மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


1857 ஆம் ஆண்டும் நல்லிணக்க முகிழ்தலும் – சீத்தாராம் யெச்சூரி


 
1857 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை எதிர்த்து
நடந்த கிளர்ச்சியின் 150 வது ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சிகள்
நாடு முழுமையும் கொண்டாடப்படுகின்றன. இந்த நிகழ்வு முதல் விடுதலைப்போர் என குறிப்பிடப்படுகிறது. அதன் முக்கியத்துவம் யாதெனில் அதில் பெறப்பட்ட படிப்பினைகள் யாவும் இன்றைய தினத்தில் அறிவார்ந்த விவாத மேடைகளில் அலசப்படும் விஷயங்களாக மாறியிருக்கின்றன என்பது தான். அதிகாரப் பூர்வமான நிகழ்ச்சிகள் பல நடைபெற்றுக் கொண்டிருக் கின்றன. அனால், அதை விட முக்கியமானது என்னவென்றால் அந்த நிகழ்வு பற்றி புகழ்பெற்ற ஆய்வு மையங்களும், வரலாற்று ஆய்வினை மேற் கொண்டவர்களும் அதன் மீது திருப்பிய புதிய பார்வைதான். இதுவரை வெளிக்கொணராத ஆனால் விரவிக் கிடக்கும் பல்வேறு ஆதாரங்களை ஒன்று திரட்டி பல பண்பாட்டு மற்றும் இலக்கிய அமைப்புகளும் அந்த முயற்சியில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கின்றன. தொடர்ந்து நடத்தப்படும் இந்த விவாதங் களும் அதையொட்டிய செயல்பாடுகளும் நம் நாட்டுக்கும் நமக்கும் பயன்தரத்தக்க நடவடிக்கைகள் தான். இதில் கிடைக்கும் அனுபவத்திலிருந்து சரியான முடிவுகளை பெற்றால் அது இன்னும் சிறப்பாக இருக்கும்.
அந்த எழுச்சி குறித்த பல்வேறு விவரங்களையும் தாண்டி நாம் பரிசீலித்ததால் 1857 க்குப் பிறகு அதிகாரப் பொறுப்பேற்ற பிரிட்டிஷ் அரசு இந்திய நாகரீகத்தில் எழுந்த நல்லிணக்க முகிழ்தலுக்கு தடையாக இருந்திருக்கிறது என்பது தெரியும். பிரிட்டிஷ் அரசு தங்கள் ஆட்சியினைத் தொடரவும் ஒருங்கிணைத்துக் கொள்ளவும் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டனர். உள்நாட்டு வகுப்புவாத சக்திகள் அதற்கு துணையாக இருந்தன. இந்த நிகழ்வு நடைபெறாமல் இருந்திருந்தால் இந்திய நாகரீகத்தின் சிறப்பு பண்பாக மக்கள் சமூகத்தில் எழுந்த நல்லிணக்க முகிழ்வு ஒரு உயர்ந்த ஒளி வீசும் நிலையினை அடைந்திருக்கும். அந்த உன்னத நிலையின் வழித் தோன்றலாக நாம் இருப்பதற்கு மாறாக, நம் வரலாற்றினையும், சமூகப் பண்புகளையும் மறு தேடலுக்கு உட்படுத்தும் இரங்கத்தக்க நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்று எரிந்து கொண்டிருக்கும் வகுப்பு வாத மோதல்களில் மூழ்கி விடாமல் அந்த சிறப்பான வரலாற்று மற்றும் பண்பாட்டுக் கூறுகளை எடுத்துக் கோர்ப்பது சிறப்பாக இருக்கும். அது தான் 1857 யை நினைவு கூர்வதன் நோக்கத்தை அர்த்தமுள்ளதாக்கும்.
இந்த சிந்தனை ஓட்டத்திலிருந்து சற்றே மாறுபட்ட எனது அனுபவத்தை விவரிப்பது இங்கு பொருத்தமாக இருக்கும். அண்மையில் நான் அந்தமான் சென்றிருந்த போது ஒரு விஷயம் எனக்குத் தெரிந்தது. பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு போன்ற பிரச்சனையில் இங்கே நாம் உழன்று கொண்டிருக்கிறோம். அந்தத் தீவுகளில் கணிசமாக உள்ள (பெரும் பான்மையாக இல்லையென்றாலும்) உள்ளூர் பிறப்பு சமூகத்தினர் (டுடிஉயடடல க்ஷடிசn ஊடிஅஅரnவைநைள) என்று குறிப்பிடப்படும் மக்கள் பிரிவினர் இருக்கிறார்கள். கொடுமையான அந்தமான் சிறைக் கொட்டியில் தொடர்ச்சியாக சிறைவைக்கப்பட் டோரிடையே பிறந்தவர்கள் தான் அவர்கள். பிரிட்டிஷ் நிர்வாகம் ஆண் – பெண் கைதிகளை வரிசையாக நிறுத்தி அவரவர் விரும்புகிற துணையினைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வழி வகுத்தனர். ஏனெனில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு தங்கள் காலனியாதிக்க விரிவாக்கத்திற்காக நடத்திக் கொண்டிருந்த போர்களுக்கும், இந்திய துணைக்கண்டத் திற்குள் தங்களின் அடக்குமுறை அட்சியை நிலைநிறுத்தவும் மனிதர்கள் தேவைப்பட்டனர். நான் பார்த்த அருங்காட்சியகத்தின் பொறுப்பாளராக இருந்த பெண் அப்படிப் பிறந்தவர்தான். 1857 க்குப் பிறகு அங்கு கொண்டு வரப்பட்ட பட்டானிய (ஞயவாடிn) கைதிக்கும் கேரளாவிலிருந்து மோப்பலா எழுச்சி (ஆடிbநெடயா சுநநெடடவiடிn) க்குப் பிறகு அங்கு வந்த பெண்ணுக்கும் பிறந்த ஒரு வம்சாவளியில் வந்தவர் தான். மேற்சொன்ன இரண்டு நிகழ்வுகளும் காலத்தால் வேறுபட்டவை. எனினும் முந்தைய பாரம்பரியத்தின் பிள்ளைகள் பிந்தைய நாளின் கைதிகளை மணம் செய்த கொண்டார்கள். அப்படி உருவான சந்ததி காலனி அதிகாரத்தின் நிர்பந்தத்தால் உருவான நல்லிணக்க முகிழ்வின் ஒரு சமரச இணைப்பின் பிரதிபலிப்பு தான். 1857 க்குப் பிறகு பிரிட்டிஷ் அரசு நிறுவனமாக்கப்ட்ட பிரித்தாளும் கொள்கை செயல்படுவதற்கு முன்பே இயற்கையாகவே சக்தி மிக்க சமரச நல்லிணக்கம் கொண்ட பண்பாடு இங்கே முகிழ்ந்திருந்தது.
1857 க்கு 200 ஆண்டுகளுக்கு முன்பே மதங்களிடையேயும் இந்தியாவில் பல்வேறு நாகரீகங்களிடையேயும் எழுச்சி மிக்க அறிவார்ந்த பரஸ்பர உறவு நிலை இருந்திருக்கிறது. எல்லோரும் மறந்து போன புத்தகம் ஒன்று என் கையில் கிடைத்தது. அது முகலாய இளவரசன் தாராஷிக்கோவால் எழுதப்பட்ட கருத்துச் செறிவினை உள்ளடக்கிய புத்தகம் ( தாரா ஷிக்கோ முகலாய மன்னர் ஷாஜகானின் மூத்த புதல்வர். அரியாசனத்தைப் பிடிக்கும் போட்டியில் அவுரங்கசீப்பால் படுகொலை செய்யப்பட்டார். 1654 – 55 இல் பாரசீக மொழியில் எழுதப்பட்ட அந்த புத்தகத்தின் பெயர் “மஜிமா – உல் – பக்ரெய்ன்” (இரு சமுத்திரங்களின் சங்கமம்) தாரா ஷிக்கோ சமஸ்கிருத மொழியினைக் கற்றுத் தேர்ந்தவர். உபநிஷத்துக்களைப் பாரசீக மொழியில் மொழிபெயர்த்தார். அதில் மறைந்துள்ள இணைக்கும் மாண்புகளை கண்டறிய இந்த முயற்சி மேற்கொண்டார். வேதநூல்களைப் பற்றிய வெளிப்படையான விவாதங்கள் நடைபெறவில்லையே என வருத்தமுற்றார். (ஆனால் வேதங்களைக் கற்பதிலிருந்து கீழ்சாதி மக்களைத் தடுக்கும் சாதி அமைப்பினைப் பற்றி அவர் ஏதும் குறிப்பிடவில்லை) அந்த நிலை “உபநிஷத்துக்கள் கூறும் உண்மைகளை இந்துக்களிடமிருந்தும், இஸ்லாமியர் களிடமிருந்தும் மறைத்தது’. அந்த குறிப்பிட்ட ஆய்வுக் கட்டுரையில் இஸ்லாமிய சுஃபி கோட்பாடுகளுக்கும் இந்துமத ஆத்ம விளக்கத்திற்கும் ஒன்றுக்கொன்று பொருந்துபவை என்ற முடிவுக்கு வந்தார். தாரா ஷிக்கோவின் அந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை. ஆனால் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அம்சம் ஒன்று உண்டு. அந்த காலக்கட்டத்திலேயே நாகரீக அறிவுத் தெளிவினை உயர்நிலைக்கு உயர்த்தும் தன்மை வாய்ந்த தத்துவார்த்த மற்றும் அறிவுசார் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த என்பது தான் அது.
தாராஷிககோ தன்னுடைய சமயச் சொற்பொழிவுகளில், அக்பர் முன்வைத்த நல்லிணக்க பாரம்பரியத்தினை முன்னெடுத்துச் சென்றார். அதோடு மட்டுமல்லாமல் அவர், பரந்த முற்போக்கான விஷயங்களை மத்தியகால இந்திய மக்களின் சிந்தனையில் நுழைத்து இந்திய சிந்தனை மரபின் எல்லையினை விரிவுபடுத்தினார். 1857 இல் அதன் தாக்கம் இருந்தது. அந்த எழுச்சி வெடித்த பொழுது, மிகப் பிரபலமான தினத்தாளான ‘தில்லி உருது அக்பார்’ எழுதியது, “இந்திய மதங்களை அழித்துவிட நினைக்கும் மத விரோதிகளின் அகங்காரத்தை ஒடுக்குவதற்காக கடவுளர்களால் உருவாக்கப்பட்ட நிகழ்வுதான் அந்த எழுச்சி”.
கோபால் காந்தி (தற்போது மேற்கு வங்க ஆளுநர்) தன்னுடைய சிறந்த நாடகமான “தாரா ஷிகோ” வை பெரிமஹால் என்ற அரண்மனைக்கு அர்ப்பணித்தார். ஸ்ரீநகரின் தால் ஏரியின் கரையில் தாரா ஷிகோவால் கட்டப்பட்ட தேவதைகளின் அரண்மனை என்று சொல்லப்பட்ட மயக்கும் மாளிகை அது. கோளங்களைப் பற்றிய ஆய்வுக்கான ஒரு மையம் காணும் நோக்கோடு தாரா ஷிக்கோவால் படைக்கப்பட்ட மிகவும் நேர்த்தியான கட்டிட அமைப்பு. இன்று அந்த உன்னத லட்சியம் நலிந்து கொண்டு வருவதை நினைவூட்டும் வகையில் அந்தக் கட்டிடம் மிகவும் சிதலமடைந்து இருக்கிறது.
அந்த லட்சியப்பார்வை தாரா ஷிக்கோவின் கீழ்க்கண்ட வார்த்தைகளில் பிரதிபலிக்கிறது.
பாபர் தேசத்திற்கு அடிக்கல் அமைத்தார். ஹூமாயூன் கொள்ளையர்களிடமிருந்து தேசத்தைக் காத்தார். முற்றுகை, புயல், நில நடுக்கம் எல்லாவற்றையும் தாங்கும் கடவுளரால் மட்டும் அசைக்கக் கூடிய, வலுவான அரண் கட்டி தேசத்தை நிர்மாணம் செய்தார் அக்பர். தேசத்தின் பலம் அந்த பாதுகாப்பிலிருந்து வரவில்லை. இந்துஸ்தானத்தின் பல்துறை சிறப்பிலிருந்து எழும் பன்முகத்தன்மையிலிருந்து வருகிறது. ஜஹாங்கீரும் என் தந்தையும் தேசத்தின் அரியாசனத்தின் கௌரவத்தை உயர்த்தி முறையான அரசாட்சி நடத்தினர். இந்தியாவின் மயிலாசனத்திற்கு ஒரு சிந்தனையாளர் தேவை. அவர் இயற்கையில் படைப்போடு இந்த நாட்டை இணைப்பார். நாட்டின் கௌரவத்தை மேலெடுத்துச் செல்வார். மன்னரைப் பாதுகாக்க அல்ல, சாம்ராஜ்யத்தை மறு உருவாக்கத்திற்கு உட்படுத்த. அப்போது தான் ஊசலாட்டத்திலும் கேளிக்கையிலும் திளைக்கும் தில்லி மன்னர் இந்தியாவின் முதல் தர்மகர்த்தாவாக மாறுவார் ( இது கருத்துச் சுருக்கம் தான் – மொழி பெயர்ப்பல்ல)
தாராஷக்கோ மேலும் எழுதுகிறார் “இந்தியாவிற்குஅதன் மயிலாசனத்திற்கு ஒரு அறிவாளி தேவை. அதற்கு பொருத்த மில்லாதவரை, அது ஏற்றுக் கொள்ளாது”. ஆனால் அந்த மயிலாசனம் அவுரங்கசீப்பை தள்ளிவிடவில்லை. அதையே நாதீர்ஷா கொள்ளையடித்து துருக்கி ஓட்டோமான் பேரரசின் சுல்தான் காலிஃப்க்கு கப்பம் கட்டினார். இன்று அது இஸ்தான்புல் நகரின் டாப்காபி அரண்மனையின் கண்காட்சி சாலையில் அரிய பொக்கிஷமாக வைக்கப்பட்டிருக்கிறது.
ஊகங்களின் தளமாக வரலாறு இருக்க முடியாது. அவுரங்கசீப் முகலாய அரியாசனத்தை கைப்பற்றாது இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பது வேறு விஷயம். இங்கே வரலாற்று ரீதியான மதிப்பீடு எதையும் செய்ய நாம் முயற்சிக்கவில்லை. இந்தத் தகவல்களை சேகரிப்பதன் நோக்கம், 1857 க்கு முன் இந்திய சமுகம் கண்ட நல்லிணக்க முகிழ்வின் அம்சங்கள் அதற்குபிறகு வந்த பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் மங்கி மறைந்து போய்விட்டன என்று குறிப்பிடுவதற்குத்தான்.
சமீபத்தில் நடந்து முடிந்த உத்திரப்பிரதேசத் தேர்தல் பிரச்சாரத்தைப் பார்போம். பிரச்சாரத்தின் வீச்சளவு நம்மை கடுமையாக உலுக்கி விடுகிறது. பா.ஜ.க. வின் மூர்க்கத்தனமான இந்துத்துவா, இந்தியாவில் உள்ள பாபரின் குழந்தைகளை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்று (தீவிர இந்து மத பக்தையான ராணி லட்சுமிபாய் பாபரின் குழந்தையான பகதூர் ஷா ஜாபரை, பிரிட்டிஷாரை தில்லி அதிகாரத்திருந்து விரட்டிய பிறகு இந்தியாவின் பேரரசராக பொறுப்பில் ஏற்றினார் என்று இருந்த போதிலும்) கூக்குரல் எழுப்பியது. வெறுக்கத்தக்க சி.டி. ஒன்று பா.ஜ.க. வினரால் மக்களிடம் சுற்றுக்கு விடப்பட்டது. அந்த நடவடிக்கைகள் அரசியல் மற்றும் தேர்தல் ஆதாயங்களுக்காக வெறித்தனமாக வகுப்புவாத உணர்வை ஒருமுகப்படுத்தும் வேலை நடப்பதை தெளிவாகக் காட்டின. “ உன்னத நோக்கங்கள் சிதிலமடைவது” என்பது நம்மை மீண்டும் கவ்விப்பிடிக்கிறது. நிலப்பிரபுத்துவ மன்னர் வம்சாவளிமுறையிலிருந்து இந்தியா, இரண்டு நூற்றாண்டுகள் காலனி ஆதிக்கத்தையும் தாண்டி, அதன் இறையாண்மை மக்களிடம் பற்றி நிற்கும் வகையில் ஒரு நவீன அரசு அமைப்பை பெற்றிருக்கிறது. சக்தி வாய்ந்த விடுதலைப் போராட்டம் மக்கள் புரிந்த எண்ணிலடங்கா தியாகங்கள், நம் நாட்டினை ஒரு மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு என அறிவிக்கும் அந்தஸ்தை நமக்குக் கொடுத்தது. கருத்து மோதல்களை ஒரு நல்லிணக்க கருத்துத் தெளிவின் உயர் மட்டத்திற்கு கொண்டு செல்லும் ஒரு கட்டமைப் பினையும் செயல் வடிவத்தினையும் நாம் உருவாக்கியிருக்கிறோம்.
நிச்சயமாக அந்த வாய்ப்பினை, மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு என்ற கோட்பாட்டிற்கு எதிர்மறையான தத்துவார்த்த நிலையினை மேற்கொள்ளும் வகுப்புவாத சக்திகள் களவாடிச் செல்ல அனுமதிக்கக் கூடாது. அதுபோலவே, இந்த வாய்ப்பினை சிதறடிக்கவும் அனுமதிக்கக் கூடாது. 1857-ஐ நினைவு கொள்வது என்பது அந்த வாய்ப்பினை ஒருங்கிணைத்து கெட்டிப்படுத்தி நமது நவீன மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை மேலும் வலுவானதாகக் காட்டுவது தான்.
உண்மையில், இந்தியாவில் நமக்கு மதச்சகிப்புத் தன்மை என்பது நவீன காலத்தில் மேலை நாடுகளிடமிருந்து கடனாகப் பெற்ற கோட்பாட அல்ல. வரலாற்றை சற்றே பின்னோக்கிப் பார்த்தால், கிறிஸ்து பிறப்புக்கு முந்தைய மூன்றாம் நூற்றாண்டி லேயே பேரரசர் அசோகர் தன் அதிகாரத்தைக் கொண்டு வெளியிட்ட செய்தி சொல்லுகிறது, “ ஒரு குறிப்பிட்ட சமயப் பிரிவினைச்சார்ந்த எவரேனும் அதன் மீது கொண்ட பக்தியின் அடிப்படையிர் மற்ற சமயப் பிரிவினரை இகழ்வாரேயானால், அப்படிச் செய்வது அவர் நம்பும் சமயப் பிரிவிற்கே அதிக கேட்டினை விளைவிக்கும்”.
1857 க்குப் பல ஆண்டுகளுக்குப் பின், எதிர்கால இந்தியா எப்படி இருக்கும் என்ற கற்பனை உருவாக்கத்தில் சுவாமி விவேகானந்தர் அது “இஸ்லாமிய உடம்பில் வேதாந்த சிந்தனை”கொண்டதாக இருக்குமென்றார். மதச்சகிப்புத் தன்மை பற்றி பகவத் கீதை கூட இப்படித்தான் சொல்லுகிறது. “இறை நம்பிக்கை கொண்ட ஒருவர் வழிபாட்டுக்கு எந்த தெய்வீக வடிவத்தை மேற்கொண்டாலும் அவர் அந்த வடிவத்தின் மேல்கொண்ட நம்பிக்கையிளை நான் நிலை நிறுத்துகிறேன்” ( அத்தியாயம் 3 (21)). 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சிகாகோ நகரில் நடைபெற்ற உலக மதங்களின் பாராளுமன்ற மாநாட்டில் விவேகானந்தர் ஆற்றிய உரை புகழ்பெற்ற ஒன்றாகும். அப்பேச்சின் இறுதியில் அவர் குறிப்பிட்டார். “எவரேனும் தன்னுடைய மதம் மட்டும் தனித்து வாழும் மற்ற மதங்களெல்லாம் அழிந்து போகும் என கனவு காண்பவராக இருந்தால் என் அடிமனதில் அவர் மேல் நான் கழிவிரக்கம் கொள்கிறேன். நான் ஒன்றைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஒவ்வொரு மதத்தின் பதாகையிலும், எதிர்ப்பு இருந்தாலும் கூட, உதவி என்று எழுதப்படுமே தவிர, மோதல் என்றல்ல, தன் வயப்படுதல் என்று இருக்குமே தவிர அழிவு என்றல்ல, நல்லிணக்கம் மற்றும் அமைதி என்று எழுதப்பட்டிருக்குமே தவிர மற்ற சமய எதிர்ப்பல்ல”.
அந்த நல்லிணக்க முகிழ்தலின் அறுந்துபோன இழைகளை மீண்டும் எடுப்பதே நாம் ஆற்ற வேண்டிய பணியாக இருக்க வேண்டும் என்று தான் 1857 இன் 150 வது ஆண்டு கால நினைவுகள் நம்மைக் கோருகின்றன. சொந்த உடன் பிறப்புகள் போல் வாழ்வோரை பலிவாங்கும் நஞ்சுகலந்த வகுப்புவாத வெறியால் அழிந்து போகாமல் இழந்த அந்த இழைகளை ஒருங்கிணைப்பதில்தான் இந்தியாவின் எதிர்காலம் உள்ளது.



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: