வே. மீனாட்சிசுந்தரம்
அமெரிக்காவைத் தவிர பிற நாடுகள் டாலர் மதிப்பின் ஊசலாட்டத்தால் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதற்கு பிரிட்டன் நாட்டு பத்திரிகை ஒன்று 2005இல் வெளியிட்ட ஒரு தகவலை சுட்டிக் காட்டலாம்.
அன்று, ஸ்வீடன் நாட்டு அரசு, பிரிட்டன் நாட்டு பிரபல எழுத்தாளர் ஹெரால்டு பின்டருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசை வழங்கியது. பரிசுத் தொகையை 13 லட்சம் டாலராக வழங்கியது. இவர் பரிசு வாங்குகிற நேரத்தில் பரிசுத் தொகையை இவரது நாட்டு நாணயத்திற்கு கணக்கிட்டால் இத்தொகை 7,41,500 பவுண்டாகும். ஆனால் சில மணி நேரத்தில் டாலரின் மதிப்பு சரிந்து பவுண்டின் மதிப்பு கூடியது. இதனால் இவரது பரிசுத் தொகையும் 7,23,000 பவுண்டாக சுருங்கியது.
பாவம் ஹெரால்டு பின்ட்டர்! டாலர் மதிப்பின் ஊசலாட்டத்தால் 18,500 பவுண்டை இழந்தார். அதாவது, மூன்று சொகுசு கார்களை வாங்கும் அளவுள்ள பணத்தை இழந்தார்.
சில நாட்களுக்கு முன்பு வரை, டாலரின் மதிப்பின் ஊசலாட்டத்தால் நமது நாடும் பாதிக்கப்படும் என்று யாராவது கூறினால் இது ஒரு “மார்க்சிஸ்ட் புரளி” என்று ப. சிதம்பரம் கேலி பேசியிருப்பார்; ஆனால், இன்று நடப்பதென்ன! டாலரின் மதிப்பு வீழ்ந்ததால் இந்திய முதலாளிகளின் டாலர் சம்பாத்தியம், ரூபாய்களாக மாறுகிற பொழுது குறைகிறது. முதலாளிகள் அலறுகின்றனர். நிதியமைச்சர் சிதம்பரம், இந்த இழப்பை ஈடுகட்ட முதலாளிகளிடம் வாங்கிய வரியை திருப்பிக் கொடுக்கிறார். பல ரகமான சலுகைகளை வழங்கி கஜானாவை காலி செய்கிறார்.
சேது கால்வாய் முதல் பல வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதியை முடக்கி முதலாளிகளுக்கு வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சொல்லப் போனால் சேது கால்வாய் திட்டத்தை மத்திய அரசு முடக்கியிருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும். இதனை மறைக்க அரசு ஊழியர்களுக்கு பென்ஷன் வழங்கியே கஜானா காலியாகி வருகிறது என்று பிரச்சாரத்தை முடுக்கி விட்டு பயமுறுத்தினாலும் வியப்படைய வேண்டாம். முதலாளிகளுக்கு வழங்கிவிடும் நன்கொடையை மறைக்க அரசு எது வேண்டுமானாலும் செய்யும்.
டாலரின் வீழ்ச்சி ரூபாயை தேற்றுமா?
ஒரு டாலருக்கு ரூ. 48 வரை இருந்த நிலைமாறி இன்று 39 ரூபாய் அளவில் ஆடுவதால் ரூபாயின் மதிப்பு உயர்ந்ததாக தோற்ற மளிக்கிறதே தவிர எதார்த்தம் அதுவல்ல. ரூபாயின் மதிப்பு கூடுதல் என்றால் என்ன பொருள்? முன்பு 5 ரூபாய்க்கு விற்ற பொருள் இப்போது 4 ரூபாய்க்கு விற்றால் ரூபாயின் மதிப்பு கூடியதாக ஆகும். ஆனால் கான்பதென்ன? விலைகள் தாறுமாறாக ஏறுவதையே காண்கிறோம்.
இன்னொரு பிரச்சாரமும் நடக்கிறது. “ஏற்றுமதி செய்வோருக்குத்தான் நட்டம்”. “இறக்குமதி செய்வோருக்கு லாபம்” முன்பு ஒரு டாலரை 48 ரூபாய் கொடுத்து இறக்குமதி செய்தவர்கள் இப்பொழுது டாலருக்கு 38 ரூபாய் கொடுத்தால் போதும் என்று முதுகிலே தடவிக் கொடுக்கின்றனர். அப்படியெனில் ஒரு அப்பாவி கேட்கிறான். இறக்குமதி செய்கிற முதலாளியும், அரசும் ரூபாய் மதிப்பு கூடிவிட்டது என்று விலையை குறைப்பார்களா? இன்று அரசும், பெரு முதலாளி களும் மிக அதிகப்படியாக இறக்குமதி செய்வது பெட்ரோலியப் பொருட்களே.இவைகளின் விலையை இன்று வரை குறைக்கவில்லையே சிதம்பரம். முதலாளிகளுக்கு ஈடுகட்டியது போல் ஏற்கனவே பெட்ரோல் – டீசல் போன்ற சரக்கிற்கு கூடுதல் விலை கொடுத்தவர்களுக்கு பணத்தை திருப்பித் தருவாரா? உண்மை என்ன? இடதுசாரிகளின் எதிர்ப்போடு தேர்தல் மேகம் சூழ்ந்ததால் உயர்த்த விரும்பிய பெட்ரோல் – டீசல் விலையை தற்காலிகமாக உயர்த்தாமல் நிறுத்தியுள்ளனர். தேர்தல் வந்து உதிக்கும் புதிய அரசும் இடதுசாரிகளை நம்பி நிற்கும் நிலை வந்தால்தான் மக்கள் தப்புவர்.
இறக்குமதி செய்வோருக்கு ரூபாயின் மதிப்பு கூடியதால் பலன் அதிகம் என்று கூறுவோர்கள் இதனுள் பதுங்கி இருக்கும் ஆபத்தை பார்க்க மறுக்கிறார்கள். அந்நிய முதலீட்டால் அணு மின் நிலையம் வருகிறதோ இல்லையோ பல ரகமான நுகர்வுப் பொருட்கள் இறக்குமதியாகி சந்தையிலே குவிக்கப்படும்.
கோதுமை, அரிசி, சர்க்கரை, சேமியாவிலிருந்து – கென்டகி சிக்கன் வரை, கார்ன் பிளேக்சிலிருந்து – ஜாம் வரை சந்தையிலே குவியும்; மலிவு விலைக்கும் கிடைக்கும் அதே நேரம் நமது நாட்டு சர்க்கரை அரிசி, கோதுமை, கப்பலேரி நட்ட விலைக்கு விற்பதும் தொடரும் அந்த நட்டத்தை அரசு பொறுத்துக் கொள்வதும் தொடரும். நமது சில்லறை வர்த்தகர்கள் அந்நிய பொருளை வாங்கி விற்றால்தான் கூடுதல் லாபம் கிடைக்கும் என அவைகளை வாங்கி விற்க தள்ளப்படுவர். இந்த நிலைமை சிறு உற்பத்தியாளர்களையும், விவசாயிகளையும் ஓட்டாண்டியாக்கி விடும். பன்னாட்டு நிறுவனங்களின் சில்லறை வர்த்தகம், அவர்கள் நுழையும் முன்னரே கனஜோராய் நடக்கும். இதன் விளைவாக இறக்குமதிக்காக டாலரின் தேவை அதிகமாகி அதன் மதிப்பு உயரும்.
பச்சையாக சொன்னால் டாலரின் மீது விழும் அடியைத் தடுத்து காப்பாற்ற ரூபாயின் மதிப்பை கூட்டி இந்தியா நெஞ்சை காட்டி தியாகம் செய்கிறது எனலாம். அமெரிக்காவோடு 123 ஒப்பந்தம் போடும் முன்னாலேயே இந்திய விவசாயிகளையும், சில்லறை வர்த்தகர்களையும், சிறு தொழில் செய்வோரையும் டாலர் பகவானின் சக்தியை கூட்டி பலியிட இந்திய அரசு தயாராய் விட்டது என்பதையே இது காட்டுகிறது.
கேள்வி மேல் கேள்விகள்
டாலர் வீழ்கிறபொழுது ஏன் அரசு வேடிக்கை பார்க்கிறது? சுனாமிக்கு எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது போல் ஏன் எச்சரிக்கை நடவடிக்கை இல்லை. இந்திய மக்களின் நலனைக் காக்க அரசின் நாணய பரிவர்த்தனை கொள்கை என்ன? ரூபாய மதிப்பும் ஊசலாட தள்ளப்படும் பொழுது மக்களை காப்பாற்ற செய்யப் போவதென்ன? விவசாய நெருக்கடி, சிறு தொழில் நெருக்கடி இவைகளை எதிர்த்து நீந்த அரசு மக்களுக்கு என்ன ஆலோசனைகளை வைத்திருக்கிறது.
செல்வத்தை உருவாக்கி 120 கோடி இந்திய மக்களுக்கு விநியோகிக்கும் விவசாயி, தொழிலாளி, சில்லறை வர்த்தகர்கள், சிறு தொழில் செய்வோர் ஆகியோரை பாதுகாக்காமல் பொருளாதார வளர்ச்சி எங்ஙனம் ஏற்படும்?
மவுனத்தின் மர்மம்
இடதுசாரிகளைத் தவிர இதர அரசியல் தலைவர்கள் இது பற்றி வாயே திறக்க மறுப்பதின் மர்மம் என்ன? அறியாமையா? டாலர் சர்வ வல்லமை படைத்தது என்ற மூடநம்பிக்கையா? தென் அமெரிக்க நாடுகளிலும், பர்மாவிலும், நேபாளத்திலும் மக்கள் எழுந்து நிற்பது போல் இங்கேயும் நிற்க முனைவார்கள் என்று எதிர்பார்த்துதான், அமெரிக்காவோடு இந்திய அரசு ராணுவ ஒப்பந்தம் போட்டுள்ளதா? அரசாங்க அதிகாரிகளை அமெரிக்காவிற்கு அனுப்பி மக்களை ஏமாற்றவும், அடக்கவும் பயிற்சி இதற்குத்தான் கொடுக்கப்படுகிறதா? அவசர காலத்தில் அடக்குமுறை யுத்திகளை இந்திய அதிகாரிகள் அமெரிக்காவின் சிபாரிசுடன் சிலி போன்ற நாட்டிற்கு அனுப்பப்பட்டு பயிற்சி பெற்றதை மறக்க முடியுமா?
இப்படி பல சந்தேகங்கள், ஒரு பாமரனுக்கு எழுவது இயல்பு. அணு உலையில் நடக்கும் வெப்பத்தை உருவாக்கும் தொடர் விளைவுபோல், புதிய உலகமயம் நாட்டிற்குள்ளும் கொந்தளிப்பை உருவாக்கி வருகிறது. இந்த கொந்தளிப்பை ஆக்கபூர்வ வழியில் திருப்பி விடுவது இடதுசாரிகளின் கடமையாகும்.
உலகமய சூழலில் நாணய மதிப்புகளின் ஊசலாட்டம் எப்படி ஏற்பட்டது. அதனை சமாளிக்கும் வழிகள் என்ன என்பதை சுருக்கமாக பார்ப்போம்!
அழிவின் அடிப்படை
நாணயங்களின் பரிவர்த்தனை மதிப்புகள் ஊசலாடும் பொழுது என்ன நிகழ்கிறது? அமெரிக்காவைத் தவிர பிற நாடுகளுக்கு பெருத்த சேதாரம் ஏற்படுகிறது. அதிலும், வளரும் நாடுகளின் மக்கள் நெருக்கடியை சந்திக்கின்றனர். உலகமயச் சூழலில் ஏன் இந்நிலை? இந்தியா போன்ற நாடுகள் ஏற்றுமதி செய்கிற பொருளுக்கு டாலரில் விலை நிர்ணயிக்கிறார்கள்; ஆனால், அப்பொருளை தயாரிக்க ஆகும் உற்பத்தி செலவை சொந்த நாட்டு நாணயத்தில், அதாவது ரூபாயில் கணக்கிடுகிறார்கள். இது பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. வளர்ச்சியடைந்த நாடுகள் இப்படி இரட்டை நிலை எடுக்க தேவையில்லை என்பதை கவணிக்க வேண்டும்.
அந்த நாணயங்களுக்கு சர்வதேச அந்தஸ்து இருப்பதால் அவர்களால் ஏற்றுமதி விலையையும் அவர்கள் நாணயத்தி லேயே தர முடியும். இந்தியாவின் ரூபாய்க்கு அந்த வலிமை இல்லை. எனவே விற்பனை விலையை டாலரில்தான் தர முடியும். இன்று 190 நாடுகளின் நாணயங்கள் சர்வதேச சந்தையில் அந்நிய செலாவணியைத் தேடி நடமாடுகின்றன. இதில் தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளைத் தவிர பிற நாடுகளின் நாணயங்கள் டாலரின் மூலமே பரிவர்த்தனை ஆகும் நிலை உள்ளது. ஏனெனில் இன்று பல நாடுகள் டாலரையே பொது கரன்சியாக ஏற்றுள்ளன. இதனால் டாலர் ஊசலாடுகிறபொழுது இந்தியா போன்ற நாடுகளின் ஏற்றுமதி – இறக்குமதி செய்வோர் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். இந்த நாணய மதிப்புகளின் ஊசலாட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ள பன்னாட்டு நிறுவனங்கள், பல ஏற்பாடுகளை வைத்துள்ளனர். அதற்கு “ஹெட்ஜிங் டெக்னிக்” என்று பெயர். பலவகையான முன்பேர வர்த்தக ஒப்பந்தங்கள் செய்து கொண்டு தப்பி விடுகின்றனர்.
இந்த வாய்ப்பு இல்லாதவர்கள் நாணய மதிப்பு ஊசலாட்டத்திற்கு பலியாகி விடுகின்றனர். நாணய மதிப்பின் ஊசலாட்டத்தால் பல நாட்டு பொருளாதாரங்கள் சின்னா பின்னமாவதை கண் கூடாக பார்க்கிறோம். பொருளாதார நிபுனர்கள் கூறுவதென்ன?
ஏழை நாடுகளின் அரசுகள் இந்த ஊசலாட்டத்திலிருந்து தப்ப முடியும். அதற்கு அந்த நாட்டின் அரசு பின்பற்றுகிற நாணய கொள்கையை பொறுத்தே உள்ளது. எப்படி பன்னாட்டு நிறுவனங்கள், நாணய மதிப்பு ஊசலாட்டத்திலிருந்து தப்புகிறார்களோ அதே போல் தப்ப முடியும். சீனாவின் நாணயக் கொள்கை, இந்த ஊசலாட்டத்தை வெற்றிகரமாக சந்திக்கிறது. நமது ப. சிதம்பரத்தின் நாணயக் கொள்கை உலக வங்கியின் கட்டளைப் படி ஊசலாடுவதால், நாம் பாதிக்கப்படுகிறோம்.
நாணயங்களின் சந்தை
இன்று சுமார் 190 நாடுகளின் நாணயங்கள் சர்வதேச சந்தையில் கைமாறுகின்றன. தினசரி 1.2 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள நாணயங்கள் பரிவர்ர்ததனை ஆவதாக நிபுனர்கள் குறிப்பிடு கின்றனர்.
ஒரு காலத்தில் சர்வதேச வர்த்தகம் என்பது தங்கம், வெள்ளி உலோகங்களை பரிவர்த்தனை கருவியாக கொண்டு நடைபெற்றது. சரக்குகளை இறக்குமதி செய்ய, தங்கத்தை கப்பல்களில் கொண்டு செல்வதில், சிரமங்கள் இருந்தன. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, உலக நாடுகளுக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்த அடிப்படையில் டாலர் பொது கரன்சியாக ஆனது. அப்பொழுது சோவியத் யூனியன், இதுவும் சிரமங்களை ஏற்படுத்தும்; வர்த்தக போட்டி சண்டைகளை கொண்டு வரும். எனவே, பொது கரன்சி ஒன்றை ஜனநாயக முறைப்படி ஏற்படுத்த ஒரு சர்வதேச அமைப்பை உருவாக்கிட ஆலோசனை வைத்தது. அது அன்று எடுபடவில்லை.
ஒரு அவுன்சு தங்கம் கொடுத்தால் 35 டாலரை (1 கிராம் – 1 டாலர்) அமெரிக்க அரசு வழங்கும் என உத்தரவாதம் செய்து அமெரிக்க டாலர் பொது கரன்சியாக ஆனது. சிறிது நாளில் அமெரிக்காவின் டாலர் வீங்க ஆரம்பிக்கவே, இந்த வாக்குறுதியை அமெரிக்கா பின்பற்ற இயலாது என்ற நிலை ஏற்பட்டது. யுத்த செலவு, பெட்ரோலிய இறக்குமதி இரண்டும் டாலரை வீங்கச் செய்ததால் 1973இல் அமெரிக்கா அவுன்சிற்கு 35 டாலர் என்ற தங்க நிலையை ரத்துச் செய்தது. பணக்கார நாடுகள், நாணய பரிவர்த்தனையை சந்தை தீர்மானிக்கட்டும் என்று விட்டு விட்டனர். இந்த மாற்றம்தான் நாணய மதிப்புகளில் அதிகாரபூர்வமாகவே ஊசலாட்டத்தை புகுத்தியது. ஏழை நாடுகள் பரிவர்த்தனை மதிப்பிற்கு பணக்கார நாடுகளோடு ஒப்பந்தம் செய்யத் தள்ளப்பட்டன. ஏழை நாடுகளின் நாணயங்களின் பரிவர்த்தனை மதிப்பை பணக்கார நாடுகள் தீர்மானிக்கும் நிலைமை வந்தது. உலக வர்த்தக அமைப்பு உருவான பிறகு, எல்லா நாட்டு நாணங்களும் சந்தை தீர்மானிக்கும் மதிப்பை பெற தள்ளப்ப்டடன. எனவேதான் இந்திய ரூபாயின் மதிப்பும் ஊசலாட துவங்கியது. எந்தவித தயாரிப்பும் இல்லாமல் டாலரை பொது கரன்சியாக இந்தியா ஏற்று ரூபாயின் மதிப்பை ஊசலாடவிட்டது. இதில் வேடிக்கை என்னவெனில், உலக வங்கியின் துணை அமைப்பான ஐ.எம்.எப்.இன் ஒப்பந்த ஷரத்தில் எந்த நாடும், பரிவர்த்தனை மதிப்பல் தில்லு முல்லு செய்து, அநீதியான போட்டியை உருவாக்கி லாபம் சம்பாதிக்கும் கொள்கையை தவிர்க்க வேண்டும்” என்று உள்ளது.
ஆனால் இன்று நடப்பதென்ன? அமெரிக்கா டாலரின் வீழ்ச்சியை ஏழை நாடுகளின் தலையில் சுமத்துகிறதே தவிர அதன் நிதிக் கொள்கையில் மாற்றம் கொண்டு வர தயாராய் இல்லை. ஏன் டாலர் வீங்குகிறது. அது நடத்தும் யுத்தச் செலவு, ஆயுத உற்பத்தி ஆகியவைகள் முக்கிய காரணிகளாகும். உலக நாடுகளின் 700 இடங்களில் படைத்தளங்கள் அமைத்து டாலரை வாரி இறைக்கிறது. கிழக்கு ஐரோபிய நாடுகளின் ஏவுகனைகள் வைக்கவும், இராணுவ தளங்கள் அமைக்கவும், பெருமளவு டாலரை செலவிடுகிறது.
அது உலகளவில் பண வீக்க்ததை உருவாக்கி விட்டது. இந்த பணவீக்கம் தன்னை பாதிக்காமல் இருக்க இப்பொழுது அமெரிக்கா, இரண்டு விதமான டாலர் நோட்டுக்களை உருவாக்கிட முயற்சிப்பதாக நிபுனர்கள் கூறுகின்றனர். உள்நாட்டில் புழங்கும் டாலர் நோட்டுகள் ஒரு நிறத்திலும், அந்நிய செலாவணியாக பயன்படுத்தப்படும் டாலர் நாட்டுகள் வேறு ஒரு நிறத்திலும் வெளியிட தீர்மானித்துள்ளது, இதன் மூலம் வெளி நாட்டில் புழங்கும் டாலர் உள்நட்டில் புழங்க விடாமல் தடுத்து பணவீக்கத்திலிருந்து தப்பலாம் என கருதுகிறது. அது ஏற்றுமதி செய்யும் பண வீக்கத்தால், அமெரிக்கா பாதிக்காமல் இருக்க முயற்சிக்க போகிறதாம்.
இன்று முதலாளித்துவம் என்றால் மூலதனங்களின் விளையாட்டு என்று ஆகிவிட்டது. இந்த விளையாட்டிற்கு விதிகள் எதுவும் கிடையாது. அமெரிக்கா கூறுவதுதான் விதி, அதை மற்றவர்கள் ஏற்றுக் கெள்ள வேண்டும் என்ற நிலை உள்ளது. இந்தியா போன்ற ஏழை நாடுகள் ஆனால் மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகள் இரண்டு விதமாக இந்த ஊசலாட்டத்தை சந்திக்க வேண்டும். இந்திய அரசும் ஹெட்ஜிங் டெக்னிக் மூலம், சேதாரங்களை தடுக்க முயல வேண்டும். அதாவது, டாலரை நம்பி நிற்காமல் பலவிதமான கரன்சிகளை வைத்து மதிப்பு ஊசலாட்டத்தை சந்திக்க வேண்டும்.
இரண்டாவதாக, டாலரின் மதிப்பு வீழ்ச்சியால் ஏற்படும் நட்டத்தை ஈடுகட்ட கஜானாவை காலி செய்வது விவேகமல்ல. இது சுமையை மக்களின் தலையில் சுமத்துவதாகும். எனவே உள்நாட்டில் விலைகள் தாறுமாறாக உயர்வதை தடுப்பதின் மூலம் முதலாளிகளின் லாபத்தை உத்தரவாதப்படுத்த முயல வேண்டும். உள்நாட்டு உற்பத்தியை உலக தரத்திற்கு உயர்த்துவதும் அரசின் கடமையாகும். மக்களின் தொழில்நுட்ப ஞானத்தை பெருக்கிட பெருமளவு அரசு முதலீடு செய்ய வேண்டும். அந்த வேலையை சந்தை செய்யாது என்ற ஞானம் அரசிற்கு வேண்டும்.
இரண்டு, சர்வதேச வர்த்தகத்தில் புகுந்து விட்ட நாணய மதிப்புகளின் ஊசலாட்டத்தை தடுக்கும் புதிய சர்வதேச அமைப்புக்களை இதர ஏழை நாடுகளின் ஒத்துழைப்போடு உருவாக்கிட முனைய வேண்டும். ஒரு பொது கரன்சி உருவாக்கும் நோக்கோடு இந்த அமைப்பு இருக்க வேண்டும். உலக வங்கி சர்வதேச நிதி நிறுவனம், உலக நாடுகளின் கட்டுப்பாட்டிற்குள் வர மறுத்தால், அதனை மூடு என்று நாம் குரல் கொடுக்க வேண்டும்.
இன்றைய உலகம் இரண்டுவிதமான நாடுகளை கொண்டதாக உள்ளது. முதலாளித்துவ முறையில் அமைந் திருக்கும் உலகமயத்தை ஆதரிக்கும் நாடுகள், நாடுகளிடையே சமத்துவத்தை நாடும் நாடுகள் என இரண்டு பிரிவாக உள்ளனர். மக்களிடையே இடதுசாரி கருத்துக்களை மேலோங்கி நிற்கும் நாடுகளில், நாணய மதிப்பின் ஊசலாட்டத்தை சமாளிக்கும் அணுகுமுறைக்காக நிற்கிறார்கள். இன்று தென் அமெரிக்க நாடுகள் சிலவும், கியூபாவும் ஏகாதிபத்திய நாணயங்களின் ஆதிக்கத்தை சமாளிக்க பலவிதமான டெக்னிக்குகளை பின்பற்றுவதை பார்க்கிறோம்.
வலதுசாரி கருத்துக்கள் கொண்ட அரசியல் கட்சிகளின் செல்வாக்கு மேலோங்கி இருக்கும் நாடுகளில் கருத்து முரண்பாடுகளும், குழப்பங்களும் வேற்றுமைகள் மலிந்தும் இருப்பதால் நாணய மதிப்பு ஊசலாட்டத்திற்கு மக்கள் பலியாகும் நிலை உள்ளது. இங்குள்ள அரசியல் தலைவர்கள் சர்வதேச வர்த்தகம், முதலீடு ஆகியவை பற்றி தெளிவற்ற பார்வை கொண்டவர்களாக இருப்பதால், இதன் நிலையற்ற தன்மைகளை புரிந்து கொள்வதில் சிரமப்படுகிறார்கள். எனவேதான் ஒரு நிபுனர் கூறினார்.
“நாணய மதிப்பு ஊசலாட்டத்தை சமாளிக்கும் ஞானமில்லாத அமைச்சர்கள் இருக்கிற நாட்டில் மக்கள் சிரமப்படுவார்கள் என்றார். அவர் சொன்னது முற்றிலும் உண்மை என்பதை மன்மோகனும், ப. சிதம்பரமும் நிரூபித்து வருகிறார்கள்.
Leave a Reply