மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


சிறப்புப் பொருளாதார மண்டலம் : நந்திகிராம் பிரச்சனை


சிறப்புப் பொருளாதார மண்டலம் குறித்து அரசின் கொள்கை பற்றி இடதுசாரிக் கட்சிகளின் நிலை என்ன என்பதை விரிவாகவே நாம் பலமுறை எடுத்து விளக்கியிருக்கிறோம். கருத்து வேறுபாடு பிரதானமாக ஒரு குறிப்பிட்ட நடப்பு அம்சத்தில் இருக்கிறது. சிறப்பு மண்டலங்களுக்காக கையகப்படுத்தும் நிலப்பயன்பாடு, வரிச் சலுகைகள் மற்றும் வாழ்க்கை மறுசீரமைப்பு தொடர்பான அம்சம்தான் அது. அரசு அறிவித்தவைகள், சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கான விதிகளை உருவாக்கி அதற்கான ஒப்புதலை வழங்கும்போது உள்ளார்ந்த மாற்றங்களைப் பெற்றது. அப்படியே 237 சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இது மிகப்பெரிய எண்ணிக்கை. சீனாவோடு இதை நாம் ஒப்பிட்டுப்பார்க்க வேண்டியிருக்கிறது. முதலீட்டையும், வேலைவாய்ப்பு உருவாக்குதலையும் உறுதி செய்யும் வகையில் சீனா அனுமதித்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் எண்ணிக்கை ஆறுதான். அவைகள் ஏற்றுமதிக்கான பொருள் உற்பத்தி செய்யும் மண்டலங்கள். துறைமுகம் மற்றும் போக்குவரத்துத் துணைக் கட்டமைப்புகளோடு வலுவாக இணைக்கப்பட்டவை.

இந்தியாவில் ஏற்கனவே ஒப்புதல் வழங்கிய 237 மண்டலங்களோடு ஒப்புதல் வழங்கும் குழுமம் (Board of Approvals) மண்டலங் கள் பற்றிய விதிகள் வெளியிடப்பட்டு ஓர் ஆண்டுக்குள்ளாகவே 166 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான கொள்கை ரீதியிலான ஒப்புதலை வழங்கியது. அவைகளின் எண்ணிக்கை, தன்மை ஆகிய வற்றைக் கூர்ந்து பரிசீலித்தால் இரண்டு விஷயங்கள் தெளிவாகின்றன. ஒன்று, பிரதேச வாரியாக ஒரு சீரற்றத்தன்மை புலப்படுகிறது. ஒப்புதல் கொடுக்கப்பட்ட 237 மண்டலங்களில், 166 மண்டலங்கள் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களில் உள்ளன. இது மொத்தத்தில் 60 சதம் ஆகும். இரண்டு, ஒப்புதல் பெற்றவைகளில் 148 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தகவல் தொழில் நுட்பம் தொடர்பான துறைகளுக்கு தொடர்பானதாகும். மேலும் கிடைக்கப்பெற்றச் சிலப் பூர்வாங்க அறிக்கைகளை ஆய்வு செய்தால், ஒப்புதல் கொடுத்து அனுமதி வழங்கப்பட்ட பல மண்டலங்களில் நிலத்தை ஊக வணிக விற்பனைக்கு (Real) உட்படுத்தும் வாய்ப்பு இருப்பது தெரிகிறது. பொருள் உற்பத்தி மற்றும் அது தொடர்பான பல்வேறு தேவையான நடைமுறைக்கு – அது தான் வேலை வாய்ப்பினை உருவாக்கும் – அந்த நிலம் பயன்படுத்தப்படுவதற்குப் பதிலாக மேற்சொன்ன முறையில் பயன்படுத்தப்படும் நிலை உருவாகும்.

அரசின் நிலைப்பாட்டிற்கும் இடதுசாரிக் கட்சிகளின் நிலைப்பாட்டிற்கும் உள்ள முக்கியக் கருத்து வேறுபாடு முதலீட்டின் தன்மை சம்பந்தப்பட்டதாக உள்ளது. முதலீடுகள் உற்பத்தியினைப் பெருக்கி வேலை வாய்ப்பினை உருவாக்காவிட்டால், எந்த நோக்கத் திற்காக சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்படுகிறதோ அது முற்றிலும் தோல்வியடைந்துவிடும். மாறாக, இன்றைய நிலையில் அத்தகைய முதலீடுகள் எந்த வகையான வேலை வாய்ப்பினையும் உருவாக்காமல் பொருளாதாரத்தை நிலை குலையச் செய்யும் ஆபத்து உள்ளது. ‘வேலையற்ற வளர்ச்சி’ என்பதற்கு இதைக்காட்டிலும் சிறந்த உதாரணம் வேறு ஏதும் உண்டா?

மேற்கு வங்கம் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள நந்திகிராம் அனுமதிக்கப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் ஒன்றாகும். அது மிகப்பெரிய வேதியியல் பொருட்கள் உற்பத்தி மையமாக இருக்கும். நீண்ட ஆய்வுக்குப் பிறகு வேறு நான்கு மையங்களோடு சேர்த்து மத்திய அரசு மேற்கு வங்கத்தின் ஹால்டியா பகுதியில் இந்த மையத்திற்கான இடத்தைத் தேர்ந்தெடுத்தது. இயற்கையாகவே அரசு இந்த முடிவிற்குத்தான் வர முடியும். ஏனெனில் ஹால்டியாவில்தான் கூட்டுத் துறையில் செயல்படும் இந்திய எண்ணெய்க் கழகத்தின் பெட்ரோ – வேதியியல் நிறுவனமும், மிட்சுபிஷி (ஜப்பான்) நிறுவனத்தின் வேதியியல் தொழிற்சாலையும் இருக்கின்றன. ஆகவே இந்த இடத்தில் ஒரு வேதியியல் மையம் உருவாவது பொருத்தமான ஒன்றுதான். ஹால்டியா பெட்ரோ – வேதியியல் நிறுவனம் அதைச் சார்ந்து செயல்படும் 700 சிறு தொழில் அமைப்புகளை உருவாக்கியிருக்கின்றது. அது 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பினை அளித்திருக்கிறது. மேற்கு வங்க அரசு இந்திய எண்ணெய்க் கழகத்துடன் அது சம்பந்தமான உடன்பாட்டு குறிப்பு ஒன்றில் கையெழுத்திட்டிருக்கிறது. அதன்படி இந்திய எண்ணெய்க் கழகம் அந்தத் திட்டத்திற்கு ஆதார முதலீட்டாளராக இருக்கும் சலீம் குழுமம் என்ற நிறுவனம் துணைக்கட்டமைப்புக்களை உருவாக்கப் பொறுப்பேற்கும். மேலும், அந்த நிறுவனம் கொல்கத்தா நகரத்தைத் தொடாமல் செல்லும் 100 கி.மீ. ஆற்று வழி நெடும்பாதை ஒன்றினை அமைத்து கிழக்குப் பகுதியில் ராஜர்காட் மற்றும் சால்ட் லேக் பகுதியில் இரண்டுத் துணை நகரங்களை உருவாக்கும் பொறுப்பினையும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. அந்த நெடும்பாதை, வடக்கே உள்ள டார்ஜிலிங் மலைப்பகுதியினையும் தெற்கே உள்ள சாகர் தீவுகளையும் இணைக்கும் சாலை அமைப்புக்கு மிக முக்கியமான இணைப்பாக இருக்கும். அது ஹூக்ளி ஆற்றின் மீது உள்ள பாலத்தையும் இணைத்து தெற்கு 24 பர்கானா பகுதியினையும், ஹால்டியா நகரப் பகுதியின் கிழக்கு மிட்னாபூரையும் இணைக்கும்.

இதைத் தவிர, நந்திகிராம் சிறப்புப் பொருளாதார மண்டலம் தொடர்பாக எதுவும் நடந்துவிடவில்லை. மேற்கு வங்கத்தில் மற்ற பகுதிகளில் நடப்பதுபோல், நிலத்தை வாங்கி விற்கும் ஊக வணிக வேட்டைக்காக சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மாற்றப்படவில்லை. மேற்கு வங்க அரசின் பரிந்துரைகளின் படி 50 சதம் நிலம் குடியிருப்பு போன்ற சமூகக் கட்டமைப்புத் தேவைகளுக்கும், 25 சதம் சாலைப் போக்குவரத்து போன்ற தேவைகளுக்கும் ஒதுக்கப்பட வேண்டும். பொருள் உற்பத்தியோடு வேலை வாய்ப்பினை உருவாக்குவது பிரதான நோக்கமாக இருக்க வேண்டும். மேற்கு வங்க அரசின் இந்த நிலை அகில இந்திய அளவில் இடதுசாரி அமைப்புகள் எடுத்திருக்கும் நிலையினை ஒத்ததாகும். நந்தி கிராமில் அமைய விருக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலம் கறாராக இந்த அடிப்படையில்தான் செயல்படும்.

நந்திகிராமில் நடந்த பல்வேறு சம்பவங்கள் குறித்து செய்திகள் வருகின்றன. மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் கமிட்டியும் உண்மை நிலையினை விளக்கி அறிக்கை வெளியிட்டது. குழப்பம் எங்கிருந்து வந்தது? ஹால்டியா வளர்ச்சி ஆணையம் தன் அதிகார வரம்பைத் தாண்டி வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையால் எழுந்தது. மாநில முதல்வர் அந்த சுற்றறிக்கையினை யாரும் கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று தெளிவுபடச் சொல்லிவிட்டார். சிறப்புப் பொருளாதார மண்டலம் சம்பந்தமாக, பஞ்சாயத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுடனும், அந்தப் பகுதி மக்களுடனும் விரிவாகப் பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து வகையான கலந்தாலோசனையும் செய்வதற்கு முன் இந்தப் பிரச்சனையில் எந்த முடிவும் இருக்காது என முதல்வர் அறிவித்துள்ளார். இதுவரை எந்த நில அளவீடும் மக்களை கலந்தாலோசிப்பதும் நடைபெறாத சூழலில் நிலம் கையகப்படுத்தும் பிரச்சனையே எழவில்லை. கட்சியின் ஆங்கில வார இதழான “பீப்பிள்ஸ் டெமாக்ரசி” யிலும் அந்த அறிக்கை பற்றிய விமர்சனம் வெளியிடப்பட்டது. நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் படி, ஹால்டியா வளர்ச்சி ஆணையத்திற்கு கையகப்படுத்துவது தொடர்பான ஆணை வெளியிடுவதற்கு எந்த அதிகாரமும் இல்லை.

இதுதான் நந்திகிராம் பற்றிய உண்மை நிலை. இதன் அடிப்படையில் அங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும். தேவையற்ற ஒரு “போராட்டத்தின்” விளைவாக சாலைகள் சிதைக்கப்பட்டன. பாலங்கள் இடிக்கப்பட்டன. மதகுகள் உடைக்கப்பட்டன. போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இவைகள் யாவும் சீரமைக்கப்பட வேண்டும். ஆனால், தடைகள் உருவாக்கப்படுகின்றன. விளைவு? சம்பவங்கள் நடந்த நான்கு கிராம மக்களும் அதிக இன்னல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அங்கே சகஜ நிலை திரும்பிய பிறகுதான் நந்தி கிராம் சிறப்புப் பொருளாதார மண்டலம் குறித்து விரிவாகப் பேச முடியும். அந்தப் பகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், வாழ்நிலையினையும் உயர்த்துவதற்கான மாற்றுத் திட்டம் முன்வைக்கப்பட்டு, விவாதித்து முடிவு எடுத்த பிறகுதான் நிலம் கையகப்படுத்தும் பணியினை மேற்கொள்ள முடியும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அணுகுமுறை இதுதான்.

நந்திகிராமில் ஒன்று சேர்ந்திருக்கும் அரசியல் சக்திகள் பற்றி, அவைகளின் தன்மைகள் பற்றி நமது விமர்சனத்தை முன்வைக்க வேண்டியுள்ளது. அந்தக் கூட்டின் வலதுகோடியில் பாரதிய ஜனதா கட்சி நிற்கிறது, இடது கோடியில் பல நக்சலைட் குழுக்கள் உள்ளன. இது ஒரு விசித்திரமான ஆனால் கொள்கையற்றக் கூட்டு. நியாயமான எதிர்ப்புக்கும், திட்டமிட்ட வன்முறைக்கும் உள்ள வேறுபாட்டினை நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.

இந்த வேதியியல் மையம் அமைக்கப்படுவதால் எழும் சாதக பாதகங்கள் முழுமையாக விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும். வேலை வாய்ப்பினை உருவாக்குவதும், ஏழை மற்றும் புறக்கணிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும் தான் இம் மாதிரியான திட்டங்கள் கொண்டுவரப்படுவதற்கான அடிப்படை நோக்கங்களாக உள்ளன என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. சென்ற தேர்தலின் போதே அப்படி ஒரு தேவை எழும் என்பதை இடது முன்னணியின் தேர்தல் அறிக்கை இவ்வாறு குறிப்பிடுகிறது – “வேலை வாய்ப்பு சார்ந்த, ஊக்கம் கொடுக்கும் பாரம்பரியமான தொழில்களை நவீன மயமாக்கும் கடமையினை நிறைவேற்ற தொழிற் பூங்காக்கள் அமைக்கப்படும். அவைகள் போட்டியினை சந்திக்கும் உறுதியினைப் பெறும். வார்ப்பு, ரப்பர், சணல், ஆயத்த ஆடை, பஞ்சாலை, இரும்பு எஃகு, வேதியியல் பொருட்கள், பாலிமர், உணவுத் தயாரிப்பு மற்றும் கனரகமற்ற இயந்திரங்கள் உற்பத்தி போன்ற துறைகளில் அப்பூங்காக்கள் நிறுவப்படும் – குறைந்தது நான்கு மிகப் பெரிய தொழில் மண்டலங்களும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் அமைக்கப்படும்.”

இந்தத் தேர்தல் அறிக்கையினை மக்கள் முன்வைத்துத்தான் இடது முன்னணி 2006 சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்தது. இவ்வகையான எதிர்காலத் திட்டங்களின் அடிப்படையில்தான் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியினை இடது முன்னணி பெற்றது. நாட்டில் பல்வேறு மனிதர்கள் மாநில அரசின் கொள்கைகள் குறித்து தங்கள் நிலையினை வெளியிடுகிறார்கள். ஆனால் மக்களுக்கு இடது முன்னணி கொடுத்த வாக்குறுதிகளைப் பற்றியும் மக்கள் தீர்ப்பின் உள்ளார்ந்த தன்மை பற்றியும் அவர்களுக்கு ஏதும் தெரியவில்லை. இந்தத் திட்டங்களின் அடிப்படையான பல அம்சங்கள் குறித்து எழுப்பப்படும் கவலையும், அச்ச உணர்வும் கவனத்துடன் பரிசீலிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும் என மேற்கு வங்க அரசு அறிவித்திருக்கிறது.

(நிலோத்பால் பாசு, “பீப்பிள்ஸ் டெமாக்கரசி” ஜனவரி 21/28 தேதி இதழ்களில் எழுதிய கட்டுரையைத் தழுவியது)



%d bloggers like this: