மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


விவசாயிகளின் உரிமையைப் பறிக்கும் விதை மசோதா


உலகமயமாதலால் இந்திய வேளாண்மை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் அறிவோம். சமீப காலமாக பன்னாட்டுக் கம்பெனிகளின் ஆதிக்கம் வேளாண்துறையில் அனைத்துக் கட்டங்களிலும் – உற்பத்திக்கு முன்பு இடுபொருள் வாங்குவதிலிருந்து துவங்கி, பொருட்களைச் சந்தையில் விற்பனை செய்வது வரை – இருப்பதைக் காண முடிகிறது. இந்நிறுவனங்கள் விதை வர்த்தகத்தைத் தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளன. பாரம்பரிய விதைகளை நாம் இழந்து வருகிறோம். கோதுமை சாகுபடியே அடிப்படை வேளாண் தொழிலாகத் தோன்றியது. (கி.மு. 8000 ஆண்டுகளுக்கு முன்) நெல்லின் தோற்றம் கி.மு. 4000 என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பின்னர் சீனாவில் யாங்கட்ஸி நதிச் சமவெளியில் நெல்சாகுபடி புழக்கத்திற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இன்று வீரிய ரக விதைகளால் இயற்கையைப் பேணுகிறோமா? அழிக்கிறோமா? என்ற கேள்வி பெரிதாக நம்முன் உள்ளது. அதைவிட முக்கியம், விதைகளை ஏகபோக ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரப்படுவதால் ஒரு நாட்டின் உணவுப் பாதுகாப்பே கேள்விக்குறியாக நிற்கிறது.

விதைகளின் முக்கியத்துவம்

“விதைகள் உணவுச் சங்கிலியின் முதல் கண்ணி என்பது மறுக்க இயலாததாகும். இவைதான் பயிரின் ஆதாரமாகும். விதைகள் தான் உணவுப் பாதுகாப்புக்கு அடையாளம். பல்லுயிர் வளத்தைப் பாதுகாக்கும் அரண் என்று கூறினால் மிகையாகாது”. விவசாயிகள் விதைகள் தயாரிப்பதில் வல்லுநர்கள். 75 சதம் விதைகளை விவசாயிகள் தாங்களே தாயரித்துக் கொள்ளுகின்றனர். தேவைப் படும் போது வியாபாரிகளிடமிருந்தும், கம்பெனிகளிடமிருந்தும் விதைகளை வாங்குவார்கள். விதைகளை பரிவர்த்தனை செய்து கொள்வார்கள்.

புதிய விதை மசோதா

1966 இல் கொண்டுவரப்பட்ட விதைச் சட்டத்தை மாற்றி அமைத்து, புதிய விதை மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. தற்காலச் சூழலுக்கேற்ப இந்திய விதை வணிகத்தை ஒழுங்குபடுத்துவதற்காக சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளதாகக் கூறப்பட்டாலும், இந்த மசோதா கடுமையான சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. விவசாயிகளின் நலனுக்கு எதிராகப் பல பிரிவுகள் உள்ளன. வேளாண் விஞ்ஞானிகளும், இந்திய நாட்டின் உயிரின பன்முகத்தன்மையை அழிக்கும் பிரிவுகள் நிறைய உள்ளன எனக் கருதுகின்றனர். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் விதை நிறுவனங்களின் ஆதிக்கம் உருவாகி விதைகளின் விலை கடுமையாக உயரும்.

2002 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு, 2003 ல் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, 2004 டிசம்பர் மாதம் ராஜ்ய சபாவில் மசோதா முன்வைக்கப்பட்டது. உடனேயே விவசாயிகளின் நலன்களை புறக்கணித்துவிட்டு, பன்னாட்டுக் கம்பெனிகளின் நலன்களை முன்னிறுத்துகிறது என்ற சர்ச்சை எழுந்தது. இந்த 2004 மசோதா, 1966 ஆம் ஆண்டு சட்டத்திற்கு மாற்று என்று கூறப்படுவதால், 1966ம் ஆண்டு விதைச்சட்டத்தின் சில முக்கிய அம்சங்களை பார்க்க வேண்டியுள்ளது. விதைகளைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை.

வேளாண் ஆய்வுக்கென இந்தியக் கவுன்சில் குறிப்புகளில் இடம் பெறாத வகை விதைகள் விடுபட்டுள்ளன. பணப்பயிர், தோட்டப்பயிர் விடுபட்டுள்ளன. மாநில அரசின் ஏஜென்சிகள் மூலமே சான்றிதழ்கள் வழங்கப்படும்.

2004 விதை மசோதாவின் நோக்கங்கள்:

  • 1966 விதைச் சட்டத்தின் குறைகளை நீக்குதல்.
  • விதைக்கம்பெனிகளின் வளர்ச்சிக்கு ஏற்ற சூழலை உருவாக்குதல்.
  • விதை இறக்குமதியை ஊக்குவித்தல்.
  • அறிவியல் வளர்ச்சியைப் பயன்படுத்தும் சூழலை உருவாக்கி,
  • ஆய்வு, வளர்ச்சியை அதிகப்படுத்துதல்.

2004 விதை மசோதாவின் முக்கிய அம்சங்கள்:

  • அனைத்துவகை விதைகளையும் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.
  • ஐ.சி.ஏ.ஆர். (ICAR), மாநில வேளாண்  பல்கலைக்கழகங்கள், தனியார் நிறுவனங்கள் என அனைத்திற்கும் விதைச் சோதனை செய்ய அனுமதி உண்டு.
  • விதைகளுக்கான சான்றிதழ் வழங்க நிறுவனங்களுக்கு அனுமதி உண்டு.
  • விதை வகைகளை உள்ளடக்கிய தேசியப் பதிவேடு ஏற்படுத்தி பராமரித்தல் வேண்டும்.
  • விதை ஏற்றுமதி, இறக்குமதி முறைப்படுத்தப்படும்.
  • பதிவு செய்யாமல், விவசாயிகள் விதைகளை சேமிப்பதோ,  பயன்படுத்துவதோ, பரிவர்த்தனை செய்வதோ அல்லது விற்பதோ கூடாது.
  • தனியார் விதைச் சோதனைக் கூடங்களுக்கு அனுமதிச் சான்றிதழ் வழங்கப்படும்.
  • மரபணு ரீதியான பயிர்களின் விதை விற்பனை முறைப்படுத்தப்படும். மலட்டு விதைகள் தடை செய்யப்படும். விதைகளை ஒழுங்குபடுத்த அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் 1966 இல் கொண்டு வரப்பட்ட விதைச் சட்டம் அமெரிக்க, ஐரோப்பிய பரிசோதனை முறைகளை உள்ளடக்கிய போதும், தனியார் துறையில் விதைத் தயாரிப்பு, விற்பனையை கண்காணிக்கும் வழிமுறைகள் இல்லை.

1968 இல் விதை விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. 1972 இல் விதை (திருத்தச்) சட்டம் கொண்டு வரப்பட்டது. மத்திய விதைச் சான்றிதழ் வாரியம் அமைக்கப்பட்டது.

விதைச்சான்றிதழ் அளிக்கும் ஏஜென்சிகளை ஒருங்கிணைக் கும் பணியை வாரியம் செய்ய வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

1981 விதை (திருத்தம்) – அனைத்துச் சான்றிதழ்களும் மத்திய விதைக் கமிட்டி குறிப்பிட்டுள்ளபடி இருக்க வேண்டுமென பரிந்துரை செய்தது.

1983 விதை (கட்டுப்பாடு) ஆணை : 1955 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின்கீழ் விதைகள் கொண்டு வரப்பட வேண்டும் என்றும், விதை ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் விற்பனைக்கு உரிமங்கள் அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

1988 விதை வளர்ச்சிக்கான புதிய கொள்கை வகுக்கப்பட்டது. பரிசோதனை அடிப்படையில் எண்ணெய் வித்துக்கள் இறக்குமதி செய்ய வழிவகுக்கப்பட்டது.

2002 “தேசிய விதைக் கொள்கை” கொண்டு வரப்பட்டது. தரமான விதைகள் கிடைக்க முக்கியத்துவம் அளிக்கப்படுமென்றும், சர்வதேச வணிகத்தை அதிகரிப்பதென்றும் வலியுறுத்தப்பட்டது. விவசாயிகளின் உரிமைகளான விதைகள் தயாரிப்பு, சேமிப்பு, பரிவர்த்தனை பாதுகாக்கப்படுமென கூறப்பட்டது.

1955 இல் “விதைக் கொள்கை பரிசீலனைக்குழு” ஒன்றை வேளாண் அமைச்சரகம் அமைத்தது. 1997 இல் இந்தக் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டது. 2004 விதை மசோதா வடிவமைக்கப் படும் முன்பும் நிறைய விவாதங்கள் நடைபெற்றுள்ளன.

2004 மசோதாவை ஏன் எதிர்க்கிறோம்?

பிரிவு 12 இன் படி உருவாக்கப்படும் மத்திய விதைக்குழுவின் பதிவு உபகுழுவில் அனைத்து வகையான விதைகளும் பதிவு செய்யப்பட வேண்டும். பிரிவு 13 இன் படி பதிவு செய்யப்பட்ட விதைகளை மட்டுமே எந்த நபரும் விதைப்பு மற்றும் நடவிற்கு விற்பனை செய்ய வேண்டும். ஒருமுறை பதிவு செய்யப்பட்டால், அந்தப் பதிவு ஆண்டுப்பயிர் மற்றும் இரண்டாண்டு பயிருக்கு 15 ஆண்டுகளுக்கும், நீண்டகால (மர) பயிருக்கு 18 ஆண்டுகாலமும் பொருந்தும். பதிவு செய்யப்பட்ட அனைத்து விதைகளுக்கும் சில வகையான காப்புரிமை செயல்பாட்டிற்கு வரும். “பதிவு” என்ற வார்த்தைக்கு விதைகள் மீதான வணிக ரீதியான உரிமைகள் என்று அர்த்தம் கொள்ளும் வகையில் உள்ளது.

பிரிவு 21 இன் படி, எல்லா உற்பத்தியாளர்களும் அனைத்து வகையான விதை பதப்படுத்தும் நிறுவனங்களையும் மாநில அரசிடம் பதிவு செய்ய வேண்டும். பிரிவு 21, உபபிரிவு 1 இன் படி, மாநில அரசிடம் பதிவு செய்யப்படாத விதைகளை உற்பத்தி செய்வதற்கான தயாரிப்பு மற்றும் பயிர் வளர்ப்பு செய்யக் கூடாது.

பிரிவு 2, உப பிரிவு 19 இன்படி, விதை உற்பத்திக்கான தயாரிப்பு அல்லது விதை உற்பத்தி செய்யும் நிறுவனம் அல்லது நிறுவனங்கள் / நபர்கள் மற்றும் குழுக்கள் என உற்பத்தியாளரை வரையறை செய்கிறது. விதை பதப்படுத்துவதை பிரிவு 2, உபபிரிவு 26 வரையறை செய்கிறது. விதை மற்றும் நடவுப் பொருட்களை காயவைப்பது, அடித்தல், தோல் விரித்தல், பருத்தி விதை நீக்குதல், சுத்தப்படுத்துதல், தரம் பிரித்தல் மற்றும் பதப்படுத்துதல் இதிலடங்கும்.

பதிவு செய்யப்பட்ட உற்பத்தியாளர்கள் மட்டுமே விதை உற்பத்தி செய்ய முடியும். மற்றவர்கள் விதை பயிரிடுவதோ அல்லது உற்பத்தி செய்வதோ மசோதாவின் பிரிவு 38 இன்படி, தண்டனைக்குரிய குற்றமாகும். இக்குற்றத்திற்கு ரூ.5000க்கு குறையாமலும், அதிகபட்சம் ரூ.25000 வரையிலும் அபராதம் விதிக்கப்படும்.

அனைத்துவகை விதைகளும் பதிவு செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது. ஆனால், அந்த விதை எப்படி உருவாக்கப் பட்டதென்ற தகவலைத் தராமல் யார் வேண்டுமானாலும் பதிவு செய்யலாம் என்ற நிலைபாடு உயிரின திருட்டுக்கு (Biopiracy) வழிவகுக்கும் என்பதையும் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டுமென்கின்றனர் வேளாண் விஞ்ஞானிகள். அதுமட்டுமல்ல. இதனால் விவசாயிகளின் உரிமைகள் பாதிக்கப்படும். அனைத்து வகை விதைகளின் மூலம் என்ன என்பதை ஆராய்ந்தால் அவற்றிற்கு காரணம் விவசாயிகளின் பாரம்பரிய அனுபவம் என்பது தெளிவாகப் புரியும்.

பிரிவு 43, விவசாயிகளின் உரிமைகளான விதைகளைச் சேமிப்பது, உபயோகிப்பது, பரிமாற்றம் செய்வது, வேண்டுமென்றே நீக்கப்பட்டுள்ளது. பிரிவு 43 இன் வரையறைகள் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழியை நிராகரிக்கிறது.

பிரிவு 26 இன் படி, விதைகள் அல்லது நடவுப் பொருட்களின் குறைந்தபட்ச முனைப்புத் திறன், சுத்தத் தன்மை, மரபணுத் தூய்மை பற்றி உறுதி செய்ய வேண்டும்.

‘தேசீய விதைப் பதிவேடு’ 2004 மசோதாவில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. அந்தந்த பகுதிகளில் உள்ள சிலவகை விதைகளுக்கு மாநில அரசுகள் ஒப்புதல் கொடுத்து வந்தன. அந்த உரிமை மாநில அரசுகளிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரிவு 35, விதை ஆய்வாளருக்கு நிறைய அதிகாரம் கொடுக்கிறது. 1966 ஆம் ஆண்டு சட்டத்தின்படி, விதை ஆய்வாளர் குறிப்பிட்ட எந்த வகையான விதைகள், எங்கு வைத்திருந்தாலும் அதை ஆய்வு செய்யலாம். பிரிவு 35 விதை உற்பத்தி மற்றும் நடவுப் பொருட்கள் உற்பத்தி செய்வதிலிருந்து விவசாயிகளை அச்சுறுத்து வதற்கும் அதிகாரம் அளிக்கிறது.

பிரிவு 27 விதை சான்றளிக்க மத்திய விதைக் குழுவிற்கு அதிகாரம் அளிக்கிறது. இக்குழு தனிநபர்கள் அல்லது தனியார் விதை உற்பத்தி நிறுவனங்களுக்குச் சுயமாகச் சான்றளித்துக் கொள்ள உரிமையை அளிக்கும். இந்த விதிமுறை தனியார் விதைக் கம்பெனிகளுக்கே சாதகமாக இருக்கும்.

விதைச்சட்டம் 1966 இன் படி, மத்திய விதைக்குழுவில் அனைத்து மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டது. இந்த மசோதாவில் அனைத்து மாநிலப் பிரதிநிதித்துவ உரிமை நீக்கப்பட்டுள்ளது.

எண்பதுகளில் சிறிதும், பெரிதுமாக நிறைய இந்திய விதைக் கம்பெனிகள் தோன்றின. போதாக்குறைக்கு அன்னிய விதைக் கம்பெனிகள் கொஞ்சம், கொஞ்சமாக ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தன. இந்நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க போதிய வழிவகைகள் இல்லை. பயிர்வகை காப்பு மற்றும் விவசாயிகள் சட்டத்தை அமலாக்குவதற்குப் பதிலாக இந்த மசோதா ஏன் வரவேண்டுமென்ற கேள்வி எழுந்துள்ளது.

விதைகள் பதிவு செய்வதை கட்டாயமாக்கும் இந்த மசோதா, விதைகளின் தரம் பற்றியும் குறிப்பிட்டுள்ளது. ‘குறைந்த பட்சத் தரம்’ இருக்க வேண்டுமென வலியுறுத்துவதும், விவசாயிகளின் உரிமைகளைப் பறிப்பதாகும். காலம், காலமாக அந்தந்தப் பகுதியின் மண்தரம், சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப விதைப் பெருக்கம் செய்யும் விவசாயிகள், மசோதாவில் கூறப்பட்டுள்ள தரத்திற்கேற்ப செய்யவில்லை என்று கூறி அந்த விதைகளை பதிவு செய்ய மறுக்கலாம். பாரம்பரிய விவசாயத்தில், வணிக ரீதியில், லாப நோக்குடன் விதைத் தயாரிப்புப் பெருக்கம் நடைபெறவில்லை. புற்களிலிருந்து நெல், கோதுமை போன்ற பயிர்களை விவசாயிகள் உருவாக்கி உள்ளனர் என மனித நாகரீக வரலாறு சுட்டிக்காண்பிக் கிறது. விதைகள் பரிவர்த்தனை என்பதும், விவசாயிகள் மத்தியில் லாபம் ஈட்டும் நோக்கத்துடன் நடைபெறவில்லை. ஆனால் இன்று… காளான்கள் போன்று விதைக்கம்பெனிகள் தோன்றி அனைத்தையும் லாபமாக மாற்ற முயலுகின்றன.

“மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சோளப்பயிர் பொய்த்து விட்டது. என்னிடம் விதைகள் இல்லை. எனவே எனது அத்தை வீட்டிற்கு ஒரு விசேசத்திற்குச் சென்ற நான் அவரிடமிருந்து விதைகள் எடுத்து வந்தேன். அதைப் பயிரிட்டு நல்ல விளைச்சல். எப்படி விதைத் தேர்வு செய்ய வேண்டுமென எங்களுக்குத் தெரியும்” என்கிறார் சரோஜம்மா என்ற விவசாயி. மேலும், “பாக்கெட்டுகளில் நிரப்பி விற்கப்படும் விதைகள் நான் வாங்கத் தயங்குவேன். அந்த விதையில் என்ன தான் உள்ளது என யாருக்குத் தெரியும்? அது எப்படி தயாரிக்கப்பட்டதோ? அது விலையும் அதிகம்” என்கிறார்.

விதை வாணிகம் யாருக்காக?

உலகிலேயே மிக அதிகமான வகை விதைகளை உருவாக்கும் திறன் கொண்ட நாடாக இந்தியா கருதப்படுகிறது. இந்தியப் பொதுத்துறை மிக மலிவான விலையில் உயர்ரக, வீரிய விதைகளை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. உலகில் முதல் வீரிய ரக பருத்தி (ழ 4) 1972 ஆம் ஆண்டிலும், வீரிய முத்துச்சோளம் 1963 ஆம் ஆண்டிலும், வீரிய ரக மாம்பழம், ஆமணக்கு, கம்பு என முதல் முதலாக வீரிய ரகங்களை அறிமுகப்படுத்திய பெருமை இந்தியாவுக்கு உண்டு. இந்திய வேளாண் ஆய்வு மையத்தின் விதையியல் துறைத் தலைவர் எஸ்.பி. சர்மா, இதுபற்றிக் கூறுகையில், “இந்தியாவில் பொதுத்துறை ஆய்வுமூலம் 3500 வகைப் பயிர்கள் உருவாக்கப்பட்டுள்ளன” என்கிறார். 200 தனியார் விதைக் கம்பெனிகள் வெறும் 150 வகை களை மட்டுமே உருவாக்கியுள்ளனர். பொதுத்துறை விதைக்கம் பெனிகள் மதிப்புக்குறைவான சில ரகங்களையும் விற்கின்றன. பொதுத்துறை மூலம் கண்டுபிடிக்கப்பட்ட ரகங்களைச் சந்தையில் விற்று லாபம் ஈட்டும் கம்பெனிகள் உண்டு.

“இந்தியாவில் உணவுப் பாதுகாப்புக்கு அடிப்படையாகக் கருதப்படும் பயிர்கள் அரிசி, கோதுமை, கம்பு, கேழ்வரகு, சோளம், பருப்பு வகைகள், உருளை, வெங்காயம், நிலக்கடலை, கரும்பு மற்றும் சோயாபீன் ஆகியவையாகும். இப்பயிர்களைப் பொறுத்த வரை விதைத் தயாரிப்பு / பெருக்கத்தில் தனியார் துறையின் பங்கு ஒரு சதம் மட்டுமே” என எஸ்.பி. சர்மா குறிப்பிடுகிறார். மேலும், “இந்தியாவில் உணவுப் பயிர் சாகுபடி செய்யப்படும் 160 மில்லியன் ஹெக்டேர் நிலத்தில் வெறும் 20 மில்லியன் ஹெக்டேர் நிலத்தில் மட்டுமே தனியார் துறை விதைகள் பயன்படுத்தப்படுகின்றன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தனியார் மற்றும் பன்னாட்டு விதை நிறுவனங் களை அனுமதித்தால், விவசாயிகள் மோசமான நிலைக்குத் தள்ளப் படுவார்கள். அதன் விதைகளே தற்போது பரவலாகப் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. இந்த விதைகளின் விலையும் மிகவும் அதிகம். உதாரணமாக, பி.டி. பருத்திக்கு ஏக்கர் ஒன்றுக்கு 1800 ரூபாய் செலவாகிறது. (இதில் தொழில் நுட்பம் அளித்தது என்ற அடிப்படையில் மான்சான்டோ கம்பெனிக்குத் தரும் ராயல்டி 1400 ரூபாயும் அடங்கும்). ஜி.எம். வகை பருத்தி விதைகளை பயன்படுத்தினால் மொத்த உற்பத்திச் செலவில் 45 சதம் விதைகளுக்கு மட்டுமே செலவிடப்படுகிறது. சாதாரண ரக பருத்தியில் 10 சதம் மட்டுமே விதைக்கான செலவாக உற்பத்திச் செலவில் கணக்கிடப் படுகிறது.

இந்தியாவின் விதைத் தலைநகரம் (Seed Capital) என அழைக்கப்படும் ஆந்திரப்பிரதேசத்தில், தொண்ணுhறுகளில் நாயுடு அரசு விதை வர்த்தகத்தில் தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்ட வழிவகை செய்தது. 1997 – 98 இல் நூற்றுக்கணக்கான விவசாயி களின் தற்கொலைக்குக் காரணம் மோசமான விதைகளால் விளைச்சல் பாதிக்கப்பட்டது தான் என பல ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன..

அன்னியக் கம்பெனிகளின் விதைகளைப் பயன்படுத்தி, விளைச்சல் பாதித்தால் என்ன ஆகும்? 2004 இல் (MAHYCO) ஆந்திராவில், மஹாராஷ்டிரா ஹைப்பீடு சீடு கம்பெனியுடன் இணைந்த கம்பெனி பி.டி. பருத்தி விதைகளை விற்றது. விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு நஷ்டஈடுகோரிய போது ‘மஹிகோ’ தர மறுத்ததுடன், உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது. “பிரச்சனை 4.5 கோடி ரூபாய் நஷ்டஈடு அல்ல. கம்பெனியின் பெயர் கெட்டுவிடும்” என வழக்கு தொடுத்தது. விளைச்சல் பாதிக்கக் காரணம் மோசமான விதைகள் என்பதை ஏற்க மறுத்தது. நுசிவீடு (Nuzi Veedu) என்ற நிறுவனமும் இதைப் போலவே நஷ்ட ஈடு தர மறுத்துவிட்டது.

விதை மசோதா பற்றிக் குறிப்பிடுகையில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் “விவசாயிகளின் விதை உருவாக்கும் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். உயிரின பன்முகத் தன்மைச் சட்டமும், பயிர்வகை காப்பு மற்றும் விவசாயிகள் உரிமைச் சட்டத்தையொட்டியே மசோதா இருக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் அடிப்படை உரிமைகளைப் பலிகேட்கும் விதை மசோதா மாற்றப்பட வேண்டும் என்று அகில இந்திய விவசாய சங்கம் வலியுறுத்துகிறது.

என்ன செய்ய வேண்டும்?

பிரிவு 1, உப பரிவு 3 இன்படி, தனது சொந்த உபயோகத்திற்கு விதையை உற்பத்தி செய்யும் விவசாயிக்கு எவ்விதப் பாதுகாப்பும் இல்லை. விதை உற்பத்தி, அதற்கான ஏற்பாடு, விதைப் பரிவர்த்தனை என அனைத்தையும் குறிப்பிட்டு, அவற்றிற்கு சட்டத்தின் செயல் பாட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும்.

பிரிவு 43 நீக்கப்பட்டு விவசாயிகளின் உற்பத்தி மற்றும் உற்பத்திக்கான தயாரிப்பு உரிமையாக அந்தப் பிரிவில் மற்ற உரிமைகளுடன் சேர்க்கப்பட வேண்டும்.

எந்தத் தனியார் விதை நிறுவனமும் சுயமாகச் சான்றிதழ் அளித்துக் கொள்வதற்கான உரிமையை அளிக்கக் கூடாது. விதையின் தரத்தினை உறுதி செய்யும் வகையில் தேவையான மாற்றங்கள் சேர்க்கப்பட வேண்டும்.

போலி விதைகளால் விவசாயிகள் பெருத்த நஷ்டத்திற்கு ஆளாகின்றனர். எனவே, இந்த மசோதாவில் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளரிடமிருந்து போதுமான நிவாரணம் கோருவதற்கு கூடுதலான பொருத்தமான பிரிவுகள் சேர்க்க வேண்டும். போலி விதைகளை உற்பத்தி செய்வோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும், அதற்கான தண்டனையை அதிகப்படுத்தும் வகையில் சேர்க்க வேண்டும்.

தற்போதைய மசோதாவில் 5 மாநில வேளாண் துறை செயலாளர்கள் சுழற்சிமுறையில் நியமிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. இந்த விதி திருத்தப்பட்டு அனைத்து விதைகள் மற்றும் நடவுப் பொருட்கள் இந்த மசோதாவின் வரையறைக்குள் வரும் வகையில் அனைத்து மாநிலப் பிரதிநிதிகளும் சேர்க்கப்பட வேண்டும்.

இந்த மசோதாவின் பல பிரிவுகள் பொத்தாம் பொதுவாக உள்ளதால் விவசாயிகளுக்கு எதிராக, தவறான விளக்கம் மற்றும் வியாக்கியானம் செய்யப்படலாம். பல பிரிவுகள் ஒன்றோடொன்று முரண்பட்டுள்ளது. பிரிவுகள் 1, 12, 13, 21, 22, 23, 24 மற்றும் 43 போன்றவைகள் எடுத்துக்காட்டுகளாகும். இந்தப் பிரிவுகளில் பொருத்தமான திருத்தங்கள் வேண்டும்.

இந்தியாவில் கோடிக்கணக்கானோர் வெறும் வயிற்றுடன் படுக்கச் செல்லுகின்றனர். விவசாயத் துறைக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசு மறுக்கிறது. உணவுப் பயிர்களுக்கான நிலப் பரப்பளவு குறைந்து கொண்டே வருகிறது. இத்தகைய சூழலில், உணவுச் சங்கிலியின் முக்கிய கண்ணியாகக் கருதப்படும் விதைகளை உற்பத்தி செய்து, பரிவர்த்தனை செய்து, விற்பனை செய்யும் விவசாயிகளின் உரிமைகளை பறிக்கும் வண்ணம் பல பிரிவுகளைக் கொண்ட விதை மசோதாவை அப்படியே நிறைவேற்ற அனுமதிக்கக் கூடாது. விவசாயிகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசு இதை அணுக நிர்பந்திக்க வேண்டும்.



%d bloggers like this: