மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


சிபிஐ(எம்) உருவான பின்…


1964ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் 7வது மாநாடு கல்கத்தாவில் நடத்தப்பட்டது. அதில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் புரட்சிகர தன்மைகளை காத்து தொடர சி.பி.ஐ.(எம்) என்ற பெயரில் இயங்குவது என தீர்மானித்த விவரங்களை, பின்னணிகளை முந்திய கட்டுரைகளில் விளக்கியிருக்கிறோம். மாநாடு நடப்பதற்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே மேற்குவங்கக் கட்சியின் மூத்த, அனுபவம் மிக்க தலைவர்கள் சிலர் திடீரென கைது செய்யப்பட்டனர். மாநாட்டை முடமாக்குவதற்கான பெரும் முயற்சி ஆளும் தரப்பில் மேற்கொள்ளப்பட்டது. இவைகளை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.

அன்று இந்த எதிர்பாராத திடீர் தாக்குதலை கண்டித்து அடக்குமுறை மிரட்டலையும்  தாண்டி கண்டன இயக்கங்கள் நாடு முழுவதும் நடைபெற்றன. வெளியில் பணியாற்றிக் கொண்டிருந்த மூத்த தலைவர் ஜோதிபாசு அன்றைய முதலமைச்சர் பி.சி. ராய் அவர்களை நேரில் சந்தித்து, கண்டனத்தை தெரிவித்தார். இத்தாக்குதலுக்கான காரணத்தை பற்றி அழுத்தமாகக் கேள்வியெழுப்பினார். அதற்கு, “பல காரணங்கள் இருக்கின்றன” என்று மட்டும் பொதுப்படையான பதிலை அளித்தார் ராய்.

ஆயினும், தொடர்ச்சியாக ஒரு பிரச்சார இயக்கத்தை நமது கட்சிக்கு எதிராக ஆளும் கட்சியினரும், ஆளும் வர்க்கமும், பத்திரிகையாளர்களும் தொடுத்தனர். முக்கியமான இரண்டு பொய்களை இப்பிரச்சார இயக்கத்தில் வலியுறுத்தினர்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு கொண்டு, சீன ஏஜெண்டுகளாக தேசத்துரோகப் பணியாற்றக்கூடியவர்கள்,  இந்தியாவில் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை  நடத்துவதற்கு இவர்கள் இரகசியமாகத் தயாராகிக் கொண்டிருப்பதாக பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டனர். அந்நிய நாட்டு சக்திகளின் ஏஜெண்டாக செயல்படுபவர்கள் சி.பி.ஐ.(எம்) உறுப்பினர்கள் என்றும், இந்தியாவில் ஆயுதம் ஏந்திய கலவரத்திற்கு தலைமை தாங்கும் ஒரு கருவியாக புதிய கட்சி வளர்த்தப்படுகிறது என்றும் மும்முரமான பிரச்சாரம் நடைபெற்றது. இந்த அவதூறுக்கு எந்தவிதமான நிரூபணமோ அல்லது நிரூபிப்பதற்கான முயற்சியிலோ ஆளும் கட்சி இறங்கவில்லை. மேற்குவங்கத்தின் மாநில ஆட்சியாளர்கள் மட்டுமின்றி, அகில இந்திய அளவிலும் எல்லா மாநிலங்களிலும், இத்தகைய பொய்ப்பிரச்சாரம் பெருமளவில் அவிழ்த்துவிடப்பட்டது.

இந்த பின்னணியை இங்கு குறிப்பிடுவதற்கான காரணம் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு எதிராக ஆளும் வர்க்கம் தொடுத்த ஒரு பெரும் தாக்குதலை பற்றி வாசகர்கள் அறிந்து கொள்வதற்காகத்தான்.

சொல்லப்போனால், கைது செய்யப்பட்ட மேற்குவங்கத் தோழர்கள் சில மாதங்களுக்கு பின் விடுதலை செய்யப்பட்டனர்,அதன் பிறகும் நாடு முழுவதும் உள்ள எதிரி வர்க்கத்தின் பிரச்சாரக் கருவிகள், இந்த இரண்டு வாதங்களையும் தொடர்ச்சியாக மூர்க்கத்தனமாக பிரச்சாரம் செய்தனர். நாடாளுமன்றத்தில், அன்றைய உள்துறை அமைச்சராக இருந்த குல்சாரிலால் நந்தா சமர்ப்பித்த கம்யூனிஸ்ட் எதிர்ப்பு வெள்ளையறிக்கையில், இவ்விரண்டு குற்றச்சாட்டுகள்தான் முன்னுக்கு வைக்கப்பட்டன.

ஆக, கலவரத்தைத் தூண்டுபவர்கள் அந்நிய நாட்டு ஏஜன்டுகள் என்ற முரட்டுத்தனமான அரசியல் தாக்குதல்களை சந்தித்தவண்ணம்தான் நமது கட்சி மக்களிடையே வேலை செய்ய நேர்ந்தது. ஆங்காங்கு கட்சித் தலைவர்கள் பலவிதமான தொல்லைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர், மிகப்பெரியதொரு தாக்குதல் இம்மாநாட்டிற்கு பின் இரண்டு மாதத்திற்குள் பெரும் அளவில் அரங்கேறியது. 1964 டிசம்பர் மாதம் 29ஆம் தேதி இரவு மூன்று மணிக்கு நாடு முழுவதும் ஒரே நேரத்தில் ஏறத்தாழ 2000 கட்சித் தலைவர்கள், தோழர்கள் ஆகியோரின் வீடுகளின் கதவுகள் தட்டப்பட்டு, பெரும் போலீஸ் படைகள் அத்துணைத் தோழர்களையும் இரவோடு இரவாக கைது செய்து சென்றனர்.

அவர்களை சி.சி. – பி.பி. கூட்டங்களுக்காகக் கேரளாவின் திரிச்சூரில் வந்து தங்கிய கட்சியின் அகில இந்திய தலைவர்கள் (மேற்படி அமைப்புகளைச் சார்ந்தவர்கள்) இருந்தனர். ஒருசிலர் திருச்சிசூரிலேயே சிறைப்படுத்தப்பட்டபோதிலும், மற்ற பலரும் அவரவர்கள் வந்த மாநிலங்களுக்கு விரைவிலேயே அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில், மாநிலத் தலைவர்களுக்கும் பல மாவட்டத் தலைவர்களுக்கும் ஏற்பட்டது. உதாரணத்திற்கு, டிசம்பர் 29ஆம் தேதி நள்ளிரவு மூன்று மணிக்கு எம்.ஆர். வெங்கட்ராமன், ஏ. பாலசுப்பிரமணியம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள், பல்வேறு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட உறுப்பினர்கள் வெகுஜனத் தலைவர்கள் போன்றவர்கள் இந்த கைது வலையில் சிக்கி காலை ஆறு மணிக்குள் அத்தனைபேரும் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். அன்றிலிருந்து ஏறத்தாழ ஒன்றரை ஆண்டு காலம் – 1966 மே மாதம் வரை சிறையிலேயே இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. (தோழர் கே. அனந்தநம்பியார் அவர்கள் அன்று எங்களிடம் நகைச்சுவையுடன் சொன்னதை குறிப்பிடுகிறேன்: ‘அவர் சொன்னார் இது ஒருநாள் இரண்டு நாளில் முடியப்போகும் சிறைத் தண்டனை அல்ல; என்று சிரித்துக் கொண்டே சொன்னார்; 1965ஆம் ஆண்டிற்குப் பிறகு நமக்கு டயரிக் குறிப்புகள் தேவைப்படாது.’ என்று கூறியபோது, தாக்குதலின் தன்மையை அழுத்தமாக அனைவருக்கும் புரிய வைத்தார். இந்த ஆண்டு முழுவதும் இந்த சுற்றுச் சுவர்களைத்தான் நாம் பார்கக்கப் போகிறோம் என்றும் அவர் நகைச் சுவையுடன் பேசியபோது, கம்யூனிஸ்ட் உறுதிப்பாட்டுடன் அனைவரும் சிரித்தனரே தவிர ஒரு தோழர்கூட கவலைப்படவில்லை.)
இதேபோல், நாடு முழுவதும் கட்சியின் முதுகெலும்பாகவும், மூளையாகவும் செயல்பட்ட ஏறத்தாழ 2000 தோழர்கள் சிறையில் அடைக்கப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் கட்சி மாநாட்டிற்குப் பின் தன்னுடைய பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

இந்த மூர்க்கத்தனமான தாக்குதல் பற்றி மக்களவையில் விவாதம் கிளம்பியபோது, இதே இரண்டு காரணங்களை அழுத்தமாக உள்துறை அமைச்சர் முன்வைத்தார் என்பதையும் குறிப்பிடுகிறேன்.

இக்காலங்களில்  அடக்குமுறைகளைத் தாண்டி கட்சிக்கே உரிய முறைகளைப் பின்பற்றி, கட்சியின் அமைப்புகள் தொடர்ந்து  மக்களை அமைப்புக்களிலே  திரட்டி  செயல்பட்டு வந்தது.  அடக்குமுறை என்ற நெருப்பில் முளைத்த இவ்வியக்கம் படிப்படியாக எல்லாவிதமான தாக்குதல்களையும் சந்தித்து, வளர்ந்து முன்னேறியது என்பதையும் நினைவுறுத்த வேண்டியுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் பெருவாரியானவர்கள் தோழர் அனந்த நம்பியார் குறிப்பிட்டதுபோலவே 1966 மே மாதத்தில்தான் விடுதலை செய்யப்பட்டனர். 1967இல் பொதுத் தேர்தல்கள் நடக்க இருந்த நிலையில், இத்தனை கம்யூனிஸ்ட்டுகளையும் விசாரணையின்றிச் சிறையில் வைத்து தேர்தல் நடத்துவதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்பதை புரிந்துக் கொண்ட ஆளும் வர்க்கம் பல தலைவர்களையும் படிப்படியாக விடுதலை செய்தது.

இந்த ஒன்னரை ஆண்டு காலத்தினுடைய அடக்குமுறை ஒரு பக்கம் இருக்கும்போதே, நமது கட்சி மிகக் கடுமையான அடக்குமுறைகளைக் கண்டு ஒதுங்கவில்லை மக்களின் வாழ்விற்கான போராட்டங்களுக்குத் தலைமை தாங்கியது, (தொழிற்சங்கப் போராட்டங்கள், விவசாயிகளின் பேரெழுச்சிகள் மாணவர்களின் பல்வேறு இயக்கங்கள், புதிதாக வளர்ந்து வந்த மாதர் இயக்கம் மற்றும் மத்தியதர வர்க்க அரங்கங்களின் இயக்கங்கள் போன்றவையெல்லாம் இந்த அடக்குமுறைப் பின்னணியிலும் நடைபெற்றது. கட்சி பகிரங்கமாக வேலை செய்தும், தலைமறைவாகப் பணியாற்றியும் இப்போராட்டங்களுக்கெல்லாம் வழிகாட்டியது. அதே நேரத்தில், கட்சித் திட்டத்தின் வழியிலும், கட்சி உருவாக்கிய நடைமுறை தந்திரங்களின் பாதையிலும், உறுதியாக நின்றது. பூர்ஷ்வா கட்சிகளின் சுரண்டல் அரசியலையும் கம்யூனிச இயக்கத் திரிபுகளையும் அம்பலப்படுத்தும் சித்தாந்தப் போரை உறுதியாக நடத்தியது  சிறுபிரசுரங்கள், தெருமுனைக் கூட்டங்கள் மூலம் மக்களிடம் கொண்டுசென்றது. கிளைகளைக் கூட்டி விவாதங்களின் மூலம் சித்தாந்த உறுதியினை உறுப்பினர் களுக்கு அளித்தது. உற்சாகமும், உறுதியும் கொண்ட உறுப்பினர் களின் செயலால் நமது கட்சி இந்திய அரசியலில் ஒரு செல்வாக்குமிகு கட்சியாக வளர்ந்து வேகமாக முன்னேறியது. இதன் பலன்களை 1967களில் நடைபெற்ற காண முடிந்தது. சி.பி.ஐ.(எம்) ஒரு வளரும் கட்சியாக, புரட்சிகரமான கட்சியாக, உழைப்பாளி மக்களின் கட்சியாக வேகமாக வளர்ந்தது.

ஒரு புரட்சிகரமான கட்சியின் நடைமுறைகளை நாம் பின்பற்றியது மட்டுமின்றி, அடிப்படையில் இந்தியாவின் சூழ்நிலைக் கேற்ற புரட்சிகரமான அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்ததே சி.பி.ஐ.(எம்)னுடைய வேகமான முன்னேற்றத்திற்கு அடிப்படைக் காரணமாகும். அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்த பிறகு 1966ஆம்  கட்சி ஸ்தாபனத்தை புரட்சிகரத் தன்மையுடன் இயங்கவைக்க முக்கியத்துவம் வாய்ந்ததொரு அறிக்கையை ஆழமாக விவாதித்து மத்தியக் குழு நிறைவேற்றியது.

திருத்தல்வாதப் பிடியில் நீண்ட நாள் சிக்கியிருந்த கட்சியின் செயல்பாடுகளில் ஏற்பட்ட பல்வேறு மிதவாத, பாராளுமன்ற சந்தர்ப்பவாத, வர்க்கப் போராட்டங்களில் சுரண்டும் வர்க்கத்திற்குச் சாதகமான செயல்முறைகள் மலிந்து கிடந்தன. இவைகளை ஸ்தூலமாகப் பரிசீலனை செய்து அத்தவறுகள் மீண்டும் தலை தூக்காமல் இந்த ஆவணம் வழிகாட்டியது.

அத்துடன் விவசாயிகள் அரங்கத்தில் கட்சியினுடைய புதிய திட்டத்தின் அடிப்படையில் இவ்வரங்கக் கடமைகளை வரையறுக்கும் இன்னொரு முக்கியமான தீர்மானமும் கள்ளிக் கோட்டையில் நடைபெற்ற மத்தியக்கமிட்டிக் கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த முக்கியமான அறிக்கை கோடிக்கணக்கான விவசாயிகள் மத்தியில் கட்சி ஆற்ற வேண்டிய பணிகளைக் குறித்து தெளிவானதொரு திசை வழியை கட்சிக்குச் சமர்பித்தது. மேற்குவங்கம், கேரளம் போன்ற முக்கிய மாநிலங்களில் நிலத்திற்கான போராட்டம் உயர் கட்டத்தை அடைந்து இடதுசாரி அரசுகள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின் விவசாய அரங்கில் கடமைகள் என்ற ஆவணம் முக்கியத்துவம் பெற்றதாகிவிட்டது. இந்தியாவினுடைய வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அடிப்படையான நிலச்சீர்திருத்தத்தை அமலாக்க கட்சி செய்ய வேண்டியதை இந்த ஆவணம் தெளிவாகக் கோடிட்டுக் காட்டியது. இதைப் பின்பற்றி விவசாயிகள் அரங்கத்தில் பிரம்மாண்டதொரு எழுச்சி ஏற்பட்டது. பெருமளவில் நிலப் பங்கீடும் நடைபெற்றது. ஆக, விவசாயிகள் அரங்கத்தில் அதுவரை கண்டிராத ஒரு பெரும் எழுச்சிக்கு வழிவகுத்தது இந்த ஆவணம்தான் என்று கூறமுடியும். விவசாயிகள் சங்கத்தின், வி.தொ.சவின் உறுப்பினர் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் மேல் உயர்ந்தது இந்தக் கட்டத்தில்தான்.

இதே மத்தியக்கமிட்டி கூட்டத்தில், தொழிலாளர் அரங்கத்தில் பணியாற்றுவதற்கான வழிமுறைகளைக் காட்ட ஒரு ஆவணத்தை விவாதித்து ஏற்றுக் கொண்டது. தொழிலாளர் இயக்கத்திற்கு அதனுடைய புரட்சிகரமான திசை வழியில் முன்னேறுவதற்கான புதிய தெளிவு இந்த ஆவணத்தின் மூலம் கட்சியின் மத்திய கமிட்டி அளித்தது என்றே கூறவேண்டும், கட்சியின் தலைமையில் அல்லது வழிகாட்டலில் செயல்படும் தொழிற்சங்க இயக்கம் பெருமளவில் முன்னேறிய நேரத்தில்கூட, இவ்வரங்கத்தின் அனைத்துத் தொழிலாளிகளையும் ஒன்றுபடுத்துவதற்கான ஆதாரணமான கோஷமாக தொழிலாளி வர்க்க ஒற்றுமை, கூட்டு நடவடிக்கை போன்ற கருத்துக்கள் அணிகள் மத்தியில் ஆழமான புரிதலை ஏற்படுத்த முடிந்தது.

சி.ஐ.டி.யூ.வின் தலைமையில் பெரும் இயக்கம் முன்னேறிய தோடு மட்டுமல்லாமல், மத்தியதர வர்க்க இயக்கத்தினர் மற்றும் பல பிரிவினர்களை ஒன்றுபட்ட இயக்கத்தில் ஈடுபடுத்தும் பணியில் கட்சித் தோழர்கள் முன்னணியிலேயே செயல்பட்டனர். இது வெறும் பொருளாதாரவாதத்தைத் தாண்டி ஒரு தெளிவான புரட்சிகரமான பாதையில் நமது வர்க்கத்தை கொண்டு வருவதற்கு பெரிய அளவில் தெளிவானதோர் பாதையை வகுத்தனர். இதுபோல், பல்வேறு அரங்கங்களில் சி.பி.எம்.ஆகச் செயல்படும்போது, பின்பற்ற வேண்டிய நடைமுறைத் தந்திரங்களை 1967 இல் உருவாக்கியதானது கட்சியினுடைய வேகமான முன்னேற்றத்திற்கு ஆதாரமாக அமைந்தது.

புரட்சிகரமான பாதை, தெளிவான திசை வழியுடன் கட்சி அணிகள் முழுவதும் ஒருமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் கட்சித் தலைமையும் அணிகளும் இறங்கிய நேரத்தில் இரண்டுவிதமான அரசியல் திரிபுகளைக் கட்சி சந்திக்க வேண்டியிருந்தது. ஒரு சரியான பாதையை நோக்கி முன்னேறும் போது, இடதுசாரித் திரிபும் அத்துடன் இணைந்து வரும் அதிதீவிரவாதப் போக்கும் கட்சிக்குள் தலை தூக்கியது. சற்று வலுவாக தோன்றிய இந்த இடதுசாரி திரிபு மேற்குவங்கத்திலும்,  கேரளாவிலும், ஆந்திராவிலும் மற்றும் வேறு சில மாநிலங்களிலும் சற்று வலுவாகவே தலைதூக்கியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பாதைதான் நமது பாதையாக இருக்க முடியும் என்று கருதிய ஒரு பிரிவினர் கட்சியில் பரவி கட்சியை சீர்குலைக்கும் அளவிற்கு ஆங்காங்கு தென்பட்டனர்.

வலதுசாரித் திரிபில் சிக்கியவர்கள் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளையும், நடைமுறைகளையும், பின்பற்றுபவர் களாகத் தங்களைப் பிரகடனப்படுத்திக் கொண்டனர். மறு பக்கத்தில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை வழி தாங்கள் நிற்பதாகப் பிரச்சாரம் செய்து, நடைமுறையில் ‘மக்கள் யுத்தம்’ என்ற பாதையில் செயல்படக்கூடியவர்களாக பிரச்சாரம் செய்தும், பல நடவடிக்கைகளில் இறங்கிய இடதுசாரி பிரிவினர் ஒரு தனிக்கட்சியை  உருவாக்கும்  முயற்சியில் இறங்கினர். இப்பிரிவினர் பல்வேறு மாநிலங்களில், பல பகுதிகளில் சி.பி.எம்.மைச் சீர்குலைக்க தொடர்ந்தார்போல் முயற்சித்தனர்.

இந்த நேரத்தில் கட்சியின் மத்திய கமிட்டி முக்கியமான பல அரசியல் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டது. இந்த அரசியல் ஆய்வு கட்டுரைகள் (தீர்மானங்கள்) அனைத்தும் இடது – வலது திரிபுகளின் தவறான அரசியல் சித்தாந்தப் பார்வையை அம்பலப்படுத்துபவையாக இருந்தன.

ஆக, சி.பி.எம். என்ற அமைப்பு செயல்படத் தொடங்கியதும் கட்சி முழுமையாக இடதுசாரி மற்றும் வலதுசாரி திரிபுகளை எதிர்த்து உறுதியாகப் போராட வேண்டியிருந்தது. இதன் விளைவாக இரண்டு திரிபுகளையும் எதிர்க்கக்கூடிய ஒரு சரியான பாதையில் முன்னேறுவதற்குக் கட்சிக்குச் சாத்தியமாயிற்று. இந்தப் போராட்டமானது அடுத்து வந்த சில ஆண்டுகளில் கட்சியின் அரசியல் சித்தாந்த அடிப்படையை வலுப்படுத்தியதும் ஒரு முக்கியமான அம்சமாகப் பார்க்க வேண்டும்.

கொடூரமான அடக்குமுறை

மேற்குவங்காளத்தின்  இடது அணியின் வேகமான வளர்ச்சியை எப்படியாவது தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்  மத்தியில் ஆளும் கட்சியும், பெரு முதலாளி கூட்டமும் செயல்படத் தொடங்கியது. பல்வேறு பகுதிகளில் நமது ஊழியர்கள் கொலை செய்யப்பட்டனர். தோழர்கள் குடியிருக்கும் பகுதிகளில் திடீர் தாக்குதல்களுக்கு நமது அருமைத் தோழர்கள் இரையானார்கள்.  ஒரு கட்டத்தில், கட்சித் தோழர்களும், அனுதாபிகளும், அவர்களின் குடியிருப்புகளிலிருந்து விரட்டப்பட்டு சில மாதங்கள் வரை தங்களின் பகுதிகளில் செல்ல முடியாத நிலைமைகள் ஏற்பட்டது (நந்திகிராம் நிகழ்ச்சிகள் – தாக்குதல் முறையும் இன்றைய எடுத்துக்காட்டு!) இத்தகைய தாக்குதல்களின் காரணமாக நூற்றுக்கணக்கான அல்லது சில கட்டங்களில் ஆயிரக்கணக்கான தோழர்கள் மாதக்கணக்கில் தங்களுடைய ஊர்களுக்குச் செல்ல முடியாத வேறு பகுதிகளில் அகதிகளைப் போலக் குடியேற வேண்டிய நிலைமையும் ஏற்பட்டன. இந்தத் தாக்குதல்களில் ஆயிரத்திற்கும் அதிகமான தோழர்கள் கொலை செய்யப்பட்டனர். (நேரடி அனுபவம் 1969இல் மதுரையில் நடைபெற்ற 9வது கட்சி மாநாட்டிற்கு வந்த மேற்குவங்கப்  பிரதிநிதிகளில் பலர் தங்கள் ஊர்களிலிருந்து விரட்டிக்கப்பட்டு, மதுரை தமுக்கம் ஹாலில் இரகசியமாகத் தங்க வேண்டிய நிலை இருந்தது. இவர்களில் பலரும் எந்த நேரத்திலேயும் தாக்கப்பட்டு கொலை செய்யப்படலாம் என்ற ஒரு சூழ்நிலையில்தான் கட்சி மாநாட்டில் பங்கேற்றனர்.

ஆக, இடது – வலது திரிபுகளையும், ஆளும் பெருமுதலாளி வர்க்கத்தின் தாக்குதல்களையும் எதிர்த்ததே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிற்கால வளர்ச்சிக்கு அடித்தளத்தை அமைத்தது என்பதைக் கூறவேண்டும்.

உலக அரங்கில்

இதே காலக்கட்டம் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பெரும் நெருக்கடியைச் சந்தித்த காலகட்டமாகும். உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் மிகவும் சிக்கலான, ஆழமான கருத்து வேற்றுமைகள் தோன்றி ஒன்றுபட்ட இயக்கமே சிதறியது . பல்வேறு நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பிளவுபட்டன. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் முகாம், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முகாம் என்று பிரிந்தன.  நம் நாட்டிலும் அன்றைய சி.பி.ஐ. தோழர்கள் சோவியத் கட்சியின் அரசியலை உறுதியாகப் பின்பற்றினர். மறுபக்கத்தில், அதிதீவிரவாத நக்சல் கட்சியினர் முற்றிலுமாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்த அரசியல், சித்தாந்த நடைமுறைகளை முழுமையாக ஏற்றுக் கொண்டவர்கள், இவ்வாறு உலக கம்யூனிஸ்ட் இயக்கம் இரண்டு பெரும் முகாம்களில் பிரிந்து நிற்கும் நிலைமை ஏற்பட்டபோது, சி.பி.எம். ஒரு தெளிவான அணுகுமுறையை வகுத்தது. உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் எல்லா நாடுகளின் கம்யூனிஸ்டுகளின் சாதனைகளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுகிறது. ஆனால், அக்கட்சிகள் முன்வைக்கக்கூடிய தவறான நிலைபாடுகளை கட்சி ஏற்கவில்லை என்று அறிவித்தது. இரண்டு பெரிய கட்சிகளும்(சோவியத், சீனக் கம்யூனிஸ்ட் கட்சிகள்) நம்மைத் தாக்கிப் பிரச்சாரம் செய்தனர். ஆனால் நம் கட்சி  இத்தகைய வேறுபட்ட நிலையை மேற்கொள்ளும் போதும், உலக ரீதியான கம்யூனிஸ்ட் இயக்கத்தில், கோட்பாடு ரீதியான ஒற்றுமைக் காக சி.பி.எம். தொடர்ந்து பாடுபடும் என்றும் அறிவித்தது. பிற நாட்டு கம்யூனிஸ்ட்டு இயக்கங்களின் அனுபவங்களைக் கற்போம், ஆனால் காப்பி அடிக்கமாட்டோம். மார்க்சிச – லெனிசச் சித்தாந்தப் பார்வையோடு சொந்த அனுபவத்தின் அடிப்பிடையில் முடிவுகள் எடுப்போம் என்று பிரகடனமும் செய்தோம்.

இதன் விளைவாக, உலகத்தில் பல்வேறு நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியினரும், இயக்கத்தினரும் சி.பி.எம். னுடைய கொள்கை ரீதியான – கோட்பாடு ரீதியான சித்தாந்த நிலைபாடுகளையும், நடைமுறைகளையும் ஆதரித்துப் பாராட்ட முற்பட்டனர்.

1964ஆம் ஆண்டு டிசம்பரில் கல்கத்தா மாநாட்டின் மூலமாக செயல்பட ஆரம்பித்த சி.பி.ஐ.(எம்) மிகவும், சிக்கலான சிரமம் நிறைந்த சூழ்நிலைகளை எதிர் கொண்டு தலைநிமிர்ந்து நிற்கிறோம். நமது கருத்துக்ளை இப்பொழுது தான் ஹிந்தி பேசும்  மக்கள் செவிமடுக்கத் தொடங்கியுள்ளனர். அப்பகுதி உழைப்பாளி மக்களின் ஆதரவோடுதான் மாற்றுக் கொள்கைகளைக் கொண்டு செல்லமுடியும். இதைப் புரிந்து நாம் செயல்பட வேண்டியுள்ளது. பல மொழி பேசும் உழைக்கும் மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கைப் பெருக்குவதே நமது லட்சியமாகக் கொண்டு செயல்படுவோமாக.Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: