சாரின் ருசியாவிலே மக்களுக்கு அளிக்கப்பட்ட கல்வி மூலம் உருவாக்கப்பட்ட பண்பாட்டு நிலைமைகளை லெனின். ‘மக்கள் கல்வி அமைச்சக் கொள்கையைப் பற்றிய பிரச்சனைகள்’ என்ற கட்டுரையிலே பின்வருமாறு திட்பமாகக் குறிப்பிட்டுள்ளார்.
ருசியாவிலேயுள்ள ஆசிரியர்கள் அவர்கள் கற்பிக்கும் மாணவர்கள் ஆகியோரின் ஆன்மீக அடிமைத்தனம், அவமானம், அடக்கப்படுதல், உரிமைகள் இன்மை ஆகியவை பற்றிய சித்திரம் ஒப்பிட முடியாதபடி அதிக அளவிலே துன்பகரமானதாகவோ அல்லது மிகவும் வெறுக்கத் தக்கதாகவோ இருக்கிறது. இந்த விடயத்தில் மக்கள் கல்வி அமைச்சகத்தின் முழுச் செயற்பாடுகளும் மக்களின் உரிமைகளை அப்பட்டமாகக் கேலி செய்வதாகவும், மக்களை நிந்தை செய்வதாகவும் உள்ளது. மக்கள் கல்வி விடயத்திலே பொதுவாகவும், தொழிலாளர்களிடையே குறிப்பாகவும் பொலிசின் தலையீடும் மக்கள் தங்களுடைய அறிவை விருத்தி செய்து கொள்ளத் தாங்களே. எது செய்தாலும் அதைப் பொலிÞ மூலம் அழிப்பது இதுதான் அமைச்சகத்தின் முழுமையான நடவடிக்கை களாகும்.
சார் ஆட்சியிலே மக்களுக்கு அளிக்கப்பட்ட கல்வி மூலம், மக்கள் மத்தியில் எத்தகைய பண்பாட்டு விழுமியங்களையும் மனப்பாங்குகளையும் விருத்தியுறச் செய்தார்கள் என்பதை ருசியாவின் இளங்கம்யூனிÞடுகளின் கழகத்தினது மூன்றாவது அனைத்து ருசியக் காங்கிரசில் ஆற்றிய உரையிலே பின்வருமாறு தெளிவுபடுத்தியுள்ளார்.
ஒன்று நீ மற்றவனைக் கொள்ளையடிப்பாய், அன்றேல் மற்றவன் உன்னைக் கொள்ளையடிப்பான், ஒன்று நீ மற்றவனுக்காக வேலை செய்வாய், அன்றேல் அவன் உனக்காக வேலை செய்பவன். ஒன்று நீ அடிமைச் சொந்தக்காரன். அன்றேல் நீ அடிமை. எனும் கோட்பாட்டின் அடிப்படையிலேயே பழைய சமூகம் அமைக்கப் பட்டிருந்தது. அந்தச் சமூகத்திலே போதித்துப் பயிற்றுவிக்கப்பட்ட வர்கள் ஒருவகையிற் சொன்னால், தாய்ப் பாலுடனேயே மனப்பாங்கு களையும், பழக்கவழக்கங்களையும், எண்ணக் கருக்களையும், சிறு அறிவு ஜீவி என்ற எண்ணக் கருத்துக்களையும் கிரகித்துக் கொள்கிறார்கள். சுருங்கக்கூறின் தனக்கு வேண்டியதைப் பெறுவதில் மட்டுமே அக்கறை கொள்பவனாக மற்றவர்கள் என்ன ஆனாலும் பரவாயில்லை என்று நினைப்பவனாக ஒவ்வொருவனும் பயிற்று விக்கப்படுகிறான்
1917ஆம் ஆண்டுச் சோசலிசப் புரட்சிக்குப் பின்னரும், பழைய கல்வி முறையிலே கற்விகற்ற முதலாளித்துவப் புத்திஜீவிகள், தொழிலாளர் விவசாயிகளுக்காக அமைக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் கல்வி போதிக்கும் போது தாம் ஊறிப்போன பண்பாட்டு விடயங்களையே அவர்களுக்குப் புகட்டினார்கள் என்பதை முதியோர் கல்வி பற்றிய முதல் அகில – ருசிய காங்கிரசில் ஆற்றிய உரையில் பின்வருமாறு சுட்டிக் காட்டியுள்ளார்.
முதற்குறை முதலாளித்துவ அறிவு ஜீவிகளின் மிதமிஞ்சிய எண்ணிக்கை அவர்கள் விவசாயிகள், தொழிலாளர்களுடைய புதிய வகையான கல்வி நிலையங்களைத் தமது சொந்த தத்துவஞானம், ஆதாரமற்ற பண்பாட்டுப் புனைச்சுருட்டுகள் முதலியவற்றை மிக வசதியாகப் பரிசோதித்துப் பார்க்கின்ற இடமாகக் கருதி வந்தார்கள். அந்நிலையங்களிலே ஒவ்வொரு இடத்திலும், மிக அடிக்கடி மூடக் கருத்துக்கள் புதிய கருத்துக்களாகப் போற்றப்பட்டன. இயற்கை கடந்த கற்பனையானதும் பொருத்தமற்றதுமான கருத்துக்கள் பாட்டாளி வர்க்கத்தினரின் கலை, பண்பாடு என வழங்கப்படுகின்றன.
ஆசிரியர்கள் கல்வி நோக்கங்களை நடைமுறைப்படுத்துவதில் தீர்க்கமான பங்கு வகிப்பவர்களாகும். ஒரு நாட்டு அரசின் கல்வி நோக்கங்களுக்கேற்ப மாணவர்களது அறிவு, திறன் மனப்பாங்குகளை விருத்தியுறச் செய்யும் பணி ஆசிரியருடையது. சோசலிசப் புரட்சிக்கு முற்பட்ட ருசியாவிலே பெரும்பான்மை ஆசிரியர்களது மனப்பாங்குகளும், நோக்கங்களும் ஆளும் வர்க்கத்தினருக்குச் சார்பானவையாகவும், பொதுமக்களின் நலன்களுக்கு முரணானவையாகவும் இருந்தன. லெனின் இந்த அம்சத்தை நன்கு அவதானித்தார்.
முதலாளித்துவ தப்பெண்ணங்களில் ஊறிப்போனவர்களும், புரிந்துகொள்ளும் ஆற்றல் அற்றவர்கள் என்பதனை வெளிப் படுத்தியவர்களுமான பழைய ஆசிரியர்களுடைய சங்கத்திற்கு சர்வதேசிய வாதிகள் சங்கமாகிய உங்கள் சங்கத்தில் இடமில்லை.
இந்த ஆசிரியர் சமூகத்தினர் பணக்காரர் மட்டுமே உண்மையான கல்விக்குத் தகுதியுடையவர்கள் என்றும், அதே போது பெரும்பான்மை உழைக்கும் மக்கள் வாழ்வின் உண்மையான நாயகர்களாக அல்லாமல் நல்ல வேலைக்காரர்களாகவும் மட்டுமே பயிற்சியளிக்கப்பட வேண்டும் எனச் சிந்தித்துப் பழக்கப் பட்டவர்கள்.
என பழைய ருசியாவின் ஆசிரியர்கள் பற்றிய தமது கணிப்பீட்டை சர்வதேசியவாத ஆசிரியர்கள் இரண்டாவது அகில – ருசியக் காங்கிரசில் ஆற்றிய உரையில் வெளிப்படுத்தினார். அக்காலத்திலே மக்களுக்கு அளிக்கப்பட்ட போதனையைப் பொறுத்த வரையிலே இக்கணிப்பீடு தவறற்றதெனக் கூறலாம்.
1920ஆம் ஆண்டிலே ருசியாவின் இளம் கம்யூனிÞடுகள் கழகத்தினது மூன்றாவது அனைத்து – ருசியக் காங்கிரசிலே லெனின் ஆற்றிய உரையிலே கல்வியும் பண்பாடும் பற்றிய அவரது முக்கிய மான கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
அவ்வுரையிலே பழைய கல்வி முறையினது, அக்கல்வி முறையினால் உருவாக்கப்பட்ட பண்பாட்டினதும் உண்மையான இயல்பு பற்றிய அவரது விமர்சனமும், புதியதொரு சோசலிசக் கல்வி முறையையும், பொதுமக்கள் பண்பாட்டையும் உருவாக்குவதற்கான நெறிமுறைகளும் அடங்கியுள்ளன.
பழைய கல்விப் போதனை உழைக்கும் பெரும்பான்மை மக்களின் உண்மையான பண்பாட்டு விழுமியங்களையும், பெறுமதிகளையும் விருத்தியுறச் செய்யும் நோக்கத்தைக் கொண்டி ருக்கவில்லை. இந்த உண்மையை அவ்வுரையிலே பழைய கல்விப் போதனை பற்றிய அவரது பின்வரும் விமர்சனம் உறுதிப்படுத்துவ தாயுள்ளது.
எல்லாத்துறைகளிலும் கல்வித் தேர்ச்சி பெற்ற மனிதனை உருவாக்கத் தான் விரும்புவதாகவும் பொதுவாக அறிவியல்களைப் போதிப்பதாகவும் பழைய பாடசாலை அறிவித்தது. இது உள்ளும்புறமும் பொய்யானது என்பதை நாம் அறிவோம் ஏனெனில் சுரண்டுவோர் என்னும் வர்க்கங்களாக மக்களைப் பிரிவுபடுத்தியதன் அடிப்படையிலே சமூகம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்தது இயங்கி வந்தது.
வர்க்க உணர்வால் முற்றிலும் நிறைந்திருந்த பழைய பாடசாலை முறை அனைத்து சுரண்டும் வர்க்கக் குழந்தைகளுக்கு மட்டுமே அறிவியல்களைப் போதித்தது இயல்பே. அதன் ஒவ்வொரு சொல்லும், சுரண்டும் வர்க்கத்தினரின் நலன்களுக்காகப் போலியாக உருவாக்கப்பட்டது. தொழிலாளி விவசாயிகளின் இளந்தலைமுறை யினருக்கு இப்பாடசாலைகளில் முறையான பயிற்சியளிக்கப் படவில்லை.
இந்தத் தலைமுறையினருக்கு அளிக்கப்பட பயிற்சியின் நோக்கம் முதலாளித்துவ வர்க்கத்துக்கு இலாபம் தரவல்லவர்களும் அதேபோது, அதன் அமைதியையும், சோம்பேறித்தனத்தையும் குலைக்காதவர்களுமான பயனுள்ள ஏவலர்களாக அவர்களை உருவாக்குவதே.
இக்கருத்து லெனினது தீர்க்கமான முடிவு. அவர் இக்கருத்தையிட்டு என்றும் ஊசலாட்டம் அடைந்ததில். இக்கருத்தின் முக்கியத்துவம் கருதி பல கட்டுரைகளிலே இக்கருத்துக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.
1918ஆம் ஆண்டு ஆகÞத்து 28ஆம் திகதி நடைபெற்ற கல்வி பற்றிய அகில ருசிய காங்கிரÞ உரையிலே
உண்மையில் பாடசாலை முதலாளித்துவ வர்க்க ஆட்சியின் கருவியாக முழுமையாக மாற்றப்பட்டதைத் தவிர வேறொன்றும் நடக்கவில்லை. பள்ளிக்கூடங்கள் முதலாளித்துவ வர்க்க மனப்பாங்கால் முழுமையாக ஆழ்த்தப்பட்டுவிட்டன.
“வாழ்க்கையிலிருந்தும் அரசியலிலிருந்தும் பிரிக்கப்பட பாடசாலை” என்பது பொய்யும் பாசாங்குமாகும், என நாம் வெளிப்படையாகக் கூறுகிறோம். பழைய முதலாளித்துவப் பண்பாட்டின் மிகச்சிறந்த கல்வியறிவுள்ள பிரதிநிதிகளால் கையாளப்பட்ட மறைமுக நாசவேலையின் கருத்து என்ன? எந்தக் கிளர்ச்சிக்காரரையும்விட நன்றாக, நமது எல்லாப் பேச்சுக்களையும் விடச் சிறப்பாக ஆயிரக்கணக்கான சிறு பிரசுரங்களைவிட மேலாக, இந்த மறைமுக நாசவேலையானது இந்தப் பேர்வழிகள் கல்வியைக் தமது ஏகபோகம் என்றும், சாமான்ய மக்கள் என அழைக்கப்படுகின்ற மக்களின் மீதான தங்களது ஆட்சியின் கருவியாக மாற்றியுள்ளனர் என்பதையும் எடுத்துக் காட்டிற்று, என்றும் குறிப்பிட்டுள்ளார். சர்வதேசியவாத ஆசிரியர்களது இரண்டாவது அகில ருசியப் காங்கிரசில் ஆற்றிய உரையிலே.
முதலாளித்துவப் பாசாங்குகளில் ஒன்று என்னவெனில் பாடசாலை அரசியலில் இருந்து விலகித் தனியே நிற்க முடியும் என்ற நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கை எவ்வளவு வாதிட்டு ஆதரித்த முதலாளித்துவமே அதனுடைய சொந்த முதலாளித்துவ அரசியலை பாடசாலைக் கல்வி முறையின் முக்கியவிடயமாக்கியது. பாடசாலையைச் கீழ்படிதலும் திறமைமிக்க ஊழியர்களாவும், மூலதனத்தின் அடிமையாகவும் அதன் கருவியாகவும் மாற்றக்கூடிய அளவு கல்வியை இழிவுறச் செய்ய முதலாளித்துவம் முயன்றது.
மனித ஆளுமையை வளர்க்கும் சாதனமாக பாடசாலையை மாற்ற அவர்கள் எண்ணியதேயில்லை என்றும் கூறி பழைய கல்வி போதனை மூலம் உருவாக்கப்பட்ட பண்பாட்டின் இயல்பைச் சுட்டிக் காட்டினார்.
சார் மன்னர், நிலப்பிரபுக்கள், முதலாளி வர்க்கம் ஆகியோர் ஆதிக்கஞ்செலுத்திய பழைய கல்வி முறையில், திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்ட கலைத்திட்டத்திலே மக்களது அறிவுத் திறன், மனப்பாங்குகளை விருத்தி செய்து பூரண மனிதராக்கி சமூகத்திலே மக்களின் நலன் பேணும் பண்பாட்டை உருவாக்கும் அம்சங்கள் உள்ளடக்கப்படவில்லை. மாறாக மக்களின் பண்பாட்டுப் பெறுமதிகளும், விழுமியங்களும் விருத்தியுறுவதைத் தடை செய்யும் விடயங்களும், ஆளும் வர்க்கத்தின் பண்பாட்டை மக்கள் தமது பண்பாடாக உவந்தேற்று, அதற்கேற்ப ஒழுகத் தக்கவாறு அவர்களது மனப்பாங்குகளை மாற்றியமைக்கத்தக்க விடயங்களும் உள்ளடக்கப்பட்டிருந்தன.
இந்த இயல்பை லெனின் தமது பல கட்டுரைகளிலும், அவ்வப்போது ஆற்றிய உரைகளிலும் சிறப்பாக அம்பலப்படுத்தி யுள்ளதைக் காணலாம்.
பழைய பாடசாலை பாடப்பயிற்சிப் பாடசாலையாக இருந்தது. தேவையற்ற பயனற்ற உயிரற்ற, அறிவியல் திரள்களைக் கற்கும் படி அது மாணவர்களைக் கட்டுப்படுத்தியது. இவை மூளையில் வலுவாகத் திணிக்கப்பட்டன. இளந்தலை முறையி னரைப் பொது அச்சில் வார்க்கப்பட்ட அலுவலாளர்களாக இவை மாற்றின.
பழைய பாடசாலையில் சிறுவனின் மூளையில் அளவற்ற எண்ணிக்கையில் அறிவியல்கள் சுமத்தப்பட்டன. இவற்றில் பத்திலொன்பது தேவை அற்றவை. பத்திலொன்று திரிக்கப் பட்டவை.
பழைய பாடசாலை முதலாளிகளுக்குத் தேவையாய் இருந்த ஏவலாளர்களைப் பயிற்றுவித்து பழைய பாடசாலை விஞ்ஞானி களை முதலாளிகளுக்கு உவப்பான வகையில் எழுதவும் பேசவும் கடமைப்பட்டவர்கள் ஆக்கியது.
வழக்கொழிந்த சமயசித்தாந்த பாணி, மாறு நடைமுறையி லான மதகுருக்களின் செல்வாக்கால் கொடுக்கப்பட்டதான கல்விப் போதனை இருந்தது.
லெனினது இக்கூற்றுகளில் மக்களுக்கு அளிக்கப்பட்ட கலைத்திட்ட உள்ளடக்கத்துக்கும், மக்களது உண்மையான வாழ்க்கைக்கும் எத்தகைய தொடர்பும் இருக்கவில்லை என்பது புலப்படுகின்றது.
மக்கள் தமது வாழ்க்கையை முன்னேற்றுவதற்கு அவசியமான அறிவைப் பெறுவதற்குப் போதிய நூல்கள், செய்தித்தாள், சஞ்சிகைகள் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. அவர்களுக்கு வழங்கப்பட்ட நூல்கள், அவர்கள் தம் அறிவையும் பண்பாட்டையும் விருத்தி செய்வதற்குரிய உண்மையான அறிவை அளிக்கவில்லை. இப்பெருந்தீங்கை லெனின் பின்வருமாறு விளக்கியுள்ளார்.
பழைய முதலாளித்துவ சமூகத்திடமிருந்து நமக்கு எஞ்சியுள்ள மிகப்பெரிய தீமைகளில் ஒன்று நடைமுறை வாழ்க்கையிலிருந்து நுல்கள் அறவே துணிக்கப்பட்டிருப்பதாகும். ஏனெனில் நமக்குக் கிடைத்த நூல்களில் எல்லா விடங்களும் மிகச் சிறந்தவையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்த நூல்களில் பெரும்பாலானவை முதலாளித்துவ சமூகத்தை நமக்குப் பொய்யாகச் சித்தரித்து மிகமிக அருவருப்பூட்டும் பாசாங்கு பொய்களாக இருந்தன.
பாடசாலை மூலம் மக்களுக்குப் போதிக்கப்பட்டு வந்த நீதி நெறிகளும் ஒழுக்க நெறிகளும் மக்களின் நலன்களுக்கு விரோதமானவை என்பதை உணர்ந்த லெனின் அந்த உண்மையை மக்களுக்கு நிதர்சனப்படுத்தி விளக்குகிறார்.
எந்த அர்த்தத்தில் நாம் ஒழுக்க நெறியை மறுக்கிறோம்? நீதி நெறியை மறுக்கிறோம்? இந்த நீதி நெறிகள் முதலாளித்துவ வர்க்கம் பிரசாரம் செய்து வந்தவை. அந்த வகையில் நாம் அவற்றை மறுக்கி றோம். அந்த வகையில் நாம் கடவுளை நம்பவில்லை என்று சந்தேகமின்றிச் சொல்கிறோம். மதகுருக்களும், நிலப்பிரபுக்களும், முதலாளிகளும் தங்கள் சுரண்டும் நலன்களைப் பெறுவதற்காக கடவுளின் பெயரால் பேசி வந்தார்கள். நாம் மிக நன்றாக அறிவோம். அல்லது இந்த ஒழுக்க நெறியை நீதிநெறி விதிகள் என்றோ கடவுளின் கட்டளைகள் என்றோ கூறுவதற்குப் பதிலாக கருத்துமுதல்வாத அல்லது அரைக்கருத்து முதல்வாதச் சொற்றொடர்களின் அடிப்படையில் இதை அவர்கள் எடுத்துரைத்தார்கள். இச்சொற் றொடர்கள் கடவுளின் கட்டளைகள் என்றும் கருத்தோடு மிகவும் ஒத்த கருத்தாகவே எப்போதும் இருந்தன.
மனிதாபிமானத்துக்குப் புறம்பான வர்க்கத்துக்குப் புறம்பான கருதுகோளிலிருந்து பெறப்பட்ட இத்தகைய எல்லா நீதிநெறி களையும் நாம் மறுக்கிறோம். இது ஏமாற்று என்று நாம் கூறுகிறோம். இது வஞ்சகம் என்றும் நிலப்பிரபுக்களதும் முதலாளி களதும் நலன்களுக்காக தொழிலாளர் விவசாயிகளின் மூளைகளைக் குழப்புவது என்றும் நாம் கூறுகிறோம்.
லெனினது இக்கூற்றுகளில் தமது கருத்தின் மீது அவருக்குள்ள உறுதி புலனாகின்றது.
1917ஆம் ஆண்டுப் புரட்சிக்கு முந்திய ருசியாவிலே நீண்ட காலமாக சார் மன்னரின் ஆட்சியின் கீழ், சார் மன்னர் பரம்பரையினர், நிலப்பிரபுக்கள், மதகுருமார்கள், முதலாளி வர்க்கத்தினர் ஆகிய சுரண்டும் வர்க்கத்தினர் பொருளாதார அமைப்பிலும், மேற்கட்டமைப்புக்களான அரசியல், மதம், கல்வி, பண்பாடு, நீதி சட்டம் முதலியவற்றிலும் ஆதிக்க நிலை பெற்றிருந்தனர் என்பதை லெனின் பல வழிகளில் எடுத்துக்காட்டியுள்ளார்.
ருசியாவின் மொத்த சனத்தொகையில் ஏறக்குறைய இரண்டு நூற்று வீதமான இச்சிறு குழுவினர் தமது சுரண்டும் வர்க்கப் பண்பாட்டை நிலைநிறுத்தவும், உழைக்கும் வெகுசனங்களின் பண்பாட்டை அம்மக்கள் விருத்தியுறச் செய்வதைத் தடை செய்யவும், கல்வி முறையின் சகல கூறுகளையும் பயன்படுத்தினார். மேலும் தமது பண்பாட்டை மக்கள் தமது பண்பாடாக ஏற்று, அதைப் போற்றி, பயபக்தியுடன் கீழ்ப்படிவுடனும் அதற்கிணங்க ஒழுகவும் கல்வியைத் திட்டமிட்டுப் பயன்படுத்தினர் என்பது மார்க்ஸியவாதிகள் பொதுக் கருத்தாகும்.
லெனின் அக்காலகட்டத்தில் நிலவிய பொருளாதார, சமூக, பண்பாட்டு நிலைமைகளைத் தமது ஞானத் தெளிவுடன், தமது இயக்கவியல் உலகப் பார்வையினூடாக நோக்க கல்வியும் பண்பாடும் பற்றியும், அவற்றுக்கிடையே நிலவும் இடைத்தாக்கம் பற்றியும் தமது கருத்துக்களை அகல்விரிவான தெளிவுடன் முன் வைத்துள்ளார் என்பது புலனாகும்.
1917ஆம் ஆண்டு அக்தோபர் சோசலிப் புரட்சிக்குப் பின்னர் சோசலிச அரசுக்குத் தலைமை தாங்கிய லெனின் அதுவரை காலமும் ருசியாவிலே சுரண்டும் வர்க்கத்தினரான ஒரு சிறு மேற்குடிக் குழாத்தினருக்கு என அக்குழாத்தினரால் உருவாக்கப்பட்டிருந்த நிலப்பிரபுத்துவ – முதலாளித்துவப் பண்பாட்டை நிராகரித்தார். அதற்குப் பதிலீடாக கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் உணர்வுகளையும் அபிலாசைகளையும், ஆர்வங்களையும் சிந்தனைகளையும் ஒன்றிணைக்கின்ற புதியதொரு பொது மக்கள் பண்பாட்டை உருவாக்குவதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டார்.
சார் மன்னரும் நிலப்பிரபுக்களும், மதகுருமாரும், முதலாளி வர்க்கமும், நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ சமூக அமைப்புக்கு இசைவான பண்பாட்டை உருவாக்கவும், அப்பண்பாட்டை மக்கள் மத்தியில் மேன்மைப்படுத்த, நிலைநிறுத்தவும், மக்களின் பண்பாடு விருத்தியுறுவதைத் தடை செய்யவும், கல்வியைத் திட்டமிட்டுப் பயன்படுத்தினர் என்பது லெனினது திடமான கருத்தாகும். அவர் அவர்களுக்கு எதிராக மனிதனை மனிதன் சுரண்டுதல் இல்லாத, சமத்துவமும் நீதியும் நிலவுகின்ற பொதுச்சொத்தை அடிப்படையாக் கொண்ட புதிய சோசலிச அமைப்பை நிருமாணிப்பதற்குரிய அரசியல், பொருளாதார முயற்சிகளை எடுத்ததோடு, அச்சமூக அமைப்புக்கு ஏற்றதான பொது மக்கள் பண்பாட்டை உருவாக்குவதற்காக கல்வி முறைமையின் எல்லா உள்ளடக்க கூறுகளையும், கோட்பாடுகளையும் கருத்தியல்களையும், நெறிமுறைகளையும் ஆக்கியமைத்தார்.
லெனினது தலைமையில் சோசலிச அரசும், கம்யூனிÞட் கட்சியும் புதிய சோசலிச அமைப்பை நிருமாணிப்பதற்குரிய அரசியல், பொருளாதார முயற்சிகளை எடுத்ததோடு, அச்சமூக அமைப்புக்கு ஏற்றதான பொதுமக்கள் பண்பாட்டை உருவாக்கு வதற்காக கல்வி முறைமையின் எல்லா உள்ளடக்க கூறுகளையும், கோட்பாடுகளையும் கருத்தியல்களையும், நெறிமுறைகளையும் ஆக்கியமைத்தார்.
லெனினது தலைமையில் சோசலிச அரசும், கம்யூனிÞட் கட்சியும் புதிய பொதுக் கல்வி முறையை ஒழுங்கமைப்பதில் பயனுள்ள நடவடிக்கை எடுத்தது. பழைய சுரண்டல் அமைப்பில் சிறு குழாத்தினருடைய பண்பாடு, மக்களைத் தமது அறிவியல் பண்பாட்டு ஆக்க, வேலைகளிலிருந்தும், பொதுக்கல்வி பெறுவதிலிருந்தும் கலைகளில் பயிற்சி பெறுவதிலிருந்தும் தடுக்கும் போக்கைப் பிரதிபலித்தது.
இன்றும் முதலாளித்துவ நாடுகளிலே பண்பாடு வசதி படைத்த சிறு குழாத்தினரின் சொத்தாக உள்ளது. அந்நாடுகளிலே சமூக வாழ்வு பண்பாட்டுப் பெறுமதிகளை உருவாக்கல், அவற்றை பரவற்படுத்தல் ஆகிய விடயங்களிலே முனைப்பான முரண்பாடுகளைப் பிரதிபலிக்கின்றது.
இந்நிலைகளை நன்கு ஆராய்ந்து லெனின் பண்பாட்டுப் புரட்சிக்குரிய விரிவான திட்டத்தைத் தயார் செய்தார். அத்திட்ட மானது மக்களின் பொதுக் கல்வியின் மட்டத்தை உயர்த்துதல், பல்வேறு தேசிய இனங்களின் பண்பாட்டுச் சமமின்மையை நீக்குதல், கிராமப்புறங்களில் பண்பாட்டுப் பின்னடைவை வெற்றி கொள்ளல் விஞ்ஞானம், கலை ஆகியவற்றிலே மலர்ந்து வருகின்ற ஆற்றல் களுக்கு முன்னுரிமை அளித்தல், சோசலிச உலகப் பார்வையை ஏற்படுத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டமைந்திருந்தன வெனலாம்.
லெனினது நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடு முகமாக சோவியற்றுக் கம்யூனிÞட் கட்சியின் மத்தியக் குழுவின் அறிக்கை இதை உறுதிப்படுத்துகின்றது.
அவ்வறிக்கையிலே,
பண்பாட்டுப் புரட்சியின் உள்ளடக்கமாவது பொதுமக்கள் கல்வியின் விருத்தி, அரசியல், அறிவியல், கவின்கலை விழுமியங்கள் பொதுமக்களுக்கு எட்டும் வகையில் எல்லா நிபந்தனையும் ஏற்பாடு செய்வது, விஞ்ஞான சோசலிசக் கருத்தியல் ஆகியவற்றின் அடிப்படையிலே மக்களின் பண்பாட்டு அறிவியல் வாழ்வு முழுவதையும் ஒழுங்கமைத்தல், மக்களுக்கு விரோதமான குட்டி முதலாளித்துவ கருத்துக்களையும் ஒழுங்குகளையும் ஒழித்தல் ஆகும்.
ஆகவே சோசலிச நிர்மாணத்தின் ஒரு கூறு என்ற வகையில் சமூகத்தின் பண்பாடு அறிவியல் மாற்றத்தின் ஒரு புரட்சிகரச் செயன் முறையாகவும், சோசலிச பண்பாட்டை நிர்மாணிப்பதற்கு இட்டுச் செல்லும் பிரதான பாதையாகவும் பண்பாட்டுப் புரட்சியை நோக்குதல் வேண்டும்.
இந்தக்கோட்பாட்டின் அடிப்படையிலேயே புதிய முறையின் நெறிமுறைகளை லெனின் வகுத்தமைத்தார்.
சமூகப் புரட்சியானது பண்பாட்டுப் புரட்சிக்கு ஓர் இன்றியமையாத முன் நிபந்தனையாகும் என்று லெனின் கருதினார். முதலாளித்துவ சமூக நிலைமைகளிலிருந்து சோசலிசத்துக்கான மாற்றத்தை அமைதியான வழியில் மட்டுமே செய்து முடிக்க முடியும் எனவும் உற்பத்தி சக்திகளும், பண்பாடும் ஒரு நிச்சயமான வளர்ச்சிக் கட்டத்தை அடைந்தால் மட்டுமே அது சாத்தியம் எனவும் எல்லாவித சீர்திருத்தவாதிகளும் வெளியிட்ட கருத்துக்களை லெனின் கடுமையாக விமர்சித்தார். நமது புரட்சி என்ற கட்டுரையிலே அந்த நிலைப்பாட்டை விரிவாக விளக்கிய நி.சுஹானின் குறிப்புகள் பற்றிக் கருத்துரைத்த அவர் சோசலிசத்தைக் கட்டுவதற்கு ஒரு குறிப்பிட்ட பண்பாட்டுத் தரம் என்ன என்று கூற முடியாது. (ஏனெனில் அது ஒவ்வொரு மேற்கத்திய நாடுகளிலும் வேறுபடுகிறது) அந்தக் குறிப்பிட்ட பண்பாட்டுத் தரத்துக்குத் தேவையான முன் தேவைகளைப் புரட்சிகரமான வழிகளில் முதலில் அடைவதன் மூலம் ஏன் அவ்வேலையை நாம் ஆரம்பிக்கக்கூடாது? அதன் பின்னர் தொழிலாளர் விவசாயிகள் ஆகியோரின் அரசாங் கத்தின் மற்றும் சோவியற்று அமைப்பு முறையின் துணையுடன் மற்ற நாடுகளை முந்துவதற்கு ஏன் தொடர்ந்து செயற்படக்கூடாது எனக் குறிப்பிடுகிறார்.
சார் மன்னராட்சியிலே அஞ்ஞான இருளிலும் பேதமை நிலையிலும் அமுக்கி வைக்கப்பட்ட பொதுமக்கள் சோசலிச சமூகத்தை நிருமாணிப்பவர்களாகவும் புதிய பண்பாட்டு மதிப்பு களை உருவாக்குகிறவர்களாகவும் ஆவதற்கு அவர்களுக்குப் பண்பாடு எளிதாகக் கிட்ட வேண்டும் என்பது தான் பண்பாட்டுப் புரட்சி பற்றி லெனினது முக்கிய போதனையாகும்.
பண்பாட்டுப் புரட்சியின் வெற்றிச் சாதனை குறுகிய காலத்தில் அடையக்கூடிய விடயமன்று. அது நீடித்த நடைமுறையாகும் என்பதை லெனின் அறிவுறுத்தினார். முதியோருடைய கல்லாமையை அகற்றுதல், பாடசாலை செல்லும் சகலருக்கும் பொதுக்கல்வி அளிப்பது. எல்லாத் தேசிய இனங்களையும் சேர்ந்த உழைக்கும் மக்களின் பண்பாட்டு நிலையை உயர்த்துவது உண்மையான ஒரு மக்கள் அறிவுஜீவிகளை உருவாக்குவது அதன் முக்கியமான பணிகளாகும்.
பண்பாட்டுப் புரட்சியைப் பூர்த்தி செய்வதில் கல்வி முறையை முக்கியமான இணைப்பு என லெனின் கருதினார். சுரண்டும் வர்க்கத்தினரது ஆதிக்கத்தின் கருவியாக அது இருப்பதிலிருந்து அந்த ஆதிக்கத்தை அழிக்கக்கூடிய கருவியாக மாற்ற வேண்டியது அவசியமாக இருந்தது.
லெனின் கல்வித்துறையின் பணிபற்றி 1918ஆம் ஆண்டு ஆகÞடில் நடைபெற்ற கல்வி தொடர்பானை அகில ருசிய காங்கிரசில் தமது கருத்தைப் பின்வருமாறு எடுத்துரைத்தார்.
கல்வித்துறையிலான நமது பணி, முதலாளி வர்க்கத்தைத் தூக்கியெறிவதற்கான போராட்டத்தின் ஒரு பகுதியே. வாழ்க்கையி லிருந்தும் அரசியலிலிருந்தும் விலகுண்டு நிற்கும் கல்வி பொய்யும் பித்தலாட்டமுமே என்பதை நாம் பகிரங்கமாப் பிரகடனப் படுத்துவோம்.
வாழ்க்கையுடனும் சோசலிச நிர்மாணப் பணியுடனும் நெருங்கிய தொடர்புடையதாகவும் மேலும் புதிய சமூக அமைப்பின் வெற்றிக்குத் தீவிரமாகப் போராடுகின்றவர்களை உருவாக்கக் கூடியதாகவும் பாடசாலைகள் அமைய வேண்டும் என லெனின் அடிக்கடி வற்புறுத்தி வந்தார்.
கல்லாமையை ஒழிக்கும்வரை சோசலிசத்தை கட்டியமைக்க முடியாது சோசலிசத்தைக் கட்டியமைக்க அரசியல் விழிப்புணர்வு, கல்வி, கல்லாமையை முழுவதுமாக ஒழித்தல் ஆகியவற்றை முன்னேற்றப் பரந்தளவிலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என லெனின் அமைதியாக விளக்கினார். மேலும் அவை பண்பாட்டில் பாரிய அபிவிருத்தியை அடையவும், மக்கள் மத்தியில் அறிவு ஜீவிகளை உருவாக்கவும், கிராமப்புறங்களில் புதிய பண்பாட்டு – சமூக உறவுகளை நிறுவவும், சோசலிச அடித்தளத்தில் இனங்களில் பண்பாட்டினது சர்வாம்ச அபிவிருத்திக்கு ஏற்பாடு செய்யவும் பெண்களை விழித்தெழச் செய்து அவர்களை உற்பத்தியிலும் பொது வாழ்விலும் ஈடுபடச் செய்யவும் புதி யசமூகத்தின் ஏனைய எல்லாப் பண்பாட்டு அறிவியல் ஆற்றல்களை வெளிக்கொணரும் அவசியமானவையாகும்.
இவ்வடிப்படையிலே லெனினது பண்பாட்டுப் புரட்சிக்கான திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டிய செயற்பாடுகளுக்கான மூன்று கோட்பாடுகளையுள்ளடக்கியுள்ளதெனலாம்.
அவையாவன:
1. கல்விப் பணிகள் (கல்லாமை ஒழிப்பு, மதச்சபையிலிருந்து கல்வியை வேறு பிரித்தல் முதலியன)
2. பண்பாட்டின் பரிவர்த்தனை. நுகர்வு ஆகியவற்றை சனநாயகமயப்படுத்தல் இது கடந்த காலத்தின் முற்போக்குப் பண்பாட்டுடன் புதிய சோசலிசப் பண்பாட்டை இணைத்தல் மூலம் செய்தல்.
3. அறிவியல் ஆக்கப் படைப்புகளை மக்களே செய்யக் கூடியதாகவும், அறிவியல் உழைப்புக்கும், உடல் உழைப்புக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை நீக்கக் கூடியதாகவும் பண்பாட்டை சனநாயகமயப்படுத்தல்.
பொருளாதாரத்திலும் பண்பாட்டிலும், அபிவிருத்தியுறாத பல ஆண்டுகளாகப் போரின் மூலம் அழிவுற்ற ருசிய நாட்டிலேயே சோவியற்றுச் சோசலிசக் குடியரசு உருவாக்கப்பட்டது. அதன் காரணமாக எல்லாப் பண்பாட்டுப் பணிகளையும் உடனடியாக நிறைவேற்ற அக்குடியரசால் முடியவில்லை. ஆரம்பகாலத்தில் கல்லாமையையொழித்தல், பண்பாட்டை மக்களுக்குக் கிடைக்கக் கூடியதாகச் செய்தல், பண்பாட்டுப் பாரம்பரியங்களைப் பேணி அவற்றைத் தம்மயப்படுத்தல், சோசலிசக் கட்டுமானப் பணியில் பழைய அறிவு ஜீவிகளை ஈடுபடுத்தல் தொழிலாளர் விவசாயிகள் மத்தியிலிருந்து அறிவு ஜீவிகளைக் கொண்ட ஒரு புதிய சக்தியைப் பயிற்றுவித்தல், பல்வேறு தேசிய இனங்களுக்கிடையேயுள்ள சமத்துவ நிலைமைகளையும், கிராமப்புற மக்களிடையே பண்பாட்டுப் பின்னடைவையும் நிவர்த்தி செய்தல் ஆகிய பணிகளில் ஈடுபடுவது அவசியமாக இருந்தது.
இந்த நோக்கங்களை நிறைவு செய்வதற்காக லெனின் புதிய சோவியற்றுச் சோசலிச அரசு நிறுவப்பட்ட நாள் முதல் திட்டமிட்டுச் செயற்பட்டார்.
புதிய சோசலிச சமூகத்தை நிருமாணிப்பதற்கும், புதிய பொதுமக்கள் பண்பாட்டை விருத்தியுறச் செய்வதற்கும், மக்கள் மத்தியிலுள்ள கல்லாமையை ஒழிப்பது மிகப் பிரதானம் என லெனின் உணர்ந்தார்.
பொதுக்கல்வி முறைமையை ஒழுங்குபடுத்துவதில் பயனுள்ள முயற்சிகளை எடுத்தார். கல்விக்கான மக்கள் கமிசாரகம் அமைக்கப்பட்டது.
லெனின் தலைமையில் கம்யூனிÞட் கட்சியானது அடிப் படையில் அரசியல் நிலைமைகளை மாற்றியமைத்ததுடன், அதற்கிணங்கி அரசின் கல்விக் கோட்பாடுகளையும் மாற்றிய மைத்தது. 1917ஆம் ஆண்டு அக்தோபர் 29ஆம் தேதி வெளியிட்ட முதலாவது அரசாணைகளுள் ஒன்றிலே அறிவின் சகல ஏகபோகத்தையும் ஒழிப்பதையும் சகல பிரஜைகளுக்கும் சமத்துவ மானதும் இயலுமானவரை கல்வி அளிப்பதையும் பிரகடனப் படுத்தியது.
பொதுக்கல்வி முறையை ஒழுங்குப்படுத்துவதில் பயனுள்ள முயற்சிகளை எடுத்தது. கல்விக்கான மக்கள் கமிசாரகம் அமைக்கப்பட்டது. எழுத்தறிவின்மையை ஒழிப்பது என்ற பிரச்சனையைத் தீர்க்க அதிக முயற்சிகள் தேவைப்பட்டன. ஏனெனில் புரட்சிக்கு முந்திய ருசியாவிலே எழுத்தறிவின்மை மிக மோசமான நிலையில் இருந்தது என்பதை லெனின் பல கட்டுரைகளில் வெளிப்படுத்தியுள்ளார்.
1917ஆம் ஆண்டு திசம்பரில் மக்கள் கமிசார்களின் சபையினால் பிறப்பிக்கப்பட்ட அரசாணை லெனினால் கையெழுத் திடப்பட்டு வெளியிடப்பட்டது. அந்த அரசாணை ருசிய சோவியற்று கூட்டாட்சிச் சோசலிசக் குடியரசு மக்கள் மத்தியில் எழுத்தறிவு இன்மையை ஒழிப்பது பற்றியதாகும். ருசிய மக்கள் அனைவரும் நாட்டின் அரசியல் வாழ்வில் உணர்வுபூர்வமாகப் பங்கேற்றுக் கொள்ள வாய்ப்பளிக்கவும், எட்டுமுதல் ஐம்பது வயது வரையிலான எழுதப்படிக்கத் தெரியாத எல்லா மக்களும் அவர்களது விருப்பம்போல் அவர்களது தாய் மொழியிலோ ருசிய மொழியிலோ எழுதப்படிக்க இயலுமாறு செய்வதுமே அந்த அரசாணையின் நோக்கமாகும்.
இந்நோக்கத்தை நிறைவு, செய்வதற்காக லெனின் கல்விக்கான மக்கள் கமிசாரகம் அமைக்கப்பட்டது. அதன் இணை கூறுகளாக முதியோர் கல்வித் திணைக்களம், கல்வித் திணைக்களங்களிலே அரசியல் கல்விப் பணித்துறைகள் முதலியவற்றை உருவாக்க வழிகாட்டினார். மேலும் கல்லாமையை ஒழிப்பதிலே கம்யூனிÞட் கட்சி, தொழிற்சங்கங்கள், இளைஞர் கழகங்கள் ஆகியவையும் ஈடுபடுத்தப்பட்டன.
முதியோர் மத்தியில் நிலவிய கல்லாமையை ஒழிப்பதற்காக அநேக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1920ஆம் ஆண்டிலே கல்லாமையை ஒழிப்பதற்கான அகில ருசிய விசேட ஆணைக்குழு வொன்று கல்விக்கான மக்கள் கமிசாரத்தில் அமைக்கப்பட்டது.
1923ஆம் ஆண்டிலே கல்லாமை ஒழிக என்னும் பொதுமக்கள் தொண்டர் Þதாபனம் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பிலே பிரபலகட்சித் தலைவர்கள் விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள் தாமாக முன் வந்து சேவையாற்றினர்.
இந்த அரசாணையும், லெனினது முயற்சிக்கும் கல்லாமையை ஒழிப்பது ஒரு தேசியப் பிரச்சனை என்பதையும், பாடசாலை செல்லும் வயதுவந்த எல்லாப் பிள்ளைகளுக்கும் கட்டாயப் பொதுக் கல்வி அளிப்பது அவசியம் என்ற கோட்பாட்டையும் நிலைநிறுத்திய தெனலாம். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த அரசாணையாது பொதுக்கல்வி வர்க்கச் சிறப்புரிமையும் எவ்வகையான வர்க்கப் பாதுகாவலும் அற்ற புதுவகையான பாடசாலை விருத்தி, விஞ்ஞான உலகப் பார்வையின் அடிப்படையில் விருத்தியுற்ற பாடசாலை முறைமை ஆகியவற்றுக்குச் சோசலிச அடித்தளத்தை இட்டதெனக் கூறலாம்.
லெனினது தலைமையில் சோவியற்று அரசு, எல்லா மக்களுக்கும் கல்வி கற்கும் வாய்ப்புக் கிட்டும் வகையில் சகல மக்களினதும் சகல இனங்களினதும் தொழிலாளர் விவசாயி களுடைய பிள்ளைகளுக்குப் பாடசாலையைத் தடையின்றித் திறந்து விட்டது.
தனியார் பாடசாலை அதிகார வர்க்கத்துக்குரிய பாடசாலை, ஏழைகளுக்கான பாடசாலை என்றிருந்தவையெல்லாம் பூட்டப் பட்டன. கல்விக்கட்டணம் ஒழிக்கப்பட்டது இருபாலாருக்குமுரிய கலவன் கல்விமுறை அறிமுகப் படுத்தப்பட்டது. பாடநூல்களும், கற்பித்தற் சாதனங்களும் அரசினால் வழங்கப்பட்டன. அனாதைச் சிறுவர்களுக்கு மேலதிகமாக உடுதுணிகளும், உணவும் வழங்கப் பட்டன. முழுக்கல்வி முறைமையும், அரசினால் பொதுச் சொத்தாக் கப்பட்டு, அது உண்மையான சனநாயக அடிப்படையில் மாற்றி யமைக்கப்பட்டன. அவ்வண்ணம், ருசிய நாட்டிலே கல்வியில் அடிப்படை மாற்றம் ஒரு புரட்சி சமூகப் புரட்சியினால் விளைந்ததெனலாம்.
இந்த மாற்றங்களின் விளைவாக இலட்சக்கணக்கான மக்கள் கற்கத் தொடங்கினார்கள். முன்னாள் அடக்கியொடுக்கப்பட்ட மக்களின் பிள்ளைகளுக்கு இடைநிலைப் பாடசாலைகளும், கல்லூரிகளும் திறந்துவிடப்பட்டன. இந்த ஏற்பாடு மக்கள் மத்தியில் குறுகிய காலத்தில் கல்வியும் பண்பாடும் பரந்து விரிய வாய்ப்பு உண்டாக்கியதெனலாம்.
தொழிலாளர்கள், விவசாயிகள் மத்தியிலே நிலவிய கல்லாமையை அகற்றுவதும் அவர்கள் அறிவொளி பெறுவதும் புதிய சோசலிச சமூக அமைப்பை நிருமாணிப்பதற்கான முன் நிபந்தனைகள் என லெனின் உணர்ந்ததையால் அவ்விடயம் பற்றிப் பல கட்டுரைகளிலும் ஆற்றிய உரைகளிலும் விளக்கியுள்ளார்.
1918ஆம் ஆண்டு நடைபெற்ற கல்வியைப் பற்றிய அகில – ருசியக் காங்கிரÞ 1919இல் நடைபெற்ற சர்வதேச ஆசிரியர்களது இரண்hவது அகில ருசிய காங்கிரÞ 1919 மே மாதத்தில் நிகழ்ந்த முதியோர் கல்வி பற்றிய முதல் அகில – ருசியக் காங்கிரÞ 1919ஆம் ஆண்டு ஜூலையில் நடைபெற்ற கல்வி சோசிலிசப் பண்பாட்டு ஊழியர்களின் அகில – ருசியக் காங்கிரÞ, 1920ஆம் ஆண்டிலே நிகழ்ந்த குபேர்ணியா மக்கள் கல்வித் திணைக்களங்களின் முதியோர் கல்விப் பிரிவுகளது நிருவாகிகளின் மூன்றாவது அனைத்து ருசிய மகாநாடு 1929ஆம் ஆண்டு அக்தோபரில் நடைபெற்ற ருசியாவின் இளங்கம்யூனிÞடுகளின் கழகத்தினதும் மூன்றாவது அனைத்து – ருசிய காங்கிரÞ ஆகியவற்றிலே நிகழ்த்திய உரைகளிலும் கூட்டுறவு குறித்து நமது புரட்சி ஆகிய கட்டுரைகளிலும் கல்லாமை ஒழிப்பதன் அவசியத்தையும், மக்கள் அறிவொளி பெற்று, புதிய வார்ப்பில் புடமிடப்பட்டு, புதிய சோசலிச அமைப்பின் நாயகர்களாக ஆவதன் முக்கியத்துவத்தையும், அதற்கான வழிமுறைகளையும் லெனின் மிக மிக அவதானத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
புதிய சமூகத்தை நிருமாணிப்பவர்களின் ஆளுமையை உருவாக்கி முற்றிலும், புதியதொரு பண்பாட்டுப் பரிமாணங்கள் விருத்தி செய்யும் பாரிய பொருப்பை லெனின் கல்வி முறையிடம் ஒப்படைத்தார் எனலாம். அவரால் வகுப்பப்பட்ட பொதுமக்கள் கல்வியின் மூலாதாரம், உற்பத்தி உழைப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு சீரான தொழிற்நுட்பப் பாடசாலையாகும். இது பொதுக்கல்வியின் முழு அமைப்பையும் உள்ளடக்கியதாக அமைந்தது. வராற்றிலே முன்னெப்பொழுதுமில்லாத ஒவ்வொரு அம்சத்திலும் புதுவகையான பாடசாலைகளை உருவாக்குவதே அவர் நோக்கமாகும்.
அவர் தமது நோக்கத்தை தொழிலாளிவர்க்கப் பண்பாடு குறித்து என்ற கட்டுரையிலே பின்வருமாறு வெளிப்படுத்தியுள்ளார்.
தொழிலாளர் – விவசாயிகளது சோவியற்றுக் குடியரசில் கல்வித்துறைப் பணிகள் யாவும் பொதுவாய் அரசியற் கல்வித் துறையிலும் குறிப்பாகக் கலைத்துறையிலுமான பணிகள் யாவும் பாட்டாளி வர்க்கமானது தனது சர்வாதிகாரத்தின் நோக்கங்களை, அதாவது முதலாளித்துவ வர்க்கத்தை வீழ்த்திடல், வர்க்கங்களை ஒழித்தல், மனிதனை மனிதன் சுரண்டுவதன் எல்லா வடிவங்களையும் ஒழித்தல் என்பனவற்றை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்காக நடத்தி வரும் வர்க்கப் போராட்டத்தின் மனப்பாங்கில் தோய்ந்தனவாக இருத்தல் வேண்டும்.
இந்த நோக்கத்தை அவர் தமது பல உரைகளிலும் கட்டுரைகளிலும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இக்கோட்பாட்டின் அடிப்படையில் புதிய மக்கள் பண்பாட்டை உருவாக்குவதற்கு இளைய பரம்பரையினரை முற்றிலும் புதிய வார்ப்பில் வளர்தெடுக்க வேண்டும் என்பது லெனின் உறுதியான நம்பிக்கையாகும்.
ருசியாவின் இளங்கம்யூனிÞடுகள் கழகத்தினது மூன்றாவது அனைத்து ருசிய காங்கிருசில் ஆற்றிய உரையிலே அடிப்படையிலே புதிய கல்விச் சிறப்பியல்புகள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
பழைய முதலாளித்துவ சமூகத்தை மாற்றியமைப்பதோடு கூடவே கம்யூனிச சமூகத்தை நிறுவப்போகிற தலைமுறையினரின் போதனையும் பயிற்சியும் கல்வியும் பழையனவாக இருக்க முடியாது.
இளைஞர்களுக்கான போதனையின் ஒழுங்கமைப்பு பயிற்சி ஆகியவற்றை அடிப்படையில் மறுவார்ப்புச் செய்தால் மட்டுமே இளந்தலைமுறையினரின் முயற்சிகள் பழைய சமூகம் போல் இல்லாத ஒரு சமூகத்தை அதாவது கம்யூனிச சமூகத்தை உருவாக்குவதில் வெற்றி பெற முடியும் என்ற உண்மையான உறுதியை நம்மால் அளிக்க முடியும் என அவ்வுரையிலே புதிய கல்வி முறைமையின் மூலாதாரப் கோட்பாட்டு நோக்கங்களைச் சுட்டிக் காட்டினார்.
இக்கோட்பாடுகளின் அடிப்படையிலே சோவியற்றுக் கல்வியின் முழுச் செயன் முறையும் வளர்ப்பு முறையும் லெனினால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதெனலாம்.
புதிய பண்பாட்டைத் தீவிரமாக அபிவிருத்தி செய்ய திட்டமிட்ட லெனின் கல்வி முறைமையை அதற்கிணங்க வகுத்ததுடன் கல்வி மூலமும் கல்வியுடன் ஒன்றிணைந்த வகையிலும் புதிய பண்பாட்டு விழுமியங்களையும் பெறுமதிகளையும் உருவாக்குவதற்காக 1917ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே மக்கள் கல்விக் கமிசாரகத்தின் ஓர் இணை கூறாக பாட்டாளி வர்க்கப் பண்பாட்டு கல்வி நிறுவனம் அமைத்தார். அது மக்கள் மத்தியில் கல்வி, கலை இலக்கியப் பண்பாட்டுப் பணிகளைச் செய்து வந்தது.
புதியதொரு மக்கள் பண்பாட்டை விருத்தி செய்வதற்கு மனிதனை மனிதன் சுரண்டும் அடிப்படையிலான பழைய பண்பாடு மக்கள் மத்தியில் நிலைநிறுத்தி விட்ட மனப்பாங்குகளையும், பழக்க வழக்கங்களையும், நடைமுறைகளையும் அகற்றுவது கல்வி மூலம் செய்ய வேண்டிய முதற்பணி என லெனின் கண்டார். அவர் இப்பணியின் அவசியத்தை கல்வித்துறைப் பணியாளர்களும், இப்போராட்டத்திலே முன்னணிப் படையாகிய கம்யூனிÞட் கட்சியும் உழைக்கும் மக்கள் பழைய அமைப்பிலிருந்து மரபு முறையாக நாம் பெற்றுக் கொண்ட பழைய வழிமுறைகளையும், பழக்கப்பட்டுப்போன மாறாத மாமூல் நடைமுறைகளையும் பொதுமக்கள் முற்றுமுழுதாக ஊறிப்போன தனியார் சொத்துரி மைப் பழக்க வழக்கங்களையும் உதறியெறியும் பொருட்டு அவர்கள் அறிவொளி பெற உதவுவதும் அவர்களுக்குப் போதம் அளிப்பதும் தமது அடிப்படைக் கடமையாகுமெனக் கருதுதல் வேண்டும் என்று கூறுவதன் மூலம் உணர்த்தினார்.
இவ்விடத்தில், பொதுமக்களின் சுய பங்கை லெனின் தொழிலாளி வர்க்கம், விவசாயிகளும், உழைக்கும் வெகுசனங்களும், பழைய அறிவியல்சார் பழக்க வழக்கங்களைத் தாமே விட்டொழிந்து கம்யூனிசத்தைக் கட்டியமைக்கும் பணிக்காகத் தாமே மறு கல்வி பெற்றாக வேண்டும். இல்லையேல் புதிய சமூக நிருமாணப் பணியை மேற்கொள்வது முடியாத காரியம். இது மிகவும் முக்கியமான விடயம் என்பதை தமது அனுபவம் அனைத்துமே தெளிவு படுத்துகின்றது என்று அறிவுறுத்துவதன் மூலம் சுட்டிக் காட்டினார்.
பழைய பண்பாடு ஏற்படுத்திய பாதகமான அமிசங்களை அகற்றி புதிய பண்பாட்டை உருவாக்கும் பணியிலே ஏற்பட்ட இடர்பாடுகளை 1919ஆம் ஆண்டிலே முதியோர் கல்வி பற்றிய முதற் காங்கிரசிலே ஆற்றிய உரையில் பின்வரும் கூற்றுகள் மூலம் வெளிப்படுத்தினார்.
ஆயினும் மக்கள் திரளினருக்கு மறுபோதனை அளிப்பது Þதாபனங்கள் அமைத்துக் கற்பிக்கும் பணி, அறிவைப் பரப்புவது, அறியாமை மரபுகளை பத்தாம்பசலிப்போக்கை காட்டுமிராண்டித் தனத்தை எதிர்த்துப் போரிடுவது ஆகிய பணிகள் எவ்வளவு, கடினமானவை என்பதை நாம் உண்மையாகவே உணர்ந்துள்ளோம்.
லெனினது கூற்றிலே பழைய பண்பாட்டின் கேடும் அதன் வலிமையும் வெளிப்படுகின்றன.
லெனின் தமது தலைமையின் கீழ் அமைப்பிலும் உள்ளடக் கத்திலும் இளைய பரம்பரையினரை புதிய அச்சில் வார்த்தெடுக்கும் நோக்கில் புதிய பாடசாலை முறைமையை ஏற்பாடு செய்தனர்.
இந்த யதார்த்த நிலைமையை அவர் இளைஞர்கள் புதுமாதிரியானபாடசாலைகளைக் கட்ட ஒன்று திரள்கிறார்கள். இப்பொழுது உங்கள் முன்பு புதுமாதிரியான பாடசாலை உள்ளது. நீங்கள் விரும்பாததும், வெறுக்கத் தக்கதுமான உங்களுடன் எவ்வித பிணைப்பும் இல்லாததுமான அதிகார வர்க்கப் பாடசாலைகளை இனிமேல் இல்லாத வகையில் நமது வேலையைப் திட்டமிட்டுள் ளோம். நாம் முயற்சித்து வருகின்ற எதிர்கால சமூகமான எல்லோரும் உழைப்பவர்கள் என்றிருக்கும் சமூகம் எந்த வர்க்க வேறுபாடுமில்லாத சமூகம் ஒன்றைக் கட்ட நீண்ட நாட்களாகும். என விளக்கியுள்ளார்.
புதிய சமூகத்துக்குப் பொருத்தமான புதிய தொழிலாளி வர்க்கப் பண்பாட்டை பழைய பண்பாட்டுப் பாரம்பரியங்களை முற்றாக அழித்துவிட்டு உருவாக்க முடியாதென்பதில் லெனின் உறுதியான கோட்பாட்டைக் கொண்ருந்தார். அவர் தமது தெளிவான கருத்தைப் பாட்டாளி வர்க்கப் பாண்பாடு பற்றிய தீர்மானத்தின் நகலில் பின்வருமாறு வரையறை செய்துள்ளார்.
புதிய பாட்டாளி வர்க்கப் பண்பாடு ஒன்றை கண்டுபிடித்து அளிக்கப்பட வேண்டாம். தற்போது உள்ள பண்பாட்டின் சிறந்த முன்மாதிரிப் படைப்புகளும் பாரம்பரியங்களும் விளைவுகளும் வளர்க்கப்படுதலே வேண்டும்.
இந்தக் கோட்பாட்டின் வழிநின்று புதிய பண்பாட்டை விருத்தி செய்வதற்கு புதிய கல்வி முறையினால் வளர்த்தெடுக்கப் படுகின்ற புதிய தலைமுறையினர் என்ன செய்ய வேண்டும் என்பதை இளைஞர் கழங்களின் பணிகள் பற்றிய முக்கியத்துவமான தமது உரையில் அகல் விரிவான தெளிவுடன் எடுத்துக் கூறியுள்ளார்.
நாம் எடுத்துக்காட்டாக தொழிலாளி வர்க்கப் பண்பாடு பற்றி உரையாடும்போது இந்த விடயத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும். மனித குல வளர்ச்சி அனைத்தினாலும், உருவாக்கப்பட்ட பண்பாட்டைச் சரியாகத் தெரிந்து கொள்வதன் மூலமாகவே, அதை மாற்றியமைப்பதன் மூலமாகவே தொழிலாளி வர்க்கப் பண் பாட்டை நிறுவ முடியும் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளாமல் இத்தகைய புரிவு இல்லாமல் நம்மால் இப்பணியை நிறைவேற்ற இயலாது தொழிலாளி வர்க்கப் பண்பாடு என்னும் விடயத்தில் தனித்தேர்ச்சி பெற்றவர்கள். என்று தங்களைக் கூறிக்கொள்ளும் மனிதர்களின் கற்பனை அல்ல இது. இத்தகையவர்கள் சொல்வது. வெறும் வெட்டிப் பேச்சு முதலாளித்துவ சமூகம் நிலப்பிரபுத்துவ சமூகம் அதிகார வர்க்கச் சமூகம் ஆகியவற்றின் ஒடுக்க முறையில் மனித இனம் திரட்டிச் சேர்ந்த அறிவியல்களின் சேமிப்பானது விதிமுறைக்கு ஒத்த வளர்ச்சியாக விளங்க வேண்டும் தொழிலாளி வர்க்கப் பண்பாடு.
இவ்வாறு கூறும் லெனின் புதிய தலைமுறையினரின் கற்பித்தல், பயற்சி கல்வி ஆகியவை பழைய சமூகம் விட்டுச் சென்றிருக்கின்ற மெய் விபரங்களிலிருந்தே தொடங்க வேண்டும். பழைய சமூகத்திலிருந்து நமக்குக் கிடைத்துள்ள அறிவு, நிறுவனங்கள் அலுவலகங்கள் ஆகியவற்றின் தொகுப்பிலிருந்தே மனித சக்திகளதும், சாதனங்களினதும் அந்தச் சேமிப்பிலிருந்தே தொடங்க வேண்டும் என தெளிவுபடுத்துகிறார்.
இந்நோக்கு நிலையில் புதிய தலைமுறையினருக்குப் புதிய பாடசாலை முறைமை மூலம் அளிக்கப்படுகின்ற கல்வி உள்ளடக்கத்திலும் புதியதாக இருத்தல் வேண்டும். பழைய பாடசாலை முறைமையிலே ஆதிக்கம் பெற்றிருந்த பழைய பாடப்பயிற்சி, நெட்டுருப் பண்ணல், பயனற்ற, உயிரற்ற, அறிவியல் திரள்கள் ஆகியவற்றின் இடத்திலே மனித அறிவியல்களின் தொகுப்பு அனைத்தையும் எடுத்துக் கொள்ளும் திறனை நாம் வைத்தல் வேண்டும் என வலியுறுத்திய லெனின் கல்வி நடைமுறையில் அதை நிறைவேற்றப் பெருமுயற்சி செய்தார்.
விவசாயிகளின் பண்பாட்டுத் தரத்தை உயர்த்த வேண்டுமென்பதில் லெனின் மிகவும் அக்கறை செலுத்தினார். இதற்காக அறிவை வழங்கும் எல்லா வேலைகளையும் பாடசாலைக் கல்வி முதலியவற்றை விவசாயிகளது நேரடியானதும் உடனடி யானதுமான தேவையுடன் நெருக்கமாக இணைக்கப்பட வேண்டும என அவர் விரும்பினார்.
குபேர்னியா மக்கள் கல்வித் திணைக்களங்களின் முதியோர் கல்விக் கிளைகளது நிருவாகிகளின் மூன்றாவது அனைத்து ருசிய மாநாட்டில் அவர் ஆற்றிய சொற்பொழிவின் பெரும்பகுதி விவசாயிகளின் பண்பாட்டுத் தரத்தை உயர்த்துவது பற்றியதாக அமைந்திருந்தது. அச்சொற்பொழிவின் இறுதிக் கூற்றிலே விவசாயிகளின் பண்பாட்டை எவ்வாறு உயர்த்தலாமெனக் கூறுகிறார். அவ்விறுதிக் கூறு பின்வருவதாகும்.
பிரசாரம், கிளர்ச்சி, பாடசாலைக் கல்வி, முதியோர் கல்வி ஆகிய செயற்பாடுகளில் இந்தப் பிரச்சனை சோவியற்று ஆட்சிக்குட்பட்ட மக்களின் தகுதிக்கேற்ற வினைத்திறன் வாய்ந்த முறையோடும், மிகுந்த நிதானத்தோடும் முன் வைப்போம். இரண்டு ஆண்டு காலத்திலே ஓரளவு அனுபவ அறிவு பெற்ற சோவியற்று ஆட்சி அதிகாரத்திலுள்ள மக்கள், எல்லாத் தொழில்களையும் புனர் நிர்மாணிப்பதற்கான நடைமுறை சாத்தியமான, வினைத்திறனுள்ள தெளிவான திட்டமொன்றுடன் விவசாயிகளிடம் செல்வார்கள். தற்போதைய கல்வித்தரத்தைக் கொண்டு விவசாயியும், தொழிலாளியும் இந்தப் பணியை நிறைவேற்ற முடியாதென்றும், அவர்கள் அசுத்தம் வறுமை, நச்சுக் காய்ச்சல் முதலிய நோய்கள் ஆகியவற்றிலிருந்து தப்ப முடியாது என்றும் விளக்குவார்கள். இந்த நடைமுறைப்பணி பண்பாட்டு, கல்வி அபிவிருத்தியுடன் தெளிவாக இணைக்கப்பட்டு மையமான அம்சமாக விளங்க வேண்டும். அதைச் சுற்றி நாம் நமது கட்சியின் பிரசாரம் ஏனைய செயற்பாடுகள் அனைத்தையும் நமது பாடசாலையைப் கல்வி நிறுவனங்களுக்குப் புறம்பான பேதனை ஆகியவற்றையும் இணைத்தல் வேண்டும். மக்கள் திரளணியினரின் மிக அவசரமான அவசியமான நலன்களின் மேல் ஒரு சரியான பிடிப்பை உண்டாக்க இந்தப் பணி உதவும். மேலும் இது பண்பாடு, அறிவு ஆகியவற்றிலே ஏற்பட்ட பொதுவான அபிவிருத்தையை முக்கியமான பொருளாதாரத் தேவைகளுடன் பெருமளவுக்கு இணைப்பதன் விளைவாக கல்வி பெறுவதற்கான உழைக்கும் மக்களின் கோரிக்கையை நூறு மடங்கு உயர்த்துவோம். இரண்டு ஆண்டுகளில் மிகக் கடினமான இராணுவப் பிரச்சனையைத் தீர்த்து விட்டோமானால், இதைவிட அதிக இடர்பாடான பண்பாட்டு, கல்வி சார் பிரச்சனைகளை ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் தீர்த்து விடுவோம் என்பது பரம நிச்சயம் இதுவே நான் உங்களிடம் வெளியிட விரும்பிய கருத்து.
விவசாயிகளின் பண்பாட்டுத் தரத்தை உயர்த்துவதிலே அவர்களுக்கு அளிக்கப்படுகின்ற கல்வியின் பங்கை லெனின் இச்சொற்பொழிவிலே நுணுக்கமாக வெளிப்படுத்தியுள்ளதை எவரும் உணரலாம்.
மக்களது கல்வியையும், கல்வி மூலம் அவர்களது பண் பாட்டையும் விருத்தி செய்வதிலே நூல்கள் மிகவும் எளிதானதும், தாக்கமானதுமான கருவிகள் என லெனின் கருதினார்.
பொதுவாக இளைஞர்களதும் சிறப்பாகக் கம்யூனிÞட் இளைஞர்களதும், வேறு எல்லாவித இளைஞர் நிறுவனங்களினதும் பணிகள் புதிய சோசலிச சமூகத்தை உருவாக்கும் நோக்கம் கொண்டவையாகும். லெனின் இந்தப் பணிகளை ஒரே சொல்லில் வெளியிட முடியும் என்று நான் கூறிவிட வேண்டும் கற்பது என்பது அப்பணி எனக் கூறினார்.
“கற்றலின் முக்கியத்துவம் அற்ப சொற்பமாயினும் சிறிதே நன்று” என்ற கட்டுரையில் வெகு ஆணித்தரமாகக் குறிப்பிடுகின்றார். அவர் அக்கட்டுரையிலே.
இங்கே அறிவின் பற்றாக்குறையை ஆர்வத்தாலும் அவசரத்தாலும் பிறவற்றாலும் ஈடுசெய்து கொள்ளும் (அல்லது ஈடுசெய்து கொண்ட விட்டோமெனக் கற்பனை செய்து கொள்ளும்) போக்கு நம்மிடம் மிகுதியாகவே இருப்பதை நாம் மறக்கலாகாது.
நமது அரசப் பொறியமைவைப் புத்தமைக்கும் பொருட்டு எப்பாடுபட்டேனும் நாம் மேற்கொண்டதாக வேண்டிய பணி என்னவெனில் முதலாவதாகக் கற்றறிதல். இரண்டாவதாகக் கற்றறிதல், மூன்றாவதாகக் கற்றறிதல், கற்றபின்னர் அந்த விஞ்ஞான அறிவு பயனில்லாப் பண்டமாகவோ, ஆடம்பரமான வாய்ப்பேச்சாகவோ அமைந்து விடாதபடி (அடிக்கடி நம்மத்தியில் இப்படி நேர்ந்து விடுவதை மறைக்காமல் ஒப்பு கொண்டதாக வேண்டும்) விஞ்ஞான அறிவு மெய்யாகவே நமது ஊனும் குருதியுமாகி விடுமாறு முழுமையாகவும், மெய்யாகவும் நமது அன்றாட வாழ்க்கையின் உள்ளடக்கக் கூறாகிவிடுமாறு உறுதி செய்து கொள்ளுதல் வேண்டும் எனக் குறிப்பிடுகிறார்.
இளமைக்காலம் முதல் அமரத்துவம் அடையும் வரை இடையறாது நூல்களைப் படித்தவரும், தம் வாழ்நாளில் நூல்களை மிக நேசித்தவரும், அந்நூல்களைக் கற்றதன் மூலம் ஆழ்ந்த ஞானத்தைப் பெற்றவரும், அந்த ஞானத்தைப் பயன்படுத்திப் புதியதொரு சமூகப் புரட்சியை ஏற்படுத்தியவருமான லெனின் மக்களுக்கு இவ்வாறு கூறுவதில் ஆச்சரியமில்லை.
ஒரு மனிதன் தனது ஆற்றலைப் படிக்கவும் எழுதவும் பயன்படுத்தல் வேண்டும் அவன் படிப்பதற்கு ஏதவாது இருத்தல் வேண்டு என்று கூறிய அவர் சோவியற்று ருசியாவின் நூல் வெளியீட்டை முற்றிலும் புனர் நிருமாணம் செய்வதற்கான திட்டத்தை முன்வைத்தார். உலக வரலாற்றிலே முதன்முதலாக அரசு பொதுமக்களின் அறிவியல் பண்பாட்டுச் சர்வாம்ச விருத்திக்காக எல்லா வகையான நூல்களையும் வழங்கும் பொறுப்பை எடுத்தது. 1920களின் ஆரம்பத்திலே மக்கள் கல்வி கமிசாரகம் நூல்களை வெளியிட்டு அவற்றை மக்களுக்கு வழங்கி வந்தது. லெனின் அப்பணி பற்றிக் குறிப்பிடுகையிலே
இன்றைய எமது வறிய நிலைமையிலும், ஓராண்டிலே 50,000 நூல்கள் வாசகசாலைகள் ஒவ்வொன்றின் மூலமும், செய்தித்தாள் பிரதிகள் இரண்டையும் அவசியமான பாடநூல்களையும், உலக இலக்கியங்களையும் விஞ்ஞானவியல், எந்திரவியல் பற்றிய நூல்களையும் விநியோகிப்பது எனக் கூறினார்.
லெனின் மக்களின் பண்பாட்டை விருத்தி செய்வதற்காக முறைசார் கல்வி முறையைத் திட்டமிட்டுப் பயன்படுத்தப் பெருமுயற்சி செய்தார். ஆத்மீக பண்பாட்டிலே செல்வாக்குச் செலுத்துகின்ற முறைசாராக் கல்விக் கூறுகள் நூல்நிலையங்கள், வாசகசாலைகள், பண்பாட்டுக் கல்வி நிறுவனங்கள், வானொலி, பத்திரிகை, கலை இலக்கியங்கள் முதலிய அனைத்தையும் ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தும் முயற்சிகளையும் எடுத்தார்.
ஒரு நாட்டிலே அரசியல் சகலவற்றையும் தீர்மானிக்கிறது. மக்கள் அரசியல் பற்றிய அறிவைப் பெறாவிட்டால், அரசியல் ஆய்வு மூலம் விழிப்புணர்ச்சி அடையாவிட்டால், பொதுப்பணி ஆற்றவும், சமூகத் தீங்குகளை அகற்றவும் முனைப்பாகச் செயற்பட மாட்டார்கள் என்பதை நன்றாக உணர்ந்த லெனின் மக்களுக்கு அரசியற் கல்வி அளிப்பதற்காக சோவியற்றுக் குடியரசு எங்கும் அரசியல் கல்வித் திணைக் களங்களை நிறுவினார். அரசியல் கல்வித் திணைக்களங்களின் இரண்டாவது அகில ருசிய காங்கிரÞ அறிக்கையில்.
அரசியல் கல்வி என்றால், நடைமுறைப் பயன்கள் என்று பொருளாகும். இந்தப் பயன்களை எவ்வாறு அடைவது என்று மக்களுக்குக் கொடுப்பது என்று பொருளாகும். மற்றவர்கள் முன்னுதாரணமாக இருப்பது என்று பொருளாகும் என விளக்கிய லெனின் ‘சிவப்பு நாடா பணியையும் கையூட்டினையும் எதிர்த்துப் போராட நமக்குக் கற்றுக் கொடுக்ககூடிய பண்பாடு நமக்குத் தேவை. அது ஒரு புரையோடிய புண், இராணுவ வெற்றிகளோ அரசியற் சீர்த்திருத்தங்களோ அதைக் குணப்படுத்த முடியாது. அதன் மெய்யான இயல்பு காரணமாக அதை இராணுவ வெற்றிகளாலும், அரசியல் சீர்த்திருத்தங்களாலும் குணப்படுத்த முடியாது. ஆனால் பண்பாட்டு மட்டத்தை உயர்த்துவதால், குணப்படுத்த முடியும். அது அரசியல் திணைக்களங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டிய பணியாகும்.
பண்பாட்டு மட்டத்தை உயர்த்தும் பணி நம்மை எதிர்நோக்கியுள்ள மிக அவசரமான பணிகளில் ஒன்றாகும் அரசியற் கல்வித் திணைக்களங்கள் கட்டாயம் செய்ய வேண்டிய பணி அது என அவற்றின் பணிகளையும் தெளிவுபடுத்தினார்.
மக்களின் பண்பாட்டை உருவாக்குவதில் ஒரு நாட்டில் அரசியல் கல்விக்கு இத்துணை முக்கியத்துவம் அளித்தவர் லெனின் அவர்களே எனத் துணிந்து கூறலாம்.
1917ஆம் ஆண்டு அக்தோபர் சோசலிசப் புரட்சிக்குப் பின்னர் உடனடியாக நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் பண்பாடு, கல்வி ஆகியவைகளுக்காக கழகங்களும், இல்லங்களும், நூலகங்களும், கிராமிய வாசகசாலைகளும் திறக்கப்பட்டன. அவை அரசியற் கல்வி, பண்பாட்டுப் பணிகள் கல்விப் பணிகள் ஆகியவற்றின் முக்கிய நிலையங்களாக விளங்கின. இவை யாவும் மக்களின் முனைப்பால் நிறுவப்பட்டன.
1918-20 ஆண்டுகளுக்கிடைப்பட்ட காலப்பகுதியில் மாÞகோ நகரில் மட்டும் தொழிலாளர் கழகங்களின் எண்ணிக்கை ஆறு மடங்காக அதிகரித்தன. மத்திய ஆசியாவில் இயங்கி வந்த நூலகங்கள், கிராமிய வாசகசாலைகளை ஆராய்ந்த லெனின் மக்கள் கல்விக் கமிசாரகத்தின் பணிகள் என்ற கட்டுரையில் தொழிலாளர் விவசாயிகள் மத்தியில் அறிவுத் தாகம் வியக்கும்படியாக இருப்பதையும், அவர்கள் கல்வியைப் பெறவும், நூல்நிலையங்களை அமைக்கவும் பெரும் ஆர்வம் கொண்டிருக் கிறதையும், அது உண்மையில் மக்கள் இயக்கமாயுள்ளதையும் காட்டுகின்றன என்று குறிப்பிட்டார்.
பண்பாட்டுப் புரட்சியிலே முன்னணிப் படையாக விளங்கிய தொழிலாளி வர்க்கம் புதிய மக்கள் பண்பாட்டை கிராமப்புறங் களில் விவசாயிகள் மத்தியில் விருத்தியுறச் செய்பவர்களையும் விளங்கினார்கள். 1923 ஆம் ஆண்டு லெனின் முதலாளித்துவத்திலே நகரத்தின் அரசியல், பொருளாதார ஒழுக்க நெறி, உடலியல் முதலியவை சார்ந்த ஊழல் கிராமப் புறங்களில் புகுத்தப்பட்டது. நம்மைப் பொறுத்தவரையில் இவற்றுக்கு நேர்மாறானவற்றை நகரங்கள் கிராமப்புறத்தில் புகுத்துவதற்குத் தாமாகவே முற்பட்டிருக்கின்றன எனத் தமது அவதானிப்பை வெளியிட்டார்.
வானொலி முதலிய ஒலிபரப்புச் சாதனங்கள் கலையையும், பண்பாட்டையும் மேம்படுத்துவதில் தாக்கமான கருவிகள் என்பதை உணர்ந்த லெனின் அவற்றைப் பண்பாட்டுப் புரட்சிப் பணிகளுக் காகப் பயன்படுத்தினார். சோவியற்று ஒலிபரப்பு முறைமையின் வரலாறு லெனின் பெயருடன் பிரிக்க முடியாதவாறு இணைக்கப் பட்டுள்ளதெனலாம்.
1920ஆம் ஆண்டு பெப்ரவரி 5ஆம் திகதி லெனின் வானொலியைக் கண்டுபிடித்தவர்களுள் ஒருவரான பொஞ்ச்-புறுயேவிச் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் நீங்கள் செய்து கொண்டிருக்கும் பாரிய வேலையான வானொலிக் கண்டிபிடிப்பு களுக்காக உங்களுக்கு எனது ஆழ்ந்த நன்றியையும் ஆதரவையும் தெரிவிப்பதற்கு இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துகிறேன். நீங்கள் செயற்பட வைத்துள்ள தாளில்லாததும், தூரங்கள் அற்றதுமான செய்தித்தாள் மகத்தான சாதனையாகும். இப்பணிக்காகவும் இதுபோன்ற பணிக்காகவும் எந்தவகையில் சாத்தியமானதுமான ஒவ்வொரு வழியிலும் உங்களுக்கு நான் துணை புரிவேன் என எழுதியதன் மூலம் மக்கள் சார்பான அவரது அபிலாசைகள் வெளிப்படுவதை உணரலாம்.
1918ஆம் ஆண்டிலே மாÞகோவிலிருந்து ஒலிபரப்பாகின்ற வானொலிச் செய்திகளை அநேக நகரங்களிலும், பெரிய புகைரத நிலையங்களிலும் வாசிக்கக்கூடியதாக இருந்தது. 1921ஆம் ஆண்டிலே வானொலி ஒலிபெருக்கிகள் ஆறு மாÞகோ சதுக்கங்களிலே நிறுவப்பட்டன. முதலாவது ஒலிபரப்பு வலையமைப்பு நடைமுறைக்கு வந்தது. செய்தித் தாள்களிலிருந்து முக்கிய குறிப்புரைகள், விரிவுரைகள் அறிக்கைகள் தினமும் ஒலிபரப்பப்பட்டன. 1922ஆம் ஆண்டு ஆகÞடிலே மாÞகோ வானொலி நிலையம் அக்காலத்தில் மிகவும் சக்தி வாய்ந்த நிலையமாக விளங்கியது. அது பரீட்சார்த்த ஒலிபரப்புகளை ஆரம்பித்தது.
லெனினால் உருவாக்கப்பட்ட ஒலிபரப்பு முறைமை தீவிரமாகப் பண்பாட்டுப் புரட்சியில் பணியாற்றியது. புதிய மனிதனின் மனப்பாங்குகளை உருவாக்குவதிலும், பழையபாணி நடைமுறைகளையும் பழைய வழக்கங்களையும் சோவியற்று மக்களின் வாழ்விலும், உள்ளங்களிலும் செல்வாக்குச் செலுத்திய முதலாளித்துவக் கருத்தியலை ஒழிப்பதிலும் பெரும் பணியாற்றியது எனலாம்.
மக்கள் கல்லாமையிலும், அறைகுறைக் கல்லாமையிலுமுள்ள நிலைமையிலே சினிமா மூலம் நிறைவேற்றத்தக்க கல்விச் சாத்தியக் கூறுகள் பற்றிச் சிந்தித்ததுடன் அதன் தொடர் விருத்தியை, ஏனைய கலைகளில் போல் கல்வித்துறைகளில் மட்டுமின்றி கவின் கலைப்பரப்பிலும் – பண்பாட்டுப் புரட்சியுடன் இணைத்தார்.
சோசலிசப் புரட்சி நடைபெற்ற பின்னர் சினிமாத்துறையிலே பெரும் குழப்பங்களும், ஒழுங்கீனங்களும் நிலவின. இவற்றைச் சீர்செய்வதற்காக 1919ஆம் ஆண்டு ஆகÞத்து 25 ஆம் திகதி ஒரு வரை ஆணை விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. எதிர்கால சினிமாவின் வளர்ச்சிக்கு, உயிர்நாடியான இந்த ஆணைக்கு லெனின் கையெழுத்திட்டார் என்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டியதாகும். லெனின் அவசரமான அரச பணிகளுக்கு மத்தியிலும் சினிமாவைப் பற்றிச் சிந்திக்க மறக்கவில்லை என்பது வியப்புக்குரிய விடயமாகும். சினிமா மக்களைக் கவரும் மாபெரும் கலை என்ற வகையில் மக்களின் பண்பாட்டை மேன்னிலை அடையச் செய்வதற்கான பணிகளை அதன்மூலம் நிறைவேற்ற லாமென எதிர்பார்த்தார். நாட்டிலே உள்ள சினிமாப்படங்களின் நிலை பற்றி அடிப்படி கல்விக்கானமக்கள் கமிசாரக அதிகாரியான ஏ.வி. லுனாசார்Þக்கி என்பவருடன் உரையாடுவார். அவ்வாறு உரையாடும்போது சோவியற்றுக் குடியரசிலே கலைகளுள் சினிமாக்கலையே மிகவும் முக்கியத்துவமான கலையாகும் எனக் கூறியுள்ளார்.
மக்களின் அக உலகிலும் உணர்வுகளிலும் சினிமா சர்வாம்சத் தாக்கத்தை ஏற்படுத்துவதாலும், கட்புல செவிப்புல சாதனமாக ஒரே நேரத்தில் பயன்படுத்தனாலும், அது சமூக அபிவிருத்தியிலும் அறிவையும் மனப்பாங்குகளையும், விருத்தி செய்வதிலும், ஆத்மீகப் பண்பாட்டை உருவாக்குவதிலும் ஒரு முக்கியமான சாதனமாக விளங்குகின்றது.
இச்சோவியற்றுக் குடியரசிலே லெனினது நெறிப்படுத்துவதின் கீழ் புனர் நிருமாணம் செய்யப்பட்ட சினிமா பெருவளர்ச்சியுற்று வந்துள்ளது. முற்றிலும், புதுவகையான சினிமா அரங்கு அதவாது சிறுவர் சினிமா அரங்கின் பிறப்பிடமாக சோவியற்றுக் குடியரசே விளங்குவதன் மூலம் லெனினது வழிகாட்டலின் மகத்துவத்தை உணரக்கூடியதாக உள்ளது. இந்த சிறுவர் சினிமா அரங்குகள் இளந்தலைமுறையினருக்கு கலையை அறிமுகப்படுத்துகின்றது. அவை அவர்கள் வாழ்வில் தமது இடத்தை அறிந்து கொள்ளவும் மனிதனின் ஆத்மீக அழகை உணரும். தீயவைகள் எத்தகைய வடிவில் இருந்தாலும் அவற்றை அறிந்து நிராகரிக்கவும் துணைபுரிகின்றன.
1917ஆம் ஆண்டு அக்தோபர் புரட்சிக்கு முன்னரும் எழுத்தாளர், கவிஞர், பலதுறைக் கலைஞர் ஆகியோர் தமது வாசகர், கேட்போர், பார்வையாளர், இரசிகர் எண்ணிக்கையை அதிகரிக்க உண்மையாக விரும்பினார்கள். அவர்களுக்காக ஆக்கங்களை ஆக்கி அளிக்க ஆவலாய் இருந்தனர். ஆனால் சார் அரசு மக்களின் அழகியற்கலை விருத்திக்கு எவ்வித அக்கறையும் காட்டவில்லை. ருசிய பேரரசின் சட்டக் கோவையில் மக்களின் கலை இலக்கிய விருத்திக்கும், அவற்றை மக்களுக்கு வழங்குவதற்கும் ஒரு ஏற்பாடும் இடம்பெறவில்லை. பேரரசில் ருசிய இனமல்லாத இனங்களைச் சேர்ந்தவர்கள் எத்தகைய இலக்கியப் படைப்புகளையும் வெளியிட முடியாதிருந்தது. ருசியப் பேரரசிலே பெரும்பான்மை மக்கள் தமது படைப்புகளை ஆக்குவதற்குச் சந்தர்ப்பங்கள் அளிக்கப்படவில்லை. அதிகார வர்க்கம் ஒவ்வொரு தேசிய மக்களும் தமது சொந்தப் பண்பாட்டை விருத்தி செய்யும் இயற்கையான ஆர்வத்தை பலாத்காரமாக நசுக்கியொடுக்கியது.
தொழிலாளர் வர்க்கம் ருசியாவிலே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் ஆரம்பிக்கப்பட்ட பண்பாட்டுப் புரட்சி, பண்பாட்டு அறிவியல் பெறுமதிகளை மக்கள் சொத்தாக மாற்றும் நோக்கத்தைக் கொண்டிருந்தது. 1918ஆம் ஆண்டு சனவரியில் நடைபெற்ற சோவியற்றுக்களின் அகில-ருசிய காங்கிரசில் சொற்பொழிவாற்றிய லெனின் பழங்காலத்தில் தொழில்நுட்பம், பண்பாடு ஆகியவற்றின் பயன்கள் ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்குமாறும், ஏனையோருக்கு அடிப்படைத் தேவையான கல்வியும் மேம்பாடும் கிடைக்காதவாறும் செய்யவே மானுட மேதைமையும், மனித மூளையும் பயன்படுத்தப்பட்டன. இப்பொழுதிலிருந்து விஞ்ஞான அற்புதங்களும், பண்பாட்டுச் சாதனங்களும் தேசம் முழுவதற்கும் உரித்தானவையாகும். இனிமேல் மனித மூளையும், மனித மேதைமையும் மக்களை ஒடுக்கவும், சுரண்டவும் என்றுமே பயன்படுத்தப்படமாட்டா எனக் கூறியதற்கிணங்க அறிவியல், பண்பாட்டு அமிசங்களை முற்று முழுதாக மாற்றியமைத்தார்.
பண்பாட்டுப் புரட்சியின் மக்கள் சார் இயல்புகளை முறையாகப் புரிந்து கொள்வதற்கு கலை இலக்கியங்களிலே படைப்பாற்றல் சுதந்திரம் பற்றிய லெனினது போதனை அவசிய மானது. ஆக்கப் படைப்பாளியின் சொந்தப் படைப்பாற்றல் அபிலாசைகளும், மக்களின் அரசியல், சமூக, பொதுப் பண்பாட்டு இலக்குகளும், இயற்கையாகவும், தன்முனைப்பாகவும் ஒன்றிணைவதிலே வெளிப்படுகின்றது எனலாம்.
இந்த விடயம் பற்றி லெனினது நிலைப்பாடு கட்சி அமைப்பும் கட்சி இலக்கியமும் என்ற அவரது கட்டுரையில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இலாபம் சம்பாதிக்கின்ற, வர்த்தக மயப்படுத்திய முதலாளித்துவ அச்சியந்திரம், முதலாளித்துவ இலக்கியப் பிரசாரம், தனிமனிதவாதம், அதிகார வர்க்கம் அராஜகவாதம், இலாப முனைப்பு ஆகியவற்றுக்கு எதிர்முரணாக சோசலிச தொழிலாளி வர்க்கமானது கட்சி இலக்கியக் கோட்பாடுகளை முன்வைக்க வேண்டும். இயலுமானவரை இக்கோட்பாட்டைப் பூரணமாகவும், நிறைவாகவும் நடை முறைப்படுத்த வேண்டும் என அக்கட்டுரையிலே குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கோட்பாட்டின் அடிப்படையிலே ஆக்க வேலையில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு எழுத்தாளனும், கலைஞனும், எப்பொழுதும் தனது கண்களுக்கு முன்னால் தொழிலாளர்களையும் விவசாயிகளையும் வைத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறினார். அவர்கள் தொழிலாளர் விவசாயிகளின் எண்ணங்கள், தேவைகளியிலிருந்து விலகிவிடக்கூடாது. அவர்கள் அந்த மக்களுக்காக அவர்கள் பெயரிலே பணியாற்றுதல் வேண்டும் என்பது அவரது வேண்டுகோளாகும்.
முதலாளித்துவ சமூகத்திலே மக்களை அவர்களது பண்பாட்டிலிருந்து பிரித்து வைத்த இடைவெளிகளுக்குப் பாலமிடவும், பண்பாட்டுக் களஞ்சியங்களை மக்கள் சொத்தாக மாற்றவும், இளம் சோவியற்று ருசியா, மில்லியன் கணக்கான மக்களின் கல்வித் தரத்தையும் பண்பாட்டு மட்டத்தையும் மேன்மையுறச் செய்வதற்கு பாரிய முயற்சிகளைச் செய்ய வேண்டியிருந்தது. மக்களின் பண்பாட்டு மட்டத்தை உயர்த்துவதற்கான பிரதான வழிமுறைகள் பொதுமக்கள் கல்வியிலே ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சோவியற்று ருசியாவுக்கு வருகை தந்த எழுத்தாளர்களும், கலைஞர்களும் மக்களின் பண்பாடு வியத்தகு வகையில் விருத்தியடைந்துள்ளதை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். ஹெபர்ட் வெல்Þ என்பவர் நிழல்களின் ருசியா என்ற தமது நூலில் ஒளிவு மறைவில்லாத ஆச்சரியத்துடன் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
பிணக்குகளும் குளிரும், பஞ்சமும் பரிதாபத்துக்குரிய தன்மைகளும் கொண்ட இந்த அன்னிய ருசியாவிலே இன்று உண்மையில் வளமான இங்கிலாந்திலும், செல்வம் மிக்க அமெரிக்காவிலும், உள்ளடக்க முடியாத ஒரு இலக்கியப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. பட்டினியால் வாடுகின்ற ருசியாவிலே நூற்றுக்கணக்கான மக்கள் மொழி பெயர்ப்பு வேலைகளிலே ஈடுபட்டுள்ளார்கள். அவர்கள் மொழி பெயர்க்கப் படும் நூல்கள் ஒழுங்கமைக்கப்பட்டு அச்சிடப்படுகின்றன. இந்தப் பணி தற்போது ஏனைய நாட்டு மக்கள் கொண்டிராத அளவுக்கு உலக சிந்தனைகளின் அறிவைப் புதிய ருசியாவுக்கு வழங்குகின்ற தெனலாம்.
லெனினது தலைமையின் கீழ் கல்வி மூலம் உருவாக்கப்பட்ட மக்கள் பண்பாட்டின் விளைவுகள் புதிய மனிதனை வார்த் தெடுப்பதில் பல்வேறு வகையிலும் வெளிப்பட்டதெனக் கூறலாம். சுரண்டல், சமூகச் சமமின்மை, வர்க்க முரண்பாடுகள் ஆகியவை மக்களை அமைதியான முறையில் முன்னேறுவதற்கு விடவில்லை. ஒரு மனிதனின் சர்வாம்ச விருத்தியானது. மனித செயற்பாட்டின் ஒவ்வொரு துறையின் விருத்தியும் கம்யூனிச சமூகத்தின் விஞ்ஞான, தொழில்நுட்ப, சமூகப் பண்பாட்டு முன்னேற்றத்தின் மூலம் ஏற்படும், சமூக உறவுகளுமாகுமென மார்க்Þ, ஏங்கல்Þ, லெனின் ஆகியோர் அடிக்கடி வலியுறுத்திக் கூறினர்.
ஒவ்வொரு மனிதனதும் சர்வாம்ச விருத்தியானது மிகவும் முக்கியத்துவமான சமூகப் பணியாகும். இது சிறப்புரிமை பெற்ற சிலபேருடையதாகவன்றி, சமூகத்தில் சகல உறுப்பினர்களதும் விருத்தி பற்றிய வியடமாகும். மேலும் அத்தகைய விருத்தியானது பல்வேறு தொழிற்பாடுகளின் எளிய இணைப்பாகக் கருதக்கூடாது. ஆனால் உழைப்பு, சமூக அரசியற் செயற்பாடு, பண்பாடு ஆகியவற்றிலே ஒவ்வொரு மனிதனதும் படைப்பாற்றலை உறுதிப்படுத்துவதாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
லெனின் தமது வாழ்வையும், சிந்தனையையும் தமது இலட்சியத்துக்காக அர்ப்பணித்த நேர்மையான ஒரு உத்தம மனிதன் என்பதை யாவரும் ஏற்றுக் கொள்வர். அவர் தாம் விசுவாசித்த மாக்ஸிய சித்தாந்த அடிப்படையிலும், இயக்கவியல் பொருள் முதல்வாத உலகப்பார்வை மூலமும், ருசியாவின் அரசியல், பொருளாதாரா சமூக, கல்வி, பண்பாட்டு இயல்புகளையும், செயற்பாடுகளையும் உற்று நோக்கி சமூக இயக்கத்தின் வரலாற்று விதிகளைக் கற்றறிந்து கல்வியும் பண்பாடும் பற்றியும் கல்விக்கும் பண்பாட்டுக்கும் உள்ள இடைத்தாக்கம் பற்றியும் திடமாகவும், ஒளிவுமறைவு இன்றியும் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளார் எனத் துணிந்து கூறலாம்.
Leave a Reply