முதலாளித்துவ நெருக்கடியும் சோசலிச புரட்சியும்!


சீதாராம் யெச்சூரி (பின்வருவது, ஜன 31 மற்றும் பிப் 1, 2009 அன்று வயநாட்டில் நடைபெற்ற விச, விதொச சங்கங்களின் தேசிய அளவிலான கருத்தரங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீதாராம் எச்சூரி ஆற்றிய தொகுப்புரையில் இருந்து எடுக்கப்பட்ட பகுதிகள்)

இந்த சந்திப்பின் போது மிகச் ஈர்கத்தக்க உரைகளையும், விவாதங்களையும் நாம் கேட்டோம். அதே சமயம், இந்த பிரச்சனையில் இன்னும் நிறைய கருத்துக்களை விவாதிக்க வேண்டியிருக்கிறது. அந்த விவாதம் நம்மை இன்னும் மிகத் தெளிவாக்கும் என்று நம்புகிறேன்.

நாம் இப்போது பேசுகிற நான்கு முரண்பாடுகளை பற்றி கட்சிக்குள் பெரிய அளவிலான விவாதங்களை நடத்திய பிறகு மிகத் தெளிவான ஒரு முடிவுக்கும் வந்தோம். அவை நான்கும் அடிப்படையான முரண்பாடுகள், முதன்மையானவையும் கூட. எதுவும் தாழ்ந்ததோ, உயர்ந்ததோ கிடையாது. ஆனாலும் இந்த நான்கிலும் ஏகாதிபத்தியத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையேயான முரண்பாட்டை மையமான முரண்பாடாக நாம் பார்க்கிறோம், ஏனெனில் அந்த முரண்பாட்டிற்கான தீர்வு உலகம் ஏகாதிபத்தியத்தில் இருந்து சோசலிசத்தை நோக்கி மாற்றுவதைப் பொறுத்தே இருக்கிறது. எனவே இந்த காலகட்டத்திற்கான மையமான முரண்பாடாக உள்ளது, அதே சமயம் இந்த நான்கு முரண்பாடுகளில் (மையமான முரண்பாடு உட்பட) எதுவும் எந்த நேரத்திலும் முன்னுக்கு வரலாம்.

ஒருவேளை அமெரிக்கா நாளை கியூபாவை ஆக்கிரமிக்க முற்பட்டால் ஏகாதிபத்தியத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையேயான முரண்பாடு மையமான முரண்பாடாக மட்டுமல்லாமல் முன்னுக்கும் வந்துவிடும். எனவே மையமான முரண்பாடும், முன்னுக்கு வந்த முரண்பாடும் இங்கே இருக்கிறது ஆனால் நான்கு முரண்பாடுகளுமே முக்கியமானதும், அடிப்படையானதும் ஆகும். அவைகளுக்குள் எந்த வித்தியாசமும் இல்லை. மற்றும், இந்த நிலையில், நான்கு அடிப்படை முரண்பாடுகளில், ஏகாதிபத்தியத்திற்கும் மூன்றாம் உலக நாடுகளுக்கும் இடையேயான முரண்பாடு தீவிரமடைவதாக கட்சியின் பதினேழாவது மாநாட்டில் இருந்து நாம் சொல்லி வருகிறோம். இதுவரையில், அது முன்னுக்கு வந்து முற்றி குவிமையமாக வளர்ந்துவிட்டதாக நாம் சொல்லவில்லை ஆனால்  நான்கு முரண்பாடுகளில் ஏதேனும் ஒன்று குவிமைய முரண்பாடாக வளரக்கூடியது  ஏகாதிபத்தியத்திற்கும் மூன்றாம் உலக நாடுகளுக்கும் இடையேயான முரண்பாடுதான். இதுதான் நமது கட்சியின் நிலை.

குவிமைய முரண்பாடு மிக முக்கியமானது. ஏன்? ஏனெனில் இத்தகைய முரண்பாடு தீர்க்கப்படுகிற வழிமுறையைப் பொறுத்தே, உலகில் சோசலிசத்தை நோக்கிய மாற்றம் அமைகிறது. வியட்நாம் யுத்த சமயத்தில், ஏகாதிபத்தியத்திற்கும் மூன்றாம் உலக நாடுகளுக்கும் இடையேயான முரண்பாடு முன்னுக்கு வந்திருந்த போது, அந்த யுத்தத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம் தோல்வியைச் சந்தித்தது. அபோது நாம் ஏகாதிபத்தியத்தை நேருக்கு நேர் சந்திப்பதில் உலக அளவில் சோசலிசம் தன்னை வலிமைப் படுத்திக் கொண்ட விதத்தின் மூலம் முன்னணியான முரண்பாடு தீர்கப்பட்டதாகச் சொன்னோம். இன்றைக்கு இந்த முரண்பாடு முன்னுக்கு வந்த முரண்பாடாகும் நிலைக்கு வளர்ந்துவிட்டதா? என்றுகேட்டால் இதைப் பொறுத்தமட்டில் இப்போதைய முரண்பாட்டை நாம் இன்னும் இன்றைய முன்னணி முரண்பாடாக கொள்ளவில்லை. ஆனால் கண்டிப்பாக இந்த முரண்பாடுதான் தீவிரமடையும் முரண்பாடாக இருக்கிறது.

நெருக்கடி ஒரு வாய்ப்பை தருகிறது:

முக்கியமான பிரச்சனைக்கு வருகிறேன், இந்தக் கருத்தரங்கம் நடந்துகொண்டிருக்கிற நாளில், தற்போதைய சர்வதேச சூழலில் கவனிக்கப்படவேண்டியவை குறித்து அறிவதற்காகவே இந்த அரங்கம் கூட்டபட்டிருப்பதாக நினைக்கிறேன். ஏன் இன்று நாம் அனைவரும் குறிப்பிட்ட ஓர் இடத்தில் கூடி இந்தப் பிரச்சனையைப் பற்றி விவாதிக்கிறோம்?. சோவியத் மற்றும் ஐரோப்பிய சோசலிசக் குடியரசுகளின் வீழ்ச்சிக்குப் பிறகு, சர்வதேச அளவில் வர்க்க சக்திகளின் சேர்மானத்தில் ஏகாதிபத்தியம் பலமடைவதாகவும், சோசலிசம் பலவீனமடைந்திருப்பதாகவும் நாம் ஒரு முடிவிற்கு வந்ததிற்கு பிறகு இவ்வாறு விவாதிப்பது இதுவே முதல் முறை. இந்த இடைப்பட்ட காலத்தில், இடதுசாரி இயக்கங்களால், இடதுசாரி வெகுஜன அமைப்புகள் மற்றும் உலக கம்யூனிஸ்டுகளால் நடத்தப்பட்ட போராட்டங்கள் பெரும்பாலும் தற்காப்பு போராட்டங்களாக இருந்தன. ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவம் ஆகியவற்றின் தாக்குதல்களில் இருந்து நமது உரிமைகளைக் காத்துக் கொள்வதற்கான போராட்டங்களாக அவை இருந்தன. சோசலிசம் பலவீனமடைந்த போது, நாம் பல நூறு ஆண்டுகால போராட்டங்களின் காரணமாகப் பெற்ற உரிமைகளாவது காப்பாற்றிக் கொள்ள முயலுகிறோம். எனவே அந்த நேரத்திலும் தற்போதும் நமது நோக்கம் என்பது பெரும்பாலும் இருக்கிற உரிமைகளை காத்துக் கொள்வதற்கான தற்காப்பு போராட்டங்கள்தான். அதுபோலவே உற்று கவனித்தால் நமது நாட்டில் நடந்துகொண்டிருப்பதும் அதுதான் என்பது புலப்படும். நமது போராட்டங்கள் எல்லாமே நம்மிடம் இருப்பதை காப்பாற்றவும், மேலும் சுரண்டாமல் காத்துக் கொள்வதாகவும்தான் இருந்தது.

ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள உலக நெருக்கடி என்பது முதலாளித்துவ நெருக்கடி வரலாற்றிலேயே மிக மோசமானது ஆகும். சேர்த்து நமது தற்காப்பு போராட்டத்தை முதலாளித்துவத்தின் ஆட்சிக்கு எதிரான தாக்குதல் போராட்டமாக மாற்றுவதற்கான வாய்ப்பு இன்று உருவாகியுள்ளது. முதலாளித்துவத்தின் ஆட்சி அதன் மிக மோசமான நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. ஆனால் துரதிஷ்டவசமாக அரசியல் மட்டத்தை பொறுத்தமட்டில் மாற்று சக்தி (சோசலிச அரசியல் மாற்று) இப்போதைய முதலாளித்துவ நெருக்கடி நிலையை புரட்சிகரமான சூழலாக மாற்ற போதுமான பலம் பெற்றதாக இல்லை. அப்படி இருந்திருந்தால், இந்த நெருக்கடி புரட்சிகர சக்திகள் முன்னேறுவதற்கான மிகச்சிறந்த வாய்ப்பாக இருந்திருக்கும். சில லத்தீன் அமெரிக்க நாடுகளில் இது நிகழலாம் என்று எதிர்பார்க்கலாம் அப்படி நடந்தால் அது நல்லதே. ஆனால், இந்தியாவில் இருக்கும் நம்மைப் பொறுத்தமட்டில், நெருக்கடி நிலையை புரட்சிகர சூழலாக மாற்றக் கூடிய வர்க்க சக்திகளின் செர்மானத்தை நாம் இன்னும் அடையவில்லை. இப்போது கிடைத்திருக்கிற வாய்ப்பில் நாம் முதலாளித்துவ ஆட்சிக்கு எதிரான தாக்குதல் போராட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும். நம்முடைய உரிமைகளை தற்காத்துக் கொள்கிற தற்காப்பு போராட்டத்தை நாம் விட்டுவிட வேண்டும் என்பதில்லை, எப்போதும் போல அவை முக்கியமானவை. நம்முடைய தற்காப்பு போராட்டங்களை வலிமைப்படுத்துவதால் மட்டுமே நம்மால் தாக்குதலை நோக்கி செல்லமுடியும் என்ற உண்மையை நான் கவனத்திலிருந்து அகற்றவில்லை.

இப்பொழுது, தாக்குதலை நோக்கிய மாற்றத்தை நாம் எப்படி சாதிக்கப்போகிறோம்? அதுதான் இன்றைய நிகழ்ச்சிநிரலின் மிக முக்கியமான புள்ளி. இந்நிலையில், தற்போதைய உலக சூழலை , பேராசிரியர் பிரபாத் பட்நாயக் மிகச் சரியாக சுட்டிக் காட்டியிருக்கிறார். அநாகரீக முறையிலான மூலதன திரட்சி தீவிரமடைகிறது. இந்த சூழலில், புதிய தாராளவாத நிர்வாகங்கள் கூட தன்னை மாற்றத்திற்கு உட்படுத்திக் கொள்ளலாம். உலக முதலாளித்துவம், கண்டிப்பாக, இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு ஒன்றுமே நடக்காததைப் போல தன்னுடைய பழைய நிலைக்கே திரும்ப முடியாது. இறுதியாக இங்கே பல மாற்றங்கள் நிகழும். உலக முதலாளித்துவம் பழைய பெரிய நெருக்கடிக்குப் பிறகு எழுந்ததைப் போல் சுதாரித்து எழலாம். என்ன மாற்றம் ஏற்படும்? அது எப்படி மீண்டும் வரும்? எப்படி எழுந்து நிற்கும்? என்பதல்ல நாம் கவனிக்க வேண்டியது.

அநாகரீகமான முறையில் மூலதனத்தை திரட்டுவது தீவிரமடைந்து முதலாளித்துவம் சுதாரித்து எழலாம். இது பற்றி மார்க்ஸ் கூறியதை மனதில் கொள்வோம். ஒவ்வொரு நெருக்கடியும் புரட்சிகர சூழலே அது புரட்சிகர மாற்றத்தை கொண்டு வர இயலாமல் போனதால் முதலாளித்துவம் மீள்கிறது. முன்னை விட பலமாக எழுகிறது என்கிறார் மார்க்ஸ். தனது ஆதிக்கம் நீடிக்க அவசியமான வர்க்க சமநிலையை நிலைநாட்டிட உற்பத்தி சக்திகளை பெருமளவில் அழித்துவிடுகிறது.

இந்த வர்க்க சமநிலை உடையுமானால், அந்த வேளையில் புரட்சிகர சூழல் உருவாகிறது. இப்பொழுது அதற்கு சாதகமான வர்க்க சமநிலையை முதலாளித்துவம் இழந்து நிற்கிறது. நெருக்கடியிலிருந்து மீளுகிற ஆக்கத்தால் மூன்றாம் உலக நாடுகளை, சுரண்டுவது தீவிரப்படுவதை தவிர்க்கவே முடியாது. இதனை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இந்த நிலையை சந்திப்பது மட்டுமல்ல, முதலாளித்துவத்தின் தாக்குதலில் இருந்து தற்காக்கும் போராட்டத்திலிருந்து மாறி, முதலாளித்துவத்தின் மீது தாக்குதல் தொடுக்கும் போராட்டமாக மாற்ற முயல வேண்டும்.

தீர்மானிக்கும் தொழிலாளர் – விவசாயி கூட்டணி:

தற்காப்பு நிலையிலிருந்து தாக்குதல் நிலைக்கு மாற மையமானது எதுவோ அதில் கவனம் வேண்டும். அந்த மையம் என்பது தொழிலாளி- விவசாயி கூட்டு ஆகும். மக்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துவதின் மூலமே  முன்னெடுத்துச் செல்வதுதான். முதலாளித்துவத்தின் அதிகாரத்திற்கு எதிரான போராட்டங்களின் இயல்பை தற்காப்பு நிலையில் இருந்து தாக்குதல் நிலைக்கு மாற்ற முடியும். இப்போது நம்முடைய திட்டத்தின்படி மக்கள் ஜனநாயகப் புரட்சியின் மைய அச்சு விவசாயிகள் புரட்சியே. விவசாயிகள் புரட்சி நடக்காமல் நம்மால் மக்கள் ஜனநாயகப் புரட்சியின் போர்த் தந்திரத்தை நிறைவேற்ற முடியாது. அப்படி, விவசாயப் புரட்சியே மைய அச்சாக இருக்கும்போது. இந்த மைய அச்சை மக்கள் ஜனநாயகப் புரட்சியை சாதிக்கும் படி எப்படி வளர்க்கிறோம் என்பதும் முக்கியமாகும். தொழிலாளி வர்க்கத்திற்கு – இடையே உறவுப்பாலம் எப்படி அமைக்கிறோம் என்பதும். இந்தப் போராட்டங்களை வலிமைப் படுத்த முடிவதற்கான ஒரே திட்டமாகும். தொழிலாளர் – விவசாயி கூட்டமைப்பை கட்டமைப்பதற்கான ஒரே கருவியாகும். இந்தியாவின் தனித்துவம் மிக்க புறச்சூழலியே இவை நடக்கிறது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

அந்நிய நிதி மூலதனத்துடன்  தனது கூட்டை வலிமைப் படுத்திக் கொண்டிருக்கிற  பெருமுதலாளிகளால் வழிநடத்தப்படுகிற முதலாளி-நிலப்பிரபுக்கள் வர்கங்களின் அதிகாரத்திற்கான கருவியாகவே நாம் இந்திய அரசை காண்கிறோம். இந்திய முதலாளி வர்கம் ஏன் நிலப்பிரபுக்களுடனான கூட்டை உருவாகியது? இது விருப்பத்தினால் நேர்ந்ததல்ல. எந்த ஒரு முதலாளியும் நிலப்பிரபுவோடு ஆளும் வர்கமாக கூட்டு சேர்வதை விரும்பமாட்டான். பெருமுதலாளிகளிடம் அதிகாரம் சென்ற தனித்துவம் மிக்க சூழலில் இந்திய முதலாளிகள் நிலப் பிரபுக்களோடு கூட்டணியை உருவாக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்கள். வர்கத்தின் அதிகாரத்தை நீடிப்பதற்கு, அதோடு நம்மை தடுப்பதற்கு, முற்போக்கு புரட்சிகர இயக்கத்தின் வளர்ச்சியை தடுப்பதற்கு அவர்களுக்கு நிலப்பிரபுக்களின் கூட்டணி தேவைப்படுகிறது. ஆளும் வர்கமாக இந்திய பெரு முதலாளிகள் நிலப்பிரபுக்களோடு கூட்டு சேர்ந்த போது இந்த மாற்றமும் சேர்ந்தே வந்தது. நாம் இதை 1964 இல் இருந்து சொல்லுகிறோம். இப்பொழுது நாம் வரலாற்றை திரும்பிப் பார்த்தால். பெரு முதலாளிகள் அந்நிய நிதி மூலதனத்துடனான கூட்டணியை அதிகரித்திருப்பது கண்கூடாக நிரூபணமாகியுள்ளது. இன்றைய பெரு முதலாளிகள் அந்நிய நிதி மூலதனத்தின் நேரடிக் கூட்டாளிகள். ஒரு வேளை சிறிய கூட்டாளியாக இருக்கலாம். அது என்னவாகவும் இருக்கட்டும், இந்த உலகில் திறந்திவிடப்பட்டிருக்கும் ஒட்டு மொத்த தாராளவாதத் தாக்குதலில் அதுவும் ஒரு கூட்டாளி.

முதலாளிகள் தங்கள் அதிகாரத்திற்கான கூட்டில் இருந்து நிலப்பிரபுக்களை தூக்கி  எறிந்துவிடவில்லை என்பதை நாம் நினைவில் நிறுத்துவது அவசியம். அந்த அளவில் இது ஒட்டுமொத்த விவசாய துறையும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகத் திரும்பியிருக்கும் காலமல்ல. இப்போது நாம் செய்ய வேண்டியது என்னவெனில், நமது கட்சித் திட்டத்தில் குறிப்பிட்டுள்ள மக்கள் ஜனநாயக முன்னணி குறித்த நிலைப்பாட்டின் படி, நிலப்பிரபுக்கள் அல்லாதவர்களுக்கு இடையேயான ஒற்றுமையை வளர்ப்பதே. ஆனால் இது நாம் எவ்வாறு நமக்குள்ளான பலத்தை அதிகரிக்கிறோம் என்பதைப் பொறுத்தே அமையும். அதாவது விவசாயத் தொழிலாளி மற்றும் ஏழை விவசாயி கூட்டணி. இந்த இரண்டு வர்கங்களின் பலம் அதிகரிக்கும் பொழுது நிலப்பிரபுகள் அல்லாத விவசாயிகள் நம்மோடு நடைபோடுவார்கள்.

ஆனால் இந்தச் சூழலில் நமது போராட்டங்களை அதிகரிப்பதற்கான வழிமுறை, அதாவது அடிப்படை தூண்டுகோல் கிராமப்புற இந்தியாவின் சுரண்டலுக்கு உள்ளாகும் பிரிவினரின் போராட்டங்களை – சிறு விவசாயிகளை மற்றும் விவசாயக் கூலிகளின் போராட்டங்களை – முன்னெடுப்பதாகவே அமைய வேண்டும். அதுவே இன்றைய உலக மற்றும் உள்நாட்டு சூழலில், நம் நாட்டின் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான முதன்மையான தளத்திற்கு வருகிறது. இதுதான் இன்றைய பிரச்சனையின் மையம். மின்சாரம் முதல் எரிபொருள் வரை , தண்ணீர் முதல் நிலச் சீர்திருத்தம் வரையிலான அத்தனை கோரிக்கைகளிலும் – இந்த எல்லாவற்றின் மீதுமான போராட்டங்களை ஊக்கப்படுத்தவும் அதிகரிக்கவும் வேண்டும்.

இடது முன்னணி அரசுகளும் போர்த் தந்திரம் குறித்த கேள்விகளும்:

அதில் வேறு சில பிரச்சனைகள் இருக்கின்றன. நம் மனதில் நினைக்கிறபடி போராட்டங்களை முன்னெடுக்க முடியாது. நாட்டில் நடக்கிற அரசியல் போராட்டத்தையும் நாம் கணக்கிலெடுக்க வேண்டும். அரசாங்கம், ஜனநாயக தேர்தல் நடைமுறைகளில் நாட்டின் முக்கிய இடதுசாரி சக்தி பிரதான பங்காற்றும் இடங்களில் இப்படி நடக்கிறது. மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கான நமது போராட்டங்களுக்கு புறக்காவளாக நாம் இடது முன்னணி அரசுகளைக் கொண்டுளோம். இன்று மக்களின் விருப்பங்களை பாதுகாக்க இடது முன்னணி அரசுகள் இயன்ற அளவு முயற்சிக்கிறது. ஆளும் வர்கங்களுக்கு எதிரான நமது வர்க்கப் போராட்டங்களை அதிகரிக்க அந்த அரசுகளின் வலிமை மிக முக்கியமானது. ஆனால், நம் வலிமையைக் குறைப்பதற்காக ஆளும் வர்கங்கள் தம்மால் இயன்ற எல்லா கருவிகளையும் இடது முன்னணி அரசுகளுக்கு எதிராக பயன்படுத்தும்.1980 களில் 12 வது கட்சி மாநாட்டில் இதுகுறித்து நாம் விவாதித்தோம். தனியார் மூலதனத்தின் ஆதரவை பெறுவது குறித்த விவாதத்தில் தோழர் பி.டி.ரணதிவே என்ன கூறினார்?. மேற்கு வங்கத்தில் தொழில் மயத்திற்கு அரசு ஆதரவளிப்பது என்பது, இடதுசாரிகள் அந்த மாநிலத்தை ஆளும் வரை அங்கே எந்தவித வளர்ச்சியும் துவக்கப்படாது என்று பிரச்சாரம் செய்வதன் மூலம் மாநிலத்தில் நமக்கு ஆதரவான மக்கள் சக்தியை பலவீனப்படுத்த ஆளும்வர்கங்கள்  எடுக்கக்கூடிய முயற்சிகளுக்கு எதிரான வர்க்க போராட்ட உணர்வின் வெளிப்பாடே என்று தோழர் பிடிஆர் சொன்னார்.

