மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


கம்யூனிஸ்ட்டுகளும் கருத்துப் போராட்டமும்!


முந்தைய கட்டுரைகளில் கருத்துப் போராட்டத்திற்கு அளித்த முக்கியத்துவம் காரணமாக ஒரு தவறான எண்ணம் வாசகர்கள் மத்தியில் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அதாவது, கருத்துப் போராட்டம் என்பது தேவையென்ற போதிலும் அப்பணி தனியாகவே செய்ய வேண்டிய ஒரு “போராட்டக் களம்” ஆக மட்டும் பார்க்கக் கூடிய ஒரு போக்கும் ஏற்படக்கூடும். ஆயினும், இது அரை குறையான உண்மை மட்டுமே ஆகும். மார்க்சிய வாதிகளுடைய பார்வையில் கருத்துப் போராட்டம் என்பதானது ஆகப்பெரிய கருத்துத் துறைப் பணிகளின் ஒரு பகுதியாகவே மட்டும் பார்க்க வேண்டும். ஆரம்ப நிலையில் உள்ள சில தோழர்களும், அதி தீவிரவாத எண்ணப் போக்குகளில் அதிகக் கவனம் செலுத்தக் கூடிய சில நபர்கள் மத்தியிலும் கருத்துப் போராட்டத்தை ஒரு தனியான ஆகப்பெரியக் கடமையாகப் பார்க்கும் நிலைமை உள்ளது என்பதுதான் உண்மை. அதிலும் அரசியல் வார்த்தைகளையும், சொற்றொடர் களையும் வைத்து “விமர்சனப் போரில்” மட்டும் ஈடுபடக்கூடிய ஒரு போக்கு நக்சல்கள் மற்றும் உள்ள “வாய்வீச்சு வீரர்கள்” மத்தியிலும் இருக்கத்தான் செய்கிறது. கருத்துப் போராட்டத்தினுடைய உண்மையான உள்ளடக்கத்தைப் பார்க்காமல், விடாப்பிடியாக வார்த்தைச் ஜாலங்களில் மட்டும் கவனம் செலுத்தும் ஒரு போக்கு இருக்கத்தான் செய்கிறது.

குறிப்பாக, கட்சிகளுக்குள் தோன்றும் கூர்மையான கருத்து மாறுபாடுகளும், முரண்பாடுகளும் காரணமாக இத்தகைய வார்த்தைகளை ஆதாரமான கருத்துப் போராட்டங் களை திரும்பத் திரும்ப வலியுறுத்தி சுயதிருப்தி அடையும் பல “அறிவாளிகளையும்” நாம் பார்க்கிறோம். இந்தியாவில் நக்சல் இயக்கம் தோன்றிய காலத்திலும், உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பெரும் பிளவு ஏற்பட்ட காலத்திலும் இந்த வார்த்தைச் ஜாலங்களுடன் கூடிய வாதங்களுக்கு பெரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. திண்ணை வேதாந்தம் என்று கூறுவதைப் போல இத்தகைய சர்ச்சைகளில் ஈடுபடுவது மட்டும் கட்சிப் பணியின் முக்கியப் பகுதியாகப் பார்க்கும் ஒரு போக்கும் வலுவாக இருந்தது. இத்தகைய போக்குகள் ஒரு மிகப்பெரிய உண்மையைப் புறக்கணிக்கின்றன. மார்க்சியத்தில் பயன்படுத்தப்படும் பல சொற்றொடர்களை அள்ளி வீசி, அதன் மூலம் கிடைக் கக் கூடிய வாதப் பிரதிவாதத் திருப்தி மூலம் மட்டும் தத்துவார்த்தப் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது என்பது தான் உண்மை. எதார்த்த சூழ்நிலைகள், அரசியல் பின்னணிகள், இயக்கத்தில் தோன்றும் கருத்து மாறுபாடுகள் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்ப தற்குப் பதிலாக வார்த்தைகளை கெட்டிக்காரத்தனமாகப் பயன் படுத்தி தங்களுடைய “அறிவுத் திறனைப்” பறைசாற்றும் நோக்கத்துடன் நடத்தக்கூடிய ஒரு பொழுது போக்குக் கடமை அல்ல உள்கட்சிப் போராட்டம் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். கருத்துப் போராட்டத்தின் மூலம் சிந்தனைகளைத் தூண்டிவிடுவதும், கருத்து மோதல்கள் மூலம் புதிய சிந்தனைகளை உருவாக்குவதும், அவற்றின் மூலம் தோழர்கள் மத்தியில் தெளிவான கண்ணோட்டத்தை உருவாக்குவதும்தான் கருத்துப் போராட்டத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். வருடக் கணக்கில் தத்துவ வார்த்தைகளை முன்வைத்து வாதத் திறமைகளை வெளிக்காட்டும் பல நபர்களும் இருக்கிறார்கள். ஆயினும், நடைமுறை இயக்கத்திலிருந்தும், எதார்த்த சூழ்நிலைகளில் இருந்தும் தோன்றும் தத்துவார்த்தப் பிரச்சனைகளை இத்தகைய நபர்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்கிறார்கள்.

உண்மையான மார்க்சிஸ்ட்டுகள் கருத்துப் போராட்டத்தை கம்யூனிஸ்ட் இயக்கம் நடத்த வேண்டிய கருத்துப் பணிகளில் ஒரு முக்கியப் பகுதியாகவே பார்க்க வேண்டும். எப்போதாவது வகுப்புகள் நடத்துவதும், பிரசுரங்களையும், புத்தகங்களையும் விற்பது மட்டும் கருத்துப் பணிகளின் ஆகப்பெரிய நோக்கமாக இருக்க முடியாது.

கம்யூனிஸ்ட் இயக்கம் ஆரம்ப காலத்திலிருந்தே வலியுறுத்தி வந்துள்ள ஒரு முக்கியமான கண்ணோட்டத்தை இங்கு அழுத்தமாக நினைவுபடுத்த வேண்டியுள்ளது. அதாவது, கம்யூனிஸ்ட்டுகளின் மொத்தப் பணிகளை மூன்று முக்கிய அம்சங்கள் கொண்டதாக கம்யூனிஸ்ட்டுகள் கருதுகிறார்கள். முதலாவதாக, தத்துவார்த்தப் பணிகள் மூலமும், அரசியல் பணிகள் மூலமும் கருத்துத் துறையில் தொடர்ச்சியான இடைவிடாத கடமைகளை செய்ய வேண்டியது ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டின் கடமையாகும். புரட்சிகரமான இயக்கத் தில் இன்றியமையாத ஒரு பகுதியாக வெகுஜனங்களைத் திரட்டுவது என்பதானது எல்லாக் காலத்திலும் கம்யூனிஸ்ட்டுகள் செய்ய வேண்டிய ஒரு காரியமாகும். வெகுஜனங்களை வர்க்கப் போராட்டத்தின் மூலமும், வாழ்க்கை அனுபவங்கள் மூலமும், சுற்றுச்சார்பி லுள்ள அனுபவங்களைச் சரியாகப் புரிந்து கொள்வதன் மூலமும் புரட்சிகரமான சக்தியாக வடிவமைப்பது என்பது ஆகப்பெரிய கடமை. இதைப் பூர்த்தி செய்யாமல் புரட்சிகரமான இயக்கத்தைக் கட்டவே முடியாது என்பதுதான் மிகப் பெரிய உண்மை. இந் நோக்க மின்றி செய்யக் கூடிய பணிகள் எல்லாம் வெறும் “புரட்சிகரமான வாய்வீச்சில்” மட்டுமே முடியும். புரட்சி இயக்கத்திற்கு மக்களைத் திரட்டுவதில் வர்க்கப் போராட்டத்திற்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்பதுதான் உண்மை. ஆனால், வர்க்கப் போராட்டங்களை மட்டும் நடத்திக் கொண்டே போனால் அந்தக்கட்டத்தில் எழுச்சிகளை உருவாக்க முடியும் என்ற போதிலும் நீண்ட காலப் பார்வையில் அந்த மக்களை புரட்சிகரமான ஒரு சக்தியாக வளர்த்தெடுக்க முடியாது என்பதுதான் உண்மை. இதைச்செய்வதற்கு மக்கள் மத்தியில் தொடர்ச்சியான கருத்துப் பிரச்சாரம் மூலம் லட்சியத்தெளிவும், மன உறுதிப்பாடும் எதிரிகளின் சாகசங்களை முறியடிக்கும் மனோதிடமும் வளர்த்தெடுக்க முடியாது. கருத்துப் பிரச்சாரமும், அரசியல் பிரச்சாரமும் இன்றி எந்தக் கம்யூனிஸ்ட் இயக்கத்தையும் வலுவாகக் கட்ட இயலாது என்பதுதான் இதுநாள் வரைக் கிடைத்த அனுபவங்கள் நிரூபிக்கின்றன. பல்லாயிரக்கணக்கான (அல்லது இந்தோனேசி யாவில் நடந்தது போல லட்சக் கணக்கானவர்கள்) கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட பிறகு கம்யூனிஸ்ட் இயக்கம் திரும்பத் திரும்ப உயிர்பெற்று “பீனிக்ஸ்” பறவையைப் போல், சிலிர்த் தெழுந்து நிற்கிறதை நாம் பார்க்கிறோம். கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இந்த மகத்தான தன்மையானது அதன் அடிப்படையான, கெட்டியான, தத்துவார்த்த அஸ்திவாரமே காரணமாகும். சோவியத் யூனிய னின் வீழ்ச்சிக்குப் பின் மிகவும் கடுமையானதோர் சூழலில் கூட படிப்படியாக, பெரும் சிரமங்களையும் சந்தித்து கம்யூனிஸ்ட் இயக்கம் இன்று பல நாடுகளில் வளர்ந்து வருவதும், மார்க்சியத் தத்துவம் மேலும் வலுவாக முன்னேறுவதும் மேலே குறிப்பிட்டது போல் தத்துவார்த்த உறுதிப் பாட்டின் தெளிவான தோற்றமே ஆகும்.

ஆக, தத்துவார்த்தப் பணிகளும், தொடர்ச்சியான கருத்துப் போராட்டம் ஆகியவையும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கெட்டியான அடித்தளமாகும். இப்பணியில் முழுமையாக விடாப்பிடியாக ஈடுபடாமல் கம்யூனிஸ்ட்டுகள் நீடித்து செயலாற்றவும் முடியாது, முன்னேறவும் முடியாது என்ற உண்மையை என்றும் நினைவு கொள்ள வேண்டியிருக்கிறது.

ஆயினும், கருத்துப் போராட்டமானது ஒரு “வெற்றிடத்தில்” செய்யவேண்டிய கடமையல்ல என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். கம்யூனிஸ்ட் இயக்கமும், மார்க்சியமும் தோன்றிய காலத்திலிருந்தும் இவற்றிற்கெதிராக எதிரி வர்க்கங்கள் விடாப்பிடியாக பலமுனைகளில் தாக்குதல்களை நடத்திவருவதை நாம் பார்க்கிறோம். கம்யூனிஸ்ட்டுகளை கொலை செய்வது போன்ற வற்றில் ஈடுபட்டும், அவர்களுக்கெதிராக அவதூறுப்பிரச்சாரங் களை அவிழ்த்துவிட்டும், ஈனத்தனமானப் பணிகள் மூலம் இயக்கத்தை சீர்குலைத்தும் மற்றும் பல முறைகளிலும் இத்தாக்குதல்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. அதன் ஒரு பகுதியாக கம்யூ னிஸ்ட்டுகளின் உலகக் கண்ணோட்டத்தையும், தத்துவங்களையும், அரசியல் நடைமுறைகளுக்கெதிராகவும் எதிரி வர்க்கங்கள் ஒரு நிமிட இடைவெளி இல்லாமல் கருத்துத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

மக்கள் மத்தியிலும் குழப்பங்கள்

புறச்சூழ்நிலைகளின் பாதிப்புகள் மூலமாகவும், இடைவிடாமல் நடைபெறும் பலதரப்பட்ட கருத்துப் பிரச்சாரங்களின் விளைவா கவும், எதிரி வர்க்கத்தின் சாமர்த்தியமான பிரச்சாரப் பணிகள் மூலமாகவும் நமது இயக்கத்திற்காதரவான மக்களின் மனங்களிலும், சந்தேகங்களும், குழப்பங்களும் எழத்தான் செய்கின்றன. அவர்களின் மனோதிடத்தை உருக்குலைக்கும் தத்துவப்பிரச்சாரமும், மக்கள் மத்தியில் ஊசலாட்டத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்துகின்றன. பலவிதமான தவறான மதப் பிரச்சாரம், பத்தாம்பசலி மூடநம்பிக்கைகள், எதிர்கால வாழ்க்கைப்பற்றி பலமுறையிலான பிரம்மைகள் போன்ற கருத்துக்களின் தாக்கமும் இயக்க ஆதரவாளர்கள் மத்தியில் குழப்பங்களை வளர்க்கின்றன. இன்று பெரிய அளவில் டி.வி, ரேடியோ, பத்திரிக்கைகள், செய்திஸ்தாபனங்கள் போன்ற ஊடகங் கள் என மொத்தமாகப் பார்க்கும்போது, அவை எதிரிவர்க் கங்களுக்கு உதவி செய்கின்றன.

மேலேக் குறிப்பிட்ட பிரச்சாரத் தாக்குதலில், சுழலில் சிக்கியிருக்கக்கூடிய மக்கள் மத்தியில் கருத்துப் பிரச்சாரத்தை கவனமாகச் செய்யாவிடில் அந்த மக்களைப் புரட்சிகர இயக்கத்திற்கு இட்டுவரும் பணி மிகவும் சிரமம் நிறைந்ததாகிவிடும். இந்தக் கருத்துப் பிரச்சாரத்தில் ஒரு முக்கியப் பகுதியாக எதிரி வர்க்கங்களின் ஆபத்தான, தவறான கருத்துக்களுக்கெதிரான கொள்கைப் போராட்டமும், மிகவும் முக்கியம் வாய்ந்த பகுதியாக இருக்க வேண்டும்.

ஆக, கருத்துப்பிரச்சாரமும், தவறான கருத்துக்களுக்கெதிரான தத்துவப் போராட்டமும் நமது பணிகளின் இன்றியமையாதப் பகுதிகளாக இருக்க வேண்டியுள்ளது. முதலில் குறிப்பிட்டதைப் போல, கம்யூனிஸ்ட்டுகளின் மூன்று ஆதாரமான கடமைகளில் கருத்துப் பணிகள் இவ்வாறு மிகப்பெரிய முக்கியத்துவத்தை விளக்கியிருக்கிறோம். ஆனால், இத்துடன் மக்களைத் திரட்டும் பணி, புரட்சிகரமான கட்சியையும், ஸ்தாபனங்களையும் வலுவாகக் கட்டும் பணி ஆகியவையும் இணைந்தே நடைபெற வேண்டியுள்ளது. எதாவது ஒரு பணி மட்டும் செய்து புரட்சிகரமான இயக்கத்தை வலுப்படுத்த முடியாது என்பதுதான் உண்மை. தொழிற்சங்கப் பணிகள் அல்லது மற்ற வெகுஜன அரங்கப்பணிகள் மட்டும் செய்வதின் மூலம் நம்முடைய புரட்சிகரமான கடமைகள் பூர்த்தியாகின்றன என்ற சுயதிருப்தி மனப்பான்மை கட்சிக்கு உதவி செய்யாது. மாறாக, நீண்டகாலப்பார்வையில் பார்க்கும்போது கூர்மையான பாதிப்புகளை உருவாக்கும். அதேபோல கட்சி ஸ்தாபனப்பணிகளில் மட்டும் ஈடுபடுவதன் மூலம் மட்டும் புரட்சிகரமான கடமைகளை நிறைவேற்ற முடியாது என்பதையும் ஆழமாக உணரவேண்டும். அரசியல், தத்துவார்த்தப் பணிகள் மூலம் தான் மேலே குறிப்பிட்ட காரியங்களுக்கு வலுவூட்ட முடியும். முன்னுக்கு அழைத்துச் செல்ல முடியும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

அரசியல், தத்துவார்த்தப் பணிகள் பன்முகமான தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியவை என்பதையும் உணர வேண்டும். எதிரிகளின் இடைவிடாத கருத்துத் தாக்குதல்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பது ஒரு பெரிய கடமை. அதேபோல், தவறான கருத்துப் பிரச்சாரங்களுக்கெதிராக கம்யூனிஸ்ட் கட்சியின் தெளிவான பிரச்சாரமானது புரட்சி இயக்கத்தில் ஈர்க்கப்பட்ட மக்களுக்கு தன் நம்பிக்கையும், மன உறுதிப்பாட்டையும் ஊட்ட வழிவகுக்கும் என்பது தெளிவு. தவிர, ஒவ்வொரு தோழருக்கும் கட்டுப்பாடாகவும், உறுதியாகவும் பணிகளில் ஈடுபடும் மனப் பக்குவத்தையும் அளிக்கும் என்பதும் அனுபவம். ஒரு தோழரின் உறுதிப்பாட்டிற்கு ஆதாரமா னது தத்துவ ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் உள்ள தெளிவான மனோ நிலைதான். ஒவ்வொரு நிமிடமும் இந்தத் தெளிவை அளிப்பதில் எதிரிகளின் தவறான வாதங்களை கட்சி உடைத்தெறிவது ஒரு முக்கியப் பங்கினை நிறைவேற்றும் என்பதும் தெளிவு. கருத்துத்துறையில் நமது அணிகளுக்கு உறுதிப்பாட்டினை அளிக்கத் தவறினால், நாளடைவில் கட்சியின் கட்டுப்பாடும், செயல்திறனும் பெரிதும் சீர்குலையும் என்பது மட்டுமல்ல, அதற்கும் மேலாக எதிரிவர்க்கங்களின் பிரச்சாரம் நம் மக்களையும் படிப் படியாக பாதிக்கச் செய்யும் என்பதையும் ஒவ்வொரு நிமிடமும் நினைவில் கொள்ள வேண்டும். மூன்று முக்கியக் கடமைகளை இணைத்துப் பார்த்து செயல்படும் ஒரு நிலைமை உருவாக்காவிட்டால் அது கம்யூனிஸ்ட் இயக்கத்தையே பலகீனப்படுத்தக் கூடும் என்பதையும் மனதில் வைத்து செயல்பட வேண்டியுள்ளது. தற்சமயம் உள்ள உலக மற்றும் நம்நாட்டில் நிலவி வரும் சூழ்நிலைகளில் கருத்துப் பிரச்சாரத்திற்கும், தவறான கருத்துக்களுக்கெதிரான போராட்டத்திற்கும் மிகப்பெரிய முக்கியத்துவம் இருக்கிறது என்பதையும் ஒவ்வொரு நிமிடமும் நினைவில் கொள்ள வேண்டும்.

தொடரும்…



%d bloggers like this: