி வர்க்கத் தன்மை கொண்டது என்பது மட்டுமல்ல, அதன் வர்க்க குணம் காரணமாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை உறுதியாக எதிர்க்கும் உறுதிப் பாட்டுடன் இருக்கவும் இல்லை. இந்தக் கட்சியுடனும், தலைமையு டனும் எத்தகைய உறவுகளை வைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து இந்திய இளம் கம்யூனிஸ்ட்டுகளுக்கிடையே கருத்து வேறுபாடுகளும்  பலவிதமான குழப்பங்களும் தெளிவின்மையும் இருந்தது. ஆயினும், சுதந்திரமில்லாத சூழலில் இந்த அமைப்பினை (காங்கிரஸ்) புரட்சிகரமாக மக்களைத் திரட்டுவதற்கும் பயன்படுத்த வேண்டுமென்ற யோசனையை கம்யூனிஸ்ட் அகிலம் வழங்கியது. (கம்யூனிஸ்ட் அகிலம் இத்தகையதொரு முடிவுக்கு வருவதற்கு முன், பெருமளவில் சர்ச்சைகளும், கருத்து மோதல்களும் மூன்றாவது அகிலத்தில் நடைபெற்றது.)

இறுதியாக பூர்சுவா தலைமையில் குறைபாடுகளையும், தவறான கண்ணோட்டங்களையும் எதிர்க்கக் கூடிய நேரத்திலேயே அந்த இயக்கத்தின்பின் திரண்டிருந்த மக்களுடன் தொடர்பு கொள்ளும் வகையில் கம்யூனிஸ்ட்டுகளுடைய நடைமுறை தந்திரங்கள் இருத்தல் வேண்டும் என்று அகிலத்தில் முடிவாயிற்று. இதைத் தொடர்ந்து புதிதாக இயங்கத் தொடங்கிய கம்யூனிஸ்ட் தோழர்கள் காங்கிரசுடன் சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் பங்கேற்றுக் கொண்டே, அத்தலைமையின் பிற்போக்கான வாதங்களையும், நடைமுறைகளையும் பக்குவமாக விமர்சிக்க, அம்பலப்படுத்த முன்வந்தனர். சுருங்கக் கூறின், காங்கிரஸ் தலைமையின் தவறான கண்ணோட்டங்களுக்கு எதிராக கம்யூ னிஸ்ட்டுகள் தீவிரமான கருத்துப்போராட்டத்தை நடத்தினர் என்பது தான் மிகப் பெரிய உண்மை. ஒன்றுபட்ட நடவடிக்கையும், அத்துடன் இணைந்து கருத்துப்போரையும் நடத்தியதன் விளைவாக இந்தக்காலக்கட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவு கம்யூனிஸ்ட் டுகளின் சரியான தத்துவார்த்த நிலைபாடுகளை ஏராளமான காங்கிரஸ்காரர்கள் ஏற்றுக் கொண்டு தீவிர எண்ணம் கொண்ட பலரும் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தனர். இவ்வாறு காங்கிரஸ்காரர்களாகவும் இருந்து அல்லது  காங்கிரசுடன் ஒத்துழைத்து செயல்பட்ட ஏராளமான தோழர்கள் பிற்காலத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் முக்கியத் தலைவர்களாக வளர்ந்தனர். தோழர்கள் பி.சுந்தரையா, இ.எம்.எஸ்., ஏ.கே.ஜி., கிருஷ்ணபிள்ளை, பி.ராமமூர்த்தி, ஜீவானந்தம், பி.சீனிவாசராவ் போன்றவர்களைக் குறிப்பிடலாம்.

அகில இந்திய அளவிலும் ஏராளமான கம்யூனிஸ்ட் தலைவர்கள் தேசிய இயக்கத்தின் மூலம் நமது இயக்கத்திற்கு வந்தவர்களே. இது எவ்வாறு சாத்தியமாயிற்று என்பதைப்பற்றி யோசித்துப் பார்ப்போம். கூட்டு இயக்கங்கள், போராட்டங்கள் போன்றவற்றில் மூலம் கிடைத்த அனுபவங்கள், இத்தலைவர்களை இந்தப் பாதைக்கு அழைத்து வந்தது. கூட்டுப்போராட்டத்தில் பங்கேற்கும்போது, இவர்களுக்குக் கிடைத்த படிப்பினைகள் நாளடைவில் காங்கிரஸ் தலைவர்களின் தவறான போக்குகளை உணர்வதற்கு பெரிதும் உதவியது. ஆனால், துவக்கத்தில் இந்த உணர்வு அதிருப்தியாக மட்டுமே காட்சியளித்தது. இந்த நேரத்தில் கம்யூனிஸ்ட் தோழர்கள் நடத்திய தீவிரமான கருத்துப் போராட்டங்கள் காங்கிரசின் தவறான போக்குகளின் அடிப்படை அம்சங்களை இந்த இளம் தோழர்கள் புரிந்து கொள்வதற்கு உதவி செய்தன. புதிய கருத்துக்களை உட்கொண்ட இந்த போர்க்குணம் மிக்க ஊழியர்கள் புதிய முறையில் சிந்திக்க வழிவகுத்தது. நாளடைவில் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளும், தத்துவமும், நடைமுறையும் தான் சரியானது என்று ஏற்றுக் கொண்டு இவர்கள் கம்யூனிஸ்ட்டுகளாக மாறினர். நாம் பணியாற்றக்கூடிய மக்கள் மத்தியில் அரசியல் தத்துவார்த்த கருத்துக்களைப் போதிப்பதன் மூலம் மட்டுமே கம்யூனிஸ்ட் இயக்கம் புதிய மக்கள் பகுதிகளை வென்றெடுக்க முடியும். தத்துவார்த்த போராட்டம் கம்யூனிஸ்ட் இயக்கத்தை எவ்வாறு வலுப்படுத்துகிறது என்பதற்கு மேலே குறிப்பிட்ட அனுபவங்களை சுட்டிக்காட்டுகிறோம்.

உலக அளவில்

முன்பு குறிப்பிட்டதுபோல, ரஷ்யப் புரட்சியும் அதைத் தொடர்ந்து உருவெடுத்த புரட்சிகரமான எழுச்சிகளும், உலக அரசியலின் திசை வழியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சியுடன், ஏகாதிபத்திய சுரண்டலில் சிக்கித் தவித்த நாடுகளிலும், பெருமளவில் தேச விடுதலைப்போராட்டம் வெடித்தன. இப்போராட்டங்களில் ஆங்காங்கு செயல்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டன. மறுபக்கம் முதலாளித்துவ நாடுகளில் மிகத் தீவிரமான, பரவலான வர்க்கப் போராட்டங்களும் பரவின. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னேற்றத்தை தடுக்கும் நோக்கத்துடன் பெரு முதலாளித்துவ சக்திகள் மும்முரமான கம்யூனிஸ்ட் எதிர்ப்புப் பிரச்சார இயக்கத்தையும், நேரடித் தாக்குதல்களையும் தொடுத்தன. ஆக, புரட்சி இயக்கத்தை முன்னுக்கு இட்டுச்செல்வது எவ்வாறு? எத்தகைய நடைமுறைத் தந்திரங்கள் பின்பற்ற வேண்டும்? எதிரியின் தாக்குதல்களை எவ்வாறு முறியடிப்பது? போன்ற ஏராளமான பிரச்சனைகள் இயக்கத்தின் முன் தோன்றியது. இந்தக் கட்டத்தில் ரஷ்ய புரட்சிக்கு எதிராகவும், கம்யூனிஸ்ட் இயக்கப் பாதைக்கு எதிராகவும் சமூக ஜனநாயகவாதிகள் கங்கனம் கட்டி களத்தில் இறங்கினர். இதோடு நிற்காமல் முதலாளித்துவ சக்திகளிலேயே மிக கொடூரமான பிரிவினர் – பாசிஸ்ட்டுகள் சில நாடுகளில் தலைதூக்கி கொலைவெறித் தாண்டவமாடினர். இந்த நிலையில் எழுச்சி ஒரு புறம், அடக்கு முறை, கொலை வெறி மறுபுறம் என்ற சிக்கலான நிலைமைகளை கம்யூனிஸ்ட்டுகள் சந்திக்க வேண்டியிருந்தது. இவற்றைக் குறித்து கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள்ளும், நேசக்கட்சிகள் மத்தியிலும் கருத்து வேற்றுமைகளும், பல சந்தர்ப்பங்களில் மோதல்களும் தலைதூக்கின. இந்தப் பின்னணியில் உலக கம்யூனிஸ்ட் இயக்கமும், பல நாடுகளில் செயல்பட்ட கட்சிகளும் பெரிய அளவில் கருத்துப்போராட்டத்தை நடத்தினர். தவிர, இக்கருத்துப்போருடன் இணைந்து பாசிச எதிர்ப்பு இயக்கங்களை பிரம்மாண்டமான அளவில் வளர்த் தெடுத்தனர். ஆக, வெகுஜன இயக்கங்களை முன்னெடுத்து செல்வதிலும், முற்போக்கு சக்திகளை பக்குவமாகத் திரட்டுவதிலும் கருத்துப் பிரச்சாரமும், கருத்துப் போரும் முக்கியப் பங்கினை ஆற்றியது.

உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஏழாவது மாநாடு

புரட்சி சக்திகளின் முன்னேற்றமும், எதிரி வர்க்கங்களின் தாக்குதல் களும் தீவிரமடைந்த பின்னணியில்  உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உலக மாநாட்டினை நடத்தியது. அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒன்று திரட்டி யுத்த அபாயத்திற்கு எதிராகவும், பாசிசத்திற்கு எதிராகவும் விரிந்து பரந்த போராட்ட அணிகளை உருவாக்கும்படி இம்மாநாடு அறைகூவல் விட்டது. இது வரலாற்றில் ஒரு குறிப்பிடத் தக்கத் திருப்பு முனையாகும். அதே நேரத்தில் இந்த ஐக்கிய முன்னணி வெற்றி பெற வேண்டுமானால், கம்யூனிஸ்ட் கட்சிகள் மிகத் தீவிரமான முறையில் ஆபத்தான கருத்துக்களை எதிர்த்து கருத்துப்போராட்டத்தை நடத்த வேண்டும் என்றும் இம்மாநாடு பறைசாற்றியது. இம்மாநாட்டிற்குப்பின் வெகுஜன இயக்கங்களும் புதிய முறையிலான ஐக்கிய முன்னணிகளும் வேகமாக வளர்ந்தன. அத்துடன் கருத்துத் துறையிலும் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டது. இவையெல்லாம் இணைந்து இம்மாநாட்டிற்குப் பின் உலக அரசியலில் மிகப் பெரிய மாற்றங்கள் நிகழத் துவங்கின என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

III

தொடரும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s