மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


வெனிசுலாவில் நிலச் சீர்திருத்தம்!


வெனிசுலா நாட்டு கிராமப் புறங்களிலே பிரபுத்துவ பண்ணை முறையை எதிர்த்துப் போர்ப் பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே அரசு ஆதரவுடன் நிலச் சீர்திருத்தங்கள் தற்போது அமலாகி வரும் நாடு வெனிசுலா மட்டுமேயாகும். பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஏராளமான தரிசாகக் கிடக்கும் தனியார் பண்ணை நிலங்களை உற்பத்தியில் ஈடுபடுத்தும் இயக்கம் நிலச் சீர்திருத்தத்தின் முக்கியமானதொரு அம்சமாகும். மேலும் ஒட்டுமொத்த கிராமப்புற வளர்ச்சிக்கு அடிப்படையான உணவில் தன்னிறைவு பெறவும், வேளாண்மை லாபகரமாக இருக்கவும் தேவையான வகையில் நிலம் மற்றும் நீர் பயன்பாட்டை மாற்றி அமைத்தல் என்பது வேளாண் சீரமைப்புக் கொள்கையில் உள்ளடங்கிய அம்சங்களாகும். வேளாண் துறையில் மாற்றங்களை நிர்வகிக்கவும், தொழில் நுட்ப மாற்றங்களைக் கொண்டு வருவதற்கும் தேவையான புதிய அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. நில உடமையில் கூட்டுறவு அமைப்பை உருவாக்குவது என்பது தற்போதைய கொள்கையின் அடிப்படை அம்சமாகும்.

இயற்கை வளங்களின் பன்முகத்தன்மையைப் பார்க்கும் போது, வெனிசுலாவைப் போன்று, வேறெந்த லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் காண இயலாது. மழைக்காடுகள், புல்வெளிகள், ஆற்றுப் பள்ளத்தாக்குகள், பளபளக்கும் கரீபியன் கடலோரப் பகுதிகள் அதற்கு எடுத்துக்காட்டாக நெல், சோளம் மற்ற  தானியங்களை பயிர் செய்வதற்கு ஏற்ற நிலம் ஏராளமாக உண்டு. உஷ்ணப் பிரதேசப் பயிர்களை இங்கே பயிரிட இயலும்.

நிலச்சீர்திருத்தம் கொண்டு வருவதற்கு முன்பு வரை வெனிசுலாவின் கிராமப்புற வளங்கள் பயன்படுத்தப்படாமலேயே இருந்தன. லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே வெனிசுலாவில் மட்டும் தான் தேசிய மொத்த உற்பத்தியில் வேளாண் துறையின் பங்கு மிகவும் குறைவாகும் (6 சதம்). வேளாண் பொருட்களை இறக்குமதி செய்த நாடும் இதுவே.

வேளாண் உறவுகள் : பின்னணி

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே பெட்ரோலிய உற்பத்தியில் வெனிசுலா கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டது. 1930 களிலிருந்து உலகின் மிகப் பெரிய பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடாக ஆன பின்னர், வேளாண்மையின் பங்கு வெகுவாகக் குறைந்தது. 1935 ம் ஆண்டு உழைக்கும் மக்களில் 60 சதம் பேர் வேளாண் துறையிலிருந்தனர். மொத்த உற்பத்தியில் வேளாண் துறையின் பங்கு 20 சதமாக இருந்தது. ஆனால், 1960 ல், கிராமப்புற மக்கள் தொகை 35 சதமாகக் குறைந்தது. 2000 ல் இது 12 சதமாகக் குறைந்து விட்டது.

பெட்ரோலியம் வெனிசுலா பொருளாதாரத்தில் பிரதான பங்கு வகிக்க ஆரம்பித்ததால், வேளாண் துறை மதிப்பை இழந்தது. இதே கால கட்டத்தில் நிலக்குவியலும் அதிகரித்தது. 1937 ல் மொத்த நில உடமையாளர்களில் 4.8 சதம் பேர் ஆயிரம் ஏக்கருக்கு மேல் வைத்திருந்தனர். மொத்த வேளாண் நிலத்தில் இது 88.8 சதம் ஆகும். 57.7 சதம் விவசாயிகளிடம் 10 ஹெக்டேர் அல்லது அதற்கும் குறைவான வேளாண் நிலம் மட்டுமே இருந்தது. மொத்த வேளாண் நிலங்களில் இது 0.7 சதமாகும். 1998, நிலங்கள் முழுவதும் ஒரு சிலரின் கைகளில் குவிந்ததுடன், வெனிசுலா பொருளாதாரத்தில் வேளாண் துறையின் பங்கும் வெகுவாகச் சரிந்தது. 1998 ல் எடுக்கப்பட்ட வேளாண் கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கட் தொகையில், ஒரு சதத்திற்கும் குறைவானவர்களிடம் 60 சதம் வேளாண் நிலங்கள் இருந்தன. 5 சதம் நில உடமையாளர்களிடம், கிராமப்புற மொத்த நிலப்பரப்பில் 75 சதம் இருந்தது. ஆனால், 75 சதம் சிறு நில உடமையாளர்களிடம் 5 சதம் வேளாண் நிலம் மட்டுமே இருந்தது.

பல இடங்களில் சட்ட விரோதமான முறையில் நிலங்களை அபகரித்தனர். வெனிசுலா நிகழ்வுகள் பற்றி எழுதும் பத்திரிக்கை யாளர் கிரிகெரி வில்பெர்ட், இது பற்றிக் குறிப்பிடுகையில், ஏராளமான நிலத்தை அபகரித்து, தனது சொந்த சொத்தாக மாற்றிய மோசமான சர்வாதிகாரி யுவான் வின்சென்ட் கோமஸ் (1908 – 1935) என்பவன் எனக் குறிப்பிடுகிறார். ஆட்சியிலிருந்தவர்களுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் பணக்காரர்கள் நிலங்களை அபகரித்தனர். வெனிசுலாவின் முன்னாள் அதிபர் கார்லோஸ் அண்ட்ரோ பெரெஸ் ஊழல் குற்றச்சாட்டுகளின் விளைவாக, பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டவர். நாடு முழுவதிலும், பல நபர்கள் மூலமாக 60000 ஹெக்டேர்கள் நிலத்தை இவர் தன் வசம் வைத்துள்ளார். இப்படிப்பட்ட நில உடமையாளர்கள் உற்பத்தியை அதிகரிப்பதற்காகவோ வேளாண் சொத்துக்களைப் பெருக்குவதற் காகவோ, நிலங்களை அபகரிக்கவில்லை. மாறாக, சமூகத்தில் தங்கள் அந்தஸ்து, அதிகாரத்தை உயர்த்திக் கொள்ளவே நில அபகரிப்பைச் செய்துள்ளனர்.

வெனிசுலா நாட்டிலுள்ள மிகப் பெரிய நில உடமையாளர்கள் அந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்லர். கோறே மாநிலத்தில், பிரிட்டனைச் சேர்ந்த வெஸ்டி குரூப்புக்குச் சொந்தமான அக்ரேபுளோரா நடத்தும் எல்சார்கோட் என்ற பெரும் பண்ணை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். 18, 803 ஹெக்டேர் நிலப்பரப்புள்ள சான் பாப்லோ பேனோ என்ற பெரிய பண்ணை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பெரிய பண்ணைகளை தன் வசம் வைத்துள்ள வெஸ்டி பிரபுவின் கம்பெனிக்கு பிரேசில், அர்ஜென் டினாவிலும் வேளாண் நிலம், கால் நடைகள் உள்ளன. முன்பு யாராகுய் மாநிலத்தில் ஆப்பிரிக்க – அமெரிக்க குழுக்களுக்குச் சொந்தமாக இருந்த 1,154 ஹெக்டேர் நிலத்திற்கு ஸ்பெயின் நாட்டிலிருந்து வந்தவர்கள் உரிமை கொண்டாடினர் என்பதும் ஒரு எடுத்துக்காட்டாகும். 1959 ல் சர்வாதிகாரி புல்ஜென்சியோ படிஸ்டாவின் ஆட்சியை தூக்கி எறிந்து  புரட்சி நடைபெற்ற போது, கியூபாவிலிருந்து வெளியேறிய படிஸ்டானியோக்கள் என்று அழைக்கப்படும் பணக்காரர்கள் மற்றொரு எடுத்துக்காட்டாகும்.

கோஜேடெஸ் மாநிலத் தலைநகரான சான்கார்லோசிலிருந்து 10 நிமிடத்தில் காரில் பயணித்து சென்று சேரக்கூடிய கிராமப்புற பகுதிகளைப் பற்றி லி மான்டே டிப்ளோமேடிக் என்ற பத்திரிக்கையின் எழுத்தாளரான மாரிஸ் லெமோய்ன் 2003 ல் கீழ்கண்டவாறு விவரிக்கிறார். நிலம் பயன்பாடு குறைவாக உள்ளதையும், பல ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் அபகரிக்கப்பட்டு, எந்த சட்டப்பூர்வமான முறையிலும் பெறப்படாமல் இருப்பதையும் (லத்திபண்டியா) குறிப்பிடுகிறார்.

பௌல்டன் குடும்பம் நாட்டிலேயே பணக்காரக் குடும்பம் ஆகும். இவர்களுக்கு சொந்தமாக 20000 ஹெக்டேர் நிலப்பரப்பில், அடுக்கடுக்காக முள்வேலிகள் போடப்பட்டு ஹெடோஸ் எனப்படும் மாட்டுப் பண்ணைகள் உள்ளது. ப்ளோரா கம்பெனியா அனோனிமாவுக்கு சொந்தமாக ஹேடா எல் சார்கோட் என்ற 14000 ஹெக்டேர் பண்ணை உள்ளது. இவ்வளவு பரந்த நிலப்பரப்பில் அங்கொன்றும், இங்கொன்றுமாக மேய்ந்து கொண்டிருக்கும். அடுத்தபடியாக எல் பவோ முனிசிபாலிடி பகுதியில் 1,20,000 ஹெக்டேர் நிலப்பரப்புடைய எஸ்டேட், பிராஞ்சர் குடும்பத்திற்கு சொந்தமானதாகும். இந்த எஸ்டேட்டுகளைத் தாண்டி, இந்தப்புறம் 80,000 ஹெக்டேர், அந்தப்புறம் 30,000 ஹெக்டேர் எனப் பரந்து விரிந்த நிலப்பரப்பில் மூன்று நான்கு ஹெக்டேர் நிலம் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.

இந்த நிலங்கள் பெரும்பாலும் நேரடியாக அபகரிக்கப் பட்டவை. எனவே, நிலச் சீர்திருத்தங்களை இன்று அமலாக்குவோர் நிறையப் பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டியுள்ளது. தங்களுடைய நிலம் என பெரிய நில உடமையாளர்கள் கூறினாலும், சட்டப் பூர்வமான ஆதாரங்கள் இல்லை. சட்டப்பூர்வமான முறையில் நிலத்தைப் பெறாமலே நிலத்தை அபகரித்தே பண்ணையாட்களைக் கொண்டு வேலை வாங்கும் பெரிய, பெரிய பண்ணைகள் உருவாயின. நிலக்குவியலாக ஒரு சிலரிடம் இருந்தபோதிலும், நில உறவுகள் அப்படியே நிலைத்து நிற்கவில்லை. வில்பெர்ட் 3 முக்கிய அம்சங்களைக் குறிப்பிடுகிறார்.

 1. நிலத்திற்கான சந்தை, குறிப்பாக பெரும் நில உடமையாளர் களிடயே வளர்ந்தது.
 2. ஏழைகளையும், சிறு குத்தகையாளர்களையும் நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டதை யொட்டி, வேளாண்மை உற்பத்தி குறைந்தது. மக்கள் நகர்ப்புறங்களை நோக்கிச் செல்ல ஆரம்பித்தனர்.
 3. நில உடமை, நிலத்தின் மீதான ஆதிக்கம் தனி நபரிடமிருந்து மட்டுமின்றி, கம்பெனிகளிடமும் நிலம் சொந்தமாகக் குவிந்தது.

19 ம் நூற்றாண்டைச் சேர்ந்த விடுதலை வீரர் சைமன் பொலிவார் பெயரில் பொலிவாரியன் குடியரசு என்ற பெயரிலேயே 1999க்குப் பின்னர் வெனிசுலா அழைக்கப்படுகிறது. பெருமுதலாளிகள், சர்வதேச மூலதனக் கூட்டாளிகள், வங்கி உரிமையாளர்கள், பெரிய நில உடமையாளர்களிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றுவதே அரசின் கடமை. வெனிசுலாவின் ஆளும் வட்டாரத்தில் பெரு நில உடமை யாளர்களும் இருந்தனர். நில உடமையாளர்கள் சிலர் சந்தைக்கென உற்பத்தியில் ஈடுபட்டிருந்தாலும், நில உடமை வர்க்கம் என்ற வகையில் ஆளும் வட்டாரத்தின் மிகமோசமாகவே சுரண்டும்  ஒட்டுண்ணிகளாகவே  இருந்தனர். 1960 களில் முதல் முறையாக நிலச் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டபோது, பெரும் நில உடமை யாளர்கள் அதை வெற்றிகரமாக நிறைவேறாமல் தடுத்துவிட்டனர். 1998 ம் ஆண்டிற்குள், நிலச் சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக ஏழைகளுக்கு வழங்கப்பட்ட நிலத்தில் 90 சதம் மீண்டும் பெரும் நில உடமையாளர்களிடமே வந்துவிட்டது. பெரும் நில உடமை, கிராமப்புற வளர்ச்சிக்கும், வேளாண் துறையில் தொழில் நுட்பம் புகுத்துவதற்கும் பெரும் தடையாக இருந்தது. பெரும் நில உடமை முறை உணவிற்காகவும், விவசாயப் பொருட்களுக்காகவும்  இறக்குமதியைச் சார்ந்திருக்கும் நிலையை ஏற்படுத்தியது. அரசாங்க அமைப்பிற்குள் நில உடமையாளர்கள் கொண்டிருந்த ஆதிக்கம் நிலச் சீர்திருத்தத்தால் நிலம் பறிபோவதை ஆத்திரத்தோடு எதிர்த்தனர்.

சட்டங்களும், கொள்கைகளும்

1998 க்குப் பின் நிலச் சீர்திருத்தம் மற்றும் புதிய வேளாண் முறைக்காக தேவைப்படும் சட்டப்பூர்வமான நிறுவன கட்டமைப்பை வெனிசுலா அரசு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டது. அரசியல் சாசனத்திலேயே வேளாண் உறவுகள் மற்றும் கிராமப்புற சமூகப் பொருளாதாரப் பிரச்சனைகளைக் கொண்ட புதிய கொள்கை பிரகடனத்தை வெளியிட்டது. 1999 ல் வெனிசுலாவின் பொலிவாரிய குடியரசு இயற்றிய அரசியல் சாசனத்திலேயே எதிர்கால வெனிசுலா சமுதாயம் பற்றிய பார்வையை நியாயப்படுத்தும் வண்ணம் வழி காட்டுதல்கள் தரப்பட்டுள்ளன.

அரசியல் சாசனத்தின் ஆறாம் பிரிவு, சமூகப் – பொருளாதார முறை பற்றியும், முதல் அத்தியாயம் சமூகப் பொருளாதார அமைப்பும், பொருளாதாரத்தில் அரசின் செயல்பாடு பற்றியும் விளக்குகிறது. வருமான வளர்ச்சியை ஊக்குவிப்பது, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது, மக்கள் பங்கேற்கும் வண்ணம் உருவாக்கப்பட்ட திட்டம், தேசிய சுயாதிபத்தியம் எனப் பல விஷயங்கள் பற்றி விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. தனியார் ஊக்குவிப்புடன், அரசும் இணைந்து, சுமூகமான பொருளாதார வளர்ச்சிக்காக செயல்படுவது, வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது மற்றும் சட்ட அமலாக்கத்தை உத்தரவாதப்படுத்துவது, சமத்துவ கோட்பாட்டின் அடிப்படையில் வளர்ச்சி, ஜனநாயக முறையில் கலந்தாலோசித்து, திட்டங்களை அமல்படுத்துவது என அரசியல் சாசனம் பலவற்றை வலியுறுத்துகிறது.

அரசியல் சாசனத்தின் 304, 307 ஆகிய பிரிவுகள் நிலம் தொடர்பானவை.

 1. ஒட்டு மொத்த கிராமப்புற வளர்ச்சியை அடைய அரசு லாபகரமான வேளாண்மையை ஊக்குவிப்பதை அடிப்படை யுக்தி என்கிறது.
 2. அரசு உணவுப் பாதுகாப்பை உத்தரவாதம் செய்யும். அனைவரும் உணவைப் பெறுகிற முறையில் நாடே தன்நிறைவைப் பெற உணவு உற்பத்தி, கால் நடை வளர்ப்பு, மீன் பிடிப்பு, மீன் வளர்ப்பு உட்பட கவனிக்கப்படும்.
 3. லாபகரமான தன்னிறைவு பெற்ற வேளாண்மை என்ற நோக்கத்தை அடைவதற்கு ஏதுவாக, நிதி மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் அரசே மேற்கொள்ள அரசியல் நிர்ணயச் சட்டம் வழிசெய்கிறது. தொழில் நுட்ப பரிமாற்றம், பயிர் செய்யும் உரிமை, அடிப்படை கட்டுமான வசதி, பயிற்சி ஆகியவை ஊக்குவிக்கப்படுமென அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 4. வேலை வாய்ப்புகள் பெருக்குவதற்கு ஏற்ற சூழலை அரசு உருவாக்கும்.
 5. தற்போது வேளாண் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு அதனால் ஏற்படும் நஷ்டத்தை சமாளிக்க ஈட்டுத் தொகை வழங்கப்படும். அரசியல் சாசனத்தில் பெரும் தொழில் ரீதியாக அல்லாத சுய வேலையாக ஈடுபடும் மீனவர்களைப் பாதுகாக்க பிரத்யேக நடவடிக்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
 6. கிராமப்புறங்களிலுள்ள பெரிய பண்ணைகள், சமூக நலன்களுக்கு புறம்பாகவே உள்ளன. அவற்றை உற்பத்தித் திறன் மிக்க சிறு அமைப்பாக மாற்றப்படும் விவசாயிகளும், பிறரும்  சொந்தமாக நிலம் வைத்திருக்கலாம். தனியார் பண்ணைகள்  செயல்படுகிற நேரத்திலேயே கூட்டுறவு பண்ணை முறையில் செயல்பட ஊக்குவிக்கப்படும்.
 7. வெனிசுலாவின் நீர்வளங்கள் தேசியமயமாக்கப்படும் என்பது மிகவும் முக்கியமான அம்சமாகும். 304 ம் பிரிவின் படி, அனைத்து நீர் வளங்களும் அரசின் சொத்தாகும். இது வாழ்க்கைக்கும், வளர்ச்சிக்கும் இன்றியமையாததாகும். கடைசியாக, அரசு நிலத்தை சரியான முறையில் பயன்படுத்த ஊக்குவிக்கப்படும்.

2001, நவம்பரில் நிலம் மற்றும் வேளாண் வளர்ச்சிக்கான சட்டம் இயற்றப்பட்டது. இது வேளாண் சீர்திருத்தத்திற்கு அடிப்படை யானது. 2002 டிசம்பரில் இச்சட்டம் அமலுக்கு வந்தது. நில உச்சரம்பு, தற்போது பயன்பாட்டில் இல்லாத நிலத்தின் மீது வரி, ஏழைகளுக்கு நில விநியோகம் ஆகியவை இச்சட்டத்தின் முக்கிய அம்சங்களாகும். இச்சட்டம் அமலுக்கு வருமுன்பே, சுப்ரீம் கோர்ட்டிலுள்ள பிற்போக்கு சக்திகள் சட்டத்தின் இரண்டு பிரிவுகளை நீக்கிவிட்டன. 89, 90 ஆகிய பிரிவுகள் பெரிய பண்ணைகளில் விவசாயிகள் சென்று ஆக்கிரமித்துக் கொள்வது சட்டத்திற்கு புறம்பானது. நிலங்களை அபகரித்த பெரிய நில உடமையாளர்கள் ஈட்டுத்தொகை தரப்பட மாட்டாது என இந்தப் பிரிவுகள் குறிப்பிடுகின்றன. இரண்டு பிரிவுகளை பிற்போக்கு சக்திகள் நீக்கின. ஆனால் 2005 ல் அரசு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு செல்லாது என்று கூறிய பிரிவுகளை மாற்றி சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. இதன் மூலம் நிலத்திற்கான பட்டா விவசாயிகளுக்கு வழங்கப்படாத போதும், நிலத்தைப் பயன்படுத்தி, அதிலிருந்து கிட்டும் வருமானத்தை விவசாயிகள் பெற முடியும். சட்ட சிக்கல்கள் முடிந்து நிலம் உரிமை பெறும் வரை, நிலத்தைப் பயன்படுத்தும் வகையில் சர்டிபிகேட் தரப்படும்.

நில உச்ச வரம்பிலும் நிறைய மாற்றங்கள் வந்துள்ளன. முதலில், தரம் குறைவான நிலங்களுக்கு 5000 ஹெக்டேர்கள், தரம் உயர்ந்த நிலங்களுக்கு 100 ஹெக்டேர்கள் என உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் நிலங்களை தர அடிப்படையில் வகைப்படுத்தி, உயர்தர நிலங்களுக்கு 50 ஹெக்டேர்கள் என உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டது.

புதிய அமைப்புகள்

வேளாண் சீர்திருத்தங்களை அமல்படுத்துவதற்குத் புதிய நிர்வாக அமைப்புகள் தேவைப்பட்டது. புதிய அமைப்புகளோடு ஏற்கனவே செயல்படும் அமைப்புகளும், நிலச் சீர்திருத்தங்களை அமலாக்க ஏற்றவாறு மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

வேளாண் அமைச்சரகத்தின் கீழ், மூன்று அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவைதான் நிலச் சீர்திருத்தம் மற்றும் வேளாண் மாற்றத்திற்கு மையங்களாகக் கருதப்படுகின்றன. தேசிய நில கழகம் (INTI) நிலச்சீர்திருத்தங்களை அமலாக்கும் பிரதான நிறுவனமாகும். இதற்குள் ஒரு சட்ட மையமும் உள்ளது. நிலங்களை அடையாளம் காண்பது, நிர்வகித்து, ஒழுங்குபடுத்துவது மற்றும் விநியோகம் செய்வது, இந்த நிறுவனத்தின் பிரதான கடமையாகும். கிராமப்புற வளர்ச்சிக்கான தேசிய கழகம் (NIDER) என்ற அமைப்பு வேளாண்துறை கட்டமைப்பு, சாகுபடிக்கான திட்டங்கள் ஆகியவற்றைக் கவனித்துக் கொள்ளும். வெனிசுலா வேளாண்மைக் கார்பரேசன் என்ற அமைப்பு, வேளாண் பரிவர்த்தனை, சந்தை, விற்பனை, உற்பத்தி முதல் விற்பனை வரை அனைத்து கட்டப் பணிகளையும் கவனித்துக் கொள்ளும்.

வேளாண் மற்றும் நிலம் அமைச்சரகம் தவிர, மக்களின் பொருளாதாரத்திற்கான அமைச்சரகம் (MINE) மற்றும் உணவு அமைச்சரகம், அறிவியல் தொழில் நுட்ப அமைச்சரகம் ஆகியவை ஒட்டுமொத்த வேளாண் சீர்திருத்தங்களையும், கிராமப்புற வளர்ச்சியையும் மேம்படுத்த பல விதங்களில் ஈடுபடுத்தப்படுகின்றன.

சட்ட அமலாக்கமும், முன்னேற்றமும்

நிலச்சட்டம் அமலுக்கு வந்த பின்னர், மெதுவாகத்தான் முன்னேற்றம் காணப்பட்டது. கிரிகிரி வில்பெர்ட் கூறுவதைப் போல, சட்டங்களை அமலாக்க புதிய கட்டமைப்பு தேவைப் படுவதால், ஆரம்ப கால முன்னேற்றம் மெதுவாகவே இருந்தது. 2003 – 2004 ல் நிலச் சீர்திருத்தம் வேகமாக அமலாகியது. 2004 லிருந்து அரசுக்குச் சொந்தமான நிலங்களே விநியோகம் செய்யப்பட்டன. 2005 ம் ஆண்டு தான் தனியார் நிலங்கள் நிலச் சீர்திருத்ததின் கீழ் வந்தன.

வெனிசுலாவில் உள்ள 30 மில்லியன் ஹெக்டேர் சாகுபடி நிலங்களில் 19 மில்லியன் ஹெக்டேர் அரசுக்கு சொந்தமானவை. அரசின் கட்டுப்பாட்டிலிருந்தவை. பிரபுத்துவப் பண்ணை உள்ளிட்ட தனியார் நிலம் 11 மில்லியன் ஹெக்டேர் ஆகும். ரிச்சர்டு விவாசின் கணிப்பின் படி, 10 மில்லியன் ஹெக்டேர் நிலம் சர்ச்சைக்குள்ளாகிய நிலமாகும். 4 மில்லியன் ஹெக்டேர் நிலத்திற்கு உரிமைப் பத்திரம் வழங்கப்பட்டது. இந்த நில விநியோகத்தால் பயனடைந்த குடும்பங்களின் எண்ணிக்கை 126000 என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

தேசிய நில கழகத்தின் தலைவர் யுவான் கார்லோஸ் லோயோ, 62 எஸ்டேட்டுக்களை கையகப்படுத்தியுள்ளதாகவும், இவற்றின் மொத்தப் பரப்பளவு 5,34,000 ஹெக்டேர்களாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டு நிறைய நிலங்களை அரசு கையகப்படுத்தியுள்ளது. வெஸ்டி குரூப்பின் பிரிட்டிஷ் நிறுவனமான அக்ரோடபளோராவும், ஸ்பெயின் நாட்டினர் ஆதிக்கத்திலிருந்த எஸ்டேட்டு ஆகியவை கையகப்படுத்ப்பட்டுள்ளன. 2006 மார்ச்சில் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, வெனிசுலா அரசு வெஸ்ட் குரூப்புக்கு அதன் 13000 ஹெக்டேர் எல்சார்கோட் பண்ணைக்கு ஈட்டுத்தொகையான 4.2 மில்லியன் அமெரிக்க டாலர்களை கொடுத்துவிடும். அபுரே மாநிலத்தில் உள்ள 18,803 ஹெக்டேரில் உள்ள சான் பாப்லோ பேனோ பண்ணையை எந்த தொகையும் அளிக்காமல் அரசு எடுத்துக் கொள்ளும். சான் பாப்லோ பேனோவிலுள்ள பண்ணையிலுள்ள கால்நடைகளுக்கு 2.5 மில்லியன் டாலர்கள் வழங்கப்படும். அந்தப் பண்ணையில் வேளாண் பயிற்சிப்பள்ளி துவக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெஸ்டியின் மாமிசம் உற்பத்தி செய்யும் நிறுவனமான அக்ரோ ப்ளோரா நிலத்தின் மதிப்பு 11.6 மில்லியன் டாலர்களாகும் எனக் கூறியுள்ளது. தேசிய நிலக்கழக அதிகாரி ரிச்சர்டு விவாஸ், வெஸ்டியின் சொத்துக்களை அரசு பரிசோதனை செய்து வருகிறது என்கிறார். வெனிசுலா அதிபர் சாவேஸ், தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியொன்றில், வெனிசுலா மக்களுக்கு நிலங்களை பெற்றுத் தருகிறம். தங்கள் நிலங்களுக்கு அவர்கள் உரிமையாளர்களாவதுடன், தங்கள் கௌரவத்தையும் மீட்டுள்ளனர் எனக் கூறியுள்ளனர்.

2006 மே மாதம் யாரகுய் பகுதியில் உள்ள 1154 ஹெக்டேர் செழிப்பான நிலம் ஸ்பெயின் நாட்டினரின் வசமிருந்தது. அவர்களுக்கு 3.16 மில்லியன் டாலர்களை கொடுத்து வெனிசுலா அரசு அவர்களிடமிருந்து நிலத்தை மீட்க ஒப்பந்தம் செய்துள்ளது.

2006 ஆகஸ்டு மாதம் பொலிவார் மாநிலத்திலுள்ள லா, வெர்ஜரீனா என்ற எஸ்டேட்டில், இரண்டு மாத இடைவெளிக்குப் பின் அதிபர் சாவேஸ் தனது ரேடியோ, தொலைகாட்சி நிகழ்ச்சியைத் தொடர்ந்தது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். 1,87,000 ஹெக்டேர் பரப்பளவில், உள்ள லா வெர்ஜரீனா எஸ்டேட் வெனிசுலாவிலேயே மிகப் பெரிய எஸ்டேட் என சாவேஸ் குறிப்பிட் டுள்ளார். இந்த எஸ்டேட் தற்போது சோசலிச வளர்ச்சிக்கும், உற்பத்தி மையமாகவும் மாறிவிட்டது என சாவேஸ் கூறியுள்ளார்.

யாராகுயில் நிலச் சீர்திருத்தம் அமலாவது பற்றிய பதிவுகள்

யாராகுய் என்ற மாநிலம் வெனிசுலாவில் நிலத்திற்காக வலுவாக நடத்தப்பட்ட போராட்டங்களைக் கண்ட மாநிலம் ஆகும். 40 ஆண்டுகளுக்கும் மேலாகவே இங்கே விவசாய இயக்கம் வலுவானப் போராட்டங்களை நடத்தியுள்ளது. லோஸ் கேனிசோஸ் என்ற இடத்தில் முதலில் போராட்டம் வெடித்தது. பின்னர் மாநிலம் முழுவதும் பரவியது. போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் நிலம் கைப்பற்றப்பட்ட போதும், கடன் மற்றும் முதலீடு செய்ய நிதி வசதி போன்ற உதவி கிட்டவில்லை.

1940 களில் அபகரிக்கப்பட்ட நிலங்களைக் கொண்ட பண்ணை தற்போது 13 கூட்டுறவு அமைப்புகளாக ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தப் பண்ணை 1086 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டது. இதில் 116 ஹெக்டேரில் சாகுபடி செய்யப் பட்டு வருகிறது. பெல்லா விஸ்தா என்ற கூட்டுறவு அமைப்பின் உறுப்பினரான விக்டர் ஓர்டிஸ் தனது அனுபவங்களைப் பற்றி விவரிக்கையில், நாங்கள் 090 என்ற எண் கொண்ட உள்ஆட்சி அரசாணையுடன் 5 ஜூலை, 2005 ல் இங்கே வந்தோம். நாங்களும் எங்களது பெற்றோர்களும் நில உடமையை முறைப்படுத்தும் கமிட்டியை சேர்ந்தவர்கள். இது தனியாருக்கு சொந்தமான நிலம் இல்லையென எங்களுக்குத் தெரியும். ஆனால், அப்போது இருந்த அரசு நாங்கள் நிலத்தை கையகப்படுத்த உதவவில்லை. அஸ்செட்டா என்ற கியூபா நாட்டு பாஸ்ட்டியனோஸ் குடும்பத்தின் கைவசம் இந்த நிலம் முதலில் இருந்தது. அவர்கள்  பின்னர் அல்போன்சா பூசி என்பவருக்கு விற்றனர். அவர்கள் மலைச்சிகரங்களில் உள்ள மரங்களை வெட்டுவதுண்டு. திருடுவதும் உண்டு.

1998 ல் சாவேஸ் இங்கே வந்தார். நான் அதிபராக நீங்கள் உதவுங்கள். நீங்கள் நிலத்தை மீண்டும் பெறுவதற்கு நான் உதவுகிறேன் என்று கூறினார் என்கிறார்.

நிலச் சட்டத்தின் 89, 90 வது பிரிவுகள் செல்லுபடியாகாது என்று ஆனவுடன், நிலத்திற்கான இயக்கம் உயிர் பெற்றது. உச்ச நீதிமன்றம் சட்டத்தை முடக்க முயன்றது என்று சேவியர் என்ற இளைஞன் கூறினான். தேசிய நிலக்கழகத்தின் அதிகாரி ரிச்சார்டு விவாஸ் கூறியதையே இவனும் கூறினான். முதலாளிகள் இன்னும் நீதியை விலை கொடுத்து வாங்க முடிகிறது.

நிலச்சட்டம் பல கட்டங்களாக அமல்படுத்தப்படுகிறது.

 1. முதலில் பெரிய பண்ணைகளில் சொத்துரிமை பற்றியும், உற்பத்தி பற்றியும் தெரிந்து கொண்டு, சாலைகள், மின் வசதி, நீர்பாசன வசதி போன்றவற்றை மதிப்பீடு செய்கின்றனர்.
 2. கூட்டுறவு அமைப்புகளில் பங்கேற்போருக்கு சமூக – பொருளாதார மற்றும் தொழில் நுட்பத்திறன் வளர்க்கும் வகையில் திட்டங்கள் தயாரித்து, செயல்படுத்தப்படுகின்றன.
 3. அரசு சார்பில் பயிற்சி பள்ளிகள் நடத்தி, அதில் பங்கேற்போருக்கு மாதம் 150 டாலர்கள் ஸ்காலர்ஷிப் அளிக்கப்படுகிறது. மிஷன் சமோரா கூட்டுறவு அமைப்புகளை ஏற்படுத்த ஊக்குவிக்கும் திட்டமாகும்.

யாராகுயில் 2004 ல் நிலத்திற்கான இயக்கம் உத்வேகம் அடைந்தது. 275 பேர் சேர்ந்து 13 கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கினர். இவர்களுக்கு வேளாண் பயிற்சி அளிக்கப்பட்டது. மிலாக்ரோ கோர்ட்ஸ் என்ற பெண் பயிற்சியாளர் வேளாண் கல்லூரியில் பட்டம் பெற்ற முதல் நபர். இங்கு பயிற்சி பெறும் நபருக்கு மாதம் 1,86,000 பொலிவரஸ் உதவித் தொகையாக அளிக்கப்படுகிறது.

நிலத்தை அவர்கள் எப்படி கையகப்படுத்தினர்?

2005 மார்ச் 30, எங்கள் பயிற்சி முடிந்து, எப்படி நிலத்தை ஆக்கிரமிப்பதென யோசித்தோம். ஜூலை 5 சுதந்திர தினம். சைமன் பொலிவார் நினைவு இடமான உராஷிஷேயில் காலை 8 மணிக்கு கூடி, அங்கிருந்து பண்ணையை நோக்கி, ஊர்வலமாகச் சென்று, கதவைத் தள்ளி, உள்ளே வந்தோம். போலீஸ் அங்கே இருந்தனர். அரசின் பாதுகாவலர்களும் இருந்தனர். அங்கிருந்த கமாண்டர்களில் ஒருவன் வேட்டைத் துப்பாக்கியை எடுத்தான். மக்களும் எதிர்க்கத் தயாரானார்கள். நாங்கள் 11 மணிக்கு பண்ணையைச் சென்றடைந் தோம். நாங்கள் 154 பேர். 3 குழுக்களாகப் பிரிந்தோம். ஒரு குழு பண்ணை கட்டடத்தில் ஆயுதங்கள் உள்ளனவா என்பதை பரிசோ திக்கும். இரண்டாவது குழு வேலையாட்களை கண்காணித்து, கட்டுப்படுத்தியது. ஒரு குழு கேட்டின் வெளியே காவலுக்கு இருந்தது.

காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை மாறி மாறி தாக்குதல் நடைபெற்றது. பதட்டம் நிலவியது. கமாண்டர் துப்பாக்கியை எடுத்து குறிவைத்ததும், எங்கள் குழுவில் உள்ள ஒருவர் தனது ஆயுதத்தை எடுத்து, நீ சுட்டால், உன் தலையை சீவி விடுவோம் என்றார்.

தாக்குதல் 8 மணிக்கு முடிவுக்கு வந்தது. 7 மணிக்கு பண்ணை வேலையாட்கள் அந்த இடத்தை விட்டு சென்று விட்டனர். 8 மணிக்கு நிலத்தை திருடியவன் தனியாக இருப்பதை உணர்ந்தான். பின்னர் கூடியிருந்த மக்களிடம், அரசிடம் நிலம் தொடர்பான ஆவணங்களை பெற்றுக் கொள்ளச் சொல்லுங்கள் என்று கூறிவிட்டு வெளியேறினான். மறுநாள் காலை,  பண்ணையை சரியாக்கும் பணியை ஆரம்பித்தோம். சமைக்கவில்லை. முனிசிபல் அதிகாரிகள் எங்களுக்கு உணவு கொண்டு வந்து கொடுத்தனர் என்று விவரித்தார்.

நிக்கோ மென்டஸ் என்ற பெண் இச்சம்பவத்தைப்  பற்றி கூறுகையில், முதலில் கொஞ்சம் பயமாக இருந்தது. ஆனால், அந்த நேரம் வந்த போது ஒரு வீரனைப் போல நடந்து கொண்டோம். நெய்டா என்ற மற்றொரு பெண், நாள் முழுவதும் நான் இந்தப் பண்ணையில் தானிருந்தேன். எனது 35 வயது மகளும் உடனிருந் தாள். கேட்டைத் தாண்டி உள்ளே செல்ல உத்தரவிடப்பட்டதும், வேலியைத் தாண்டி உள்ளே குதித்துவிட்டேன். அதற்கு பிறகு ஒரு அடி கூட திருப்பி வைக்கவில்லை என்கிறார்.

முதலில் தற்காலிகமாக கூடாரம் அமைத்து தங்கிய அவர்கள், பின்னர் குடிசைகள் கட்டிக் கொண்டனர். தற்போது, அனைவரும் பண்ணையிலேயே இருக்கும் வண்ணம் நிரந்தர குடியிருப்புகளைக் கட்ட இருக்கின்றனர். கூட்டுறவு அமைப்புகளுக்கு நிலம் சொந்தமாக் கப்படவில்லை. அங்கே தங்கி நிலத்தைப் பயன்படுத்த சர்டிபிகேட் டுகள் வழங்கப்பட்டுள்ளன. நிலத்தில் சாகுபடி செய்வதாக பொய் சொன்ன நில ஆக்கிரமிப்பாளர் அங்கு வளர்ந்திருந்த கரும்பை வெட்டவில்லை. பழுதடைந்த டிராக்டர் ஒன்றும் அங்கு இருந்தது. தற்போது அதை சரிசெய்து, நிலத்தை உழுவதற்கு பயன் படுத்துகின்றனர்.

2005 செப்டம்பர் மாதம் 116 ஹெக்டேரில் 60 ஹெக்டேர் பயிரிடப்பட்டுள்ளது. என்ன பயிரிடலாம் என்பதையொட்டி ஒரு பட்டி மன்றமே நடந்தது.

கருப்பு பீன்ஸ் 7 ஹெக்டேர்
வெள்ளைச் சோளம் 10 ஹெக்டேர்
கடலை 5 ஹெக்டேர்
தக்காளி 4 ஹெக்டேர்
பச்சை மணத்தக்காளி 3 ஹெக்டேர்
மஞ்சள் 9 ஹெக்டேர்
வெள்ளரி 5 ஹெக்டேர்
வெங்காயம் 1 ஹெக்டேர்
தர்பூசணி 3 ஹெக்டேர்
சேனைக் கிழங்கு 3 ஹெக்டேர்
யுக்கா 1 ஹெக்டேர்

இவை தவிர வாழை மற்றும் காய்கறிகள் பண்ணை ஓரப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ளது.

