இந்தியக் குடியரசின் இரண்டாவது பொதுத் தேர்தல் முடிவுகளில் உலகின் கவனத்தை ஈர்த்த முடிவாக அமைந்தது, புதிய மாநிலமான கேரள மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள். முதலாளித்துவ அமைப்பு முறைக்குள் நாட்டின் ஓர் மாநிலத்தின் நிர்வாகப் பொறுப்பை, கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக் கொள்வது என்பது, முதலாளி வர்க்கத்தினருக்கு மட்டுமல்லாது, கம்யூனிஸ்ட் கட்சிக்குமே புதிய அனுபவமாகும்.
முதலாளித்துவ அமைப்பு முறையை மாற்றுவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கம்யூனிஸ்ட் கட்சி அதே அமைப்புக்குள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுச் செயல்படும்படி மக்கள் தீர்ப்பளித்தனர்.
அவ்வாறு, 1957 ஏப்ரல் 5 அன்று கேரள மாநிலத்தில் பொறுப்பேற்ற, இ.எம்.எஸ் அவர்களது தலைமையிலான அரசாங்கத்தின் பொன்விழா, தற்போது நாடெங்கிலும் கொண்டாடப்படுகிறது. 50 ஆண்டுகளுக்குப் பிறகும் கொண்டாடும் அளவிற்கு அந்த அரசாங்கம் செய்த சாதனைகள்தான் என்ன? சுதந்திர இந்தியாவின் அரசியல் வரலாற்றை ஆய்வு செய்தவர்கள் யாருமே, புறக்கணிக்க முடியாத முன்னோடியான பல நடவடிக்கைகளை, 28 மாத காலம் மட்டுமே பொறுப்பில் இருந்த அந்த அரசாங்கம் மேற்கொண்டது.
அரசின் பின்னணி
மொழிவாரி மாநிலங்களுக்கான போராட்டக் காலத்தில் பிரதானமான கோரிக்கைகளில் ஒன்றாக எழுந்தது ஐக்கிய கேரளம் என்ற கோரிக்கை. 1956 நவம்பர் முதல் நாள் அன்று திருவாங்கூர் – கொச்சியின் பெரும் பகுதிகளையும், சென்னை மாகாணத்தின் மலபார் மாவட்டத்தின் மிகப் பெரும்பான்மையான பகுதிகளையும் இணைத்து உருவானது இந்தப் புதிய மாநிலம். திருவாங்கூர், கொச்சி, மலபார் எனும் இந்த மூன்று பகுதிகள்.
மொழிவழியாக இணைக்கப்பட இருந்த போதிலும், சமூக – அரசியல் சூழ்நிலைகளில் பல மாறுபாடுகள் இருந்தது. அதைக் கணக்கில் கொண்டு, கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலக்குழு, 1956 ஜுன் 22 முதல் 24 வரையிலுமான தனது கூட்டத்தில், உருவாகவுள்ள புதிய மாநிலத்தின் பிரச்சனைகள், கோரிக்கைகள், எதிர்காலம் பற்றிய விரிவான ஆவணத்தை இறுதிப்படுத்தியது.
அந்த ஆவணத்தின் அடிப்படையில் தான் 1957 ஆம் ஆண்டு தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை, கம்யூனிஸ்ட் கட்சி இறுதிப்படுத்தியது. புதிய மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும், ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும், மன்னராட்சியை எதிர்த்தும், ஜனநாயக உரிமைகளையும், விவசாயிகள் – தொழிலாளர்கள் கோரிக்கைகளையும் வலியுறுத்தியும், சமூகக் கொடுமைகளை எதிர்த்தும் பிரமாண்டமான மக்கள் இயக்கங்களுக்கும், போராட்டங்களுக்கும், எழுச்சிகளுக்கும் தலைமை தாங்கிய வீரமிக்க பாரம்பரித்தின் சொந்தக்காரர்களாக கம்யூனிஸ்ட் இயக்கம் முன்னின்றது.
வீரத்தின் விளைநிலமாகத் தியாகத்தின் எடுத்துக்காட்டாக, தன்னலமற்ற சேவையின் மாபெரும் சின்னமாக கம்யூனிஸ்ட் இயக்கம் கேரள மக்களுக்கு முன்னால் கம்பீரமாகக் காட்சி அளித்து.
நில உறவுப் பிரச்சனைகள், வேலை வாய்ப்பு அதிகரிப்பு, தொழிலாளர் பிரச்சனைகள், கல்வி, சுகாதாரம், வளர்ச்சித் திட்டங்கள் என அடிப்படையான கோஷங்களும், திட்டங்களும் முன்வைக்கப்பட்டன.
1954 ஆம் ஆண்டு தேர்தலின் போது திருவாங்கூர் – கொச்சியில் கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஒரு சில இடதுசாரிக்கட்சிகள் இணைந்து நின்றிருந்தன. 1952 இல் மலபார் பகுதியில், டிஸ்ட்ரிக்ட் போர்டு தேர்தலிலும் ஓரளவு இந்த ஒற்றுமை ஏற்பட்டு கம்யூனிஸ்ட் அணி வெற்றி பெறவும் முடிந்தது.
ஆனால், 1957 தேர்தலில் வேறு எந்த கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியுடன் சேர முன்வரவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி இதற்காக பெரு முயற்சியை மேற்கொண்டபோதும் இந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை.
இந்த நிலையில் புதிய மாநிலத்தில் காங்கிரஸ் சுலபமாக வெற்றி பெற்றுவிடும் என்றே பரவலாகக் கருதப்பட்டது.
தோழர்.இ.எம்.எஸ். அப்போதைய நிலைமை குறித்து கீழ்வருமாறு பதிவு செய்துள்ளார். “நமது கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த அஜய்கோஷ் கூட இந்த மாதிரியான (காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்பு உண்டு என) பகிரங்க அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டார். இதை நான் பகிரங்கமாகவே மறுக்க வேண்டி இருந்தது. (ஓர் இந்திய கம்யூனிஸ்டின் நினைவு அலைகள் – பக்கம் 314)
இவ்வாறு நடைபெற்ற தேர்தலில்தான் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் 60 பேரும் கட்சியின் பகிரங்க ஆதரவு பெற்ற சுயேட்சைகளாக போட்டியிட்ட 5 பேருமாக, 126 இல் 65 என்ற பெரும்பான்மையுடன், கம்யூனிஸ்ட் கட்சியின் அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது.
இந்திய அரசியல் சட்டத்தின் வரையறைக்குள், கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய அரசாங்கம் செயல்பட வேண்டிய நிலை குறித்து தோழர் பி.டி. ரணதிவே அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்.
“கேரள அமைச்சரவையானது, இதற்கு முன் பயணம் மேற்கொள்ளப்படாத பாதையில் செல்ல வேண்டியிருந்தது. பூர்ஷ்வா நிலப்பிரபுத்துவ அராசங்கம் மத்திய அரசைக் கட்டுப் படுத்திக் கொண்டும், பொருளாதார அதிகாரம் ஒரு சிலரது கைகளில் குவிந்தும் உள்ள நிலையில், முதலாளித்துவ அமைப்பின் கீழ் ஓர் அரசாங்கத்தை அமைக்க ஒத்துக் கொண்டதானது, முதன்முறையாக நடைபெற்றது என்று கருதுகிறேன். இது எவ்வாறு சாத்தியமாயிற்று? கேரள மக்கள் மற்றும் இதர பகுதிகளிலுள்ள மக்களின் விருப்பத்திற்கேற்ப அது நிறைவேற்றப்பட்டது. மக்கள் முன் இருந்த உடனடிப்பிரச்சனை, சோசலிசத்தை அறிமுகப்படுத்துவது – சமூக மாற்றம் என்பது அல்ல. நிலச்சீர்திருத்தம், நேர்மையான நிர்வாகம், அரசியல் சட்டம் உறுதிசெய்துள்ள உரிமைகளின் அமலாக்கம் உள்ளிட்ட உடனடி சமூகப் – பொருளாதாரச் சீர்திருத்தங்கள் தான் பிரச்சனை என்பதால் அது சாத்தியமாயிற்று”.
தோழர். இ.எம்.எஸ். அவர்களும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் அதையே வேறு விதமாக விளக்கினார்.
“ஒரு தேசியக் கட்சி என்ற முறையில் காங்கிரசும், அதனுடைய மத்திய அரசும் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை அமல் படுத்துவதற்காக நாங்கள் முயற்சித்தோம் என்றும் “சுதந்திரம் பெற்றபின், காங்கிரஸ் நிறைவேற்ற மறுத்த அவர்களது அறிவிப்பு களைத்தான் நாங்கள் நிறைவேற்ற முயல்கிறோம்” என்றும் அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்தார்.
நிலச் சீர்திருத்தச் சட்டம்
இந்த முயற்சிகளில் முதலிடம் கொடுக்கப்பட்டது நில உறவுப் பிரச்சனைகளுக்குத்தான். கேரளமாநிலம் ஏற்கனவே குறிப்பிடப் பட்டது போல், மூன்று பகுதிகளாகவும், மாறுபட்ட சமூகச்சூழல் களைக் கொண்டதுமாக இருந்தது. நிலப்பிரச்சனையின் தன்மையும் மாறுபட்டதாக இருந்தது.
இதுபற்றி தோழர். இ.எம்.எஸ். கூறுகிறார். “ஒரு நோக்கில் பார்த்தால் இது ஒரு சிக்கலான கடமையாகும். மலபார், கொச்சி மற்றும் திருவாங்கூர் ஆகிய மூன்று பகுதிகளில் வெவ்வேறு வகைப்பட்ட குத்தகை முறைகள் இருந்தன. இவையனைத்தும் தற்போது கேரள மாநிலத்தில் இணைக்கப்பட்டுவிட்டன. மற்றொரு கண்ணோட்டத்தில் இது எளிமையாக இருந்தது. எவ்வாறென்றால், விவசாய நிலங்களில் பாடுபடக் கூடிய குத்தகைத் தாரர்களையும் வெளியேற்றுவது என்பது மாநிலத்தின் ஒரு மூiலையிலிருந்து மறு மூலை வரையிலும் பொதுவானதாகவிருந்தது”.
இந்த பொதுத் தன்மையைக் கணக்கிலெடுத்து, அனைத்து நில வெளியேற்றங்களையும் தடைசெய்யும் அவசரச்சட்டம் – ஆட்சிப் பொறுப்பேற்ற ஒரே வாரத்திற்குள் – 1957 ஏப்ரல் 11 – வெளியிடப்பட்டது. முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே நிலச் சீர்திருத்தச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
தோழர். இ.எம்.எஸ். கூறுகிறார் “உழைக்கும் விவசாயிகளின் அனைத்துப் பகுதிகளுக்கும் நிவாரணம் தருவதற்காக ஒரு விற்பனை மசோதாவை தயாரிப்பதற்கான வேலை துவங்கப்பட்டது. திட்டக் கமிஷனின் நிலச்சீர்திருத்தப் பிரிவு செய்த சிபாரிசுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த மசோதாவை நாங்கள் வடிவமைத்தோம்.”
குத்தகையாளர் நலன், குத்தகைக் கால நிர்ணயம், குத்தகைக் கட்டணக் குறைப்பு, குத்தகையாளரான விவசாய உடமையாளர் களுக்கு நட்ட ஈடு கொடுத்து நிலத்தைச் சொந்தமாக்கிக் கொள்ளும் வாய்ப்பு என்பது போன்ற பல அம்சங்களையும், மிக விரிவாக விளக்கும் சரத்துக்களுடன் நில உச்ச வரம்புக்கான வரையறைகளும் நிர்ணயிக்கப்பட்டன. அறிவிக்கப்பட்ட நோக்கங்களை பெறக்கூடிய நிலச் சீர்திருத்த மசோதாவாக அது தயாரிக்கப்பட்டிருந்தது. விவசாய இயக்கத்தலைவர்களின் நடைமுறை அனுபவம் இதை உறுதிப்படுத்தும் சரத்துக்களை உருவாக்க உதவியது.
இருபோக நிலம் என்றால் ஐந்து பேர் வரையிலுமான குடும்பத்திற்கு 15 ஏக்கர் என்றும், ஐந்துக்கு மேற்பட்ட ஒவ்வொரு வருக்கும் மேலும் ஒரு ஏக்கர் என்றும் விவசாய நில உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. எத்தனை உறுப்பினர்கள் குடும்பத்தில் இருந்தாலும் அதிகபட்சம் 25 ஏக்கர் என்று நிர்ணயிக்கப்பட்டது. 15 ஏக்கர் இருபோக நிலம் என்பது, தோட்டம் என்றால் அதுவும் 15 ஏக்கர், ஒரு போக நிலம் என்றால் 22.5 ஏக்கர், வீட்டைச் சுற்றி இருப்பது போன்ற இதர விளை நிலங்கள் என்றால் 30 ஏக்கர் என நிர்ணயிக்கப்பட்டது.
நில உறவுகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் இந்த முயற்சிகள் ஆதிக்க சக்திகளுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியது. இந்த மசோதாவின் விளைவுகள் பற்றி தோழர் இ.எம்.எஸ். கூறுகிறார்.“இது கிராமப்புறம் மற்றும் நகரங்களில் உள்ள சாதாரண மக்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மசோதாவின் உண்மையான சரத்துக்களை விடவும் பெரிதாக இருந்த அம்சம் என்னவென்றால், வரலாற்றில் முதன்முறையாக இருந்த அரசாங்கமானது கிராமப்புற பெருந்தனக்காரர்களின், நிலப்பிரபுக்களின் முதுகெலும்பை முறிக்கத்துவங்கியது என்பது தான். இந்த கூட்டமானது, நிலத்தை குத்தகைக்குவிட்டும், வீடற்றவர்களை, காலி இடங்களில் குடிசைகள் போட அனுமதித்து, வாடகை மற்றும் இதர வசூல்களை நடத்தியும் வந்தது”.
அதாவது, நில உறவுகளில் பெரும் மாற்றம் ஏற்படுத்தும் முயற்சியானது, என்ன விளைவுகளை உருவாக்க வேண்டுமோ, அதை உருவாக்கத்துவங்கியது. ஆதிக்க சக்தியின் கூக்குரல் எழுவதற்கான காரணமும் அதுவே. விரிவான விவாதம் சட்ட மன்றத்தில் மட்டுமல்லாது வெளியிலும், மிகப் பரவலான கருத்துப் பரிமாற்றம் மூலம் மேலும் வலுப்படுத்தப்பட்ட இந்த மசோதா 1959 ஜூன் 10 அன்று சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பிவைக்கப் பட்ட பின், 1959 ஜூலை 31 அன்று அந்த அரசாங்கம் டிஸ்மீஸ் செய்யப்பட்டது. மீண்டும் 1960 இல் தேர்தல் நடைபெற்று புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின், அதாவது 13 மாதங்களுக்குப் பிறகு தனது ஆலோசனைகளோடு அந்த மசோதாவை கேரள சட்ட மன்றத்திற்கு ஜனாதிபதி திருப்பி அனுப்பினார்.
இதுபற்றி தோழர் பிரகாஷ் காரத் பின்வருமாறு கூறுகிறார் “ஜனாதிபதியின் கருத்துக்களோடு மசோதா திருப்பி அனுப்பப்பட்ட பின், காங்கிரஸ் – பிரஜா சோசலிஸ்ட் அமைச்சரவை நில உடமையாளர்களின் நலனுக்கேற்றவாறு பெரிதும் நீர்த்துப் போன வடிவத்தில் மசோதாவை ஏற்றுக் கொண்டது. இந்த திருத்தப்பட்ட சட்டத்தில் சில சரத்துக்களை 1961 இல் உச்ச நீதிமன்றமும், மேலும் சில சரத்துக்களை 1963 இல் கேரள உயர்நீதிமன்றமும் ரத்து செய்தது. துவக்கக்காலத்தில் நிலச்சீர்திருத்தங்களைத் தகர்ப்பதற்கு உயர்மட்ட நீதிமன்றங்கள் எவ்வாறு முயற்சித்தன என்பதை விளக்குகிறது”.
1958 ஆம் ஆண்டில் விவசாய சங்க மாநாட்டில் எழுதிய கட்டுரையில் இ.எம்.எஸ். இவ்வாறு கூறினார். “சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மசோதாவின் குறைபாடுகளைக் களைந்தும், எதிர்ப்புக்களைச் சந்தித்தும் சட்டமாக்குவதற்கான பொறுப்பையும், கடமையையும் விவசாய சங்கம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். நிலப்பிரபுத்துவத்தின் ஆணிவேரை அறுப்பதே இந்த மசோதாவின் அடிப்படை. சிறு விவசாயிகள், நடுத்தர விவசாயிகளின் நலன்கள் பாதிக்கப்படாத நிலையில், முடிந்த அளவு சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.
ஆட்சியாளர்கள் எவ்வளவு முயற்சித்த போதிலும் கேரளாவின் விவசாய இயக்கமும், இதர மக்கள் அமைப்புக்களும் நடத்திய போராட்டம் அங்கு நில உறவு முறைகளை மாற்றி அமைத்தது. 92 சத விவசாயத் தொழிலாளர்கள் குடிமனை பெற்றார்கள். நில வெளியேற்ற முயற்சிகளை ஒன்றுபட்டு முறியடித்து கேரள விவசாயிகளும், விவசாயத் தொழிலாளிகளும் புதிய வரலாறு படைத்தனர். நிலச் சீர்திருத்த நடவடிக்கையின் அனைத்து அம்சங்களையும் அமலாக்குவதற்குத் தடைகள் பல ஏற்பட்ட போதும், நில உறவுகளில் அடிப்படை மாற்றங் களைக்காண முடிந்தது. மாநிலத்தின் முதல் அரசாங்கம் தான் வைத்த நடவடிக்கைக்கு துவக்கமிட்டது.
கல்வி மசோதா
வியாபாரமயமாக்கப்படும் கல்வி என்பது, தற்போது நாட்டு மக்கள் முன் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று! 50 ஆண்டுகளுக்கு முன்னாலேயே, கல்வி நிலைய உரிமையாளர்கள், ஆசிரியர் நலன், மாணவர் நலன் அதன் மூலமான நாட்டு நலன் பற்றி கவலைப்படாமல், கொள்ளை நோக்கத்தோடு செயல்பட்டதை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முதற்கட்ட முயற்சியை இ.எம்.எஸ். அரசாங்கம் மேற்கொண்டது.
நில உறவு மசோதாவோடு, இந்த கல்வி மசோதாவையும் இணைத்துத் தான் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றது.
50 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வி நிலையங்கள், குறிப்பாக கேரளாவின் தென்பகுதிகளில் தனியாரிடமே இருந்தன. புதிய மாநிலம் உருவாக்கப்பட்ட போது, இருந்த 9000 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 7000 பள்ளிகள் தனியாரிடம் இருந்தது. இதிலும் 2300 கிறித்துவ (கத்தோலிக்க) நிர்வாகத்தின் பொறுப்பில் இருந்தது.
அரசாங்கத்திடமிருந்து நிதி ஆதாரங்களைப் பெற்று, மாணவர், ஆசிரியர் நலன்களைப் புறக்கணிக்கும் இந்த நிர்வாகத் தினரின் சுரண்டலுக்கு முடிவுகட்டுவது, ஆசிரியர் நலன்களைப் பாதுகாப்பது, சமூக நீதியை உறுதிப்படுத்துவது போன்ற பொது நோக்கங்களோடு கல்வித்துறைக் கட்டமைப்பை ஒழுங்கு படுத்துவது, 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரசியல் சட்டப்படியான கட்டாயக் கல்வி வழங்குவது, சம வேலைக்கு சம ஊதியம் அமலாக்குவது போன்ற குறிப்பிட்ட அளவிலான மாற்றங்கள் மட்டுமே திட்டமிட்டபடி இருந்தது.
25 ஆண்டுகள் கல்லூரி ஆசிரியராக பணியாற்றி, கல்வித் துறைச் சீர்கேடுகளை எதிர்த்துப் போராடிய பேராசிரியர் ஜோசப் முண்டசேரி தான் கல்வி அமைச்சர். அவருக்குத் தனிச் செயலாளராக பொறுப்பேற்றவரோ ஆசிரியர் இயக்கத்தின் நீண்டகால அனுபவமிக்க பி.டி.பாஸ்கர பணிக்கர். அமைச்சர், 1948 முதல் கொச்சி மற்றும் திருவாங்கூர் – கொச்சி சட்டமன்றங்களில் உறுப்பினராக இருந்தவர். ஆசிரியர் மற்றும் கல்வித்துறை பிரச்சனைகளை நன்கு அறிந்தவர்களிடமே துறையின் பொறுப்பு இருந்தது.
ஆசிரியர்களுக்கு அரசாங்கமே நேரடியாகச் சம்பளம் வழங்குவது, ஆசிரியர்களுக்கான தகுதியை அரசே நிர்ணயம் செய்வது, மாணவர்களிடமிருந்து பெறப்படும் கட்டணம் அரசிடம் ஒப்படைப்பது, பள்ளிகளுக்குக் கட்டிடம், விளையாட்டு வசதி, ஆய்வுக்கூடங்களுக்கு அரசு உதவிவழங்குவது, மாநிலக் கல்வி ஆலோசனைக்குழு அமைப்பது, பணியிலிருக்கும் ஆசிரியர்களுக்குப் பணிப்பாதுகாப்பு, பொதுத்தேர்வாணையம் மூலம் நியமனம், அரசுப்பணியிலுள்ள ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் உள்ள சலுகைகள் அனைத்தும் உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கும் உறுதிப்படுத்துவது என்பதெல்லாம் தான் பெரும் கிளர்ச்சிகளுக்குக் காரணமாயிற்று என்பது, இன்றைய நிலையில் நம்புவதே சிரமமாக இருக்கும்.
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்களை உள்ளடக்கிய பொறுப்புக்குழு அமைக்கப்பட்டு, அவர்களது ஆலோசனை களையும் கணக்கிலெடுத்து தான் மசோதா நிறைவேற்றும் முயற்சியில் அரசு ஈடுபட்டது. மத்திய காங்கிரஸ் அமைச்சர்களைச் சந்தித்து, இந்த மசோதாவின் தன்மை அவர்களிடமும் விளக்கப்பட்டது.
சட்டமன்றத்தில் இந்த மசோதாவை எதிர்ப்பதில் சிரமம் ஏற்பட்டாலும், வெளியில் கலவரங்களைத் தூண்டுவதில் முழுமையாக ஈடுபட்டனர். எந்த ஆசிரியர்களின் நலன்களைப் பாதுகாக்க மசோதா கொண்டுவரப்பட்டதோ, அவர்களில் ஒரு பகுதியினரையும் அதற்கெதிராகப் போராட வைப்பதில் மதத்தலைவர்கள் வெற்றி பெற்றனர்.
கேரளாவில் காங்கிரஸ் தலைவர்கள் சாதி – மத அமைப்புக ளோடு இணைந்து கல்வி மசோதாவை எதிர்த்துப் போராடுகையில், மத்திய கல்வி அமைச்சர் கே.எல்.ஸ்ரீமாலி இந்த மசோதாவைப் பாராட்டிப் பேசியது நாடாளுமன்றக் குறிப்புக்களில் பதிவாகியது.
தோழர் இ.எம்.எஸ். தனியார் நிர்வாகங்களுக்குள்ள தங்குதடையற்ற அதிகாரத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது. லட்சக்கணக்கான ஆசிரியர்களாலும், பொதுமக்களாலும் வரவேற்கப்பட்ட இந்த மசோதாவானது, கிறித்துவ சர்ச்சுகளாலும், நாயர் சர்வீஸ் சொசைட்டியாலும் இதர பல அமைப்புக்களாலும் எதிர்க்கப்பட்டது.
சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடரிலேயே, 1957 செப்டம்பர் 10 அன்று, இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவின் சில சரத்துக்களும், நீதி மன்றத்தால் ரத்து செய்யப்பட்டன.
சாதி – மத அமைப்புகளுக்கு, கல்வித்துறை மீதுள்ள பிடிப்புக்கள், கேரளாவில் தற்போதும் பலமானது தான். கல்வியை வியாரபாரமாக்கும் முயற்சிகளை எதிர்ப்பதையோ, கட்டுப்படுத்து வதையோ அவர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். தொழிற்கல்வி நிலையங்களைக் கட்டுப்படுத்த தற்போதைய கேரள அரசு மேற்கொண்ட முயற்சிகளும், புதிய சட்டமும் இன்னமும் கடுமையான எதிர்ப்பையும் நீதிமன்றத் தலையீடுகளையும் சந்தித்துக் கொண்டிருக்கிறது.
இருப்பினும், கல்வித்துறையை ஜனநாயகப்படுத்துவதில் கேரள மக்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதற்கான அடித்தளம் அமைத்தது அந்த 28 மாத அரசாங்கம்தான்.
தொழிலாளர் நலன், காவல் துறை சீர்திருத்தம், சுகாதாரத் திட்ட விரிவாக்கம், அதிகாரப்பரவல், நிர்வாகச் சீர்திருத்தம் என பலதுறைகளிலும் 28 மாதங்களில் சிறப்புமிக்க நடவடிக்கைகள் துவக்கப்பட்டன.
மொத்தத்தில் கேரளாவின் முதல் அரசாங்கமானது, பிற்காலத்தில் பொறுப்பேற்ற எந்த அரசும் புறக்கணிக்க முடியாத பல நடவடிக்கைகளைத் துவக்கியது. கேரளாவின் அரசாங்கத்திற்கு மட்டுமல்லாது, பிற்காலத்தில் உருவான மேற்கு வங்கம், திரிபுரா அரசாங்கங்களுக்கும், இதர பல மாநில அரசாங்கங் களுக்கும் வழிகாட்டும் நடவடிக்கைகள் அந்த முதல் அரசாங்கத்தால் துவக்கப்பட்டது.
ஜனநாயகப் படுகொலை
இன்னும் விவாதப்பொருளாக இருக்கிற அரசியல் சட்ட சரத்து 356 யைப் பயன்படுத்தி அந்த அரசு கலைக்கப்பட்டது. 1960 இல் நடைபெற்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக மாநிலத்திலிருந்த அனைத்துக் கட்சிகளும், இந்து மேல்ஜாதி அமைப்புகள், கிறித்துவ, முஸ்லீம் அமைப்புகள் அனைத்தும் ஓரணியில் திரண்டன. 28 மாதங்களில் மேற்கொண்ட மக்கள் நல நடவடிக்கைகளின் விளைவுகள் தான் என்ன? 1960 ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள் அதைத் தெளிவாக எடுத்துக்காட்டியது.
1957 இல் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 20,59,547 வாக்குகள் – 35.28 சதம் வாக்குகள் கிடைத்தது. அந்த தேர்தலில் காங்கிரசுக்கு தான் கூடுதல் வாக்குகள் – 22,09,251. அதாவது 37.85 சதம். 1960 இல் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 31,71,732 வாக்குகள் கிடைத்தது. 11,12,185 வாக்குகள் கூடுதல்! 1957 இல் கிடைத்த வாக்குகளில் சரிபாதிக்கும் அதிகமான வாக்குகள் கூடுதலாகப் பெற்று, 28 மாத கால செயல்பாடுகளுக்கான அங்கீகரத்தை உறுதிப்படுத்தியது.
மத்திய ஆளும் கட்சி, உலகளாவிய கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்கள், மேல்சாதி அமைப்புகள், மதவாத அமைப்புகள், பத்திரிக்கைகள் கிட்டத்தட்ட அனைத்தும் என ஒட்டு மொத்தமான பிரச்சாரத்தை முறியடித்தே கம்யூனிஸ்ட் கட்சி இந்த வாக்குகளைப் பெற்றது. ஆட்சிப்பொறுப்பை இழந்த போதிலும், உருவாக்கப்பட்ட மக்கள் ஆதரவு, பிற்கால வளர்ச்சியின் அஸ்திவாரமாக அமைந்தது.
தத்துவார்த்தப் பிரச்சனைகள்
1957 இன் கேரள வெற்றி, கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தபோதிலும், தத்துவார்த்த ரீதியாக, பல தவறான போக்குகளை வலுப்படுத்த அந்த வெற்றி பயன் படுத்தப்பட்டது.
“அமைதியான, நாடாளுமன்றப் பாதை” சாத்தியம் என்பதற்கான அத்தாட்சியாக கேரள அனுபவத்தை கட்சிக்குள்ளும், வெளியேயும் பலர் எடுத்துரைக்கத்துவங்கினார்கள். இன்று கேரளா, நாளை இதர மாநிலங்கள், இறுதியில் மத்திய அரசு” என மிக எளிதான முறையில் இதை சித்தரிக்கத்துவங்கினார்கள்.
கேரள அரசாங்கம் கலைக்கப்படுவதற்கு முன்னால் அமிர்தசரசில் நடைபெற்ற கட்சியின் ஐந்தாவது மாநாட்டு ஆவணங்களிலும், இதன் சாயல் பிரதிபலித்தது.
தோழர் பிரகாஷ் காரத் கூறுகிறார், “1959 ஜூலை 31 அன்று, இ.எம்.எஸ். அமைச்சரவை வெளியேற்றப்பட்டதும், ஜானதிபதி ஆட்சி அமலாக்கப்பட்டதுமான நிகழ்வுகள் சில பிரமைகளை அம்பலப்படுத்த உதவியது. தேசவிடுலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கியதும், ஜனநாயகத்திற்கான பாதை அமைத்ததும், நாங்கள் தான் என மார்தட்டிய காங்கிரஸ் கட்சியானது ஆளும் வர்க்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைளுக்கான கருவிதான் என்பது வெளிப்பட்டது. காங்கிரசின் வர்க்கத்தன்மை, பட்டவர்த் தனமாக தெரியவந்தது. 1957 ஆம் ஆண்டின் கேரள வெற்றியானது, நாடாளுமன்றப்பாதையில் எளிதாக அமைதியான முறையில் சோசலிசத்திற்கு செல்ல வழிவகுக்கும் என்ற கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த சிலரது நம்பிக்கையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சோசலிசம் என்பது இருக்கட்டும், ஜனநாயக மாற்றம் கூட, பாராளுமன்ற வெற்றிகளால் உறுதிப்படுத்த முடியாது.
அவ்வாறான மாற்றங்கள் சிக்கலானதும், சிரமங்கள் நிறைந்ததுமாக இருக்குமென்றும், சமூக மாற்றத்திற்கு முன்னதாக வர்க்கப் போராட்டம் தீவிரமடையும் என்பதும், தெளிவுபடுத்தப்பட்டது.
அரசியல் வரலாற்றில் முக்கிய நிகழ்வாகவும், திருப்பு முனையாகவும் அமைந்த 1957 ஆம் ஆண்டின் கேரள மாநில அரசாங்கம் ஏராளமான படிப்பினைகளைத் தந்தது. 50 ஆண்டுகளுக்கு பிறகும் அந்த படிப்பினைகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகவே உள்ளன.
Leave a Reply