மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


லத்தீன் அமெரிக்காவின் கோபம் – 2


“அமெரிக்காவின் இதயப் பகுதியில்

எருமை வீரன் ஒருவன் இருந்தான்!

அவன் ஆப்பிரிக்காவிலிருந்து திருடப்பட்டவன்

அமெரிக்காவிற்கு கொண்டு வரப்பட்டவன்!

வரும்போதே போராடியவன்!

இன்றும் உயிர்வாழப் போராடுபவன்!

அமெரிக்கா போரில் வெல்ல

இன்றும் போராடும் எருமை வீரன்“

– அமெரிக்கக் கறுப்பின மக்களைப் பற்றி பாப் மார்லி எழுதிய பாட்டு

“நாம் விதியை நேர் கொண்டு நிற்கிறோம்.

நம் நாவில் ஏகாதிபத்தியத்தின் சுவை!”

– வாஷிங்டன் போஸ்ட், 1898.

லத்தீன் அமெரிக்காவின் பூர்வகுடி செவ்விந்தியர்களின் உயிரையும், உடமைகளையும் சூறையாடி ஸ்பானிய மற்றும் போர்ச்சுகீசிய காலனியாதிக்கம் வளர்ந்து வந்த அதே வேளையில், ஆங்கில அமெரிக்காவான வட அமெரிக்காவில் இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து வந்து குடியேறியவர்கள் அங்கிருந்த பூர்வகுடியினரை அடித்து விரட்டி விட்டு, பஞ்சு, புகையிலைத் தோட்டங்களை அமைத்தனர். அங்கிருந்த பூர்வகுடியினர் ஐரோப்பிய நாகரீகத்தால் புறக்கணிக்கப்பட்டு ஓடி வந்த குடியேற்றக் காரர்களிடம் ஏமாந்த போதிலும் அடிமைகளாக உழைக்கத் தயாரில்லை. தோட்டங்களில் வேலை செய்ய லட்சக்கணக்கில் அடிமைகள் தேவைப்பட்டனர்.

அடிமைச் சேவகத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு ஆப்பிரிக்காவின் பக்கம் குடியேற்றக்காரர்களின் கவனம் திரும்பியது. ஏற்கனவே தென் அமெரிக்காவின் ஸ்பானிய போர்ச்சுகீசிய காலனி களில் ஆப்பிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பத்து லட்சம் கறுப்பின மக்கள் அடிமைகளாக உழைத்து வந்தனர்.

அடிமைகளைத் தேடி ஆப்பிரிக்கக் காடுகளுக்குள் புகுந்தனர் அவர்களைப் பிடித்து ஏற்றுமதி செய்யும் வியாபாரிகள். அமைதி யான பழங்குடிச் சமுதாய அமைப்பில் வாழ்ந்து வந்த கறுப்பின மக்களைப் பிடித்து கடற்கரைகளில் வைத்து ஏலம் நடத்தப்பட்டது. காடுகளில் பிடிக்கப்பட்ட கறுப்பின மக்கள் கழுத்திலும், காலிலும் விலங்கிடப்பட்டு ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருக்கும் கடற்கரைகளுக்கு நடந்தே அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் பாதிப்பேர் வழியிலேயே இறந்தனர். உயிரோடிருந்தவர்கள் கூண்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டனர்.

கப்பல்களில் வந்திறங்கிய ஐரோப்பிய வியாபாரிகள் கடற்கரையில் நிர்வாணமாக, சங்கிலியால் பிணைக்கப்பட்ட கறுப்பின ஆண்களையும், பெண்களையும் நுணுக்கமாகப் பார்த்து அடிமைச் சேவகத்திற்கு தேர்ந்தெடுப்பர் ஐரோப்பிய வியாபாரிகள். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் மார்பில் பிரெஞ்சு, ஆங்கிலேய அடிமை வியாபாரக் கம்பெனிகளின் முத்திரை பழுக்கக் காய்ச்சிய இரும்பினால் முத்திரைகுத்தப்படும். முத்திரை குத்தப்பட்ட அடிமைகள் அவர்களை அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லும் கப்பல்கள் வரும் வரையில் மீண்டும் கூண்டுகளில் அடைக்கப்பட்டனர்.

பத்துப் பதினைந்து நாட்களுக்குப் பின் கப்பல்கள் வரும். கப்பலின் இருண்ட, ஈரம் கசியும் அடிப்பகுதியில் சவப்பெட்டி அளவே உள்ள இடங்களில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட அடிமைகள் அடைத்து வைக்கப்பட்டனர். அவர்களுக்கு உணவும் அங்குதான்., கழிப்பிடமும் அதுதான். அடிமைகள் அடைக்கப்பட்ட அடுக்குகளின் உயரம் பதினெட்டே அங்குலம்தான். அவர்கள் புரண்டு படுக்க முடியாது. அவர்களின் கால்களும், கழுத்துகளும் அடுக்குகளுடன் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தன.

சில நேரங்களில் அடுக்குகளைத் திறந்தபோது பல அடிமைகள் சுவாசிக்க முடியாமல் இறந்திருந்தனர். சுவாசப் போராட்டத்தில் அடுத்துக் கிடப்பவர்களைக் கொன்றிருந்தனர். உள்ளே உயிருக்குப் போராடுவதை விட கடலில் குதித்து உயிரை விடலாம் என்று எண்ணித் தற்கொலை செய்து கொண்டவர்கள் ஏராளம். அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து அமெரிக்கக் கரையை அடைவதற்குள் ஏராளமான கறுப்பின மக்கள் உயிரிழந்தனர்.

கி.பி. 1700 இல் 33,000 ஆக இருந்த அடிமைகளின் எண்ணிக்கை 1850 ஆம் ஆண்டிற்குள் 60 இலட்சம் ஆனது. இந்த காலக்கட்டத்தில் ‘புதிய உலகம்’ என்றழைக்கப்பட்ட இன்றைய அமெரிக்காவை நோக்கிய கப்பல் பயணத்தில் மட்டும் 15 இலட்சம் கறுப்பின மக்கள் மடிந்தனர்.

முதலாளித்துவம் வளர்த்த இனவெறி

ஆரம்பத்தில் அமெரிக்கப் பஞ்சுத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு வெள்ளையினத்தவரும் வேலைக்காரர்களாகச் சென்றனர். இங்கிலாந்தில் நிலப்பிரபுத்துவம் மறைந்து விவசாயம் முதலாளித்துவமயமாகியபோது, சமூக அமைப்பானது தூக்கி யெறியப்பட்ட நிலமற்ற உழைப்பாளிகளே கூலி உழைப்புக்காக அமெரிக்கத் தோட்டங்களுக்கு வந்தனர். இந்த ஆங்கிலேயர்கள் 3, 5, 7 ஆண்டுகள் வரை ஒப்பந்தங்களின் அடிப்படையில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.

நாளடைவில் தோட்ட விலை பொருளான பஞ்சுக்கு உலகின் பல பகுதிகளில் புதிதாய் வளர்ந்து வந்த பஞ்சாலைகளின் முதலாளிகளின் லாபப் பசியைத் தீர்க்க வேண்டியிருந்ததால் அடிமைகளின் தேவையும் அதிகரித்தது. பஞ்சுத் தோட்டங்களில் நிலவிய கடுமையான சூழ்நிலைகள் குறித்து கேள்விப்பட்ட ஆங்கிலேயக் கூலிகள் அமெரிக்காவிற்கு விற்பது குறைந்தது. இதனால் தான் அடிமைகளைத் தேடி ஆப்பிரிக்கக் காடுகளுக்குச் சென்றனர் அமெரிக்க தோட்ட முதலாளிகள். ஒரு காலகட்டத்தில் வெள்ளையனும், கறுப்பரும் கூலி உழைப்பில் ஈடுபட்டனர். ஒரே மாதிரியான சுரண்டலையும், அடக்குமுறைகளையும் எதிர்கொண் டனர். சில நேரங்களில் ஒன்றுபட்ட போராட்டங்களில் ஈடுபட் டனர். 1676 ஆம் ஆண்டில் வர்ஜீனியா மாநிலத்தின் புகையிலைத் தோட்டத்தில் நடந்த போராட்டத்தில் இவர்கள் ஒன்றுபட்டு நின்றனர். வர்க்க அடிப்படையில் இணைந்த இனங்களைப் பிரிப்பதற்கு முதலாளித்துவம் செய்த சூழ்ச்சிதான் நிறவெறி. நிறத்தின் அடிப்படையில் தொழிலைப் பிரித்து வைக்கும் சட்டங்கள் இயற்றப் பட்டன. ஐரோப்பாவிலிருந்து வந்து குடியேறிய வெள்ளையர் களுக்கிடையில் முதலாளி – தொழிலாளி என்ற வேற்றுமையையும் கடந்து நிற அடிப்படையில் ஒருமைப்பாடு தோன்றியது. வெள்ளைத் தோல் கொண்டவர்கள் அடிமை உழைப்பிலிருந்து விடுவிக்கும் வகையிலும், சில விசேச குடியுரிமைகள் அளித்தும் இயற்றப்பட்ட சட்டங்கள் இந்த இன உணர்வுகளை வலுப்படுத்தின. கறுப்பர்கள் என்றாலே கலகம் செய்பவர்கள் என்ற பயமும், அவர்களுக்கு எதிராக வெள்ளையர்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்ற உணர்வும் மேலோங்கின. பிரச்சனையின்றி முதலாளித்துவம் வளர்வதற்கு இந்த நிறபேதமும், பின்னர் நிற வெறியும் உதவின. அடிமை உழைப்பு ஆண்டாண்டு காலமாய் இருந்து வந்த போதிலும் அதற்கு நிறம் கொடுத்து உறுதிப்படுத்தியது முதலாளித்துவம்.

ஐக்கிய அமெரிக்க நாடுகள் உதயம்

ஐரோப்பாவிலிருந்து பல தேசிய இனத்தவரும் வடஅமெரிக்காவில் குடியேறியிருந்தனர். இங்கிலாந்து அராசங்கம் இக்கண்டத்தில் 13 காலனிகளை ஏற்படுத்திக் கொண்டது. அதன் பிரதான எதிரி பிரெஞ்சு அரசு. 17 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து பிரரெஞ்சு ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. ஆயினும் குடியேற்றக்காரர் களிடையே வளர்ந்து வந்த தோட்ட அதிபர்களும், முதலாளிகளும் இங்கிலாந்து அரசிற்கு எதிராக ஒன்று திரண்டனர். இதற்கு முக்கியக் காரணம் இங்கிலாந்து அரசு 1765 இல் உருவாக்கிய ஸ்டாம்ப் சட்டம். இச்சட்டத்தின்படி, செய்திப் பத்திரிக்கைகள், பிரச்சார வெளியீடு கள், உரிமங்கள், வியாபார ஆவணங்கள், விளம்பரங்கள், சட்ட ஆவணங்கள் ஆகியவற்றின் மீது கடுமையான வரிகள் விதிக்கப் பட்டன. இந்தச் சட்டம் குடியேற்றக்காரர்களிடையே இருந்த வணிகர்கள், தொழிலதிபர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிக்கை யாளர்கள் போன்றோரைக் கடுமையாகப் பாதித்து. ஸ்டாம்ப் சட்டத்திற்கு எதிராகப் பெருங்கலவரங்கள் வெடித்தன. நியூயார்க், போஸ்டன் நகரங்களில் பிரிட்டிஷ் அரசாங்கக் கட்டடங்கள் தாக்கப்பட்டன. எதிர்ப்பின் வேகத்தைக் கண்ட பிரிட்டிஷ் நாடாளு மன்றம் ஸ்டாம்ப் சட்டத்தைத் திரும்பப் பெற்றது. குடியேற்றக் காரர்களிடையே வளர்ந்த முதலாளித்துவத்திற்கும், காலனியாதிக்க பிரிட்டிஷ் அரசிற்கும் எழுந்த முரண்பாடுகள் முற்றி அதன் முடிவில் அமெரிக்கா என்ற ஒரே நாடு உதயமானது. ஒரே மொழி, ஒரே அடிப்படைக் கலாச்சாரம் என்றிருந்த போதிலும் சுதந்திரத்திற்குப் பிறகு அமெரிக்கா என்ற நாடு தனித் தன்மையுடன் வளர்ந்தது.

1870 களில் அமெரிக்கா பிறந்த சில ஆண்டுகளுக்குள்ளேயே அது மீதமிருந்த பூர்வகுடி செவ்விந்தியர்களின் நிலங்களை அபகரித்துக் கொண்டது. காடுகளை அழித்து, ஆப்பிரிக்க அடிமைகளின் உழைப்பைச் சுரண்டி தோட்டங்களையும், குடும்பப் பண்ணைகளையும் உருவாக்கியது. 1830 மற்றும் 1840 களில் மெக்ஸிகோ நாட்டிற்குச் சொந்தமான பகுதிகளை – இன்றைய டெக்ஸாஸ் முதல் கலிபோர்னியா வரையிலான பிரதேசத்தை – ஆக்கிரமித்து, அபகரித்து வளர்ந்தது. 1890 ஆம் ஆண்டுவரை இந்த சாம்ராஜ்ய விரிவாக்கம் நடைபெற்றது. இதற்கிடையில் அமெரிக் காவின் தென்பகுதியில் அடிமை உழைப்பில் வளர்ந்த தோட்ட முதலாளிக்கும், வட பகுதியில் வளர்ந்து வந்த ஆலை முதலாளிக ளுக்குமிடையே முரண்பாடு முற்றியது. தங்கள் ஆலைகளில் கூலி வேலைக்கு ஆட்கள் தேவைப்பட்ட போது, முதலாளிகளின் பார்வை தென்பகுதி தோட்டங்களில் இருந்த அடிமைகளின் மீது திரும்பியது. முதலாளிகளுக்கும், தோட்ட அதிபர்களுக்குமிடையே உள்நாட்டுக் கலவரம் வெடித்தது. இதில் ஆபிரகாம் லிங்கன் தலைமையின் கீழிருந்த ஆலை முதலாளிகள் வென்றனர். ஆலைகளின் உழைப்புத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அடிமை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

ஐரோப்பிய, அமெரிக்க முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்குத் தேவையான ஆரம்ப மூலதனம் அமெரிக்கக் கண்டத்தின் செவ்விந்தி யர்கள் மற்றும் ஆப்பிரிக்கக் கண்டத்தின் கறுப்பின மக்களின் ரத்தத்திலிருந்து உறிஞ்சி எடுக்கப்பட்டது. லட்சக்கணக்கான பூர்வகுடி செவ்விந்தியர்கள் மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்து அள்ளி வரப்பட்ட கறுப்பின மக்களின் நாகரிகங்களுக்குக் கட்டப்பட்ட கல்லறைகளின் மீது இறுமாப்புடன் எழுந்து நின்றது மேற்கத்திய கலாச்சாரம்!

அமெரிக்க முதலாளித்துவத்தின் அசுர வளர்ச்சி

அமெரிக்க நாட்டின் தென்பகுதியிலிருந்த அடிமைகளின் உழைப்பில் வளர்ந்த தோட்ட முதலாளிகளைத் தோற்கடித்தபின் அந்நாட்டின் ஆலை முதலாளித்துவம் வேகமாக வளரத் துவங்கியது. நீராவி சக்தி, புதிய இயந்திரங்கள், மின் சக்தி களத்தில் இறக்கிவிடப்பட்டன. முதுகொடிய உழைப்பதற்கு கறுப்பின மக்களும், ஐரோப்பாவி லிருந்து புலம் பெயர்ந்த தொழிலதிபர்களும் இருந்தனர். எஃகு, நிலக்கரி உற்பத்தி பன்மடங்கு பெருகியது.

இந்த அசுர வளர்ச்சியினால் உற்பத்தி பெருகியது. மூலதனம் ஒரு சிலரின் கைகளில் குவிந்தது. மாபெரும் நவீன தொழில் நிறுவனங்கள் உருவாகின. மூலதனக் குவியலின் காரணமாக முதலாளித்துவம் ஏகபோக முதலாளித்துவ கட்டத்தை அடைந்தது. சிறிய தொழில் நிறுவனங்களை பெரும் நிறுவனங்கள் வாங்கியும், நிறுவனங்களை இணைத்தும் யு.எஸ். ஸ்டீல், யூனியன் பசிபிக், ஸ்டாண்டர்ட் ஆயில் போன்ற தொழில் சாம்ராஜ்யங்கள் இந்த வளர்ச்சியினூடாகவே பெரிய ஊடக நிறுவனங்களும் தோன்றின. முதலில் தோட்ட முதலாளிகளுடன் மோதிய ஆலை முதலாளிகள் பின்னர் அவர்களுடன் சமரசம் செய்து மீண்டும் அடிமை உழைப்பிலான தோட்டங்கள் வலுப்படுத்தப்பட்டன. 1887 மற்றும் 1903 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்டக் காலத்தில் ஒவ்வொரு வாரமும் சராசரி இரண்டு கறுப்பின மக்கள் தூக்கிலிடப்பட்டனர் அல்லது அங்கம் சிதைக்கப்பட்டனர்.

வட அமெரிக்கா என்ற கண்டத்தையே திருடிய அமெரிக்க ஏகபோக முதலாளித்துவம் அங்கிருந்த எண்ணற்ற சிறு முதலாளி கள், விவசாயிகளை அழித்து வளர்ந்தது. ஒரு கட்டத்தில் தங்கள் கையில் குவிந்திருந்த மூலதனத்தைப் பெருக்குவதற்கு நாட்டிற்குள் நடத்தும் சுரண்டல் போதாதென்று ஏகபோக முதலாளிகள் உணர்ந்தனர். ஐரோப்பிய ஏகபோக முதலாளித்துவம் சந்தித்த அதே பிரச்சனையைத்தான் இப்போது புதிதாய் வளர்ந்து வரும் அமெரிக்க ஏகபோகமும் நேர் கொண்டது. இதற்கு அவர்கள் கண்ட தீர்வு தான் பிறநாடுகளில் முதலீடு செய்து லாபமீட்டுவதை அடிப்டையாகக் கொண்ட ஏகாதிபத்தியம். இந்த வளர்ச்சிப் போக்கினை ஜே.ஏ. ஹோய்ஸன் என்கிற பிரபல பிரிட்டிஷ் பொருளாதார வல்லுநர் “முதலீடு செய்வதற்கும், உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பதற் கும் அந்நியச் சந்தைகள் அவசரமாகத் தேவைப்பட்டன. இதனால் தான் அமெரிக்காவின் குடியரசுக்கட்சி ஏகாதிபத்தியம் என்பதை அரசியல் கொள்கையாகவே அறிவித்தது. பெரும் ஆலை முதலாளிகளும், நிதி மூலதனக்காரர்களும் இந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதைவிட கட்சி அவர்களுக்குச் சொந்தமாக இருந்தது என்பதே உண்மை! ஜனாதிபதி ரூஸ்வெல்ட் டின் சாகசம் புரியும் உற்சாகத்தை யும், ‘பிறநாடுகளை நாகரீகப்படுத் தும் நம் கடமை’ என்ற பெயரில் அவர் எடுத்த நடவடிக்கைகளையும் கண்டு நாம் ஏமாந்துவிடக் கூடாது. ராக்ஃபெல்லர், பியர்பாண்ட் மோர்கன் போன்ற முதலாளிகள் கைக்குத்தான் ஏகாதிபத்தியம் தேவையாக இருந்தது. அதனை ஒரு கொள்கையாக அமெரிக்காவின் தோள்களில் ஏற்றிவிட்டவர்களும் அவர்கள்தான். தங்கள் நாட்டின் பொது வளங் களைக் கொள்ளை யடித்து அவர்கள் சேர்த்த மூலதனத் தை வேறு எங்காவது முதலீடு செய்யவில்லையெனில் அது பயனற்றுப் போய்விடும் என்பதால் அவர்கள் ஏகாதிபத்தியப் பாதை யைத் தேர்ந்தெடுத்தனர்” என்று எழுதினார்.

ஏற்கனவே ஐரோப்பிய ஏகபோக முதலாளிகள் தங்கள் லாப வேட்கையினால் அந்நியச் சந்தைகளைப் பிடித்து பங்கு போட்டுக் கொள்ளும் போட்டியில் இருந்தனர். 1884 – 1885 ஆண்டுகளில் பெர்லின் நகரத்தில் நடந்த மாநாட்டில், ஐரோப்பிய முதலாளிகள் ஆப்பிரிக்கக் கண்டத்தைத் தங்களுக்குள் பிரித்துக் கொண்டனர். ஐரோபியர் பலர் தாங்கள் பங்கிட இருந்த ஆப்பிரிக்கப் பகுதி களைப் பார்த்தது கூட இல்லை என்பது தான் வேடிக்கை!

புதிய சந்தைகளைத் தேடிய அமெரிக்க ஏகபோக முதலாளித்துவத்தின் பார்வை தமது நாட்டிற்கு அருகிலேயே இருந்த லத்தீன் அமெரிக்காவின் மீது படிந்தது. ஐரோப்பிய ஏகபோகம் எந்தச் சந்தையை எடுத்துக்கொண்டாலும் லத்தீன் அமெரிக்காவின் பக்கம் வரக்கூடாது, இப்பிரதேசத்தைச் சூறையாடுவது எங்களின் உரிமை என்று 1823 இல் கூறிய பிரகடனம் தான் அமெரிக்காவின் மன்றோ கொள்கை!

டிசம்பர் 2, 1823 அமெரிக்க ஜனாதிபதி ஜேம்ஸ் மன்றோ அமெரிக்கப் பாராளுமன்றத்தில் தன் கொள்கையை விளக்கி இவ்வாறு பேசினார். “அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அப்பால் வாழும் மக்களின் சுதந்திரம், சந்தோசம் குறித்து அமெரிக்க மக்கள் நட்புணர்வு கொண்ட எண்ணங்களையே கொண்டுள்ளனர். தங்களுக்கிடையேயான பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு ஐரோப்பிய சக்திகள் நடத்திய போர்களில் நாம் பங்கு கொண்டதே இல்லை. அது நமது கொள்கையும் அல்ல. ஆனால், நமது உரிமைகளுக்கு ஊறு விளையும் போதோ, உரிமைகள் பறிக்கப்படும் போதோ எங்களுக்கு ஏற்படும் காயங்களுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்போம்”.

மேலும், அமெரிக்க அரசியலமைப்பு ஐரோப்பிய நாடுகளின் அரசியலமைப்பிலிருந்து மாறுபட்டதென்றும், வேறுபாடுகள் இருந்த போதிலும், அமெரிக்காவின் வளர்ச்சிக்கு அவர்கள் ஆற்றிய பங்கினை மறக்க முடியாதென்றும் கூறும் மன்றோ ஒரு எச்சரிக்கை விடுக்கிறார்:

“ஐரோப்பிய நாடுகளுடன் நட்புறவு இருந்தபோதிலும், அவை தம் அரசியலமைப்பை புவிக்கோளத்தில் இப்பகுதிக்கு நீட்ட முயற்சித்தால் அது அமெரிக்காவின் அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் ஊறு விளைவிக்கும் என்று நாங்கள் அறிவிக்கிறோம். இப்போது ஐரோப்பா வைத்திருக்கும் காலனிகளில் நாங்கள் தலையிட வில்லை; இனி தலையிடவும் மாட்டோம்…. அதே நேரத்தில் இப்பிரதேசத்தில் தங்கள் சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்தி அதை நாங்கள் ஏற்றுக் கொண்ட நாடுகளில், எந்த ஐரோப்பிய சக்திகளாவது மக்களை கட்டுப்படுத்தவோ, அடக்கவோ நினைத்தால் அதனை அமெரிக்கா விற்கு எதிரான பகையுணர்ச்சியாகவே பார்ப்போம்…. இனி அமெரிக் கக் கண்டத்திலிருக்கும் நாடுகளை எந்த ஐரோப்பிய சக்தியும் அடிமைப்படுத்த நினைக்கக் கூடாது”.

அமெரிக்க நாட்டின் சுரண்டல் பிரதேசமாக வரையத்து வெளியிடப்பட்ட இந்தக் கொள்கை அறிவிப்பின் விளைவாகத்தான் லத்தீன் அமெரிக்காவில் இயற்கை வளங்களும், மனித உரிமைகளும், சுதந்திரங்களும் பேரழிவைச் சந்தித்தன.

“முதலாளித்துவ நாகரீகத்தின் ஆழமான போலித்தனமும், உள்ளார்ந்த காட்டு மிராண்டித்தனமும் வெளிப்பட்டு பகிரங்கமாய் நம் கண்முன் கிடக்கின்றன. தன் சொந்த நாட்டில் மரியாதைக்குரிய வடிவத்திலிருக்கும் அந்நாகரீகம் காலனிகளுக்கு நிர்வாணமாய்ச் செல்கிறது”

என்று காரல் மார்க்ஸ் 1853 இல் “இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் எதிர்காலம்” என்று நியூயார்க் டெய்லி ட்ரிப்யூன் பத்திரிக்கையில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

மனித மாண்புகளைத் துறந்து, நிர்வாணமாய் ஐரோப்பிய காலனியாதிக்கச் சக்திகளும், அமெரிக்க ஏகாதிபத்தியமும் ஆடிய தாண்டவம்தான் லத்தீன் அமெரிக்காவின் இன்றைய கோபத்துக்கு அடிப்படைக் காரணம்.

– தொடரும்%d bloggers like this: