மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


மத்திய பட்ஜட் 2008 – 09: பாதையில் மாற்றம் இல்லை!


ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஐந்தாவது நிதி நிலை அறிக்கையைத் ‘தேர்தல் பட்ஜெட்’ என்றும், சாமானியர்களுக்கு சலுகை அளிக்கும் பட்ஜட் என்றும், முதலாளிகளைக் கண்டு கொள்ளாத பட்ஜட் என்றும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. உண்மை என்ன?

“ஒளிரும்” பட்ஜட்டா?

மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், இந்த பட்ஜட் முந்தைய UPA பட்ஜட்டுகளிலிருந்து பெரிதும் வேறுபட்டிருப்பது போல் தோன்றும். பெருமுதலாளிகளுக்கு திரு.சிதம்பரம் அவர்கள் (இங்கு சிதம்பரம் என்பது தனிநபரின் அடையாளம் அல்ல, யூ.பி.ஏ அரசையே குறிக்கும்) வருடந்தோறும் பட்ஜட்டில் வாரி வழங்கும் வரிச்சலுகைகள் இம்முறை காணப்படவில்லை. பெரும் விளம்பரம் பெறுகின்ற வகையில், விவசாயக் கடன்கள் ரத்து அறிவிக்கப்பட்டுள்ளது. இது 4 கோடி விவசாயிகளுக்குப் பயன்தரும் என்று அமைச்சர் சொல்கிறார். மேலும், இக்கடன் ரத்து சலுகையின் மொத்தமதிப்பு ரூ.60000 கோடி என்று கூறுகிறார். இந்த அறிவிப்பின் விளைவாக சிறு, குறு விவசாயிகள் (2 ஹெக்டேர், அதாவது கிட்டத்திட்ட 5 ஏக்கர் நிலம் அல்லது அதற்குக்குறைவான நிலம் வைத்திருப்பவர்கள்) மார்ச் 31, 2007 வரை வணிக வங்கிகள், மண்டலக் கிராம வங்கிகள் மற்றும் கூட்டுறவுக் கடன் அமைப்பு களில் வாங்கியிருந்து, டிசம்பர் 31, 2007 வரை கட்டப்படாமல் இருந்த கடன் பாக்கிகள், 29.02.2008 வரை கட்டப்படாமல் இருக்குமானால் அவை முழுமையாக ரத்து செய்யப்படும். பிற விவசாயிகளுக்கு 25 % கடன் ரத்தாகும். இதனால் 3 கோடி சிறு, குறு விவசாயிகளும் 1 கோடி பிற விவசாயிகளும் பயனடைவார்கள் என்பது நிதி அமைச்சர் தரும் கணக்கு.

கொள்கையளவில் இந்த அறிவிப்பு வரவேற்க்கத்தக்கதே. இந்த அறிவிப்பு எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பது பட்ஜட் உரையில் தெளிவுபடுத்தப்படவில்லை. சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களுக்கு அரசு இழப்பை ஈடுகட்டுமா என்பதும் தெரியவில்லை. எனினும், கடன் ரத்து வரவேற்கத்தக்கது. சிறு, குறு விவசாயிகள் முழுப்பயன் பெறுவது உறுதி செய்யப்பட வேண்டும். ஆனால் இதுபற்றி ஒரு விமர்சனப்பார்வையும் அவசியம். அதற்குப்பின்னர் வருவோம். ஆனால், ஒன்றைக்குறிப்பிட வேண்டும். பெருமுதலாளிகள் பல ஆயிரம் கோடி ரூபாய்களுக்குப் பொதுத் துறை வங்கிகளில் வாங்கிய கடனைத் திருப்பித் தராமல் உள்ள நிலையில் அதுபற்றி மௌனமாக இருந்த சில குரல்கள் இன்று ஊடகங்கள் வாயிலாக ‘விவசாயிகள் கடன் ரத்து ஆபத்தனாது. வாங்கிய கடனைத் திருப்பித் தரவேண்டும் என்ற சிந்தனையையே அழித்துவிடும்’ என்று கூப்பாடு போடுவது வேடிக்கையாகவும், அதேசமயம் வேதனையாகவும் உள்ளது.

விவசாயிகள் கடன் ரத்து பற்றிய அறிவிப்பு தவிர வேறு சில வரவேற்கத்தக்க அம்சங்களும் இந்த பட்ஜட்டில் உள்ளன. தனிநபர் வருமானவரி விகிதங்கள் தொடர்பான பட்ஜட் பரிந்துரைகள் மத்தியதர உழைப்பாளி மக்களுக்கு நிவாரணம் அளித்துள்ளது. தொடர்ந்து பல ஆண்டுகளாக ஏற்பட்டு வந்துள்ள விலைவாசி உயர்வின் பின்னணியில் இவை பார்க்கப்பட வேண்டும். அதேபோல், பங்குச்சந்தையில் பங்குகளை வாங்கி, ஓராண்டுக்குள் விற்றால் கிடைக்கும் லாபத்தின் மீதான வரியை – இதற்குப் பெயர் “குறுகிய கால மூலதன லாப வரி” – இரண்டு ஆண்டுகளுக்கு முன் 20 %த்திலிருந்து 10 %மாக சிதம்பரம் குறைத்திருந்தார். இது யூக வணிகத்தை ஆதரிக்கும் தேவையற்ற நடவடிக்கை என்றும், அரசுக்கு பெரும் வருமான இழப்பு ஏற்படுத்தும் என்றும் நாம் இதை விமர்சித்திருந்தோம். இந்த ஆண்டு பட்ஜட்டில், இந்த வரி 10 %த்திலிருந்து 15 %மாக உயர்த்தப்பட்டுள்ளது. இது மீண்டும் 20 %மாக ஆக்கப்பட்டிருக்க வேண்டும் என்றாலும், 15 %மாக்கியது வரவேற்கத்தக்கதே. இன்னொரு வரவேற்கத்தக்க நடவடிக்கை, பங்குச்சந்தை யூகவணிகத்தின் மீது போடப்பட்டுள்ள STT (Securities Transaction Tax) வரியைப் போன்று சரக்குச் சந்தை யூக வணிகத்தின் மீது போடப்பட்டுள்ள CTT (Commodity Transaction Tax).

ஆனால் மேற்குறிப்பிட்டவைகளும் வேறு ஒன்றிரண்டு சிறு நடவடிக்கைகளும் வரவேற்கப்படலாம் என்றாலும், 2008 – 2009 க்கான மத்திய பட்ஜட் நிச்சயமாக, ‘ஒளிரும் பட்ஜட்’ அல்ல,

பட்ஜட்டும் இன்றைய இந்தியப் பொருளாதார நிலமையும்

நாம் பட்ஜட் பற்றிய விரிவான விமர்சத்திற்குள் போகும் முன்பு ஒருசில விஷயங்களைத் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. பட்ஜட் என்பது ஏதோ விண்வெளியில் இருந்து இங்கே இறங்கி வருவது அல்ல. நிலவும் சமூக – பொருளாதார அமைப்பின் தன்மையை ஒட்டியே ஆட்சியாளர்கள் பட்ஜட்டைத் தயார் செய்கின்றனர். குறிப்பாக, தொழிலும் நிலமும் ஏகபோகமாக சமூகத்தின் ஒரு சிறு பகுதியினர் கையில் உள்ள நாடு இந்தியா. அரசின் பொருளாதாரக் கொள்கைகள், இந்த உற்பத்திச் சொத்துக்குவியல் மற்றும் அதன் விளைவாகப் பெரும் உடைமையாளர்களுக்கு உள்ள மாபெரும் அரசியல் – பொருளாதார செல்வாக்கு ஆகியவற்றின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகின்றன என்பது நாம் அறியாதது அல்ல. நிலவும் ஏற்றத்தாழ்வு மிக்க சமூக – பொருளாதார அமைப்பு, அதன் அடிப்படையில் செல்வந்தர்களுக்கு – சாதகமாகவே அமையும் பொருளாதாரக் கொள்கைகள் என்ற வியூகத்திற்கு உள்ளே தான், அதைச் சார்ந்து தான் பட்ஜட் போடப்படுகிறது. ஆகவே, பட்ஜட்மூலமாக மக்களுக்குச் சாதகமான பெரிய மாற்றங்களை எதிர்பார்ப்பது யதார்த்தமானது அல்ல.

அப்படியானால், பட்ஜட்டை விவாதிப்பதில் அர்த்தமேயில்லை என்று முடிவு செய்து விடலாமா? நிச்சயமாக அப்படி முடிவு செய்யக்கூடாது. காரணம், அரசின் பல பொருளாதாரக் கொள்கைக் கருவிகளில் ஒன்று தான் பட்ஜட் என்றாலும், அது ஒரு முக்கியக் கருவியாகும். 2008 – 09ல் இந்திய நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 53 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று மத்திய பட்ஜட் மதிப்பிடுகிறது. மத்திய பட்ஜட் மூலம் செலவிடப்படும் தொகை ரூ.7.5 லட்சம் கோடியாகும். ஆகவே, நாட்டின் மொத்த உற்பத்தியில் 14 % மத்திய பட்ஜட் மூலம் செலவிடப்படுகிறது. ஆகவே பட்ஜட் முக்கியத்துவம் வாய்ந்தது. பட்ஜட் மூலம் மக்கள் வாழ்வு மகத்தான வகையில் மாறிவிடும் என்ற பொருளில் அல்ல, ஆளும் வர்க்கக் கொள்கைகளை அம்பலப்படுத்தவும், முற்போக்கு சக்திகளை ஒன்று திரட்டி மக்களுக்குக் குறைந்த பட்ச நிவாரணம் பெறவும் நாம் போராட வேண்டிய களம் என்ற வகையில் பட்ஜட் முக்கியத்துவம் பெறுகிறது.

பன்னாட்டு, இந்நாட்டு – பொருளாதார நிலைமைகள்

பட்ஜட் விண்வெளியில் போடப்பட்டு இறங்கிவருவதில்லை என்பதை நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். பட்ஜட்டில் பன்னாட்டு, உள்நாட்டு பொருளாதார நிலைமைகளைக் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது. பன்னாட்டுச்சூழலின் முக்கியத்துவம் இன்று கூடியுள்ளது. 2000 – 01 ல் இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பையும், இறக்குமதி மதிப்பையும் சுட்டிக்காட்டினால், அது தேசத்தின் உள்நாட்டு உற்பத்தியில் 22 %மாக இருந்தது. இத்தொகை 2006 – 07 ல் 34 %மாக உயர்ந்துவிட்டது. நம்நாட்டுப் பொருளாதாரம் மேலும் மேலும் பன்னாட்டுப்பொருளாதாரத்தின் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகிறது என்பதை இது காட்டுகிறது. அதுமட்டுமல்ல, பன்னாட்டு நிதி மூலதனம் இந்தியப்பங்குச் சந்தையில் குறுகிய காலத்திற்குள் மிகுந்த லாபம் ஈட்டவும், பின்னர் வெளியே செல்லவும், மீண்டும் வரவும் தங்குதடையின்றி கதவுகள் திறக்கப்பட்டுள்ளன என்பதும் பன்னாட்டுப் பொருளாதார நிலைமைகளும், நிகழ்வுகளும் நம்பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை பட்ஜட்டில் கணக்கில் கொள்ள வேண்டிய அவசியத்தை நமக்கு உணர்த்துகின்றன.

இன்று அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையிலான உலக முதலாளித்துவம் ஒரு மந்த நிலையைச் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது நம் நாட்டின் ஏற்றுமதி வாய்ப்புகளைப் பாதிக்கும். மேலும் டாலர் நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சியும், நமது ஏற்றுமதிப் பொருட்களின் டாலர் விலையை உயர்த்தி, விற்பனையைக் கடினமாக்குகிறது. மறுபுறம், மேலை நாடுகளில் யூக வணிகத்தில் பங்குச் சந்தை லாபம் ஈட்ட வாய்ப்புகள் குறையும் போது, அந்நிய நிதிமூலதனம் நமது நாட்டுப் பங்குச் சந்தைக்குப் படையெடுத்து நமக்கு சிக்கல்களை ஏற்படுத்தக் கூடும்.

இவற்றையெல்லாம் பட்ஜட் கணக்கில் கொண்டு, சரியாக எதிர்கொள்கிறதா என்பது ஒரு முக்கியமான கேள்வி.

அதேபோல் பட்ஜட்டுக்கு முன்பாக நிதி அமைச்சர் தயாரித்து மக்களவையில் தாக்கல் செய்யப்படும் 2007 – 08 க்கான பொருளாதார ஆய்வு அறிக்கை, இந்த ஆண்டு வளர்ச்சி வேகம் சற்றுக் குறைந்துள்ளதையும், பணவீக்க கருமேகங்கள் சூழ்ந்து வருவதையும் நடப்பு ஆண்டு வேளாண் உற்பத்தி வளர்ச்சி 2.4 % என்ற நிலையில், இலக்கில் 60 %மாக மட்டுமே உள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது. உணவு தானிய உற்பத்தி ஏறத்தாழ பத்து ஆண்டுகளாக தேக்க நிலையில் உள்ளதும் ஆழ்ந்த கவனத்திற்குரிய விஷயம்.

இதிலிருந்து வேளாண் உற்பத்திப் பெருக்கம், உணவுப்பாது காப்பு, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது, 1,50,000 க்கும் அதிகமான விவசாயிகளின் தற்கொலைகள் வெளிப்படுத்தும் ஆழமான வேளாண் மற்றும் கிராமப்புறப் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பது ஆகியவை பட்ஜட்டின் நோக்கமாக இருக்க வேண்டும் என்பது தெளிவு. ஆனால் பட்ஜட் 2008 – 09 அவ்வாறு உள்ளதா?

பட்ஜட்டும் தேசிய குறைந்தபட்ச பொதுத்திட்டமும்

பன்னாட்டு, இந்நாட்டு நிலைமைகளையும், நாட்டுப் பொருளாதாரமும் மக்களும் சந்திக்கும் முக்கியப் பிரச்சனைகளையும் இந்த பட்ஜட் கவனத்தில் கொண்டுள்ளதா என்ற கேள்வியே நாம் மேலே எழுப்பியுள்ளது போலவே, மூன்றாவது முக்கிய கேள்வியை எழுப்ப வேண்டும். யு.பி.ஏ அரசு தான் ஏற்றுக்கொண்டுள்ள தேசிய குறைந்தபட்சத் திட்டத்திற்கு நியாயம் வழங்குகிறதா? கல்வி, மக்கள் நல்வாழ்வு, ஊரக வளர்ச்சி, கிராமப்புற வேலை உத்தரவாதச் திட்டம் தொடர்பான என்.சி.எம்.பி. வாக்குறுதிகளை நிறைவேற்ற பட்ஜட் உண்மையிலேயே முயல்கிறதா?

அல்லது தொடர்ந்து பெரும் செல்வந்தர்களிடமிருந்து நாட்டு வளர்ச்சிக்குத் தேவையான வளங்களை வரிபோட்டுத் திரட்டி, மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் செலவிடுவதற்குப் பதிலாக, செல்வந்தர்களைத் தப்பவிட்டு, செலவைக்குறைத்து, ஃபிஸ்கல் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துவதிலேயே குறியாக உள்ளதா?

பிரச்சனைகளை சந்திக்க மறுக்கும் பட்ஜட்

2003 – 04 ம் ஆண்டுக்குப் பின், தொடர்ந்து 4 ஆண்டுகளாக இந்தியப் பொருளாதாரம் கிட்டத்தட்ட 8.5 % வேகத்தில் வளர்ந்து வருவதாகப் பெருமை கொள்ளும் அரசு, இந்த வளர்ச்சி பெருமுதலாளிகளுக்குப் பெரும் லாபத்தைக் கொடுத்துள்ள பின்னணியில், அதைச்சரியாக வரி வசூல் செய்து, நாட்டுக்கு மிக அவசியமான வேளாண்மை, பாசனம், ஊரக வளர்ச்சி போன்ற துறைகளில் அதிகமாக முதலீடு செய்திருக்க முடியும். ஆனால், அப்படிச் செய்யவில்லை. அரசின் ஃபிஸ்கல் பற்றாக்குறையை தேச உற்பத்தி மதிப்பில் 2.5 %மாகக் குறைந்துள்ளதை சாதனையாகக் காட்டுகிறது பட்ஜட்! மத்திய திட்ட ஒதுக்கீடு மிகக் குறைவாகவே உயர்த்தப்பட்டுள்ளது. வேளாண்மை, ஊரக வளர்சிசி, பாசனம் மற்றும் வெள்ளக்கட்டுப்பாடு ஆகியவற்றிற்கான மத்திய திட்ட ஒதுக்கீடு 18 % உயர்த்தப்பட்டுள்ளதை, தேச உற்பத்தி 13 % பண அளவில் அதிகரித்துள்ள பின்னணியில் பார்த்தால், இது பெரிதல்ல என்று புரியும். (விலைவாசி உயர்வைக் கணக்கில் கொண்டால் இரண்டுமே 12 %, 7 % என்றாகும்).

கல்விக்கு ஒதுக்கீடு 20 % அதிகம் என்று தம்பட்ட மடிக்கப்படுகிறது. ஆனால் இன்னமும் கல்விக்கான மத்திய, மாநில அரசுகளின் ஒதுக்கீடு தேச உற்பத்தியில் 4 %மாகவே உள்ளது. என்.சி.எம்.பி. இலக்கான 6 % தூரத்தில் உள்ளது. மக்கள் நல்வாழ்வுக்கான ஒதுக்கீடு 15 % உயர்த்தப்பட்டுள்ளது. தேச உற்பத்தியின் 13 % வளர்ச்சியை ஒட்டியே உள்ளதால், மத்திய, மாநில அரசுகளின் மொத்த மக்கள் நல்வாழ்வுச் செலவு என்.சி.எம்.பி. இலக்கான தேச உற்பத்தியில் 2 – 3 % என்பதை எட்டுவது பார்வையிலேயே இல்லையா என்ற ஐயம் எழுகிறது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் (ICDS – அங்கன் வாடித்திட்டம்) 9 லட்சம் மையங்களில் செயல்படும் என்று பட்ஜட் கூறுகிறது. உச்ச நீதிமன்ற ஆணையின்படி, இத்திட்டம் நாடுமுழுவதும் அனைத்து குக்கிராமங்களுக்கும், சில நெறி முறைகளின் கிழ், தரமான வகையிலும், சமத்துவமான முறையிலும் விஸ்தரிக்கப்பட வேண்டும். அப்படியானால், 15 லட்சம் தரமான அங்கன்வாடி மையங்கள் தேவை. ஆனால் பட்ஜட் ஒதுக்கீடு இதை கணக்கிலேயே கொள்ளவில்லை.

தேசிய கிராமப்புற வேலை உறுதிச்சட்டம் இடதுசாரிக் கட்சிகளும், வெகுஜன அமைப்புகளும் இதர  பல மக்கள் இயக்கங்களும் போராடிப் பெற்ற சட்டம். அதன் கீழ் உள்ள தேசிய ஊரக வேலை வாய்ப்புத்திட்டம் 2006 – 07 ல் 65 மாவட்டங்களில் செய்யப்பட்டது. 2007 – 08 ல் 130 மாவட்டங்களாக விஸ்தரிக்கப் பட்ட பொழுது, பட்ஜட் ஒதுக்கீடு குறைவாகவே உயர்த்தப்பட்டதை சென்ற ஆண்டு விமர்சித்திருந்தோம். இந்த ஆண்டு பட்ஜட்டில் இத்திட்டம் இந்தியாவின் அனைத்து மாவட்டங்களுக்கும் – மொத்தம் 596 – விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக பட்ஜட் அறிவிக்கிறது. ஆனால் ஒதுக்கீடு மிகவும் குறைவாகவே ஒதுக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் தனது பட்ஜட் உரையில், “இதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள், செலவு செய்துவிட்டு வந்து கேளுங்கள், தருகிறேன்” என்று ‘தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும்’ என்ற பாணியில் வசனம் பேசி இருக்கிறார். அப்படியானால், அவர் பட்ஜட்டில் அறிவித்த வரவு – செலவு பற்றிய, பற்றாக்குறை பற்றிய புள்ளி விபரங்கள் என்ன  ஆகும்? அல்லது அவர் முன்வைக்கும் விவரங்கள் எதையுமே நம்பகத்தன்மை வாய்ந்ததாகக் கருதக் கூடாதோ?

இடதுசாரிகளின் தொலைநோக்குப் பார்வை

பட்ஜட் பற்றிய தங்களது பரிந்துரைப் பட்டியலில், இப்பிரச்சனைகளைப் பற்றி தெளிவாக இடதுசாரிக் கட்சிகள் எழுப்பியிருந்தனர். கல்வி, மக்கள் நல்வாழ்வுத் துறைகளுக்கு உரிய ஒதுக்கீடு, வேளாண்துறை மற்றும் ஊரக வளர்ச்சிக்குக் கணிசமான ஒதுக்கீடு, விவசாயிகளுக்குக் கடன் நிவாரணம், பங்குச்சந்தை மூலதன லாபத்தின் மிது வரிவிதித்தல், உணவுப் பாதுகாப்பு, தேவையற்ற லாபம் மற்றும் வருமான வரி விலக்குகளை நீக்குதல், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பரிந்துரைகளை இடதுசாரிக் கட்சிகள் முன் வைத்தன. ஆனால், மேற்கூறியவற்றைப் பரிசீலித்தால், பட்ஜட் விவசாயிகள் கடன் நிவாரணம், பங்குச் சந்தை மூலதனவரி விகித உயர்வு போன்ற ஓரிரு விஷயங்களை அங்கீகரித்துவிட்டு, வேறு பலவற்றை புறக்கணித்துவிட்டது புரியும்.

தானிய விலைகள் பன்னாட்டுச் சந்தைகளில் விஷம்போல் ஏறி வருகையில் உள்நாட்டு தானிய உற்பத்தி தேக்கமாக உள்ள நிலையில் பொதுவிநியோக அமைப்பை மத்திய அரசு தொடர்ந்து சீர்குலைத்து வருகிறது. இந்த பட்ஜட்டில் உணவு மான்யம் 6 % தான் உயர்ந்துள்ளது. இது பணவீக்கத்தைக் கூடச் சந்திக்காது.

அதேபோல், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவோ, அந்நிய மூலதனத்தின் பங்குச் சந்தை யூக வணிகத்தால் ஏற்படும் பொருளா தார ஏற்ற இறக்கப் பாதிப்புக்களைத் தவிர்க்க அந்நியப் பண மூலதன வரவைக் கட்டுப்படுத்தவோ பட்ஜட் முன்வரவில்லை.

பாதை மாறவில்லை

மொத்தத்தில் யூ.பி.ஏ. அரசின் தனியார் மய, உலகமய, தாராள மயப் பாதை மாறவில்லை. இடதுசாரி இயக்கங்களின் வலுவான தலையீட்டின் விளைவாக ஓரிரு சலுகைகளை உழைக்கும் மக்களுக்கு அளிக்க வேண்டிய நிர்பந்தம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அவ்வளவுதான். மற்றபடி, மத்திய அரசின் மக்கள் விரோதப் பாதையை பட்ஜட் தொடர்கிறது. இதை எதிர்த்துப் போராட வேண்டியதும், மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டியதும் மிக மிக அவசியம், அவசரம்.

 Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: