தோழர் பி.ஆர் பற்றிய நினைவலைகள்!


டிசம்பர் 15 – தோழர் பி. ராமமூர்த்தியின் நினைவு நாள். பன்முகத்திறனோடு இந்திய அரசியலிலும் தமிழக அரசியலிலும் களம் கண்ட அந்த தோழர் மறைந்து 20 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார தளங்களின் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. பல சமயங்களில் தோழர் பி.ஆரின் நினைவு வந்து போனதுண்டு – வழிகாட்டுதல் வேண்டி. அரசியல் அரங்கில் அவர் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் தீர்க்கமான வழிகாட்டுதல் கிடைத்துக் கொண்டிருந்தது. இக்கட்டுரையின் நோக்கம் ஒரு தனி மனித வழிபாட்டினை பதிவு செய்வது அல்ல; அவருடைய வாழ்க்கை சரிதத்தை விளக்கும் நோக்கமும் கொண்டதல்ல. இந்த நாட்டில் சோசலிச – கம்யூனிச கருத்துக்கள் பரவி மக்கள் மத்தியில் ஒரு பேரியக்கம் உருவாக அவர் ஆற்றிய தவக்க கால பணிகளை நினைவு கூரும் முயற்சி தான் இது.

தோழர் பி.ஆர். தேசிய நீரோட்டத்தில் இணைந்த காலம் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிராக மக்களின் எழுச்சி உருவாகிக் கொண்டிருந்த காலம். குறிப்பாக 20-30களில் விடுதலை இயக்கம் தமிழகத்திலும் எழுந்த காலத்தில் அவரின் அரசியல் பணியும் துவங்கியது. அன்னியத் துணி புறக்கணிப்பு போராட்டத்தை மகாத்மா காந்தி அறிவித்தபோது 11 வயது மாணவன் பி.ஆர். கதர் கட்டத் துவங்கிய பின்பு கொழுந்து விட்டெறிந்த அவரின் அரசியல் வேள்விக்கான தீப்பொறியாக இருந்தது. தமிழகத்தில் கம்யூனிச இயக்கத்தை தோற்றுவிக்க முன்முயற்சி எடுத்த தோழர் அமீர் ஹைதர்கானை தோழர் பி.ஆர். சந்தித்தது அவர் வாழ்வில் ஏற்பட்ட முக்கிய அரசியல் திருப்பம்.

மீரட் சதி வழக்கில் பிரிட்டிஷ் அரசால் தேடப்பட்டு வந்த தலைமறைவு புரட்சியாளர்தான் அமீர்ஹைதர்கான். தமிழகத்தில் கட்சியினை உருவாக்க அவர் பல இன்னல்களை சந்திக்க நேர்ந்தது. அவர் துவக்கிய இளம் தொழிலாளர் அமைப்பு (Young Workers‘ Leaque) மூலம் மார்க்சீய கருத்துக்களை அவரால் தொழிலாளிகளிடம் கொண்டு செல்ல முடிந்தது. அப்போது தோழர் பி.ஆர் ஒரு இளம் காங்கிரஸ்காரர். அன்னிய துணி நிராகரிப்பு மற்றும் மறியல் போராட்டங்களில் பங்குபெற ஊழியர்களை தயார் செய்து மறியலுக்கான ஏற்பாடுகள் செய்யும் பொறுப்பு அவருக்கு இருந்தது. அப்போது தான் அமீர்ஹைதர்கான் பி.ஆரை சந்தித்தார். பி.ஆருக்கு அமீர் ஒரு கம்யூனிஸ்ட் என்று தெரியாது. 1930ம் ஆண்டு உப்பு சத்தியாக்கிரகத்திற்கு பிறகு ஏற்பட்ட நிகழ்வுகளையடுத்து காந்தி போராட்டங்களை (வன்முறை வெடித்தது என்ற காரணத்தினால்) கைவிட்டு, காந்தி – இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்டது. தண்டனை பெற்றவர்கள் விடுதலையானார்கள். அமீர் ஹைதர்கான் இந்த ஒப்பந்தத்தை ஏற்கவில்லை; இந்திய முதலாளி வர்க்கத்தினருக்கே பயன்தரத்தக்கது என வாதிட்டார். தொழிலாளி வர்க்கம் பங்கு பெறாமல் எந்த சத்தியாக்கிரக போராட்டமும் வெற்றி பெற முடியாது என்ற ஹைதர்கானின் கருத்து பி.ஆரை சிந்திக்க வைத்து. இந்த கருத்தை காங்கிரஸ் கட்சி சார்பாக மாநிலங்களில் நடைபெறும் இயக்கங்களுக்கு பொறுப்பேற்றிருந்த ஜெயப்பிரகாஷ் நாராயணனிடம் பி.ஆர். இந்த கருத்தைச் சொல்ல அவரும் அதை ஏற்றுக் கொண்டார். அதன் அடிப்படையில் ரயில்வே போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தனர்; அன்று பிரபல ரயில்வே தொழிற்சங்க தலைவராக இருந்த திரு. வி.வி. கிரியிடம் அந்த பொறுப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அது நடைபெறவில்லை. ஆனால் தொழிலாளி வர்க்கத்தை திரட்டி போராட்டங்களில் ஈடுபடுத்த வேண்டுமென்ற ஆழமாக பி.ஆர். மனதில் உறைந்தது. அதுவே தமிழகத்தில் தொழிற்சங்க இயக்க வளர்ச்சியில் முக்கியமான பங்கினை ஆற்ற பி.ஆரை உந்தியது.

தோழர். பி.ஆரின் சிந்தனையில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியதும் இந்த கால கட்டத்தில்தான் 1933-ல் சென்னை மாகாண அரசு ராஜதுரோக குற்றச்சாட்டின் பேரில் 20 பேரை கைது செய்தது; அரசு அதிகாரிகளை கைது செய்து அரசு நிதி நிலையங்களை கொள்ளையடிக்க திட்டமிட்டார்கள் என்பது தான் குற்றச்சாட்டு. குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் தோழர் பி.ஆர் செய்தார்; அவரை செயலாளராக கொண்ட பாதுகாப்புக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. அந்த வழக்கு தொடர்பான ஆவணங்களைப் படிக்கும் போது ஒரு பயங்கரவாத இயக்கம் தான் நாட்டிற்கு விடுதலை தேடித் தரும் என்று நம்பத் தொடங்கினார். ஆனால் அவர்களுக்கு இந்த கருத்தில் மாற்றம் ஏற்பட்டது. அது ஒரு புதுமையான அனுபவம். அந்த சென்னை சதி வழக்கை நடத்திக் கொண்டிருந்தவர் வெங்கடரமணி என்ற சிறப்பு புலனாய்வு அதிகாரி; தேசப்பற்று கொண்டவர். சுங்கத்துறையினரால் கைப்பற்றப்பட்ட மார்க்சிய நூல்களை படித்தறிந்தவர்.

தோழர் பி.ஆருக்கு நன்கு அறிமுகமானவர். பி.ஆரை அழைத்து பயங்கரவாத கருத்துக்களில் மயக்கம் வேண்டாம் என அறிவுறுத்தியதோடு, லெனின் எழுதிய அரசும் புரட்சியும் இனி செய்ய வேண்டியது என்ன, துரோகி காஷட்ன்கி, ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் போன்ற புத்தகங்களை பி.ஆருக்கு கொடுத்து படிக்கச் சொன்னார். மார்க்சிய சிந்தாந்த வழியில் பி.ஆரின் சிந்தனை மாற்றம் பெற்றது. அவர் தன் வாழ்நாள் முழுமையும் அதை செயல்படுத்தும் போராட்டத்திற்கு அர்ப்பணித்தார்.

1934ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. அதன்பின் பாட்னாவில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடைபெற்றபொழுது சோசலிச சிந்தனையும் இடதுசாரி சிந்தனையும் கொண்ட காங்கிரஸ் ஊழியர்களின் மாநாடும் அங்கே நடைபெற்றது. ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஆச்சார்பா நரேந்திரதேவ் போன்றோர் முன்முயற்சி எடுத்தனர், பி.ஆர்., பி.சீனிவாசராவ் போன்ற தமிழக காங்கிரஸ் ஊழியர்களும், ஈ.எம்.எஸ்., ஏ.கே.ஜி, பி.கிருஷ்ணன்பிள்ளை போன்ற கேரளா காங்கிரஸ் ஊழியர்களும் அதில் பங்கேற்றனர். அந்த முறையில் காங்கிரசுக்குள்ளேயே இருந்து செயல்படும் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி உருவாகி காங்கிரசை சோசலிச வழியில் எடுத்துச் செல்லும் நோக்கத்தை கொண்டிருந்தது. காங்கிரசுக்குள் சோசலிச கருத்துக்களுக்காக போராட வேண்டும், தொழிற்சங்கங்கள் விவசாயிகளின் அமைப்புகள் போன்றவற்றை உருவாக்க வேண்டும் அந்த அமைப்புகள் நடத்தும் போராட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்ற பிரகடனத்தை பாட்னாவில் கூடிய காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி மாநாடு வெளியிட்டது.

கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்தால் கம்யூனிஸ்டுகள் வெளிப்படையாக செயல்பட முடியவில்லை. காங்கிரஸ் கட்சிக்குள் – காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்குள் செயல்பட வேண்டிய தேவையிருந்தது. ஆந்திர மாநிலத்தில் தோழர் பி. சுந்தரய்யாவும் (சென்னை மாகாண கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர்) தமிழ்நாட்டில் தோழர் பி.ஆர்., சீனிவாசராவ் போன்றவர்கள் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியினை தோற்றுவிக்க முயற்சி எடுத்தனர்.

பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் தாக்கம் தமிழக மக்களிடையே ஆழமாக வேரூன்றியது. ப. ஜீவானந்தம் போன்றவர்கள் அதில் ஈர்க்கப்பட்டு, காங்கிரஸ் இயக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டே, அந்த இயக்கத்திலும் பங்கு பெற்றார்கள். சிங்கார வேலர் போன்றவர்கள் பெரியாரின் பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்கு துணை நின்றார்கள். சாதி ஒழிப்பு, பெண்கள் உரிமை, விதவை மறுமணம் போன்ற பல முற்போக்ககான சமூகக் கருத்துக்களை அந்த இயக்கம் முன் வைத்தது. பெரியார் சோவியத் யூனியனுக்கு சென்று வந்த பிறகு அவர் நடத்திய குடியரசு இதன் மூலமும், பொதுக் கூட்டங்கள் மூலமும் பொதுவுடைமைக் கருத்துக்களை பிரச்சாரம் செய்தார். அவருடைய இந்த பிரச்சாரம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பிரிட்டிஷ் அரசின் நிர்பந்தம் காரணமாக கைவிடப்பட்டது. சிங்காரவேலர், ஜீவானந்தம் போன்றவர்கள் இதை ஏற்கவில்லை. 1936, மார்ச் மாதத்தில் திருத்துறைப்பூண்டி மாநாட்டில் ஜீவாவும் மற்ற தோழர்களும் சுயமரியாதை சோசலிஸ்ட் கட்சி என்ற அமைப்பை உருவாக்கினார்கள். பின்பு அது காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியுடன் இணைந்தது. தோழர் பி.ஆர். பெரியாரை காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்குள் கொண்டு வர முயற்சி எடுத்தார். ஜெயப்பிரகாஷ் நாராயணனும் பெரியாரும் கலந்து பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்தார். அந்தப் பேச்சுவார்த்தை பெற்றி பெறவில்லை.

கம்யூனிஸ்ட் அகிலத்தின் 7வது மாநாடு பாசிசத்துக்கு எதிரான ஐக்கிய முன்னணி கட்ட வேண்டும் என முடிவெடுத்தது. அதன் அடிப்படையில் இந்தியா போன்ற காலனி நாடுகளில் ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளை திரட்டி ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடுவதற்கான விரிவான ஐக்கிய முன்னணியினை உருவாக்க வேண்டும் என்றும் வழிகாட்டியது. இதன் அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்டுகளுக்கு வழிகாட்ட பிரிட்டீஷ் கம்யூனிஸ்ட் தலைவர்களான ரஜனி பாமிதத்தும் பெண் பிராட்லியும் கூட்டாக அறிக்கை ஒன்றை 1936 – ஏப்ரல் மாதத்தில் வெளியிட்டனர். அதற்கு தத் – பிராட்லி கோட்பாடு என்று பெயர். அதன்படி கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர்களாக இருந்து கொண்டே காங்கிரசில் சேர்ந்து அதனுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியிலும் சேர்ந்து எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும். (பி. சுந்தரய்யா: புரட்சிப் பாதையில் எனது பயணம்) இந்த பணியினை பி.ஆர். போன்ற தோழர்கள் மிகச் சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருந்தனர். அதே ஆண்டில் தான் (1936) தமிழகத்தில் முதல் கம்யூனிஸ்ட் அமைப்பும் உருவாக்கப்பட்டது.

சென்னையில் தொழிலாளர் பாதுகாப்பு கழகம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு பல்வேறு தொழிற்சங்க வெகுஜன நடவடிக்கைகளுக்கு வழிகாட்டியாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. பி. சுந்தரய்யா, எஸ்.வி. காட்டே (தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் உருவாக வழிகாட்டியவர்களில் ஒருவர்) போன்ற தோழர்கள் அந்த அமைப்பின் செயல்பாடுகளை பரிசீலித்து அதில் பணியாற்றும் தோழர்களை கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக்குவதென்று முடிவு எடுத்தார்கள். அகில இந்திய கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள் என்ற முறையில் அந்த இருவரும் எடுத்த கூட்டு முடிவின் அடிப்படையில் தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்கிளை உருவாக்கப்பட்டது. பி. ராமமூர்த்தி, பி. சீனிவாசராவ், ப. ஜீவானந்தம், ஏ.என்.கே. அய்யங்கார், சி.என். சுப்ரமணியம், கே. முருகேசன், சி.பி. இளங்கோ, டி.ஆர். சுப்ரமணியம், திருத்துறைப்பூண்டி முருகேசன் ஆகியோர் அடங்கியது தான் அந்த முதல் கட்சி கிளை.

இதற்கிடையில் இயக்கத்தை கட்டும் பணியும் நடந்து கொண்டிருந்தது. தொழிலாளர் பாதுகாப்பு கழகத்தின் சென்னை அலுவலகம் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படும் தொழிற்சங்க அலுவலகமாக செயல்படத் துவங்கியது. (காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் அலுவலமாகவும் அது இருந்ததுமூ. வேலைநிறுத்த அலுவலகம் – ஸ்ட்ரைக் ஆபீஸ் என்று தான் அது அழைக்கப்பட்டது. அச்சுத் தொழிலாளர் சங்கம், மூக்குப்பொடி தொழிலாளர் சங்கம், கள்ளிறக்கும் தொழிலாளர் சங்கம் போன்ற அமைப்புகள் சென்னையை சுற்றி உருவாவதில் தோழர் பி.ஆர். ஆற்றிய பங்கு சிறப்பானதொன்று. பொதுவாகவே தமிழகம் முழுமையும் ஒரு வலுவான தொழிற்சங்க இயக்கம் கட்டுவதில் தோழர் பி.ஆர். ஆற்றிய பணி என்றும் நம் நினைவில் இருக்க வேண்டிய ஒன்றாகும். கோவை, மதுரை போன்ற இடங்களில் பஞ்சாலை தொழிலாளர்களை ஸ்தாபன ரீதியாக திரட்டியும், அவர்களின் உரிமைகளுக்காக பல்வேறு போராட்டங்களை திட்டமிட்டு நடத்தி வெற்றி கண்டதில் தோழர் பி.ஆரின் பங்கு மகத்தானது. காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் ஏன் எந்த நிறுவனங்களுக்குள்ளும் சென்று சட்ட நுணுக்கங்களை திறம்பட எடுத்துக் கூறி தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பினை உறுதி செய்ய தோழர் பி.ஆர். ஆற்றிய பணி மறக்க இயலாதது. தொழிற்சங்க இயக்கம் துவங்கிய காலத்தில் கடுமையான அடக்குமுறையினை சந்திக்க வேண்டியிருந்தது.

காலனியாதிக்க ஆட்சியாளர்கள் முதலாளிகள் ஆகியோரின் தாக்குதல் நடவடிககையினை சந்திக்க வேண்டியிருந்தது. பொய் வழக்குகள், தடைச் சட்டங்கள், குண்டர்களின் தாக்குதல் – இவற்றையெல்லாம் எதிர் கொண்டு தான் தொழிற்சங்க இயக்கம் வளர்ந்தது. கோவை லட்சுமி ஆலை போராட்டம், நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை போராட்டம், வீரஞ்செறிந்த ரயில்வே ஊழியர் போராட்டம் என போராட்ட அலைகள் பரவி தமிழகத்தை கவ்விப் பிடித்தது. (தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசும் (ராஜாஜி தலைமையில்) தன் பங்கிற்கு தாக்குதல் நடவடிக்கைகளை தொடுத்தது. மதுரையில் மகாலெட்சுமி ஆலையில் போராட்டம் நடந்த போது அதைக் காண வந்த கம்யூனிஸ்ட் தலைவர் பாட்லிவாலவை தடை விதித்து நுழைய விடாமல் தடுத்தது சென்னை மாகாண அரசு நெல்லிக் குப்பம் போராட்டத்தை உடைத்த ராஜாஜி அரசு செய்த முயற்சியினை பி.ஆர். போன்ற தோழர்கள் கடுமையான பிரச்சாரத்தால் முறியடித்து போராட்டத்தை வெற்றி நிலைக்கு கொண்டு சென்றனர். இன்றைய தொழிற்சங்க இயக்கத்தின் வளர்ச்சிக்கு அன்று போடப்பட்ட அடித்தளம் தான் பிரதான காரணமாக இருக்கிறது. இன்று தொழிற்சங்க ஒற்றமைக்கு நிறைய சோதனைகள் உண்டு. பல்வேறு தத்துவார்த்த ஒற்றுமையினை கட்ட பி.ஆர். போன்ற தோழர்கள் எடுத்த முயற்சிகள் மேலும் தொடர்வது இன்றைய தேவை. அந்த வகையில் நாம் பயணிக்க வேண்டிய தூரம் சற்று அதிகம் தான்.

தொழிற்சங்க இயக்கத்திற்கு வழிகாட்டியதோடு காங்கிரஸ் (சோசலிஸ்ட் கட்சி தன் பணியினை நிறுத்திக் கொள்ளவில்லை. மார்க்சீய சிந்தனைகளை பரப்பும் பணியினையும் மேற்கொண்டது. பிரசுரங்கள் வெளியிடப்பட்டன; வகுப்புகள் நடத்தப்பட்டன; மாவட்டங்களில் கிளைகள் துவக்கப்பட்டு பிரச்சாரம் தொடர்ந்தது. விவசாய, மாணவர் அமைப்புகள் உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கம்யூனிஸ்ட் கட்சியின் மீதான தடை நீக்கப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. தமிழகம் பூராவும் பி.ஆர். சுற்றுப் பயணம் மேற்கொண்டு இப்பணிகளை மேற்கொண்டார். அரசியல் வகுப்புகளும் அரசியல் மாநாடுகளும் காங்கிரஸ் சோசலிஸ்ட் கடசி பங்கு பெற்ற பிரதான நடவடிக்கைகள் 1938ம் ஆண்டு ஜனவரி 19ந் தேதி வத்தலக்குண்டு நகரில் 39வது தமிழ் மாகாண அரசியல் மாநாடு ஒரு குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அதில் ஜமீன் இனாம் முறையினை நஷ்ட ஈடு கொடுக்காமல் ஒழிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை பி.ஆர். முன்மொழிந்தார்; நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்ற திருத்தம் வந்தது. கடுமையான விவாதம் நடைபெற்றது. ஏன் கொடுக்க வேண்டியதில்லை என பி.ஆர். கொடுத்த விளக்கவுரைக்குப் பின் அவர் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. (1939ல் நடந்த ராஜபாளையம் மாநாட்டில் ராஜாஜி போன்றோர் தெரிவித்த சட்டரீதியான தடைக்கற்கள் பட்டு அந்த தீர்மானம் நொறுங்கிப் போனது)

1939ம் ஆண்டு ஜனவரியில் காங்கிரஸ் கட்சியின் மாநாடு திரிபுரி என்னுமிடத்தில் நடைபெற்றது. தலைவர் பதவிக்கான தேர்தலில் சுபாஷ்சந்திரபோசும் பட்டாபி சீத்தாராமய்யாவும் போட்டியிட்டனர். சுபாஷ் வெற்றிபெற்றார். அதில் தமிழக காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் பங்கு சிறப்பானது; அதிலும் பி.ஆர். போன்ற தோழர்கள் ஆற்றிய பணி போற்றத்தக்கதாக அமைந்தது. காங்கிரஸ் சோசலிஸ்டுகளின் செல்வாக்கு அதிகரித்திருப்பைத நேஷனல் ஃப்ரண்ட் (பிப்ரவரி 26) என்ற பத்திரிகை செய்தியாக வெளியிட்டது- மாகாண காங்கிரஸ் (தமிழ்நாடு0 கமிட்டியிலும் சோசலிஸ்டுகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. சென்னையிலேயே கூட மொத்தமுள்ள 9 இடங்களில் 5 இடங்கள் அவர்கள் பெற்றுள்ளனர்

இரண்டாம் உலக யுத்தம் பற்றிய அணுகுமுறையில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் உள்ள கம்யூனிஸ்டுகளுக்கும் மற்றவர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. (அதைப்பற்றிய விவரங்களை பிறகு பார்க்கலாம்) கம்யூனிஸ்டுகளை வெளியேற்றுவதாக கட்சித் தலைமை அறிவித்தது. கேரளா, தமிழ்நாடு, ஒரிசா, ஆந்திரா ஆகிய பகுதிகளில் உள்ள காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைகளாக மாறியது.

தமிழகத்தில் கட்சியினை கட்டும் பணி மிகவும் சிக்கலான சூழ்நிலையில் துவங்கியது. சுந்தரய்யா, ஏ.கே.ஜி. போன்ற தோழர்கள் இங்கே கட்சியினை கட்ட பொறுப்பெடுத்துக் கொண்டார்கள். தலைமறைவு வாழ்க்கையில் தான் அந்தப் பணி செயல்படுத்த வேண்டியிருந்தது. தோழர் பி.ஆர். பிரசுரங்கள் எழுதுவார். தோழர் உமாநாத் பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லுவார். பி. ராமமூர்த்தி, எம்.ஆர். வெங்கட்ராமன், மோகன் குமாரமங்கலம், சி.என். சுப்ரமணியம் ஆகியோரை பற்றி தகவல் கொடுத்தால் 100 ரூ இனாம் என அரசு அறிவித்தது. ஆனால் காவல்துறை ரகசிய இடங்களை கண்டுபிடித்து விட்டனர். பி.ஆர். உட்பட கைது செய்யப்பட்ட தலைவக்ரள் மீது வழக்கு போடப்பட்டது. அது தான் பிரசித்தி பெற்ற சதி வழக்கு. வழக்கில் அனைவரின் சார்பாகவும் பி.ஆர். வாதாடினார். நீதிமன்றத்தில் அவர் ஆற்றிய உரை இன்னும் நாம் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று.

நாங்கள் வன்முறையில் ஈடுபடும்படி யாரையும் தூண்டவில்லை. வன்முறையின் மூலம் ஒரு சிறு மைனாரிட்டியான பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தான் இந்த நாட்டை ஆண்டு கொண்டு இருக்கிறார்கள். அவர்களது ராணுவமும், போலீசும் இதர அடக்குமுறை கருவிகளும் தான் மக்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு நூற்றுக்கணக்கான மக்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கின்ற. இந்த அரசாங்க வன்முறைகளை முறியத்து எங்கள் நாட்டை விடுதலை பெறச் செய்வதே எங்களது குறிக்கோள்.

ஒரு வகையில் நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். இந்தியாவில் உள்ள 40 கோடி மக்களுடன் நாங்களும் சேர்ந்து சதி செய்தோம் என்று குற்றம் சாட்டினால் அதை ஒப்புக் கொள்கிறோம். இந்த சதிக் குற்றச்சாட்டின் மூலம் எங்களை தூக்கில் போட்டு விடலாம். ஆனால் எங்களோடு இது முடிந்து விடும் என்று நினைத்தால் நீங்கள் தான் ஏமாந்து போவீர்கள் இனி உங்கள் விருப்பம் போல் தீர்மானிக்கலாம்

அவருடைய அரசியல் வாழ்க்கை இப்படித்தான் இருந்திருக்கிறது. நாடு விடுதலை பெற்ற பின் அவர் ஆற்றிய பணிகள் குறித்து இக்கட்டுரையில் ஏதும் குறிப்பிடவில்லை. அது ஒரு நிண்ட சிறப்புமிக்க வரலாறு. அவருடைய அரசியல் வாழ்வின் சில துவக்க கால நிகழ்வுகள் தான் இங்கே குறிப்பிடப்பட்டிருக்கின்றன. சற்றே நின்று அவருடைய வாழ்வை, புரிந்த தியாகத்தை ஆற்றிய பணிகளை பின்னோக்கி பார்க்கும்பொழுது நமக்குத் தோன்றுகிறது எத்தனை பெரிய மனிதர் – இவர் நம்மிடையே வாழ்ந்தார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s