மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


கார்ல் மார்க்சின் ‘கூலி உழைப்பும் மூலதனமும்’


மார்க்சிய செந்நூல்கள் அறிமுகம்:

முதலாளித்துவப் பொருளாதார அமைப்பில் வாழ்ந்து வரும்
நாம் அன்றாடம் காண்பது என்ன? பிரமிக்கத்தக்க அறிவியல்
தொழில் நுட்ப முன்னேற்றங்கள் தொடர்ந்து ஏற்பட்டாலும், இவற்றின் விளைவாக உற்பத்தித் திறன் பலநூறு மடங்கு உயர்ந்தாலும், சமூகத்தின் பெரும் பகுதி மக்கள் கூலிக்கும், சம்பளத்திற்கும் உழைப்பவர்களாகவே உள்ளனர். ஆலைகளும் அனைத்து நவீன உற்பத்திக் கருவிகளும ஒரு சில பெரு முதலாளிகளின் ஏகபோகமாகவும், மனிதர்களின் உழைப்பால் உருவாகும உபரி உற்பத்தியின் பலன் ஒரு சிறு ஏகபோக முதலாளிக் கூட்டத்திற்கும் அதன் பரிவாரங்களுக்கு மட்டுமே போய் சேருவதும் முதலாளித்துவ அமைப்பின் நிரந்தர இலக்கணங்களாக உள்ளன. இது எப்படி சாத்தியமாகிறது? முதலாளித்துவப் பொருளாதாரத்தில் லாபம் எவ்வாறு முதலாளிக்குப் போய்ச்சேருகிறது? எங்கிருந்து லாபம் வருகிறது? தொழிலாளியின் கூலி எவ்வாறு நிர்ணயிக்கப் படுகிறது? முதலாளிகள் வேலை கொடுத்தால்தான் தொழிலாளிக்குப் கூலி கிடைத்து அவன் வாழ முடியும். தொழிலாளி உழைத்தால் தான் உற்பத்தி நிகழ்ந்து முதலாளிக்கு லாபம் கிடைக்கும். எனவே, முதலாளியின் நலனும், தொழிலாளியின் நலனும் ஒன்றே என்ற வாதம் சரியானதா?
இத்தகைய கேள்விகளுக்கு அறிவியல்பூர்வமான விடைகளை 1849 இல் ஐரோப்பிய தொழிலாளர்களுக்கு எளிய முறையில் மாமேதை மார்க்ஸ் அளித்தார். 1849இல் மார்க்சும், ஏங்கல்சும் இணைந்து ஜெர்மனியில் நடத்தி வந்த ‘புதிய ரைன் பகுதி பத்திரிக்கை’ (சூநுருறு சுழநுஐசூஐளுஊழநு ஷ்நுஐகூருசூழு) என்ற இதழில் ‘கூலி உழைப்பும், மூலதனமும்’ என்ற தலைப்பில் ஐந்து கட்டுரைகளை மார்க்ஸ் எழுதினார். முதல் கட்டுரை 1849 ஏப்ரல் 5 இல் வெளி வந்ததது. அடுத்தடுத்து ஏப்ரல் 6, 7, 8 மற்றும் 11 தேதிகளில் இக்கட்டுரைத் தொடர் இடம் பெற்றது. பின்னர் ‘கூலி உழைப்பும் மூலதனமும்’ என்ற தலைப்பில் சிறு நூலாக வெளியிடப்பட்டது.
இதற்குப் பின்னர் 1850 களில் தனது அரசியல் – பொருளாதார ஆய்வுகளை மார்க்ஸ் தொடர்ந்தார். பல நூல்களை எழுதினார். முத்தாய்ப்பாக ‘மூலதனம்’ என்ற மகத்தான படைப்பை 1860 களில் எழுதி முடித்தார். அரசியல் பொருளாதாரம் பற்றிய மார்க்சின் முழுமையான நிலைபாட்டை ‘மூலதனம்’ என்ற நூலிலும், ‘உபரி மதிப்பு பற்றி தத்துவங்கள்’ என்ற நூலிலும் காணலாம். ‘கூலி உழைப்பும் மூலதனமும்’ என்ற சிறு நூலில் மார்க்ஸ் முன்வைத்த அரசியல் பொருளாதார கருத்துக்கள் மேற்கூறிய நூல்களில் மேலும் செழுமைப்படுத்தப்பட்டன. இதை நினைவில் கொள்வது அவசியம். 1891 இல் ‘கூலி உழைப்பும் மூலதனமும்’ ஏங்கெல்ஸ் அவர்களால் வெளியிடப்பட்ட பொழுது அவர் இவ்வாறு செழுமைப்படுத்தியே வெளியிட்டார். 1849 வெளியீட்டிற்கும் 1891 வெளியீட்டிற்கும் இடையேயான மிக முக்கிய வேறுபாடு ‘உழைப்பு’ என்பதற்குப் பதிலாக தொழிலாளி முதலாளிக்கு விற்கும் சரக்கு ‘உழைப்பு சக்தி’ என்று மிகச் சரியாக 1891 பதிப்பு கூறுகிறது. இக்கட்டுரையில் 1891 பதிப்பு பின்பற்றப்பட்டுள்ளது. அதே சமயம், ‘கூலி உழைப்பும் மூலதனமும்’ என்ற சிறு நூல், லாபத்தின் ரகசியத்தையும், கூலி நிர்ணயத்தின் அடிப்படைகளையும் எளிமையாக விளக்குகிறது என்பதும் உண்மையே. இச் சிறு நூலை அறிமுகம் செய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
இந்நூலின் துவக்கத்தில் மார்க்ஸ் மூன்று விசயங்களை முன் வைக்கிறார்.
1.     கூலி உழைப்பு – மூலதன உறவு, அதாவது ‘கூலி அடிமை’ என்ற தொழிலாளர் நிலை.
2.     முதலாளித்துவ அமைப்பின் வளர்ச்சியில் விவசாயிகளும், சிறு நடுத்தர முதலாளிகளும் சந்திக்க உள்ள தவிர்க்க முடியாத அழிவு.
3.     பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் முதலாளி வர்க்கங்களை அன்றைய உலகச் சந்தையின் சர்வாதிகாரியான இங்கிலாந்து வணிக ரீதியாக சுரண்டி பணிய வைக்கும் நிகழ்வு.
நூலின் பிரதான கவனம் முதல் விசயத்தின் மீதுதான். அதையே இக்கட்டுரையில் நாமும் காண்போம்.
கூலி உழைப்பு
மார்க்ஸ் எழுப்பும் முதல் கேள்வி கூலி என்றால் என்ன? அது எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது?
ஒரு தொழிலாளியைக் கேட்டால் அவர் என்ன கூறுவார்? எனது தினகூலி ரூ.60/- அல்லது ரூ. 80/- என்று கூறுவார். தொழிலாளியின் உழைப்பை (சரியாகச் சொன்னால் உழைப்பு சக்தியை அடிக்குறிப்பு 1 யைக் காணவும்) முதலாளி விலைக்கு வாங்குகிறார். அவர் தரும் விலை தான் கூலி. ஆகவே, ‘கூலி’ என்பது உழைப்பு சக்தியின் விலை, தொழிலாளி விற்று, முதலாளி வாங்குவது தொழிலாளியின் ‘உழைப்பு சக்தி’ என்ற சரக்கு. ஆகவே, “கூலி என்றால் என்ன?” என்ற கேள்விக்கு விடை : உழைப்பு சக்தியின் விலை தான் கூலி.
இதையொட்டி ஒரு கேள்வி எழுகிறது? உழைப்பு சக்தி என்பது மனித வரலாற்றில் எப்பொழுதுமே எல்லா இடங்களிலுமே விற்பனை செய்யப்படும் சரக்காக இருந்ததா? பதில் தெளிவு: நிச்சயமாக இல்லை. அடிமை சமுதாயத்தின் உழைப்பாளி ஒரு அடிமையாக வாழ்ந்தான். அவனுக்குத் தனது உழைப்பு சக்தியை விற்கும் உரிமை கிடையாது. சொல்லப்போனால் அடிமையே ஒரு சரக்கு, அவனை ஒரு எஜமானர் இன்னொரு எஜமானருக்கு விலை கொடுத்து வாங்க முடியும். அதேபோல், நிலவுடைமை சமுதாயத்தில் நிலப்பிரபுவின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்ந்து வந்த விவசாயிகள் தங்கள் உழைப்பில் ஒரு பகுதியை தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட நிலத்திலும் மறுபகுதியை நிலப்பிரபிற்காகவும் செலவிட்டனர். அவர்களும் தங்கள் உழைப்பு சக்தியை சரக்காக விற்றுக் கூலி பெறவில்லை. விவசாயியின் மொத்த உழைப்பின் ஒரு பகுதியை நேரடியாக இலவச உழைப்பாகவோ அல்லது விவசாயி உழைத்து விளைவித்த பயிரின் ஒரு பகுதியை குத்தகையாகவோ அல்லது பணமாகவோ நிலப்பிரபு அபகரித்துக் கொண்டான். இது பட்டவர்த்தனமாக வெளிப்படையாக நிகழ்ந்தது. முதலாளித்துவ சமுதாயத்தின் பெரும் பகுதி உழைப்பாளிகள் தங்களது உழைப்பு சக்தியை விற்கும் ‘உரிமை’ பெறுகின்றனர். ஆனால் இது ‘உரிமை’ மட்டுமல்ல தவிர்க்க முடியாத அவசியமும் கூட. ஏனென்றால், அடிமையை எஜமானன் பராமரித்தான். நிலப்பிரபுத்துவ அமைப்பின் பண்ணையடிமை விவசாயிக்கு தனக்கென்று ஒதுக்கப்பட்ட நிலத்திலிருந்து தன்னையும் தனது குடும்பத்தையும் பராமரித்துக் கொள்ளும் ஏற்பாடு இருந்தது. ஆனால், முதலாளித்துவ அமைப்பின் தொழிலாளிக்கு தனது உழைப்பு சக்தியை ஏதாவதொரு முதலாளிக்கு விற்றால் தான் உயிர்வாழ முடியும் என்ற நிலை உள்ளது. வேறுவகையில் சொன்னால், தனிப்பட்ட எஜமானனுக்கு அடிமையாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட பண்ணையுடன் பிணைக்கப்பட்ட அரையடிமை யாகவோ நவீன கூலித் தொழிலாளி இல்லை என்றாலும், அவன் ஒட்டுமொத்த முதலாளி வர்க்கத்தைச் சார்ந்து வாழ வேண்டியுள்ளது.
கூலியின் அடித்தளம்
அடுத்த கேள்வி, கூலி எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என்பதாகும். ஒரு சரக்கின் விலை நிர்ணயிப்பதில் மூன்று முக்கிய அம்சங்கள் முன் வருகின்றன. ஒன்று, விற்பனையாளர்களுக்கிடையேயான போட்டி. இரண்டு, வாங்குபவர்களுக்கிடையேயான போட்டி, மூன்றாவது, இவ்விரு அணிகளுக்குமிடையேயான போட்டி. இதன் பொருள் என்ன? சந்தையில் ஒரு சரக்கின் விலை என்பது இம்மூன்று வகைப் போட்டியின் முடிவாக நிர்ணயமாகிறது. ஒரு சமயம் சரக்கின் வரவு அதற்கான கிராக்கியை விடக் கூட இருந்தால் விலை சரியும். மாறாக இருந்தால் கூடும். வரவுக்கும் கிராக்கிக்கும் உள்ள இடைவெளி ஒரு சரக்கின் விலை உயருமா அல்லது சரியுமா என்பதை நமக்குத் தெரிவிக்கிறது. ஆனால், இடைவிடாத இந்த ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் ஒரு அடிப்படை விதி இருக்கத்தான் செய்கிறது. அது என்னவென்றால், சராசரியாக சந்தைவிலை என்பது ஒரு சரக்கின் உற்பத்திச் செலவை சந்திக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பது தான். தொடர்ந்து உற்பத்திச் செலவுக்கு குறைந்து விலை இருந்தால், முதலாளி ஆலையை மூடிவிடுவார். கிடைத்த விலைக்கு விற்றுவிட்டு வேறு துறையில் முதலீடு செய்யச் சென்று விடுவார். தொடர்ந்து ஒரு சரக்கிற்கு உற்பத்திச் செலவைவிட அதிகமாக விலை இருந்தால், வேறு துறைகளில் முதல் போட்டவர்கள் இந்த சரக்கை உற்பத்தி செய்ய வந்துவிடுவார்கள். படிப்படியாக வரவு கூடி, விலையைக் குறைத்து விடும். ஆக, ஒரு தொலைநோக்கில் காண்கையில், ஒரு சரக்கின் விலை என்பது (சராசரியாக) அதன் உற்பத்திச் செலவை (இது சராசரி லாபத்தை உள்ளடக்கியது) யொட்டியே நிர்ணயமாகும். இதன் பொருள் சந்தையில் காணும் விலை உற்பத்திச் செலவுக்குச் சமமாகவே இருக்கும் என்பது அல்ல. மாறாக, சந்தைவிலை ஒரு நேரத்தில் உற்பத்திச் செலவைவிட அதிகமாகவும் ஒரு நேரத்தில் குறைவாகவும் தான் இருக்கும். ஆனால், இந்த ஏற்ற இறக்கத்தின் சராசரி, உற்பத்திச் செலவு என்ற பொருள் முதல்வாத அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது என்பது தான் பொருள்.
ஒரு சரக்கின் சராசரி விலை அதன் உற்பத்திச் செலவை யொட்டியே அமைகிறது என்ற விதி ‘உழைப்பு சக்தி’ என்ற சரக்கிற்கும் பொருந்தும். சந்தையில் கூலி ஒரு சமயம் அதிகமாக இருக்கும். ஒரு சமயம் குறைவாக இருக்கும். கூலியில் ஏற்ற இறக்கம் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் சராசரி கூலியின் அடித்தளமாக அமைவது பிற சரக்குகளைப் போலவே, உழைப்பு சக்தி என்ற சரக்கின் விசயத்திலும், அதன் உற்பத்திச் செலவு தான்.
உழைப்புச் சக்தியின் உற்பத்திச் செலவு
உழைப்புச் சக்தியின் உற்பத்திச் செலவு என்பது என்ன?
ஒரு தொழிலாளியை உருவாக்கி, பயிற்சி அளித்து, பராமரிப்பதற்கு ஆகும் செலவே அது. மிகக்குறைந்த அளவிலேயே பயிற்சி தேவைப்படுகின்ற கூலித் தொழிலாளியின் உற்பத்திச் செலவு ஏறத்தாழ உயிர்வாழ்வதற்கு அத்தியாவசியமான அளவிலேயே அமைந்து விடும். இருப்பினும் இன்னொன்றையும் மனதில் கொள்ள வேண்டும். இயந்திரத்தைப்போலவே உழைப்பு சக்திக்கும் தேய்மானம் உண்டு. ஒரு சில ஆண்டுகளின் உழைப்பால் தொழிலாளி தேய்ந்து, மூப்படையும் பொழுது அவரது இடத்திற்கு இளம் தொழிலாளி தயாராக இருக்க வேண்டுமல்லவா? ஆகவே, உழைப்பு சக்தியின் உற்பத்திச் செலவு என்பது அதன் ‘மறு உற்பத்தியை’யும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அதாவது, தனிப்பட்ட உழைப்பாளி மட்டுமின்றி அவர் குடும்பமும் பராமரிக்கப்பட்டு (மிகத் தாழ்வான வாழ்நிலையில் தான் என்பதும் உண்மை) தொடர்ந்து முதலாளி வர்க்கத்திற்கு தொழிலாளர் படை கிடைத்துக் கொண்டே இருக்கும்.
ஆக, உழைப்புச்சக்தியின் உற்பத்திச் செலவு என்பது தொழிலாளியின் உற்பத்தி மற்றும் மறு உற்பத்திக்கான செலவு என்று கொள்ளலாம். இது ஒட்டுமொத்தமாக தொழிலாளி வர்க்கத்திற்குப் பொருந்தும். இதன் அடிப்படையில் நிர்ணயமாகும் கூலியைவிட ஒரு தனிப்பட்ட தொழிலாளியின் கூலி பல நேரங்களில் குறைவாக இருக்கலாம். அதனால் அவரும் அவரது குடும்பமும் முதலாளித்துவச் சந்தையில் தாக்குப் பிடிக்க முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகலாம்.
ஆக, ஒட்டு மொத்தமாக தொழிலாளி வர்க்கம் பெறும் சராசரிக் கூலி உழைப்பு சக்தியின் உற்பத்தி மற்றும் மறு உற்பத்திச் செலவு ஆகும்.
மூலதனம் என்றால் என்ன?
‘கூலி உழைப்பு’ என்றால் என்ன என்பதைப் பார்த்தோம். கூலி எவ்வாறு அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது என்பதையும் கண்டோம். இப்பொழுது ‘கூலி உழைப்பின்’ எதிர் துருவமான மூலதனம் என்ன என்பதைக் காண்போம். முதலாளித்துவ தத்துவவாதிகள், உற்பத்தியில் ஈடுபடுத்தப்படும் உற்பத்திக் கருவிகளும், மூலப் பொருட்களும் தான் ‘மூலதனம்’ என்று கூறுகின்றனர். ஆனால் உண்மை என்ன?
உற்பத்திக் கருவிகளோ, கச்சாப் பொருட்களோ, அடிமைச் சமூகத்திலும் நிலப்பிரபுத்துவ சமூகத்திலும் ‘மூலதனம்’ என்ற உரு எடுக்கவில்லை. மானுட வரலாற்றின் அனைத்துக் கட்டங்களிலும் உற்பத்தி என்பது அவசியமானது. சொல்லப்போனால் இது தான் மனிதனுக்கும் பிற விலங்கினங்களுக்கும் அடிப்படை வேறுபாடும் கூட. அவ்வாறு உற்பத்தில் ஈடுபடும் பொழுது, தனிமனிதனாக அதைச் செய்வதில்லை. எல்லாக் காலங்களிலும் உற்பத்தி என்பது பல மனிதர்களின் பரஸ்பர பங்கேற்புடனும் ஒத்துழைப்புடனும் ஒருங்கிணைப்புடனும் தான் நிகழ இயலும். அதாவது, உற்பத்தியில் இரு அம்சங்கள் முன்வருகின்றன. ஒன்று, ஒரு மனித சமுதாயம் இயற்கையை எந்த அளவிற்குப் புரிந்து கொண்டு பயன்படுத்துவதில் முன்னேறியுள்ளது என்பது, இதை நாம் சுருக்கமாக ‘உற்பத்தி சக்திகளின்’ வளர்ச்சி நிலை என்கிறோம். இரண்டாவது அம்சம், சமூக உற்பத்தியில் ஈடுபடும் மனிதர்களுக்கிடையேயான உறவுகள். இவை உற்பத்திக் கருவிகளுக்கும், உழைப்பாளிக்கும் என்ன தொடர்பு, உற்பத்தி நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்துவது யார்? உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் சொந்த பயன்பாட்டிற்கா? அல்லது சந்தையில் விற்கப்படும்  சரக்குகளா? போன்ற கேள்விகளுக்கான விடைகளைச் சார்ந்தவை. ஆக, ஒவ்வொரு சமூக அமைப்பின் இலக்கணத்தை வரையறுப்பது அதன் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி நிலையும் அதனுடன் நெருங்கிய தொடர்புடைய உற்பத்தி உறவுகளும் தான். மார்க்ஸ் இதைப் பின்வருமாறு கூறுகிறார்.
“இவ்வாறாக, உற்பத்திச் சாதனங்களின் வளர்ச்சியால் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியால் சமூக உற்பத்தி உறவுகள் மாறுகின்றன, மாற்றப்படுகின்றன. ஒட்டுமொத்தமான உற்பத்தி உறவுகள் தான் சமூக உற்பத்தி உறவுகள், சமூகம், குறிப்பாக ஒரு அறுதியிட்ட வளர்ச்சிக் கட்டத்தில் உள்ள சமூகம் என்று அழைக்கப்படுகின்றன. பண்டைய சமூகம், நிலப்பிரபுத்துவ சமூகம், முதலாளித்துவ சமூகம் ஆகியவை இத்தகைய சமூகங்களாகும். இவை ஒவ்வொன்றும் மானுட வரலாற்றின் வளர்ச்சிக்கட்டத்தின் படிநிலைகளாகும். இதேபோல் மூலதனம் என்பது ஒரு சமூக உற்பத்தி உறவு. இது ஒரு முதலாளித்துவ உற்பத்தி உறவு, முதலாளித்துவ சமூகத்தின் உற்பத்தி உறவு.”
மார்க்சின் இந்த வாசகங்கள் மிக முக்கியமானவை. எல்லாக் காலங்களிலும் உற்பத்திக்கு இயற்கை வளங்களும், மனித உழைப்பும் மட்டுமின்றி இதர உற்பத்திக் கருவிகளும், சாதனங்களும் தேவைதான். ஆனால், பழங்குடி மக்கள் பண்டய காலத்தில் வேட்டைக்குப் பயன்படுத்தி கூர்மை செய்யப்பட்டக் கல்லையோ, அம்பையோ ‘மூலதனம்’ என்று கூறுவது எவ்வளவு அபத்தமானது.
உண்மையில், முதலாளித்துவ அமைப்பின் சமூக உற்பத்தி உறவு என்ற வகையில், மூலதனம் என்பது தொழிலாளி வர்க்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் சமூக சக்தியாக அமைகிறது. ‘மூலதனம்’ இத்தகைய சமூக சக்தியாக செயல்பட்டு தொழிலாளியின் உழைப்பைச் சுரண்டுவதற்கு முன் அவசியமாக உள்ளது. உழைப்பு சக்தி தவிர வேறு எந்தச் சொத்தும் இல்லாத ஒரு வர்க்கம் ஆகும். அதாவது மூலதனத்தின் மறுபக்கம் உற்பத்திக்கருவிகளிடமிருந்து முழுமையாக அன்னியப்படுத்தப்பட்ட உழைப்பு சக்தியை மட்டுமே சொத்தாகக் கொண்ட கூலித் தொழிலாளி வர்க்கம்.
உபரி மதிப்பின் ரகசியம்
தொழிலாளி முதலாளிக்கு தனது உழைப்பு சக்தியை விற்கிறார். அதற்கு விலையாகக் கிடைக்கும் பணக்கூலியை வைத்துக் கொண்டு தனக்கும், தனது குடும்பத்திற்கும் தேவையான அத்தியாவசிய மானவற்றை வாங்கி, உயிர் வாழ்வதற்கான போராட்டத்தை நடத்துகிறார். மறுபுறம் தொழிலாளியின் உழைப்பு சக்தியை விலைக்கு வாங்கிய முதலாளி தொழிலாளியின் உழைப்பை நாள் முழுவதும் பயன்படுத்துகிறான். ஆனால் தொழிலாளியின் உழைப்பு சக்தியை மறு உற்பத்தி செய்ய ஒரு நாள் உழைப்பு தேவையில்லை. பகுதிநேரம் உழைப்பதன் மூலம் முதலாளி தனக்களித்த கூலிக்குச் சமமான உற்பத்தியை தொழிலாளி செய்துவிடுகிறார். வேலை நாளின் மிகுதி நேரம் தொழிலாளி செலுத்தும் உழைப்பு முதலாளிக்கு அளிக்கும் உபரி உழைப்பு. இதனால் ஏற்படும் உற்பத்தி உபரி உற்பத்தி. (இங்கு தொழிலாளி என்றும், முதலாளி என்றும் கூறுவது தொழிலாளி வர்க்கத்தையும், முதலாளி வர்க்கத்தையும் குறிப்பிடுகிறது என்பதே சரியான புரிதல்)
உழைப்பு சக்தியின் சிறப்புத் தன்மை இதுதான்: இச்சரக்கை உற்பத்தி செய்ய தேவைப்படும் உழைப்பு நேரத்தைவிட கூடுதல் உழைப்பு நேரத்தை அது முதலாளிக்கு அளிக்கிறது. இதுவே உபரி மதிப்பு. இது முதலாளி வர்க்கத்திற்குப்போய் சேருகிறது. முதலாளியின் லாபத்தின் ரகசியம் இதுவே.
மூலதனப் பெருக்கம்
தொழிலாளிக்கும் முதலாளிக்கும் இடையே நடக்கும் பரிவர்த்தனையில் ஒரு எதிர்மறை அம்சத்தைக்குறிப்பாகக் கவனிக்க வேண்டும். தொழிலாளி பெறும் கூலி, குடும்பத்தைப் பராமரிக்கவே, அதாவது நுகர்வுக்கே செலவிடப்படுகிறது. எனவே மீண்டும் மீண்டும் தொழிலாளி தனது உழைப்பு சக்தியை விற்க வேண்டி வருகிறது. மறுபுறம், தொழிலாளியின் உழைப்பு சக்தியைப் பயன்படுத்தும் முதலாளி லாபத்தை ஈட்டி தனது மூலதனத்தைப் பெருக்கிக் கொள்கிறான். வேறுவகையில் சொன்னால், முதலாளிக்கு உழைக்கும் தொழிலாளி, தனது உழைப்பின் மூலம் புதிய மூலதனத்தை உருவாக்குகிறார். முதலாளியின் மூலதனம் பெருக வகை செய்கிறார்.
ஆக, மூலதனம் பெருக கூலி உழைப்பு காரணமாகிறது. கூலி உழைப்பு பயன்பட மூலதனம் அவசியமாகிறது. முதலாளித்துவ அமைப்பில் மூலதனம் கூலி உழைப்பைப் பயன்படுத்த முன்வராவிட்டால், தொழிலாளி வாழ முடியாது. மூலதனம் வேகமாக அதிகரித்தால் தொழிலாளிக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு உயரும். முதலாளித்துவ அறிஞர்கள், இந்த அம்சத்தை மட்டுமே வலியுறுத்துகின்றனர். ஆனால், இதன் உண்மையான பொருள் என்ன? கூலித் தொழிலாளி கூலித் தொழிலாளியாகவே இருக்கும் வரை, அவனது வாழ்நிலை மூலதனத்தைச் சார்ந்து உள்ளது என்பது தான்!
இதன் மறுபக்கம் என்ன? மூலதனப் பெருக்கம் சமூகத்தில் மூலதன ஆதிக்கத்தை, முதலாளிவர்க்க ஆதிக்கத்தை வலுப்படுத்து கிறது. மூலதனம் இவ்வாறு பெருகும்போது, சில நேரங்களில் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கலாம். பணக்கூலி கூட உயரலாம். முன்பைவிட வாழ்க்கைத்தரம் கூட உயரலாம். ஆனால், தொழிலாளியின் கூலிக்காரன் என்ற அந்தஸ்து மாறாது. மூலதனத்தின் அளவும், வலுவும் அதிகரிக்க அதிகரிக்க தொழிலாளி வர்க்கத்தின் சார்புநிலை மேலும் உறுதிப்படுத்தப்படும். மார்க்ஸ் இதுபற்றி கூறுவதன் சுருக்கம் வருமாறு:
உற்பத்தி மூலதனம் வேகமாக அதிகரித்தால், சொத்தும், ஆடம்பரங்களும், சமூகத் தேவைகளும் சமூக உல்லாசங்களும் அதிகரிக்கும். (ஒரு புறம் மூலதனப் பெருக்கத்தின் விளைவாக கூலி உயர்ந்து) தொழிலாளியின் வாழ்க்கைத் தரம் கூட உயரலாம். ஆனால், அது அளிக்கும் திருப்தி குறைவாகவே இருக்கும். சமூக வளர்ச்சியுடன் ஒப்பிடும் போது, இந்த உயர்வு குறைவாகவே தெரியும். முதலாளி வர்க்கத்தின் (பன்மடங்கு) உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை ஒப்பிடும் பொழுது, தொழிலாளிக்கு ஏற்படும் சிறிய வாழ்கைக்தர உயர்வு திருப்தி அளிக்காது. நமது திருப்தியும், மகிழ்ச்சியும் சமூகத்திலிருந்து வருகின்றன. நாம் அவ்வாறே அவற்றை அளவிடுகிறோம். நுகரும் பொருட்களின் தன்மையிலிருந்து அல்ல. நம் திருப்தியும், மகிழ்ச்சியும் சமூகத் தன்மையுடையவை என்பதால் அவை ஒப்புநோக்கியே அளவிடப்படும்.
வர்க்க முரண்பாடு
மிகவும் சாதகமான நிலையில் கூட, ஒப்புநோக்குகையில், முதலாளி வர்க்க நிலையும், வலுவும் உயரும் என்பதும், தொழிலாளி வர்க்க நிலையும் வலுவும் சரியும் என்பதும் முதலாளித்துவ நியதி என்பதை மார்க்ஸ் கோடிட்டுக் காட்டியதை நாம் கண்டோம். ஆனால், தொழிலாளி வர்க்கத்தைப் பொறுத்தவரையில், முதலாளித்துவ அமைப்பின் யதார்த்த நிலை இதையும் விட மோசமானது.
தொழிலாளி பெறுகின்ற பணக்கூலி பல நேரங்களில் விலைவாசி உயர்வால் தன் மதிப்பை இழக்கும் என்பது நம் அனுபவம். ஆனால், விசயம் அது மட்டுமல்ல. மூலதனம் பெருகிடும் போது, தொழிலாளியின் உண்மைக்கூலி உயர்ந்தாலும் கூட, மொத்த உற்பத்தி மதிப்பில் லாபத்தின் பங்கு கூடுகிறது, கூலியின் பங்கு குறைகிறது என்பதே முதலாளித்துவ நியதி.
ஆகவே, ‘மூலதனப் பெருக்கம் வேலை வாய்ப்புக்கு அவசியம். ஆகவே, முதலாளி வர்க்க நலனும், தொழிலாளி வர்க்க நலனும் ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்துள்ளது’ என்று பார்ப்பது மிகவும் மேலெழுந்தவாரியான பார்வையாகும். உண்மையில், ஆழமாகப் பார்த்தால் முதலாளி நலனும், தொழிலாளி நலனும் ஒன்றுக்கொன்று எதிர் மறையானவை, முரண்பட்டவை என்பது புரியும்.
கூலியும் லாபமும் உற்பத்தி செய்யப்பட்ட மொத்த மதிப்பின் இருபகுதிகள். மூலதனம் பெருகுகிறது என்றால் லாபம் கூடுகிறது என்பது தான் பொருள். உற்பத்தி உயரலாம். ஆனால், மொத்த உற்பத்தியில் லாபத்தின் விகிதாச்சாரப் பங்கு குறைவதும், தவிர்க்க முடியாத முதலாளித்துவ வளர்ச்சி விதி.
இயந்திரமயமும், வேலை தேடும் கூலிப்படையும்
இதை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ள முதலாளித்துவப் போட்டியைக் கூர்ந்து பார்க்க வேண்டும். முதலாளிகளுக் கிடையேயான சந்தைப்போட்டியில், உற்பத்திச் செலவைக் குறைப்பதும், உற்பத்தித் திறனை உயர்த்துவதும் அவசியமாகிறது. இதற்கு முதலாளிகள் என்ன செய்கிறார்கள்?
ஒருபுறம் வேலைப்பளுவைக் கூட்டியும், கூலியைக்குறைத்தும், ஏற்கனவே தொழிலாளிகள் அமைப்பு ரீதியாகத் திரட்டப்பட் டிருந்தால், அவர்களைத் தவிர்த்து பணிப்பாதுகாப்பற்ற காண்டிராக்ட், கேசுவல் தொழிலாளிகளைப் பயன்படுத்தியும், லாபத்தைக் கூட்டவும், சந்தைப் போட்டியில் வெற்றி பெறவும் முயற்சிக்கிறார்கள். மறுபுறம், பெருமளவில் உற்பத்தி, உலகச் சந்தையில் உற்பத்தி என்று வரும் பொழுது, பிரம்மாண்ட எந்திரமயமாக்கலை மேற்கொண்டு உற்பத்தியைப் பன்மடங்கு பெருக்குவதுடன், இதன் மூலம் உற்பத்திச் செலவைக் குறைத்து, சந்தைகளைக் கைப்பற்றுவதுடன், லட்சக்கணக்கான தொழிலாளிகளை வீட்டுக்கு அனுப்புகிறார்கள். வேலையிழந்து வேலை தேடும் மாபெரும் கூலிப்படையை முதலாளித்துவம் மீண்டும் மீண்டும் உற்பத்தி செய்கிறது.
முதலாளித்துவவாதிகள் என்ன கூறுகிறார்கள்? ‘தொழில் நுட்பம் வருவதும் வேலையிழப்பும் வளர்ச்சியின் தவிர்க்க முடியாத அம்சங்கள். பழைய முறைகள் கைவிடப்படும். பழைய வேலைகள் போனால் என்ன, புதிய தொழில் நுட்பமும் வளர்ச்சியும் புதிய வேலைகளை உருவாக்குமே!’ என்பது அவர்கள் வாதம். இது ஒரு ஏமாற்று வாதம் என்பது அவர்களுக்கே தெரியும். ஒன்று, எங்குமே இழக்கப்பட்ட வேலைகளுக்கு ஈடாகும் அளவிற்கு புதிய வேலைகள் ஏற்படுவதில்லை. இரண்டு, உழைப்புப் படையில் பல ஆண்டுகள் உழைத்து, வேலையை இழப்பவருக்கு சில புதிய வேலைகள் உருவாவது எந்தவகையிலும் நிவாரணமல்ல, அவர்களது துயரை இது துடைக்காது.
மூன்று, இயந்திரமயமாக்கலால் வேலை இழப்பவர், புதிய வேலையைத் தேடிப்பிடித்தாலும் முன்பைவிட அவர்களுக்குக் குறைந்த கூலியே கிடைக்கும்.
இறுதியாக…
தனது சிறுநூலின் இறுதியில் மார்க்ஸ் தொகுப்பாகக் கூறுவது பின்வருமாறு:
(உற்பத்தி) மூலதனப் பெருக்கம் உழைப்புப்பிரிவினையை வளர்க்கும், இயந்திரமாக்கலை வேகப்படுத்தும்.
இதன் விளைவாகத் தொழிலாளர்களுக்கிடையே குறைந்து வரும் பணியிடங்களுக்குக் கடும் போட்டி ஏற்படும், அவர்களது கூலி சரியும். தொழிலாளி வர்க்கத்திற்குப் போய்ச்சேரும் சமூக உற்பத்தியின் விகிதப்பங்கு குறையும்.
முதலாளித்துவப் போட்டியில் போண்டியாகும் ஏராளமான சிறு முதலாளிகளும் சொந்த சிறு உற்பத்தியாளர்களும் கைவினைஞர்களும் கூலிப்படைக்குள் தள்ளப்படுவார்கள்.
ஆக, முதலாளித்துவ அமைப்பில் வாழும் தொழிலாளி வர்க்கத்திற்கு மூலதனப் பெருக்கம் தான் வாழ்வுக்கு வழி, வேலை கிடைக்க வழி என்று ஒருபுறம் தோன்றினாலும், உண்மையில் மூலதன வலுகூடும்போது, தொழிலாளர் வலு சரியும்.
இதன்பொருள் கூலி உழைப்பும், மூலதனமும் முரண்பட்டவை. மூலதன, முதலாளித்துவ வர்க்க அமைப்பைத் தகர்த்துத்தான் தொழிலாளி வர்க்கம் உண்மையான விடுதலை அடைய முடியும்!
1849 இல் மார்க்ஸ் முன்வைத்த கருத்துக்கள் இன்றும் பொருந்துமென்றால் அவை காலத்தை வென்றவையல்லவா? ‘கூலி உழைப்பும் மூலதனமும்’ என்ற நூலின் இன்னொரு சிறப்பு மாமேதை மார்க்ஸ் தத்துவராக மட்டுமல்ல, சாதாரணத் தொழிலாளியும் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு தினசரிப் பத்திரிக்கையில் இந்நூலை எழுதினார் என்பதும் தான்!.Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: