மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


லெனின் குறித்து வரலாற்று புரட்டர்களின் ‘வெட்டலும்’, ‘ஒட்டலும்’! ம. நந்தன்


“லெனினும், ஹிட்லரும் தங்களது தீய நோக்கங்களை எவ்வாறு பிரகடனப்படுத்தினார்களோ அதே போன்று பின்லேடனும், அவருடைய பயங்கரவாத சகாக்களும் வெளிப்படுத்தியுள்ளனர்”
– ஜார்ஜ் புஷ் பேச்சு

“புஷ்ஷின் வரலாற்று ஞானம் எப்படிப்பட்டது என்பதை அனைவரும் அறிந்ததே. இப்போது லெனினை, ஹிட்லர், பின்லேடனுடன் ஒப்பிட்டதன் மூலம் புஷ் தானொரு முட்டாள் என்பதை நிரூபித்துள்ளார்”
– பிரகாஷ் காரத்

கடந்த காலங்களில் தோழர் லெனினை கடவுளுக்கு சமமாகப் போற்றி துதிபாடும் போக்கு இருந்தது. இது அறிவியல் விரோதமானது. மார்க்சியத்திற்கும் பொருந்தாதது. இந்தப் போக்கை லெனினே அவரது காலத்திலேயே கடுமையாக எதிர்த்து வந்தார்.

ஒருமுறை, ஸ்டாலினை பார்க்க வந்த ஒரு தோழர் அவரை, “வாஸ்டு” என்று அழைத்தார். இது ரஷ்ய மொழியில் ‘எஜமானனே’ என்று பொருள் படும். அதைக் கேட்டு ஸ்டாலின் சினம் கொண்டார்.

‘இது நிலப்பிரபுவை அழைக்கும் வார்த்தை ; ஒரு கம்யூனிஸ்ட்டான என்னை ஏன் இப்படி அழைக்கிறாய்’ என்று சத்தம் போட்டார்.

மார்க்சீய மூலவர்கள் யாரும் தனிநபர் துதி, தனிநபர் வழிபாட்டை என்றும் அனுமதித்ததில்லை. தனிநபர் துதி அபாயகரமானது என்பதை உணர்ந்தே கம்யூனிஸ்ட் இயக்கங்கள் இத்தகைய போக்குகள் தலை துhக்காமல் இருக்க ஜனநாயக மத்தியத்துவ கோட்பாட்டை பற்றி நிற்கின்றன.

லெனின் தூற்றல் : புதிய போக்கு
இன்று முதலாளித்துவ யுத்தமும் அதற்கான தயாரிப்பும் தொடர்கிறது. நெருக்கடி, வேலையில்லாத் திண்டாட்டம் உலக அளவில் விரிந்து வருகிறது. அதோடு சோசலிசத்திற்கு எதிராக ஊளையிடும் போக்கும் அதிகரித்துள்ளது.

முதலாளித்துவ வரலாற்றாசிரியர்கள் தற்போது உள் நோக்கத்தோடு, ‘லெனின்’ பற்றி வரலாறு எனும் பெயரில் அவதூறு மூட்டைகளை அவிழ்த்து விட்டு வருகின்றனர்.
சோசலிச நிர்மாணத்திற்காக லெனினது பங்களிப்பை அழிக்கும் நோக்கோடு 1991லிருந்து ஏராளமான நூல்கள் வெளிவந்துள்ளன. முன்பு ஸ்டாலின் பெயரையும், அவரது பங்கினையும் கொச்சைப்படுத்தியும், இழிவுபடுத்தியும்தான் முதலாளித்துவ வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வந்தனர். அன்று லெனினை எதிர்த்து எழுதுவது குறைவாக இருந்தது. ஆனால், இன்று புயல் வேகத்தில் லெனினை தூற்றிட பலர் கிளம்பி யுள்ளனர்.

இவ்வாறு லெனினது வரலாற்றை அவதூறு செய்வதன் மூலம், ‘சோசலிசம்’ என்ற அறிவியல் கொள்கையை சித்தாந்த ரீதியாக முடக்கிட அவர்கள் முயற்சிக்கின்றனர். பொய்
களையும், புனை சுருட்டுகளைiயும் மட்டுமே மூலதனமாக கொண்ட இக்கூட்டத்திற்கு முன்னணி பாத்திரம் வகிப்பது வோல்கானகாவ் எனும் ரஷ்ய வரலாற்றாசிரியர்தான்.
இவர் முன்னாள் சோவியத் படையின் தளபதியாக இருந்து, பிறகு யெல்ட்சினின் கூட்டாளியாக மாறி சோசலி சத்தை அழிப்பதில் அதிக முனைப்புடன் செயல்பட்டவர்.
அவர் ‘லெனின்’, ‘டிராட்ஸ்கி’ மற்றும் ‘ஸ்டாலின்’ ஆகியோரது வாழ்க்கை வரலாறுகளை ‘தனது பாணியில்’ எழுதி உள்ளார். அதாவது, இவர்களது வரலாறுகளை சொல்வதாகக் கூறி, அவர்களை மோசமானவர்களாக சந்தர்ப்பவாதிகளாக, கொலையாளிகளாக அவர் தனது நூல்களில் சித்தரிக்கிறார்.

‘லெனின்’ பற்றிய புத்தகத்தில் அவர் ஒரு வேடிக்கையான கருத்தை பக்கம் பக்கமாக எழுதியுள்ளார். லெனின் ரஷ்யப் புரட்சியை தலைமையேற்று நடத்தியதும், சோசலிசம் அமைத்ததும், மானுடத்தை நேசித்ததாலோ அல்லது மார்க்சியக் கொள்கையின் மீதிருந்த பற்றினாலோ அல்ல; மாறாக, ஜார் மன்னன் தனது உளவுப் படையை ஏவி தனது அண்ணன் அலெக்சாண்டரை சுட்டுக் கொன்றதுதான். இதற்கு பழிதீர்க்கவே லெனின் புரட்சி நடத்தியதாக வோல்கனகாவ் எழுதியுள்ளார். இந்த சரக்கு முதலாளித்துவ சந்தையில் வேகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

ஹிட்லரோடு இணைத்துப் பேசும் அவதூறு புராணம்
இத்தகு அவதூறு கூட்டத்தின் அணி வரிசையில் எகத்தாளமாக வருவது ராபர்ட் ஜெலட்டிலி என்ற அமெரிக்கர். இவர் எழுதிய நுhலின் தலைப்பிலேயே விஷத்தை கக்குகிறார் அவர். ‘லெனின், ஸ்டாலின், ஹிட்லர்; சமூக விபத்துக்கள்’ என்பதே அதன் தலைப்பு. பாசிச ஹிட்லரோடு, உழைப்பாளி மக்களின் விடுதலைக்குப் போராடிய தலைவர்களை சேர்த்துப் பேசுகிறார், ஜெலட்டிலி. இதன் மூலம் அவரது கம்யூனிச விரோத உள்நோக்கங்களை வெளிப்படுத்துகிறார். உண்மையில் முற்போக்காளர் முகாமையே அவர் அவமானப்படுத்துகிறார்.
இங்கு, அவர் அடுக்கடுக்காக குவித்துள்ள அவதூறு புராணம் முழுவதையும் எடுத்துக் கொண்டால் அது ஒரு பெரிய நூல் ஆகி விடும். அவர் கூறியுள்ள ஒரு அபாண்டமான பொய்யை மட்டும் இங்கு அம்பலப்படுத்திடலாம்.

ஓரிடத்தில் அவர் கூறுகிறார்: ‘லெனின் ஈவிரக்கமற்றவர், கொடூரமானவர்’ என்று எழுதுகிறார்.
இதற்கு அவர் ஆதாரங்கள் என்கிற பெயரில் சிலவற்றை முன்வைக்கிறார்.

1918 செப்டம்பரில் இத்தகைய எதிர்ப்புரட்சியாளர்கள் 765 பேர் பிடிபட்டனர். அவர்களது கொடுமைகளை விசாரித்த மக்கள் நீதிமன்றம் அவர்களை தூக்கிலிட ஆணையிட்டது. இதனை லெனின் ஆதரித்தார் என்பதுதான் ஜெலட்டிலியின் குற்றச்சாட்டு. இதை வைத்து லெனினை கொடூர மனம் படைத்தவராக அவர் வர்ணிக்கிறார்.

இந்த சம்பவத்தின் உண்மையான பின்னணியை அவர் மறைத்து விடுகிறார். இந்த காலச் சூழல் குறித்து சரியான புரிதல் அவசியமானது.

மக்கள் புரட்சியினால் புதியதாக அமைக்கப்பட்ட பாட்டாளி வர்க்க அரசை கவிழ்க்க ஏராளமான எதிர்ப்புரட்சிக் கூட்டம் சதிகளையும், சூழ்ச்சிகளையும் செய்து வந்தது. பொதுமக்கள் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. கம்யூனிஸ்டு களை சதிசெய்து கொன்றனர். இந்த வெள்ளைப் பயங்கரம் என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுவர்.

1918ஆம் ஆண்டு போல்ஷ்விக் தலைமையிலான மக்கள் ஆட்சி, பெரும் சோதனைகளை சந்தித்து வந்தது. இந்த ஆட்சிக்கு எதிராக காலனிகளை விரிவாக்க சண்டைப் போட்டுக் கொண்டிருந்த உலக ஏகாதிபத்தியங்கள் அனைத்தும் உலக ஏகாதிபத்தியங்கள் அனைத்தும் கூட்டணியை வைத்து தாக்க ஆரம்பித்தன.

புரட்சிகர ஆட்சிக்கு எதிராக ஏழு முனைகளில் ஏகாதிபத்திய எதிரிப்படைகள் சுற்றி வளைத்து முற்றுகை யிட்டிருந்தனர். உக்ரைனிய முனையில் ஜெர்மானிய துருப்புக்கள், வடரஷ்யாவில் ஆங்கிலேய படை, தென் ரஷ்யாவில் பிரெஞ்சு படை, கிழக்கு ரஷ்யாவில் ஜப்பானிய படை, விளாதி வாஸ்டாக்கில் அமெரிக்கப் படை, வோல்கா நதியில் செக் படை பிரிவினர்கள் ஆகியோர் புரட்சியை ஒழிக்கும் நோக்கத்துடன் சோவியத் ரஷ்யாவை சுற்றி வளைத்திருந்தனர்.

அவர்கள் மட்டுமின்றி, ஜார் மன்னன் படையைச் சேர்ந்த தளபதிகள் டெனிக்கின், கொல்சாக் மற்றும் கோர்னிலாவ் போன்றோர் புரட்சிக்கு எதிராக கலகம் செய்து வந்தனர்.
இதனால் ஏற்பட்ட சேதத்தினாலும், பெரும் குழப்பத்தி னாலும், புரட்சி தலைமையகமான, மக்கள் கமிசார் குழுவின் உத்திரவுகள் பெட்ரோகிராடு(லெனின்கிராடு), மாஸ்கோ ஆகிய பகுதிகள் தவிர்த்து மற்ற இடங்களில் மதிப்பிழந்த வெறும் காகிதங்களாக விளங்கின. சில இடங்களில் தகவல் தொடர்பில் இருந்த குறைபாடுகள் மாஸ்கோவின் கட்டுப்பாட்டுக்கு உள்ளடங்கிய தாக செஞ்சேனையும் இருக்கவில்லை.
ஆயினும், செஞ்சேனையும், சேக்கா எனப்படும் புரட்சி அரசின் ரகசியப் படையும்தான் ஜார் மன்னனின் கலகப்படையை எதிர் கொள்ளவும் போல்விஷசத்தை பாதுகாக்கவும் ஒரே அரணாக இருந்தன.

1917 ஆம் ஆண்டு கோர்னிலாவ் செய்த எதிர்ப்புரட்சி கலகத்தின் வீச்சு, புரட்சியினை பாதுகாக்கிற முயற்சிகள் மிகத் தீவிரமாக இருந்தாலும், அவை வலுக்குறைந்ததாக இருந்தது என்பதை எடுத்துக்காட்டியது.

இந்தச் சூழலில்தான் மேற்கண்ட எதிர்ப்புரட்சியாளர் களுக்கு மரண தண்டனையை மக்கள் நீதிமன்றம் விதித்தது.
இத்தகைய புரட்சிக்கால முடிவுகள் எவ்வாறு அமை கின்றன என்பது குறித்து வரலாற்றுப் பேராசிரியர் எரிக் ஹாப்ஸ்வாம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

‘புரட்சிகர காலங்களில் ஒவ்வொரு திருப்பத்தின் போது சில முடிவுகள் எதிர்கால இலக்கையோ, நீண்ட கால குறிக்கோளையோ மனதில் கொள்ளாமல் சட்டென்று எடுப்பது தேவையானது’ என்று குறிப்பிடுகிறார். இவ்வாறு எடுக்கும் முடிவுகள் உடனடியாக தற்காத்துக் கொள்வதற்கும் எதிர்படும் அழிவிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கும் தேவைப்படு கின்றன.

புரட்சிக் காலத்தில் சில முடிவுகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும். அப்படி எடுக்கவில்லை எனில் புரட்சியே முடிவுக்கு வந்து விடும் என்கிறபோது, யாரால் அந்த முடிவுகளின் நீண்ட கால விளைவுகளைப் பற்றி உட்கார்ந்து சிந்தித்துக் கொண்டிருக்க முடியும்? முடிவு எடுக்கவில்லை எனில் புரட்சியே முடிவுக்கு வந்து விடும் என்றால் அதன் விளைவுகள் குறித்து யோசிக்க வேண்டிய அவசியம் என்ன? இத்தகைய கேள்விகளை ஹாப்ஸ்வாம் எழுப்புகிறார். இந்த இக்கட்டான புரட்சிக்கு கடும் ஆபத்தும், நெருக்கடியும் லெனின் மேற்கண்ட நிலைபாட்டை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

லெனினிசம் வன்முறைத் தத்துவமா?
ஜெலாட்டிலி அடுத்து எடுத்து வைக்கிற அவதூறு, லெனினிசத்தைப் பற்றியது. லெனின் மட்டுமல்ல, லெனினிசமே கொடூரமான கொலையாளிக் கொள்கை என்று அவர் எழுதுகிறார்.

ஜெலாட்டிலி வக்காலத்து வாங்குகிற அதே ஏகாதிபத்திய சித்தாந்தப் பாசறையைச் சார்ந்த அமெரிக்க முன்னாள் ராணுவ மந்திரி ரம்ஸ் பீல்டு சதாம் ஹூசைன், ஹிட்லர் போன்றவரோடு சேர்த்து லெனினும் ஒரு தோல்வியடைந்த மிருகத்தகமான சர்வாதிகாரி என்று குறிப்பிட்டார். அதே போன்று அவரது அரசியல் குருவான ஜார்ஜ் புஷ் சமீபத்தில் லெனின், ஹிட்லர், பின்லேடன் ஆகியோரை சேர்த்து கொலைகார சர்வாதிகாரி களாக குறிப்பிட்டார்.
ஆனால், இதே கூட்டம்தான் ஈராக்கில் ஆறு லட்சம் அப்பாவி மக்களைக் கொன்று அவர்களது பிணங்களின் மீது தங்களது இலாப வேட்டையை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
ஜெலாட்டிலி லெனினை கொலைகார சர்வாதிகாரியாக சித்தரிப்பதன் மூலம் புஷ் கூட்டத்தின் ஏகாதிபத்திய அஜண்டாவை நிறைவேற்றத் துடிக்கிற கைக்கூலிய என்பதை நிரூபித்திருக்கிறார்.

இது ஒரு புறமிருக்க, மனிதாபிமானம் என்ற கோணத்தி லேயும் கூட லெனின் பலாத்காரத்தை ஆதரித்தவர் என்று எழுதுகின்றார். அதிகாரத்தை அடைவதற்கு – அதிகாரத்தை அடைகிற அந்த பேராசைக்கு மனித உயிர்களை பலிவாங்க லெனின் தயங்கியதில்லை என்று அவர் எழுதுகின்றார்.
இடதுசாரிகள், மார்க்சிஸ்ட்டுகள் மட்டுமல்ல, சாதாரண சுயசிந்தனை படைத்த, முற்போக்குவாதிகள் யாராக இருப்பினும் மேற்கண்ட கருத்து எந்த அளவிற்கு உண்மைக்கு புறம்பானது என்பதை அறிவார்கள். இந்தக் கருத்துக்குப் பின்னணியாக முதலாளித்துவ பிற்போக்கு உள்நோக்கம் உள்ளது என்பதை அவர்கள் அறிவர்.

முற்போக்கு முகாம் சாராத நடுநிலை சார்ந்த வரலாற்றாசிரியர்கள் கூட ஜெலாட்டிலியின் நிலையை மறுக்கிறார்கள்.

இத்தகைய ஒரு ஆய்வாளரான பேராசிரியர் கிறிஸ்டோபர் ரீடு கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.
“சிலர் பிறப்பிலேயே வன்முறையாளர்கள்; சிலர் வன்முறையால் சிலவற்றை சாதிக்கின்றனர்; சிலர் மீது வன்முறை திணிக்கப்படுகிறது; லெனின் ஒரு வன்முறையாளர் அல்லர்; என்றுமே லெனின் வன்முறையை விரும்பவுமில்லை; எந்த ஒரு நாகரீக மனிதனைப் போன்றே வன்முறையற்ற வாழ்க்கையை வாழ்ந்திட அவர் முயன்றார்…”
இவ்வாறு ரீடு லெனினது வாழ்க்கைப் பற்றி சிலாகித்துக் கூறுகிறார். இதற்கென்று ஒரு சம்பவத்தையும் வரலாற்றுச் சான்றாக சுட்டிக் காட்டுகின்றார்.

“1917ஆம் ஆண்டில் லெனின் கூறினார். தங்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்படுகிற சூழலைத் தவிர மற்ற சமயங்களில், தொழிலாளிகள் வன்முறையை பயன்படுத்திடக் கூடாது…”

“… லெனினோ அவரது போல்ஷ்விக் கட்சியோ, நீட்சே கூறியவாறு வன்முறை என்பது ஒரு தூய்மைப்படுத்துகிற நல்லதோர் சக்தி என்பதை நிச்சயமாக ஏற்கவில்லை” (ரீடு)
உண்மை இப்படியிருக்கும் போது, விபரம் தெரியாத சில அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வாசகர்களை ஏமாற்றுகிற வகையில், லெனின் அதிகார இலக்கை அடைய வன்முறையை பயன்படுத்தினார் என்று பல தடவை மீண்டும் மீண்டும் எழுதுகிறார்.

ரஷ்யப் புரட்சியின் போது, புரட்சி ஈன்றெடுத்த புதிய மக்கள் சமுதாயத்தை பாதுகாப்பதற்கான அந்தப் போரில் உயிர்ப்பலிகள் நிகழ்ந்திருப்பது உண்மையே. உன்னதக் கொள்கைகளை பாதுகாக்க நிகழ்ந்த இந்த நிகழ்வைப் பற்றி அரைகுறை விவரங்களோடு விவரிக்கிறார் ஜெலாட்டிலி. ரஷ்யப் புரட்சிக்கு பின்னணியாக, உழைக்கும் மக்களை வேட்டையாடும் நோக்கோடு நிகழ்ந்த முதலாளித்துவ, காலனித்துவ போர்களை ஏன் பேசவில்லை?
கொலைவெறி பிடித்தது, முதலாளித்துவமே!
மக்களையும், மண்ணையும் சுரண்டுவதற்காக நடந்த வெறிப்போர்களையும், அவற்றால் நிகழ்ந்த கோடிக்கணக்கான இழப்புகளையும் ஜெலட்டிலி மூடி மறைக்கிறார். இதன் மூலம், சோசலிசமும் புரட்சியும் கொலைகாரத் தத்துவங்கள்; மற்றவையெல்லாம் அகிம்சையின் அவதாரங்களாக நாம் புரிந்து கொள்ள வேண்டுமென அவர் கருதுகிறார்.
இவ்வாறு நிழ்ந்த காலனிய போர்களில் ஏற்பட்ட இழப்புகள் சிலவற்றைப் காண்போம்.

1857 இந்திய நாட்டில் நிகழ்ந்த முதல் சுதந்திரப் போரில் ஏகாதிபத்தியவாதிகள் ஒரு கோடி பேரின் உயிரை பலிவாங்கினர். இந்த சுதந்திரப் போராட்டம் ஒரு சில மாதங்களில் ஒடுக்கப்பட்டது. ஆனால் இதையொட்டி விடுதலை வேள்வியில் ஈடுபட்ட மக்களை ஒடுக்க தாக்குதல் மேற்கொண்ட பிரிட்டிஷ் ராணுவம்தான் ஒரு கோடி பேரை அழித்தது.

வரலாற்றுப் பேராசிரியரான அம்ரீஷ் மிஸ்ரா, இதைப் பற்றிக் குறிப்பிடுகிறபோது, ஆங்கிலேயர்கள் ‘தங்கள் ஆட்சிக்கு எதிராக விடுதலைக்காக போர்க்கொடி தூக்கிய கோடிக் கணக்கான மக்களை அழிப்பதற்கு பத்தாண்டுக்கும் மேலாக தொடர்ச்சியான மனித வேட்டையை நடத்தினர்’ என்கிறார்.
ஆனால் ரஷ்யப் புரட்சியை காக்க நடைபெற்ற போர் ஆறு வருட காலம் நடைபெற்றது. 1857இல் பயன்படுத்தப்பட்ட என்பீல்டு துப்பாக்கி போன்ற ஆயுதங்களைவிட பல மடங்கு சக்தி படைத்த இயந்திரத் துப்பாக்கிகள், போர் விமானங்கள், டாங்குகள் போன்றவை பயன்படுத்தப்பட்டன.

ஜார் படையான வெள்ளை சேனை, ஏகாதிபத்தியங்களின் நவீன படைகள், செஞ்சேனை இவைகளுக்கிடையே ஆறு வருட காலம் நடந்த யுத்தத்தில் அதிகபட்சம் 20 லட்சம் பேர் இறந்தனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

ஆக, மூன்று படைப் பிரிவுகள், மற்றும் பல நாடுகள், நவீன ஆயுதங்களோடு ஆறு வருடம் நடத்திய போரில் இறந்தது 20 லட்சம். ஆனால் ஒரே படையான பிரிட்டிஷ் ராணுவம் 1857இல் பழைய ஆயுதங்களைப் பயன்படுத்தி, சில மாதங்கள் மட்டும் நிகழ்ந்த விடுதலைப்போருக்கு பதிலடியாக பத்தாண்டுக்காலம் தாக்குதல் வேட்டை நடத்தியது. இதனால் பலியான இந்தியர்கள் ஒரு கோடி பேர்.

ரஷ்யப் புரட்சிப் போரைவிட ஐந்து மடங்கு கூடுதலாக பலிவாங்கிய ஆங்கிலேயரின் அராஜகப் போர் போன்றவற்றை ஜெலாட்டிலி மிகச் சாமார்த்தியமாக மறைத்து விடுகிறார். இதன் மூலம், ரஷ்யப் புரட்சி மட்டும்தான் இரத்தம் தோய்ந்த ஒன்றாக அவர் சித்தரிக்கிறார்.

உலகம் முழுவதும் இத்தகைய ஏகாதிபத்திய உயிர்ப்பலிகள் நிகழ்ந்துள்ளன.

ஆசியாவில் மட்டும் ஏகாதிபத்தியத்தின் பொருளாதார சுரண்டலுக்கு பலியானவர்கள் 5 கோடி பேர். இதனை மைக் டேவிஸ் தனது “விக்டோரியா கால பேரழிவு” எனும் நூலில் குறிப்பிடுகிறார்.

பெல்ஜியத்தின் லியோ போல்டு மன்னர் காங்கோ நாட்டை தனது தனிச் சொத்தாக மாற்றிக் கொண்டார். இதற்காக அவர் நடத்திய மனித வேட்டையில் ஒரு கோடி பேர் உயிரிழந்தனர்.
ஜனநாயகத்திற்கும், சுதந்திரத்திற்கும் பாதுகாவலனாக தற்போது, தன்னைக் காட்டிக் கொள்கிற அமெரிக்கா அதன் சுபிட்சத்திற்கும் வளத்திற்கும் அடிப்படையாக இருப்பது எது? 7 கோடி அமெரிக்க பழங்குடியினரின் சமாதியில்தான் அமெரிக்க வளர்ச்சி உருவாக்கப்பட்டது.

சுதந்திரம் என்பதை தங்களது ‘உயிர் மூச்சு’ என பீற்றிக் கொள்கிறது அமெரிக்கா, ஆப்பிரிக்காவிலிருந்த அடிமைகளை இறக்குமதி செய்து, அமெரிக்கா அடிமை வியாபாரம் நடத்தியதால் பலியானோர் எண்ணிக்கை 1.76 கோடி.
இது அல்லாமல் முதல் உலகப் போர் நடைபெற்ற போது, 97 லட்சம் இராணுவ வீரர்களும், ஒரு கோடி சாதாரண மக்களும் உயிரிழந்தனர்.

சீனாவில் நடைபெற்ற பாக்ஸர் புரட்சியின் போது, மக்களை அடக்கி சீன நிலப்பிரபுக்களும், உலக ஏகாதிபத்திய நாடுகளும் கூட்டணி சேர்ந்து நடத்திய அழிவுத் தாக்குதலில் 2 கோடி சீன மக்கள் பலியானார்கள்.

19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பழைய ஆயுதங் களை பயன்படுத்தியே பிரான்சு நாட்டு சர்வாதிகாரி நெப்போலியன் நடத்திய போர்களில் 40 லட்சம் பேர் பலியானார்கள். அதற்கு நூறு வருடங்களுக்கு பிறகு நவீன முறையில் நிகழ்ந்த ரஷ்யப் புரட்சிப் போரில் இதில் பாதியளவு தான் உயிரிழந்தனர். இதிலும் போர்க்களத்திற்கு வெளியே நிகழ்ந்த சண்டைகள் 4 லட்சம் பேர் இறந்தனர். ஆக இந்த 4 லட்சத்தை பிரஸ்தாபிக்கிற ஜெலாட்டிலி ஏன் மேற்கண்ட கோடிக்கணக்கான மக்கள் உயிரிழந்த போர்களைப் பற்றி பேசவில்லை?

ஏகாதிபத்தியங்களால் நிகழ்ந்த போர்களையும், இழப்புக்களையும் ரஷ்யப் புரட்சியின் போது நிகழ்ந்ததை ஒன்றாக பார்க்க இயலாது.
ரஷ்யப் போர் நடக்காமல் போயிருந்தால், எதிர்ப்புரட்சி சக்திகளான கொல்சாக், டெனிகின், கோர்னிலாவ் போன்ற ராணுவக் கும்பல் ஆட்சியை கைப்பற்றி இருக்கும்.
பேராசிரியர் ஜெலாட்டிலி ராணுவ ஆட்சிக்கோ அல்லது வேறு ஏகாதிபத்திய ஆட்சிக்கோ வக்காலத்து வாங்கட்டும். அது அவருடைய தனிப்பட்ட அரசியல் சுதந்திரமாகவும் இருக்கட்டும். எங்கே பிரச்சனை வருகிறதென்றால் இதுவரை மனித இனமே செல்லாத இரத்தம் தோய்ந்த பாதையில் போல்ஷ்விக் புரட்சி நிகழ்த்தப்பட்டது என்று அவர் கூறுவதுதான்.

டிராட்ஸ்கி ‘கம்யூனிசமும் பயங்கரவாதமும்” என்ற நூலில் எப்படி அமெரிக்க புரட்சி மற்றும் பிரிட்டிஷ் புரட்சியின் போது பயன்படுத்தப்பட்ட உத்திகள்தான் போல்ஷ்விக் புரட்சியின் போதும் பின்பற்றப்பட்டது என்பதை விளக்குகிறார்.
தேவை, வரலாற்றாசிரியர்களின் பகுத்தறிவுக் கூட்டணி
இதையெல்லாம் மறைப்பதன் மூலம் லெனினிசத்தை வரலாற்றில் இல்லாத ராட்சசத்தனமான தீவிரவாதம் என்று சித்தரிக்க முயல்கிறார் ஜெலாட்டிலி. இதில் அவர், ஒரு வரலாற்றாசிரியர் கடைப்பிடிக்க வேண்டிய நெறி முறைகளையும் காற்றில் பறக்க விட்டு விடுகிறார். சரித்திரத்தில் நடந்தவற்றை வெட்டவோ, அல்லது நடக்காதவற்றை ஒட்டவோ முடியாது. ஆனால், இத்தகைய வெட்டல், ஒட்டலில் கைத் தேர்ந்தவராக ஜெலாட்டிலி விளங்குகிறார்.

இது, சில முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளை எழுப்பு கிறது. ஆக்ஸ்போர்டு போன்ற உலகின் முன்னணி பல்கலைக் கழகங்களை சேர்ந்தவர்கள் எல்லாம், இத்தகைய நெறி தவறிய வரலாறுகளை எழுதுகிறபோது, வரலாறு என்கிற மகத்தான துறையின் கதி என்ன ஆவது? இதை எப்படி எதிர் கொள்வது?
வரலாற்றுத் துறையில் மார்க்சீய ஒளி விளக்காகத் திகழ்கிற எரிக் ஹாப்ஸ்வாம் இதற்கு பதில் அளிக்கிறார்.
“வரலாற்று அறிவியலுக்கு தற்போது பெரும் ஆபத்தாக இருப்பது, இயக்கவியலற்ற பார்வைதான்.
‘நீ சொல்லுகிற உண்மை உனக்கு சரியானது; நான் சொல்லுகிற உண்மை எனக்கு சரியானது’ என்கிற தன்மை உள்ளது. இதில் பலியாவது எது என்றால் ஆதாரங்களும், அறிவியல் பார்வையும்தான். இது குறிப்பாக அடையாள அரசியல் நடத்தும் குழுக்கள் வெளியிடுகிற வரலாறுகளுக்கு நன்கு பொருந்தும்”

“இந்த வரலாறுகளுக்கு அடிப்படை பிரச்சனை, என்ன உண்மையில் நடந்திருக்கிறது என்பதை தான் சார்ந்திருக்கிற குழுவிற்கு சாதகமான விவரங்கள் எவை என்பதுதான். இதனால் இவர்களுக்கு பகுத்தறிவு சார்ந்த விளக்கங்கள் தேவைப்படுவ தில்லை”

இதையொட்டி இந்தியாவை சான்றாக காண்பித்து ஹாப்ஸ்வாம் எழுதுகிறார்.
“கட்டுக்கதைகள், பொய்கள் உள்ளடக்கிய திரிக்கப்பட்ட வரலாறுகளுக்கு கடந்த 30 ஆண்டுகள் பொற்காலமாக திகழ்ந்து வந்துள்ளது. இவற்றுள் பல பொது நலனுக்கு ஆபத்து விளைவிப்பதாகவும் இருந்தது. உதாரணமாக, இந்தியாவில் பா.ஜ.க.வினால் வெளியான வரலாறுகள்.

அமெரிக்கா (ஜெலாட்டிலியின் வரலாறு போன்று) மற்றும் சில்வியோ பெர்லுஸ்கோனியன் இத்தாலிய வரலாறுகள். அத்துடன் மத அடிப்படையை முன்வைத்தும், மத அடிப்படை இல்லாமலும் எழுதப்படுகிற புது வகையிலான தேசியம் சார்ந்த வரலாறுகள் ஆகியவையும் இதில் அடங்கும். இவ்வாறு தொடர்ச்சியான மூடத்தனம் வரலாற்றில் நிகழ்ந்து வருகின்றது”.

இந்த சீரழிவை தடுத்து நிறுத்த என்ன செய்வது? ஹாப்ஸ்வம் வழிகாட்டுகிறார்.

“மனித சமூக மாற்றங்களை பகுத்தறிவு ரீதியாக விசாரணை மேற்கொள்ளும் ஆராய்ச்சி முறையில், நம்பிக்கை கொண்ட வரலாற்று ஆசிரியர்கள் ஒன்று சேர வேண்டும். ஒரு வெகுஜன கூட்டணி அமைத்து அரசியல் உள்நோக்கம் கொண்டு வரலாற்றை திரிக்கிற அனைவருக்கும் எதிராக அணிதிரள வேண்டும்” என ஹாப்ஸ்வம் அறைகூவல் விடுக்கிறார்.
லெனினிசத்தையும், லெனினையும் சித்தாந்த ரீதியில் அழித்து, ஏகாதிபத்திய சித்தாந்தங்களை நிலை நிறுத்த முயலும் ஜெலாட்டிலி கூட்டத்தின் முயற்சிகளை முறியடிக்க ஹாப்ஸ்வாம் வழியே சரியான தீர்வாகும்!

ஆதாரம் :

Canal, Jean Suret-, ed. Le Livre Noir du Capitalisme. Paris:

Le tempts Discrises, 2002.

Cowley, and Parker, . Reader’s Companion to Military History. ¡õoston: Houghton Mifflin, 1996.

Davids, Mike. Late Victorian Holocausts. London: Verso, 2002.

Ellis, Geoffrey. Napoleonic Empire. London: Palgrava Macmillan, 1996.

Figes, Orlando. A People’s Tragedy. London: Pilmico, 1996.

Gellately, Robert. Lenin, Stalina and Hitler :

The Age of Social Catastrophe. New York: Alfred A. Knopf, 2007.

Haythornwaithe, Phillip J. The World War I Source ¡õook.

Arms and Armour, 1993.

Hobsbawm, Eric J. The Age of Extremes: A History of the World, 1914-1991. New York: Vintage, 1994.

—. “In Defence of History.” The Guardian, 15 January 2005.

McFarlane, Alan. Wars of Peace: England,Japan and the Malthusian Trap. London: Palgrave Macmillan, 2002.

Montefiore, Simon Sebag. Stalin: The Court of the Red Tsar. London: Phoenix, 2003.

Read, Christopher. Lenin : A Revolutionary Life. London: Routledge, 2005.

Rummel, R J. Death by Government. New ¡õrunswick:

Transaction Publishers, 1994.

—. Domicide. 1987. http://www.hawaii.edu/powerkills/.V2.HTML#statistics (accessed October 26, 2007).

Rumsfeld, Donald. Defenselink. 9 April 2003. http://www.defenselink.mil/news/apr2003/ (accessed October 26, 2007).

Trotsky, Leon. Communism and Terrorism. Moscow, 1920.

U.A. European Powers and the First World War. New York:

Garland Publishing, 1996.

University of Toronto. University of Toronto Research Repository. U.D U.M U.Y.

https://tspace.library.utoronto.ca/citd/RussianHeritage/12.NR/NR.20.html (accessed 10 26, 2007).Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: