மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


ஒரு எப்.பி.ஐ. ஆவணக் குறிப்பு


இடதுசாரி இயக்கங்கள் மீது எப்பொழுதெல்லாம் மக்களின் கவனம் திரும்புகிறதோ அப்பொழுதெல்லாம் ஏகாதிபத்திய வாதிகள் கம்யூனிசத்தை பூதமாக சித்தரிப்பதோடு நின்று விடாமல் இதன் மீது பார்வை செலுத்துவோரை குறிவைத்து வேட்டை ஆடத் தொடங்கி விடுவர். அதிலும் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் சோசலிசத்தின் மீது பற்றுக்கொண் டோரை அந்நிய ஏஜென்டுகள் என்று முத்திரை குத்தி தூக்கிலிடும் வழக்கம் கொண்டவர்கள். இரண்டாம் உலகப் போர் முடிந்த தருவாயில் சோவியத்தின் பாசிச எதிர்ப்பு, யுத்த எதிர்ப்பு, சர்வதேச பார்வை, ஆகியவைகள் உலக நாடுகளின் அறிவாளிகளை கவர்ந்தது. இதில் அமெரிக்க அறிவுலகமும் அடங்கும்.அமெரிக்க உளவுத் துறை இவர்களை குறிவைத்தது. இதற்கு விஞ்ஞானிகளும் தப்பவில்லை.அன்று உளவுத்துறை சேகரித்த தகவல்களை  அரசாங்க ரகசியமாக வைக்க வேண்டிய தேவையில்லை என்பவைகளை இன்று ஆய்வாளர்கள் பார்க்க அனுமதிக்கப் படுவதால்  சில தகவல்கள் வெளிவந்துள்ளன அதுபற்றி மேலே படியுங்கள்.
-ஆசிரியர்.
    ஜனநாயகத்திற்கான அமெரிக்க ஜப்பானியர்களின் குழு-
    ஃபாசிச எதிர்ப்பு அகதிகள் கூட்டுக் குழு-
    நியூயார்க்-அமெரிக்க ரசியக் கழகம், அமெரிக்க எழுத்தாளர் கூட்டமைப்பு, திரைப்படக் கலைஞர்கள் சங்கம்,
    தேசிய குடிமக்கள் அரசியல் நடவடிக்கைக் குழு ஜெர்மன் ஃபாசிச பாதிப்புக்கு ஆளானோரது தேசியக் குழு முண்ட்  சட்ட எதிர்ப்பு தேசியக் குழு
    ராணுவ ஆட்பிடிப்பு எதிர்ப்பு தேசியக் குழு
    அமெரிக்க  ரசிய நட்புறவு தேசியக் குழு
    கலை-அறிவியல் வல்லுனர்களின் தேசியக் கழகம்
    அரசியலமைப்பு குடியுரிமைகளுக்கான தேசிய கூட்டமைப்பு
    அரசியல் அகதிகளுக்கான குறுங்குழு வாதமற்ற கூட்டமைப்பு
    ஸ்பெயின் ஜனநாயகத்திற்கான வட அமெரிக்க உதவிக் குழு
    ஜெர்மன் நாடாளுமன்ற எரிப்பு வழக்கு நினைவுதினக் குழு
    ரசியப் போர் உதவிக்குழு
    உலக சமாதானத்திற்கான அறிவியல் கலாச்சார மாநாடுகளின் குழு
    மானுட நலனுக்கான தென்னகக் குழு
    சோவியத் ரசியா இன்று
    ஸ்பெயின் உதவிக் குழு
    அயல் நாட்டார் பண்பாட்டு உறவுகளுக்கான ஐக்கியக்கழகம்
    சர்வதேச தொழிலாளர் உதவிக் குழு
    சர்வதேச அறிஞர்கள் பேராயம்
    ரோசன்பர்க் வழக்கு-  நீதி கிடைப்பதற்கான தேசியக் குழு
மேலே குறிப்பிட்ட வெகு மக்கள் இயக்கங்கள் 1930ஆம்   ஆண்டுகளில் துவங்கி பல்லாண்டு காலம் அமெரிக்காவில் இயங்கியவை. இவைகளெல்லாம் அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னனி அமைப்புகள் என அமெரிக்க உளவுத் துறை முத்திரை குத்தி கண்காணித்தது. இந்த மக்கள் அமைப்புகள் எல்லாவற்றிலும் இது போன்ற வேறு சில அமைப்புகளின் நடவடிக்கைகளிலும் ஊடுசரமாக ஒரு மனிதர் செயலூக்கத்தோடு பணிபுரிந்துள்ளார். உலகம் அவரை இதுவரையில் பூமியில் தோன்றியதில் ஆகப்பெரும் அறிவியல் அறிஞர் என அறிந்து வைத்துள்ளது.  வேறுயாருமல்ல அதி உன்னத மேதையான  ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தான் அவர். ஐன்ஸ்டீனின் போர் எதிர்ப்பு சமாதான கொள்கைகளும், சோசலிசத்திற்கு ஆதரவான அவரது புகழ் பெற்ற கட்டுரையும் பரவலாக அறியப்பட்ட ஒன்றே. ஆனால் அவரை அமெரிக்க உளவுத் துறை குறிவைத்து வேவு பார்த்தது நாட்டை விட்டு விரட்ட சதி என்பதை சுதந்திரத்தை உயிர்மூச்சாக கொண்ட அமெரிக்க  பாமரர் கண்களில் படாமல் அமெரிக்க நிர்வாகம் பார்த்துக் கொண்டது. இப்பொழுதுதான் அந்த உண்மை வெளியே தலை நீட்டுகிறது.
அதி உன்னத மேதை ஐன்ஸ்டீன்
ஐன்ஸ்டீன், இயற்பியலுக்காக நோபல் பரிசுபெற்றவர். அணுவிற்குள் அடங்கியுள்ள அளப்பறிய ஆற்றலை கணக்கிட சூத்திரம் கண்டவர். இவர் தந்த விஞ்ஞான விளக்கமே அணுசக்தியைப் பயன்படுத்தும் தொழில் நுட்பத்தை உருவாக்க அடிப்படையானது.300 ஆண்டு களாக வழக்கிலிருந்த நியூட்டனின் விதிகளுக்கு மாற்றான விதி களைக் கூறி புரட்சி படைத்தவர். உலகப் புகழ் பெற்ற அமெரிக்க டைம் இதழ் பல நிபுணர்களைக் கொண்டு நிகழ்த்திய தேர்வில் ஆயிரம் ஆண்டுகளில் உலகில் தோன்றியவர்களில் மாமனிதன் எனத்தெரிவு செய்யப்பட்டவர். வாழ்நாளெல்லாம் முற்போக் காளராக இருந்து மறைந்தவர்.
1982 ஆம் ஆண்டு முதன்முதலாக அமெரிக்க தகவல் சுதந்தர சட்டத்தை பயன்படுத்தி ஐன்ஸ்டீன் பற்றிய உளவு த்துறை குறிப்புகள் வெளிக்கொணரப்பட்டன. அது மிகவும் கடுமையான தணிக்கைக்குப் பின் வந்ததே. 2002 ஆம் ஆண்டு  இன்னும் சற்று அதிகமான குறிப்புகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன.
எட்கர் ஹூவர்48 ஆண்டுகள் உள் நாட்டு உளவுத் துறையின் இயக்குநராக இருந்து அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்கு அருஞ்சேவை செய்தவர்.எட்டு அமெரிக்க அதிபர்களை கண்டு சமாளித்தவர். இவரைப் பிடிக்காத அமெரிக்க அதிபர்களாலும் இவரை ஒன்றும் அசைக்க முடியவில்லை. இத்தனைக்கும் மிகவும் கேவலமான பாலியல் வாழ்க்கையும் அதனால் சில நிழல் உலக தாதாக்களின் நிரந்தர மிரட்டலுக்குள்ளும் இருந்தவர்தான். ஆளும் வர்க்கத்தின் செல்லப் பிள்ளையென்பதால் வானாளாவிய அதிகாரம் கொண்டிருந்தார். இவர் ஐன்ஸ்டீனை சுமார் 25 ஆண்டுகாலம் உளவுத்துறையின் தீவிர கண்காணிப்பில் வைத்திருந்தார்.
அமெரிக்க உளவுத் துறை ஐன்ஸ்டீனின் பூர்வாஸ்ரமங்களை எல்லாம் ஐரோப்பா முழுவதும் அலசி ஆராய்ந்துள்ளது என்பது இந்த ஆவணங்களிலிருந்து தெரிய வருகின்றது. அவரது தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது கடிதங்கள் பிரித்துப் படிக்கப்பட்டுள்ளன, அவரது வீட்டு குப்பைக்கூடைகள் கழிவுகள் சேகரிக்கப்பட்டு ஆராய்சிக்குள்ளா கியுள்ளன. சுமார் 1800 பக்கங்கள் உள்ள இந்த ஆவணத்தில் அவரது பேட்டிகள், அவர் எழுதிய சில கடிதங்கள், அவர் சிலருக்கு அளித்த அறிவுரைகள் சில நண்பர்களோடு அவரது உரையாடல்கள் என எல்லாம் உள்ளது. அவர் 34 கம்யூனிஸ்ட் வெகுமக்கள் முன்னனி அமைப்புகளில் அமைப்பாளராக அல்லது உறுப்பினராக பணியாற்றியுள்ளார் என்பதை முதல் பக்கமே அறிவிக்கின்றது.
ஐன்ஸ்டீன் விளம்பரங்களின்றி ஓர் சமூகப் போராளியாகவே இருந்துள்ளார் என்பது தெரிகின்றது. கம்யூனிச எதிர்ப்பு மெக்கார்த்தியிசமாய் உருவெடுத்து காட்டுத் தர்பார் நடத்தியபோது அவர் மெக்கார்த்திக்கு எதிராக செயல்பட்டுள்ளார், ஆப்பிரிக்க அமெரிக்க மக்களின்  இன ஒதுக்கலுக் கெதிரான போராட்டத்தில் மார்ட்டின் லூதர் கிங் போன்றோர் தலைமை தாங்குவதற்கு முன்பே ஆதரவுக் குரல் கொடுத்துள்ளார், இடதுசாரி என்றால் ஸ்டாலின் எதைச்செய்தாலும் ஆதரிக்க வேண்டும் என்பது போன்ற நிலையிருந்த காலத்திலேயே ஸ்டாலினையும் விமர்சிக்க தயங்கவில்லை என்பதெல்லம் தெரிகின்றது.அவர் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் என நிருபிக்க  உளவுத்துறைஅரும்பாடு பட்டுள்ளது தெரிகின்றது.
1948 ஆம் ஆண்டு கம்யூனிஸ்டுகளின் ஆதரவோடு அப்போது இடதுசாரியாக அறியப்பட்டிருந்த ஹென்றி வாலஸ் போட்டியிட்டார். ரூஸ்வெல்ட் அதிபராக இருந்த போது உதவி அதிபராக இருந்த (1941-45) வாலஸ் முற்போக்குக் கட்சி சார்பில் போட்டியிட்டார். கருப்பின மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம், யுத்த எதிர்ப்பு, போன்ற அன்றைய சூழலில் மிகவும் முற்போக்கான நிலைகளோடு தேர்தலில் போட்டியிட்டார் வாலஸ். ஐன்ஸ்டீனை அவரது நிலைபாடுகள் கவர்ந்ததில் வியப்பதுமில்லை. ஆனால் ஒரு கம்யூனிஸ்ட் ஆதரவு கட்சியென பெயர் வாங்கியிருந்த கட்சிக்கு ஐன்ஸ்டீன் வெளிப்படையாக ஆதரவு அளித்தார் என்பது அதிகம் தெரியாத செய்திதான்.
சாதாரணமாக அவர் ஒரு ஞாபக மறதி பேராசிரியர், ஒருவிதமான அப்பாவித்தனமான நல்லுள்ளம் கொண்டவர், ஒருவிதமான ஆன்மீகவாதி, இடதுசாரிகள் அவரது பரந்த மனப்பன்மையைப் பயன்படுத்திக் கொண்டனர் என்பது போன்ற பாமர பிம்பங்களை உடைப்பதாக அவர் குறித்த இந்த அமெரிக்க போலீஸ் ஆவணங்கள் உள்ளன.1953 ஆம் ஆண்டு ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிக்கை ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கின்றது. அதில் வழக்கம் போல் ஐன்ஸ்டீன் அப்பாவி என்பது போன்றதொரு சித்திரம் தீட்டியுள்ளனர் என்றும் தெரிகின்றது. இதனைச் சுட்டிக்காட்டி உளவாளி ஒருவரால், இயக்குநரான எட்கர் ஹூவருக்கு எழுதப்பட்டுள்ள கடிதம் / அறிக்கை ஆவணத்தில் உள்ளது. அக்கடிதம் எப்படி உள்ளது என்று பாருங்கள்:
ஏப்ரல் 21, 1953
எட்கர் ஹூவர்,
வாஷிங்டன்.
அன்புள்ள ஐயா,
மே மாதத்திற்குன்டான ரீடர்ஸ் டைஜஸ்ட் . ஐன்ஸ்டீன் குறித்து ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில் அவர் ஒரு எளிமையான, இனிமையான சாதுவானதொரு கிழ மேதை என்ற படத்தை தீட்டியுள்ளனர்.  இடதுசாரிகள், அப்பாவியான அவரை ஏமாற்றி அவரது நற்பெயரை தமது நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொண்டனர் என்கிறவிதமாக இந்த கதை செல்கின்றது.
ஆனால் அப்பாவித்தனமும் நல்லெண்ணமும் கொண்ட இந்த மென்மையான கிழவர் எனக்கு வேறுவிதமாக அறிமுக மாணவர். இவர்தான் ஹாலிவுட் திரைப்பட உலகை கம்யூனிஸ்டுகளின் பாசறையாக மாற்றும் முயற்சியின் மூளை என 30 ஆம் ஆண்டுகளில் அறிமுகம் செய்து வைக்கப் பட்டார்.
நான் 1919 ஆம் ஆண்டு முதல் கிரிபித் ஸ்டுடியோவின் கதை மற்றும் விளம்பரத் துரையின் தலைவராக பணியாற்றி வந்தேன். எங்கள் ஸ்டுடியோ ஆய்வுக்கூடத்தில் பணியாற்றியவர்கள் அனைவரும் அப்போது போல்ஷ்விக்குகளாக இருந்தனர்.
ஒரு நாள் ஒஒஒஒஒஒ என்னைத் தொலைபேசியில் அழைத்தார். உடனே அம்பாசடர் ஹோட்டலுக்கு வருமாறு கூறினார்.மிகவும் முக்கியமான விசயம் என்றும் கூறினார்.
நான் அங்கு சென்றபோது அவர் போல்ஷ்விக்குகள் ஹாலிவுட்டை கைப்பற்றப் போகின்றனர், அவர்களது சார்பாக விளம்பரங்கள் விவகாரத்தை நீ பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி என்னை ஒத்துக்கொள்ள வைப்பதற்கு முயற்சி செய்தார். நீ ஐன்ஸ்டீனிடம் வேலை செய்வதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் அவர் சம்மதப்பட்டால் பெரும் தலைகள் எல்லாம் அவர் சொற்படி ஆடுவார்கள் என்றார்.
நான் எந்த ஐன்ஸ்டீன் என்றேன். பவுதீக கோட்பாடுகளை விளக்கும் ஐன்ஸ்டீன்தான் (னுச. நுiளேவநin டிக கூhநடிசல) என்றார். எனக்கு நம்ப முடியவில்லை. நான் அவர் விளையாட்டிற்குச் சொல்கிறார் என்று நினைத்தேன். ஆனால் அவர் என்னை ஒரு அறைக்கு அழைத்துச் சென்றார். ஐன்ஸ்டீனேதான். தான் மிகுந்த வேலைகளுக்கிடையே இருப்பதாகவும் மறுநாள் என்னைச் சந்திப்பதாகவும் கூறினார். நான் அறைக்கு உள்ளே நோட்ட மிட்டேன். அங்கு ஒருவர் இருந்தார். உள்ளே இருப்பது சார்லி சாப்ளினோ என எனக்கு தோன்றியது.
நாங்கள் வெளியே வந்தோம். ஒஒஒஒஒஒ ஐன்ஸ்டீன் எல்லா பெரிய ஸ்டுடியோ தலைகளையும் ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கின்றார். பாரமவுண்ட் ஸ்டுடியோவின் சுல்பர்க், ஃபிரடின் மார்ச்,சார்ல்டன் ஹெஸ்டர்ன், ஆட்ரி ஹெப்பர்ன் முதலிய நட்சத்திரங்கள், பெரிய பெரிய இயக்குனர்கள் எழுத்தாளர்களை யெல்லாம் அவர் வளைத்து விட்டார். அவர் தட்டிய நபர்கள் எல்லாம் அவரது சொல்லுக்கு கீழ்ப்படிகின்றனர். ஒரு அரைமணி நேரம் அவர் உன்னோடு பேசினால் உன்னை ஒத்துக்கொள்ளச் செய்துவிடுவார்.
எனக்கு வேறு இடத்தில் நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்பு இருந்தது . எனவே நான் ஆர்வம் காட்டவில்லை. ஒஒஒஒஒஒ என்னை எச்சரித்தார். நீ ஒரு நண்பன் என்பதால் சொல்லுகின்றேன் என்றார். நான் சட்டை செய்யவில்லை.
ஆனால் ஒரு 3 வாரங்களில் நான் வேலையிலிருந்து நீக்கப்பட்டேன். எழுத்தாளர்கள் என்னோடு பணி புரிய இயல வில்லை என புகார் கோடுத்துள்ளதாக அறிந்தேன். அதன் பிறகு 4 இடங்களில் எனது வேலைக்கு ஒப்பந்தமெல்லாம் கையெழுத்தானபின் ரத்தானது
இவையெல்லாம் உண்மையா என்பதை இப்போதும் சோதனை செய்யலாம். அம்பாசடர் ஹோட்டலில் ஐன்ஸ்டீன் பெயரில் அறை பதிவு செய்யப்பட்டிருக்கும்.
தங்கள் உண்மையுள்ள
ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ
இந்தக் கடிதம் கிடைத்தவுடன் எட்கர் ஹூவர் கடிதம் எழுதியவருக்கு பதில் எழுதியுள்ளார்.
ஏப்ரல் 29,1953
ஒஒஒஒஒஒஒஒஒஒஒஒ
ஒஒஒஒஒஒஒஒஒஒஒஒ
ஒஒஒஒஒஒஒஒஒஒஒஒ
அன்புள்ள ஒஒஒஒஒஒஒ
உங்கள் ஏப்ரல் 21 1953 தேதியிட்ட கடிதம் கிடைத்தது. உங்களை இந்த கடிதம் எழுதத் தூண்டிய உங்கள் நோக்கங்களுக்கு எங்கள் பாராட்டுகள்.
இது குறித்து மேலும் அதிகம் ஏதேனும் தெரிய வந்தால் எங்கள் நிறுவனத்தின் சிறப்பு உளவாளியை ஓக்லஹாமாவில்  &&&&&&&&&&&&&&&&, &&&&&&&&&&&&&&&&&&&, &&&&&&&&&&& என்ற முகவரியில் அணுகவும்.
தங்கள் உண்மையுள்ள
ஜான் எட்கர் ஹூவர்.
இந்த பதில் பட்டும் படாததுமாக இருக்கின்றது. ஆணால் எட்கர் ஹூவர் இந்தத் தகவலை மிகவும் முக்கியமானதாக எடுத்துக்கொண்டுள்ளார்.
தான் எழுதிய கடிதத்தின் நகலை நியூயார்க், ஓக்லஹாமா நகருக்கு அனுப்பி உண்மையை அறிய ஆணையிட்டுள்ளார். அவர்களும் சுமார் 30 ஆண்டுகளுக்கு முந்தைய ஹோட்டல் ஆவணங்களையெல்லாம் தேடித் துளாவி எடுத்து ஐன்ஸ்டீன் அம்பாசடர் ஹோட்டலில் வந்து தங்கியது, சார்லி சாப்ளின் அவரோடு இருந்தது அவர்கள் பல ஹாலிவுட் பிரபலங்களை சந்தித்தது என்பதையெல்லாம் உறுதி செய்துள்ளனர்.
இது போன்று பல தகவல்களோடு ஐன்ஸ்டீன் மரணம் குறித்த நியூயார்க் டைம்ஸ் அறிவிப்பு வரை ஆவணத்தில் துல்லியமாக விவரங்கள் உள்ளன.
ஐன்ஸ்டீன் தான் சம்பந்தப்பட்ட இயக்கங்களுக்காக மிகுந்த அக்கறையுடன் நிதி திரட்டியுள்ளார் என்பது தெரிய வருகின்றது. தானறிந்த பிரபலங்களிடம் இருந்து மட்டுமல்ல. ஏதோ காரணத்தில் தன்னிடம் வந்து ஆலோசனை கேட்டு தொழிற்சங்கம் அமைத்த தொலைபேசித்துறை பொறியாளர் ஒருவருக்கு கடிதம் எழுதி நிதி வசூல் செய்ய வைத்துள்ளார். அவரும் கடமையுணர்வுடன் வசூல் செய்து அனுப்பியுள்ளார். ஐன்ஸ்டீனும் நிதியைப் பெற்றுள்ளார். வசூலான தொகை 21 டாலர். ஆம் வெறும் 21 டாலர்தான்.வேட்டை யாடப்படுகிறோம் என்று தெரிந்தே செயல்பட்ட ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகள் எழுத்தாளர்கள் நிதி வசூல் உட்பட செய்து சோசலிச இயக்கத்தை வளர்க்கப் பாடுபட்டுள்ளனர் என்பதை எண்ணுகிற பொழுது அதன் மதிப்பு அளப்பரிது. இந்த வரலாற்று தகவல் மாணவப் பருவத்திலே செங்கொடி ஏந்தி மதுரை பஸ் நிலையமருகே உண்டியல் வசூல் செய்து நிதி திரட்டியதை ஆகப்பெரிய வரலாற்று கடமையில் பங்களித்த மன நிறைவை நெஞ்சிலே பதியவைத்துவிட்டது. அவ்வாறு உணர இத்தகவல்களை சேகரித்துத் தந்தஅமெரிக்க உளவுத்துறையான எ ப். பி. ஐ’  க்கு நண்றி சொல்லவேண்டும்!
பின்குறிப்பு: முண்ட் சட்டம் கம்யூனிஸ்ட்டு களுக்கான தண்டனைகளை அதிகப் படுத்துவதற்காக அமெரிக்காவில் கொண்டுவரப்பட்ட சட்டம்.
ரோசன்பர்க் வழக்கு-  கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களான ரோசன்பர்க் தம்பதிகள் சோவியத்திற்காக அணு ஆயுத தொழில்நுட்பம் குறித்து உளவு பார்த்தனர் என்று குற்றஞ் சாட்டப்பட்டு பின் தூக்கிலிடப்பட்டனர். இதனைக் கண்டித்து அமெரிக்கா உள்பட பல நாடுகளில் கண்டனம் எழுந்தது.



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: