மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


1930 களில் தமிழகம் – பொருளாதாரப் பெருமந்தம் : ஓர் ஆய்வு


  • ஆர்.சந்திரா

பொருளாதாரப் பெருமந்தம் பற்றி ஏராளமான நூல்கள்
வெளிவந்துள்ளன. அவை பெரும்பாலும் பொருளாதார
நிபுணர்களால் எழுதப்பட்டவை. எந்த ஒரு பொருளாதார நிகழ்வையும் முழுமையாகப்புரிந்து கொள்ள வேண்டுமெனில், அதனுடைய அரசியல் மற்றும் வரலாற்றுப் பின்னணிiயும் ஆராய வேண்டும். பொருளாதார பெருமந்தம் பற்றிய இந்நூலின் ஆசிரியர் பேராசிரியர் கா.அ. மணிக்குமார் வரலாற்றுத் துறையைச் சேர்ந்தவர். முனைவர் பட்டத்திற்காக அவர் மேற்கொண்ட ஆய்வு செழுமைப்படுத்தப்பட்டு இந்நூல் வடிவத்தில் வெளிவந்துள்ளது. பொருளாதாரப் பெருமந்தம், காலனிய அரசின் கொள்கை இவற்றின் விளைவுகள் என மூன்று அம்சங்களை ஆராய்வதே இதன் நோக்கமென ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். பொருளாதாரப் பெருமந்தம் முப்பதுகளில் சென்னை மாகாணத்தை எப்படிப் பாதித்தது என்பதுநாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியதாகும். அமெரிக்க ஏகாதிபத்தியம் எப்படி ஆதிககம் செலுத்த ஆரம்பித்தது என்றும், ஐரோப்பிய பொருளாதாரம் பற்றியும், முப்பதுகளில் உலக, இந்திய மற்றும் சென்னை மாகாணத்தில் வர்த்தகக் கொள்கை, நிதிக் கொள்கைகள் எப்படி உருவாக்கப்பட்டன, எத்தகைய தாக்கதை ஏற்படுத்தின என்பதைப் புரிந்து கொள்ள இந்நூல் மிகவும் உதவியாக இருக்கும்.

இந்த நூல் ஏழு அத்தியாங்களாகப் பிரிக்கப்பட்டு, பொருளாதாரப் பெருமந்தம் ஏற்படக்காரணம், அதன் விளைவுகள் எனக்கோர்வையாக எழுதப்பட்டுள்ளது. முதல் அதியாயம் பொருளாதாரப் பெரு மந்தம் எவ்வாறு துவங்கியது என்பதில் ஆரம்பித்து, இந்தியாவிலும், சென்னை மாகாணத் திலும் எத்தகைய தாக்கதை விளைவித்தது என்பது புள்ளி விவரங்களுடனும் ஏராளமான மேற்கோள்களுடனும் விளக்கப்பட்டுள்ளது. உலக அளவில் பொருளாதார தேக்கத்தை ஏற்படுத்தி அமெரிக்க பங்குச் சந்தை 1929 இல் வீழ்ச்சி அடைந்தது என்பதும், உலக நாடுகளின் பொருளாதாரத்தை பலவீனப்படுத் தியதும் மிகவும் முக்கியமான நிகழ்வாகும். முதல் உலகப்போர், தொழில்களையும், தொழிலாளர்களையும் போர் சார்ந்த பணிகளில் ஈடுபட வைத்தது. போர் முடிவுற்ற நிலையில் மாற்றத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது. நூறு ஆண்டு களுக்கும் மேலாக தடையற்ற வாணிகக் கொள்கையைப் பின்பற்றிய பிரிட்டன், காப்புக் கொள்கையை பின்பற்ற ஆரம்பித்தது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
ஐரோப்பிய நாடுகள் போரினால் கடுமையாகப் பாதிக்கப் பட்டிருந்தன. போர் துவங்கிய போது ஐரோப்பாவிற்கு அமெரிக்கா 500 கோடி டாலர் தரவேண்டுமென்ற நிலை மாறி, போரின் முடிவில் ஐரோப்பா 100 கோடி டாலர் கடன் தரவேண்டியிருந்தது. இங்கிலாந்தின் கடன்யுத்தமுடிவில் 650 கோடி டாலராக மாறியது. அமெரிக்கா இதன் மூலம் மற்ற நாடுகளின் மீதான பிடியை வலுப்படுத்திக் கொண்டது. கடனைத் திருப்பிச் செலுத்தும் வகையில் அமெரிக்காவிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்யவும் இயலவில்லை. சுங்கச் சுவர்களை உயர்த்தி அமெரிக்கா தன்னுடைய தொழில்களைப் பாதுகாத்துக் கொண்டதுடன், ஐரோப்பிய நாடுகளுக்கு மூலதனம் பாய்வதை ஊக்குவித்தது. இதனால் அந்நாடுகளில் தொழில் வளரத் தொடங்கினாலும், உடனடியாக லாபம் ஈட்ட இயலாத நிலைதானிருந்தது. 1928 இல் அமெரிக்கா மற்ற நாடுகளுக்கு அளித்து வந்த கடன் தொகை குறைய ஆரம்பித்ததும், (1928 துவக்கத்தில் 105 கோடி டாலர், 1929 இன் துவக்கத்தில் 45 கோடி, 1929 இறுதியில் 22.9 கோடி டாலர்) உலகம் முழுவதும் ஏற்றுமதியை வீழ்ச்சி அடையச் செய்தது. இந்தப் பின்னணியில் தான் 24.10.1929 அன்று அமெரிக்க பங்குச் சந்தையின் மிகப் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டது. (அன்று மட்டும் 12,984,650 பங்குகள் கைமாறியுள்ளன) இதன் விளைவுகள் கடுமையானதாக இருந்தன. பொருளாதார அறிஞர் ஜான் கென்னத் கால்ரெய்த் தனது ‘கிரேட் க்ராஷ்’ (மாபெரும் வீழ்ச்சி) என்ற நூலில் 11 ஊக வணிகர்கள் தற்கொலை செய்து கொண்டதாக எழுதியுள்ளதை ஆசிரியர் மேற்கோள் காட்டியுள்ளார்.

பங்குச்சந்தை வீழ்ச்சியைத் தொடர்ந்து, பிரிட்டன், ஜெர்மனி என பல நாடுகள் பாதிக்கப்பட்டன. விவசாயப் பொருட்களின் விலை வீழ்ச்சி, மிகப்பெரிய வங்கிகளின் வீழ்ச்சி என நெருக்கடி கடுமையாகியது. வட்டி விகிதத்தை உயர்த்திய துடன், அமெரிக்காவிடமிருந்து, பிரிட்டன் கடன் வாங்கியது. நிலமை கட்டுப்பாடற்று போன சூழலில் 21.9.1931 அன்று தங்க தர நிலையிலிருந்து பிரிட்டன் விலகியது. மற்ற பல நாடுகளும் அதே நிலையெடுத்தன. சர்வதேச அளவில் கடன் வழங்க யாரேனும் இருந்திருந்தால், நெருக்கடியைச் சமாளித் திருக்க இயலும். அமெரிக்கா அதைச் செய்ய முன்வரவில்லை. பிரிட்டனால் செய்ய இயலவில்லை என சார்லஸ் கின்டல் பர்ஹர் குறிப்பிட்டுள்ளதை விளக்கி, பொருளாதார பெருமந்தம் கட்டுக்கடங்காமல் போனதை ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

இந்தியாவின் நிலை எப்படி இருந்தது, இந்தியா பிரிட்டனின் காலனி என்பதால், தொழில் ரீதியாக இந்தியாவை வளர்க்க வேண்டிய கட்டாயம் இருத்ததென நூலாசிரியர் குறிப்பிடுகிறார். ஆனால் ஒன்பது தொழில்களுக்கு “பாரபட்ச பாதுகாப்பு” வழங்கப்பட்டது. பிரிட்டனிலிருந்து இறக்குமதி ஊக்குவிக்கப்படும், அவர்கள் நலன்கள் பாதுகாக்கப்பட்டன. மந்த நிலையின்போது அரசு முன்வந்து முதலீடு செய்ய வேண்டும். நிதிக்கொள்கை அதற்கேற்ப இருக்க வேண்டும் என்ற கொள்கை கடைபிடிக்கப்பட்டதால், தாக்கம் கடுமையாக இருத்தென ஆசிரியர் குறிப்பிடுகிறார். இந்தியாவில் அயல்நாட்டு வர்த்தகம் தேக்க நிலை அடைந்ததையும், உள்நாட்டு வர்த்தகத்திலும் ஏற்பட்ட பாதிப்புக்களை, குறிப்பாக, போக்குவரத்தில் ஏற்பட்ட தாக்கத்தை, ஏராளமான புள்ளி விவரங்கள் மூலம் தனது வாதங்களுக்கு வலுச்சேர்த்துள்ளார்.
பெரு மந்தத்தின்போது, ரூபாயின் மதிப்பு குறைந்தது. இதனால் பிரிட்டனிலும் பிரச்சனை ஏற்பட்டு, அங்கு நாணயச் சாலையே மூடப்பட்டது. கிராமப்புறங்கள் கடுமையாகப் பாதிப்புக்குள்ளாகின. 1931 இல் விவசாயிகள் வறுமை காரணமாக தங்கள் உட்பட அனைத்துச் சொத்துக்களையும் விற்றுள்ளனர். தங்கம் இந்தியாவிலிருந்து வெளியேறியது. இது ஆங்கிலேயர் களுக்கு பெரு மகிழ்ச்சியை அளித்து.
சென்னை மாகாணத்தைப் பொறுத்தவரை, விவசாயத் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. சொந்த நுகர்வுக்காக இல்லாமல், விற்பனைக்கென விவசாயிகள் உற்பத்தி செய்ய ஆரம்பித்தனர். (இன்றும் அதே நிலைமை தொடர்கிறது என்பது கொடுமையானது) பணப்பயிர்களின் உற்பத்தி ஊக்குவிக்கப் பட்டது. பருத்தி பயிரிடப்பட்ட பரப்பளவு 60 சதம் அதிகரித்தது. ஆனால் நியாய விலை கிடைக்கவில்லை. உலகச் சந்தையை சார்ந்திருந்ததால், பெருமந்தம் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. சென்னையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் விலை குறைவாகவே இருந்தது. இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு அதிக விலை தரவேண்டி இருந்தது. எனவே, பிரச்சனை ஏற்பட்டது.

“ பெருமந்ததிற்கு முன் தமிழ்நாடு” எவ்வாறு இருந்தது என்பதை நூலாசிரியர் சுவாரசியமாக எழுதியுள்ளார். இருபது களில் சென்னை பின்தங்கிய மாகாணமாகவே கருதப் பட்டுள்ளது. சென்னை மாகாணத்திலிருந்த பின்னி, ஹார்வி போன்ற தொழிற்சாலைகள் பெரிய ஐரோப்பிய நிறுவனங் களுடன் போட்டியிட வேண்டியிருந்ததால், உள்நாட்டு மூலதனம் தொழில் துறையில் நுழைய தயக்கம் இருந்தது என ஆசிரியர் குறிப்பிடுகிறார். தவிர, தேயிலை, காபி, பருத்தி ஆலைகள் இங்கிலாந்து வியாபாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்தன. குடிசைத் தொழில்கள் இருந்தன. போர்க்காலத் தேவைக்கேற்பவும் சில தொழில்கள் நடைபெற்றுவந்தன.
சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் நில உடமையைப் பொறுத்தவரை, சென்னை மாகாணத்தில் 3 விதமான முறைகள் இருந்தன. ரயத்வாரி, (தனிநபர் நில உடமை அடிப்படையில் வரி மதிப்பீடு), ஜமீன்தாரி (குத்தகை வரி இடைத்தரகர் மூலமாக) இனாம்தார் (மன்னரால் பரிசளிக்கப்பட்ட பண்ணைகள்) சென்னை மாகாணத்தில் 1500 ஜமீன்தார்கள் கிட்டத்தட்ட 130 லட்சம் ஏக்கர் நிலத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். குத்தகைதாரர்கள் குத்தகை தராவிடில் வெளியேற்றப்படுவர். விவசாயிகள் நலன்கள் புறக்கணிக்கப்பட்டன. 1904 இல் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்பட்டும், விவசாயிகளுக்கு கடன் வழங்குவதில் ஈட்டிக்காரர்கள் ஆதிக்கம் நிலவியது. மேலும், 1900 – 25 வரை சென்னை மாகாணத்தில் 7 ஆண்டுகள் பஞ்சம் நிலவியதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார். மாவட்ட வாரியாக கடன் வழங்கப்படுவதும், ஈட்டிக்காரர்கள் கொடுமையையும் தெளிவாக ஆசிரியர் விளக்கியுள்ளார். பாசன வாய்க்கால்களை பாதுகாக்க ஆங்கிலேய அரசாங்கம் போதிய கவனம் செலுத்தவில்லை. விவசாயிகள் பணம் செலுத்தாவிடில், பராமரிப்புப்பணியை மேற்கொள்ள மறுத்தது. பஞ்சம் காரணமாக தமிழகத்தில் விவசாயிகள் ஏராளமான இழப்புக் களைச் சந்திக்க நேர்ந்தது. பூச்சி, பயிர் நோய்கள் காரணமாக ஆண்டொன்றுக்கு மொத்த உற்பத்தியில் 25 சதம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் சிக்கல்கள் நிறைந்த நில உடமை அமைப்பு, மோசமான விவசாயிகளை சுரண்டிக் கொழிக்கும் வரிக் கொள்கைகள், மறுபுறம் இயற்கை சீற்றங்கள் என விவசாயிகள், கிராமப்புற ஏழைகள் கடன் பொறியில் சிக்கினர்.
மூன்றாவது அத்தியாயத்தில் தமிழக விவசாயத் துறையை பொருளாதாரப் பெருமந்தம் எப்படி பாதித்ததென ஏராளமான புள்ளி விபரங்கள், வரைபடங்களைப் பயன்படுத்தியும், பல்வேறு நூல்களை மேற்கோள் காட்டியும் ஆசிரியர் விவரித்துள்ளார். பெருமந்தத்திற்கு முன்பு விவசாய விளை பொருட்களுக்கு நல்ல விலையும், அதனால் வருமானம் அதிகரித்தாலும், நிறைய சாகுபடியாளர்கள் நிலச்சந்தைக்குள் நுழைந்ததை குறிப்பிடும் ஆசிரியர், பெரு மந்தம் வந்ததும், பருவநிலையும் மோசமாகி விலைபொருட்கள் விலை பெரிய சரிவை எதிர் கொண்டது என்கிறார். “வேளாண் கடன்பற்றிய சத்திய நாதன் அறிக்கை”யில் இருந்து மேற்கோள் காட்டியுள்ளார். “விவசாயி தனது பயிர் மேலும், மேலும், குறைவாகப் பணத்தைப் பெற்று தந்ததைக் கண்டு மனம் நொந்தார். அரசாங்கத்திற்கும், மற்றவர்களுக்கும் அவர் அளிக்க வேண்டிய தொகை மேலும் மேலும் அதிகரிக் கிறது. தேவையான தொகையைப் பெற மேலும் பயிர்களை விற்க வேண்டியிருந்தது. அதனால் நிலத்தின் மதிப்பு கடுமையாக வீழ்ந்தது. மிகவும் குறைவான நடப்பு விலையில் கூட, வாங்குவோர் எவரும் இல்லை. தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் 1929 இல் வெள்ளம் வந்து, நெருக்கடியைத் தீவிரமாக்கியது. நிலவரியை 25 சதம் குறைக்க வேண்டுமென 1931 இல் டெல்டா பகுதி விவசாயிகள் கோரினர். அரசு குறைக்க மறுத்துவிட்டது. நெல், பருத்தி, அரிசி, கொப்பரை, தேங்காய் எண்ணெய் என பல பொருட்களின் விலை சரிந்தது. அந்நிய சந்தைகளின் வீழ்ச்சியும், விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியும், சாகுபடி பரப்பின் அளவிலும், சரிவை ஏற்படுத்தியதென ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். 1928 – 29-இல் விவசாயிகளின் ஆண்டு சராசரி வருவாய் 20 ரூபாய் என அண்ணமாலைப் பல்கலைக்கழக பேராசிரியர் பி.வி. நாராயண சாமி நாயுடு குறிப்பிட்டுள்ளார். “பெரு மந்தத்தின் போது 47 சதம் விலை குறைந்ததால், ஆண்டு சராசரி வருமானம் ரூ.7.60 என குறைந்ததாக அவர் கணக்கிட்டுள்ளார். ”
விவசாயிகளுக்கு வருமானம் குறைவு. தொழில் மந்தம் காரணமாக கைத்தறி தொழிலும் பாதிப்புக்குள்ளாகி, அதையும் நம்பி வாழ இயலாத சூழல் ஏற்பட்டது. விவசாயிகளை மட்டுமின்றி, பெருமந்தம் வங்கியாளர்களையும், ஈட்டிக்காரர் களையும் கூட பாதித்துள்ளது என என்.ஜி.ரங்காவின் அறிக்கையை சுட்டிக்காட்டி நூலாசிரியர், மார்வாடிகளும், ஈட்டிக்காரர்களும், பீதியடைந்ததையும், நீதிமன்றத் தலை யீட்டை நாடியதையும் குறிப்பிட்டுள்ளார். “பழைய நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் கிட்டத்தட்ட மறைந்து போகும் நிலைக்குச் சென்றுவிட்டனர்”. (மெட்ராஸ் ப்ரொவின்ஷியன் பாங்கிங் ரிப்போர்ட்) விவசாயிகள் கடன் வடிலயில் சிக்கித் தவித்ததையும், ஈட்டிக்கார விவசாயிகளின் நிலைமையையும் உதாரணங்கள் மூலம் நூலாசிரியர் விளக்கியுள்ளார். அதுமட்டு மின்றி, பெருமந்தத்தின் விளைவாக இந்தியாவின் கூட்டுறவு சங்கத்தின் செயல்பாடுகள் பாதிப்புக்குள்ளாகிய விதமும் நூலில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட சங்கங்களில் எவ்வளவு சங்கங்கள் 1930 – 31 முதல் 1937 – 38 வரை கலைக்கப்பட்டன என்பது பற்றிய புள்ளி விவரங்கள் கூட்டுறவு கடன் சங்கங்களின் நிலை புரிய வைக்கின்றன.
விவசாயப் பொருட்களின் விலை வீழ்ச்சி, நிலவரி, கடன் ஆகியவை நிலவரி வருவாய் மீது பெரும்தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது. நிலவரியை bலுத்த இயலாத விவசாயிகளின் நிலங்கள் கைப்பற்றப்பட்டன. இதற்கான புள்ளிவிவரங்கள் நெருக்கடியை நன்கு புரிய வைக்கின்றன. தென்ஆற்காடு மாவட்டத்தில்தான் அதிகபட்ச எண்ணிக்கையில் நிலக்கைப்பற்றல் நடவடிக்கைகள் இருந்தன. இதற்கு காரணம், அம்மாவட்டத்தில் பிரதானமாகப் பயிரிடப்படும் நிலக் கடலையின் விலை சரிவு எனத் தெரிய வந்துள்ளனது. நிலத்தின் மதிப்பும் குறைந்தது. 1934 இல் ரூபாயின் மதிப்பு இருமடங்கு உயர்ந்துள்ளது. இத்தகைய தாக்கத்தின் விளைவாக, நிலம் சாகுபடி செய்வோரிடமிருந்து சாகுபடி செய்யாதவர்கள் கைகளுக்கு மாறியுள்ளது. அரசு ஊழியர்கள், வழக்கறிஞர்கள், ஓய்வுபெற்றோர், சாகுபடி செய்யாத நில உடமையாளர்களில் அடங்குவர். தவிர, குத்தகைக்கு நிலங்களை எடுத்த விவசாயிகளுக்கும் ஒன்றும் பெரிய அக்கறை இல்லை, சாகுபடி செய்யாத நில உடமையாளர் எண்ணிக்கை அதிகரித் ததை ஸ்லேட்டர் தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். பெரு மந்தத்தால் விவசாயம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. தமிழ் நாட்டு மாவட்டங்களில் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டம் திருச்சிராப்பள்ளி ஆகும. அடுத்தபடியாக தஞ்சை, சேலம் மாவட்டங்களும் சிரமத்திற்கு ஆளானதை நூலில் புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
பொருளாதாரப் பெருமந்தம் தொழில் துறையையும் பாதித்தபோதிலும், சில தொழில்கள் வளர்ச்சி அடைந்துள்ளன என்பதற்கு பல ஆதாரங்கள் தரப்பட்டுள்ளன. ஏற்றுமதியைச் சார்ந்த தொழில்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகின. உள்நாட்டிற்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்த தொழில்கள் வளர்ந்தன எனலாம்.

1928 – 29 – 1936 – 37 வரை சென்னை மாகாணத்தில் தொழில் வளர்ச்சி இருந்ததாகவே ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. பருத்தி, உதிரிப்பொருட்கள், சர்க்கரை உற்பத்தி, தேனிரும்பு உற்பத்தி உயர்ந்ததற்கு சான்றுகள் உள்ளன. 1928 இல் காப்புவரி வாரியம், 9 தொழில்களுக்கு (இரும்பு, பருத்தி துணிகள், பட்டுத்தொழில், காகிகதம், சர்க்கரை, வெள்ளி, மேக்னிசயம் க்ளோரைடு, கனரக ரசாயனங்கள் மற்றும் தீப்பெட்டி) பாதுகாப்பு அளிக்கப்பட்டது. தொழில் துறையிலும், ஏகாதிபத்திய நலன்களை பாதுகாக்கும் கொள்கைகளே தொடர்ந்தன. சுதேசி உணர்வும், அன்னியப் பொருட்களின் புறக்கணிப்பும், உள்நாட்டுச் சந்தையில் தங்கள் பொருட்களை விற்கும் சூழலை ஏற்படுத்தியது. தொழில் துறையில் உலகச் சந்தையுடன் தொடர்பு கொண்ட தொழில்கள் மிகவும் மோசமாகப்பாதிக்கப்பட்டன. இதோட கூடவே, சென்னை மாகாணத்தில் துணி ஆலைத் தொழில் வளர்ச்சி வரலாற்றையும் ஆசிரியர் குறிப்பிடுகிறார். கோவையில் பருத்தி ஆலைகள் எண்ணிக்கை அதிகரித்து, அருகிலிருந்த பல நகரங்களும் வளரத்துவங்கின. 1932 இல் கோவையில் மதுக்கரையில் சிமிண்ட், 1937 இல் மேட்டூர் கெமிக்கல்ஸ், நாகையில் இந்தியன் ஸ்டீல் ரோலிங் மில்ஸ் ஆகியவை இங்கு குறிப்பிடத்தக்கது. முப்பதுகளில் எண்ணெய் ஆலைகளும் அமைக்கப்பட்டன. மேலும், 26 திரைப்பட நிறுவனங்களும் உருவாக்கப்பட்டன.
தொழிற்சாலைகள் துவக்கப்பட்டன என்பது மட்டுமின்றி, முப்பதுகளில் வங்கித்துறை விரிவாக்கமும் நிகழ்ந்துள்ளது. இந்தக்காலத்தில் சென்னை மாகாணத்தில் புதிய வங்கிகள் நிறுவப்பட்டுள்ளன. 1929 இல் செட்டிநாடு வங்கி, பெரிய வங்கியாகவே திகழ்ந்தது.

சில தொழில்கள், வங்கித்துறையில் வளர்ச்சி என்ற நிலை ஒருபுறம். மறுபுறம் குடிசைத் தொழில்களும், சிறு தொழில்களும் கடுமையான பாதிப்புக்குளள்ளாகின. முப்பதுகளில் சென்னை மாகாணத்திலிருந்த 20 பின்னலாடை நிறுவனங்களில் 7 மட்டுமே பெருமந்தத்தில் தாக்குதலிலிருருந்து தப்பித்தன. ஜப்பான் போன்ற நாடுகளின் போட்டியை எதிர்கொள்ள இயலாமல் சிறுதொழில்கள் முடமாகின. விம்கோ, அப்பொழுதே நமது தீப்பெட்டித் தொழிலுக்குப் போட்டியாக விளங்கியது. குறிப்பாக, தீப்பெட்டி மீதான உள்நாட்டுத் தீர்வையின் விளைவு மிகவும் மோசமாக இருந்தது. தொழிலாளர்களைப் பொறுத தவரை, வேலை நீக்கம், ஊதிய வெட்டு போன்றவற்றை எதிர் கொண்டனர். தொழிற்சங்கப் போராட்டங்கள் நடந்தபோதிலும், தொழிலாளர் நலன்களைக் காக்க நீடித்து போராட்டங்கள் நடைபெறவில்லை எனலாம்.

பெருமந்தம் பற்றிய ஆய்வில், விவசாயம், தொழில்துறை தவிர பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நிதிக்கொள்கை நாணய மாற்றுக்கொள்கை பற்றியும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாகாண அரசின் வருமானத்தில், நிலவரியும், உள்நாட்டுத் தீர்வையும் முக்கியமானவையாகக் கருதப்பட்டன. இது தொடர்பாக அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாக்கள், இந்தியநிதியச் சட்டம், ஷரத்துக்கள் விளக்கப்பட்டுள்ளன. விலை சரிவினால் விவசாயிகள் நிலவரி செலுத்த இயலாமல் போனது பெரிய பிரச்சனையாகியது. கட்டாயப்படுத்தி, கடுமையான முறையில் வரிவசூல் நடைபெற்றது. காவலர் படையுடன் கிராமங்களுக்குச் சென்று, உடைமைகளை விற்று அவர்களை வரி செலுத்த வைத்துள்ளது ஆங்கிலேய அரசு. ஏராளமான எடுத்துக்காட்டுகள் தரப்பட்டுள்ளன. அரசாங்கம் செலவை குறைக்கும் நடவடிக்கை என்ற பெயரில் ஊதிய வெட்டை அமுலாக்கியது. செலவு குறைப்புக்குழு என்பது உருவாக்கப்பட்டது. அக்குழு பல பரிந்துரைகளை வழங்கியது. கல்வித்துறையில், கல்லூரிகளை மூடுவது, சில பாடங்களுக்கு இணைப்பைத் துண்டித்தல், பணியாளர்கள் எண்ணிக்கையை குறைத்தல் ஆகிய பரிந்துரைகளை செய்யப்பட்டுள்ளன. (இன்றும் இதே கொள்கையை நாம் தேர்ந்தெடுத்துள்ள அரசாங்கமும் கடைபிடிக்கிறது என்பதுதான் வேதனையளிக்கும் விஷயமாகும்) குடி எதிர்ப்பு பிரச்சாரத்திற்கான மானிய வெட்டு வந்தது. பொதுப்பணித்துறையில் எந்த புதிய பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. தொழிலாளர் துறையில் பணிக்குறைப்பு நடந்தது. இந்த நடவடிக்கைகளிhல் மக்கள் பெரிதும் அல்லலுற்றனர். இவை கடுமையாக விமர்சிக்கப் பட்டன.

நாணய மாற்றுக் கொள்கையும், ஆங்கில அரசு நம்மை எப்படிச் சுரண்டியது என்பதை விளக்குகிறது. முதல் உலகப் போருக்கு பின் பல நாடுகள் நாணய மதிப்பு குறைப்பை செய்தன. பணப் புழக்கத்தைச் சுருக்கும் கொள்கையை இந்திய அரசாங்கம் மேற்கொண்டது. 1933 இல் நாணய மாற்றுக் கொள்கையை எதிர்த்து “மதராஸ்நாணயக் கூட்டணி” என்பது உருவாக்கப் பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரசாங்கத்தின் கொள்கையின் விளைவாக, தங்கம் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதைத்தடுக்க எந்த முயற்சியும் மேற் கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு அத்தியாயம் முழுவதும், சென்னை மாகாண அரசு, பெருமந்தத் தாக்கத்தை எதிர்கொள்ள மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி நூலாசிரியர் ஆய்வு செய்துள்ளார். விவசாயத்தை பொறுத்தவரை, முதலில் அரசாங்கம் கவலைப் படாமலிருந்தது. ஆனால், கடன்சுமை, கட்டாய நிலவரி வசூல் ஆகியவற்றை விவசாய சங்கள் எதிர்த்து, நிவாரணம் கோரின. “ராயல் விவசாயக்குழு” தவணை கட்டாத கடன்களை தள்ளுபடி செய்ய எளிய திவாலா சட்டத்தை நிறைவேற்ற பரிசீலனை செய்யலாமென பரிந்துரைத்தது. 1931 இல் தென்னிந்திய வர்த்தக சபை நிலவரியை தள்ளுபடி செய்ய மனு அளித்தது. நிவாரண நடவடிக்கைகளை அமுலாக்குவதில் சென்னை மாகாணம் பின்தங்கியதாக இருந்தது. நிலவரி தள்ளுபடி, கடன் நிவாரணம் தவிர, ரயில்வே கட்டணக்குறைப்பு வேண்டுமென விவசாயிகள் கோரி, 1931 இல் தீர்மானம் ஒன்றை தஞ்சாவூர் டெல்டா மிராசுதார்கள் மாநாடு அரசாங்கத்திற்கு அனுப்பியது. விவசாயத்தின் பொருளாதார நிலை பற்றியும், பெருமந்தத்தின் விளைவுகளை அறியவும் விசாரணனைக்குழு அமைக்கப்பட்டது. நல்ல பரிந்துரைகளை இக்குழு அளித்தபோதும், அதன்மீதான அரசு ஆணைகள் ஏமாற்ற மளித்தன. பெருமந்த நிலையை எதிர்கொள்ள 1932 இல் மதராஸ் லேவாதேவிக்காரர் சட்டம் அமலாக்கப்பட்டது. 1884 ஆம் ஆண்டு விவசாயிகள் கடன் சட்டம் 1935 இல் திருத்தப்பட்டது. இவற்றின் முக்கிய அம்சங்கள் குறிப்பிடத்தக்கவை. இதேபோல், நிலவரி 12.5 சதம் தள்ளுபடி செய்ய பரிந்துரைக்கப்பட்டு, சில மாவட்டங்களில் மட்டுமே அமல் செய்தது. தொழில் துறையிலும், சில முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன. ஒட்டு மொத்தமாகப் பார்க்கையில், பெருமந்தத்தின் தாக்கம், அதன் ஆழத்தையும், தீவிரத்தையும் பார்க்கும் போது, அரசு எடுத்த நடவடிக்கைகள் நிவாரணத்தை தரவில்லை என்பதை விட பெயரளவில் இருந்தன என்பதையே நூலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.
பொருளாதார பெருமந்தம் சமூக, அரசியல் ரீதியிலும் பெரும் தாக்கத்தை விளைவித்தது. கிராமப்புற மக்கள் நெருக்கடி காரணமாக நகரங்களுக்கு குடிபெயரத் தொடங்கினர். மக்களுடைய அடிப்படைத் தேவைகளைக் கூட அரசு பூர்த்தி செய்யவில்லை. பிச்சைக்காரர்கள், வேலையற்றோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், விவசாயப் போராட்டங்கள் தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் நடைபெற்றுள்ளன. அவற்றின் பின்னணியை விளக்குகையில், “வர்க்க ரீதியாக அணி திரப்பட்டாத பகுதிகளில், பிரச்சனை சாதிய பரிமாணத்தை எடுத்து சாதிய கலவரங்கள் வெடித்துள்ளன ” என ஆசிரியர் குறிப்பிடுகிறார். (தேவர்கள் – தலித்துக்கள் மோதல் ராமநாத புரம்) திருச்சியில் கூத்தப்பாரில் தலித்துகளுக்கும், ஆதிக்க சாதியினருக்கும் 1931 இல் நடந்த போராட்டம் – உதாரணங்கள்)
பொருளாதார நெருக்கடி எப்பொழுதுமே சமூக விரோத செயல்களைத் தூண்டும் என்பதற்கு முப்பதுகள் விதிவிலக்கல்ல என புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. கொலைகள் (17.3 சதம் அதிகரிப்பு) வழிப்பறிகள் (14.8 சதம்) கொள்ளைகள் (5.55 சதம்) அதிகரித்தன. அதிலும் குறிப்பாக, மதுரை, சேலம் மற்றும் நெல்லையில் குற்றங்கள் அதிகமாக இருந்தன.

அரசியல் ரீதியாக நோக்குகையில், பொருளாதார மந்தம் பல நாடுகளில் அரசியல் நிலைமையை மாற்றியது. 1931 இல் இங்கிலாந்தில் லேபர் கட்சி தோல்வி. அமெரிக்காவில் குடியரசுக்கட்சி தோல்வி, அர்ஜெண்டினா, பிரேசிலும் அரசாங்க மாற்றங்கள் குறிப்பிடத்தக்கவை. பிரிட்டிஷாருடன் அதிகாரத்தை பகிர்ந்து கொண்ட நீதிக்கட்சி 1937 தேர்தலில் சென்னை மாகாணத்தில் தோல்வி கண்டது. தமிழ்நாட்டில் நிலவிய அரசியல் நிலைபற்றி இந்த அத்தியாத்தில் நிறைய பத்திரிக்கை செய்திகளை மேற்கோளாகக் காட்டியுள்ளார் நூலாரிசியர். முப்பதுகளின் மத்தியில் நடைபெற்ற எல்லாத் தேர்தல்களிலும் நீதிக்கட்சிக்கு எதிராக காங்கிரஸ் தொடர்ந்து பிரச்சாரம் செய்தது. தொழிலாளர்களை தன்பக்கம் ஈர்க்க காங்கிரஸ் முயன்றது. 1937 தேர்தல் அறிக்கையின் சாராம்சம் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபற்றியும் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். சட்டசபைக்கான 215 இடங்களில் 159 காங்கிரஸ் பெற்றது. காங்கிரஸ் பிராமணர்கள் ஆதிக்கமுள்ளதாக நீதிக்கட்சி குற்றம் சாட்டியது. சென்னை மாகாணத்தின் “அரசியல் புதிய தளங்கள் அமைக்க பொருளாதார பெருமந்தம் வழங்கியது” என்பதுடன் நூலை நிறைவு செய்துள்ளார்.

கா.அ. மணிக்குமார் இந்தநூல் மிகவும் சிறப்பான முறையில் வான்முகிலனால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதை வெளியிட்டுள்ள அலைகள் வெளியீடக்கம் பாராட்டுக் குரியது. பேரா. மணிக்குமார் சிறந்த வரலாற்றுப் பேராசிரியர் மட்டுமின்றி போர்குணம் கொண்ட தொழிற்சங்க வாதியும் கூட, பொருளாதார பெருமந்தம் தொடர்பாக நூற்றுக்கணக்கான நூல்கள், அறிக்கைகள், பத்திரிக்கை செய்திகள் மூலம் எழுத்துக்களுக்கு வலுசேர்த்துள்ளார். நூல் முழுவதுமே சுவாரசியமாக இருந்தாலும், விவசாயம் பற்றிய அத்தியாயம் இன்றைய சூழலுக்கு மிகவும் பொருந்தக் கூடியதாகவே உள்ளது. வேளாண் உற்பத்தி பாதிப்பு, விலை வீழ்ச்சி, கடன் நெருக்கடி, கிராமங்களிலிருந்து குடிபெயர்வு…

முப்பதுகளுக்கும், இன்றை சூழலுக்கும் எவ்வளவு ஒற்றுமை! தொழில் துறையிலும், ஆட்குறைப்பு, ஊதிய வெட்டு என ஒற்றுமை நூலைப்படிக்கும் போது எழாமலில்i. ஏராளமான புள்ளிவிவரங்கள், அட்டவணைகள், வரைபடங்கள் பொருளாதாரம் படிக்காதவர் களுக்கு சற்று மலைப்பாக இருக்கலாம். ஆனால், மார்க்சிஸ்டுகள் எந்த ஒரு பிரச்சனையையும், அதனுடைய சமூக, அரசியல், பொருளாதார கோணங்களில் ஆராய்ச்சி செய்பவர்கள் என்பதால், நூலை புரிந்து கொள்வது கடினமாக இருக்காது. இன்றைய நெருக்கடியை ஆராய்ச்சி செய்வோருக்கு மிகவும் உதவியான நூல். ஏகாதிபத்தியம் அன்றும், இன்றும் தனது நலன்களை காப்பாற்றிக்கொள்ள எத்தகைய நடவடிக்கை களையும் மேற்கொள்ளும் என்பதை இந்நூல் உறுதி செய்கிறது. விவசாய, தொழிற்சங்க இயக்கத் தோழர்கள் படித்து பயன்பெற வேண்டிய நூலாகும்.

பின்குறிப்பு
எழுபதுகளின் இறுதியில் கல்லூரி ஆசிரியர் இயக்கத்தின் தலைவராக, வழிகாட்டியாக இருந்த பேரா. மணிக்குமாரின் இந்நூலை அறிமுகம் செய்வது, சக இயக்கவாதி, சக பேராசிரியை என்ற முறையில் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: