தமிழில் எஸ். ரமணி
போல்ஷ்விக் புரட்சி நாயகனின் 89 வது நினைவு நாளை அனுசரிக்கும் இவ்வேளையில், அவரது கோட்பாட்டுச் சிந்தனை ஏகபோக முதலாளித்துவ சகாப்தத்தில் மார்க்சியத்தை கட்டமைப்பதாக இருந்தது என்பதையும் நினைவு கூர்வோம். இது எள்முனையளவு கூட சந்தேகத்திற்கு இடமில்லாத உண்மையாகும். ஆனால், லெனினியம் என்பது அதனைவிட கூடுதல் பொருள் பொதிந்தது. மார்க்சிய நடைமுறை கோட்பாட்டை லெனினியம் வெளிப்படையாக்கியது. இந்த நோக்கில் அது மார்க்சியத்தின் வளர்ச்சியை சுட்டுவதாகும். நடைமுறை என்பது ஸ்தூலமென்பதால் – செயல்முறை கோட்பாடும் ஸ்தூலமான நிலைமைகளோடு பொருந்துவதாகும். லெனினிய அடிப்படையில் இவைகள் ஏகபோக முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட சூழ்நிலையாகும். அதனால் அவருடைய நடைமுறை கோட்பாடும் ஏகபோக முதலாளித்து வத்துடன் சம்பந்தமுடையதாக இருந்தது. முதலாளித்துவத்தின் நவீன கட்டத்தை ஆய்வுக்குட்படுத்தி மார்க்சிய கோட்பாட்டின் சாரத்திற்கும், ஸ்தூலமான நடைமுறைக்கும் உள்ள இடைவெளியை சமன் செய்து அதனை இன்றைய காலத்திற்கேற்ப வளர்த்தெடுத்த பெருமை அவரையே சாரும்.
“கோட்பாடு பீரிட்டு நடைமுறைக்கு இட்டுச் செல்லும்” என்ற மிகச் சிறந்த மார்க்சிய சிந்தனையாளர் ஜார்ஜ் லூகாஸ் கூற்றுக்கேற்ப ஏகபோக முதலாளித்துவ கட்டத்தில் மார்க்சிய கோட்பாட்டை அவர் வளர்த்தெடுத்தார்.
புரட்சியின் எதார்த்த நிலை
அனைவரும் நன்கறிந்த லெனினுடைய கோட்பாட்டின் சில குறிப்பிட்ட அம்சங்களை நான் இங்கே விவாதிக்கப் போவதில்லை. அதற்கு மாறாக நடைமுறைக் கோட்பாட்டை லெனின் எவ்வாறு வளர்த்தெடுத்தார் என்ற வினாவைத் தொடுக்க விரும்புகிறேன். வேறு வார்த்தைகளில் கூறப்போனால், மனித ஞானம் குறித்த மாற்றுக் கண்ணோட்டத்தில் எது அவருக்கு மார்க்சிய கோட்பாட்டின் அடிப்படையில் கோட்பாட்டிற்கும் நடைமுறைக்கும் உள்ள நீண்ட இடைவெளியை சரி செய்ய முடிந்தது என்பதாகும்? “லெனின் : அவர் சிந்தனையின் தொகுப்பு ஒரு பரிசீலனை” என்ற நூலில் ஜார்ஜ் லூகாஸ் மீண்டும் இதற்கு ஒரு ஏற்கத்தக்க பதிலளித்துள்ளார். அதாவது லெனினுடைய சிந்தனையில் எப்போதும் புரட்சியின் எதார்த்தம் நிறைந்திருந்தது. அவரைப் பொறுத்தவரையில் புரட்சி என்பது நாம் நினைப்பது போல் ஏதோ ஒன்றல்ல; என்றோ ஒரு நாள், எதிர்பாராமல், நாமறியாமல் நடைபெறுவதும் அல்ல. அவர் ஒரு புறம் புரட்சிக்கான பாதையை வகுப்பதும் மறுபுறம் புரட்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவும் செய்தார்.
இந்த பாதையில் செல்வதன் மூலம் இலக்கை எட்ட எத்தனை காலம் பிடிக்கும் என்ற கேள்வி அவரைப் பொறுத்த வரையில் தவறான கேள்வியாகும். புரட்சி நடைபெற எத்தனை காலம் பிடிக்கும் என்பதல்ல முக்கியம். ஆனால், புரட்சிக்கான வழிதான் முக்கியம். நிலைமைகள் மாறும் போது பாதையும் மாறும். ஆனால், லெனினிய அணுகுமுறை குறித்த அடிப்படை அம்சம் என்னவெனில் புரட்சி நிகழும் என்பது முற்றிலும் உண்மை; தற்பொழுதிலிருந்து அதனை அடைய பாதையும் இருக்கிறது என்ற கருத்தின் அடிப்படையில் நிகழ்காலம் சரியாக கணிக்கப்பட்டு பாதை வகுப்பது ஆகும். நிலைமைகளில் மாற்றம் ஏற்படும் போது பாதையும் மாறக்கூடும். ஆனால் லெனினிய வழிமுறையின் அடிப்படைக் கருத்தின்படி, நிகழ்காலம் என்பது எப்போதும் நிகழ்காலத்திற்கும் புரட்சிக்கும் வகுக்கப்படும் பாதையின் பின்னணியில் புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்று.
அடிப்படை நோக்கில் புரட்சி என்கிற உண்மையை நோக்கி நிகழ்காலத்திலிருந்து அதற்கான பாதை வகுக்கப்படுகிறது. நிகழ்காலத்தை புரிந்து கொள்ளும் ஒரு வழிமுறையாக, ஒவ்வொரு கணமும் மாறிக் கொண்டிருக்கும் நிகழ்காலத்தை உருவாக்குகிறது என்பதை புரட்சியின் நோக்கில் லெனின் புரிந்து கொண்டு “புரட்சி என்ற எதார்த்தத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.” நிகழ்காலத்தை புரிந்து கொள்ளும் ஒரே வழியாக இதனை அவர் பார்த்தார். பனிக் கூட்டங்களுக்கு மத்தியில் கண்ணுக்குப் புலப்படாமல் ஒளிந்திருக்கும் பிம்பங்கள் போல் இன்றைய நாமிருக்கும் நிலையில் புரட்சி நமக்கு முன்பு உள்ளது, அதனை சென்றடைய எத்தனை காலம் பிடிக்கும் என்பது நாம் அறியாதது.
லெனின் எங்கே வேறுபடுகிறார்?
இடது மற்றும் வலது பிரிவுவாதத்திற்கு ஊற்றுக்கண்ணாக இருக்கும் தன்னிச்சை செயல்பாட்டிற்கு கீழ்வரும் கருத்து சாதகமாக உள்ளது. சந்தர்ப்ப சூழ்நிலை கனிந்து வரும் போது ஏதோ ஓர் நாள் எவ்வழியிலாவது புரட்சி நடந்தே தீரும் என்பதால் தேவையில்லாமல் அன்றாட கட்சி ஸ்தாபனம் மற்றும் வெகுஜன அரங்கப் பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ளாமல், புரட்சிக்கான பிரச்சாரத்தை மட்டுமே கொண்டு செல்வது என்ற கருத்தோட்டத்தின் அடிப்படையில் இடது திரிபுவாதம் உருவாகிறது. சந்தர்ப்ப சூழ்நிலை கனிந்து வரும் பொழுது புரட்சி நிச்சயம் நிகழும் என்பதால் நாம் தற்பொழுதும் எதிர்காலத்திலும் செய்ய வேண்டியது என்னவென்றால், அன்றாட கட்சி ஸ்தாபன மற்றும் வெகுஜன அரங்க பணிகளை மட்டும் செய்து கொண்டும், மற்றவற்றை வரலாற்று நிகழ்விற்கு விட்டுவிட வேண்டும் என்பதிலிருந்து வலது திரிபுவாதம் உருவாகிறது.
இந்த இரண்டு திரிபுவாதங்களிலிருந்து மாறுபட்டு “புரட்சி எதார்த்தம்” என்ற லெனின் கண்ணோட்டம் சரியான புரட்சிக்கான நடைமுறையையும், கோட்பாட்டையும் உருவாக்க அடித்தளமிட்டது. இவ்வாறு நாம் சொல்வதினால், நாம் எதிர்பார்த்ததிலிருந்து மாறுபட்டு புரட்சி நிகழாது என்றோ அல்லது அது திடீரென நிகழும் வாய்ப்பில்லை என்றோ கருத முடியாது. வெறுமனே இந்த உண்மைகளை அங்கீகரிப்பதை புரட்சிகர அறிவியல் கோட்பாட்டின் துவக்கமாக கருத முடியாது. அது புரட்சி எதார்த்தம் என்ற நோக்கில் அதன் தேவையை அங்கீகரித்து நிகழ்காலத்திற்கும் புரட்சிக்கும் இடையில் நிலைமைகள் மாறிக் கொண்டு இருக்கிறது என்ற புரிதலுடன் அதற்கேற்ப பாதை வகுப்பதாகும்.
இந்த அணுகுமுறை முதலாளித்துவம் உச்சியை எட்டியபின் அதனைத் தொடர்ந்து சோசலிசம் உருவாகும் என்ற ‘அடுக்கு கோட்பாட்டிற்கு’ மாறானதாகும். மார்க்சியம் நிகழ்த்தியதானது வரலாற்று நிகழ்வுகள் அனைத்தையும் குறித்து அறிவியல் பூர்வமான புரிதலை உருவாக்கியது, முதலாளித்துவம் முன்னுக்கு வந்தபோது அதோடு கூட தோன்றிய பாட்டாளி வர்க்கம், இவை இரண்டும் இணைந்து ஒரு வலிமையான சக்தியாக, அறிவியல் பூர்வமாக புரட்சிகர உத்வேகத்தை உள்ளடக்கி உருவானது. விஞ்ஞானம் பாட்டாளி வர்க்கத்தை அடைந்த நிலையில் “அடுக்கு கோட்பாடு” அர்த்தமற்றதாக ஆனது. அது எதற்கு பின்னால் எது வந்தது என்ற மேதைகளின் ஆய்வாக இல்லை. மாறாக, இந்த புரட்சிகர சக்திகளின் நோக்கில் செய்யப்படும் ஆய்வாக “புரட்சி எதார்த்தம்” என்ற கண்ணோட்டத்தில், இருக்கும் நிலையிலிருந்து புரட்சியை அடைய வகுக்கும் பாதை குறித்ததாக இருந்தது.. (அது கூட ஒரு நிகழ்வு அல்ல; இறுதி இலக்கை எட்ட நடைபெறும் தொடர்ச்சியான செயலாகும்)
ஜனநாயகப் புரட்சியும், மார்க்சிய நடைமுறையும்
மிகவும் பின்தங்கிய சமூகத்தில் இன்னமும் பூர்ஷ்வா புரட்சி முழுமையடையாத சூழலில் புரட்சிகர சக்திகள், சோசலிச புரட்சிக்கான போராட்ட களத்தில் நுழைவதற்கு முன் பூர்ஷ்வா புரட்சி நிகழ்வதற்காக காத்திருப்பதில்லை. அதற்கு மாறாக புரட்சிகர சக்திகள் பூர்ஷ்வா புரட்சியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொணர்ந்து, தனது மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துகிறது. அதைச் செய்து முடித்த பிறகு தனக்கு முன்பிருந்த வர்க்கங்களோடு சமரசத்தையும், தயக்கங்களையும், முழுமையடையாத மாற்றங் களையும் உள்ளடக்கிய முதலாளித்துவ சக்திகளால் நிகழ்த்தப்பட்ட புரட்சியைப் போலன்றி முதலாளித்துவ சக்திகளால் பெயர் சூட்டப்பட்ட ‘பூர்ஷ்வா புரட்சியை’ அது தொடர்ச்சியாக விடாப்பிடியாக நிறைவேற்றுகிறது. கெரன்ஸ்கி அரசின் நிகழ்ச்சி நிரலில் இருந்த “பூர்ஷ்வா புரட்சி” போன்றதல்ல போல்ஷ்விக் நிகழ்ச்சி நிரலில் இருந்த “பூர்ஷ்வா புரட்சி”. முதலாளித்துவ சக்திகளால் திறமையாக விரும்பி நிகழ்த்தப்படும் ‘பூர்ஷ்வா புரட்சியை’ விட பன்மடங்கு திறமையாக, முழுமையாக புரட்சிகர பாட்டாளி வர்க்கம் பூர்ஷ்வா புரட்சியை நிகழ்த்தும். லெனின் கூற்றுப்படி, பூர்ஷ்வா புரட்சி முதலாளிகளைக் காட்டிலும் பாட்டாளிகளுக்கே சாதகமானதாகும்.
பாட்டாளி வர்க்கம் மீண்டும் சோசலிச புரட்சியை நிகழ்த்துவதற்கு முன்பாக, பூர்ஷ்வா புரட்சிக்கு பொறுப்பு ஏற்று, தலைமைப் பாத்திரம் வகித்த பின்னணியில் ‘பூர்ஷ்வா புரட்சியின் முழுமையையும் வெளிக்கொணர தொடர்ச்சியான, முழுமையான பூர்ஷ்வா புரட்சியை நிகழ்த்தாமல் அகலாது. அதன் மூலம் அது பூர்ஷ்வா புரட்சியிலிருந்து சோசலிச புரட்சியை நோக்கி செல்லும். சரித்திர நிகழ்வுகளில் இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது என லெனின் தன்னுடைய “ஜனநாயகப் புரட்சியில் சோசலிசப் புரட்சிக்கான இரண்டு அணுகுமுறைகள்” என்ற நூலில் தெளிவாக கூறியுள்ளார். அதாவது, பாட்டாளி வர்க்கம், விவசாய மக்களோடு அணி சேர்ந்து தனது முழு பலத்தையும் பிரயோகித்து உறுதியற்ற முதலாளித்துவத்தை நிலை குலையச் செய்து, சர்வாதிகாரத்தை நிர்மூலமாக்கி ஜனநாயகப் புரட்சியை முழுமையடையச் செய்யும். பாட்டாளி வர்க்கம் ஜனநாயகப் புரட்சியை செய்து முடிக்க, பூர்ஷ்வாக்களின் எதிர்ப்பை தனது பலத்தை கொண்டு முறியடிக்கவும், ஊசலாட்டத்துடன் இருக்கும் விவசாயக் குடிமக்கள் மற்றும் குட்டிபூர்ஷ்வாக்கள் நழுவிடாமல் இருக்கவும் அரைப் பாட்டாளி வர்க்கத்துடன் அணி சேர வேண்டும்.
அடுக்கு கோட்பாட்டிற்கு இரையாதல்
பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவ வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டாலும், அது பூர்ஷ்வாக்கள் முதலாளித்துவ வளர்ச்சிக்கு அடித்தளம் இடுவதிலிருந்து கண்டிப்பாக முற்றிலும் மாறுபட்ட தாகும். வரலாற்றில் தனது இடத்திலிருந்து பாட்டாளி வர்க்கக் கட்சி முதலாளித்துவத்தை கட்டுவதற்கும், பூர்ஷ்வா கட்சிகள் முதலாளித்துவத்தை கட்டுவதற்கும் வேறுபாடு உள்ளது. இவ்விரண்டும் ஒரே மாதிரியானது அல்ல. வரலாற்றின் நிகழ்ச்சி நிரலில் முதலாளித்துவம்தான் அடுத்தகட்டம் எனும் கருத்தோட்டத்தில் பாட்டாளி வர்க்க கட்சி பூர்ஷ்வா கட்சிகளைப் போல் முதலாளித்துவத்தை கட்ட முயன்றால் அது புரட்சியின் எதார்த்ததை பார்க்கத் தவறும் போக்காகும். அடுக்கு கோட்பாட்டிற்கு இரையாகும் செயலாகும். இச்செயல் மனித அறிவாற்றல் குறித்த லெனினிய மாற்று அணுகுமுறைக்கு மாறாக செயல்படுவதாகும். அடுக்கு கோட்பாடு அடிப்படையில் லெனினியத்திற்கு எதிரானதாகும். அது திடீர் நிகழ்வுடன் தொடர்புடையது. அதாவது காலம் கனிந்தால் தானாகவே அவைகள் நிகழும் என்ற உள்ளீடான நம்பிக்கை சார்ந்ததாகும்.
சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு பல்வேறு காரணங்கள் இருப்பினும், குறிப்பிடத்தக்கது. வீழ்ச்சிக்கு காரணம் முந்தைய கோட்பாடேயாகும். அதாவது, திடீர் நிகழ்வு குறித்த நம்பிக்கை, புரட்சியின் எதார்த்தத்தை கை கழுவி விட்ட போக்கு ஆகும். மிக்கயில் கோர்பசேவ் அரசியல் பொருளாதார சீர்திருத்தங்களை முன்வைத்தபோது அவர் பெருமையுடன் குறிப்பிட்டவற்றில், சீர்திருத்தங்களின் பின்னால் ஏற்படும் விளைவுகள், பாதிப்புகள் குறித்து சிந்திக்கவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெளிப்பாடு, சொல்லப்போனால் வரலாற்றை புரட்சிகர சக்திகள் தீர்மானிக்கும் என்பதற்கு மாறாக வரலாறே திடீரென தானாகத் தீர்மானிக்கும் என்ற சிந்தனையின் அடிப்படையிலானதாகும். இது லெனினிய அணுகுமுறைக்கு எதிரானது. லெனினிய அணுகுமுறை என்பது புரட்சியின் எதார்த்தம் குறித்ததாகும். அதாவது, வரலாறு புரட்சிகர நடவடிக்கைகளின் தலையீட்டால் உருவாகிறது என்பதாகும். திடீர் நிகழ்விற்கு எதிரான லெனினிய அணுகுமுறையை கடைபிடித்ததால் போல்ஷ்விக் புரட்சி உருவானது. ஆனால், லெனினியத்திற்கு எதிரான திடீர் நிகழ்வு அணுகுமுறையை கடைப்பிடித்ததால் சோவியத் யூனியன் தகர்ந்தது. இது ஒரு பாடமாகும்.
தவறான நிலைபாடு
தற்கால நிகழ்வுகள் அனைத்தும் லெனின் தனது வாழ்நாள் முழுவதும் கடைபிடித்ததிலிருந்து வெகு தூரம் விலகிச் சென்றதை சுட்டுவதாகும் என்ற வகையில் இது தேவையற்ற விவாதமாக கருதப்படுகிறது. புரட்சிக்கான வாய்ப்புகளற்ற சூழலில், உலகம் முழுவதும் சோசலிசத்திற்கு பின்னடைவு ஏற்பட்ட பின்னணியில், தென் அமெரிக்காவில் சற்று வெளிச்சக் கீற்றுகள் தென்படினும் எதிர்ப்புரட்சி அலைகள் ஒரு சக்தியாக தொடரும் இச்சூழ்நிலையில், சர்வதேச நிதி மூலதனம் முழு வீச்சில் உலகம் முழுவதும் தனது மேலாதிக்கத்தை செலுத்தும் இன்றைய காலகட்டத்தில், புரட்சியின் எதார்த்தம் குறித்து ஏன் விவாதிக்க வேண்டும்? நிச்சயமாக நாம் ஒரு வித்தியாசமான கால கட்டத்தில் வாழ்ந்து வருகிறோம். அதற்கேற்ப நம்மை அனுசரித்து செல்ல வேண்டும் என்ற இந்த நிலைபாடு அனுபவமே அறிவு எனும் கோட்பாடாகும். இது தவறானதாகும்.
புரட்சியின் எதார்த்தம் என்ற நிலைபாடு தவிர்க்க இயலாதது என்ற கோட்பாட்டோடு எவ்விதத்திலும் சம்பந்தமுடையது அல்ல. அடிப்படையில் மனித ஞானம் குறித்த மார்க்சிய புரிதலான ஒவ்வொரு மணித்துளியையும், தற்போதைய ஒவ்வொரு நிகழ்வையும் புரட்சிகர கண்ணோட்டத்தில் பார்த்து அதற்கேற்ப தற்போது தொடங்கி, புரட்சியின் இலக்கை எட்டுவதற்கு பாதை வகுப்பதாகும். சுருக்கமாக, கூறப்போனால் அது ஒரு புரட்சிகர நடவடிக்கை; தற்போதிருந்தே தொடங்குவதாகும். திடீர் நிகழ்வு மற்றும் அடுக்கு கோட்பாட்டிலிருந்து விடுபடுவதாகும். இது லெனின் வழிகாட்டிய மார்க்சிய புரிதலின் எதார்த்தத்தை அறியும் ஒரே வழியும், மார்க்சியத்தை கடைப்பிடிக்கும் ஒரே அடிப்படை வழியும் ஆகும். இது லெனின் காலத்தில் எவ்வாறு உண்மையாக இருந்ததோ அதே போல் இன்றைக்கும் அதுவே உண்மையாக இருக்கிறது. சமீப கால நிகழ்வுகள் இதனை எவ்விதத்திலும் அசைத்திடவில்லை. லெனின் சந்தித்தவைகள் நாம் சந்திப்பதைவிட மாறுபட்டு இருப்பினும் லெனினியத்தின் மையக்கரு ஒரு துரும்பு அளவு கூட அடிப்படையில் மாறவில்லை.
Leave a Reply