மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


நம்பிக்கை , அறிவியல், பொருள்முதல்வாதம் …


தற்போது மக்களின் ‘நம்பிக்கை’ பற்றிய விவாதம் மீண்டும் எழுந்துள்ளது. ஆதம்பாலம், இராமர் பாலமாக மாற்றப்படடு மக்களின் நம்பிக்கையில் அரசு தலையிடுவதா என்றெல்லாம் ஆவேசக் குரல்கள் எழுப்பப்படுகின்றன. நம்பிக்கைகளில் பல ரகங்கள் உண்டு, பல நம்பிக்கைகள் வாழ்க்கை நடைமுறைகளில் குறுக்கீடோ, இடையூறுகளையோ ஏற்படுத்தாதவை. உதாரண மாக, ஒருவருக்கு ‘இறப்புக்குப் பிறகு மோட்சம் கிடைக்க வேண்டும்; அதனால் இப்பிறப்பில் நிறைய நல்ல காரியங்கள் செய்து புண்ணியம் பெற வேண்டும்’ என்று நினைத்தால், அந்த நம்பிக்கையால் அதிக பாதிப்புகள் ஏற்படுவதில்லை. சில சமயம், இப்படிப்பட்ட நம்பிக்கைகள் சமூகத்திற்கு ஓரளவு நன்மைகளையும் கூட ஏற்படுத்தலாம்.

ஆனால், சில நம்பிக்கைகள் சமூகத்திற்கு ஊறு விளைவிப்பவை; சில, மிகுந்த ஆபத்தையும் ஏற்படுத்துபவை. உதாரணமாக ‘சதி’ பற்றிய நம்பிக்கை. இன்னமும் பல இடங்களில் நிலவி வருகின்ற – மனிதர்களுக்கு கொடுமைகளை இழைக்கின்ற – பல நம்பிக்கைகள் உள்ளன. பெண்ணடிமைத் தனம், சாதி ஒடுக்குமுறை சார்ந்த பிற்போக்குத்தனம் நிறைந்த நம்பிக்கைகளும் உள்ளன. நம்பிக்கை ஒருவரின் தனிப்பட்ட உரிமை என்பது ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றுதான். எனினும், சமூக அமைதிக்கும், ஒற்றுமைக்கும், சமூக நலனுக்கும், சமத்துவக் கோட்பாடுகளுக்கும் எதிராக இருக்கின்ற நம்பிக்கைகள் மனிதர்களின் சிந்தனையிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்.

தனி மனிதர்களின் நம்பிக்கையில் அரசு தலையிடக் கூடாது என்பது சரியானது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் எந்தவொரு சமயக் கருத்தின்மீது நம்பிக்கை வைக்கவும், அந்த நம்பிக்கையை பிரச்சாரம் செய்திடவும், ஒரு சமயத்தின்மீது நம்பிக்கையை கைவிட்டு வேறொரு சமயத்திற்கு மாறிடவும் அனுமதி அளிக்கிறது. இந்த உரிமைகள் மதிக்கப்படவும், பாதுகாக்கப் படவும் வேண்டும்.

அதே நேரத்தில், சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் நம்பிக்கை சார்ந்த செயல்பாடுகளை அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது. அந்த ஆபத்திலிருந்து சமூகத்தைப் பாதுகாக்க அரசு சட்ட ரீதியாகச் செயல்படுதல் வேண்டும். அது மட்டுமல்ல, அறிவியலுக்குச் சிறிதும் தொடர்பற்ற மூட நம்பிக்கைகளை ஒழிக்க அரசே பிரச்சாரம் செய்திடல் வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் தனது ‘வழிகாட்டும் நெறிகள்’ பகுதியில் மக்கள் மத்தியில் அறிவியல் சிந்தனைகளையும், உணர்வுகளையும் (Scientific Temper) மேம்படுத்த அரசு முயற்சிக்க வேண்டுமென வலியுறுத்துகிறது.

அரசியல் அதிகாரத்திற்காக ‘நம்பிக்கை’
இந்துத்துவவாதிகளுக்கு வரலாற்றுப் போராசிரியர் ரோமிலா தாப்பர் எழுப்பிய கேள்விகள் அர்த்தம் பொதிந்தவை. (இந்து, செப். 28, 2007)
ஒரு கடற்பாலம் இடிக்கப்பட்டால், ஒரு நம்பிக்கையே அழிந்து போகுமா? அந்த அளவிற்கு அந்த நம்பிக்கை பலவீனமானதா? கோடிக்கணக்கான மக்களிடையே ஒரு சமய நம்பிக்கை இருக்கிறதென்றால், அதனைப் பாதுகாக்க மக்களை ஏன் திரட்டுகிறீர்கள்? இதற்காக ஏன் ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடத்துகிறீர்கள்? அந்த நம்பிக்கையின் பெயரால் ஏன் பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவிக்கிறீர்கள்?

ராமர் பிறந்த இடம் அல்லது ராமர் பாலம் – எதுவாக இருப்பினும் மக்கள் உள்ளத்தில் மட்டுமே குடியிருக்க வேண்டிய அந்த நம்பிக்கையை மூலதனமாக்கி, மக்களைத் திரட்டுவது என்பது ஒரு சுயநல அரசியல் நோக்கத்தை, அதிகாரப் பசியைத் தான் எடுத்துக்காட்டுகிறது. அரசியல் அதிகாரத்திற்காக நம்பிக்கையைப் பயன்படுத்துவது ஒரே சமயத்தில் சமய நம்பிக்கைகைளையும், நவீன சமுதாயத்தின் ஜனநாயகக் கோட்பாடுகளையும் கேவலப்படுத்துவது ஆகும்.
இத்தகு சமய நம்பிக்கையை பாதுகாக்க அறிவியலும் சேவை செய்ய வேண்டுமென்று கூறுவது, மிகவும் கேவலமானது. இந்தியத் தொல்லியல் துறை அறிவியல் ரீதியாக வளர்ச்சி பெற்ற ஒரு நிறுவனம். அறிவியல் முறைகளால் அவர்கள் பாக் ஜலசந்தியில் மனிதனால் உருவாக்கப்பட்ட பாலம் ஏதுமில்லை என்று நிறுவினர். ஆனால் அவர்களை எதிர்த்து போராட்டம் நடத்துவது எனில், என்ன அர்த்தம்? ஆதாரமற்ற ஒரு சமய நம்பிக்கைக்காக அறிவியல் நிறுவனங்கள் கூஜா தூக்க வேண்டும் என்பது எத்தகைய மடமை. இதுதான் போலி அறிவியல். இதில் கைதேர்ந்தவர்கள் இந்துத்துவவாதிகள். ரோமிலா தாப்பர் குறிப்பிட்டவாறு சமய நம்பிக்கைக்கு ஒரு தனியிடம் இருக்கிறது; அதே போன்று அறிவியல், வரலாறு அனைத்திற்கும் அவற்றுக்கென்று செயல்படு தளங்கள் உள்ளன. ஒன்று, மற்றொன்றில் குறுக்கிடவோ, இடையூறு செய்திடவோ கூடாது.

நம்பிக்கை குறித்து, கம்யூனிஸ்டுகளின் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும்? அனைத்து நம்பிக்கைகளையும் எதிர்ப்பதாக பகிரங்க பிரகடனம் செய்வதால் பயனில்லை. இது, மக்களிடமிருந்து கம்யூனிஸ்டுகளை தனிமைப்படச் செய்திடும். அதிகம் சடங்கு சம்பிரதாயம் சாராத, மனத்தளவிலான நம்பிக்கைகள் கொண்டவர்களை அணுகுகிறபோது அவர்களின் நம்பிக்கைகளை கம்யூனிஸ்டுகள் அங்கீகரிக்கவும், மதிக்கவும் வேண்டும். இதன் பொருள் அந்த நம்பிக்கைகளை ஆதரித்து, ஏற்றுக் கொள்வது என்பதல்ல. நம்பிக்கையை அல்ல, நம்பிக்கை கொண்டோரை மதிக்க வேண்டும். ஒருவரின் நம்பிக்கைகள் அவரது தனிப்பட்ட விவகாரம், அவரது உரிமை என்பதை கம்யூனிஸ்டுகள் அங்கீகரிக்க வேண்டும். இது உழைப்பாளி மக்களை வர்க்கபோராட்டத்தில் திரட்டிடவும், அவர்களை நெருங்கிடவும் வாய்ப்பான சூழலை ஏற்படுத்தும்.
அதே நேரத்தில், மூடநம்பிக்கைகளையும், ஒடுக்குமுறை சார்ந்த நம்பிக்கைகளையும், அவற்றையொட்டிய சடங்குகள், சம்பிரதாயங்களையும் கம்யூனிஸ்டுகள் எதிர்ப்பதில் தயங்கிடக் கூடாது. இதனால் சமூக நலனுக்கும், எதிர்கால முன்னேற்றத் திற்கும் ஏற்படக் கூடிய பாதிப்புகளை பொறுமையாக மக்கள் மத்தியில் விளக்கிட வேண்டும். சமூக நலனுக்கு ஒவ்வாத பழக்கங்களை மக்களைத் திரட்டியே ஒழிக்க வேண்டும்.

‘நம்பிக்கை’ குறித்து சமூகவியலாளர் அச்சின் விநாயக் கீழ்க்கண்ட கருத்தை முன்வைக்கிறார்.
“நம்பிக்கைகளில் நல்லதும் உள்ளன; தீயனவும் உள்ளன; நம்பிக்கைகளின் தன்மை குறித்து விவாதத்திற்கு உள்ளாக்கிடாமல் இருப்பது அறிவுத்திறத்திற்கு உகந்ததல்ல; அவ்வாறு இருப்பது அறநெறிகளை வளர்ப்பதற்கும், அரசியல் பொறுப்புணர்வுக்கும் உகந்தது அல்ல, அதிலும் குறிப்பாக தவறானதோர் நம்பிக்கையாக இருந்தால், அதனை அலட்சியப்படுத்திடக்கூடாது,”
(Communal-ism Contested: அச்சின் விநாயக்)

இதுவே சரியானதோர் அணுகுமுறையாகும். எனவே நம்பிக்கைகளை அறிவுத்திறன் கொண்டு பரிசோதனைக்கு உள்ளாக்குவது அவசியமானது. நீண்டகால நோக்கில் சமூகத்தில் சமய நம்பிக்கைகளின் ஆதிக்கத்தை குறைத்திடவும் இது வழிவகுக்கும். ‘நேரடி யுத்தம்’ எனும் அணுகுமுறையைவிட, மக்களோடு இணைந்து அந்த நம்பிக்கைகளை அறிவு எனும் பரிசோதனைக் களத்தில் ஈடுபடுத்துவது உகந்ததாக இருக்கும். இதைச் செய்வதற்கான மிக உறுதியான பாதையாக அறிவியல் பாதை விளங்குகிறது.
நம்பிக்கை நீக்கம்; அறிவியலின் பங்கு
அறிவியல் மக்கள் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளது. முதலாளித்துவ முறை ஏற்படுத்தியுள்ள தடை மட்டும் இல்லையெனில், அறிவியல் அனைத்து மக்களும் உன்னதமான வாழ்க்கை வாழ்ந்திட வழி வகுத்திருக்கும். முதலாளித்துவ வர்க்கங்கள் தனது இலாப வேட்டைக்கு அறிவியலைப் பயன்படுத்துவதால், அனைத்து மக்களுக்குமான அறிவியல் இன்னமும் எட்டாக்கனியாக இருந்து வருகின்றது.

கம்யூனிஸ்டுகள் ‘நம்பிக்கை’ பற்றி மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறை, அறிவியல் விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் கடமையோடு இணைந்தது.
சாதாரண வாழ்க்கையில், இதையொட்டி பல்வேறு போக்குகளைக் காண்கிறோம். ஒரு பேராசிரியரோ, அறிவிய லாளரோ, அறிவியல் பற்றிய ஆழமான அறிவு கொண்டிருந் தாலும், அறிவியலுக்கும் அப்பாற்பட்ட சக்தி உள்ளது என்று கூறி, பல்வேறு நம்பிக்கைகளுக்கு ஆளாவதை நாம் காண்கிறோம். பொருள் முதல்வாதம் சார்ந்த அறிவியலுக்கான போராட்டம் தான், நம்பிக்கைகளின் ஆதிக்கத்திலிருந்து சமூகத்தை விடுவிக்கும்.
உண்மையான அறிவியலின் கூர்முனையை மழுங்கச் செய்யும் போக்குகள் அறிவியல் தத்துவத்துறையில் நிகழ்கின்றன. அறிவியலுக்குள், இரண்டு விதமான போக்குகள் உள்ளன, அறிவியல் யதார்த்தவாதம் (Scientific Realism) என்பது முற்போக்கான அணுகுமுறை ஆகும். இது ஒரு முகாம் என எடுத்துக்கொண்டால், இதற்கு எதிரான பாசிட்டிவிசம் (positivism) அல்லது நேர்காட்சி வாதம் என்பது போன்ற பல போக்குகள் ஒன்றடங்கிய முகாம் மற்றொரு பிரிவு ஆகும்.

அறிவியல் துறையினை தத்துவ நோக்கில் எப்படி அணுகுவது? தத்துவக் களத்தில் நாம் இரண்டு பார்வைகளை எதிர் கொள்கிறோம். யதார்த்த உலகின் இருப்பை முதன்மைப் படுத்துவது, பொருள் முதல்வாதம். நமது சிந்தனை, விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு பொருள் உள்ளது என்பதை அங்கீகரிப்பது பொருள் முதல்வாதம். சிந்தனை, பொருளின் பிரதிபலிப்பே என அது வாதிடுகிறது. அது மட்டுமல்லாது, பொருள் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை நிறுவி, அந்த இயக்கத்திற்கான அடிப்படை விதிகளை விளக்குவது இயக்க வியல் பொருள் முதல்வாதம்.

இதற்கு நேர் எதிரான பார்வை கருத்து முதல்வாதம். பொருளின் இருப்பு சிந்தனை சார்ந்தது. கருத்தே பொருளுக்கு அடிப்படை. கடவுள் இவ்வுலகைப் படைத்தார் என்ற மிகப் பழமையான நம்பிக்கை கருத்து முதல்வாதத்திற்கு முக்கிய மானது. பொருளே உண்மையானது அல்ல, மாயை என வாதிட்டு பரப்பிரம்மம் மட்டுமே ஒரே உண்மை என்று நிறுவ முயலும் அத்வைதம், கருத்து முதல்வாதத் தத்துவத்திற்கு இந்திய தத்துவம் வழங்கிய ‘நன்கொடை’. ஆன்மீகத்தை தவிர்த்துப் பார்த்தால், கருத்து முதல்வாதம் பல்வேறு வடிவங்களில் நீடித்து வருகின்றது. முதலாளித்துவ முறையில், வெளிப்படையாகத் தெரியாமல், உள்ளார்ந்து நடைபெற்று வரும் உழைப்புச் சுரண்டலை உழைப்பாளி அறிந்து கொள்வதில்லை. தனது வாழ்க்கையைக் காப்பாற்றி வருவது முதலாளி கொடுக்கும் ஊதியம் என அவன் நம்புகிறான். இவை போன்ற பல யதார்த்தத்திற்கு முரணான சமூகக் கருத்துக்கள் அனைத்துமே கருத்து முதல்வாத வகையைச் சார்ந்தது.

எல்லாத் தத்துவப் பிரிவுகளும் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ மேற்கண்ட இரண்டு உலகப் பார்வைகளில் ஒன்றை உரித்தாக்கிக் கொண்டிருக்கும்.
இதில் அறிவியல் எதைச் சார்ந்தது? யதார்த்த உலகை, நம்மைச் சுற்றியுள்ள பொருட்களை அங்கீகரிப்பதால் பொருள் முதல்வாதமே அறிவியலின் அடிப்படையாக உள்ளது. அறிவியலை பொருள்முதல்வாதப் பார்வை கொண்டு விளக்குவதுதான் ‘அறிவியல் யதார்த்தவாதம்‘ என்று அழைக்கப்படுகிறது. அறிவியல் தத்துவத் துறையில் அறிவியல் யதார்த்தவாதம் மிக முக்கியமான போக்கு.
கருத்து முதல்வாதிகளும் அறிவியலை பொருள் முதல் வாதத்திடம் விட்டுவிட அனுமதிப்பதில்லை. அவர்களும் அயராது போராடுகிறார்கள். பொருள்முதல்வாதத்தின் இயற்கையான கூட்டாளியான அறிவியலை ஹைஜாக் செய்திட அவர்கள் இடைவிடாது முயற்சித்து வருகின்றனர்.
தத்துவத் தளத்தில் நடைபெறும் இந்தப் போராட்டமும் ஒருவர்க்கப் போராட்டமே. ஏனெனில் அனைத்து மக்களுக்கு மான அறிவியல் என்பனை அறிவியல் யதார்த்த வாதமே சாதிக்க வல்லது. கருத்துமுதல்வாதம் சார்ந்த அறிவியல் உழைப்பாளி மக்களுக்கு எதிரானது; முதலாளித்துவ வர்க்க நலனுக்கு சேவை செய்திடுவது. உதாரணமாக, புதிய புதிய அறிவியல் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு மிக நவீன, சக்தி படைத்த ஆயுதங்கள் உருவாக்கப்படுகின்றன; ராணுவ ஆயுதத் தளவாடங் களை தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் ஆயுத விற்பனை செய்து கொழிக்கவே இந்த அறிவியல் ஆராய்ச்சியை பயன்படுத்துகின்றன. அதே நேரத்தில், உலகம் முழுவதும் வறுமையை ஒழிக்க அறிவியலை பயன்படுத்திடலாம் என்று கூறினால், அதற்கு பலத்த எதிர்ப்பு உள்ளது. வறுமையில் வாடுவோர், இது தங்களது தலைவிதி எனக்கருதி அல்லல் வாழ்க்கை வாழ்ந்திட நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். அவர்களுக்கு அறிவியலின் பிரமாண்டமான வளர்ச்சி உரிய பலனை ஏற்படுத்துவதில்லை.

அறிவியல் யதார்த்தவாதம்
எனவே, வர்க்கப் போராட்டத்தின் எதிரொலியாகவே அறிவியல் களத்தில் தத்துவப் போராட்டங்கள் நிகழ்கின்றன. பொருள் முதல் வாதம் சார்ந்த அறிவியல் யதார்த்த வாதம் ஒருபுறம் கருத்து முதல்வாதம் சார்ந்த அறிவியல் பற்றிய பார்வைகள் மறுபுறம், என இரு முகாம்கள் இன்று கருத்துரீதியாக மோதிக் கொள்கின்றன.
சிறந்த சிந்தனையாளரும், சிறந்த இயற்பியல் அறிவிய லாளருமான டி.ஜெயராமன் மேற்கண்ட போராட்டத்தை தனது கட்டுரை ஒன்றில் விளக்குகிறார். (ஆங்கில மார்க்சிஸ்ட், ஜனவரி – மார்ச் 2007) இந்தப் போராட்டத்தில் கருத்துமுதல்வாதிகளின் கை ஓரளவு ஓங்கியுள்ளதாக அவர் வருத்தத்தோடு குறிப்பிடுகின்றார். இது சமீப ஆண்டுகளில் ஏற்பட்ட ஒரு போக்கு. இதற்கு வலுவடைந்து வரும் உலகப் பன்னாட்டு மூலதன ஆதிக்கமும் முக்கிய காரணம். அறிவியல் யதார்த்த வாதத்தைப் பாதுகாக்கவும், வளர்த்திடவும் மேலும் வலுவான சித்தாந்தப் போராட்டத்தை நடத்திட வேண்டியுள்ளது.
அறிவியல் யதார்த்தவாதம் என்பதை எப்படி வரையறுப்பது?
அறிவியல் யதார்த்தவாதம் என்பதை பல அறிவியல் தத்துவவாதிகள் விளக்கியுள்ளனர். இதில் கிறிஸ்டோபர் நோரிஸ் எனும் தற்காலத்திய தத்துவவாதியின் வரையறுப்பே சிறந்ததாக ஜெயராமன் குறிப்பிடுகிறார். நோரிஸ் முதலில், மிக அடிப்படையான விஷயமாக எடுத்துக்கொள்வது புற உலகின் இருப்பு, இதுதான் துவக்கப்புள்ளி. இந்தப்புற உலகு பொருட் களால் ஆனது. நமது அகம் (மனம்) புற உலகைப் பற்றி சிந்தித்து உண்மைகளை ஆராய்கிறது. இதையொட்டி பல கருத்துக்கள் உருவாகின்றன. புற உலகு பற்றி, அக உலகில் ஆயிரம் விளக்கங்கள், ஆயிரம் வரையறைகள், நம்பிக்கைகள் தோன்ற லாம். ஆனால் இவையெல்லாம் உண்மையானவையா பொய்யா வையா, என்பதைத் தீர்மானிப்பதற்கு எது உரைகல்?. யதார்த்த மான, நிஜமான, புற உலகு பற்றிய அறிவியல் பரிசோதனை சார்ந்த புரிதல்தான்.

அறிவியல் யதார்த்த வாதம் பல பரிசோதனை நடைமுறை களை அடிப்படையாகக் கொண்டது. தெரிந்தவைகளைக் கொண்டு, தெரியாதனவற்றை அறிவது, காரண காரியத் தொடர்பு களிலிருந்து உண்மைகளை அறிவது, தெரிந்த உண்மைகளிலிருந்து கருதுகோள்களை (Hypothesis) உருவாக்கி, அவற்றை பரிசோதனைகளுக்கு உள்ளாக்குவது போன்ற வழிமுறைகள் அறிவியல் யதார்த்தவாதத்திற்கு முக்கியமானவை. இத்தகு பரிசோதனை செயல்பாடுகளிலிருந்து கண்டறிந்த அறிவியல் கோட்பாடுகளும், உண்மைகளும்தான் நடை முறையில் பயன்படுத்தப்பட்டு பல வெற்றிகரமான படைப்பு களுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும் இட்டுச் சென்றிருக்கிறது. நோய்களைக் குணப்படுத்துவது, விமானங்களை வானில் செலுத்துவது, உள்ளிட்ட ஏராளமான மனித சாதனைகள் அனைத்தும் இத்தகைய அறிவியல் பரிசோதனைகளால் வந்தடைந்த உண்மைகளால்தான் உருவாக்கப்பட்டன.

ஒரு கருத்து உண்மையானதா என்பதை யதார்த்த நிலை பற்றிய அறிவாராய்ச்சிகள்தான் முடிவுக்கு வரவேண்டும். மாறாக, ஒருவர் கொண்டுள்ள நம்பிக்கைக்கு அக்கருத்து ஏற்றதா என்று பார்த்து அவர் உண்மையை தேடுதல் கூடாது.
புற உலகைப் பற்றிய உண்மைகளில் பலவற்றை மனித சமுதாயம் கண்டறிந்துள்ளது. சில இன்னமும் அறியப்படாமல் உள்ளது. பின்னாளில் இவைகளும் அறியப்படக் கூடும். சில தற்போது நமக்குள்ள பரிசோதனை செயல்பாடுகளுக்கும், பரிசோதனைக் கருவிகளுக்கும் அப்பாற் பட்டதாக உள்ளதே தவிர, அவற்றை அறிய முடியாதது என்பதில்லை. இன்னமும் அறியப்பட வேண்டுவன இருக்கிறதே அன்றி, அறிய முடியாதது எதுவுமில்லை என்பதே அறிவியல் யதார்த்தவாதத்தின் மிக முக்கியமான கருப்பொருள்.
அறிவியல் தத்துவப் பார்வைகள்
பொருளின் இருப்பைத் துல்லியமாக அறிவது என்பது ஒரு சிக்கலான நிகழ்வு. இதையொட்டி தத்துவத்தில் இரண்டு உட்பிரிவுகள் உள்ளன. ஒன்று, பொருளின் இருப்பு பற்றியது (Ontology) மற்றொன்று பொருளை அறிவது (Epistemology). இந்த நுட்பமான இரண்டு தன்மைகளை ஒன்றிணைந்த வகையில் அறிவியல் யதார்த்தவாதம் அணுகுகிறது. இந்த பார்வைக்கு மாறாக பல்வேறு அறிவியல் தத்துவப் பார்வைகள் உருவாகியுள்ளன.

உதாரணத்திற்கு, தத்துவவியலாளர் ஹீயும் ‘பொருளின் இருப்பையும், அதன் தன்மைகளையும் அறிந்து கொள்வது இயலாது; அப்படி அறிய முயற்சித்து நாம் வந்தடையும் கருத்துக்கள் உண்மையானவை என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை‘ என்று வாதிடுகிறார். இதே போன்றே பெயரோ பெண்ட் என்பவர் ‘பொருளை பற்றி நாம் பெறும் முடிவுகள் தாறுமாறாகவும் இருக்கலாம்’ என்று கூறுகிறார். அதாவது, பொருளை அறிய முடியாது என்ற முடிவுக்கு சூசகமாக இந்த பார்வைகள் இட்டுச் செல்கின்றன. இதன் மூலம் அறிவியலின் பயன்பாட்டை, வெகுமக்கள் திரளுக்கு பலன் கிட்டுவதற்கு பதிலாக, அதனை குறுக்கிட முயற்சிக்கின்றனர்.

இதுபோன்று ஏராளமான போக்குகள் அறிவியல் தத்துவத் துறையில் (Philosophy of Science) தொடர்ந்து உருவாகி வந்துள்ளன. இவை அறிவியல் யதார்த்தவாதத்தை உருக் குலைக்க முயற்சிக்கின்றன. இதன் மூலம் அறிவியல் துறை, பொருள் முதல் வாதத்தோடு கொண்டுள்ள இயல்பான இணைப்பைத் துண்டிக்க முயற்சிக்கின்றனர். உண்மையில் அறிவியல், பொருள் முதல்வாதத்தோடு பிரிக்க இயலாத பிணைப்பு கொண்டது.

ஒரு அறிவியல் யதார்த்தவாதி, மார்க்சிய பொருள் வாதத்தின் பல நிலைப்பாடுகளை ஏற்றுக் கொள்ளாதவராகக் கூட இருக்கலாம். உதாரணமாக, மார்க்சிய பொருள் முதல் வாதம் சமூகத்தை ஆராய்கிறபோது, பொருளாதார உறவுகளும், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியும்தான் சமூகத்தின் அடிப்படை கட்டுமானமாக காண்கிறது. இந்த அடிப்படை மீதுள்ள மேற்கட்டுமானம் தான், சமயம், அரசியல், நீதி உள்ளிட்ட பல நிறுவனங்கள். இதை ஒரு அறிவியல் யதார்த்தவாதி ஏற்றுக் கொள்ளாமல் கூட இருக்கக் கூடும். ஆனால், பொருள் முதல்வாதம் வலியுறுத்துகிற, பொருள்தான் சிந்தனைக்கு அடிப்படை என்பதை அவர் ஏற்றுக் கொள்கிறார். பொருளின் இருப்பே, பல பரிசோதனை செயல்பாடுகள் மூலம் பொருட்களின் தன்மைகளையும், அவை பற்றிய உண்மைகள் மற்றும் கோட்பாடுகளையும் கண்டறிய உதவுகிறது. இந்த வகையில் மார்க்சிய பொருள் முதல்வாதத்தின் பிரிக்க முடியாத உடன்பிறப்பாக அறிவியல் யதார்த்தவாதம் அமைகிறது.

போலி அறிவியல்
இந்த போக்குகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட, போலி அறிவியல் என்பது இன்று, உலா வருகிறது. இது இந்தியாவில் இந்துத்துவா வடிவத்தில் ஊடுருவி வருகின்றது. இஸ்லா மியர்கள், கிறித்துவர்கள் போன்றோரைவிட இந்துக்கள் தான் உயரிய நாகரிகம், பண்பாடு, பாரம்பரியம் கொண்டவர்கள் என்ற கருத்து இந்த போலி அறிவியலின் உட்கருத்து. இதனை நிறுவிட, வேத காலம் பொற்காலம் என்ற வாதத்துடன், இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாம் அன்றே கண்டு பிடிக்கப் பட்டன என்று கூறி போலி அறிவியலைப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். வேத கணிதம், வேத ஜோதிடம் என்ற அவர்களது சரக்கெல்லாம் இந்த வகை சார்ந்ததே. இந்துக்களை மதவெறி அடிப்படையில் ஒன்றுபடுத்தி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதே இந்த போலி அறிவியலின் நோக்கம்.

தற்போது நடைபெற்று வருகின்ற இராமர் பாலச் சர்ச்சை இதற்கோர் உதாரணம். நம்பிக்கை என்ற அளவில் இருப்பவற்றை அறிவியல் உண்மை போன்றும், வரலாறாகவும் சித்தரித்து, தங்களது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனை இன்று இந்திய இந்துத்துவவாதிகள் போலி அறிவியலை பயன்படுத்துகின்றனர். ஆனால் ஹிட்லர் காலத்தி லேயே இது பாசிசத்திற்குப் பயன்பட்டது. குரங்கிலிருந்து பரிணாமம் அடைந்தவன்தான் மனிதன் என்பது டார்வினின் அறிவியல் ரீதியான கண்டுபிடிப்பு. ஆனால் இதைப் பயன்படுத்தி, பரிணாம வளர்ச்சியில் முழுமையடைந்த அதிக ‘சுத்தமான‘ இனம், வெள்ளை ஜெர்மானிய ஆரியர்களே என்றும், உயர்ந்த பண்பாட்டு நாகரீகம் அவர்களுடையது என்றும் ஹிட்லரும், அவனது கூட்டமும் பிரச்சாரம் செய்தது. அறிவியல் போர்வையில் பரப்பப்பட்ட இந்த போலி அறிவியல் கருத்து, இலட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவிப்பதில் முடிந்தது. இந்திய நாட்டிலும் இதே வகையிலான இந்துத்துவ போலி அறிவியல் பல்லாயிரக்கணக்கான மக்கள் அழித்திடக் காரணமாக அமைந்தது. இது தொடர வேண்டுமா என்பதே தற்போதுள்ள முக்கிய கேள்வி.

இந்துத்துவாவை அரசியல் களத்தில் எதிர்த்துப் போராடினால் மட்டும் போதாது. மேற்கண்டவாறு அறிவியல் போர்வையில் பரப்பப்படும் மூடத்தனங்களை எதிர்த்த போராட்டமும் தேவை. இந்த போலி அறிவியலுக்கு எதிராக அறிவியலுக்கு யாதார்த்தவாதம் அமைந்துள்ளது. இயக்கவியல் பொருள் முதல்வாதத்தின் பிரிக்க முடியாத அம்சமாக அறிவியல் யாதார்த்தவாதம் அமைந்துள்ளது. மார்க்சிஸ்டுகள் அறிவியல் யதார்த்தவாதம் காக்கவும், வளர்க்கவும், தத்துவத்துறையில் போராட வேண்டும்.

கம்யூனிஸ்ட்டுகள் சித்தாந்தத் துறையில் ஆற்ற வேண்டிய கடமைகளை கீழ்க்கண்டவாறு குறிப்பிடலாம்.
பல்வேறு நம்பிக்கை கொண்டோராக மக்கள் இருப்பினும், நம்பிக்கை வைத்துக் கொள்வதற்கான அவர்களது உரிமையை மதிக்க வேண்டும். (இதற்கு விதிவிலக்காக மூடநம்பிக்கைகளையும், ஒடுக்குமுறை நம்பிக்கைகளையும் அணுகிட வேண்டும்.)

  1. இதனால் மக்களிடம் ஏற்படும் நெருக்கத்தை வர்க்கப்போராட்ட அணி திரட்டலுக்கு பயன்படுத்த வேண்டும். இதன் ஊடாக, அறிவியல் பார்வையை அவர்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
  2. போலி அறிவியலை அடையாளம் கண்டு அம்பலப்படுத்த வேண்டும்.
  3. அறிவியல் துறையில் குழப்பங்களை ஏற்படுத்தி வரும் பல கருத்து முதல்வாத போக்குகளுக்கு எதிராக, அறிவியல் யதார்த்தவாதத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டும்.
  4. அறிவியல் யதார்த்த வாதத்திற்கு அஸ்திவாரமாக விளங்கிடும் இயக்கவியல் பொருள் முதல் வாத அணுகுமுறையை சமூகத்தின் சிந்தனையாக மாற்றிட முயற்சிக்க வேண்டும்.

இவை அனைத்தையும், வரிசைக்கிரமமாக, நிகழ்ச்சி நிரல் அமைத்து செயல்படுத்துவது இயலாது. இந்தப் பணிகளை கம்யூனிஸ்ட்டுகள், சிறப்பாக மேற்கொள்வதற்கு வாய்ப்பான தளம், உள்ளூர் சமூகம். உள்ளூர் சமூக மக்களின் உணர்வு மட்டம் அறிந்து அதற்கேற்ற வகையில் மேற்கண்ட ஐந்து வகை சித்தாந்தக் கடமைகளை கம்யூனிஸ்ட்டுகள் மேற்கொள்ள வேண்டும்.

இந்த சித்தாந்தப்பணி மிக முக்கியமானது. இதில் கம்யூனிஸ்ட்டுகள் அடையும் வெற்றி, சமூக மாற்றத்தை, சோசலிசத்தை சாத்தியமாக்குவது. ஏனெனில், தத்துவத் துறையில் எடுத்துச் செல்லப்படுகிற கருத்துக்கள் மக்கள் மனதை இறுக்கமாகக் கவ்விப் பிடிக்கின்ற போது, அந்தக் கருத்துக்கள் ஒரு பெரும் சக்தியாக மாறிடும். மார்க்ஸின் வார்த்தைகளில் அது “பௌதீக சக்தியாக” (Material Force) மாறிடும்.Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: