மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


சோவியத் புரட்சியின் அரசியல் தாக்கம்


நீடித்து நிற்பவைகள்

1917ல் நடந்த சோவியத் புரட்சி உலகைக் குலுக்கிய நிகழ்வாகும்.வரலாற்றில்,வந்து போன”அந்த நாள்” என்று பழங்கதையாய்ப் போன நிகழ்வல்ல. அதன் தாக்கம் எதிர்காலம் முழுவதும் பரவிக்கிடக்கிறது. எல்லா நாடுகளின் அரசியலியலும் நேரடியாகவோ, மறை முகமாகவோ, சோவியத் புரட்சி தூண்டிய,அரசியல் இலக்குகள், இன்று பேசும் பொருளாகி விட்டன. (அ) அரசியல் அதிகாரம் எந்த வர்க்கத்தின் கையில் இருக்க வேண்டும்.  (ஆ) அரசு அடக்குமுறை கருவியாக இருப்பதை உதிரச் செய்வது எப்படி?. (இ) உலக நாடுகளிடையே நட்புணர்வை உருவாக்கிட என்ன செய்ய வேண்டும்?.  (ஈ) எது உழைக்காமல் பெறும் வருவாய்?அதனை அடைவது குற்றமென உணர்த்துவது எப்படி? நேபாளம் முதல் அமெரிக்கா வரை, ரஷ்யா, சீனா, இந்தியா முதல் சவுதிஅரேபியா, பர்மா வரை உள்ள எல்லா நாடுகளிலும் நடக்கும் அரசியல் மோதல்களின் உள் அடக்கம் தர்ம விளக்கங்கள் இவைகளாகத்தான் இருக்கின்றன. அந்தந்த நாட்டு சமூக சூழலுக்கேற்ப மக்களின் அரசியல் அனுபவங்களுக்கேற்ப இக் கேள்விகள் வடிவம் பெறுகின்றன. சோவியத் புரட்சி  ஏற்படுத்திய இந்த திருப்பத்தினால் அதற்கு முந்திய புரட்சிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நிற்கிறது.

மார்க்சிய கோட்பாட்டின்படி கூறுவதென்றால் “கடந்தகால புரட்சிகளலெல்லாம் அரசு எனும் அடக்குமுறை கருவியை கூர்மைபடுத்தின”.சோவியத் புரட்சியே அந்த ஆயுதத்தை உதிரச் செய்யும் வேலையைத் தொடங்கியது . சோவியத்தின் நிர்வாக நடவடிக்கைகளை மக்களே தீர்மானிக்கும் செயல்முறை உலக நாடுகளுக்கு பாடமாக அமைந்தது. தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளை திரும்பப் பெறும் உரிமை அங்குதான் முதலில் நடைமுறைப் படுத்தப்பட்டது. எவ்வளவு ஆண்டுகள் கடந்தாலும், “சர்வாதிகாரம்-சிவப்பு பயங்கரம்-கும்பல் ஆட்சிமுறை”என்ற பூர்சுவாக்களின் அவதூறு மலைகளால் இந்த உண்மையை மறைக்க முடியாது .அரசு எந்திரத்தை அடக்குமுறை கருவியாக இருப்பதை உடைத்து சமூக அரசியல் நிர்வாகக்குழுவாக ஆக்குவதற்கான  முயற்சியாக சோவியத் அமைப்பு  இருந்தது.அந்த நிலையை கொண்டுவர அது போராடிக் கொண்டிருந்தது.

“வெள்ளை பயங்கரம்”என்று வறலாற்றில் குறிக்கப்படும் அமெரிக்க ஐரோப்பிய ஜப்பானிய ராணுவங்களின் படை யெடுப்புகள்,(13+ரஷ்யடூமா ஆக 14 நாடுகள் படையெடுத்தன )அவர்களின் ஆதரவோடு உருவான உள் நாட்டு சதிகள்,கலவரங்கள் மருத்துவ மனைகளிலே மருத்துவர்களின் உதவி கொண்டு பாட்டாளி வர்க்க தலைவர்களை கொல்லுதல் போன்ற கொடுமைகளை பிறந்த உடனேயே சோவியத் அரசு சந்திக்க வேண்டியிருந்தது. மக்களின் ஆர்வமிக்க பங்கெடுப்பால் சோவியத் காப்பற்றப்பட்டு வந்தது. 1989-90ல்  கடைசியாக நடந்த வாக்கெடுப்பில் கூட  எழுபது சதவிகிதம் சோவியத் மக்கள் சோவியத்தை கலைக்கக் கூடாது என வாக்களித்தனர்.

எல்ஸ்ட்சின் கும்பல் சோவியத் டெபுட்டி களை அவையிலேயே  சுட்டுக் கொன்ற பிறகே முதலாளிகளின் ஆதிக்கம் பெறும் டூமா வந்தது.பல நாடுகளாக சோவியத் துண்டாடப்பட்டது. எல்லா முரன்பாடுகளும் தூண்டிவிடப்பட்டன. உண்மையில் சோவியத் கம்யூனிஸ்ட் கட் சியின் அதிகார வர்க்க ஆட்சிமுறையை மக்கள் வெறுத்தனரேத் தவிர கம்யூனிஸ்ட்  இலக்குகளை வெறுக்க வில்லை.

சீரழிந்து போன சில முன்னாள் கம்யூனிஸ்ட் தலைவர்கள் எல்ட்சின் ஆட்சிக் காலத்தில் முதலாளிகளாகினர். இருந்தாலும் எல்ட்சின் தினித்த டூமா சார் காலத்து டூமா போல் மக்களை அடக்க முடியவில்லை. ஏகாதிபத்தியவாதிகளின் விருப்பப்படியும் அதனால் செயல்பட இயலவில்லை.ஏன் எனில் சோவியத் புரட்சியின் தாக்கத்தை மக்கள் மனதிலிருந்து முற்றிலும் அகற்ற முடியவில்லை. அதாவது டூமாவும் பழைய டூமா அல்ல, மக்களும் பழைய பார்வை கொண்டவர்கள் அல்ல. இதனால் எல்ஸ்ட்டின் காலத்தில் ரஷ்ய பொருளாதாரத்தை கொள்ளையடித்து கடத்தி சீரழித்த ரஷ்ய முதலாளிகளுக்கு தண்டனை வழங்கும் புட்டின் ஆட்சி வந்தது. புட்டின் நடவடிக்கை எடுத்தபோது, அமெரிக்காவும் பிரிட்டனும் அந்த முதலாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தையும் உலகம் கண்டது.அரசு எந்திரம் முதலாளிகளை கட்டுப்படுத்த முயன்றதே தவிர முதலாளிகளின் முழுக் கட்டுப்பாட்டில் அரசு போக இயலவில்லை இதனால் சோவியத் மறைவை கொண்டாடிய ஏகாதிபத்தியவாதிகளின் ஆசைகள் நிறைவேறவில்லை அதோடு ரஷ்யாவை சீனாவிற்கு எதிராக திருப்பி விடுவதில் ஏகாதிபத்தியவாதிகள் சிரமப்படுகின்றனர்.இதனால் ரஷ்ய-அமெரிக்க முரண்பாடு முற்றுகிறது.இன்று பேரழிவு ஆயுத உற்பத்தி போட்டியில் போய் நிற்கிறது.

அன்று ஸ்டாலின் எச்சரித்தபடி கம்யூனிச நெறிமுறைகளை மறந்து,மக்களோடுள்ள தொடர்பு அற்று போன ஒரு கட்சி போய் சேரவேண்டிய இடத்திற்கு  சோவியத் கட்சியும் போய் சேர்ந்து விட்டது.உலகளவில் உண்மையான மார்க்சிஸ்ட்டுகள் பாடம் கற்றனர்.மூட நம்பிக்கையோடு வந்தவர்கள் சோர்வடைந்தனர். சோவியத் மறைவிற்கு ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டை  கைவிட்டு அதிகார வர்க்க அமைப்பாக இறுகிப் போன சோவியத் கம்யூனிஸ்ட் தலைமை மட்டும் பொறுப்பல்ல;வேறு பல காரணங்களும் உண்டு. அவைகளை ஆராய்வது இக் கட்டுரையின் நோக்கமல்ல.

