முந்தையக் கட்டுரைகளில் கருத்துப் போராட்டம் அல்லது தத்துவார்த்தப் போராட்டம், கட்சி செய்ய வேண்டிய ஆகப் பெரிய கருத்துத்துறைப் பணிகளின் ஒரு முக்கியப் பகுதியாகப் பார்க்கப்பட வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளோம். அதாவது வாதத்திற்கு எதிர்வாதம் எனும் முறையில் சொற்றொடர்களை வைத்து ‘திண்ணை வேதாந்தி’களைப் போல் தர்க்கம் பண்ணுவது தத்துவார்த்தப் பணியின் நோக்கமாக இருக்க முடியாது. எதிரி வர்க்கங்கள் – கம்யூனிஸ்ட் இயக்கத்தை அழிக்க வேண்டும் என்று விரும்பக்கூடிய சக்திகள் தொடர்ந்தாற்போல் கம்யூனிஸ்ட் அணிகளை சீர்குலைக்கும் பணியில் ஈடுபடும் என்பதை சுட்டிக் காட்டினோம். அவ்வாறு அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை உடனுக்குடன் சந்தித்து முறியடிக்காவிடில், நாளடைவில் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் குழப்பமும், சோர்வும் ஏற்படும் என்பது நமக்குக் கிடைத்த அனுபவமாகும். ஏராளமான உதாரணங்களைக் கூற முடியும். மேற்கு வங்கத்தில் நமது இயக்கம் வலுவான அடித்தளத்தைப் பெற்றிருக்கும் நேரத்தில், அதற்கு வேட்டு வைக்கும் முயற்சிகளையும் தொடர்ந்தாற்போல் நாம் பார்த்திருக்கிறோம். நாளடைவில் இந்த முயற்சிகள் சிறுகச் சிறுக எதிரிகளுக்குப் பயனை அளித்துள்ளதைப் பார்க்கிறோம். அதன் கொடூரமான விளைவாக சிங்கூர், நந்திகிராம் போன்றப் பகுதிகளிலும் நாம் எதிர் பார்த்ததற்கும் வேகமாக கம்யூனிஸ்ட் இயக்க எதிரிகள் அப்பகுதி மக்களை மட்டுமின்றி, பொதுவாகவே இதரப் பகுதி மக்களையும் குழப்பிவிட்டு மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கியதை நாம் இன்று பார்க்கிறோம். இத்தகைய தீய முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும் என்று எதிர்பார்க்காமல் அவற்றை அலட்சியமாகக் கணித்ததின் விளைவாக நாம் நினைத்ததை விட அதிகமாக விஷக் கருத்துக்கள் பரவி, பெரிய சவாலாக இன்று வளர்ந்ததை நேரடியாக அனுபவித்து வருகிறோம்.
எதிரி வர்க்கங்களின் தீய முயற்சிகளை உடனுக்குடன் சந்தித்து முறியடிக்கும் பணியில் கம்யூனிஸ்ட்டுகள் ஈடுபடவில்லையென்றால், பெரும் நஷ்டங்களை நமது இயக்கம் சந்திக்க வேண்டியிருக்கும் என்பது அண்மையில் கிடைத்த அனுபவம் ஆகும். நமது கருத்துப் பிரச்சாரத்தைப் பொதுவாகச் செய்து கொண்டே இருப்பதின் மூலம் மட்டும் எதிரிகளின் முயற்சிகளைத் தோற்கடிக்க முடியாது என்பதுதான் உண்மை. அவர்களின் பிரச்சாரத்திற்கு உடனுக்குடன் தக்க பதில் கொடுத்து வாதங்களுடைய போலித் தன்மையை அம்பலப்படுத்துவது என்பது ஒத்திப்போட முடியாதக் கடமையாகும். நாம் நல்லவர்களாக இருக்கிறோம். நமது கொள்கைகளும், நடைமுறைகளும் மக்களுக்கு எளிதில் புரிந்துவிடும் என்று நினைத்து அலட்சியமாக இருப்பதானது பெரும் தீங்கை விளைவிக்கும் என்பதை உறுதியாகப் புரிந்து கொள்ள வேண்டும். தத்துவார்த்தப் போராட்டமானது ஒரு ‘நல்லநாள்’ பிறக்கும்போது செய்ய வேண்டிய ஒரு சடங்கு என்ற எண்ணமானது ஆபத்தானதாகும். இடைவிடாமல் நடைபெற வேண்டிய ஒரு காரியமாகும். சுருங்கக்கூறின், நமது சரியான நிலைபாடுகளையும் விளக்கிக் கொண்டே இருப்பதுடன், எதிரிகளின் விஷத்தன்மை கொண்ட வாதங்களையும் உரிய காலத்தில் சந்தித்து நாம் முறியடிக்க வேண்டும் என்பது அனுபவமாகும்.