கூட்டுறவு அமைப்புக்கு சர்டிபிகேட் வழங்கப்பட்டு விட்டால் தனியாக முடிவெடுக்க முடியாது. பிரதிநிதிகள் கூட்டம் போட்டு எந்த பயிர் போடுவது, எப்படி செய்வதென கூடி முடிவெடுக்கின்றனர். தொழில் நுட்பம் அறிந்தவரும் கூட்டத்தில் கலந்து கொள்வார்.

கூட்டுறவு அமைப்புகளின் உறுப்பினர் எண்ணிக்கை எப்படிப்பட்ட திட்டத்தை செயல்படுத்தப் போகின்றனர் என்ற அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. ஒரே சான்றிதழைக் கொண்டு, புதிய கூட்டுறவு சங்கத்தை ஆரம்பிக்க முடியாது. புதிய உறுப்பினர் சேர விரும்பினால், அவரை மற்ற உறுப்பினர்கள் அங்கீகரிக்க வேண்டும். கூட்டுறவு சங்க விதி முறைகளை நிர்ணயிக்க ஸ்பெயின் நாட்டு கூட்டுறவு அமைப்புகளை பற்றி ஆராய்ந்து வருகிறார்கள்.

விவசாய இயக்க அமைப்பாளர்கள் புதிய அமைப்பில் கூட்டுறவு சங்கத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளனர். கூட்டுறவு உணர்வுடன், தொழில் நுட்ப திறமையும் வேண்டும். சீன அனுபவத்தைக் கூறினால் – (RED) சிவப்பாகவும், திறமையாகவும் இருக்க வேண்டும். ஐ.என்.டி.ஐ இயக்குநர் ரிச்சர்ட விவாஸ், நிலம் பொதுவுடமையாகும் இயக்கத்தைப் பற்றி கூறுகையில் மெக்சிகோ அனுபவத்தை சுட்டிக்காட்டியுள்ளார். இப்படி ஒரு அமைப்பு உருவாக்கியது நல்லது தான். ஆனால், மக்கள் ஆரம்பத்திலிருந்த உணர்வை இழந்து விட்டனர். நிலப்புரட்சி செய்ய வேண்டும். ஐ.என்.டி. ஐயின் சட்டப்பிரிவு இயக்குநர் கூட்டுறவு சங்கம் தொழில் நுட்ப நிர்வாகத்தை புரிந்து கொள்ளாவிடில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார். பயிர்கள் பற்றிய தொழில் நுட்ப அறிவு கூட்டுறவு அமைப்பு உறுப்பினர்களிடையே குறைவாக உள்ளது. பயிற்சி அளிக்க வேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கிராமப்புறத்திலுள்ள வர்க்க எதிரி

வேளாண் மாற்றத்தை எதிர்த்து முதலாளிகள், நிலச் சுவான்தார்கள், அவர்களின் ஆதரவாளர்கள், தேசிய, சர்வதேச ஊடகங்கள்  செயல்படுவது இயல்பானதே. லத்தீன் அமெரிக்க நாடுகளிலுள்ள கிராமப்புற உழைக்கும் மக்களின் ஆதரவு வெனிசுலா நிலச் சீர்திருத்த முயற்சிகளுக்கு கிடைத்துள்ளது.

நிலச் சீர்திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதிலிருந்தே நில உரிமையாளர், கால் நடை உரிமையாளர் சங்கங்கள்  மற்றும் ஊழல் மிகுந்த வலதுசாரி தொழிற்சங்க அமைப்புகள் நிலச் சீர்திருத்தத்தை எதிர்த்தனர். சொத்துரிமை அடிப்படையான உரிமை என்றும் அது மீறப்பட்டதென்றும் புலம்பினார்கள். சட்ட விரோதமாக நிலங் களை அபகரித்துக் கொண்ட அவர்கள் நில விநியோகத்தை சட்ட விரோதமான செயல் என சிறிதும் கூச்சமின்றி விளக்கமளித்தனர்.

நிலச்சட்டம் நிறைவேற்றப்பட்டதுடன், முதலாளி சங்கம் சட்டப் பிரதியை பொது இடத்தில் கிழித்தெறிந்தது. இச்சம்பவம் அனைத்து தொலைகாட்சி சானல்களிலும் ஒளிபரப்பட்டது. நிலச் சீர்திருத்தத்தை அதிகார வர்க்கம் எப்படி எதிர் கொள்கிறதென்பதை இது சுட்டிக்காட்டுகிறது. 2003 ம் ஆண்டு ஆட்சி கவிழ்ப்பு நடத்தியபோது, சட்ட விரோத அரசு சட்ட விரோதம் என அறிவிக்கப்பட்ட சிலவற்றில் முதன்மையானது நிலச்சட்டமாகும்.

தனியார் தொலைக்காட்சி சானல்கள், செய்தித்தாள்கள் ஆகியவை மக்களின் சுயாதிபத்தியத்தின் எதிரிகள். இவர்களின் பிரச்சாரத்துடன் சர்வதேச ஊடகங்களும், இணைந்து தவறான பிரச்சாரம் செய்தன. நியூயார்க் டைம்ஸ், கிறிஸ்டியன் சயன்ஸ், மானிட்டர், த எகானமிஸ்ட், பைனான்சியல் டைம்ஸ், ராய்டர்ஸ் ஆகியவை இதில் அடங்கும். நிலச் சீர்திருத்தம் அரசு கொள்கையாக அறிவிக்கப்பட்ட பின்னரும், காவல் துறை, நிர்வாகம், தேசிய பாதுகாப்பு படை ஆகியவை புரட்சியை பாதுகாப்பதற்கு பதிலாக எதிர் புரட்சிக்கு ஆதரவு தருகின்றன.

கூலிப்படையை அமைத்து (சிகாரியோஸ்) நிலப்பிரப்புக்கள் தலைவர்கள், தொண்டர்களை தாக்கியுள்ளனர். தனிநபர்கள், குடும்பங்கள் இத்தகைய தாக்குதலை சந்தித்துள்ளனர்.

2002 ஆகஸ்டில் வட வெனிசுலாவில், முகமூடி அணிந்த ஒருவன் அறுவை சிகிச்சை நிபுணரும், நில கமிட்டி தலைவருமான பெத்ரோ கோரியாவை அணுகி, அவரைக் கூப்பிட்டான். திரும்பிய அவரை ஐந்து முறை சுடடான். அரசுக்கு சொந்தமான நிலங்களை 50 குடும்பங்களுககு விநியோகித்து, அவர்களுக்கு சட்டப்பூர்வமாக நிலம் வழங்கப்பட இருந்தது. அந்த கமிட்டி தலைவராக கோரியா செயல்பட்டார். அங்கிருந்த பண்ணை உரிமையாளர் முன்னாள் அதிபரின் நெருங்கிய நண்பர். கோரியா போல் பல தலைவர்கள் குறிவைத்து கூலிப்படைகள் மற்றும் ராணுவத்தால் கொல்லப் பட்டுள்ளனர்.

ஸ்பெயினின் காலனியாதிக்கத்தையும், கொடுமைகளையும் எதிர்த்து நீண்ட காலமாக இப்பிரதேச மக்கள் போராடி வந்துள் ளனர். அதன் முடிவாக இந்த விவசாயிகள் போராட்டம் நடை பெற்றுள்ளது என்கிறார் தேசிய அசெம்பிளியின் துணைத் தலைவர் அல்வரெஸ், அல்வரெஸ் யாராகுயில் விவாய இயக்கத் தலைவராக இருந்தவர். நிலச் சீர்திருத்தம் என்பது மக்களுக்கு சுயாதிபத்தியம் வழங்குவதாகும். 50 ஆண்டுகளில் செய்ய வேண்டிய பணியை வெனிசுலாவில் 3 ஆண்டுகளில் செய்யப்பட்டுள்ளது. நில சீர்திருத்தம் 1999 ல் நடத்தப்பட்ட காலத்தில் 300 கொலைகள் நடந்துள்ளன. அவற்றில் 150 கொலைகளுக்கும் மேல் உறுதி செய்யப்பட்டுள்ளன. அல்வரெஸ் காரில் செல்லும் போது குண்டுகள் வீசப்பட்டன. ஆனால், உயிர் தப்பிவிட்டார். அவர் தாக்கப்படுவார் என இரண்டு நாட்களுக்கு முன்பே செய்தி வந்தது. இரண்டு ஆண்டுகளில் அவரை இரண்டு தடவை சொல்ல முயற்சி நடந்துள்ளது. வெனிசுலாவின் தகவல் தொடர்பு அமைச்சர் அல்வாரெஸ் மீதான கொலை வெறித் தாக்குதல், விவசாய இயக்கத் தலைவர்களை தீர்த்துக்கட்ட கூலிப்படையை ஏவிவிடும் சில சக்திகளின் கைவரிசை என கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொலை வெறித் தாக்குதலுக்கு அரசு அளிக்கும் பதில் என்ன? மேலும் சில நிலச் சீர்திருத்தங்கள். ஒவ்வொரு தாக்குதலும் புரட்சியை மென்மேலும் வலுப்படுத்தும் என வேளாண் அமைச்சர் கூறியுள்ளார். தனது ரேடியோ மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சியில் சாவேஸ் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார். காவல் துறையி லுள்ள ஊழல் பேர் வழிகளுக்கு எச்சரிக்கை செய்துள்ளார். விவசாய இயக்கத் தலைவர்களை பாதுகாக்க அரசு தவறியுள்ளதை கண்டித்து, நிர்வாகம் பெரும் நிலச் சுவான்தார்களுடன் இணைந்து செயல்பட் டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

வேளாண் சீர்திருத்தத்தின் முக்கிய அம்சங்கள்:

லத்தி பண்டியா எனப்படும் பயன்படுத்தப்படாத பெரும் பண்ணைகள் அழிக்கப்பட்டுள்ளன. நில உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்கப்பட்டு, அரசு நிலத்தை கையகப்படுத்தியுள்ளது. லத்தி பண்டியா மீது போர் தொடுக்கப்பட்டுள்ளது.

நிலம் மறுவிநியோகம் செய்யப்பட்டு கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கூட்டு உற்பத்தியை அதிகரிப்பதே பிரதான நோக்கம்.

நில உரிமை பெற வேண்டுமெனில், பட்டாவை விட உற்பத்திதான் முக்கியமானது. யார் வேலை செய்கிறார்களோ நிலம் அவர்களுக்குத் தான் சொந்தம். வெறும் வேலி போடுவதால் மட்டும் உரிமை கிடைத்துவிடாது.

வேளாண் கொள்கையின் அடிப்படை நோக்கம் உணவில் தன்னிறைவு பெறுவதாகும். இது தேசிய சுயாதிபத்தியத்தை அடைவதற்கு அடிப்படையானதாகும்.

லத்தி பண்டியாவை அழித்தல், தன்னிறைவு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஆகிய மூன்று நோக்கங்களைக் கொண்டது வேளாண் கொள்கையாகும்.

கிராமம் நோக்கி செல்வோம் என்பது முக்கியமான அம்சமாகும். குடிபெயர்தலை தடுத்து, நிலம், கடன் வசதி வழங்கி, விவசாயத்தை உயிர்ப்பித்தல் முக்கியமாகக் கருதப்படுகிறது.

சீனாவைப் போல் நிலப்பயன்பாட்டுக் கொள்கையில் வெனிசுலா கூடுதல் கவனம் செலுத்துகிறது. அந்தந்த பகுதி மக்களின் உரிமைகளை பாதுகாப்பது மற்றொரு முக்கிய அம்சமாகும்.

வேளாண் சீர்திருத்தங்கள் நீடித்து நிற்க வேண்டும் என்றால், அரசு ஆதரவுடன் கூடிய சேவைகள் மற்றும் முதலீடு தேவை என்பது உணர்த்தப்பட்டுள்ளது. பல நடவடிக்கைகளில் அரசு முதலீடு செய்துள்ளது. கிராமப்புற, நகர்ப்புற குடும்பங்களின் வருமானத்தை உயர்த்துவதுடன், அரசு நியாயவிலைக் கடைகளை (மெர்கல் கடை) அமைத்துள்ளது. 43 சத நுகர்வோர் இக்கடைகளில் தான் பொருட்களை வாங்குகின்றனர்.

வெனிசுலாவில் பெரிய மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதன் பழைய ஆளும் வர்க்கம் தோற்கடிக்கப்படவில்லை. ஆனால் அதே நேரம் ஆட்சி, அதிகாரம் தற்போது அதனிடம் இல்லை. முதலாளித்துவ உலகில் ஆளும் வர்க்கங்களும், ஏகாதிபத்தியமும் புரட்சியை தோற்கடிக்க முயலுகையில், வெனிசுலாவின் அனுபவம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. தேர்ந்தெடுத்துள்ள பாதை கடினமானது தான். ஆனால் அதை குறைத்து மதிப்பிட முடியாது. நாங்கள் தினமும் கற்றுக் கொள்கிறோம். உலகம் முழுவதற்கும் பயன்படும் அனுபவத்தை உருவாக்குகிறோம் என அவர்கள் கூறுவதிலிருந்து நாமும் கற்றுக் கொள்ள நிறைய உள்ளது.

English VersionLeave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: