“இரண்டு தேசங்கள்”


தமிழில் : ஆர். கோவிந்தராஜன்

‘லெனின் நினைவுக்குறிப்புகள்’ என்ற புத்தகத்தில் லெனின் துணைவியார் க்ரூப்ஸ்காயா எழுதுகிறார், அவரும் தோழர் லெனினும் 20 ம் நூற்றாண்டின் துவக்கத்தில் நாடு கடத்தப்பட்டு லண்டனில் இருந்த பொழுது அவர்கள் மேல்தட்டு முதலாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி சென்று வரும் பரூருக்கு பேருந்தில் பயணம் மேற்கொள்வதுண்டு; தொழிலாளி வர்க்க மக்கள் வாழும் தெருக்களில் நடந்து செல்வதும் உண்டு. லண்டனின் இரண்டு முகங்கள் லெனின் கவனத்திற்கு வந்தன; ஒரே நாட்டில் “இரண்டு தேசங்கள்” என்று அவர் அடிக்கடி குறிப்பிடுவார்.
நீண்ட நெடிய காலனி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தின் வழி நம்நாடு விடுதலை பெற்று 60 ஆண்டுகள் முடிந்துவிட்டன; அதன் விளைவாக நவீன இந்திய தேசம் எழுந்தது, ஆனால் லெனின் விளக்கியதுபோல் ஒரே நாட்டில் இரண்டு தேசங்கள் உருவாகி வரும் ஒரு யதார்த்த நிலையில் நாம் உழன்று கொண்டிருக்கிறோம், இந்தத் துணைக்கண்டத்தை பிரிவினைக்கு உட்படுத்திய “இரண்டு தேசங்கள்” கொள்கை மிகத் தவறானது என்பதை நாம் உணர்ந்திருக்கிறோம், அப்படி ஒரு பிரிவினைக்கு உட்படுத்தப்பட்ட இந்துக்களும், முஸ்லீம்களும் தனித்தனியான வேறுபட்ட அம்சங்களைக் கொண்ட தேசிய இனங்கள் அல்ல, ஆனால். புதிய தாராளமயம் நியாயம் போல் தோற்றமளிக்கக் கூடிய ஒரு பிரிவினையை – இரண்டு “தேசங்களை” – இந்த நாடு ஏற்குமாறு செய்திருக்கிறது; இதை மார்க்சீயக் கோட்பாடு நெறிகளின்படி. ஒரு கறாரான ஆய்வுக்கு உட்படுத்த முடியாதென்றாலும். இந்திய சூழலில் அது லெனின் கருத்துக்கு நல்ல செறிவூட்டும் விளக்கமாக அமைந்துள்ளது,
இந்த இடைவெளியினூடே நாம் கவனத்தை ஈர்க்கும் அம்சம் என்னவென்றால். “இரண்டு” “தேசங்களில்” ஒன்றான “செல்வந்தர்களின் தேசம்” அது முதல் உலகத்தை (பொருளாதார ரீதியில் வளர்ச்சி பெற்ற) சேர்ந்தது என நம்புவதும், அந்த உலகம் தன்னை ஏற்றுக்கொள்ளவேண்டும் என விரும்புவதும் தான். அதன் சொந்த உணர்வின்படியே அதை ஏற்றுக் கொள்ளக் கூடிய “நல்வாய்ப்பு நிலை” இருப்பதாக எண்ணக்கூடும்; அதுவே முதல் உலகின் நிலைப்படிம வரிசையில் சற்றே கீழான நிலையாக இருந்தாலும் சரிதான், மற்றொரு தேசமான “ஏழைகளின் தேசம்” மூன்றாம் உலகில் ஆழப்பதிந்துள்ளது, மூன்றாம் உலகில் விரவி நிற்கும் அதே வறுமையினை அந்த தேசம் அனுபவிக்கிறது, சிலர் இந்த இடைவெளியினை “செல்வந்தரின் பிரிவினை செயல்” எனச் சிலர் குறிப்பிடுகின்றனர், எவ்வகையான விளக்கத்தைக் கொடுத் தாலும் சரி, நாடு இரண்டு முழுமையான தனித்து மாறுபட்ட பகுதிகளாக உடைந்து நிற்கிறது என்பது ஐயத்துக்கு இடமின்றி தெளிவாகத் தெரிகிறது.

ஏகாதிபத்தியத்தோடு ஒட்டுறவு
ஒரு மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது, காலனி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தில் உருவான நாடு இரண்டு தனிக் கூறுகளாக உடைந்து கொண்டிருக்கும் நாடாக மாறிக்கொண்டிருக்கிறது. வர்க்க அடிப்படையில் பார்த்தால் இந்த மாற்றம் ஏகாதிபத்தியத் தோடு பெரு முதலாளி வர்க்கம் ஏற்படுத்திக் கொள்ளும் உறவில் ஏற்படும் மாற்றம் தான் அது என்பதைப் புரிந்து கொள்ள முடியும், அந்தப் பெரு முதலாளி வர்க்கம் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தை தலைமையேற்று நடத்தியது; ஆகவே, பல்வேறு ஊசலாட் டங்களும், சமரசப்போக்குகளும் இருந்தபோதிலும் அது மக்கள் முகாமைச் சேர்ந்திருந்தது. அந்த நிலையிலிருந்து ஏகாதிபத்தியத்தோடு கூட்டாக இணைந்து மக்களைக் கைவிட்டு, உண்மையில் மக்கள் நலன்களுக்கு எதிராகச் செயல்படும் நிலைக்கு மாறியிருக்கிறது, அப்படி மாறுவது உலகமயக்காலக்கட்டத்தில் ஏகாதிபத்தியம் கொடுக்கும் அழுத்தமான நிர்பந்தங்களால் மட்டுமல்ல; ஏகாதிபத்தியத்திற்கு நேர்எதிரில் அதனைச் சாராமல் சுயநிர்ணய உரிமையோடு முதலாளித்துவத்தைக் கட்ட வேண்டும் என்ற அதன் ஆசை கடுமையான முரண்பாடுகளில் சிக்கிக் கொண்டிருக்கிறது, உலகமயம் அது செழிக்க புதிய மேய்ச்சல் நிலங்களை திறந்துவிட்டிருந்த போதிலும் அந்த முரண்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன.

காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற பிறகு இந்திய அரசின் சுயநிர்ணய உரிமையின் மீதான விருப்பம் இரண்டு அம்சங்களில் வெளிப்பட்டது. ஒன்று, பொதுத்துறை. இரண்டு, அணி சேராக் கொள்கை (வெளிநாட்டுறவில்). புகழ்பெற்ற மார்க்சீய அறிஞர் மைக்கேல் காலேக்கியின் கருத்தினை நாம் கவனத்தில் கொள்வோம்: காலனி ஆதிக்க முடிவுக்குப் பிறகு உருவான அரசு அமைப்புகளை அவர் ‘இடைப்பட்ட அரசு அமைப்பு’ என்று குறிப்பிட்டது சற்றே பொருத்தமற்றதாக இருந்தாலும், மேற் சொன்ன இரண்டு அம்சங்களும் அந்த அரசின் கொள்கைகளாக இருப்பதை மிகச் சரியாகவே அடையாளங்கண்டார். மூன்றாம் உலக நாடுகளில் சோவியத் யூனியன் உதவியோடு உருவான பொதுத்துறை வளர்ந்த முதலாளித்துவ நாடுகளின் மூலதன பலத்தை எதிர்க்கும் வலுவான அரணாக இருந்தது. உள்நாட்டில் தொழில் வளர்ச்சிக்கான அடித்தளம் உருவாக்கவும். தொழில் நுட்பத்தில் சுயசார்புத் தன்மை பெறவும், திறனும் பயிற்சியும் அடித்தளமாகக் கொண்ட பொருளாதாரத்தை மேலும் வளர்த்தெடுக்கவும், அந்தப் பொதுத்துறை பயன்படுத்தப்பட்டது. உள்நாட்டு முதலாளிகள், விவசாயத்துறையில் உள்ள கிராமப்புற விவசாயிகள் மற்றும் நிலப்பிரபுத்துவ முதலாளிகள் வளர்ச்சியடையவும் பயன்படுத்தப் பட்டது. அணி சேராக்கொள்கை ஏகாதிபத்தியத்திடமிருந்து விலகி நிற்பதற்கு உதவியது; அதன் மூலம் சோவியத் யூனியனோடு உறவு கொள்வதற்கு கதவுகள் திறந்து வைக்கப்பட்டன. ஓரளவு சுயநிர்ணய உரிமையுடன் தொடரும் முதலாளித்துவ வளர்ச்சிப் பாதைக்கு அது முக்கியமான தேவையாகவும் இருந்தது.

ஏகாதிபத்தியம் இந்த இரண்டு அம்சங்கள் கொண்ட மூன்றாம் உலக நாடுகளின் அரசு கொள்கையினை கடுமையாகத் தாக்கியது. அது முதலில் பொதுத்துறையினை புறக்கணித்ததின் மூலம் தனது தாக்குதலை தொடங்கியது; பின்பு அதனூடே உலக வங்கி போன்ற அமைப்புகளின் ‘உதவி’ என்ற பெயரில் ஊடுருவி அதைச் சீர்குலைக்கும் வேலையினை அது தாக்கியது, இப்போதும் தொடர்ந்து அந்தத் தாக்குதல் நடைபெறுகிறது. ஜான் ஃபாஸ்டர் டல்லன் காலத்திலிருந்து, இன்றைய காண்டிலீசா ரைஸ் (அமெரிக்க வெளி விவகார அமைச்சர்) காலம் வரை கடுமை குறையாமல் தொடர்ந்து இந்தத் தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

உலகமய காலத்தில் குறிப்பாக, அரசுக் கொள்கையின் இந்த இரண்டு அம்சங்களும் தான் கைவிடப்படுகின்றன என்பது நமக்கு நல்ல படிப்பினையாக இருக்கிறது. பொதுத்துறையினை தனியார் மயமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இடதுசாரி சக்திகளின் தலையீடு இல்லாதிருந்தால் அது முடிவுற்றிருக்கும். ஏகாதிபத்தியத்தோடு நெருங்கிய உறவினை ஏற்படுத்திக்கொள்ள அணி சேராக்கொள்கை கைவிடப்படுகிறது. இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் அதற்கு நல்ல உதாரணமாகும். இவையெல்லாம் எதைச்சுட்டிக்காட்டுகிறது? பெரு முதலாளி வர்க்கம் மக்களுக்கெதிராகத் திரும்பியதையும், ஏகாதிபத்தியத்து டனான உறவில் அதனை சார்ந்து நிற்கும் மாற்றத்தையும் சுட்டிக்காட்டுகிறது. ஒப்பீட்டளவில் முதலாளித்துவம் ஓரளவு சுய நிர்ணய உரிமையோடு வளர்ச்சி காணும் திட்டம் மாற்றப்பட்டு உலகமயகாலத்தில் ஏகாதிபத்தியத்தோடு பெரிய அளவில் இணைந்து காணும் முதலாளித்துவ வளர்ச்சிக்கான மாற்றுத் திட்டம் முன்வைக்கப்படுகிறது. லெனின் விளக்கியபடி, ‘இரண்டு தேசங்களில்’ ஒன்றான பெருமுதலாளி வர்க்கத்தையும் அதனோடு அட்டைபோல் ஒட்டிக் கொண்டிருப்போரை உள்ளடக்கிய “செல்வந்தர்களின் தேசம்” முதல் உலகின் பகுதியாகவே இருக்க விரும்புகிறது.

ஒதுக்கப்படுவோர் துடைக்கப்படுதல்
தாங்கள் உண்மையான ஒரே தேசம் என்றும், தேசத்தை முழுமையான உருவகம் கொடுப்பதும் தாங்கள் தான் என்றும் இந்த “செல்வந்தர்களின் தேசம்” தனது சிறப்புக் குறியீடாக முன்வைக் கிறது. அதே உலக மயக் கொள்கைகளால் மிகப்பெரிய விவசாய நெருக்கடியினைச் சந்தித்துக் கொண்டிருக்கிற, வேலையின்மை மற்றும் பற்றாக்குறை வேலை வாய்ப்பிலும் துன்புற்று உழல்கிற, பட்டினியாலும் கடன்சுமையாலும் பலரும் முழுகிக் கொண்டிருக்கிற, பலரும் வாழ்வின் கடைநிலைக்கு ஒதுக்கப்பட்டு பொருளாதார வாழ்வுரிமை முற்றிலும் பறிக்கப்பட்டிருக்கிற மற்றொரு “தேசம்” இருக்கிறது என்பதை அவர்கள் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். கருத்துக்களை உருவாக்கும் திறன்கொண்ட அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள் அந்த “செல்வந்தர் தேசம்” தான் “உண்மையான தேசம்” என்று காட்டுவதில் அளவுக்கதிகமான முயற்சிகளை மேற்கொள்ளுகின்றன. அந்த தேசத்தின் இன்பமான வாழ்க்கைதான் “ஒளிரும் இந்தியா” என பறைசாற்றப்பட்டது; அவர்கள் அறுவடை செய்த பொருளாதாரச்செல்வச் செழிப்புதான் “தேசத்தின் முன்னேற்றம்” என்று வர்ணிக்கப்பட்டது.

இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை இடதுசாரிகள் நிராகரித்தது குறித்த கருத்தை வெளியிடும்போது, இந்தக் கருத்து உருவாக்கும் ஊடகங்களின் பங்கு என்ன என்பது பளிச்செனத் தெரிந்தது. ‘நமது குழந்தைகள்’ அமெரிக்காவுக்குப் போய்க் கொண்டிருக்கும் வேளையில், எப்படி இதை ஒருவர் நிராகரிக்க முடியும் என ஆச்சரியமடைகிறார். ஒரு பத்திரிக்கை விமர்சகர், “ தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்” (ஆகஸ்ட் 23, 2007) தனது தலையங்கத்தில் எழுதியது : இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கு இடதுசாரிகள் காட்டும் உடனடியான எதிர்ப்பு நாட்டில் நிலவும் கருத்திசைவுக்குள் நுழைய அவர்களின் இயலாமையினையும், இதில் சீனாவின் நிலைக்கு ஆதரவினையும் குறிப்பிடுகிறது”. ஐயத்துக்கிடமின்றி ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. இந்தப் பிரச்சனையில் எந்தவிதமான கருத்துக் கணிப்பும் மாதிரி ஆய்வும் நாடு முழுமைக்கும் நடத்தப்படவில்லை; அந்தத் தலையங்கம் சொல்லுகிற கருத்திசைவு என்பது எஸ்.எம்.எஸ். செய்திகள் மூலம் கருத்துச் சொல்லுகிறவர்களின் கருத்து தான் என்பது தெளிவு. தங்கள் குழந்தைகளை அமெரிக்காவிற்கு அனுப்புவர்களையும், தொலைக்காட்சியில் “விவாதங்கள்” என்ற பெயரில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் பங்கு பெறுபவர்களும் அதையொட்டி எஸ்.எம்.எஸ் செய்தி அனுப்புபவர்களும் (எல்லோரும் அதே கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் தான்) உள்ள தேசம் அது. அந்த “செல்வந்தர்களின் தேசம்” இந்திய தேசமாகத் தன்னைத்தானே சுவீகரித்துக்கொள்கிறது.

பகட்டான வாதங்களால் அந்த ஒப்பந்தத்தை நியாயப்படுத்த முனைவோர் அமெரிக்காவுடன் வைத்துக் கொள்ளும் கேந்திரமான கூட்டணி பற்றி வெளிப்படையாக எதுவும் கூறுவதில்லை. அணி சேராக் கொள்கையினை பற்றி நிற்பதாகச் சொல்லிக்கொண்டே நாட்டின் எரிசக்தி தேவையினைப் பூர்த்தி செய்வதற்கான ஒப்பந்தம் இது என வாதிடுகிறார்கள். தட்பவெட்ப நிலை மாற்றம் குறித்து சிலர் வாதிடுகிறார்கள். அதாவது மின்சாரத்திற்காக நிலக்கரி எரிக்கப்படுவ தால் சுற்றுப்புறம் கெட்டு அதில் ஆபத்தான மாற்றம் நிகழ்கிறது என்றும் கூறுகின்றனர்.
ஆனால் இந்த வாதங்களில் ஆச்சரியகரமான அம்சம் ஒன்று உண்டு. அணுசக்தி மின்சாரம் தயாரிப்புக்கான செலவு அதில் கிடைக்கும் மின்சாரத்தின் விலை – இவைகளைப் பற்றி எதுவும் கூறவில்லை. தேவைப்படுகிற சக்தி எவ்வளவு? அதை எப்படிப் பெறுவது என்ற அடிப்படையில் இந்த ஒப்பந்தத்திற்கான அவர்களால் நியாயப்படுத்த முடியவில்லை. எரிசக்தி தேவையினைப் பற்றி பேசுவதெல்லாம் அமெரிக்காவுடன் ஒரு கேந்திரமான கூட்டணியினை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கத்தை மறைக்கும் செயல்களாகும். அதுதான் மேலும் மேலும் இரண்டு தேசங்களாக பிளவுபட்டுக் கொண்டிருக்கும் இந்தநாட்டின் அந்த செல்வந்தர்கள். தேசத்தின் நோக்கமும் அது தான்.

முரண்பட்ட நலன்களும் அதன் விளைவுகளும்
ஏகாதிபத்தியத்தை எதிர்கொண்டு கடைப்பிடிக்கப்படும் அணி சேராக் கொள்கையோடும் சுயநிர்ணய உரிமையோடும், சிறு உற்பத்தியாளர்களைச் சூறையாடி கபளீகரம் செய்யும் உலக முதலைகளிலிருந்து விடுவித்துக் கொண்டு எழும் ஒரு சுயநிர்ணய உரிமை பெற்ற அரசு ஒதுக்கப்பட்டவர்களின் சார்பாக தலையிட முடியும்; வாக்காளர்களை சந்திக்க வேண்டியிருப்பதால் அப்படி ஒரு நிர்பந்தத்தில் அந்த அரசு செயல்பட வேண்டியிருக்கும். இதுதான் “ஏழைகளின் தேசத்திற்கு வேண்டும். ஆனால் குறிப்பாக இதைத்தான் செல்வந்தர்களின் தேசம்” வெறுக்கிறது. இந்த இரண்டு தேசங்களின் நலன்கள் கூர்மையான முரண்பாடுகளுக்குட்பட்டவை. கீழ்க்காணும் நிகழ்வு அதை விளக்கும் – பிரதமர் விவசாயிகளுக்கென நிவாரணத் தொகுப்பு அறிவித்தார்; அது தற்கொலை எண்ணிக்கையினைக் குறைத்து விடவில்லை. ஏனெனில் அந்தத் ‘தொகுப்பு’ ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்கு பொருந்துமாறு தயாரிக்கப் பட்டவைகளாக இருந்தன.)
இப்படி நாடு இரண்டு தேசங்களாக உடைபடுவதும், அதில் “செல்வந்தர்களின் தேசம்” ஏகாதிபத்திய ஆதரவுடன் உயர்ந்து மேலே செல்வதும் நாட்டின் எதிர்காலத்தில் கடுமையான சிக்கலை உருவாக்கும். அதில் தெளிவாகத் தெரிவது ஜனநாயகத்திற்கு வரக்கூடிய ஆபத்தாகும். நாம் அறிந்த வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை என்று பரந்த அளவிலான அடித்தளத்தில் உருவான ஜனநாயகம் அடிப்படையில் ஏழைமக்களின் நலன்களைப் பாதுகாக்கும் தன்மை கொண்டது. அவர்களுக்கு கிடைக்கும் அரசியல் அதிகாரம் அவர்கள் சந்திக்கும் பொருளாதாரச் சீரழிவினைத் தடுத்து நிறுத்தவோ அல்லது அந்தப் போக்கின் திசை வழியினை திருப்பிவிடவோ சில வாய்ப்புகளை வழங்குகின்றது. மறுபக்கத்தில் செல்வந்தர் உலகின் ஏற்றத்தினை நிலை குலையச் செய்யும் இந்த பரந்த அடித்தளம் கொண்ட ஜனநாயகம் அந்த உலகின் வெறுப்புக்குரியதாகிறது. ஜனநாயக உள்ளடக்கம் தளர்ச்சியடையச் செய்து அதை ஒன்றுமில்லாத வெற்றுக் கூடமாக மாற்றவும், மக்களின் அரசியல் தெளிவினை வலுவற்றதாகக் குறைத்துவிடவும் அந்த உலகின் முயற்சிகள் இருக்கின்றன. வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்பதை முற்றிலும் அகற்றிவிட வேண்டுமென்பது அதன் விருப்பமல்ல. ஆனால் அதன் தனிச்சிறப்பினை வலிமையற்றதாக செய்துவிட வேண்டுமென்று விரும்புகிறது. அது அமெரிக்கா மற்ற நாடுகளில் திணிக்கும் ஜனநாயக முறையினை நிறுவன வடிவில் கொண்டுவர விரும்புகிறது. அதன் உள்ளடக்கம்தான் என்ன? மக்கள் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்; அரசாங்கம் நாம் விரும்பும் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும்”. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை எதிர்ப்பு இருந்தபோதும் அணு ஆற்றல் சம்பந்தமான ஒப்பந்தத்தினை செயல்படுத்த (இடதுசாரிகளின் எதிர்ப்பு இல்லையென்றால் இந்நேரம் செயல்படுத்துவது நிறைவேறியிருக்கும்.) முனைவதிலிருந்து, அந்த ‘செல்வந்தர் உலகம்’ அதற்கு பின்பலமாக இருக்கும். ஏகாதிபத்தியம் விரும்பும் அந்த வகையிலான “ஜனநாயகத்தை” நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

மக்களிடம் வேரூன்றிவிட்ட மக்களின் எண்ண ஓட்டத்தைக் கவ்விப்பிடித்திருக்கிற மக்கள் தங்களை உறுதியாக நிலை நிறுத்தக்கொள்ள வாய்ப்பளிக்கும் ஜனநாயகத்தை வலுவிழக்கச் செய்ய பல வழிகள் உண்டு. நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு மாற்றாக முழு அதிகாரம் கொண்ட ஒரு குடியரசுத்தலைவரின் ஆட்சியினை முன்நிறுத்துவது ஒரு வழி. நாடாளுமன்ற ஜனநாயகத்திற்குள்ளேயே அரசியல் பயிற்சி பெற்றோர் இடத்தில் (முதலாளித்துவ ஊடகங்களும் கருத்து உருவாக்கும் நபர்களும் அரசியல்வாதிகளை பழித்துரைக்க வாய்ப்பளிக்கும் வகையில்) அதிகாரிகள் மற்றும் தொழில் நுட்ப அறிஞர்களை ஈடுபடுத்து தலும், ‘வளர்ச்சி’ என்ற பெயரில் அனைத்து அரசியல் கட்சிகளும் கொள்கைப்பிரச்சனைகளுக்கு ஒரே மாதிரியான நிறுவன வடிவங்களைத் தேர்ந்தெடுக்க நிர்பந்திப்பதும் அதே நோக்கம் கொண்ட வழிமுறைகள் தான். அணு ஆற்றல் பற்றிய ஒப்பந்தம் தொடர்பாக பிரதமரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் சீக்கிரமே உடன்பாடு காண வேண்டுமென்று ஒரு தேசிய நாளிதழ் வற்புறுத்துகிறது. (அதாவது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்த ஒப்பந்தம் சம்பந்தமாக அதன் எதிர்ப்பினை கைவிட வேண்டும் என்பது தான் அதன்பொருளாகும்); அப்படி நடந்தால் பங்குச் சந்தையில் பதட்டம் இருக்காது. சுருக்கமாகச் சொன்னால் மக்களின் நலன்கள், நாட்டின் எதிர்காலம் இவையெல்லாம் சற்றே பின்னுக்குத் தள்ளப்பட்டு நிதி மூலதனத்தின் நலன்கள் முன்னுக்கு வைக்கப்படுகிறது.

மூலதனக்கணக்கு மாற்றம் என்பது நுழைக்கப் படுகிறபோது, நாட்டின் செயல்பாடுகளில் நிதி மூலதனத்தின் குரல் ஓங்கி ஒலிக்கத் துவங்குகிறது. பிரதமருக்கும் இடதுசாரிகளுக்கும் இடையே கருத்து மோதல் நிகழ்ந்து கொண்டிருக்கும்போதே மூலதனக் கணக்கு மாற்றத்தினைக் கொண்டுவர எடுக்க வேண்டிய வழிமுறைகளைப் பற்றி ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இது தானடித்த மூப்பாகச் செய்யப்படும் சிந்தனைக்குறைவான செயல் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இது தொலைநோக்கு திட்டம் ஒன்றின் பகுதி என்பதை உணரவேண்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s