கடந்த கால அனுபவங்கள் சில
கம்யூனிஸ்ட் இயக்கம் உருவானக் காலத்திலிருந்தே எவ்வாறு தவறானக் கருத்துக்களை எதிர்கொண்டு, முறியடித்து நமது கருத்துக்களைத் தெளிவாக எடுத்துரைத்து நமது தத்துவமும், நடைமுறையும், பணிகளும் முன்னேறின என்பதைப் பார்த்தோம். மார்க்ஸ் – ஏங்கல்ஸ் போன்ற இயக்க மேதைகளின் காலத்தில் துவங்கி, எதிர்மறையான கண்ணோட்டங்களை இயக்கம் எவ்வாறு முறியடித்தது என்பதையும் பார்த்திருக்கிறோம்.
இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் தோன்றியக் காலத்தில் ஏகாதிபத்திய சக்திகள் நமது இயக்கத்திற்கு எதிரான அடக்குமுறைகள், அவதூறுப் பிரச்சாரம், தத்துவரீதியான போலி விவாதங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி இயக்க வளர்ச்சியைத் தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டது நமக்குத் தெரியும். அதேபோல அந்நிய முதலாளிகள் இந்தியாவின், பெருமுதலாளித்துவ சக்திகள், நிலப்பிரபுத்துவத்தைப் பிரதிபலிக்கும் வர்க்க எதிரிகள், பத்தாம்பசலி தத்துவ வாதங்களை முன்வைக்கும் அப்பட்டமான பிற்போக்கு வாதிகளும், வளர்ந்து வரும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு எதிராகப் பல முறைகளில் தாக்குதலைத் தொடுத்தன. இந்து மதவாத வெறியர்கள் – இந்து மகா சபா போன்ற அமைப்புகள் ஆரம்பத்தில் கம்யூனிசம் என்பது இந்தியாவிற்கு அந்நியமான ஒரு தத்துவம் என்ற முறையில், அன்று முதல் இன்று வரை தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருவது நமக்குத் தெரியும். ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பெருமளவில் பரவ ஆரம்பித்ததிலிருந்து (இன்று வரை) இந்தியாவின் தேசியத் தன்மைக்கு எதிரியாக இருப்பவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் என்று விடாப்பிடியாக பிரச்சாரம் செய்து வருவதையும் நாம் பார்க்கிறோம். இத்தகையத் தத்துவ ரீதியாக மட்டுமல்லாமல், நடைமுறைப் பணிகளில் கூட கம்யூனிஸ்ட்டு இயக்கத்தினை அழித்தொழிக்க வேண்டிய ஒரு இயக்கமென்றப் பிரச்சாரத்தை முறியடித்துதான் நமது கட்சி முன்னேறியுள்ளது.
தேசிய இயக்கத்தில், அதாவது பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான மாபெரும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தில் கம்யூனிஸ்ட்டுகள் தீவிரமானப் பங்கினை ஆற்றிய போதும், தேசிய இயக்கத்தின் தலைமையில் இருந்த முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ சக்திகள் தொடக்கத்திலிருந்து கம்யூனிஸ்ட் எதிர்ப்பு நிலைகளை மேற் கொண்டதை நாம் பார்த்திருக்கிறோம். தத்துவ ரீதியான எதிர்ப்பு மட்டுமின்றி கம்யூனிஸ்ட்டுகளைத் தேசத் துரோகிகள் என்று வர்ணித்தும் வளராமல் தடுக்கும் நோக்கத்துடன் பல முறைகளில் இம்சித்தும் வந்திருக்கிறது. சுதந்திரப் போராட்டக் காலம் முழுவதும் இது நடைபெற்று வந்தன. ஆனால், தாக்குதல்களை நிதானமாகவும், கருத்துத் தெளிவுடனும் கம்யூனிஸ்ட்டுகள் சந்தித்துத் தேசிய இயக்கத்தில் கட்சியின் பாத்திரத்தைக் கணிசமானப் பகுதி மக்களை உணர வைப்பதில் வெற்றி கண்டிருக்கிறது.
குறிப்பாக, கம்யூனிஸ்ட்டுகள் தேச விரோதிகள் என்ற அவதூறுப் பிரச்சாரத்துடன், அந்நிய சக்திகளின் ஏஜெண்டுகள் என்ற கீழ்த்தரமானப் பிரச்சாரத்தையும் காங்கிரஸ்காரர்கள் இடைவிடாமல் தொடர்ந்து செய்து வந்தனர். (ரஷ்யாவின் மகத்தான சோசலிச முன்னேற்றங்களைக் கண்டு, பாராட்டிவிட்டு வரக்கூடி யவர்கள் கூட கம்யூனிஸ்ட்டுகளை ரஷ்ய ஏஜெண்டுகளாக கீழ்த்தர மான முறையில் வர்ணித்து வந்திருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்) அதேபோல், சீனாவில் மகத்தான புரட்சி வெற்றி பெற்ற பின், இந்திய மக்கள் மத்தியில் சீனப் புரட்சி பற்றி அதன் சாதனைகளைப் பற்றி மிகப் பெரிய அளவில் நல்லெண்ணம் ஏற்பட்ட போதும், காங்கிரஸ் தலைவர்கள் சிலரும் மற்ற பல கட்சித் தலைமைகளும் கம்யூனிஸ்ட்டுகளை சீனாவின் கையாட்கள் என்ற பிரச்சாரத்தை விடாமல் செய்து வந்தனர். 1942 முதல் சுதந்திரப் போராட்ட இறுதிக் கட்டம் வரை காங்கிரஸ்காரர்களும், காங்கிரஸ் சோசலிஸ்டுகளும் மற்றும் பல குட்டி பூர்சுவா கட்சிகளும் விடாப்பிடியாக கம்யூனிஸ்ட் எதிர்ப்புப் பிரச்சாரத்தில் மிகவும் கீழ்த்தரமான வகையில் ஈடுபட்டது என்பதுதான் உண்மை.
ஆக, காங்கிரசும் மற்றும் தேசிய இயக்கத்தின் பகுதியாக இருந்த பல கட்சிகள் தொடுத்த கம்யூனிஸ்ட் எதிர்ப்புத் தத்துவார்த்தத் தாக்குதல்களையும் உறுதியாகச் சந்தித்து, முறியடித்துதான் கம்யூனிஸ்ட் ஊழியர்கள் ஒரு காலகட்டம் முழுவதும் பணியாற்றினர். (குறிப்பாக, 1942 – 1951 வரை) இந்தக் காலக்கட்டத்தில் மகாத்மா காந்தி உட்பட பெரும் தலைவர்களின் விமர்சனங்களையும், அவதூறுகளையும் கம்யூனிஸ்ட்டுகள் கட்டுரைகள் மூலமாகவும், நூல்கள் மூலமாகவும் பதிலளித்ததானது ஒரு பகுதி மக்களுக்குத் தெளிவைக் கொடுத்தது மட்டுமின்றி, கம்யூனிஸ்ட் தோழர்களின் அரசியல், தத்துவார்த்த உறுதிப்பாட்டினை பெருமளவில் உறுதிப்படுத்தியது என்ற ஒரு படிப்பினையையும் நாம் பார்க்கிறோம். இன்றுள்ள கட்சித் தலைவர்கள் – ஊழியர்களில் கணிசமான ஒரு பகுதியினர் அந்தக் காலக்கட்டத்தில் நடந்த கருத்துப் போராட்டத்தில் சிறந்த கம்யூனிஸ்ட்டுகளானவர்கள்.
தெலுங்கானாப் போராட்டம், தேபாகா போராட்டம், புன்னப்புறா வயலார் போராட்டம், தமிழகத்தில் ரயில்வே தொழிலாளர் பேரெழுச்சி, தஞ்சை மண்ணில் தீ போல் பரவிய விவசாயிகள் இயக்கம், ஏகாதிபத்திய எதிர்ப்பு மாணவர்களின் போராட்டங்கள் போன்ற போராட்டங்கள் மூலம் பெற்ற அனுபவங்களுடன், அந்தக் கட்டத்தில் நடைபெற்ற தீவிரமான கருத்துப் போராட்டமும், ஆட்சியாளர்களின் கொடூரமான அடக்குமுறைகளைச் சந்தித்த அனுபவங்களும் இணைந்து ஒரு தலைமுறையினர் சிறந்த கம்யூனிஸ்ட்களானார்கள். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அடித்தளத்தையே உறுதிப்படுத்தியது. இந்த அனுபவங்களில் கருத்துப் போராட்டத்திற்கும் ஒரு பெரிய பங்கு இருந்திருக்கிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டியிருக்கிறது.
இதேபோல், சோசலிஸ்ட்டுகள் ராய்ஸ்ட்டுகள் என்று அறியப்படும் ஒரு அமைப்பினர் மற்றும் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வந்த பலவிதமான இயக்கங்கள் கம்யூனிஸ்ட்டுகளுடன் நட்பு வைத்திருந்த போதிலும், கம்யூனிஸ்ட் இயக்கத்தை தத்துவ ரீதியாகவும், நடைமுறையிலும் பலமுறைகளில் விமர்சித்து வந்தனர். (நேதாஜி போஸ் தலைமையில் துவக்கப்பட்ட பார்வர்டு பிளாக், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி போன்றவையும், சில மாநிலக் கட்சிகளும் நடத்தி வந்த கம்யூனிஸ்ட் எதிர்ப்பு அரசியல் பிரச்சாரத்திற்கு கம்யூனிஸ்ட்டுகள் பதிலளிக்க வேண்டிய நிலை இருந்தது. அத்தகைய தத்துவார்த்தப் போராட்டங்கள் மூலம் கட்சியின் கொள்கைகளை அணிகள் மேலும் தெளிவாகப் புரிந்து கொள்ள உதவியது)
சென்னை மாநிலத்தில், இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தோன்றிய நீதிக் கட்சி (ஜஸ்டிஸ் கட்சி), பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் ஆதரவுடன் செயல்பட்டு மாநில ஆட்சியை நடத்தி வந்தன. அக்கட்சியிலிருந்த ஒரு பிரிவினர் பெரியார் அவர்களின் தலைமையில் சுயமரியாதைக் கட்சி எனும் பெயரில் தனிக் கட்சியாக செயல்படத் துவங்கினர். அந்தக் கட்டத்தில் பெரியாரின் கொள்கைகள் பெருமளவில் மாநிலத்திலுள்ள மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெற்றது. ‘வர்ணாசிரமத் தர்மம்’ என்ற பெயரில் பிராமண சாதியினர் சமுதாயத்திலும், கல்வித்துறையிலும், ஆட்சியிலும் அதீதமான செல்வாக்கினையும், ஆதிக்கத்தையும் எதிர்த்த பிராமணர் அல்லாத பிரிவினர் அதிகமாக சுயமரியாதைக் கட்சிக்கு ஆதரவளித்தனர். சமூகச் சீர்திருத்தம், பெண்களுக்கான உதவிகள், சாதிக் கொடுமைகளுக்கு எதிர்ப்பு போன்ற பல விஷயங்களில் சுயமரியாதைக் கட்சி சில முற்போக்கான கொள்கைகளை முன்வைத்தது. அந்த நேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரில் கட்சி உதயமாகவில்லை. ஆயினும், முற்போக்கு இயக்கங்களிலும், தொழிற்சங்க இயக்கத்திலும் தீவிரமானப் பங்கினை ஆற்றிய ம.சிங்காரவேலர் மற்றும் பல மேதைகள் சமதர்ம இயக்கத்திற்கு ஆதரவளித்து வந்தனர்.
ம.சிங்காரவேலர் அவர்களும், அவரைச் சார்ந்த முற்போக்காளர்களும் வேகமாகவே கம்யூனிஸ்ட் எண்ணங்களையும், கொள்கைகளையும், நடைமுறைகளையும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு செயல்படத் துவங்கினர். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கடுமையான அடக்குமுறைச் சூழலில் அவற்றை எதிர்கொண்டு சிங்காரவேலரும், மற்றவர்களும் கொள்கை நிலைகளை மேற்கொண்டனர். இதற்கிடையில் பெரியார் அவர்கள் பல முனைகளிலும் கம்யூனிஸ்ட்டுகள் முன்வைத்தக் கருத்துக்களை ஆதரிக்கும் நிலையை கடைப்பிடிக்கத் துவங்கினார். கம்யூனிசத்தினுடைய பல கருத்துக்களையும் ஏற்றுக் கொண்ட பெரியார் அவருடைய தனிப் பாதையிலேயே முன்னேறினார். சிங்காரவேலர், பிறகு அவருடன் சேர்ந்த ப.ஜீவானந்தம், கே.முருகேசன் மற்றும் பலர் பெரியாரின் ஆதரவாளர்கள் கூட கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு ஈர்க்கப்பட்டனர். ஆயினும், சுயமரியாதை கட்சியின் ஒரு பகுதியினராகவும், முன்னணியினராகவும் பணியாற்றினர்.
இந்த நிலையில்கூட சிங்காரவேலரின் தலைமையிலான இப்பிரிவுத் தோழர்கள் கம்யூனிஸ்ட் இயக்கத்துடனும் தொடர்பு வைத்திருந்தனர். முறையான ஒரு கம்யூனிஸ்ட் கட்சியாக செயல்படாவிட்டாலும்கூட, அவ்வியக்கத்தின் பல கருத்துக்களையும் இவர்கள் ஏற்றனர். மறுபக்கத்தில் பெரியாரின் பல கருத்துக்களையும், இவர்கள் ஏற்கவில்லை. பெரியாருடன் நட்பு வைத்துக் கொண்டே, தங்களின் கருத்துக்களை இவர்கள் பிரச்சாரம் செய்தனர். பெரியாரும் சுயமரியாதை இயக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்து, அவருடைய நிலைபாடுகளில் தொடர்ந்து செயல்பட்டு வந்தார். இந்த நிலைமையில் பெரியாருடைய கொள்கைகளை முழுமையாக ஏற்க முடியாத சிங்காரவேலரும் மற்றவர்களும் ஒரு கட்டத்தில் சுயமரியாதை – சமதர்ம கட்சி என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்க முயற்சித்தனர். திருச்சியில் அதற்கான மாநாட்டையும் கூட்டினர். இவைப பற்றியெல்லாம் ஏராளமான பிரசுரங்கள், கட்டுரைகள் வெளிவந்துள்ளன. ஆயினும், பெரியாருடன் இருந்த காலத்தில்கூட துவக்க நிலையில் இருந்த கம்யூனிஸ்ட்டுகள் கருத்துப் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். கம்யூனிஸ்ட் அமைப்பு முறைப்படி தமிழகத்தில் தொடங்கிய காலத்தில் ஜீவானந்தம், கே. முருகேசன், ஆர். கிஸ்சன், சி.பி. இளங்கோ போன்ற பலரும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களானார்கள். கருத்து வேற்றுமைகள் காரணமாகவும், கருத்துப் போராட்டத்தில் ஈடுபட்டதன் விளைவாகவும், ஏற்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் இத்தோழர்கள் கம்யூனிஸ்ட்டுகளானார்கள் என்பதை சுட்டிக்காட்டவே இதை இங்கே குறிப்பிடுகிறோம். (சிங்காரவேலருடைய பாத்திரம் மற்றத் தோழர்களுடைய பங்கு குறித்தெல்லாம் இக்கட்டுரையில் விளக்காததற்கு ஒரு முக்கியக் காரணம் கம்யூனிஸ்ட் கட்சி உருவாவதற்கு முன் நடைபெற்ற நிகழ்ச்சிகளை இதில் ஆராய்வது கட்டுரையின் நோக்கமல்ல)
இக்கட்டுரைத் தொடரில், சற்று விரிவாக கருத்துப் போராட்டத்தின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் பற்றிப் பல விஷயங்களை விளக்கியிருக்கிறோம். கம்யூனிஸ்ட் இயக்கத்தில் வர்க்கப் போராட்டம், ஸ்தாபனப் பணிகள் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்கு சித்தாந்தப் பணிகளை பலர் பார்ப்பதில்லை. ஆனால், இந்த மூன்று அம்சங்களையும் உறுதியாக இணைத்தால்தான் கம்யூனிஸ்ட் இயக்கத்தை வலுவாகக் கட்ட முடியும். ஏதாவதொரு கடமையை மட்டும் செய்து வருவோமேயானால், போர்க்குணமும், உறுதிப்பாடும் உள்ள ஒரு புரட்சிகரமான கட்சியை வளர்த்தெடுக்க முடியாது.
முற்றும்