– ஜி. செல்வா
தமிழகத்தின் கட்சி வளர்ச்சி பற்றி பேசும் அனைத்து தருணங் களிலும் மாணவர், விவசாய சங்கங்களின் வளர்ச்சியின் முக்கியத் துவம் குறித்து சால்கியா பிளீனம் சுட்டிக்காட்டிய கருத்துக்கள் அக்கறையோடு பேசும் பொருளாக இருக்கிறது.
இக்கட்டுரையில் மாணவர் அரங்கம் குறித்து கட்சியின் மத்தியக் குழு சுட்டிக்காட்டியுள்ள “மாணவர் அரங்கம்: கொள்கை மற்றும் இலக்குகள்” என்ற ஆவணத்தை அடிப்படையாகக் கொண்டு, தமிழகத்தில் மாணவர் அரங்க வளர்ச்சி மற்றும் அதன் அரசியல் தேவைகள் முன்வைக்கப்படுகிறது.
மாணவர் சமூகத்தின் குணாம்சங்கள்
பல தரப்பட்ட வர்க்கங்களைக் கொண்ட, கல்விஅறிவு மிக்க திரளினராக, சமூகத்தின் மிக முக்கியப் பிரிவினராக மாணவர்கள் உள்ளனர். தங்களது கல்வி மூலமாகவும், கல்வி கற்கச் செல்வதின் மூலமாகவும் சமூகத்தின் பலதரப்பட்ட விஷயங்களை, அரசியல், சமூக – பொருளாதாரத் தளத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை புரிந்து கொள்கின்றனர். இதன் மூலம் சமூக மாற்றத்திற்கான வினையூக்கிகளாக செயல்படுகின்றனர்.
மார்க்சிஸ்ட் கட்சியின் ஆவணம் கூறுவது போல் “பல வர்க்கங்களை கொண்ட பெரும்பான்மையாக உள்ள மாணவர்கள், சமூகத்தின் அனைத்து வர்க்கங்களோடும் தொடர்புகளை பெற்று இருக் கிறார்கள். எனவே அனைத்து வர்க்கங்களின் சிந்தனைகளையும் ஒருசேர பெறுவதற்கு அவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. ஆகவே ஒவ்வொரு காலகட்டத்திலும் சமூகத்தில் ஏற்படும் சித்தாந்த ரீதியான பேராட்டங்களை பிரதிபலிக்கும் நாடகமேடையாக மாணவர் சமூகம் செயல்பட்டு வருகிறது.”
ரஷ்ய புரட்சி, சீனாவில் 1919 மே நாள் இயக்கம், வியட்நாம் மற்றும் கியூபப்புரட்சிகளிலும் புரட்சியை வளர்த்தெடுப்பதிலும் மாணவர்கள் மகத்தான பங்காற்றியுள்ளனர்.
காலனியாதிக்கத்தை எதிர்த்து தேச விடுதலைப் போரிலும் குறிப்பிடத்தகுந்த பங்கை வகித்துள்ளனர். வியட்நாம் மீதான அமெரிக்கத் தாக்குதலை எதிர்த்து அமெரிக்காவிலும் பிரான்ஸ் நாட்டிலும் மாணவர்களின் கிளர்ச்சி உலகத்தையே வியக்க வைத்தது.
இத்தகைய சிறப்பு பண்புகளை மாணவர் இயக்கம் கொண்டிருந்தாலும் “பூர்ஷ்வா நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையுடன் நேரடித் தொடர்பு இல்லாத மாணவர்கள் தாங்களாவே பொருளாதார மற்றும் சமூக மாற்றத்திற்கான வர்க்கப்படையை கட்டியமைக்க முடியாது. எனினும் சமூக மாற்றத்திற்கான ஓர் இயக்கத்தை மேலும் முன்னெடுத்து செல்லவோ அல்லது சுணக்கம் அடையச் செய்யவோ மிக முக்கிய பங்கினை ஆற்றமுடியும்.”
இந்தியாவில் மாணவர் இயக்கம்
இந்தியாவில் மாணவர் இயக்கம் உருவாக்கப்பட்டது 1936இல். ஆனால் அதற்கு முன்பே மாணவர்கள் விடுதலை வேள்வியிலும் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரிலும் தங்களை இணைத்துக் கொண்டனர்.
19ஆம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து 20ஆம் நூற்றாண்டு தொடக்கம் வரை இந்தியாவில் மாணவர்கள் “வாசகர் வட்டம்” என்கிற முறையில் கருத்துக்களை விவாதித்து வந்தனர். 1905 வங்க பிரிவினை பிரிட்டிஷ் அரசு மேற்கொண்ட போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தகுந்த முதல் நிகழ்வாகும்.
1919-22 காலக்கட்டத்தில் காந்திஜியின் அறைகூவலை ஏற்று ஒத்துழையாமை இயக்கத்தில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து பெருவாரியான மாணவர்கள் பள்ளிகளையும், கல்லூரிகளையும் புறக்கணித்து விடுதலை வேள்ளியில் தங்களை இணைத்து கொண்டனர். 1927-28 இல் சைமன் கமிஷன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற இயக்கங்களில் மாணவர்களின் பங்கேற்பு தேசவிடுதலைப் போரில் மாணவர் இயக்கத்தின் பங்கை உணர்த்தியது. இதன் காரணமாகவே 1927 மற்றும் 28ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடுகளில் மாணவர் களுக்கு என சிறப்பு மாநாடு தனியாக நடைபெற்றது.
சட்ட மறுப்பு இயக்கத்தில் காங்கிரசின் அணுகுமுறையும், மாவீரன் பகத்சிங் மற்றும் அவரது தோழர்கள் தூக்கிலிடப்பட்ட சம்பவங்கள் மாணவர் மத்தியில் காங்கிரஸ் இயக்கத்தின் மீதான நம்பிக்கையில் தொய்வை ஏற்படுத்தின. இக்காலக்கட்டத்தில் சோவியத் யூனியனில் முதல் ஐந்தாண்டு திட்டத்தின் பிரம்மிக்கத் தகுந்த வளச்சி உலகின் பல பகுதிகளில் இருப்போரை வியப்படைய செய்தது.
இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர் மீது போடப்பட்ட ‘மீரட் சதி வழக்கின்’ விசாரணையை மாணவர்கள் பத்திரிகைகள் வாயிலாக படித்து வந்தனர். சோசலிச சிந்தனைகள் மாணவர்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 1935இல் காங்கிரஸ் சோசலிச கட்சி தொடங்கப்பட்டது. சோசலிச கருத்துக்களை மாணவர்கள் உள்வாங்க தொடங்கினர். இந்த காலத்தில் பாசிச எதிர்ப்பு இயக்கம் உலகம் முழுவதும் நடைபெற்று வந்ததையும், இதற்குப் பின்னால் கம்யூனிஸ்ட்டுகளின் பங்களிப்பு இருப்பதை மாணவர்கள் உணர்ந்தனர்.
இப்பின்னணியில்தான் 1939 ஆகஸ்ட் 12ஆம் நாள் இந்தியாவில் முதல் மாணவர் அமைப்பான “அகில இந்திய மாணவர் பெரு மன்றம்” தொடங்கப்பட்டது. இம்மாநாட்டினை பண்டித ஜவஹர்லால் நேரு தொடங்கி வைத்தார். நேரு தனது பேச்சில் சோசலிசத்தின் முக்கியத்துவம் மற்றும் தேவைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். இந்திய சுதந்திரப் போராட்டம் உலகம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருந்த காலனி ஆதிக்க எதிர்ப்பு போராட்டங்களில் இருந்து பிரிக்க முடியாது என குறிப்பபிட்டார். மற்றும் பாலஸ்தீன விடுதலை இயக்கம் , பாசிசத்தை எதிர்த்து ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் போராட்டங்களையும் குறிப்பிட்டுப் பேசினார். மாநாட்டில் நேருவின் பேச்சும் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களும் அன்றைய மாணவர் சமூகத்தின் பரந்துபட்ட அரசியல் பார்வையை வெளிப்படுத்துமாறு அமைந்திருந்தன.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல தரப்பு மாணவர்களும் இணைந்து செயல்படும் அமைப்பாக ஏ.ஐ.எஸ்.எப். இருந்தது. எனவே, கருத்து ரீதியான விவாதங்கள் முக்கியத்துவம் பெற்றது. முரண்பாடுகளும் ஏற்பட்டன. சென்னை மாகாணத்தில் நடைபெற்ற ஏ.ஐ.எஸ்.எப். மாநாட்டில் சோவியத் யூனியனை பாராட்டி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மினோ மஜானி தலைமையில் காங்கிரஸ் மாணவர்கள் சிலர் வெளிநடப்பு செய்தனர். இருந்தபோதிலும் மாணவர் இயக்கத்தில் பிளவு ஏற்படாமல் பாதுகாக்கப்பட்டது. இக்காலக்கட்டத்தில் முகமது அலி ஜின்னா முஸ்லிம் மாணவர் சங்கத்தை உருவாக்கினார். மாணவர் இயக்கத்தின் கொள்கை ரீதியான வேறுபாடுகள் இருந்தபோதும், விடுதலைப் போராட்டத்தில் பெருமைப்படத்தக்க பங்கை செலுத்தினார்.
நாடு விடுதலை பெற்றதும் மாணவர் இயக்கத்தின் பங்கு முடிந்து விட்டது. எனவே, அரசாங்கத்தின் கொள்கைக்கு ஆதரவாக மாணவர்கள் செயல்பட வேண்டுமென காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர். எந்த தலைவர்கள் பள்ளி / கல்லூரிகளை புறக்கணித்து போராட அழைத்தார்களோ அவர்கள் தற்போது அரசியலில் இருந்து மாணவர்கள் ஒதுங்கி இருக்க வேண்டும் என்றனர்.
மாணவர் அமைப்பின் ஒரு பகுதியினர் காங்கிரஸ் தலைவர்களின் சுயநல கோரிக்கையை நிராகரித்தனர். விடுதலை இந்தியாவில் சமூக / பொருளாதார வளர்ச்சியில் மாணவர் இயக்கத்திற்கு முக்கிய பங்கு உண்டு என சுட்டிக்காட்டினர். இதைப் பார்த்த காங்கிரஸ் தலைவர்கள் மாணவர்கள் இயக்கத்தை உடைத்து காங்கிரஸ் மாணவர் அமைப்பாக என்.எஸ்.யூ.ஐ. தோற்றுவித்தனர்.
இந்திய நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கும், அனைவருக்கும் கல்வி கிடைப்பதற்கும் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்கவும் மாணவர் இயக்கம் என்ன செய்வது? என்று ஏ.எஸ்.ஐ.எப். இல் கேள்வி எழுந்தது.
“மாணவர் இயக்கத் தலைமையின் ஒரு பிரிவினர் காங்கிரஸ் கொள்கைகளை ஆதரித்தனர். இதன் மூலம் மாணவர் இயக்கத்தை அரசு கொள்கை களின் வாலாக ஆக்க முயற்சித்தனர். ஆனால் மற்றொரு தரப்பினர், அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக மாணவர் சமூகத்தை அணி திரட்டவேண்டுமென வலியுறுத்தினர். எனினும் அரசாங் கத்தின் கொள்கைகளை ஆதரிக்க வேண்டும் என கூறியவர்கள் ஆதிக்கம் செலுத்தியதால், ஏ.ஐ.எஸ்.எப். 1960ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் அரசாங்கத்தின் மக்கள் விரோத மற்றும் மாணவர் விரோத கொள்கைகளுக்கு எதிராக போராடும் வலுவை இழந்தது. இதன் விளைவாக மாணவர் இயக்கம் பல்வேறு மாநிலங்களில் தனித்தனி அமைப்புகளாக இயங்க அரம்பித்தது. இதனால் ஏ.ஐ.எஸ்.எப்.இன் முந்தைய பாரம்பரியத்தை மேலும் வலுப்படுத்தும் விதத்தில் புதிய போர்க்குணமிக்க மாணவர் அமைப்பை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதுவே 1970ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் அகில இந்திய மாநாடு நடத்தி “இந்திய மாணவர் சங்கம் (எஸ்.எப்.ஐ.) உருவாக வித்திட்டது.”
இந்திய மாணவர் இயக்கத்தின் வரலாற்று நிகழ்வுகளைப் பார்க்கும் போது “ மாணவர் இயக்கமானது ஓரு தத்துவார்த்த அடிப்படையின் கீழ்தான் மேலும் வலுப்படுத்த இயலும் என்பதை தெளிவாகக் காணமுடியும்.”
மாணவர் இயக்கத்தின் தற்போதைய சவால்கள்
மாணவர் இயக்கத்தின் எழுச்சியை, வளர்ச்சியைப் பற்றி திட்டமிடும்போது இன்றைய சர்வதேசிய, தேசிய அரசியல் சூழ்நிலைகளையும் அவர்களது கல்வியையும், கல்வி நிலைய சூழல்களையும் கணக்கில் எடுத்துக்கொள்வதும் மிக இன்றியமை யாததாகும். விடுதலைக்குப் பின் முதல் பத்தாண்டுகளில் கல்வி குறித்து மிக பிரம்மாண்டமாக பேசப்பட்டது. பல்வேறு குழுக்கள் போடப் பட்டன. திட்டங்கள் வகுக்கப்பட்டன . ஒரு கட்டத்தில் அவை யனைத்தும் காங்கிரஸ் அரசால் காற்றில் பறக்கவிடப்பட்டன.
1950இல் நிறைவேற்றப்பட்ட அரசியல் சட்டமானது முதல் பத்தாண்டுகளில் அனைவருக்கும் தொடக்கக்கல்வி அளிக்க வேண்டும் என்ற வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றப் படவில்லை.
தற்போதைய ஏகாதியபத்திய உலகமயக் கொள்கைக்கு இணக்கமாக கல்வித்துறையில் பெரும் மாற்றங்களை மத்திய அரசு உருவாக்கி அமல்படுத்தி வருகிறது. கல்விக்கு நிதி ஒதுக்கீடு வெகுவாக குறைக்கப்பட்டு கல்வித் தரும் பொறுப்பிலிருந்து அரசு விலகிக் கொள்கிறது. அதே நேரத்தில் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முதலாளிகளின் மூலதனத்தை பெருக்குவதற்கு இசைவாகக் கல்வியை லாபம் கொழிக்கும் நடவடிக்கையாகப் பார்ப்பது அதிகரித்து வருகிறது. அந்நிய நேரடி முதலீட்டை கல்வித்துறையில் அனுமதிக் கவும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை இந்தியாவில் திறப்ப தற்கும் ஏற்றாற்போல் சட்டதிருத்தங்களை ஏற்படுத்த முயற்சிக் கின்றனர். அரசின் இத்தகைய கொள்கைக்கு ஆதரவாக நீதிமன்றங்களும் பட்டவர்த்தனமாகச் செயல்படத் தொடங்கி விட்டன.
பல்வேறு ஏற்ற இறக்கமான சமூகங்களை பிரதிநிதித்துவப் படுத்தும் இந்தியாவில் இடஒதுக்கீடு இன்றும் முக்கியமானதாக உள்ளது. ஆனால் சில சக்திகள் இடஒதுக்கீட்டை எதிர்த்து கலகத்திற்கு வித்திடுகின்றன. கல்வியில் குறிப்பாக உயர்கல்வியில் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மிக சிறிய அளவினராக இருப்பதால் சமூக நீதிக்கான போராட்டத்தை வளர்த்தெடுக்க வேண்டியுள்ளது. அதே நேரத்தில் கல்விக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும், வாய்ப்புகளையும் பெருமளவில் விரிவு படுத்துவதற்கான போராட்டத்தையும் இணைத்து நடத்த வேண்டியுள்ளது.
ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது கல்வி பெறுவதற்கான உரிமை மீதான தாக்குதலில் துவங்கி கல்வியில் தனியார்மயமும், வணிகமயமும் அதிகரிப்பது மற்றும் கல்வியில் மதவெறி, கல்வியில் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு அயல்நாட்டு பல்கலைக்கழகங்களை அனுமதிப்பது, கல்விக் கூடங்களில் சாதி மற்றும் மதவெறி சக்திகளின் சவால்கள் என அனைத்து பிரச்சனைகளையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
தமிழகக் கல்வி
இந்திய அரசின் கல்விக் கொள்கையிலிருந்து தமிழகக் கல்வியைப் பிரித்துப் பார்க்க முடியாது. சமூக சீர்திருத்த இயக்கத்தின் முன்னோடி மாநிலமாக இருந்த தமிழகம் இன்று சமூக சீர்திருத்த இயக்கத்தின் மூலம் கிடைத்த பலன்களை வளர்த்தெடுக்காமல் அதன் மூலம் கிடைத்த பலன்களை ஒருசில கூட்டம் மட்டுமே முழுமையாக அனுபவித்து வருகிறது. 1980க்குப் பிறகு ஆட்சியில் மாறி மாறி அமர்ந்த தி.மு.க,. அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளுமே மத்திய அரசின் கல்விக் கொள்கையை அப்படியே அமுல்படுத்தி கல்வி வியாபாரத்தை ஊக்குவித்துள்ளன. விளைவு, 60 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மட்டுமே உள்ளன. ஆனால், தனியார் கல்லூரிகளோ 197 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளோ 12 தனியார் கல்லூரிகளோ 250 இது மட்டுமா? தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் 600, தனியார் ஐ.ஐ.டி.க்கள் 500. இப்படி அரசு கல்வி நிறுவனங்கள் சில நூறுகளுக்குள் இருக்க தனியார் கல்வி நிறுவனங்களோ ஆயிரக்கணக்கில்.
இத்தகைய தனியார் கல்வி நிறுவனங்களின் கல்விக் கொள்கை ஊரறிந்த விஷயம். இக்கல்வி நிலையங்களின் பாடத்திட்டம், மாணவர்களின் சுயசிந்தனை, ஆளுமை வளர்ச்சிக்கு பயன்படுவ தில்லை. மேலும், நாட்டின் சமூகப் பொருளாதார பண்பாட்டு வளர்ச்சிக்கு உதவியாக அல்லாமல் அவ்வப்போது பன்னாட்டு மற்றும் இந்திய பெருமுதலாளிகளின் தேவைக்கு உதவும் வகையிலேயே அமைந்துள்ளது.
தாய்மொழிக் கல்வி, மாநில சுயாட்சி, கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டுவருதல் போன்றவை குறித்து எதிர்வரிசையில் இருக்கும்பொழுது வாய்கிழியப் பேசினாலும் மத்திய அரசின் “மாணவர் விரோத மறைமுகமான கல்வித் திட்டங்களை” ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அமுல்படுத்துவதில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க இரண்டு கடசிகளுமே முன்னணியில் உள்ளன. உதாரணத்திற்கு, தற்போது தேசிய அறிவுசார் ஆணையம், உயர்கல்வி குறித்து மத்திய அரசுக்கு ஆலோசனை அறிக்கை கொடுத்துள்ளது. இந்த அறிக்கை சமூக அக்கறை கொண்ட அனைத்துத் தரப்பினராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. மேலும், இவ்வறிக்கை குறித்து மத்திய அரசு இதுவரை எந்த முடிவும் பகிரங்கமாக எடுக்கவில்லை. புதிய பல்கலைக்கழகங்களை உருவாக்காமல், இருக்கக்கூடிய கல்லூரிகளையே பல்கலைக்கழகம் என மாற்றி மாணவர்களிட மிருந்து பணம் வசூலிக்க அறிவுசார் ஆணையம் அடுத்த சில ஆண்டுகளில் 1,500 பல்கலைக்கழகங்களை உருவாக்க வேண்டுமென கூறியுள்ளது. அறிவுசார் ஆணையம் திட்டமிட்டதை இத்திட்டத்தை தற்போது தமிழக அரசு அமுல்படுத்தத் தொடங்கிவிட்டது. இதன் ஒரு பகுதியாக மாநிலக் கல்லூரி மற்றும் ராணி மேரி கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்றப் போவதாக அறிவித்துள்ளனர்.
உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் மாணவர் பேரவைத் தேர்தல் நடத்தவோ, பல்கலைக் கழகங்களில் செனட், சிண்டிகேட்டில் மாணவர்களுக்கு பிரதிநிதித்துவம் தரவோ திமுக அரசு விடாப்பிடியாக மறுத்துவருகிறது.
இத்தகைய மத்திய, மாநில அரசுகளின் கல்விக் கொள்கையை எதிர்த்தும், மாணவர்களின் பிரச்சினைகளுக்காக, உரிமைகளுக்காக முன்னின்று போராடக்கூடிய மாணவர் அமைப்பாக தமிழகத்தில் நம்முடைய மாணவர் அமைப்பு மட்டுமே இருந்து வருகிறது. மற்ற அனைத்து மாணவர் அமைப்புகளும் பெயரளவுக்கே செயல்படுபவையாக உள்ளன.
சவால்களை எதிர் கொள்வோம்
மாணவர் இயக்கத்தின் முன் உள்ள சவால்களை எதிர்கொள்வதற்கு கொள்கை ரீதியான அணுகுமுறையை உருவாக்க வேண்டியது உடனடி கடமையாகும். இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் மாணவர் அமைப்பில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளவர் களின் எண்ணிக்கை வெறும் 3.6 சதம்தான். நமது மாணவர் அமைப்பு மட்டுமல்ல பிற அரசியல் கட்சிகளின் நேரடி மாணவர் அமைப்புகளாக செயல்படும் அனைத்து மாணவர் அமைப்புகளும் உறுப்பினர் எண்ணிக்கையில் பெரும் வீச்சை ஏற்படுத்தவில்லை என்பது உண்மை. ஆக இந்தியாவில் அணிதிரட்டப்பட்ட மாணவர் இயக்கத்தின் எண்ணிக்கை மிகக் குறைவு. இது ஜனநாயக இயக்கங்களுக்கு மிகப் பெரிய சவாலாகும். காரணம் அணி திரட்டப்படாத மாணவர்கள் இன ரீதியான, மதரீதியான உணர்வுகளால் உந்தப்பட்டு சமூக சீர்குலைவு சக்திகளின் பின்னால் செல்ல நேரிடும். அப்படியெனில் இதை மாற்றுவதற்கு நமது செயல்பாடு எத்தகையதாக இருக்க வேண்டும்? நமது கொள்கை அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்?.
முதலில் கல்வியின் தற்போதைய குணாம்சம் மாறிக் கொண்டேயிருப்பதை அங்கீகரிக்க வேண்டியுள்ளது. 1990க்குப் பின் கல்வித்துறையில் எண்ணிக்கையில் மிகப் பெரிய விரிவாக்கம் ஏற்பட்டுள்ளது. இவ்விரிவாக்கம் அனைத்தும் தனியார் துறையில்தான் நடைபெற்றுள்ளது. இதனால் உயர்கல்வி பெறுபவரின் எண்ணிக்கையில் பெரும் அதிகரிப்பை ஏற்படுத்தா விட்டாலும் தனியார் கல்வி நிலையங்களின் வளர்ச்சியானது புதிய பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளது. பல புதிய வகை வேலை வாய்ப்பைச் சார்ந்த படிப்புகள் அறிமுகப்படுத்தப்படுவதும் அதில் சேருவதற்கு அதிகக் கட்டணங்களும் வசூலிக்கப்படுகின்றன. இக்கல்வி நிலையங்களில் சேரும் மாணவர்கள் படிப்பை முடிந்தவுடன் வேலை உத்தரவாதத்தை எதிர்நோக்குகின்றனர். எனவே இயல்பாகவே ஜனநாயகப் பூர்வமான மாணவர் இயக்கத்தில் இவர்கள் பங்கேற்பு இல்லாமல் போய்விடுகிறது.
மறுபுறம் அடிப்படை கட்டமைப்பு வசதியற்ற தனியார் கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவர்கள் தங்களின் தேவைகளுக்காக மாணவர் சங்கத்தை அணுகுகின்றனர். அவர்களை பொது இயக்கங்களில் திரட்டுவதில் சிரமங்கள் உள்ளன.
தனியார் கல்வி நிலைய மாணவர்கள் : அரசு கல்வி நிலையங்க ளோடு ஒப்பிடும்போது தனியார் கல்வி நிலையங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது; மேலும், அதிகரித்தும் வருகிறது. இச்சூழலில் தனியார் கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு கேட்டு போராட வேண்டியுள்ளது. மேலும், தனியார் கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு மூலம் கல்வி பயிலச் செல்லும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தையும் அரசே செலுத்த வேண்டும் என வலியுறுத்த வேண்டியுள்ளது. அப்போதுதான் சமூக நீதிக்கான போராட்டத்தின் வெற்றி முழுமை பெறும்.
இத்தகைய மாணவர்களை நேரடியாக மாணவர் சங்க வேலைகளில் பங்கெடுக்க வைப்பதில் சிரமமுள்ளது. எனவே, தனியார் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களிடம் நமது கருத்துகளை கொண்டு செல்லும் வகையில் புதிய வழிமுறைகளை உருவாக்க வேண்டியுள்ளது. மாவட்டம் மற்றும் பகுதி அளவில் வாசகர் வட்டங்கள், அறிவியல் கிளப் போன்றவற்றை உருவாக்கி செயல்படுத்த கட்சி கமிட்டிகள் உதவிபுரிய வேண்டும்.
மேலும், மாணவர் சங்கத்தின் சார்பில் கட்டற்ற மென் பொருள்களுக்கான இயக்கத்தை நடத்துவதன்மூலம் உயர்கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களை சென்றடைய முடியும்.
ஒரு தனியார் கல்வி நிலையத்தில் மாணவர்கள் தங்களது அடிப்படை உரிமைகளுக்காக, தரமான கல்விக்காக நடத்தும் போராட்டம், அதில் கிடைக்கும் அனுபவம் மற்ற கல்லூரி மாணவர்களுக்குச் சென்றடைவதில்லை. உதாரணத்திற்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் நம்முடைய மாணவர் அமைப்பு பல தனியார் கல்லூரி பொறியியல் மற்றும் மருத்துவ மாணவர்களுக்காக பல போராட்டங்களை நடத்தி வெற்றியும் பெற்றுள்ளது. ஆனால், இந்த வெற்றியை, போராட்ட அனுபவத்தை மற்ற மாணவர்களுக்குக் கொண்டு செல்ல இயலவில்லை. இதற்கு உதவியாக மாணவர் சங்கத்தின் சார்பில் பத்திரிகை தொடர்ந்து வெளியிட வேண்டும். மேலும், இணையதளம் உள்ளிட்ட நவீன வசதிகளை பயன்படுத்தி கருத்துகளை கொண்டு செல்வதற்கு மாணவர் சங்க ஊழியர்களை தயார்படுத்த வேண்டியுள்ளது.
இந்த அனைத்து அம்சங்களையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு கட்சி ஆவணம் சுட்டிக்காட்டியுள்ளது போல “மாணவர் இயக்கமானது கல்வியையும், வேலை வாய்ப்பையும் பாதிக்கும் பிரச்சனைகளை ஒட்டுமொத்தக் கொள்கை அடிப்படையுடன் இணைக்க வேண்டும். இந்த இரண்டு அம்சங்களையும் இணைப்பதால் மட்டுமே மாணவர் அமைப்பின் செயல்பாடு களிலும் செல்வாக்கிலும் ஒரு பொருள் பொதிந்த முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும்.”
மாணவர் அமைப்பை வளர்த்தெடுப்பதற்கான வழிகாட்டுதல்கள்
கல்வித்துறையில் கல்வி வளாகங்களில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை புரிந்து கொண்டு புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்றாற்போல் மாணவர் சங்கத்தை கட்டுவதற்கான வழிகாட்டுதல்களை கட்சி ஆவணம் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது.
அ. கல்வி நிலைய அளவிலான செயல்பாடுகள் : மாணவர் சங்கமானது அதன் செயல்பாடுகளில் கல்வி வளாகங்களை மையமாக வைத்தே செயல்பட வேண்டும். எங்கெல்லாம் கல்வி வளாகம் அடிப்படையில் மாணவர் சங்கம் செயல்பட்டுள்ளதோ அங்கிருந்து தொடர்ச்சியாக ஊழியர்கள் உருவாவதும் அவ்வாறு வரும் ஊழியர்களின் செயல்பாடுகள் குணாம்ச ரீதியாக சிறப்பாக இருப்பதையும் காண முடிகிறது. எனவே, “கல்வி நிலைய அளவில் மாணவர் இயக்கத்தை கட்டுவது மற்றும் கல்வி நிலைய அளவிலான கோரிக்கைகளுக்கான போராட்டங்கள் அடிப்படையில் அமைப்புக் குழுக்கள் அமைப்பது மிக முக்கியமான இலக்காகும்.” மாணவர் அமைப்பின் உறுப்பினர் பதிவு கல்வி நிலையத்தின் மாணவர் கோரிக்கைகளை முன்வைத்தும் இக்கோரிக்கைகளை அரசின் கொள்கையோடு இணைத்தும் பிரச்சாரம் செய்து அதற்கு கிடைக்கும் ஆதரவின் அடிப்படையில் அமைய வேண்டியுள்ளது.
இத்தகைய செயல்பாடுகளுக்கு ஏற்றாற்போல் மாணவர் சங்க ஊழியர்களின் சிந்தனைகளை, செயல்பாடுகளை தொடர்ந்து மேம்படுத்த கட்சி ஊழியர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
ஆ. முன்னுரிமை கோட்பாடு : கல்வி நிறுவனங்கள் என்பவை மாணவர் அமைப்பின் செயல்பாடுகளுக்கானவை என்ற அடிப்படையில் முன்னுரிமை என்ற கோட்பாடு மிகவும் அவசியமானதாகவும் பொருத்தமானதாகவும் ஆகிறது. இவ்வாறு முன்னுரிமைத் திட்டத்தை உருவாக்கும்போது அகல கால் வைக்கும் போக்கு உருவாகிறது. அப்படியெனில் மாணவர் அரங்கில் முன்னுரிமைத் திட்டம் எதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட வேண்டும்?
முன்னுரிமையாக தேர்ந்தெடுக்கப்படும் மாவட்டம் – கல்வி நிலையம் அருகாமையில் இருக்கும் பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் ஸ்தாபனத்தை விரிவுபடுத்தும் தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டும்
கிளர்ச்சிப் பிரச்சாரம், போராட்டம் மற்றும் அரசியல் படுத்தும் வேலைகளில் பெரும்பாலான மாணவர்கள் பங்கெடுக்கக் கூடியதாக இருத்தல் வேண்டும்.
திட்டமிடும் வேலைகளை செய்வதற்கு உகந்த ஸ்தாபன அமைப்பு உடையதாக இருக்க வேண்டும். சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் தாராளமயமாக்கல் கொள்கையின் நேரடி விளைவுகளால் பாதிக்கப்படக் கூடிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் அரசு நல விடுதிகளில் படிக்கின்றனர். எனவே நமது முன்னுரிமைக் கடமையாக அரசு கல்வி நிலையங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.
இ. அரசியல்படுத்துதல் : ஏகாதிபத்தியத்தின் புதிய தாக்குதல்கள் மற்றும் சாதிய, மதவெறி சக்திகளின் தீவிர நடவடிக் கைகள் குறித்து கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியது தற்போது மிக, மிக முக்கிமானதாகும். அறிவு சார்ந்த சுய சார்பை வலுப்படுத்து வதற்கும் சமூக நீதியை உறுதிப்படுத்துவதற்கும், சம வாய்ப்பு மற்றும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி நமது மாணவ – ஊழியர் களிடையே அரசியல் கல்வியை போதிக்கும் பொருட்டு தத்துவார்த்த போராட்டத்தை நடத்த வேண்டும்.
கட்சி கமிட்டிகள் மாணவர் சங்க ஊழியர்களுக்கு தேவையான அடிப்படை புத்தகங்கள் முதற் கொண்டு அவர்களது அரசியல் உணர்வு மட்டத்தை தொடர்ந்து மேம்படுத்தும் வகையில் படிப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும். இதற்கு உதவியாக, “புத்தக வங்கிகளை” கட்சி கமிட்டிகள் உருவாக்கி நடைமுறைப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
ஈ. கல்வி நிலைய ஜனநாயகம் : மாணவர் இயக்கம் பலவீனமாக இருப்பதால், சமீப காலங்களில் ஒரு சில கல்வி நிலையங்களில் மாணவர்கள் சிலர் அற்ப காரணங்களை முன்வைத்து அராஜகங்களில், வன்முறைகளில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற செயல்பாடுகளை குறுகிய அரசியல் இலாபம் தேடும் சில அரசியல் கட்சிகளும் ஊக்குவிக்கின்றன. “இது கல்விச் சூழலை பாதிப்பதோடு, ஜனநாயக உரிமைகள் மீதான கொடூரத் தாக்குதல்களுக்கும் வழிவகுக்கிறது.” எனவே, கல்வி நிலைய ஜனநாயகம் என்று சொல்லும்போது வெறும் மாணவர் பேரவைத் தேர்தல் என்பதோடு நின்று விடக் கூடாது. மாணவர்கள் கல்வி நிலையத்தில் அமைதியான சூழலில் கல்வி பெறுவதற்கான போராட்டத்தோடு இணைத்து ஜனநாயகப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் பேரவை இருக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தும் போராட்டத்தை நடத்த வேண்டும்.
உ. கூட்டு இயக்கங்கள் : மாணவர் சமுதாயத்தின் நலன் கருதி பொதுவான கோரிக்கை சாசனத்தின் அடிப்படையில் மற்ற மாணவர் அமைப்புகளுடன் கூட்டு இயக்கத்திற்கான அனைத்து சந்தர்ப்பங்களையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பள்ளி கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழக ஆசிரியர் அமைப்புகளுடன் இணைந்து கல்வித்துறை சார்ந்த கோரிக்கைகளுக்காக கூட்டு இயக்கங்கள் நடத்திட முன்முயற்சி எடுக்க வேண்டியுள்ளது. இவ்வாறு மற்ற மாணவர் அமைப்புகளுடனோ, ஆசிரியர் அமைப்புகளுடனோ கூட்டு இயக்கத்திற்குச் செல்லும்போது அதற்கான காரணங்களை மாணவர் சங்க அமைப்பு விவாதித்து முடிவெடுக்க வேண்டும்.
ஊ. மாணவர் சங்க ஊழியர்கள் : மாணவர் சங்கத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வயது வரம்பு மாணவர் சங்க அமைப்புச் சட்டத்தில் இல்லை. படிப்பு முடிந்த பிறகு கூடுதலாக இரண்டாண்டு காலம் தொடர்ந்து உறுப்பினராக இருக்கலாம். இந்த காலத்திற்கு பின்னும் தேவைக் கருதி நிருவாகக் குழுவிற்கோ அல்லது நிருவாகியாகவோ தேர்ந்தெடுக்கலாம் என மாணவர் சங்க அமைப்பு சட்டம் கூறுகிறது. ஆனால், தற்போதைய கட்சி ஆவணம், மாணவர் அரங்கத்தில் பணியாற்றும் கட்சி உறுப்பினர்கள் ஒரு குறிப்பிட்ட வயதை மீறி பணியாற்றக் கூடாது என குறிப் பிட்டுள்ளது. பொதுவான மாணவர்களின் படிப்புக் காலம் மற்றும் மாணவர்களின் உணர்வு மட்டத்தை தாண்டியவர்கள் மாணவர் சங்கத்தில் பணியாற்றுவது கட்டாயம் தவிர்க்க வேண்டும் என கூறுகிறது.
மேலும், மாணவர் சங்க கமிட்டிகளில் மாணவிகளுக்கும், சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் குறிப்பிட்ட அளவில் பிரதிநிதித்துவம் இருப்பதை கடைப்பிடிக்க வேண்டும். படிப்போம்! போராடுவோம்” என்ற முழக்கத்தை தீவிரமாக பரப்ப நடவடிக்கை எடுப்பதோடு, அது மாணவர் அரங்கத் தலைவர்களால் அவசியம் செயல்படுத்தப்பட வேண்டும் என ஆவணம் வலியுறுத்துகிறது.
மாணவர் சங்கத்தை கட்டுவது; மாணவர்களிடையே
கட்சியை கட்டுவது :
கட்சி ஆவணம் குறிப்பிட்டுள்ள வழிக்காட்டுதல்களைப் பார்க்கும் போது இதில் கட்சி செய்ய வேண்டியது என்ன? ஆவணம் குறிப்பிடுவது போல “இத்தகைய இலக்குகளை நோக்கி மாணவர் அரங்கில் பணியாற்றுகின்ற கட்சித் தோழர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வழிக்காட்டுவதே கட்சியின் பணியாகும்.”
மாணவர் சங்கத்தில் தோழர்கள் செயல்படும் கால அளவைப் பொறுத்து “மாணவர் சங்கமே நிலையான அமைப்பல்ல (Floating Organisation)” என சிலர் கருதுகின்றனர். இது மாணவர் சங்கம் குறித்த தவறான மதிப்பீட்டிற்கு வர வழிவகுக்கும்.
இரண்டாவதாக, மாநிலத்திலோ மாவட்ட அளவிலோ பொருத்தமான திறமையான ஊழியர்கள் இருக்கும்போதுதான் சங்க செயல்பாடு சிறப்பாக இருக்கும். அப்படி இல்லாதபோது பெயரளவில்தான் மாணவர் சங்கத்தின் செயல்பாடு இருக்கும் என சிலர் கருதுகின்றனர்.
மேற்கண்ட இரண்டு கருத்துக்களுமே மிகத் தவறானதாகும். மாணவர் அரங்கம் குறித்து கட்சி ஆவணம் சொல்வது போல கட்சியின் வழிகாட்டுதல்களை சரியான முறையில் புரிந்து கிறகித்துக்கொண்டு அந்த அரங்கில் பணியாற்றும் மாணவர் கட்சித் தோழர்களுக்கு ஏற்றாற்போல் வழிகாட்ட வேண்டியுள்ளது.
மாணவர்களிடையே கட்சியைக் கட்டுதல்
அ. மாணவர் அரங்க பிராக்ஷன் : எங்கெல்லாம் மாணவர் அமைப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் மாநில மற்றும் மாவட்ட அளவில் கட்சி மாணவர் பிராக்ஷன் கமிட்டிகள் உருவாக்கப்பட வேண்டும். பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் உள்ள மிக முக்கியமான கல்வி மையங்களாக திகழும் இடங்களில் மாணவ அமைப்பு இல்லாமல் இருக்கும் பட்சத்தில், கட்சி கமிட்டிகள் ஒரு கட்சி குழுவை உருவாக்கி, அங்கு, மாணவ அமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகளை அவசியம் மேற்கொள்ள வேண்டும்.
மாணவ பிராக்ஷன் கமிட்டிகள் மாணவர்களிடையே கட்சியை கட்டுவது குறித்தும், வெகுஜன அமைப்பை விரிவாக்குவது மற்றும் வளர்ப்பதற்கான கட்சியின் திட்டம் குறித்தும் அவசியம் விவாதிக்க வேண்டும்.
ஆ. கட்சி கல்வி : மாணவர் அமைப்பில் பல்வேறு மட்டங்களில் அரசியல் கல்வி அளிப்பதற்கான பொருத்தமான நிகழ்ச்சிகளையும், பாடத்திட்டத்தையும் வரையறை செய்வதில் கட்சி அவசியம் வழிகாட்ட வேண்டும். மாணவ அமைப்பு என்ற மட்டத்தில், அப்போதைய பிரச்சினைகள் தொடர்பான சிறப்புச் சொற்பொழிவுகள் மாணவர்களின் நலனையும் அவர்களது சிந்தனை மட்டத்தையும் கணக்கில் கொண்டு ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
இ. கட்சி ஆதரவாளர் சேர்ப்பது : அடிப்படை கிளைகள் முதல் உயர்மட்டக் கமிட்டி வரை உள்ள மாணவர் சங்க கமிட்டி உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கும் – கட்சி ஆதரவாளர்களின் எண்ணிக்கைக்கும் மிகப்பெரும் இடைவெளியுள்ளது. எனவே, நாம் மாணவர் அரங்கில் முன்னணியில் செயல்பாடும் கமிட்டி உறுப்பினர்களை கட்சியின் ஆதரவாளர்களாக இணைப்பதில் – அவர்களை கட்சிக்குக் கொண்டு வருவதில் உரிய கவனம் செலுத்த வேண்டும்.
ஈ. முழு நேர ஊழியர்கள் : 18வது கட்சி காங்கிரசின் அரசியல் – ஸ்தாபன அறிக்கையில், “பெரும்பாலான மாநிலங்களில் ஒரு சரியான ஊழியர் கொள்கை இருப்பதில்லை. எதிர் கால தலைமைக்கு தேவையான புதிய தோழர்களை வளர்த்தெடுக்க நடவடிக்கைகள் எடுப்பதில்லை. பாரம்பரியமாக வளமையாக திகழும் மாநிலங்களும் இந்த அம்சத்தில் விதிவிலக்காக இருப்பதில்லை. ஒரு விரிவான பயனுள்ள ஊழியர் கொள்கை வகுக்கப்பட வேண்டிய தேவையுள்ளது” என குறிப்பிட்டுள்ளது. மாணவர் சங்கத்தை வளர்ப்பதற்கும் மாணவர்களிடையே கட்சியைக் கொண்டு செல்வதற்கும் முழு நேர ஊழியர்களின் பங்கு மிக முக்கியமானது. ஆந்திர மாநிலத்தின் மிக வேகமான மாணவர் சங்க வளர்ச்சிக்கு அங்கு பணியாற்றும் 120 முழுநேர ஊழியர்கள்மிக முக்கியமானவர்களாக இருக்கின்றனர். 22 மாவட்டங்களுடைய ஆந்திராவில் 14 தோழர்கள் மாநில மையத்தில் பணியாற்றுகின்றனர்.
கட்சியின் 18ஆவது தமிழ் மாநில மாநாடு, மாணவர் அரங்க வளர்ச்சிக்கு முழுநேர ஊழியர்களின் முக்கியத்துவத்தை சரியான முறையில் சுட்டிக்காட்டிய போதும் அதை நடைமுறைப் படுத்துவதில் பெறும் பலகீனம் உள்ளது.
“மாணவர் அமைப்பில் தலைமைப்பாத்திரம் வகிக்கும் கட்சித் தோழர்கள் ஏற்கனவே மாணவர் அமைப்பின் முழுநேர ஊழியர்கள் போல் செயல்பட்டு வருகின்றனர். ஆனால் கட்சி கமிட்டிகள் அவர்களை முழுமைப் பெற்ற கட்சி முழுநேர ஊழியர்களாக எடுக்க வேண்டியத் தேவையை மறுதளிக்கின்றனர் இந்த நிலைமை அவசியம் உடன் களையப்பட வேண்டும்.”
சோசலிசத்திற்கான பாதை
இன்றைய இந்திய சமூகமானது ஏகபோக முதலாளிகளால் ஆதிக்கம் செய்யப்படுகிற சாதிய, மத மற்றும் ஆதிவாசி அமைப்புகளைக் கொண்ட ஓரு வினோதமான கலவையாக உள்ளது. முதலாளித் துவத்திற்கு முந்தைய சமூக அமைப்பை அழிப்பதில் விருப்புக் கொண்ட அனைத்து முற்போக்கு சக்திகளையும் ஒன்றுபடுத்தி இந்த சமூக அமைப்பிற்குள் இருக்கக் கூடிய அனைத்து புரட்சிகர சக்திகளையும் ஒன்றிணைத்து மக்கள் ஜனநாயகப் புரட்சியை நிறைவேற்றுவதன் மூலம் சோசலிசத்தை நோக்கிய மாற்றத்திற்கான பூர்வாங்கப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய கடமை உழைப்பாளி வர்க்கத்திற்கும் அதன் கட்சிக்கும் இருக்கிறது (கட்சி திட்டம் 6. 1)
…..இத்தகைய கடமைகளை நிறைவேற்றுவதற்காகவும் மக்கள் ஜனநாயக முன்னணியில் ஒன்றுபட்டு உண்மையாக ஜனநாயகப்பூர்வ வளர்ச்சியில் செழிப்பான வாழ்க்கையை உருவாக்க வேண்டும் என்பதில் ஆர்வமுள்ள உழைக்கும் மக்கள், தொழிலாளி வர்க்கம், விவசாயிகள், மாதர்கள், மாணவர்கள், இளைஞர்கள், அறிவு ஜீவிகள், நடுத்தர வர்க்கத்தினர் ஆகியோரை நமது கட்சி அறைகூவல் விடுக்கிறது. (கட்சி திட்டம் 8. 6)
சமூகப் புரட்சிகளில் உலகெங்கும் உந்துசக்தியாக செயல்பட்ட மாணவர்களை இந்தியாவில் மக்கள் ஜனநாயக புரட்சியில் பங்கேற்க வைக்க வேண்டியுள்ளது மிக முக்கியமானது. காரணம், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அனுபவமானது, குறிப்பாக நமது கட்சியின் வரலாறானது, கட்சியை கட்டுவதில் மாணவ அமைப்பும் மாணவர் இயக்கமும் மிகமிக முக்கியமான பங்கினை வகித்துள்ளன என்றே கூறுகிறது. இன்றைக்கும் கட்சியின் பல்வேறு மட்டங்களில் தலைமைப் பொறுப்பை வகிக்கும் தோழர்களில் பெரும் எண்ணிக்கையிலான தோழர்கள் மாணவர் இயக்கம் உற்பத்தி செய்த தோழர்களே.
இன்றைய சூழலில் கட்சியை விரிவுபடுத்துவது என்ற கேள்வியை தவிர்க்கவே முடியாது. மேலும் இதைச் செய்வதற்கு நமக்கு துடிப்புமிக்க, திறன்மிக்க இளைய தலைமுறை தேவைப்படுகிறது. மாணவர்களிடையே மிகச் சீரிய முறையில் கட்சியை கட்டாமல் இந்த இலக்கை எட்ட முடியாது.
18வது கட்சி காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது போல, “மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் நிலவும் தீவிரமான விரக்தி மனப்பான்மையை பயன்படுத்திக் கொண்டு அவர்களை பாசிச பாதையிலும், காட்டுமிராண்டித்தனமான வழியிலும், பிற்போக்கு சக்திகள் தவறாக வழி நடத்திச் செல்வதற்கு முன்னரும், இடது அதி தீவிர சக்திகள் தங்களின் அராஜக பாதைக்கு பலி கடாக்களாக அவர்களை ஆக்குவதற்கு முன்னரும் நாம் செயல் பட்டாக வேண்டும். மாணவர் சமூகத்தின் மத்தியில் வளர்ந்து வரும் அதிருப்தியை சமூக மாற்றம் என்ற புரட்சிப் பாதையை நோக்கி திருப்புவதற்காக நாம் செயல்படுவதே நம் முன்னுள்ள சவாலாகும்”.
ஆதாரம்:
1. Student Front Policy and Tasks. CPIM – CC Document.
2. Student Struggle.
3. E.M.S. – Student Movement Yesterday, Today and Tomorrow.
4. Tapas – Probing into the history of Indian Student Movement.
5. கட்சித் திட்டம்.
6. இ.எம்.எஸ் – சோசலிசத்திற்கான இந்திய பாதை.
7. 18வது அகில இந்திய மாநாடு அரசியல் ஸ்தாபன அறிக்கை.
8. 18வது தமிழ்நாடு மாநில மாநாடு அரசியல் ஸ்தாபன அறிக்கை.
Leave a Reply