பாலக்காடு கட்சி காங்கிரஸ் நான்காவது காங்கிரஸ் என்றுதான் அறியப்பட்டது. ஆனால், அதற்கு பின் நடந்த கட்சி காங்கிரசானது விசேஷ கட்சிக் காங்கிரஸ் என்றுதான் அறியப்பட்டதே தவிர, ஒரு எண்ணிக்கையால் அறியப்படவில்லை. இதற்கு காரணம், முறையாக மூன்றாண்டுகளுக்கு பின் வழக்கமான கட்சி காங்கிரஸ் நடத்துவதற்கு மாறாக, 1958 -இல் ஏப்ரல் மாதத்தில் ஒரு விசேஷ அகில இந்திய கட்சி சிறப்பு மாநாடு நடத்துவதென்று கட்சி முடிவு செய்தது. அது ஐந்தாவது காங்கிரஸ் என்று அறியப்படவில்லை என்பதற்கான காரணம் இந்திய அரசியலில் ஏற்பட்ட திருப்பங்களை மனதில் கொண்டு உடனடி அரசியல் நடைமுறைக்கு கருத்தொற்றுமைக்காக விவாதிக்க வேண்டுமென்ற நிலை ஏற்பட்டது.
1957 இல் நடைபெற்ற இரண்டாவது பொதுத்தேர்தலுக்கும் முந்திய காலக்கட்டத்தில் (அதாவது, பாலக்காடு மாநாட்டிற்கு பின்) கம்யூனிஸ்ட் கட்சியும், வெகுஜன இயக்கங்களும் பெரிய அளவில் வளர்ந்தன. இந்த வளர்ச்சியானது 1957 பொதுத்தேர்தலில் தெளிவாக வெளிப்பட்டது. இந்த வளர்ச்சி தேர்தல் முடிவுகளில் மட்டுமின்றி, இடைக்காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய பொது அரசியல் செல்வாக்கிலும் பெரிய போராட்டங்களில் தெளிவாகவே காணப்பட்டது.
பாராளுமன்றத்தைப் பொறுத்தமட்டிலும் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு அகில இந்திய முக்கியத்துவம் வாய்ந்த கட்சியாக தேர்தல் முடிவுகள் மூலம் உலகிற்கு அரசியல் வட்டாரங்கள் உணர்ந்தன. பாராளுமன்றத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சிக்கு கிடைத்த வாக்குகளும் 1951 -னுடன் ஒப்பிடும் போது, இரட்டிப்புக்கு மேலாகவே இருந்தது. காஷ்மீர் தவிர இத்தேர்தலில் மற்ற எல்லா மாநிலங்களிலும் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய பலம் எண்ணிக்கை, சீட்டுகள் அதிகமாயிற்று. உதாரணமாக, வங்காளத்தில், சட்டமன்றத்தில் 28 இடங்களிலிருந்து 40 ஆக உயர்ந்தது. கேரளாவில் மொத்தமுள்ள 126 சீட்டுகளில் 65 சீட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், அதன் ஆதரவாளர்களுக்கும் கிடைத்தன. இதைத் தவிர, இடதுசாரி கட்சிகளுக்கு மேற்குவங்கம், மும்பை, பீகார், திரிபுரா போன்ற மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் இடங்கள் கிடைத்தன. மறுபக்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பல மாநிலங்களிலும் முந்தைய தேர்தல்களோடு ஒப்பிடும்போது, தோல்விகளையும் (பின்னடைவு) சந்திக்க நேர்ந்தது.
இந்த நிலையில், இந்திய அரசியலில் கம்யூனிஸ்ட், இடதுசாரி, ஜனநாயக இயக்கங்களுக்கு பெரும் அளவில் செல்வாக்கு உயர்ந்தது. ஜனசங்கம் மற்றும் மதவாத கட்சிகளுக்கு எதிர்பாராத தோல்விகளும் ஏற்பட்டன. காங்கிரஸ் கட்சி பல மாகாணங்களிலும் பின்னடைவுகளும் ஏற்பட்டது என்பதும் கவனிக்க வேண்டியுள்ளது.
கேரளா வெற்றி
இதைத் தவிர இத்தகைய முக்கியமான நிகழ்வுகளில் தலையானது கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி மாநில ஆட்சியை அமைக்கக்கூடிய அளவிற்கு வெற்றி பெற்றதாகும். ஆதரவாளர்கள் ஐந்து பேர்கள் உட்பட 65 தோழர்களின் ஆதரவுடன் அமைச்சரவையை அமைக்கும் அளவிற்கு கட்சி பெரும் வெற்றியை கண்டது. இந்த நிகழ்வானது இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகளில்கூட, வியப்புடன் வரவேற்கப்பட்டது. பெரும்பகுதியான மக்கள் மத்தியிலும் உற்சாகமாக வரவேற்கும் நிலை ஏற்பட்டது. தேர்தல்கள் மூலம் கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்ற எண்ணங்கள் கூட பலருக்கும் ஏற்பட்டது. இந்த விவாதத்தில் இறங்காமல், வெற்றியின் முழுப்பயனையும் அடைவதற்கு வெகுஜன இடதுசாரி இயக்கங்கள் பெருமளவில் முன்னேற வேண்டும் என்றும், அதற்கேற்றார்போல் கட்சியின் விஸ்தரிப்பு செயல்முறைகள் தத்துவார்த்த அடிப்படை போன்றவை வலுப்பட வேண்டும் என்ற கடமைதான் முக்கியமானதென்று கட்சித் தலைமை சரியான முடிவிற்கு வந்தது. (அமைதியான முறையில் சோசலிசப் புரட்சியை நடத்த முடியுமா? என்ற தத்துவார்த்த விவாதங்களைவிட முக்கியமானது கட்சியை வலுப்படுத்துவதும், வெகுஜன இயக்கங்கள் பெருமளவில் முன்னேறுவதுதான் முக்கியக் கடமையாகும் என்று தலைமை வலியுறுத்தியது.)
இந்தப் பின்னணியில், உருவாகியிருக்கும் புதிய சூழலில் இக்கடமைகளை – வெகுஜன இயக்கத்தை வலுப்படுத்த கட்சி ஸ்தாபனத்தை கெட்டிப்படுத்த, தத்துவார்த்த அடிப்படையை உறுதிப்படுத்த போன்றவைகளை ஆதாரமாகக் கொண்ட ஒரு வெகுஜனக் கட்சியை கட்டுவதில்தான் கட்சி கவனம் செலுத்த வேண்டும் என்று தலைமை முடிவிற்கு வந்தது. இந்த நோக்கத்துடன் தான் கட்சியின் விசேஷ மாநாடு ஒன்றை நடத்தி ஆழமான விவாதங்களை நடத்துவது அவசியமென்று கட்சித் தலைமை முடிவு செய்தது. இதனடிப்படையில்தான் பஞ்சாபில் அமிர்தசரஸ் நகரில் 1958 ஏப்ரல் 6 – 13 வரை கட்சியின் விசேஷ காங்கிரஸ் நடத்தப்பட்டது. (நான்காவது காங்கிரஸ், ஐந்தாவது காங்கிரஸ் என்ற விளக்கத்திற்கு போகாமல், விசேஷ காங்கிரஸ் என்ற முறையில் மட்டும் அழைக்கப்பட்டது.) ஆக, இந்தியாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் இடதுசாரி இயக்கங்களின் முன்னேற்றம் காங்கிரஸ் – ஜனசங்கம் போன்ற கட்சியின் பின்னடைவு – மொத்தத்தில் மாற்றங்களுக்கான ஒரு சூழ்நிலை – இந்தப் பின்னணியில்தான் மாநாடு நடைபெற்றது. கேரளாவில் மாபெரும் வெற்றி, உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் வளர்ந்து வந்த தத்துவார்த்த விவாதங்களும் இம்மாநாட்டின் முக்கியத்துவத்திற்கு பின்னணியாக அமைந்தன.
உலக கம்யூனிஸ்ட் இயக்கமும் – சர்ச்சைகளும்
உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் வந்த மாற்றம் (கருத்துப்பூர்வமான சர்ச்சைகள்) பற்றியும் ஒரு சில விஷயங்கள் குறிப்பிட வேண்டியுள்ளது. இரண்டாவது உலகப்போருக்கு பிறகு பின், பல நாடுகளிலும் சோஷசலிப் புரட்சியின் முன்னேற்றங்கள் போன்றவையின் பின்னணியில் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில், கூர்மையான கருத்து சம்பந்தமான சர்ச்சைகள் தோன்றியிருந்தன. இந்தச் சூழலில் 1957 -ஆம் ஆண்டில் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஆளும் கட்சிகளாக அன்றிருந்த 12 நாட்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் சந்தித்து, கம்யூனிஸ்ட் கட்சிகளின் பல கொள்கை நிலைகளை விளக்கும் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டது. (12 தேச கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொள்கை அறிக்கை என்ற பெயரில்) அறியப்பட்டது, இது அன்றைய காலத்தின் சர்ச்சைகளில் ஒரு முக்கியமான பாத்திரத்தை நிறைவேற்றியது. (இத்தகைய பின்னணியில்தான் அமிர்தசரஸ் மாநாடு நடைபெற்றது. கட்சியின் ஸ்தாபனத்தை வலுப்படுத்துவது – வெகுஜன ஸ்தாபனங்களின் பலத்தை பன்மடங்கு அதிகரிப்பது; சித்தாந்த – கொள்கை ரீதியான ஒற்றுமையை வலுப்படுத்துவது போன்ற கடமைகள் இம்மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.)
இந்தக் கடமைக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், அமிர்தசரஸ் காங்கிரஸ் அரசியல் விவாதங்களும் நடைபெற்றது மட்டுமின்றி, கட்சியின் ஸ்தாபன நிலைமை குறித்தும் ஆழமான சர்ச்சைகள் நடந்தன. இறுதியில், கட்சியின் புதியதோர் அமைப்புச் சட்டத்தை கட்சிக்காக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதுநாள் வரை அமுலில் இருந்த கட்சி விதிமுறைகளை ஸ்தூலமான பல திருத்தங்களை உட்படுத்தி, புதிய சட்ட விதிமுறைகளை கட்சி காங்கிரசில் நிறைவேற்றப்பட்டது.
இது தவிர கேரளாவில், தோழர் இ.எம்.எஸ். தலைமையில் மாநில ஆட்சி நடத்தி வந்த மாநில அரசுக்கு எதிராகவும், அதன் புரட்சிகரமான பல முடிவுகளை எதிர்த்தும், அனைத்து வர்க்க ஏடுகளும் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் பெரிய அளவில், ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சிகளை எதிர்த்து தோற்கடிக்கும்படி அமிர்தசரஸ் மாநாடு கட்சி அணிகளுக்கு முக்கிய கடமையை அளித்தது.
தவிர, 12 நாட்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொள்கை அறிக்கையை வரவேற்று இம்மாநாட்டில் ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆக, அமிர்தசரஸ் மாநாடு அன்றைய நிலைமையில் உடனடியான கடமைகளை செய்து முடிப்பதற்கான அறைகூவலை வெளியிட்டு, அதற்கான உத்தரவாதத்தையும் ஏற்படுத்தியது.
விஜயவாடா மாநாட்டை நோக்கி…
கொள்கை மோதல்களும் – செயல்பாடுகளின் முரண்பாடுகளும் கட்சிக்குள் இதே காலத்தில் தோன்றியது மட்டுமின்றி, பெருமளவில் கட்சிக்குள், கட்சியின் செயல் ஒற்றுமை பாதிக்கப்படும் ஒரு சூழ்நிலை பாலக்காடு (3வது மாநாட்டிலிருந்து வளர ஆரம்பித்தனர்.) 1951 – 52 காலத்தில் கிடைத்த வெற்றிகள், கட்சியின் முன்னேற்றங்கள் ஆகியவற்றின் பின்னணியில், பாலக்காடு மாநாட்டில், சர்ச்சைகள் ஓரளவிற்குதான் கூர்மையாகவே நடைபெற்றன. ஆயினும், உண்மையான கருத்து வேற்றுமைகள் இயக்க அனுபவங்களுடன் இயக்கப் பிரச்சனைகளுடன் இணைந்தே வரும் என்பதால், காலப்போக்கில், இப்பிரச்சனைகள் குறித்து, செயல்பாடுகள் குறித்து கருத்து மோதல்கள் அதிகமாகிக் கொண்டே இருக்கும் என்பதுதான் உண்மை.
பாலக்காடு மாநாட்டில்கூட தலைமையின் தரப்பில், முன்வைக்கப்பட்ட அரசியல் ரிப்போர்ட் பல தோழர்களும் கூட்டாகவே திருத்தங்களை சமர்ப்பித்துள்ளனர். அமிர்தசரஸ் கட்சி காங்கிரசிலும், மாற்றுக் கருத்துக்களை முன்வைக்கும் நிறுவனங்கள், விவாதத்திற்கு வரவில்லை என்ற போதிலும், உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் 20வது காங்கிரசின் குருஷ்ஷேவ் அவர்களின் அரசியல் ரிப்போர்ட்டிலும், பிரதிபலித்த கருத்துக்கள் சம்பந்தமான பல எண்ணங்கள் விவாதத்தில் இயல்பாகவே முன்வந்தன.
வேற்றுமைகள்
அந்தக் காலக்கட்டத்தில் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் முழுமையான கருத்து வேற்றுமைகள் வேகமாக பரவி வந்தது. கட்சிகளுக்கு இடையிலான கருத்து வேற்றுமைகள் தவிர, சோவியத் யூனியன், சீனா போன்ற நாடுகளுக்கிடையில் ஆழமான கருத்து முரண்பாடுகளும், நடைமுறை சிக்கல்களும் வளர்ந்து வெளிப்டையாகவே பரவிய ஒரு காலக்கட்டம். உலகத்தின் வளர்ச்சிப் போக்குகளும், திசைகளைப் பற்றி, கம்யூனிஸ்ட்டுகளுக்கு இடையில் தோன்றிய கருத்து வேற்றுமைகள், இயக்க ஒற்றுமையையே பெருமளவில் பாதிக்கச் செய்தன. தவிர, இதன் எதிரொலி இந்திய கட்சியின் தலைமையிலும், ஒரளவுக்கு அணிகளிலும் பரவியிருந்தன. இதற்கு மேலாக, இந்தியா – சீனா எல்லைப் பிரச்சனைகள் சம்பந்தமாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாட்டினையும், இதன் பால் சோவியத் கட்சியின் பார்வையைப் பற்றியும் இந்தியாவில் இந்தப் பின்னணியில் கட்சிக் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைத் தந்திரங்கள் குறித்தும், கட்சி முழுவதும் அரசியல் குழப்பங்களும், ஒற்றுமையின்மையும் தலைதூக்கியிருந்தது. இதற்கு மேலாக இந்தியாவில் ஆளும் கட்சியாகிய காங்கிரஸ் கட்சி பாத்திரத்தைப் பற்றி, அதன் வர்க்கத் தன்மையைப் பற்றி அதன்பால் கட்சி கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை தந்திரங்களைப் பற்றியெல்லாம் விவாதங்கள் கிளம்பின. நடைமுறை தந்திரத்தின்படி ஆளும் கட்சியுடன் கம்யூனிஸ்ட் கட்சி பின்பற்ற வேண்டிய தந்திரோபாயங்களைப் பற்றி பரவலான சர்ச்சைகள் கிளம்பின.
இதற்கு மேலாக மிகச் சுருக்கமாக சொல்லுவதாயிருப்பின் இந்தியாவில், கம்யூனிஸ்ட் கட்சி அடிப்படையில் பின்பற்ற வேண்டிய திசை வழி பற்றி – இந்தியப் புரட்சியின் பாதையைப் பற்றி அதன் நடைமுறையைப் பற்றி எல்லாம் கட்சிக்குள் ஆழமான கருத்துக்கள் மோதிக்கொண்டிருந்தன. இக்கருத்துக்கள் கட்சியின் செயல் ஒற்றுமையையும் குறிப்பிடத்தக்க அளவு பாதிக்கச் செய்திருந்தது. ஆக, கட்சிக் கமிட்டிகள், கட்சி உறுப்பினர்கள் – அனைவரும் சித்தாந்த ரீதியான நடைமுறை சம்பந்தமான பிரச்சனைகளில், பிளவுபட்டே இருந்தனர் என்பதுதான் உண்மை. இவ்வாறு, அமிர்தசரஸ் மாநாட்டிற்குப் பின் நடைபெற்ற கட்சி விவாதங்களில் குழப்பமான ஒரு நிலைமை பரவிக் கிடந்தது. இந்தியாவில் உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தோன்றிய மிகவும் ஆழமான சித்தாந்த ரீதியான கருத்து மோதல்கள் தவிர, மோதல்களின் தாக்கம் நமது கட்சியிலும், பெருமளவில் வெளிப்படையாகத் தெரிந்தது.
இவையெல்லாம் சேர்ந்து, கட்சிக்குள் வேற்றுமைகளின் வேர்கள் ஆழமாக பரவிய ஒரு சூழலில் தத்துவரீதியாக – சித்தாந்த ரீதியாக உறுதியான கொள்கையில் ஓங்கி நிற்கும்போது, கட்சியின் ஒற்றுமையை பாதிக்காத வகையில், கட்சியை வலுப்படுத்திக் கொண்டு செயல்படும் ஒரு கடுமையான நிலைமையில்தான் கட்சி செயல்பட முடிந்தது.
அமிர்தசரஸ் கட்சிக் காங்கிரசுக்கு முன் கொள்கையையும் பாதுகாத்து, கட்சியைiயும் பாதுகாத்து செயல்படும் ஒரு நிலைமைக்கான முயற்சிகள் தடையின்றி நடைபெற்றன. ஆயினும், அடிப்படையான நிலைகளில் துவங்கி நடைமுறை பணிகள் வரை பரவிக் கிடக்கும் அனைத்துத் துறைகளிலும், கருத்து வேற்றுமைகள் இருந்தபடியால், இம்முயற்சிகள் மிகப்பெரிய சிரமத்திற்கு மத்தியில்தான் நடைபெறவேண்டியுள்ளன.
6வது மாநாடு
இந்த நிலைமையில்தான் கட்சிக் காங்கிரசினை கூட்டி, அதில் சாங்ககோபமாக விவாதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அந்த மாநாடு – 6வது கட்சி காங்கிரஸ் விஜயவாடாவில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கான அரசியல் தயாரிப்பு பணிகளும் முறையே நடந்த வந்தன. அதற்கு முன்னோடியாக கட்சி மாநாட்டில், விவாதிக்க வேண்டிய அரசியல் – ஸ்தாபன நகல் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் தேசிய கவுன்சிலிலும், மத்தியக்குழுவிலும், நடைபெறத் துவங்கின. ஆனால், இவ்வமைப்புகளில் விவாதிப்பதற்கான நகல் அறிக்கைகள் மீதும் கூர்மையான கருத்து மாறுபாடுகள் தோன்றியதனால், ஒருமித்தக் கருத்தின் அடிப்படையிலான அறிக்கைகளை வரையறுக்க முடியவில்லை. தோழர் அஜய் கோஷின் அறிக்கை, பசவப்புன்னையாவின் அறிக்கை, பி.டி. ரனதிவேவின் அறிக்கை போன்றவைகள் எல்லாம் உருவாகின. இதைத் தவிர அடிப்படையான ஆதாரமான ஆவணமான கட்சியின் திட்டம் குறித்தும் பல நகல்கள் வரையறுக்கப்பட்டன. இவையெல்லாம் கட்சியில் பல மட்டங்களிலும், விவாததிற்கு உட்படுத்தப்பட்டது.
இந்த நிலையில்தான் விஜயவாடாவில் கட்சிக் காங்கிரஸ் நடைபெற்றது. (இந்த மாநாட்டில் பல வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அவர்களில், குறிப்பிடத்தக்கவர் சோவியத் கட்சியின் மூத்தத் தலைவராக இருந்த சுஸ்லாவ்) இக்கட்சிக் காங்கிரசில் மிகவும் கூர்மையான முறையில், ஆழமானக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டன. அரசியல் தீர்மானத்தின் மீதும் இவ்வாறு பல கருத்துக்கள் விவாதத்திற்கு வந்தன. ஒன்றுபட்ட ஒரு அரசியல் நிலைபாட்டினை உருவாக்க பெரிய முயற்சிகள் நடைபெற்றபோதும், கருத்துக்களின் ஆழமான தன்மைகள் காரணமாக இம்முயற்சிகள் வெற்றிபெறவில்லை என்று குறிப்பிட வேண்டும். எந்த முடிவுக்கும் போகாமல், மாநாடு ஒரு முடிவுக்கு வரக்கூடாது என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் பல நகல்கள் விவாதிக்கப்பட்ட போதிலும், அவையெல்லாம் வெற்றிபெறவில்லை. இந்த நிலையில் அன்றைய பொதுச் செயலாளர் தோழர் அஜய்கோஷ் ஒரு முக்கியமான தொகுப்புரையை மாநாட்டிற்கு முன் சமர்ப்பித்தார். கூர்மையான விவாதங்களுக்குப் பின் தோழர் அஜய் கோஷ் அவர்களின் தொகுப்புரையை ஆதாரமாகக் கொண்டு கட்சியில் ஒற்றுமையை உத்தரவாதப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
இந்த முடிவினை மாநாட்டில் அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொண்டு அஜய்கோஷ் தொகுப்புரை என்ற அடிப்படையில் கட்சியை செயல்படுத்தும் முயற்சியில் இறங்கினர்.
ஆயினும், இந்த சமரச முடிவானது பிரச்சனையின் ஆழமான தன்மைக்கு ஒரு தீர்வாக அமையவில்லை. கட்சியில் தோன்றிய கருத்து வேற்றுமைகள் தொடர்ந்து கட்சியின் அரசியலையும், ஸ்தாபனத்தையும் செயல்முறைகளையும் ஒற்றுமையையும் தொடர்ந்து பாதித்தன. தொடர்ந்து நீடித்த இந்தக் கருத்து மோதல்களின் இறுதியில், இரண்டு சாராரும் தனித்தனியே விவாதங்கள் நடத்தி வந்தனர். இறுதியில், ஒற்றுமைக்கு வழியில்லாததால் 1964இல் இன்றைய சி.பி.ஐ. ஆக அறியப்படும் பகுதியினர் கல்கத்தாவில் 7வது கட்சிக் காங்கிரசினை நடத்தியது ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது.
Leave a Reply