(1984இல் இளம் பிரதமர் ராஜீவ் காந்தியும் பின் நாளில் அவரை எதிர் வரிசையிலே அமர வைத்து பிரதமரான வி.பி.சிங் நிதியமைச்சராகவும் இருந்த பொழுது சமர்ப்பித்த இந்திய அரசின் பட்ஜெட் பற்றி இ.எம்.எஸ். எழுதிய இக்கட்டுரை 26 ஆண்டுகளுக்கு முன்னால் உத்தமபா ளையம் தாலுகா கமிட்டி வெளியிட்டது. இன்று படிக்க பல சுவாரஸ்யமான தகவல்களுக்காக மட்டுமல்ல, இ.எம்.எஸ். அன்று கேட்ட கேள்வி இன்றும் பொருந்து வதாக உள்ளது. அவர் பிரச்சனையை அலசும் ஆற்றல், மறைபொருளாக இருப்பவைகளை வெளியே கொண்டு வர வரலாற்று பொருள்முதல்வாத அணுகுமுறையை கையாண்ட விதம் இவைகளுக்காகவும் வாசகர்களின் பார்வைக்கு வைக்கிறோம். உலக வங்கி கடன் மூலம் சுரண்டப்பட்ட காலத்தில் எப்படி நாம் உருவாக்கிய செல்வம் பணக்கார நாடுகளுக்குப் போனதோ அதுபோல்தான் இன்று, சுதந்திர நிதிச்சந்தை மூலம் நமது விவசாயிகளும், உழைப்பாளிகளும் சுரண்டப்படு கிறார்கள். வேதனை என்னவெனில், 1933இல் நேரு கேட்ட கேள்வியை 52 ஆண்டுகளுக்குப் பிறகு இ.எம்.எஸ். கேட்டார், “இந்தியா எங்கே செல்கிறது?” என்ற அதே கேள்வியை இப்பொழுது நாமும் நமது எதிர்காலத்தை நாமே நிர்ணயிக்க முடியாமல் கேட்கும் நிலை இருப்பது தான். அன்று லைசென்ஸ் ராஜ்ஜியத்தை ஒழித்து சுதந்திரச் சந்தையை திறந்த இளம் பிரதமர் என்று பத்திரிகைகள் புகழ்ந்து தள்ளிய நேரத்தில் இ.எம்.எஸ். பட்ஜெட் பற்றி என்ன சொல்கிறார் என்பதை மேலே படியுங்கள்)
-ஆசிரியர் குழு
1933இல் இடதுசாரி காங்கிரஸ் தலைவர் என்று அழைக்கப்பட்ட பண்டித ஜவஹர்லால் நேரு ஒருநூல் எழுதினார். அந்நூலுக்கு அவர் “இந்தியா எங்கே செல்கிறது?” என்று தலைப்பிட்டார். இந்தக் கட்டுரையாளர் (இ.எம்.எஸ்). உள்பட அன்றைய இளம் காங்கிரஸ்காரர்களுக்கு அது மிகுந்த உத்வேகம் ஊட்டியது. சோசலிச சார்பான இடதுசாரி திசைவழியில் சென்றாலே இந்தியா நெருக்கடியிலிருந்து விடுபட்டு முன்னேற முடியும் என்று அந்நூலில் நேரு கடுமையாக வாதிட்டிருந்தார்.
அந்நூலின் ஆசிரியரே இந்தியாவின் முதலாவது பிரதமராக பதவி ஏற்றார். அவரது தலைமையில் பொருளாதார திட்டமிடலின் பாதையில் இந்தியா அடியெடுத்து வைக்கவும் செய்தது. 1965இல் அமலாகத் தொடங்கிய இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தோடு “திட்டமிடலே இடதுபக்கம் செல்லத் தொடங்கிவிட்டது. ‘இடது பக்கம்’செல்வதா?” அதை அனுமதிக்க மாட்டோம் என்று காங்கிரசுக்குள் நேருவின் தலைமைக்கு எதிராகக் கலகக்கொடி உயர்ந்தது கலகக் கொடி உயர்த்தியவர்களில் ஒரு பிரிவினர் கட்சியிலிருந்து வெளியேறி ‘சுதந்திரா’ கட்சியை உருவாக்கினர்.
அந்தக் கேள்வி இன்றும் பொருந்தும்
நேரு பதினேழு ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்தார். அவரது மறைவிற்குப் பின்னர் ஒன்றரை ஆண்டு இடைவெளிக்குப் பின் அவரது புதல்வி இந்திரா பிரதமரானார். முதலில் பதினேழு ஆண்டு காலமும், மூன்றாண்டு இடைவெளிக்குப் பின் ஐந்தாண்டு காலமும் அவர் பிரதமராக இருந்து நாட்டை ஆண்டார். அவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் பொறுப்பை ஏற்ற ராஜீவ் காந்தியின் யோசனைப்படிதான் இப்பொழுது நிதிமந்திரி விஸ்வநாத் பிரதாப்சிங் நாடாளு மன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தார்.
நேரு சொல்ல விரும்பிய பொருளில் அல்ல என்றாலும் 52 ஆண்டுகளுக்கு முன்பு நேரு எழுப்பிய கேள்வியை – இந்தியா எங்கே செல்கிறது? என்ற அந்தக் கேள்வியை இந்த பட்ஜெட் மீண்டும் எழுப்பியிருக்கிறது. அதாவது அந்தக் கேள்வி இன்றும் பொருந்தும். இந்தியாவும் இந்நாட்டின் ஆளும் கட்சியும் இடது திசை வழியிலான பயணத்தை மேற்கொள்ள வேண்டுமென்ற அறிவுரை நேருவின் கேள்வியில் அடங்கியிருந்தது என்றால் அதற்கு மாறாக வலது திசைவழியிலான பயணம் தொடங்கப் பட்டுவிட்டது என்பதற்கான அறிகுறிகளை ராஜீவ் ஆட்சியின் கீழ் தயாரிக்கப்பட்ட கன்னி (முதல்) பட்ஜெட் மூலம் காண்கிறோம்.
ராஜீவ் அரசாங்கத்தின் வலது திசை வழியிலான பயணத்தை பற்றிய விபரங்களுக்குள் நான் செல்லவில்லை. ஆனால் மொத்தத்தில் அப்பிரச்சனையைப் பரிசீலிக்கத் தொடங்கும் முன்பு நேரு தொடங்கி வைத்ததும் இந்திரா காந்தி கடைப்பிடித்ததுமான பொருளாதாரத் திட்டமிடல் நாட்டை எங்கு கொண்டு நிறுத்தியது என்பதை பரிசோதிக்க வேண்டும். அதற்கு தேவையான விபரங்கள் விஸ்வநாத் பிரதாப் சிங்கின் பட்ஜெட் உரையிலேயே இருக்கிறது அவர் கூறுகிறார்:
“கடந்த பல ஆண்டுகளில் நமது வருடாந்திர திட்டங் களுக்கான பணத்தை வெளிநாட்டு, உள்நாட்டுக்கடன் பெறுதல் மூலமாகத்தான் திரட்டினோம். அது காலவரையின்றி நீடிக்க முடியாது. மத்திய, மாநில அரசாங்கங்களின் பட்ஜெட் செலவுகளை வெட்டிக் குறைப்பது எவ்வளவு வேதனைக்குரிய விஷயம் என்றாலும், அக்காரியத்தைத் தொடங்க வேண்டி யிருக்கிறது”. ஒரு நிச்சயிக்கப்பட்ட காலக்கட்டத்திற்குள் அதை அமல்படுத்த வேண்டியிருக்கிறது.
நேரு காலம் முதல்
கடந்த சில ஆண்டுகளில் என்ன நடந்தது என்று அவர் கூறுகிறாரோ அது நேருவின் காலம் தொட்டே நடக்கிறது என்பதுதான் உண்மை. அவரது தலைமையில் தொடங்கப்பட்ட முதலாவது திட்டத்தின் காலத்திலேயே நமது வெளிநாட்டு வர்த்தகத்தால் நமக்கு உபரி இருந்தது. இரண்டாவது திட்டத்தின் முதல் ஆண்டிலும் சொற்ப பற்றாக்குறையே இருந்தது.
ஆனால் அந்த திட்டத்தின் இரண்டாவது ஆண்டு முதல் இன்று வரை 1972 முதல் 1976-77 ஆகிய இரண்டு ஆண்டுகள் தவிர எல்லா ஆண்டுகளிலும் வெளிநாட்டு வியாபாரப் பற்றாக்குறை மிகப்பெரிய அளவுக்கு அதிகரித்தது. கடந்த சில ஆண்டுகளில் வெளிநாட்டு வியாபாரத்துறையில் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை இந்தியாவுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட் ஆண்டிலோ முதல் எட்டுமாத காலத்திலேயே 3016 கோடி ரூபாய் வெளிநாட்டு வர்த்தகத் துறையில் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது என்று நிதிமந்திரி பட்ஜெட் உரையில் விளக்கினார்.
நாட்டின் கடன் சுமை அதிகரித்தது
இப்படி ஆண்டுதோறும் அதிகரித்து வரும் வெளிநாட்டு வியாபாரப் பற்றாக்குறை எப்படி சரிக்கட்டப்படுகிறது வாங்கியக் கடனை திருப்பிச் செலுத்தவும், வட்டி கொடுக்கவும் மட்டுமல்ல, அந்த ஆண்டின் பற்றாக்குறையை ஈடுகட்டக்கூட கடன் வாங்கப்படுகிறது. இப்படி ஆண்டுக்கு ஆண்டு கடன் அளவு அதிகரித்து வருகிறது. அதற்கான வட்டியைச் செலுத்துவதற்கே ஆண்டுதோறும் பெரும் தொகை செலவிட வேண்டியிருக்கிறது.
அடுத்த சில ஆண்டுகளில் நிலைமை மேலும் சிக்கலாகப் போகிறது என்ற பட்ஜெட் உரையிலேயே மந்திரி பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருக்கிறார். அவர் கூறுகிறார் :
‘உலகப் பொருளாதார முறைமையில் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட நிகழ்ச்சிப்போக்குகள் வெளிநாட்டு நிதி உதவி கிடைப்பதற்கான வாய்ப்பைக் குறைத்து விட்டது மட்டுமல்ல, கடன் கிடைப்பதற்காக நாம் அனுசரிக்க வேண்டிய நிபந்தனைகளும் கடுமையாகியிருக்கின்றன. எனவே தனியார் துறையிலிருந்து மார்க்கெட் கடன் வாங்குவதுதான் இனி உள்ள ஒரே வழி. ஆனால் அதற்கு மிகவும் செலவு பிடிக்கவும் செய்யும்.’
எக்ஸ்பிரஸ் கட்டுரை கூறியது என்ன?
உள்நாட்டு வருவாய் ஆதாரங்கள் குறித்து ஆறு மாதத்திற்கு முன்பே இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் ஒரு பொருளாதார நிபுணர் எழுதிய கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. அக்கட்டுரைக்கு, ‘பணம் இல்லாத மைய அரசு திவாலாகிப் போன மாநிலங்கள்’ என்று தலைப்புக் கொடுக்கப்பட்டிருந்தது, அதில் நிபுணர் கூறினார்.
ஒரு காலத்தில் திட்டமில்லாத செலவு போக திட்டத்திற்குச் செலவிட வேண்டியிருந்தது. இன்று அது மத்திய அரசிடம் இல்லை. மாநில அரசுகளிடமும் இல்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது திட்டச்செலவு என்ன அன்றாடச்செலவிற்குக் கூட மத்திய அரசும், மாநில அரசுகளும் ஒரே மாதிரி கடன் வாங்குகிறார்கள்.
ஆனால் கடன் வாங்கினால் அதற்கு வட்டி கொடுக்க வேண்டும். அதற்கான பண ஒதுக்கீடு வருடா வருடம் அதிகரித்து வருகிறது. மத்திய அரசு செலுத்த வேண்டிய வட்டி மட்டும் 1982-83ல் ரூ.3950 கோடி. 1983-84ல் ரூ.5600 கோடி என்ற கணக்கில் அதிகரித்து வந்துள்ளது. நாட்டின் பாதுகாப்புச் செலவிற்காக மத்திய அரசு செலவிடுவதைக் காட்டிலும் கூடுதலாக ஆண்டுதோறும் வட்டி கொடுக்க வேண்டிய நிலை வருவதற்கு நீண்ட நாள் ஆகாது.
கடன்கார நாடாக…
நேருவின் காலம் முதல் இன்று வரை காங்கிரஸ் பின்பற்றிய கொள்கை அதில் அடிப்படையான எந்தவொரு மாற்றத்தையும் ஜனதா அரசு செய்யவில்லை என்பதை சுட்டிக்காட்டலாம். வெளிநாட்டு அரங்கத்திலும், உள்நாட்டு அரங்கத்திலும் இந்தியாவை மேலும் மேலும் கடன்கார நாடாக மாற்றிவிட்டது என்பதுதானே இதற்கு அர்த்தம்.
இவ்விஷயத்தை மனதில் கொண்டே ‘இந்தியா எங்கே செல்கிறது?’ என்ற கேள்வி அதற்கு நேரு கொண்டிருந்த அர்த்தத்திலிருந்து வேறுபட்ட வடிவத்தில் இன்றும் பொருந்தும் என்று மேலே சுட்டிக்காட்டினேன். நேருவின் தலைமையில் தொடங்கப்பட்ட திட்டமிடல் இந்த திசைவழியில்தான் நாட்டை இட்டுச் செல்கிறது என்று கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பத்திலிருந்தே சுட்டிக்காட்டியுள்ளது. ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் நான்காவது (பாலக்காடு) கட்சி காங்கிரஸ் அதை பகிரங்கமாக கூறியிருந்தது. பின்னர் ஏதாவது ஒரு மாநிலத்தில் கம்யூனிஸ்டுகளுக்கு ஆட்சி பொறுப்பை ஏற்ற போதெல்லாம் அதன் பிரதிநிதிகள் தேச அபிவிருத்திக் கொள்கையை மாற்றியமைக்க வேண்டியதின் தேவையை உறுதியாக வலியுறுத்தி வந்திருக்கின்றனர்.
கம்யூனிஸ்டுகளின் முன் கை
இவ்விஷயத்தில் முன் கையெடுத்தது கம்யூனிஸ்டுகள் என்றாலும் மற்ற ஜனநாயக சிந்தனையாளர்களும் அதன் முக்கியத்துவத்தை உணர ஆரம்பித்துள்ளனர். அவ்வாறுதான் 1984 ஜனவரியில் கல்கத்தாவில் கூடிய எதிர்க்கட்சிகள் மாநாடு திட்டமிடல் பாதையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரியது.
இடதுசாரிகள் எழுப்பிய இந்தக் கோரிக்கையை நேருவோ, அவரைத் தொடர்ந்து பதவிக்கு வந்த இந்திரா காந்தியோ ஏற்கவில்லை. இந்திராகாந்தியைத் தொடர்ந்து இப்போது பதவிக்கு வந்துள்ள ராஜீவ் காந்தியோ ஒருபடி மேலே சென்றிருக்கிறார். அதாவது, இரண்டாவது திட்டம் அமலாக்கப் பட்ட காலத்தில் அதன் ‘இடதுசாரி தன்மைக்கு ஆட்சேபம் தெரிவித்து சுதந்திரா கட்சியை உருவாக்கிய ராஜாஜி கோஷ்டியினர் எதை வலியுறுத்தினார்களோ அதை ஏற்கக்கூடிய பாதையில் முதலாவது அடியை அரசாங்கம் எடுத்துவிட்டது’. அதற்கான சான்றுதான் தற்போது தாக்கல செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்.
நிதிமந்திரி வி.பி.சிங்கின் உரையிலும் மற்ற பட்ஜெட் தஸ்தாவேஜூக்களிலும் அடங்கியுள்ள பல விஷயங்களை ஆழமாகப் பரிசீலிக்கவேண்டியிருக்கிறது. அதற்கு நான் இங்கு முயற்சிக்கவில்லை. அரசாங்கத்தின் போக்கு எந்த திசையில் இருக்கிறது என்பதை தெளிவு படுத்துகின்ற சில விஷயங்களை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
வரிவிதிப்பின் தன்மை என்ன?
முதலில் புதிய வரி பிரேரணைகளை பற்றி பரிசீலிப்போம். வருமான வரி, எஸ்டேட் வரி முதலான நேரடி வரி இனங்களும், சுங்க வரி, எக்சைஸ் வரி முதலான மறைமுகமான வரிகளும்தானே அரசாங்கத்தின் வருவாய் ஆதாரங்கள்! இதில் முதலாவது வரி இனத்தில் (நேரடி வரி) சுமை மொத்ததில் பணக்காரர்கள் மீதும், இரண்டாவது வரி இனத்தின் (மறைமுக வரி) சுமை ஏழை மக்கள் மீதும் விழுகிறது.
நேரடி வரி 397 கோடி ரூபாய்க்கு அளிக்கப்பட்ட அதே நேரத்தில் மறைமுகவரி இனத்தில் 1131 கோடி ரூபாய்க்கான புதிய பாரம் சுமத்தப்பட்டுள்ளது. யாருக்கு அரசாங்கம் உதவுகிறது, யாரைக் கசக்கிப் பிழிந்து பணத்தை கறக்கிறது என்பது இதிலிருந்து தெளிவாகிறதல்லவா?
நேரடி வரி இனங்களில் சிலவற்றுக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகை, உழைக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் உதவும் என்பது உண்மைதான் மறைமுக வரி இனங்களில் அளிக்கப்பட்டுள்ள சில சலுகைகள், நடுத்தர, ஏழை தொழிலதிபர்களுக்கு உதவும் என்பதும் உண்மைதான். ஆனால் நேரடி வரி இனத்தில் அளிக்கப்பட்டுள்ள சலுகைகளில் பெரும்பகுதியும், லட்சாதி பதிகளுக்கு உதவக்கூடியதாகும். மறைமுக வரியின் சுமையோ பெரும்பாலும் முழுமையாக ஏழைகளின் தலையிலேயே வந்து விழுகிறது. அரசாங்கத்தின் வர்க்க சார்பு இதில் தெளிவாகிறது.
கட்டுப்பாடுகள் நீக்கம்
தொழில்-வியாபாரத்துறைகளில் முதலாளிகளுக்கு கிடைப்பது வெறும் வரிச்சலுகையல்ல. அவர்களின் மீது முந்திய அரசுகள் சுமத்தியிருந்த பல கட்டுப்பாடுகளையும், அகற்றக்கூடிய ஏற்பாடுகளை ராஜீவ் காந்தி அரசாங்கம் செய்துள்ளது. நேரடி வரியில் அளிக்கப்பட்ட சலுகைகள் மட்டுமல்ல, சுங்க வரியிலும் உற்பத்தி வரியிலும் அளிக்கப்படும் சலுகைகளிலும் பெரும்பகுதி ஆதாயத்தை அடைவது சில குறிப்பிட்ட துறைகளில் உள்ள முதலாளிகள்தான். ஆனால் சுமையை மக்கள் அனைவரும் தாங்க வேண்டும்.
பெட்ரோலியத்தின் மீதான சுங்கவரியை பத்து சதவிகிதம் அதிகரித்தது. இதற்கு சிறந்த உதாரணமாக இதன் விளைவாக பெட்ரோலிய உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்கும் என்பதை மந்திரியே ஒப்புக்கொள்கிறார்.
சாதாரண மக்கள் மீதே
இதன் மூலம் மடடும் அரசாங்கத்திற்கு கிடைக்கின்ற கூடுதல் வருமானம் 620 கோடியாகும். பொது பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் சரக்குக் கட்டணம் அதிகரிக்கப் பட்டதால் ஏற்படும் சுமையையும் இப்பொழுது பெட்ரோலிய உற்பத்திப் பொருட்களின் வரியை அதிகரித்ததால் ஏற்படும் சுமையையும் தாங்க வேண்டியது சாதாரண மக்கள்தான். ரயில் பாதை வழியும், சாலைவழியும் பொருட்களை கொண்டு செல்வதற்கான செலவை அதிகரித்தால் பொருட்களின் விலை பொதுவாக அதிகரிக்கும் என்பதை கூற வேண்டியதில்லை அல்லவா?
சாதாரண மக்கள் மீது ஏற்றப்படுகின்ற இந்தப் புதிய பெரும் சுமையுடன் முதலாளிகளுக்கு பல பெரும் சலுகைகளையும் அரசாங்கம் அளித்துள்ளது. இதிலிருந்து தெளிவாகிறது ஆவடி காங்கிரஸ் மாநாட்டில் சோசலிசத்தை நோக்கி செல்ல வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தின் பேரால் நேருவின் காலத்தில் ஏற்படுத்தப்பட்டதும் இந்திரா காந்தியின் காலத்தில் தொடரப்பட்டதுமான கட்டுப்பாடுகள் தங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது என்று முதலாளிகள் கூக்குரல் எழுப்பினர்.
இந்தக் குரலை இந்திரா காந்தியின் காலத்திற்குப் பின் மகன் ராஜீவ் காந்தி அனுதாபப் பூர்வமாக கேட்டிருக்கிறார் என்பதற்கான அறிகுறியை மந்திரியின் பட்ஜெட் யோசனைகள் முழுவதிலும் காணலாம். அதனால்தான் இப்பொழுது எம்.பி. பதவியையும் கைப்பற்றிக் கொண்டுள்ள பிர்லா முதல் தொழில்-வியாபாரப் புள்ளிகள் அனைவரும் புதிய பட்ஜெட்டை உளமார பாராட்டியிருக்கிறார்கள்.
ரயில்வே பட்ஜெட்டில் செய்யப்பட்டுள்ள பயணக் கட்டண சரக்கு கட்டண அதிகரிப்பு, பொது பட்ஜெட்டில் செய்யப் பட்டுள்ள மறைமுக வரிகளின் அதிகரிப்பு எல்லாவற்றுக்கும் மேலாக அரசாங்கத்தின் செலவை ஈடுகட்ட நோட்டடிப்பது என்ற மத்திய பட்ஜெட் கொள்கையும் மாநிலங்களுக்கு பணம் கிடைக்காததால் அபிவிருத்திப் பணிகளில் ஏற்படும் தேக்கமும் சேர்ந்து மக்களின் அன்றாட வாழ்க்கையை சின்னா பின்னமாக்கப் போகிறது. விலைவாசிகள் செங்குத்தாக உயருவது, வேலைவாய்ப்புகள் குறைவது முதலான ரீதியில் மக்கள் மேலும், மேலும் கூடுதலாக கஷ்டப்படப் போகிறார்கள்.
அதிருப்தியை தணிக்க !
இதனால் ஏற்படும் அதிருப்தியை தணிப்பதற்காக பயிர் இன்சூரன்ஸ் கிராமப்புற வளர்ச்சி திட்டங்கள், சமூகப்பாதுகாப்பு திட்டம் ஆகியவற்றை பட்ஜெட் உரை மக்கள் முன்னால் நீட்டுகிறது. ஆனால் இவற்றிலிருந்து மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டிய அற்ப சொற்ப சலுகைகளைக் கூட ஆளுங்கட்சித் தலைவர்கள் அபகரித்துக் கொள்வார்கள் என்பதையே முந்தியகால அனுபவங்கள் தெளிவாக்குகின்றன.
நிதித்துறை ராஜாங்க மந்திரி பூஜாரியின் தலைமையில் நடந்த கடன் விநியோக விழா எப்படி நடந்தது என்பதை அனைவரும் அறிந்திருப்பீர்கள். மீண்டும் அப்படி நடக்க வகை செய்யும் திட்டங்கள் பட்ஜெட்டில் சேர்க்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமன்றி மிகவும் நடுநிலைமையுடன் அமல்படுத்தப் பட்டால் கூட அந்தத் திட்டங்களால் அன்றாடம் மோசமாகி வருகின்ற மக்களின் வாழ்க்கையை சீரமைப்பது என்ற பிரச்சனையின் நிழலைகூடத் தொட முடியாது. சில அற்ப சொற்ப சலுகைகளை நீட்டி மக்களை ஏமாற்றி, அவர்கள் மீது மேலும் மேலும் சுமையை ஏற்றவும், அவர்களை கொள்ளை யடித்துக் கொழுக்கின்ற மேல்தட்டு வர்க்கத்தை மேலும், மேலும் கொழுக்கச் செய்யவுமே ராஜீவ் அரசாங்கம் செய்யப்போகிறது என்பதை பட்ஜெட் உரை வெளிப்படையாக கூறுகிறது.
Leave a Reply