விவசாய நெருக்கடி


விவசாய நெருக்கடி குறித்து நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. குடியரசுத் தலைவர், பிரதமர், பாஜகவின் தலைவர்கள் மற்றும் பல கட்சியைச் சேர்ந்தவர்களும் கூட விவசாய நெருக்கடி குறித்துப் பேசியுள்ளனர்.

மத்திய அரசு கடைப்பிடித்து வரும் தாராளமய, தனியார்மய, உலகமயக் கொள்கைகள், நாடு முழுவதையும் அதிலும் குறிப்பாக விவசாயத் துறையைக் கடுமையாகப் பாதிக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த பதினைந்து ஆண்டுகளாகவே கூறி வருகிறது. நாட்டில் உள்ள மக்கள் தொகையில் 65 சதவீதத்திற்கும் மேல், விவசாயத் துறையுடன் தன்னைப் பின்னிப் பிணைத்துக் கொண்டிருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமரும் மற்றும் அமைச்சர்களும் விவசாய நெருக்கடி குறித்துக் கவலைப்பட்டாலும், விவசாயிகளின் உண்மையான பிரச்சனைகளைத் தீர்த்திட எவ்வித முயற்சியும் அவர்கள் மேற்கொள்ளவில்லை என்பதே வேதனை தரும் விஷயமாகும். பொருளாதார வளர்ச்சி வீதம் உயர்ந்திருக்கிறது என்று பீற்றிக் கொள்ளும் அதே சமயத்தில், விவசாயிகளின் நிலைமை மிக மோசமாகிக் கொண்டிருப்பதைப் பற்றி முதலைக் கண்ணீர் வடிப்பதைத் தவிர நடைமுறையில் எதுவும் செய்வதில்லை.

தாராளமயக் கொள்கைகள், விவசாயத் துறையில் அரசின் முதலீட்டைப் பெருமளவில் குறைத்துவிட்டது. விவசாயிகளுக்கு அளித்து வந்த பல்வித மானியங்களும் இல்லாமல் போய்விட்டது. அரசு மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலமாக விவசாயிகளுக்கு அளித்து வந்த கடன் நிறுத்தப்பட்டுவிட்டது. விவசாய விளை பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன. கிராமப்புற வேலை வாய்ப்பும், விவசாயம் மூலம் கிடைத்து வந்த வருமானமும் கணிசமாகச் சரிந்துள்ளன.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் செயல்பாடுகள்

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது, வளர்ந்து வரும் வேலையில்லாத் திண்டாட்டத்தையும், விவசாய நெருக்கடியையும் தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று உறுதி அளித்தது. ஆனால், கடந்த மூன்றாண்டுகளில் அந்த உறுதி மொழிகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக உண்மையில் அதற்கு நேர்மாறான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. தேசிய குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில் அளித்துள்ள உறுதி மொழிகளில் ஒன்றே ஒன்றை மட்டும் ஒரு பகுதி நிறைவேற்றியுள்ளது. அதாவது, கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் கொண்டு வந்துள்ளது. அதன் மூலமாக நாட்டில் மொத்தம் உள்ள 600 மாவட்டங்களில், சென்ற ஆண்டு 200 மாவட்டங்களுக்கு 11,300 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் அதனை அமல்படுத்தியது. இப்போது மூன்றாவது பட்ஜெட்டில் அதனை மேலும் 130 மாவட்டங்களுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீட்டுடன் நீட்டித்துள்ளது. 200 மாவட்டங்களுக்கு 11,300 கோடி ரூபாய். 330 மாவட்டங்களுக்கு 12,000 கோடி ரூபாய். என்ன கணக்கு என்று எவருக்கும் புரியவில்லை.

கிடைத்துள்ள அறிக்கைகளின்படி, கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் அமல்படுத்தப்பட்ட, முதல் பதினைந்து நாட்களிலேயே 77 லட்சம் விவசாயத் தொழிலாளர்கள் தங்களை இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொண்டுள்ளனர். இதைப் பார்க்கும்போது, கிராமப்புறங்களில் வேலையில்லாக் கொடுமை எந்த அளவிற்கு இருக்கிறது என்பது தெரிய வரும், இதனை நாடு முழுதும் அனைத்து மாவட்டங்களுக்கும் விரைவில் நீட்டிக்க வேண்டியதன் அவசியமும் புரிய வரும்.

மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சமர்ப்பித்துள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் மூன்றாவது பட்ஜெட்டும், விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்ப்பதற்கு எவ்வித முயற்சியும் மேற்கொண்டதாகக் கூறுவதற்கில்லை.

2007-2008 மத்திய பட்ஜெட், விவசாயிகளுக்கு குறிப்பாக கிராமப்புற ஏழை மக்களுக்கு அதிருப்தியையே அளித்துள்ளது. மத்திய நிதி அமைச்சர் விவசாயம் மற்றும் விவசாயிகள் பிரச்சனை குறித்து ஏராளமான நேரத்தைச் செலவிட்டிருந்த போதிலும், அவர்களின் உண்மைப் பிரச்சனை எதையும் தீர்த்திட எதுவும் கூறவில்லை. உணவு தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய்வித்துக்கள் உற்பத்தியைப் பெருக்கிட எதுவுமே செய்திடவில்லை. இவற்றின் விலைகள் கடுமையாக உயர்ந்திருப்பதை பொருளாதார ஆய்வு அறிக்கையே ஒப்புக் கொள்கிறது. அவர் விவசாயக் கொள்கை குறித்தோ அல்லது நெருக்கடியில் சிக்கியுள்ள விவசாயிகளைப் பாதுகாப்பது குறித்தோ எதுவுமே குறிப்பிடவில்லை. வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகள் அரசின் பரிசீலனையில் வெகுகாலமாகவே இருந்து வருகிறது. மேலும் இன்னும் எவ்வளவு காலத்திற்குப் பரிசீலனையில் இருக்கும் என்று தெரியவில்லை. பயிர்களுக்குக் கட்டுப்படியாகக் கூடிய விலை, இடுபொருட்களின் விலை குறித்து பட்ஜெட்டில் எதுவுமே கூறப்படவில்லை. பதிலாக, எண்ணெய் வித்துக்கள், சமையல் எண்ணெய் இறக்குமதி செய்திட சலுகைகள் அளித்திருப்பதானது, உள்நாட்டு உற்பத்தியாளர்களைக் கடுமையாகப் பாதிக்கும்.

விவசாயிகள் தற்கொலை குறித்து பட்ஜெட் உரையில் ஒரு வார்த்தை கூட இல்லை. விவசாயத் துறையில் அதிகமான அளவில் உள்ள அதிருப்திக்கு முக்கிய காரணம், சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளால் விவசாயத்தை முன்போல் தொடர முடியாத நிலை உருவாகியிருப்பதேயாகும். இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில், ஒரு நியாயமான, நேர்மையான விவசாயக் கொள்கையை அரசு அறிவிக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்த்தார்கள். பட்ஜெட் உரையானது, நாட்டின் விவசாயிகளை குறிப்பாக 22.7 கோடி விவசாயக் குடும்பங்களைக் கொண்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளைக் கண்டு கொள்ளாத அதேசமயத்தில், நிதி அமைச்சர் பன்னாட்டு மூலதனத்தின் அடிப்படையிலான விவசாயத்திற்குத் தளம் அமைத்திருக்கிறார்,

அரசின் குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் கூறப்பட்டுள்ள ஆறு அடிப்படை உறுதிமொழிகளில் நான்கு, மக்கள் நலனையும், மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவது தொடர்பானதாகும். குறைந்தபட்சப் பொது செயல் திட்டத்தில் கூறப்பட்டுள்ளவற்றில் இரு அம்சங்களை 2006-07 பொருளாதார ஆய்வு அறிக்கை உயர்த்திப் பிடித்திருக்கிறது. உயர் வளர்ச்சியை உத்தரவாதப்படுத்துவது மற்றும் உயர் பணவீக்கம் இல்லாமல் உயர் வளர்ச்சியை நிலைநிறுத்துவது என்பவைகளே மேற்படி இரு அம்சங்களுமாகும். குறைந்தபட்ச பொது செயல்திட்டம் சமூகத் துறைகளில் – குறிப்பாக வேலைவாய்ப்பில் வேகமான வளர்ச்சியை உத்தரவாதப்படுத்துவதுடன், கல்வி மற்றும் சுகாதாரச் செலவினங்களை குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்துவதற்கும் உறுதி அளித்திருக்கிறது.

இவை குறித்தெல்லாம் பொருளாதார ஆய்வு அறிக்கை என்ன சொல்கிறது? சமூகத் துறையில் செய்யப்பட்டுள்ள மொத்த செலவினம், 2001-02 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 28.26 சதவீதமாக இருந்தது, 2006-07 பட்ஜெட் மதிப்பீடுகளில் 27.19 சதவீதமாகத் தாழ்ந்திருக்கிறது. சமீப ஆண்டுகளில், உண்மையிலேயே செய்யப்பட்ட செலவினங்கள் என்பவை பட்ஜெட் மதிப்பீடுகளை விட மிகவும் குறைவாகும். இதன் விவரங்கள் வரும் சமயத்தில் இந்தச் செலவினங்கள் குறைவாகச் செய்யப்பட்டிருப்பது தெரிய வரலாம். இதில் மேலும் மோசமான விஷயம் என்னவெனில், 2004-05 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் முதலாம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, நடப்பு ஆண்டில் மேலும் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாகும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்ற சமயத்தில், கல்விக்கான ஒதுக்கீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.79 சதவீதமாக இருந்தது. இதனைக் குறைந்தபட்சம் 6 சதவீதமாவது உயர்த்தப்படும் என்று குறைந்தபட்சப் பொது செயல் திட்டத்தில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனாலும், கடந்த மூன்று பட்ஜெட்டுகளின் மூலமாக, அது மிகச் சிறிய அளவிற்கே – அதாவது 2.87 சதவீதம் மட்டுமே – உயர்ந்திருக்கிறது. இதுவும்கூட மத்திய அரசும், நாட்டில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் சேர்ந்து செய்திட்ட மொத்தச் செலவினங்களின் கூடுதலின் அடிப்படையிலாகும்.

மேலும் உணவு மானியம் 2005-06 பட்ஜெட்டில் 26,200 கோடி ரூபாயாக இருந்தது. 2006-07 பட்ஜெட்டில் 24,200 கோடி ரூபாயாகக் குறைந்தது. இப்போது இந்த 2007-08 பட்ஜெட்டில் அது 25,696 கோடி ரூபாயாக மாற்றப்பட்டிருக்கிறது.

இவ்வாறு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் பொது விநியோக முறையைப் பலப்படுத்துவதற்குப் பதிலாக, அதற்கு நேரெதிரான திசையில் சென்று கொண்டிருக்கிறது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கமானது மற்றொரு துறையிலும் தன் உறுதிமொழியைக் காற்றில் பறக்கவிட்டு விட்டு சென்று கொண்டிருக்கிறது. சில்லரை வர்த்தகத்துறையில், அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்திருக்கிறது. இதுவும் குறைந்தபட்சப் பொது செயல்திட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள உறுதிமொழிக்கு எதிரானதாகும். சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதானது, நாட்டில் இப்போது மிகவும் கொடுமையாகவுள்ள வேலையில்லாத் திண்டாட்டம், மேலும் அதிகமாகும். விவசாயிகளையும், சிறிய வர்த்தகர்களையும் கடுமையாகப் பாதிக்கும்.

தற்போது மத்திய அமைச்சர் சரத் பவார் தலைமையில் உள்ள உணவு மற்றும் பொது விநியோகத்துறை பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அவற்றின்படி மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த கோதுமையின் அளவு குறைக்கப்படுகிறது. கோதுமைக்குப் பதிலாக மட்டரகமான தான்யங்கள் (coarse grains) வழங்கப்படவிருக்கின்றன. சம்பூர்ணா கிராம ரோஜ்கர் யோஜனா திட்டத்தின் கீழ் கூலியின் ஒரு பகுதியாக உணவு தானியம் அளிக்கப்பட்டு வந்தது ரத்து செய்யப்பட்டுள்ளது. வறட்சிப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வந்த ஒதுக்கீடுகளும் குறைக்கப்பட்டுள்ளது. பொது விநியோக முறையில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கும் அதேபோல் வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கும் நிர்ணயிக்கப்பட்டிருந்த உணவு தானியங்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. தற்போது வழங்கப்பட்டு வரும் 35 கிலோ என்பது 30 கிலோவாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் உணவு அளிக்கும் உரிமை மீதே தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது.

கோதுமை இறக்குமதி

கோதுமை, தானியங்கள், பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், காய்கறிகள், மருந்துப் பொருள்கள் போன்ற அனைத்து இன்றியமையாப் பண்டங்களில் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளன. எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியதுபோல், பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அப்போதைக்கப்போது உயர்ந்தது. கோதுமை, சர்க்கரை போன்றவற்றை தாராளமாக இறக்குமதி செய்தும் விலைகள் குறைந்திடவில்லை. அரசாங்கத்தின் அடிப்படைக் கொள்கைகளில் மாற்றம் வராமல் விலைவாசிகள் குறைந்திட வாய்ப்பில்லை.

2006 பிப்ரவரியில் கோதுமை இறக்குமதி செய்திட மத்திய அரசு முதன்முதலாகத் தீர்மானித்தது. அப்போது அரசிடம் 4.8 மில்லியன் டன்கள் இருப்பு இருந்தது. இது ஏப்ரல் வரை பொது விநியோக முறை மற்றும் மற்ற நலத்திட்டங்களுக்கு விநியோகித்திட போதுமானது. ஒவ்வொரு மாதமும் மத்திய அரசு விநியோகிக்க வேண்டிய கோதுமையின் அளவு சுமார் 1.1 மில்லியன் டன்களாகும்.

மத்திய அரசின் விவசாயக் கொள்கையை சற்றே நுணுகி ஆராய்ந்தோமானால், அது தாராள இறக்குமதிக் கொள்கையைக் கடைப்பிடிக்க துடியாய்த் துடித்துக் கொண்டிருப்பதை அறிந்து கொள்ள முடியும். இது விவசாயிகளின் வாழ்க்கையை நாசப்படுத்திடும் என்பதைப் பற்றி அது கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

கோதுமை விவசாயிகளுக்கு ஒரு டன் கோதுமைக்கு 7600 ரூபாய்க்கு மேல் கொடுக்க மறுத்திடும் அரசு, அதேசமயத்தில் 10 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் செலவு செய்து அதே அளவு கோதுமையை இறக்குமதி செய்யத் தயாராயிருக்கிறது.

அரசு 5 மில்லியன் டன் கோதுமையை முதல் கட்டமாக இறக்குமதி செய்ய தீர்மானித்திருக்கிறது. அரசு மேலும் 2 மில்லியன் டன் கோதுமையை இறக்குமதி செய்ய இருப்பதாகவும் மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் கூறியிருக்கிறார்.

அரசு இறக்குமதி செய்வதோடு மட்டுமல்லாமல், தனியார் நிறுவனங்களும் கோதுமை இறக்குமதி செய்திட தாராளமாக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அரசு அறிவித்திருக்கிறது. கோது மையை இறக்குமதி செய்வது தொடர்பாக உலக வர்த்தக அமைப்பின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம், வேண்டுமென்றே மிகவும் தாமதமாக விவசாயிகளிடமிருந்து கோதுமையைக் கொள்முதல் செய்ய முன்வந்தது. அதற்குள் மிகவும் நெருக்கடிக்குள்ளாகியிருந்த விவசாயிகளிடமிருந்து தனியார் வர்த்தகர்கள் கோதுமையை வாங்கி பதுக்கி வைத்துக் கொண்டுவிட்டனர். மிகப்பெரிய அளவில் பன்னாட்டு நிறுவனங்களான கார்கில் இந்தியா, கண்டினெண்டல் மற்றும் ஐ.டி.சி. நிறுவனங்கள் வாங்கி வைத்துக் கொண்டன. அதுமட்டுமல்ல, ஆஸ்திரேலியா நிறுவனமான ஏ.டபிள்யு.பி.லிட். நிறுவனமானது உலகச் சந்தையில் கோதுமையை ஒரு டன் 131 டாலர் என்ற வீதத்தில் விற்கிறது. ஆனால் அதே நிறுவனம் அதே கோதுமை யை இந்தியாவிற்கு ஒரு டன் 178.75 டாலர் விலை நிர்ணயித்து -அதாவது 47 டாலர் கூடுதலாக – இறக்குமதி செய்கிறது. இந்நிலை யில், தனியாரும் கோதுமையை இறக்குமதி செய்ய அரசு அனுமதித் திருக்கிறது. இறக்குமதிக்கான தர நிர்ணயங்களையும், பன்னாட்டு நிறுவனங்களையும் திருப்திப்படுத்தும் நோக்கத்தோடு அரசு தளர்த்திவிட்டது. இவ்வாறு அரசின் தாராளமய ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கைகள் அனைத்தும் விவசாயிகளையும் உணவுப் பாது காப்பையும் மிகவிரைவில் நாசமாக்கி அழித்திடக்கூடியவை களாகும்.

விவசாயிகள், தனியாரிடமிருந்து தற்சமயம் வேண்டுமானால், கூடுதல் விலை பெறலாம். ஆனால், நீண்டகால அடிப்படையில் பார்த்தோமானால், உணவுப் பாதுகாப்பிற்கே கேடு விளைவித்து, விவசாயிகளுக்கு அளிக்கப்படும் விலையையும் கடுமையாகக் குறைத்திடும். சமீபத்தில், ஐ.நா. அமைப்பின் ஓர் ஆய்வு, ‘‘வர்த்தக தாராளமயக் கொள்கைகளின் விளைவாக, வளர்முக நாடுகளில், இறக்குமதிகள் அதிகரித்து, ஏற்றுமதி குறைந்திருக்கிறது என்றும், இது உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்குக் கணிசமான நஷ்டத்தை ஏற்படுத்தியிருப்பதோடு, மிகவும் மலிவான, சந்தையில் நீடித்து நிற்கக்கூடிய புதிய பொருள்களின் காரணமாக, விரைவில் அவர்கள் சந்தையிலிருந்தே விரட்டியடிக்கப்படுவார்கள்’’ என்று வெளிப் படுத்தியிருக்கிறது.

‘‘நீண்டகால அடிப்படையில், உற்பத்திப் பெருக்கம்தான் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு உதவுவதாக இருக்கும். வர்த்தக தாராளயமம் என்றால் உள்நாட்டில் உற்பத்தி குறைகிறது என்று பொருள், இறுதியில் வருமானம் குறைகிறது என்று பொருள். நுகர்வோர் இதனால் ஏதேனும் ஆதாயம் அடைகிறார்கள் என்றால் அது மிகக் குறுகிய காலத்திற்குத்தான். நீண்டகால அடிப்படையில் வருமானம் குறையும், வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாகும். இதுதான் ஆப்பிரிக்க நாடுகளில் கடந்த 20 ஆண்டு கால அனுபவமாகும்’’ என்று அந்த ஆய்வு மேலும் கூறியிருக்கிறது.

ஆனால், இந்த ஆய்வுகள் எல்லாம் தூங்கிக் கொண்டிருக்கும் நம் அரசின் கண்களைத் திறந்திடவில்லை.

மத்திய அரசு, விவசாயிகளின் விளைபொருள்களைக் கொள்முதல் செய்வதைப் படிப்படியாகக் குறைத்துக்கொண்டு வருகிறது. அவ்வேலையை பன்னாட்டு நிறுவனங்களும் பெரும் வர்த்தக நிறுவனங்களும் செய்திட அனுமதித்துள்ளது. வர்த்தக நிறுவனங்கள் மிகக் குறைந்த விலையில் உற்பத்திப் பொருள்களை வாங்கி, பதுக்கி வைத்து, செயற்கையான முறையில் பற்றாக்குறையை ஏற்படுத்தி, பின்னர் அதிக விலைக்கு விற்பதற்கு ஓர் அற்புதனமான சந்தர்ப்பத் தினை அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதே கதைதான், முன்பேர வர்த்தகப் பரிவர்த்தனை மூலமாகவும் நடைபெற்று வருகிறது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான் செய்திட்ட தவறுகளைத் திருத்திக் கொள்வதற்குப் பதிலாக, கோதுமையையும் சர்க்கரையையும் தாராளமாக இறக்குமதி செய்ய துரதிர்ஷ்டவசமாக முன்வந்திருக்கிறது. நீண்டகால அடிப்படையில் விவசாயிகளின் வாழ்வை இது சூறையாடிவிடும்.

விவசாயிகளுக்கான நிவாரணம்

விவசாயிகள் தற்கொலை தொடர்ந்து அதிகரித்து வந்ததற்குப்பின்னர் மத்திய அரசு கேரளா, ஆந்திரா, மகாராஷ்ட்ரா மாநிலங்களுக்குச் சில நிவாரணத் திட்டங்களை அறிவித்தது. இந்த நிவாரணத் திட்டங்கள் எதுவுமே சாராம்சத்தில் விவசாயிகளுக்கு எவ்வித நிவாரணத்தையும் கொடுக்கவில்லை. உதாரணமாக, ஆந்திராவில் அளிக்கப்பட்ட நிவாரண நிதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மிக அற்பத் தொகையே நிவாரணமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. 75 சதவீதத் திற்கும் அதிகமாக அம்மாநிலத்தில் எட்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டு இன்னும் நிலுவையில் உள்ள பாசனத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்ட்ரா மாநில நிவாரணத் திட்டங்களைப் பொறுத்தவரை, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சீமைப் பசுக்களை விநியோகித்துள்ளது. இது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எவ்விதத்திலும் உதவவில்லை. மாறாக அங்குள்ள அதிகாரிகளும், பணக்காரர்களுமே பயனடைந்தார்கள். இப்பசுக்களுக்கான தீவனத்திற்கு நாளொன்றுக்கு 150 ரூபாய்க்கும் அதிகமாகச் செலவிடப்பட வேண்டியிருந்ததாலும், இவை மூலம் கறந்திடும் பாலை விற்பதற்கான சந்தை ஏற்பாடு முறையாக இல்லாததாலும், இந்தப் பசுக்களைப் பெற்ற ஏழை விவசாயிகள் பெற்ற வேகத்திலேயே விற்றும்விட்டார்கள். பணம் படைத்தவர்கள் பினாமிப் பெயர்களில் இப்பசுக்களை வாங்கியிருப் பதாகவும் தகவல்கள் உண்டு.

கேரளாவில் வயநாடு பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயி களைப் பாதுகாத்திட கேரள இடது முன்னணி அரசாங்கம் சில நட வடிக்கைகளை எடுத்திருக்கிறது. ஆயினும், மத்திய அரசு அறிவித்துள்ள நிவாரணத் திட்டங்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்த்திடக்கூடிய அளவிற்கு இல்லை.

விவசாயிகளின் உற்பத்திச் செலவினம், கட்டுப்படியாகக்கூடிய அளவில் இடுபொருட்களின் விலை, அரசு மற்றும் கூட்டுறவு வங்கி களின் மூலம் கடன் வசதி போன்றவை இல்லாமல் விவசாயிகளின் பிரச்சனைகளைத் தீர்த்திட முடியாது.

சில்லரை வர்த்தகம்

வேளாண்-வர்த்தகம் என்பது இன்றையதினம் உலகில் மிகவும் பலமான, மத்தியத்துவப்படுத்தப்பட்ட ஒன்றாக வளர்ந்திருக்கிறது. உலகின் ஒரு சில பன்னாட்டு நிறுவனங்கள் இதில் ஏகபோக ஆதிக்கம் செலுத்துகின்றன. வளர்முக நாடுகள் ஒருசிலவற்றின் பட்ஜெட்டு நிதிவள ஆதாரங்களை விட இந்நிறுவனங்களின் நிதிவள ஆதாரங்கள் அதிகமாகும். இத்தகைய சூழ்நிலையில்தான் மத்திய அரசு, வேளாண்-வர்த்தகத்தை பன்னாட்டு நிதி நிறுவனங்களிடம் ஒப்படைக்க முன்வந்துள்ளது. இது மிகவும் ஆபத்தானதாகும். மத்திய அரசு, மாநில அரசுகளையும் தங்கள் மாநில சட்டம் மற்றும் விதிகளையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வெண்சாமரம் வீசக்கூடிய வகையில் மாற்றியமைத்திட நிர்ப்பந்தித்து வருகிறது. மேலும் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இவ்வாறு அனுமதிக்கப்பட்டால், அது உற்பத்தியாளர்கள், சிறு வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் நலன்களைக் கடுமையாகப் பாதிக்கும். விவசாயிகள் – சிறுவர்த்தகர்கள் – நுகர்வோர்களைப் பாதுகாக்கக்கூடிய வகையில் ஒரு சந்தை முறை இன்றைய அவசியத் தேவையாகும்.

முன்பேர வர்த்தகம்

முன்பேர வர்த்தக முறையின் கீழ், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பெரும் வர்த்தகச் சூதாடிகள் விவசாயிகளைச் சூறையாட அரசு அனுமதித்திருக்கிறது. இம்முறையின்படி, பன்னாட்டு நிறுவனங்களும், பெரும் வர்த்தகச் சூதாடிகளும் விவசாயிகள் விவசாயப் பொருட்களை விதைக்கும் சமயத்திலேயே அவற்றின் விலையைத் தங்கள் விருப்பத்திற்கேற்ப நிர்ணயம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இதன் பொருள் என்னவெனில், விவசாயப் பொருள்களின் விலைகளை நிர்ணயிப்பதிலோ அல்லது சந்தைப்படுத்துவதிலோ அரசு தலையிடாது, சந்தை அனைத்தையும் தீர்மானிக்கும் என்பதாகும். இத்தகைய முறையானது இந்திய விவசாயிகளையும், சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளையும் அழித்து ஒழித்துவிடும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் நேரடி விளைவுதான் பணவீக்கம் என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் முன்வைத்து வரும் வாதங்களை, இப்போது 2006-2007 பொருளா தார ஆய்வறிக்கையும் ஒத்தூதியிருக்கிறது. அவர்க ளுடையவாதம், பின்வருமாறு: உயர் வளர்ச்சிவிகிதத்தின் காரணமாக, மக்கள் கையில் பணம் தாராளமாகப் புரளுகிறதாம். அதனால் அவர்கள் பண்டங் களை அதிகமான அளவில் வாங்க முன்வந்திருக்கிறார்களாம். ஆனால் சந்தைக்குப் பண்டங்களின் வரத்து அந்த அளவிற்கு இல்லா ததால், விலைவாசி உயர்கிறதாம். குடியரசுத் தலைவர், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றும்போதும், இதே போன்ற வாதத்தையே முன்வைத்திருக்கிறார்.

ஆனால் எதுவும் உண்மைக்கு வெகு தொலைவில் இருக்க முடியாது. மக்கள் வளமாக வாழ்கிறார்களாம், மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்திருக்கிறதாம். ஆனால் யதார்த்த நிலைமை என்ன? விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும், வேலைாயில்லாத் திண்டாட்டமும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்பதேயாகும். தற்போதைய பணவீக்கத்திற்குக் காரணம், மக்களிடம் பணப் புழக்கம் அதிகமாகியிருப்பது அல்ல. மாறாக, அனைத்து இன்றி யமையாப் பண்டங்களின் விலைவாசியும் பாய்ச்சல் வேகத்தில் விண்ணையெட்டியிருப்பதேயாகும். முந்தைய தேசிய ஜனநாயக முன்னணி அரசாங்கம் கொண்டு வந்த இன்றியமையாப் பண்டங் களுக்கு முன்பேர வர்த்தக முறையை, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கமும் தொடர்வதுதான் இதற்கு முக்கிய காரணமாகும். இம்முறையானது இன்றியமையாப் பண்டங்கள் சந்தையில் தரகுச் சூதாட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இதன் விளைவாக, கடந்த மூன்றாண்டுகளில் முன்பேர வர்த்தகம் மூலம் மேற்கொள்ளப்பட்ட பண்டங்களின் மதிப்பு 600 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துவிட்டது. இத்தகைய முன்பேர வர்த்தக முறையானது இரு அருவருக் கத்தக்க, விரும்பத்தாக செயல்முறையைப் பின்பற்றுகிறது. முதலாவதாக, பண்டங்களின் விலை உயர்ந்ததன் மூலமாகக் கிடைத்திடும் பயன்களில் ஒரு சிறு துளி கூட அவற்றை விளைவித்த விவசாயிகளுக் குப் போய்ச் சேராது. ஏனெனில் அவை விவசாயிகளிட மிருந்து, வெகு காலத்திற்கு முன்னதாகவே வாங்கப்பட்டு விடுகின்றன. எனவே, விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருள்களுக்கு குறைந்த விலையையே பெற்றுக் கொள்கிறார்கள். இரண்டாவதாக, வர்த்தக சூதாடிகள் இன்றியமையாப் பண்டங்கள் மீது செயற்கையாகப் பற்றாக் குறையை உருவாக்கிவிட்டு, விலைவாசி விண்ணை முட்டிக் கொண்டிருக்கக்கூடிய சமயத்தில், பொருள்களை சந்தைக்குக் கொண்டு வருகிறார்கள்.

இத்தகைய முன்பேர வர்த்தகமுறை உடனடியாக முற்றிலுமாக நிறுத்தப்பட்டாக வேண்டும். இல்லையெனில், உயரும் விலைவாசி யைக் கட்டுப்படுத்துவது என்பது சாத்தியமே இல்லை என்பது தெள்ளத் தெளிவாகும். துரதிர்ஷ்டவசமாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் இதனைச் செய்ய மறுக்கிறது. பதிலாக, தன்னுடைய தவறான பகுப்பாய்வினைக் கட்டிப்பிடித்துக் கொண்டு, பொருளாதாரத்தில் பணப்புழக்கம் தாராளமாகியிருக்கிறது என்கிற தவறான கருத்தோட்டத்தின் அடிப்படையில் வட்டி விகிதங்களை உயர்த்துதல், இறக்குமதி வரியைத் தளர்த்துதல் போன்ற காரியங்களில் இறங்கியிருக்கிறது.

2004 விதைச் சட்டம்

விதைத் தொழில் ஏற்கனவே தனியார் துறையின் செல்வாக்கிற்குச் சென்றுவிட்டது. 40க்கும் மேற்பட்ட விதைத் தொழில்கள் இன்றைய தினம் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளில் இருக்கின்றன. மத்திய அரசு, இந்த பன்னாட்டு நிறுவனங்களையும் தனியார் வர்த்தகர் களையும் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, அவர்களை திருப்திப்படுத்தக்கூடிய விதத்தில் விவசாயிகள் விதைகளை உற்பத்தி – பரிவர்த்தனை – விற்பனை செய்வதைக் கட்டுப்படுத்திடும் வகையில் நிர்ப்பந்தங்களைக் கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில்தான் அகில இந்திய விவசாயிகள் சங்கம் 2004 ஆம் ஆண்டைய விதைச் சட்டத்திற்கு எதிராக ஓர் அறிக்கை வெளியிட்டது. 2004 ஆம் ஆண்டைய விதைச் சட்டத்திற்கு ஏராள மான திருத்தங்களைக் கொண்டு வந்தது. இத்திருத்தங்கள் சேர்க்கப்படாமல் விதைச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், அது இந்திய விவசாயத்தையும், இந்திய விவசாயிகளையும் கடுமையாகப் பாதிக்கும். விதைகளின் விலைகள் உயரும். விவசாயிகள் மற்றும் இந்திய விவசாயம் இந்திய ஏகபோக முதலாளிகள் மற்றும் பன்னாட்டு விதை நிறுவனங்களின் தயவில் இருந்திட வேண்டிய அவலநிலை உரு வாகும். விவசாயிகள் விதைகளை உருவாக்கி வளர்த்திட, பாதுகாத்திட, பயன்படுத்திட, பரிவர்த்தனை செய்திட மற்றும் விற்பனை செய்திடுவதற்கான உரிமைகள் பறிபோகும். அகில இந்திய விவசாயிகள் சங்கம் இதனைக் கடுமையாக எதிர்க்கிறது. இது தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு சங்கத்தின் தலைவர் எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை மூலமாக ஒரு மனு கொடுக்கப்பட்டுள்ளது.

பழங்குடியினர் பாதுகாப்புச் சட்டம்

இந்தக் கால கட்டத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் மற்றும் பல்வேறு பழங்குடியின அமைப்புகள், இடதுசாரிக் கட்சிகள் எடுத்த உறுதியான நடவடிக்கைகளின் விளைவாக, 2006ஆம் ஆண்டு பழங்குடியினர் மற்றும் வனங்களில் பாரம்பரியமாகக் குடியிருப்போர் (வன உரிமைகள் அங்கீகாரச்) சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் முந்தைய பாஜக அரசாங்கம் பழங்குடியினரை வனப்பகுதிகளிலிருந்து வெளியேற்றக்கூடிய வகையில் கொண்டுவந்த சட்டம் குப்பைத்தொட்டியில் வீசியெறியப்பட்டது.

இந்திய – அமெரிக்க அறிவுசார்ந்த முயற்சி (Indo-US Agricultural Knowledge Initiative-AKI)

அமெரிக்க ஜனாதிபதி புஷ், இந்தியா வந்தபோது, இந்திய விவசாயத்தையும் விவசாயிகளையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கு அடகு வைக்கக்கூடிய விதத்தில் ஓர் ஒப்பந்தம் ஏற்பட் டிருக்கிறது. ‘‘விவசாயக் கல்வி, பயிற்சி, ஆய்வு, சேவை மற்றும் வணிகத் தொடர்புகள் தொடர்பாக அமெரிக்க – இந்திய அறிவு சார்ந்த முயற்சி (US-India Knowledge Initiative on Agricultural Education, Teaching, Research, Service and Commercial Linkages) என்னும் இந்த ஒப்பந்தத்தின்படி இந்திய விவசாயத்தில் பெரும் முன்னேற்றம் ஏற்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால் உண்மையில் இது இந்திய விவசாயத்தை அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கு அடகு வைக்கும் நடவடிக்கையேயாகும். இந்திய விவசாய ஆய்வுகள் குறித்து அமெரிக்கா முழுமையாகத் தெரிந்து கொள்வதற்கும், இந்திய விவசாயத்தை முழுமையாக அதன் கட்டுப்பாட்டில் கொண்டு செல்வதற்குமே வழிவகுக்கும்.

இந்த அமைப்பில் இரு அரசாங்கங்களின் அதிகாரிகளும், பல்கலைக்கழகப் பிரதிநிதிகளும் மற்றும் தனியார்துறையைச் சேர்ந்தவர்களும் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள். தனியார்துறை பிரதிநிதிகளில் இருவர் இந்தியாவைச் சேர்ந்த வெங்கடேஷ்வரா ஹாட்சரிஸ் மற்றும் ஐ.டி.சி. நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள். மூவர் அமெரிக்க நிறுவனங்களான மான்சாண்டோ, வால்மார்ட் மற்றும் உலகில் மிகப்பெரிய விவசாயப் பதனிடும் கம்பெனியான ஆர்ச்சர் டானியல்ஸ் மிட்லாண்ட் கம்பெனி ஆகியவற்றின் பிரதிநிதிகளா வார்கள்.

எனவே, இந்த அமைப்பு முழுக்க முழுக்க இந்திய விவசா யத்தை வணிகமயப்படுத்துவதற்காகவும், பன்னாட்டு வேளாண் வர்த்தக நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குள் இந்திய விவசாயத்தை கொண்டு வருவதற்கான ஒரு ஏற்பாடேயாகும். உதாரணமாக, பி.ட்டி.பருத்தி (Bt.Cotton) செல்வாக்கு பெறுகிறது என்று வைத்துக்கொள்வோம். பின் இதனை மான்சாண்டோ நிறுவனம் தன் ஏகபோகக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும். அது பின்னர் இந்தியாவின் பருத்தி விவசாயத்தையே தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுசென்றுவிடும். அதேபோன்று வால்மார்ட் நிறுவனம் சில்லரை வர்த்தகத்தை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு சென்றுவிடும். இந்திய விவசாயிகள் அதன் தயவில்தான் வாழ வேண்டியிருக்கும். நாட்டின் முக்கிய விவசாயப் பொருள்களான கோதுமை, அரிசி, சோளம் போன்ற அனைத்தையுமே தன் கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்பதுதான் மான் சாண்டோவின் அடுத்த இலக்கு.

முதலாவது பசுமைப் புரட்சியின்போது, பொதுத்துறை நிறுவனங்கள் விவசாயிகளைப் பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு. ஏராளனமான தொழில்நுட் பங்களைக் கண்டுபிடித்து விவசாயிகளுக்கு உதவிக்கொண்டிருந்தன. மற்ற பல வளர்முக நாடுகளைவிட இந்தியாவில் விவசாயத் தொழில்நுட்பம் வெகு வேகமாக வளர்ந்தது. மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள இந்திய வேளாண் ஆய்வு மையம் (ICAR -Indian Council for Agricultural Research) தவிர மாநில அளவிலும் வேளாண் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், நிறுவனங்கள் உருவாயின.

இப்போது ஜார்ஜ் புஷ் கொண்டுவரும் ‘‘இரண்டாவது பசுமைப் புரட்சி’’ முழுக்க முழுக்க தனியார் கட்டுப்பாட்டில் உயிரணு மாற்றம் செய்ப்பட்ட விதைகளை (அனைத்தும் உலகில் ஆறு பன்னாட்டு நிறுவனங்கள் கட்டுப்பாட்டில்) அறிமுகப்படுத்தி அதனால் வரும் ஆதாயம் முழுமையாக மேற்படி பன்னாட்டு நிறுவனங்களுக்குச் செல்லக்கூடிய வகையில் கொண்டுவரப்படுகிறது.

இவ்வாறு இந்திய விவசாயத்தையே முழுமையாக அமெரிக்க விதைக் கம்பெனிகளிடம் அடகு வைத்திட அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அரசு, நாடாளுமன்றத்திடமோ அல்லது நாட்டில் உள்ள பெரும் விவசாயத்துறை சார்ந்த அமைப்புகளி டமோ கலந்தாலோசிக்கவே இல்லை.

விவசாயிகளுக்கான தேசிய ஆணையம்

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையிலான தேசிய ஆணையம் தனது இறுதி அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்து விட்டது. அதன் பரிந்துரைகளில் பல விவசாயத் துறையில் இன்று நிலவும் பல்வேறு நெருக்கடிகளுக்குத் தீர்வு காண உதவிடும்.

அவற்றில் சிலவற்றின் விவரம் வருமாறு:

 1. சாத்தியமான இடங்களில் எல்லாம் நிலமற்ற விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஒரு ஏக்கர் நிலம்.
 2. பொது விநியோக முறை அனைவருக்கும் அமல்படுத்தப்பட வேண்டும்.
 3. பயிர் இழப்புக்கு ஆளாகும் விவசாயிகளைப் பாதுகாக்கக் கூடிய வகையில் பேரிடர் நிதியம் உருவாக்க வேண்டும்.
 4. விவசாயிகளுக்கான கடன் வட்டிவிகிதம் 4 சதவீதமாகக் குறைக்கப்பட வேண்டும். வரிக்கட்ட முடியாமல் போனால் கூட்டு வட்டி கூடாது. வறட்சி, வெள்ளம், பூச்சி மருந்துகளால் பயிரிழப்பு ஏற்பட்டால் கடன் ரத்து செய்யப்பட வேண்டும்.
 5. நாடு முழுமைக்கும் அனைத்துப் பயிர்களுக்கும் பயிர் இன்சூரன்ஸ் விரிவாக்கப்பட வேண்டும்.
 6. விலை ஏற்றத்தாழ்வுகளை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் நிதியம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
 7. விவசாயப் பண்டங்கள் இறக்குமதி பெருமளவில் கட்டுப் படுத்தப்பட வேண்டும்.
 8. விவசாயிகளின் தற்கொலை குறித்து கணக்கு எடுத்து, ஆய்வு செய்து, உரிய நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
 9. அரசு, அகில இந்திய அளவில் கடன் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
 10. மாநில அளவிலும் விவசாயிகளுக்கான ஆணையம் அமைக் கப்பட வேண்டும்.
 11. பெண்களை மேம்படுத்தும் வகையில் கிராம மகளிர் நிதியம் ஏற்படுத்தப்பட வேண்டும்.

மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரின் போது ஆறு மாத காலத்திற்குள் விவசாயிகளுக்கான ஆணையத்தின் பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிமொழி அளித்தார். இப்போது பட்ஜெட் உரையின்மீது பேசிய மத்திய நிதி அமைச்சர் ஆணையத்தின் பரிந்துரைகளில் பரிசீலனையில் இருந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இன்னும் எத்தனை மாதங்களுக்கு அல்லது ஆண்டுகளுக்குப் பரிசீலனை செய்வார்கள் என்று தெரியவில்லை.