ஏற்கனவே சிக்கலாகத் தெரிகிற இந்த அரசியல் சவாலை எப்படி எதிர்கொள்வது?. நடந்திருக்கும் விசயங்களில் ஏற்படும் பொருளாதார ரீதியான மாற்றங்களை புரிந்துகொள்வது மட்டுமல்லாமல் அரசியலில் நம்மை தனிமைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறபொழுது, நம்மை வீழ்த்தவும் பலவீனப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறபொழுது, அந்த சூழலில் என்ன விதமான எதிர்வினை ஆற்றுகிறோம் என்பதும் முக்கியமானதாகும். எனவே மிகச்சரியாக அதுதான் மேற்குவங்கம் அமுல்படுத்தியுள்ள தொழில்மய கொள்கையை நோக்கி இறுதியாக நம்மை இழுத்துச் சென்றது. ஆம். விவசாயிகளுக்கு எதிரான அநாகரீக மூலதனத் திரட்டலை வலிமைப்படுத்துகிற   தற்போதைய தாராளவாத அரசின் கீழ் விவசாயிகள் அடைகிற பாதிப்புகளும் பெரும் மக்கள் போராட்டத்தை ஒருங்கிணைப்பதற்கான முக்கிய இடத்திற்கு வருகின்றன.

அதே நேரத்தில் இடது முன்னணி அரசுகள் இருக்கிற இடங்களில் – அவர்களால் தொழில்மயம் செய்யவும், முன்னேறவும் முடிகிறதோ இல்லையோ – நமக்கும் ஆளும் வர்க்கத்திற்கும் இடையிலான அரசியல் போராட்டத்திற்கான கருவியாக அவை இருக்கின்றன. அந்த சூழலில் தெளிவாகவே சில நேரங்களில் நேர் எதிரான பிரச்சனைகளான மேற்சொன்ன இரண்டையும் எப்படி சந்திப்பது?. இப்போது அங்கே தொழில்மயம் செய்வதே பிரச்சனையாகியுள்ளது. சொல்லுங்கள், இடது முன்னணி ஆளும் மாநிலங்கள் நிலங்களை கையகப்படுத்துகிறது. இப்போது இது சரியானதா? அது என்ன காரணத்திற்காக செய்யப்படுகிறது என்பதைப் பொறுத்து சரியானதாகிறது. அல்லது பழையபடியே இருப்பதாக வைத்துக்கொள்வோம். விவசாயப்பன்னைகளை நாம் கைவைக்கவில்லை. அது எப்படி இருந்ததோ அப்படியே இருக்கட்டும் என விட்டுவிடுவோம். நாம் அதனை முன்னேற்றவில்லை. தொடர்ந்து வருகிற தேர்தலில் நாம் தோற்று விடுவோம். பிறகு நமது போராட்டங்களை அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கு பதில் நமது தளங்களை காப்பாற்றிக் கொள்ளவே போராடும் சூழலுக்கு தள்ளப்படுவோம். கடந்த கால அரை-பாசிச பயங்கரவாதத்தின் போது நடைபெற்றதைப் ரத்த வெறிபிடித்த வர்க்கப் போரை நோக்கி நாம் தள்ளப்படுவோம்.

நமது புரட்சிகரத் தன்மையை இழக்காமல் இந்த இரண்டையும் ஒருங்கிணைப்பது எப்படி? அங்கேதான் நடைமுறை அரசியல் தளத்திற்கு வருகிறது. நாம் அந்த சிக்கலை தீர்க்க வேண்டும். சிங்கூர் மற்றும் நந்திகிராமில் அவ்வாறான சிக்கல்களை நாம் பெற்றோம். இப்போது அவற்றை எதிர்கொள்கிறோம். இதுபோன்ற மாற்றங்கள் நடைபெருகிறபோது இந்திய அரசமைப்பில் எந்த ஒரு மாநில அரசும் மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட கொள்கைகளை மாற்றம் செய்ய முடியாது என்பதை நாம் புரிந்திருக்கிறோமா என்ற கேள்வி எழுகிறது.

இந்த கட்டுக்குள் நாம் செயல்பட வேண்டும். அப்படி செயல்படுகிறபோது தொழில்மயம் நடைமுறைக்கு வந்தாலும் விவசாயி வர்க்கத்தை காப்பாற்றுவோம் என்கிற கோசத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். நாம் விவசாயிகளை எப்படி காப்பாற்றப் போகிறோம், விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக தொழிலாளர்களும் போராடுகிற போது நாம் விவசாயி வர்க்கத்தை முக்கிய இடத்திற்கு கொண்டுவந்து விவசாயி-தொழிலாளி கூட்டணியை எப்படி வலிமைப்படுத்தப் போகிறோம். மாநிலத்தை தொழில் மயப்படுத்துவதற்கான நமது தந்திரம், விவசாயி தொழிலாளி கூட்டணியை வலிமைப்படுத்தி மக்கள் ஜனநாயகப் புரட்சியை முன்னெடுக்கிற நமது போர்த்திட்டத்திற்கு எதிராக அமைய முடியாது. நாம் இந்தத் தந்திரங்களை எப்படி செயல்படுத்துகிறோம் என்பதே பிரச்சனையாகிறது. அதைத்தான் நாம் இப்போது சந்தித்துக் கொண்டிருக்கிறோம், அதாவது நம்மை இணைத்துக் கொண்டுள்ளோம்.

சிங்கூரில் கையகப் படுத்தப்பட்ட ஆயிரம் ஏக்கர் நிலத்திற்காக 12,000 த்திற்கும் அதிகமானோர் நஷ்ட ஈடு பெற்றனர். இதன் அர்த்தம் என்ன? ஒரு ஏக்கர் நிலத்தில் 12 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த நிலையில் யாரேனும் சொல்லிக் கொள்கிற வகையில் பிழைக்க முடியுமா?. அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க தொழில்மயத்தை தவிர வேறு என்ன வாய்ப்பு இருக்கிறது?.

ஆனால் தொழில்மயப்படுத்தும்போதும், நிலங்களை கையகப் படுத்தும்போதும். தாராளவாதத்தின் ஆரம்பகால மூலதனத் திரட்டலை வலிமைப்படுத்துகிற கட்சியாக நாம் இருக்க முடியாது. ஆனால், அதேநேரத்தில், இன்றைய முதலாளித்துவத்திற்கும், தாராள வாதத்திற்கும் எதிரான நமது போராட்டங்களை வலிமைபடுத்திக் கொண்டே எந்த வழிகளில் இந்த சூழலை கையாளுவது? அந்த வழிமுறையில்தான் நாம் நட்ட ஈட்டின் அளவையும், மறு-பயிற்சி, இன்னும் சிங்கூரில் செய்யப்பட்ட மற்ற பல விசயங்களையும் தீர்மானித்து செயல்பட்டளிம். எனவே இந்த பிரச்சனைகள் வரும், நாம் எதிர்கொள்ள வேண்டும். ஆனால் நாம் மையாமான திசை என்ன என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. நமது செயல் தந்திரங்கள் நமது போர் திட்டத்தை முன்னேற்றும் வகையில் பின்னிப் பிணைந்திருக்க வேண்டும் பலவீனப்படுத்திவிடக் கூடாது. மற்றும் இந்த அசாதாரண சூழலிலும் இந்த அளவுகோல் நம்மிடம் இருந்தால், அந்தத் தந்திரங்களை நம்மால் செயல்படுத்த முடியும்.

மக்கள் போராட்டங்களை வலிமைப்படுத்துவோம்:

இந்த சூழலின் மிகப்பெரிய கேள்வி, அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கங்களின் முன்னாள் இருக்கும் மிக முக்கியமான கேள்வி, மக்கள் ஜனநாயகப் புரட்சியை வலிமைப்படுத்துவதற்கான ஆயுதமாக விவசாயிகள், மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் போராட்டங்களை வலிமைப்படுத்தி அவர்களை கட்டமைப்பதற்கான பிரச்சனை எது என்பதுதான் என நினைக்கிறேன்.

அது பெரும் மக்கள் போராட்டங்களின் மூலமே சாத்தியமாகும். இறுதியாக நாம் பல பத்தாண்டுகளாக பெற்றிருக்காத வாய்ப்புகளை இப்போது பெற்றிருக்கிறோம். எனவே தொடர்ந்து தற்காப்பு இயல்பில் நமது உரிமைகளை காப்பதற்காக நடைபெற்று வந்த போராட்டங்களை மூலதனத்தின் அதிகாரத்திற்கு எதிரான தாக்குதலாக இப்போது மாற்ற வேண்டுமென நினைக்கிறேன். இந்தியத் தன்மையில் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்ட பிரச்சனைகளின் மீது கிராமப்புற மக்கள் போராட்டங்களை ஒரு கிளர்ச்சியாக நடத்த வேண்டும் என்பதே இதன் அர்த்தம். – சில இடங்களில் அது மின்சாரமாக இருக்கும், சில இடங்களில் அது தண்ணீர், சில இடங்களில் வேறு பல பிரச்சனைகள். ஆனால் எல்லா பிரச்சனைகளின் அடிப்படையாக விச மற்றும் விதொச அதன் தந்திரங்களை செயல்படுத்தி, எல்லாப் பிரச்சனைகளையும்  பேராசிரியர் பிரபாத் பட்னாக்கை சரியாக குறிப்பிட்டு காட்டிய, விவசாயிகள்-தொழிலாளி கூட்டணியை மையப்படுத்தி நகர்த்தவேண்டும். அனால், அக்டளிபர் புரட்சியின் இரண்டாம் ஆண்டு கொண்டாட்டத்தில் லெனின் சொன்னதையும் நினைவில் வையுங்கள். அங்கே தொழிலாளர்-விவசாயி கூட்டணி வாழ்க!  என்று பெரிய வாழ்த்து தட்டிகள் இருந்தன. அதைக் கண்ட லெனின் அவர்களை கண்டித்தார். சோசலிச புரட்சிக்கு பிறகும், தொழிலாளிகள்-விவசாயிகள் கூட்டணி வாழ்க என்று சொன்னால் அங்கே சோசலிசமே இருக்காது, சிறு விவசாயிகள் கிராமப்புற தொழிலாளி வர்கமாக மாற்றப்பட வேண்டும்  . அது வேறு பிரச்சனை, புரட்சியின் வரையில் தொழிலாளர்கள் விவசாயிகள் கூட்டணியே நமக்கான கருவி.

எனவே நிச்சயம் இந்தக் கருத்தரங்கின் மையமான செய்தியாக இன்று கிடைத்திருக்கும் வாய்ப்பை பற்றிக் கொள்வோம்   என்பதே அமையும் என்று நினைக்கிறேன். வலிமை மிக்க மக்கள் இயக்கங்களை கட்டமைப்போம். அதோ அங்கே தோழர் ஆம்ரா ராம் முன்னேறுகிறார். அவர் ராஜஸ்தான் போராட்டங்களின் காரணமாக சட்டப் பேரவைத் தேர்தல்களில் மூன்று உறுப்பினர் இடங்களை பெற்றிருக்கிறார். நான் அவரிடம் நகைச்சுவையாக கூறினேன்,  மூன்று சீட்டுகளை பெற்றிருக்கும் நிங்கள் இதோடு தன்னிறைவு பெற்று பாஸ் பொத்தானை அழுத்திவிட முடியாது. ஒருவேளை நீங்கள் பாஸ் அத்தனை அமுக்கினால் பிறகு இருக்கிற மூன்றும் போய்விடும். இங்கெ இரக்கமற்ற இரண்டே வாய்ப்புகள்தான் இருக்கின்றன, ஒன்று நாம் முன்னேற வேண்டும், அல்லது உங்கள் எதிரி முன்னேறவேண்டும். வெற்றிடம் என்பது இல்லை. கண்டிப்பாக நாம் முன்னேற வேண்டும். இந்த கருத்தரங்கை தொடர்ந்து நமது வெகுஜன அமைப்புகள் மேற்ச்சொன்ன போர்த்தந்திரங்களை செயல்படுத்த வேண்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s