சோவியத் புரட்சி உலகளவில் தூண்டி விட்ட புதிய அரசியல் நெறிமுறைகள், நிர்வாக முறைகள்,ஆளுவோர் செவிசாய்க்க வேண்டிய மக்களின் புதிய விழிப்புணர்வு,கடந்த காலத்தை போல் படை பலத்தால் மட்டும் தீர்மானிக்க முடியாமல் போன உலக அரசியல் மாற்றங்கள், பெருளாதார வளர்ச்சியை மக்களின் மேம்பாட்டிற்கு பயன்படுத்தும்  அரசியல் ஆற்றல் ஆகியவைகளை கடந்தகால புரட்சிகளின் விளைவு களோடு ஒப்பிட்டு அலசுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.இங்கிலாந்து நாட்டு தொழில் புரட்சி,அமெரிக்காவில் நடந்த சுதந்திரப் போர் ஆகிய இரண்டும் பிரெஞ்சு புரட்சிக்கு முந்திய நிகழ்வுகளாகும் .

சோவியத்தும் – கடந்த கால புரட்சிகளும்

முதலில் சோவியத் புரட்சியை பிரெஞ்சு புரட்சியின் விளைவுகளோடு ஒப்பிடுவோம்

1789ல் நடந்த பிரெஞ்சு புரட்சி”சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம்”என்று முழங்கியது. ஆனால் புரட்சிக்கு தலைமை தாங்கியவர்களால் இந்த இலக்குகளை தொடமுடியவில்லை. காரல் மார்க்ஸ் இதனை தெளிவுபடுத்துகிறார். தங்களது துணிச்சல் மிக்க எழுத்தாற்றலால் பிரெஞ்சு புரட்சிக்கு வித்திட்ட மேதைகள் பூர்சுவாக்களின் எல்லைகளைத் தாண்டி சிந்தித்தவர்கள். வர்க்கப் போராட்டங்கள் மக்களை விழிப்படைய செய்வதை உணர்ந்தவர்கள். ஆனால் பிரெஞ்சுப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய பூர்சுவாக்களோ உதட்டளவில் அவர்களது சிந்தனைகளை முழங்கிவிட்டு நடைமுறைக்கு ஒவ்வாத கனவுகள் என்று தள்ளிவிட்டனர்.

புரட்சிமூலம் மன்னராட்சி முறைக்கு முடிவு வந்தது என்றாலும் பிரெஞ்சு பூர்சுவாக்கள் சட்டம் ஒழுங்கு என்றபெயரில் அரசை அடக்குமுறை கருவியாக மேலும் கூர்மைப்படுத்தினர். மார்க்ஸ் இதனை அழகாக கூறுவார் ஆட்சியாளர்கள் மக்களுக்கு உரிமை வழங்க சட்டங்கள் இயற்றுவர் அவைகளில் ஒருஷரத்து உரிமை வழங்கினால் அதனை பறிக்கும் உரிமை அரசிற்கு உண்டென மற்றொரு ஷரத்து சேர்க்கப்படும்.பிரெஞ்சு புரட்சிக்கு பின் உருவான அரசு மக்களை அடக்கியே ஆண்டது.சர்வாதிகார ஆட்சியேசிறந்தது என்று தத்துவத்தை மக்கள் மனதிலே பதியவைக்க முயன்றது.

பாரிஸ் கம்யூன்

82 ஆண்டுகளுக்குப் பிறகு1871ல் பாரீஸ் நகர தொழிலாளர்கள் மக்களின் வாக்கெடுப்பு மூலம் அரசமைத்ததை பிரெஞ்சுப் புரட்சியின் வாரிசுகள் ஜெர்மன் நாட்டு படையின் துணையோடு அகற்றினர். பாரீஸ் கம்யூனை தோற்றுவித்தவர்களை கொன்று குவித்தனர். அவர்கள் பூசித்த பிரெஞ்சு மேதைகளின் முழக்கத்தை நடைமுறைப்படுத்த முயற்சித்த பாரீஸ் நகரதொழிலாளர்களையும் மூர்க்கத்தனமாக கொன்று குவித்தனர். ஆனால் பாரீஸ் கம்யூன் உருவாக்கி விட்ட அரசியல் விழிப்புணர்வை ஐரோப்பாவிலும் மற்ற நாடுகளிலும் பரவ விடாமல் தடுக்க  எடுத்த எல்லா முயற்சிகளும் தோல்வியை சந்தித்தது. ரஷ்யப் புரட்சியின் வித்தாக பாரீஸ் கம்யூன் ஆனது. உழைப்பாளர்களின் உரிமைகளை அங்கீகரிக்காமல் சுரண்டமுடியாது என்பதை ஐரோப்பிய முதலாளி வர்க்கம் கண்டது. “அதே நேரம் நாடுகளை அடிமைப்படுத்தி செல்வத்தை திரட்ட சண்டைக்குத் தயாரானது”. மறுபக்கம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றாமல் ஜனநாயகம், சமத்துவம் வர்க்க பாகுபாடின்றி தனி மனிதன்  முன்னேற உத்தரவாதம் ஆகியவைகள் நடைமுறைக்கு வராது என்பதை விழிப்புணர்வுப் பெற்ற தொழிலாளி வர்க்கப் பகுதி உணர்ந்தது.

இந்த விழிப்புணர்வு மக்களிடையே பரவாமல் இலக்கை தொடமுடியாது.முதலாளித்துவ ஆதிக்கம் அகலாது என்பதையும் அவர்கள் அனுபவத்தால் கண்டனர்.

1917ல்  சோவியத்தை உருவாக்கியவர்கள் தங்களை பாரீஸ் கம்யூனை உருவாக்கிய கம்யூனடார்களின் வாரிசுகள் என்று பிரகடனம் செய்து கொண்டனர். பிரெஞ்சு மேதைகளின் கனவுகளை நனவாக்கிய பாரீஸ் கம்யூன் எழுச்சியில் பங்கெடுத்த கம்யூனடார்களை சோவியத்திற்கு வரவழைத்து கௌரவித்தனர். எல்லா நாட்டு மக்களும் சோவியத்தை தங்களது நாடுபோல் நேசிக்கத் தொடங்கினர். சோவியத்தின் மீது படையெடுப்பதைக் கண்டித்தனர்.

பிரெஞ்சுப் புரட்சியைவிட உயர்வானது சோவியத் புரட்சி என்பதை நடைமுறையில் உலகம் கண்டது.

தொழில் புரட்சியின் தாக்கம்

பிரெஞ்சுப் புரட்சிக்கு தூண்டுதலாகவும் வழிகாட்டியாகவும் அமெரிக்கச் சுதந்திரப் போரும் பிரிட்டன் நாட்டு  தொழில் புரட்சியும் இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவர்.ஆனால் அவைகள்”சொத்து,சுதந்திரம்,சமத்துவம்”என்று முழங்கின அதன் மூலம் சொத்தை திரட்ட பிறர் உழைப்பை சுரண்டும் உரிமையை முன் நிறுத்தின. அவைகளால் உழைப்பாளிகளை அடக்கி சுரண்டும் உரிமையை வழங்க முடிந்ததே தவிர வறுமையிலிருந்து விடுவிக்க முடியவில்லை. நாடுகளை அடிமைப்படுத்த யுத்தம் தொடுக்க முடிந்ததே தவிர நாடுகளிடையே ஒத்துழைப்பை உருவாக்க இயலவில்லை. அந்தப் புரட்சிகளெல்லாம் பூர்சுவா தாராள வாத அரசியலுக்கு வித்திட்டதே தவிர மக்கள் பங்கேற்கும் அரசியலை மூச்சுத் தினற வைத்தன.

தொழில் புரட்சியால் உருவான பிரிட்டீஷ் நாடாளுமன்றம் ஒரு பக்கம் இந்தியர்களுக்காக கண்ணீர் விட்டுக்கொண்டே பிரித்தாளும் சூழ்ச்சியால் இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்டது.1857ல் சுயாட்சி உரிமை கேட்டு கிளர்ந்தெழுந்த இந்திய சிப்பாய்களை கொன்றுக் குவித்தது.அநாகரீகம் மிக்க இந்தியர்களை நாகரீக படுத்தவே ஆளுவதாக கூறிக்கொண்டது.ஆனால் சோவியத் புரட்சியால் உருவான சோவியத் அரசுதான் சார் காலத்தில் அடிமைப்பட்டு கிடந்த நாடுகளுக்கு சுய நிர்ணய உரிமை வழங்கி  காலனி ஆதிக்கத்தை ஒழிக்கும் விடுதலைப்போருக்கு வழிகாட்டியது. அதே நேரம் இன வாத சூத்திரத்தை வைத்து நாடுகளை பலத் துண்டுகளாக்கி (பாலஸ்தீனம், யூகோஸ்லேவியா, ஈராக்) ஆதிக்கம் செலுத்த முயலும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒன்றுபட்டு நிற்கவும் கற்றுக்கொடுத்தது. இனங்களின் சிறைச் சாலையாக இருந்த ரஷ்யாவை இந்திய பண்பாட்டை போல பல இனங்கள் சேர்ந்து வாழும் பூங்காவாக்கியது.சோவியத் யூனியன் என்று பெயரை மாற்றிக்கொண்டது.

உலக அரசியலின் திசை மாறியது

சோவியத் புரட்சியின் மகத்தான சாதனை எது என்றால் உலக அரசியலின் திசையை மாற்றியது ஆகும். சோவியத் அரசு தோன்றுவதற்கு முன்பு வரை யுத்தம் என்பது அரசியலின் முடிவாக இருந்தது. முதல் உலகயுத்தம்(1911-1918) முடிவில் உலகில் பல மாற்றங்கள் விளைந்தன அதில் ஒன்று உலக பாட்டாளிவர்க்கத்தின் ஆதரவில்  புரட்சிமூலம் உருவான  சோவியத் அரசாகும். அது யுத்தம் பற்றிய மக்களின் பார்வையை மாற்றியது. வள்ளுவர் சாணக்கியர் காலமுதல் 2500 ஆண்டுகளாக அண்டை நாடுகளோடு சண்டை போடாமல், தூர நாடுகள் மீது படையெடுக்காமல் ஒரு நாடு சுதந்திரமாக வாழமுடியாது, சொந்த நாட்டு மக்களை காப்பாற்ற முடியாது என்ற நிலைகள் இருந்தன. சண்டையில் உயிரைப் பறிப்பது ஒரு கலையாக கருதப்பட்டது. காதலியின் கரம் பிடிப்பதற்கோ ஒரு நாட்டை பிடிப்பதற்கோ போட்டியாளர்களை சண்டையில்  கொல்வது அடிமையாக்குவது குற்றமல்ல, சூழ்ச்சி மூலம் வீழ்த்துவதும் சரி என்ற பார்வையே தர்மமாக இருந்தது.

பின்னர் இங்கிலாந்து, அமெரிக்க பிரெஞ்சுப் புரட்சிகளுக்குப் பிறகு யுத்தம் என்பது உலகமயமானது ராணுவ கூட்டுக்கள் வந்தன விஞ்ஞான தொழில்நுட்பங்கள் ஆயுதங்கள் செய்து குவிக்க திருப்பி விடப்பட்டன, எந்த ஒரு நாடும் ராணுவப் பலத்தை கூட்டாமல் ரகசியமாக உடன்பாடுகள் வைக்காமல் சுதந்திரமாக நிற்க முடியாது என்ற நிலை வந்தது.யுத்தம் வருமோ என்ற பதட்டம் நிரந்தரமானது பேரழிவு ஆயுதங்களால் மக்களைக் கொல்வது நிச்சயமானது. இந்த நிலைக்கு விஞ்ஞான விளக்கமும் தரப்பட்டது.சண்டை என்பது வாழ்வின் அவசியம் என்றனர். பிறப்பிற்கும், இறப்பிற்கும் இடையே வாழவேண்டுமானால் சண்டை போட்டாக வேண்டும் என்பது இயற்கையின் விதி இது ஜீவராசிகளின் பொதுவான நியதி என்றனர். இதற்காக டார்வினின் கண்டுபிடிப்புகளை ஆதாரமாக்கினர்.

பாட்டாளி வர்க்கத்தின் தத்துவப் போர்

இதே காலத்தில் மறு பக்கம் ஐரோப்பிய-அமெரிக்க பாட்டாளி வர்க்க இயக்கங்கள் நாடுகளிடையே ஒத்துழைப்பை உருவாக்கும் கிளர்ச்சிப்பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். மார்க்ஸ்-எங்கெல்ஸ் காலத்தில் உருவாகி 1871ல் பாரீஸ் கம்யூன் தோல்விக்குப் பிறகு ஆட்சியாளர்களால் வேட்டையாடப்பட்டு செயலிழந்து போன சர்வதேச தொழிலாளர் சங்கம் புத்துயிர் பெற்று யுத்தத்திற்கு எதிரான தத்துவப்போரை தீவிரப்படுத்தியிருந்தது” சண்டை போட்டுத்தான் மனிதராசி வாழமுடியும்”என்பது விஞ்ஞானமல்ல அவ்வாறு கூறுவது தத்துவப் பார்வையின் கோளாறு ஆகும் என்பதை டார்வினை பாராட்டியப் பொழுதே மார்க்ஸ் குறிப்பிட்டிருந்தார் ஏற்கனவே யுத்தத்திற்கு விஞ்ஞான சாயம் பூச முயல்வதை அவர் அம்பலப்படுத்தியிருந்தார். எனவே சர்வதேச தொழிலாளர் அமைப்பின் உறுப்பினர்கள் யுத்தத்திற்கு எதிராக நிற்க தத்துவரீதியாக தயாராகி இருந்தனர். சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தத்துவார்த்தப் பிரச்சாரம் காரணமாக யுத்தத்தை ஆதரிக்கும் விஞ்ஞான விளக்கம் மக்களிடையே எடுபடாமல் போனது.

இதனைக் கண்ட ஆட்சியாளர்கள் தந்தையர் நாட்டை பாதுகாக்கும் யுத்தம் என்று தேசபக்த சென்டிமென்டை தட்டிவிட்டனர். இது நாட்டைப் பாதுகாக்கும் யுத்தமல்ல,காலனி நாடுகளை மறுபங்கீடு செய்யும் யுத்தம், ஏகாதிபத்திய தன்மை கொண்டது என்பதை சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு அம்பலப்படுத்தியது.மக்களிடையே யுத்த எதிர்ப்பு உணர்வை கண்ட ஆட்சியாளர்கள்ஒரு கட்டத்தில் – “இல்லை இல்லை” இது யுத்தமில்லா உலகை உருவாக்க நடத்தப்படும் இறுதி மஹா யுத்தம்- என்றனர்.

அன்று ஐரோப்பிய  நாடுகளிலும் அமெரிக்காவிலும் ரஷ்யாவிலும், பாட்டாளி வர்க்க சர்வதேசிய அமைப்பின் யுத்த எதிர்ப்பு பிரச்சாரம் மக்களை கவ்விப்பிடித்திருந்தது.1911ல் ஜெர்மனி, ஆஸ்த்திரியாஹங்கேரி,துருக்கி ஒரு பக்கமும்.பிரான்சு பிரிட்டன் ரஷ்யா(சார் மன்னன் ஆண்ட காலம்) எதிர் பக்கமும் ராணுவ கூட்டுகள் வைத்து துவங்கிய சண்டை ஐரேப்பா முழுவதும் பரவியது.

ஒரு கட்டத்தில் இத்தாலியும், அமெரிக்காவும் யுத்தத்தில் குதித்தன முதன் முறையாக விமானங்கள் மூலம் குண்டுகள் வீசி மக்களை கொல்வது நிகழ்ந்தது. இக்காலங்களில் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் கிளர்ச்சிப் பிரச்சாரம் சண்டையில் ஈடுபட்ட நாடுகளின் மக்களை விழிப்புறச் செய்தது. ஏகாதிபத்தியங்களுக்கிடையே நடக்கும் யுத்தத்தின் விளைவுகளைப் பற்றி லெனின் எழுதிய கட்டுரைகள், ஆய்வுகள், ரஷ்ய தொழிலாளர்களை புரட்சி செய்ய சித்தாந்த அடிப்படை போட்டது.ஆறு ஆண்டுகள் தொடர்ந்த சண்டையில் 1917ல் திருப்பம் ஏற்பட்டது  புரட்சியில் மலர்ந்த சோவியத் அரசு யுத்தத்தில் பங்கேற்க மறுத்தது. ஜெர்மனியோடு சமாதான உடன்படிக்கை செய்து கொண்டது. இந்த உடன் படிக்கையின் புதுமை என்னவென்றால் முதலில் எல்லையில் சண்டையிடும் ரஷ்ய ராணுவ வீரர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சோவியத் அரசின் தாக்கீதைப் பெற்று ஜெர்மன் ராணுவத்தோடு பேசினர் அதன் பிறகே அரசு பேசியது. முதலாளித்துவக் கட்டத்திலேயே  நாடுகளிடையே சக வாழ்விற்கான கோட்பாட்டை முன் மொழிந்தது.

ஐரோப்பிய – அமெரிக்க மக்கள் சகவாழ்வை விரும்பினாலும் ஆட்சியாளர்கள் விரும்பவில்லை. இக்காலங்களில் அமெரிக்க, ஐரோப்பிய, ரஷ்ய எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஆகியோர்களின் யுத்த எதிர்ப்பு படைப்புகள் சோவியத்தின் அமைதி கோட்பாட்டிற்கு எல்லா நாட்டு மக்களிடையேயும் வலு சேர்த்தது.மக்களின் கருத்திற்கு செவிச் சாய்க்க மறுத்தால் சோவியத் பாணி மக்கள்ஆட்சிமுறை பரவும் என்று ஐரோப்பிய அமெரிக்க ஆட்சியாளர்கள் பயந்தனர்.போரில் வெற்றிபெற்றவர்கள் கூடி சண்டையை தவிர்க்க நாடுகளின் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கினர் அந்த அமைப்பில் சோவியத்தை உறுப்பினராகச் சேர்க்க மறுத்துவிட்டனர்.தோற்ற நாடுகளையும் மதிக்கவில்லை.

உலகஅரசியலில் நாடுகளுக்கிடையே சண்டை என்பதற்குப் பதிலாக ஒத்துழைப்பு என்ற கோட்பாட்டை நடைமுறைப்படுத்த அந்த அமைப்பு உதவவில்லை.இரண்டாம் உலக யுத்தம் வந்தது அதன் பிறகே சோவியத் பங்குபெறும் ஐ.நா சபை தோண்றியது.

இன்று நாடுகளிடையே ஒத்துழைப்பில்லாமல் உலக சந்தையில்லை, ராணுவ மோதலில்லாமல் ஏகாதிபத்திய ஆதிக்கமில்லை என்ற நிலை உள்ளது. எல்லா நாட்டிலும் அரசியலில் மக்களின் பங்கேற்பு அதிகரித்து வருகிறது. யுத்த எதிர்ப்புணர்வும் மக்களிடையே ஓங்குகிறது. இவைகளெல்லாம் சோவியத் புரட்சியால் மலர்ந்த கோட்பாடுகளின் தாக்கமாகும்

பாரீஸ் கம்யூனை தோற்றுவித்த கம்யூனடார்களை உலகம் மறக்கலாம்,ஸ்டாலின் மீது அவதூறுகளை பொழிந்து சோவியத் புரட்சியை கேவலப்படுத்தலாம், ஆனால் அவர்கள் உயிர்த் தியாகம் செய்து உருவாக்கிய கோட்பாடுகளை மக்களிடமிருந்து யாராலும் பறிக்க முடியாது. போகப் போக யுத்த எதிர்ப்பும், அரசியலில் மக்களின் பங்கேற்பும்  கூடுமே தவிர குறையாதுLeave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: