லத்தீன் அமெரிக்காவின் கோபம் – 3


‘கடவுள் ஒரு ஸ்பானியர்’

ஆங்கில அமெரிக்கா என்றறியப்பட்ட வடபகுதியில், பூர்வகுடியினரின் நாகரீகத்தை நசுக்கி, கறுப்பின மக்களின் கல்லறைகளின் மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் எழுந்து கொண்டிருந்த வேளையில், லத்தீன் அமெரிக்கா என்றறியப்பட்ட தென்பகுதியில் ஸ்பானிய, போர்த்துக்கீசிய காலனியாதிக்கங்கள் ஐரோப்பிய முதலாளித்துவத்தை வளர்க்கத் தேவையான ரத்தத்தை உறிஞ்சியெடுத்துக் கொண்டிருந்தன. ஆங்கிலேயக் காலனியாதிக்கம் வளர்வதற்கு முன்பே, சூரியன் அஸ்தமிக்காத பேரரசாக ஸ்பெயின்தான் இருந்தது.

ஹாப்ஸ்பர்க் எனும் ஸ்பானிய அரச குடும்பத்தின் உதவியுடன் கொலம்பஸ் ‘புதிய உலகம்’ என்றழைக்கப்பட்ட அமெரிக்காவைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து அக்கண்டத்தை நோக்கி ‘கான்கி விஸிடோடர்ஸ்’ என்றழைக்கப்பட்ட ஸ்பானிய சாகசக்காரகள் விரைந்தனர். லத்தீன் அமெரிக்காவின் சுரங்கங்களில் பொதிந்து கிடந்த தங்கத்தையும், வெள்ளியையும் பூர்வ குடியினரின் உழைப்பையும் சுரண்டி திரட்டியதை 16, 17 ஆம் நூற்றாண்டில் மிகப்பெரும் சக்தியாக ஸ்பெயின் உருவெடுப்பதற்கு உரமாக இட்டனர். இக்கப்பற்படை சாகசக்காரர்களில் ஒருவரான பிரான்சிஸ்கோ பிஸாரோ பெருநாட்டில் செழுத்திருந்த இன்கா இன மக்களை அடிமைப்படுத்தினார். ஹெர்னன் கோர்டிஸ் என்பவர் வடஅமெரிக்கா வரை சென்று பழம் பெரும் அஸ்டெக் நாகரீகத்தை அழித்து மெக்ஸிகோவைக் கைப்பற்றினார்.

பூர்வகுடியினரின் வாழ்விடங்களைப் பறித்து அவற்றின் இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதற்குமான அக்கிரமங்களுக்கு ‘கடவுளின் ஒப்புதலையும், ஆதரவையும்” வழங்கியது அன்று சர்வ வல்லமை பொருந்திய சக்தியாகத் திகழ்ந்த கத்தோலிக்கத் தலைமைப் பீடமான வாடிகனின் உயர்ந்த மதகுருவான போப்பாண்டவர். அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அப்பால் ஒரு புதிய உலகினைக் கண்டுபிடித்து விட்டோம் என்ற களிப்பில் கொலம்பஸ் கி.பி. 1493 இல் திரும்பி வந்தபோது, போர்ச்சுக்கல் நாட்டின் இன்றைய தலைநகரான லிஸ்பன் நகரில் தான் கரை யிறங்கினார். இச்செய்தியைக் கேள்விப்பட்ட போர்ச்சுக்கல் அரசன் இரண்டாம் ஜான் அந்தப் புதிய உலகம் தமது அரசாட்சிக்குச் சொந்தம் என்று உரிமை கொண்டாடினார். நான்காம் சிக்ஸ்டஸ் எனும் போப்பாண்டவர் கி.பி. 1481 ஆம் ஆண்டில் பிறப்பித்த ஆணையின் படி, (ஆங்கிலத்தில் இந்த ஆணைக்குப் பெயர் ‘பேப்பல் புல்’) காஸ்டில் என்று அப்போது அறியப்பட்டிருந்த ஸ்பெயின் நாட்டுடன் செய்யப்பட்டிருந்த ஆங்கோகோவாஸ் ஒப்பந்தத்தை அவர் இதற்கு ஆதாரமாகக் காட்டினார். ஸ்பெயின் அரசர் ஃபெர்டினாண்டும், அரசி இஸபெல்லாலவும் அப்போது போப் பாண்டவராக இருந்த ஆறாம் அலெக்ஸாண்டரிடம் ‘புதிய உலகத்தின்’ மீது தம்நாட்டிற்கு இருந்த “உரிமையை” நிலைநாட்டும் வகையில் முறையீடு செய்தனர். போப் அலெக்ஸாண்டர் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர். அவரும் போர்ச்சுக்கீசிய நாட்டிற்கு ஆதரவாக வெளியிடப்பட்டிருந்த பழைய ‘போப் ஆணைகள்’ எல்லாவற் றையும் ரத்து செய்து, அமெரிக்கப் பிரதேசத்தைச் சூறையாடும் உரிமையை ஸ்பெயினுக்கு வழங்கி மூன்று ஆணைகளைப் பிறப்பித்தார். இவையெல்லாம் இயேசு கிறிஸ்துவின் பெயராலேயே நடந்தது.

போப் அலெக்ஸாண்டரின் ஆணை

“கிறிஸ்டோபர் கொலம்பஸ் தெய்வீக உதவியுடன் மிகவும் சிரமப்பட்டு ஒரு பெருங்கடலைக் கடந்து சில தீவுகளையும், சில பிரதான நிலப்பகுதிகளையும்’ கண்டுபிடித்துள்ளார். இப்பகுதியில் வாழும் மக்கள் அமைதியாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் உடையேதும் அணிவதில்லையென்றும், மாமிசம் சாப்பிடுவதில்லை யென்றும் கூறப்படுகிறது. அம்மக்கள் சொர்க்கத்தில் இருக்கும் கர்த்தாவான ஒரு கடவுளின் மீது நம்பிக்கை கொண்டவர்கள். கத்தோலிக்க மதத்தைத் தழுவி நல்லொழுக்க நெறிகளில் பயிற்சி பெறத் தயாராக உள்ளனர். இத்தீவுகளில் தங்கம், நறுமணப் பொருட்கள் மற்றும் பல அரிய பொக்கிஷங்கள் நிறைந்துள்ளன. ஸ்பெயின் நாட்டு அரசக்குடியினரான நீங்கள் உங்கள் மூதாதையரைப் போலவே, இப்பிரதேசங்களையும் அங்கு வாழும் மக்களையும் உங்கள் அதிகாரத்திற்குக் கீழ் கொண்டு வந்து அவர்களுக்கு கத்தோலிக்க நம்பிக்கை ஏற்படுத்த வேண்டுமென விளம்புகிறீர்கள்” என்று கூறியது. ஆர்ட்டிக் கடலிலிருந்து அண்டார்டிக் வரை ஒரு எல்லைக்கோடு வரைந்து அதற்கு உட்பட அமெரிக்கப் பிரதேசங்கள் அனைத்தும் ஸ்பெயின் நாட்டிற்குச் சொந்தம் என்றும் போப் ஆணை வரையறுத்தது. பதினெட்டாம் நூற்றாண்டில் அமெரிக்கா அரசியல் ரீதியாக தன் சுரண்டலுக்கான எல்லைக் கோட்டினை வரையறுத்து வெளியிட்ட மன்றோக் கொள்கைகளைப் போலவே, ஸ்பெயின் நாட்டின் காலனியாதிக்க எல்லையை வரையறுத்தன போப் ஆணைகள்.

இந்த வரையறைகளை மீற நினைப்பவர்களுக்கு போப்பாண்டவர் பின்வருமாறு எச்சரிக்கை விடுத்தார்.

“எம்முடைய இந்த சிபாரிசினை, வலியுறுத்தலை, வேண்டுகோளை, பரிசினை, கொடையினை, உத்தரவை, சட்ட வரைவினை, ஆணையை, தடையை, சித்தத்தினை மீறவோ அல்லது மறுக்கவோ நினைப்பவர்களுக்கு நாம் தெரியப்படுத்துவது என்னவென்றால், அவர்கள் எல்லாம் வல்ல இறைவனின் கோபத்திற்கும், தேவ தூதர்களான பீட்டர், பால் ஆகியோரின் கோபத்திற்கும் ஆளாக நேரிடும்”.

கடவுள் ஸ்பானிய நாட்டைச் சேர்ந்தவரான கதை இதுதான்.

ஸ்பானிய அரச குடும்பத்தின் ஆதரவுடன் ஆஸ்டெக், இன்கா, மாயன் போன்ற பூர்வகுடி அமெரிக்கர்களிடமிருந்து திருடிய நிலப்பரப்புகளிலிருந்து ‘கடவுளின் ஆசியுடன்’ கொள்ளையடிக்கப்பட்ட வெள்ளியும், தங்கமும்தான் ஸ்பெயின் நாட்டின் மத்திய காலம் எனப்படும் 15, 16 நூற்றாண்டுகளில் உலகின் முதல் வல்லரசாக மாற்றியது. பிரிட்டன், பிரான்ஸ், ஹாலந்து போன்ற பிற ஐரோப்பிய காலனிய சக்திகளையும் தனி ராணுவ, கப்பற்படை பலத்தின் மீது வெற்றி கொள்ள முடிந்தது. ஆனால், ஆதிக்கத்தை நிலைபெறச் செய்வதற்காக ஸ்பெயின் நடத்திய பல போர்களே 17 ஆம் நூற்றாண்டில் அதன் வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்தது.

ஐரோப்பிய எல்லைக்குள் துருக்கியை ஆண்ட ஆட்டோமான் பேரரசுடனும், பிரெஞ்ச நாட்டுடனும் ஸ்பெயின் தொடர்ந்து மோதி வந்தது. பிற பகுதிகளில் முதலில் போர்த்துக்சீயர்களுடனும், பின்னர் ஆங்கிலேய மற்றும் டச்சுப் (ஹாலந்து) படைகளுடனும் பகை கொண்டிருந்தது. ஆங்கிலேயர்களும், பிரெஞ்சு நாட்டவரும், டச்சுக்காரர்களும் தொடர்ந்து நடத்திய கடற்கொள்ளைகளும்தான் உலகம் முழுவதிலும் பிடித்து வைத்திருந்த பிரதேசங்களைக் காக்கும் ராணுவத்திற்கான செலவுகளும், அதனால் ஏற்பட்ட பொருளதார தேக்கமும் ஸ்பெயின் நாட்டினை வலுவிழக்கச் செய்தன. பிரெஞ்சுப் படைகளுடன் 1805 இல் நடந்த டிராஃபல்கர் போரில் ஸ்பெயின் நாட்டின் பிரதான கப்பற்படை படுதோல்வியுற்றது. நெப்போலி யனின் இராணுவம் 1808 இல் ஸ்பெயின் நாட்டிற்குள் நுழைந்தது. மன்னராட்சின் கீழ் வெறுப்புற்றிருந்த ஸ்பானிய மக்கள் வெகுண்டெழுந்த போது, நெப்போலியன் அவர்களுக்கு ஆதர வளித்தார். போர்ச்சுக்கலையும், ஸ்பெயின் நாட்டினையும் உள்ளடக் கிய ஐபீரிய தீபகற்பத்தில் உள்நாட்டுப்போர் மூண்டது. நெப்போலியன் தன் சகோதரர் ஜோசப் என்பவரை ஸ்பெயின் மன்னராக அறிவித்தபோது உள்நாட்டுக் கலகம் தீவிரமானது. பல ஆண்டுகள் நடந்த இந்தப் போரில் ஸ்பெயின் காலனியாதிக்கம் இற்றுப்போகத் துவங்கிய நேரத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் அந்நாட்டின் ஆதிக்கத்தை எதிர்த்து விடுதலைப் போராட்டங்கள் வெடித்தன. இந்தப் போராட்டங்களிலிருந்து எழுந்த விடுதலை வீரர்தான் இன்றைய லத்தீன் அமெரிக்க எழுச்சியின் போதும் நினைவு கூறப்படும் சைமன் பொலிவார். அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஃபிடல் காஸ்ட்ரோவிற்கு அடுத்த பெரும் பிரச்சனையாக உரவாகி வரும் ஹியூகோ சாவேஸின் வெனிசுலா அரசு சமீபத்தில், “சைமன் பொலிவார்: தேசங்களின் விடுதலையாளர்” என்று ஒரு பிரசுரத்தை வெளியிட்டுள்ளது. இதில் கியூபாவின் தேசிய இயக்கத் தலைவர் ஹோஸே மார்ட்டி பொலிவாரைப் பற்றி எழுதியதை மேற்கோள் காட்டுகிறார்.

“எப்போதுமே அமைதியாக அடங்கிப்போய் வாழ நினைக்காத ஒருவரைக்குறித்து சலனமற்றுப் பேச இயலாது. ஒரு மலையை மேடையாகக் கொண்டோ அல்லது இடி மின்னலுக்கிடையிலோ அல்லது விடுதலையடைந்த மக்களை ஒரு புறம் வைத்துக் கொண்டு கொடுங்கோல், ஆட்சியின் தலையைக் கொன்று காலில் மிதித்துக் கொண்டேதான் சைமன் பொலிவாரைப் பற்றிப் பேச முடியும்” என்று மார்ட்டி குறிப்பிடுகிறார்.

‘கடவுளையே ஒரு குடிமகனாகக்’ கொண்ட காலனியாதிக்க சக்தியான ஸ்பெயினுக்கு எதிராக லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்ட எழுச்சிகள் பலவற்றுக்கும் தலைமை தாங்கிய நாடோடிப் புரட்சியாளர் சைமன் பொலிவார்.

வெனிசுலா நாட்டின் இன்றையத் தலைநகரான காராகாஸில் 1783 ஆம் ஆண்டில் தங்கச் சுரங்கம் வைத்திருந்த ஒரு குடும்பத்தில் பிறந்த பொலிவார், தனது 9 வது வயதிலேயே பெற்றோரை இழந்தார். தன் 15 வது வயதில் மேற்கல்விக்காக ஸ்பெயினுக்குச் சென்றார். அவர்களுக்கு நண்பராகவும், பிதாமகனாகவும், இறந்து உலக ஞானம் அளித்தவர் சைமன் ரோட்ரிக்ஸ் என்பவர்.

பொலிவார் 1804 இல் ஸ்பெயினில் இருந்த நேரத்தில்தான் நெப்போலியன் பிரான்ஸ், இத்தாலி நாடுகளின் பேரரசராக முடி சூட்டிக் கொண்டார். அவரது சகோதரர் ஜோசப் ஸ்பெயின் மன்னராக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து ஐபீரியத் தீபகற்பத்தில் போர் மூண்ட அதே வேளையில் லத்தீன் அமெரிக்கா முழுவதிலும் காலனியாதிக்கத்தினை எதிர்த்து விடுதலை அரசுகள் உருவாயின. மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து குடியரசுக் கனவுகளை விதைத்த நெப்போலியன்ஒரு கொடுங்கோல் பேரரசராக மாறியதைக் கண்டு வெறுப்புற்ற பொலிவார், வெனிசுலா நாட்டிற்குத் திரும்ப முடிவு செய்தார். இதற்கு முன் ரோம் நாட்டிலுள்ள அவென்டின் மலையுச்சியின் மீது நின்று அமெரிக்கக் கண்டம் விடுதலை பெறும் வரையில் ஓயப்போவதில்லை என்று சபதமெடுத்துக் கொண்டார்.

வெனிசுலா விடுதலைப் போரை முன்னின்று நடத்திய தற்காலிக “ராணுவ அரசு” 1808 இல் ஸ்பெயினிலிருந்து நாடு விடுதலை பெற்றுவிட்டதாகப் பிரகடனம் செய்தது. ஆயினும், காலனியாதிக்கம் தொடர்ந்தது. அரசின் தாக்குதலிலிருந்து தப்பித்து நியூகிரெனடா (இன்றைய கொலம்பியா) நாட்டிலுள்ள கார்ட்டகிளா நகருக்குச் சென்றார். அங்கிருந்து அவர் வெளியிட்ட ‘கார்ட்டகிளா அறிக்கையில்’ வெனிசுலாவின் விடுதலைக்கு நியூ கிரெனடா உதவவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். 1813 இல் அந் நாட்டின் உதவியுடன் வெனிசுலாவிற்குள் ஊடுருவினார். ‘மரணம் வரையில் போர்’ என்று வீர முழக்கமிட்டு ஆகஸ்டு 6 இல் காரகாஸ் நகரைக் கைப்பற்றி வெனிசுலா ஒரு குடியரசு என்று அறிவித்தார். ‘விடுதலையாளர்’ என்று மக்கள் அவரை வரவேற்றனர். இருந் தாலும், லத்தீன் அமெரிக்காவின் விடுதலைப் போர் முடியவில்லை. 1815 இல் மீண்டும் அவர் வெனிசுலாவை விட்டு வெளியேறி ஜமைக்கா தீவில் தஞ்சம் புகுந்தார். பிறகு, ஹெய்ட்டி நாட்டிற்குச் சென்று அந்நாட்டு அரசாங்கத்தின் உதவியுடன் மீண்டும் தென் அமெரிக்க விடுதலைப் போரைத் தொடர்ந்தார்.

1819 இல் போயாக என்ற இடத்தில் நடந்த போரில் பொலிவார் தலைமையிலான புரட்சிப் படை பெரும் வெற்றி பெற்றது. அங்கோஸ்நுரா காங்கிரஸ் என்ற அமைப்பினை உருவாக்கிய பொலிவார், வெனிசுலா, கொலம்பியா, பனாமா, ஈக்வெடார் ஆகிய நாடுகளின் கூட்டமைப்பை உருவாக்கி அதற்கு கிரான்கொலம்பியா என்று பெயரிட்டார். கூட்டமைப்பின் தலைவராகப் பொறுப் பேற்றுக் கொண்டார்.

1822 இல் பிச்சின்கா என்ற இடத்தில் நடந்த போரில் லத்தீன் அமெரிக்காவின் வடபகுதி முழுவதும் ஸ்பானியக் காலனியா திக்கத்திலிருந்து விடுதலை பெற்றது.

இதனால் ஓய்ந்துவிடவில்லை பொலிவார். பெரு நாட்டினை விடுவிக்க வேண்டி தன் புரட்சிப்படையுடன் ஆண்டிஸ் மலைத் தொடரைக் கடந்தார். 1824 இல் ஸ்பானியப் படைகளை முறியடித்தார். அமெரிக்காவில் ஸ்பானிய ஆதிக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தார். ஆயினும், விடுதலை ராணுவங்களின் தலைவர் களுக்குள் ஏற்பட்ட மோதல்களினால் தென் அமெரிக்காவில் ஒற்றுமை குலைந்தது. கோஷ்டிச் சண்டைகளைக் கண்டு மனம் வெதும்பிய பொலிவார் நோய்வாய்பட்டார். ஸ்பானியக் காலனியா திக்கம் அடக்க முடியாத அவரது உயிரை 1830 இல் காசநோய் அடக்கியது.

ஒரு நாட்டின் விடுதலைக்காகப் போரிட்டு வென்றவர்களை அவதாரப் புருஷர்களாக ஆராதிக்கும் போது, ஒரு கண்டத்தையே ஒறுமைப்படுத்தி, விடுதலைப் பெறச் செய்த சைமன் பொலிவாரை ஏன் மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் லத்தீன் அமெரிக்கா நினைவு கூர்கிறது என்பது புரிகிறது.

சாவேஸ் அரசாங்கம் வெளியிட்ட பிரசுரம் இவ்வாறு கூறுகிறது:

“அமெரிக்காவின் வரலாற்றுச் சின்னம் என்பதை விட, அவர் நமது வரலாற்றின் போக்கை மாற்றிய குடிமகன் என்பதே பொருத்தமானது. வெனிசுலாவிலும் மற்றும் பல நாடுகளிலும் உள்ள ஒவ்வொரு சதுக்கத்திலும் அவருடைய புகழ் அமரத்துவம் பெற்றுள்ளது. குதிரை மீது அமர்ந்துள்ளதைப் போன்ற சிலையானாலும், மார்பு வரை செதுக்கப்பட்ட சிலையானாலும் அவர் வடக்கு நோக்கித்தான் பார்க்கிறார். வெற்றி என்ற இலக்கை நழுவவிடாமல்! வெனிசுலா நாட்டின் பொலிவாரியக் குடியரசின் நினைவில் இன்றும் அவர் இருக்கிறார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், வெனிசுலா மக்கள் தங்களைப் பொலிவாரியக் குடியரசின் பிரதிநிதிகள் என்று கூறுவதுடன் மட்டுமல்லாமல், ஒன்றுபட்டு நின்று அவருடைய ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடர்வதன் மூலமாகத்தான் பொலிவாருக்கு மரியாதை செய்கிறார்கள்.

விடுதலைப் போராட்ட வீரரான பொலிவார் ஒரு சோவியத் புரட்சியாளர் அல்ல. அறிவியலின் அற்புத வளர்ச்சியில் தெய்வீகத்தை அடிப்படையாகக் கொண்டிருந்த மத்திய கால உலக சிந்தனையில் மனிதத்தை மையப்படுத்திய மறுமலர்ச்சி கால மதிப்பீடுகளின் பிரதிநிதி அவர். அதனால்தான் தெய்வத்தின் பிரதிநிதியாய் காணப்பட்ட மன்னராட்சியையும், போப்பாண்டவரின் ஆணைகளையும் துவம்சம் செய்து மக்கள் விடுதலைக்காகப் போராடியவர். குடியரசு ஆட்சியிலும், முறையிலும், சுதந்திரச் இலட்சியத்திலும் நம்பிக்கை கொண்டார்.

செவ்விந்தியர்களையும், கறுப்பின மக்களையும் சுரண்டி, அமெரிக்க ஏகாதிபத்தியம் வட அமெரிக்காவில் வளர்ந்து வந்த வேளையில், ஸ்பானிய காலனியாதிக்கத்திற்கு எதிராக தென் அமெரிக்காவில் விடுதலைத் தீயை மூட்டியவர். அந்தத் தீயின் வெப்பம் இன்றும் தொடர்கிறது. லத்தீன் அமெரிக்காவின் கோபமாய்! இந்தத் தீ அவ்வப்போது எழுந்து கொண்டிருக்கும்.

அதற்கு இவ்வாறு ஒரு கவிதையில் விளக்கம் அளிக்கிறார் பாப்லோ நெருடா:

ஒரு நீண்ட காலைப் பொழுதில்

ஐந்தாவது ரெஜிமெண்டின் தலைவரான

பொலிவாரைச் சந்தித்தேன்!

பிதாவே, அது நீங்களா?

நீங்கள் இல்லையா?

அல்லது நீங்கள் யார் என்று கேட்டேன்1

மலையின் மீது நிற்கும் படைகளை

உற்று நோக்கியவாறே அவர் சொன்னார்:

ஒவ்வொரு நூறு ஆண்டுகளிலும்

மக்கள் எழுச்சியுறும்போது

நான் விழித்து எழுவேன்!

தொடரும்